வியாழமாற்றம் 09-05-2013 - இளிச்ச வாய் பூனை

May 9, 2013 14 comments

 

eye

 

சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்!

கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு இன்னமும் நான்கு மாசங்கள் கூட இல்லை. ஆனால் இந்த சிட்டை கணக்கு மட்டும் சிவகாமிக்கு சமப்படுதே இல்லையாம். படிக்கும்போது அப்பா தலையில் ஒரு குட்டு போட்டு விட, கிளுக் என்று அழுதபடியே அதே வேகத்தில் நெல்லி மரத்தில் ஏறியவள் தான். வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் டெசிபலில் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்.

இப்படியே எவ்வளவு நேரத்துக்கு அழுவது? நிறுத்திவிட்டு நெல்லிக்காய் சாப்பிடலாம் என்றால் அப்பா கூப்பிட்டுவிடுவார். ஒன்று சிட்டையை சமன்பட வைக்கவேண்டும். இல்லை அப்பாவுக்கு சமன்படாமல் இருக்கவேண்டும். அல்லது சிட்டை செய்யதேவையில்லாத இடமாய் பார்த்து இடம்பெயரவேண்டும். அண்ணா இப்படித்தான் வெளிநாடு போனார். தானும் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது தான் கீழே கோழிக்கூடு வாசல் வழியாக கிடு கிடு வென்று வெள்ளைநிற கழுத்துவெட்டி கோழி வெளியே போனது. இது முட்டை இடும் நேரம் ஆச்சே, உள்ளே கடகத்து உமிக்குள் இருக்காமல் எங்கே வெளியே போகிறது? என்று கூர்ந்து பார்த்த சிவகாமி துணுக்குற்றாள். அழுகையை மறந்து கண்களை கசக்கி திரும்பவும் பார்த்தாள். அவளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மீண்டும் மீண்டும் கண்களை கசக்கி கழுத்து வெட்டியையே பார்த்தாள். என்ர கடவுளே.

கழுத்துவெட்டி ஒரு காலில் முட்டையை வைத்து பலன்ஸ் பண்ணியபடி ஒற்றைக்காலில் கெந்தி கெந்தி போய்க்கொண்டிருந்தது.

ஒரு கோழி, காலில் முட்டையை வைத்து பலன்ஸ் பண்ணுமா? என்ற விஷயம் சிவகாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது. பற்றாக்குறைக்கு கோழி எதையோ பேசிக்கொண்டிருந்தது போலவும் தோன்றியது. மீண்டும் காதுகளை தீட்டி கூர்ந்து கேட்டாள். “நேரம் போச்சு நேரம் போச்சு …சொர்க்கவாசல் மூடப்போறாங்கள்” என்று கோழி முணுமுணுத்துக்கொண்டிருந்தது. அடிக்கடி செட்டைக்குள் இருந்து எதையோ எடுத்து நேரம் வேறு பார்த்தது. அட ஹான்ட்போன்.

566090-alice-in-wonderland

சிவகாமி சத்தம்போடாமல் நெல்லிமரத்திலிருந்து நைசாக இறங்கி கோழியை பின் தொடர்ந்தாள். கோழி இவள் பின் தொடர்வதை கவனிக்கவில்லை. அதன் கவனம் முட்டையை பாலன்ஸாக வைத்திருப்பதிலும், அடிக்கடி அதை தூக்கி எறிந்துவிட்டு விழுகின்ற காப்பில் ஹான்ட்போனை எடுத்து நேரத்தை செக் பண்ணுவதிலும் இருந்தது. கோழி இப்போது முன்வீட்டு புரோக்டர் வளவு வேலிக்குள்ளால் நுழைந்து உள்ளே இருந்த  பற்றைக்குள் புகுந்தது. தயங்கிய சிவகாமி, அக்கம் பக்கம் திரும்பிப்பார்த்துவிட்டு தானும் தாமதிக்காமல் பற்றைக்குள் புகுந்தாள். மறுகணமே.

அம்மா என்று அலறியபடி அதளபாதாளத்துக்குள் விழ ஆரம்பித்தாள்.

ஒன்று அவள் மெதுவாக விழுந்திருக்கவேண்டும். இல்லை பாதாளம் மிகவும் ஆழமானதாக இருந்திருக்கவேண்டும். சிவகாமி நீண்ட நேரம் விழுந்துகொண்டிருந்தாள்.  அலுப்படித்தது. திரும்பிப்போகலாமா என்றால் எப்படிப்போவது? விழுந்துகொண்டிருக்கும்போது எழ முடியாது. “நாலு தர ஆறு பதின்மூண்டு அல்லோ .. ச்சிக்.. இருவத்துனாலு எண்டு போட்டதால தான் சிட்டை சமப்படேல்ல”, சிவகாமிக்கு பளிச்சென்று மூளைக்குள் உதித்தது. அப்பாவிடம் போகவேண்டும் என்று ஆர்வம் வந்தது. உடனடியாக போகவேண்டும். “நாலாறு பதின்மூன்று கண்டுபிடிச்சிட்டன்” என்று சொல்லவேண்டும். எப்படி திரும்புவது? எங்கே அந்த கழுத்துவெட்டி? யோசித்துக்கொண்டிருக்கும்போதே படீரென்று ஒரு பற்றைக்கு மேலே வந்துவிழுந்தாள் சிவகாமி. தடுமாறியபடி எழுந்துநின்றால் அங்கே இன்னொரு “அட” காத்திருந்தது.

சிவகாமி நின்றுகொண்டிருந்தது ஒரு அறை. அறையில் ஒரு பக்கம் ஒரு குட்டி கதவு. ஐஞ்சு இஞ்சி உயரத்தில் குட்டி கதவு. என்னடா இது? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது தான் எதிர்ப்பக்கத்தில் ஒரு தண்ணீர்குடம் தெரிந்தது. குடத்தின் மேலே ஒரு பேணி. “இந்த தண்ணியை குடி” சுவரில் எழுதியிருந்தது. விழுந்த களை. வேறு வேலையும் அங்கே இல்லை என்பதால் சிவகாமி தண்ணீரை குடிக்கலாமா என்று யோசித்தாள். தயங்கினாள். அவசரப்படக்கூடாது என்று நினைத்தவள் குடத்தை மெதுவாக தூக்கி இந்தப்பக்கம் வைத்தாள். இப்போது குடத்து பக்க சுவரில் “இந்த தண்ணியை குடி” என்ற வாசகம் இல்லை. சிவகாமிக்கு பதட்டமாக இருந்தது. குடத்தை சுற்றி சுற்றி வந்தாள். ம்ஹூம் “சிறுவர்கள் குடிக்ககூடாது” என்று எங்கேயும் குடத்தில் எழுதியில்லை.  அப்படி ஏதாவது எங்கேயும் எழுதியிருந்தால் அதை குடிக்ககூடாது, நஞ்சு என்று சுகாதார பாட சேர் சொல்லியிருந்தார். நல்லவேளை அப்படி எதுவும் எழுதியில்லை, இதை குடிக்கலாம் என்று நினைத்தாள். பேணியால் தண்ணியை மொண்டு குடித்தாள். டேஸ்ட்டாக இருந்தது. சர்ரென்று ஏதோ இறங்கியது போல ஒரு பிரமை. திரும்ப இன்னொரு பேணி. இன்னொரு பேணி… என்ன ஆச்சர்யம்?

சிவகாமி கொஞ்சம் கொஞ்சமாக குள்ளமாக தொடங்கினாள்.

குள்ளமாகிக்கொண்டே இருந்தாள். குள்ளமாக குள்ளமாக அவளுக்கு சந்தோசம். நல்லா குட்டையானல் இந்த கதவுக்குள்ளால் போகலாமே என்று நினைத்தாள்.  அது தான் நடந்தது. ஐஞ்சு இஞ்சி சைஸ் வந்திருப்பாள். இதற்கு மேலும் குறையவேண்டி வருமோ என்று கொஞ்சநேரம் வெயிட் பண்ணிபார்த்தாள். ம்கூம் இங்கே தான் சிட்டை சமப்படும் லிமிட் போல. அதற்கு மேல் குறையவில்லை. கதவைத்திறந்துகொண்டே வெளியே வந்தாள். அங்கேயும் இன்னொரு “அட” காத்திருந்தது.

சொர்க்கம். சொர்க்கமாக இருக்கலாம். சொர்க்கம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும். அம்மாவுக்கு சொல்லவேண்டும் போல இருந்தது. சிவகாமி சிட்டை சமப்பட்ட விஷயத்தை மறந்துவிட்டாள். இரண்டு அடி எடுத்துவைக்க அம்மாவுக்கு சொல்ல தேவையில்லை என்று நினைத்தாள். அடுத்த இரண்டு அடியில் சொல்லதேவையில்லை என்று நினைத்ததையே மறந்துவிட்டாள். துள்ளிக்கொண்டே எழுந்தமாற்றுக்கு போக தொடங்கினாள். திடீரென்று அந்த கழுத்துவெட்டி கோழி பாதைக்கு குறுக்கே பாய்ந்து பூங்கன்றுகளுக்குள் ஓடி மறைந்தது. இம்முறை அதன் இரண்டு கால்களிலும் இரண்டு முட்டைகள் இருந்தன. சிவகாமி அதை கணக்கெடுக்கவில்லை. நடந்துகொண்டிருந்தாள். சுற்றி சுற்றி பார்க்க அந்த இடமே கொஞ்ச நாளைக்கு முதல் கொழும்பில தியேட்டரில பார்த்த அவதார் படத்து பண்டோரா கிரகம் போல இருந்தது. நிஜ த்ரீடி.  சந்தோஷமாக தொட்டாசிணுங்கி இலைகளை தொட்டு தொட்டு ரசித்தபடி போகும்போது தான், குரல் கேட்டது.

“யாரு நீ?”

காடா பேசுகிறது? இவ்வளவு சின்னவயசுப்பெண்ணோடு காடு பேச காரணமில்லை! சுற்றும் முற்றும்பார்த்தாள். “இந்தா, இந்த வேப்பமரத்தில இருக்கிறன்” என்ற குரல் திசையில் திரும்பினால் ஒரு பூனை. கொப்பில் இருந்தபடி இளித்துக்கொண்டு இருந்தது. கட்டக்கறுப்பு பூனை, இரண்டு பற்கள் மட்டும் வெளியே தெரியே, அதன் சிரிப்பில் கொஞ்சம் நரி தெரிந்தது.

Cheshire_Cat_Tenniel

“நரி மாதிரி சிரிக்கிற பூனையை இண்டைக்கு தான் பார்க்கிறன்”

“நரி சிரிச்சு பார்த்திருக்கிறியா?”

“இல்ல .. ஆனா இங்கிலீஷ் படிப்பிக்க வாற கஜன் சேர் இப்பிடி தான் சிரிப்பார்”

“நக்கல் .. நீ யாரு எண்டு சொல்லு”

“அது குழப்பமா இருக்கு .. காலமை நான் கொஞ்சம் பெரிய பிள்ள … சிட்டை சமப்படேல்ல எண்டு அப்பா மொக்கு பிள்ளை எண்டவர். ஆனா கழுத்துவெட்டியோட விழேக்க நாலாறு பதின்மூன்று எண்டு கண்டுபிடிச்சிட்டன், அப்ப விழுந்த நேரம் நான் கெட்டிக்கார பிள்ளை ஆயிட்டன் தானே.. ஆனா அந்த தண்ணியை குடிச்சதால இப்ப குள்ளமாகி நிக்கிறன். கடைசி ஒரு மணித்தியாலத்திலேயே நான் இவ்வளவு மாறீட்டன் … நான் யாரு?”

“நான் .யாரு. கேட்டியே ..அந்த நான் .. நீ .. அதை சொல்லு .. நீ யாரு”

“சொல்ல ஏலாது .. ஏனென்டா இப்ப நான் நானில்லை”

“நானில்லைக்கு முதல் இருந்த நான் .. அந்த நானை தான் யாரு எண்டு கேட்கிறன்”

இதற்கு அப்பாவின் குட்டு பரவாயில்லை என்று தோன்றியது. இந்த பூனையை சமாளிக்க ஒரே வழி, திருப்பி கேட்பது தான்.

“ஏய் பூனை நீ யாரு என்று சொல்லு முதலில”

“ஏன் சொல்லோணும்?”

இப்போது பூனை மேல் கோபம் வந்தது. என்ன சேட்டையா விடுறார்? சிவாகாமி திரும்பி,

“அதானே ஏன் சொல்லோணும் .. சொல்லாத”

என்று முணுமுணுத்தபடியே நடக்க தொடங்கியவள்,  ஏதோ ஒரு உள்ளுணர்வு வந்தவளாய் திரும்பிப்பார்த்தாள். பூனை இன்னமும் இளித்துக்கொண்டிருந்தது. திரும்பினாள். இந்த பூனை நான் பார்க்கும்போது தான் இளிக்கிறதா? இல்லை நான் பார்க்காதபோதும் இளிக்கிறதா? சிவகாமிக்கு அதை அறியவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. சடக்கென்று திரும்பினாள். இளித்துக்கொண்டிருந்தது. திரும்பினாள். ஒரு பாட்டை ஹம் பண்ணியவள் பூனை எதிர்ப்பார்க்காத சமயம் பார்த்து மீண்டும் திரும்பினாள். அதே இளிப்பு. நான் பார்க்காதபோதும் இந்த பூனை இளிக்கிறதா என்று எப்படி கண்டுபிடிக்க? சர்ரென்று திரும்பினாள். ம்ஹூம். அதே இளிப்பு. கோபம் கோபமாக வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இளிப்பு பிரகாசமாக இருந்தது போல. இல்லை இல்லை கொஞ்சநேரத்துக்கு முதல் கருப்பாக இருந்த பூனை இப்போது செம்படை நிறமாக மாறியிருந்தது. இது ஆச்சர்யபூனை என்று தெரிந்தது. கொஞ்சம் புத்திசாலியும் கூட.  கெட்டித்தனமாக வேறு குழப்புகிறது. கண்டபாட்டுக்கு அலையாமல் எங்கே போகவேண்டும் என்று இதனிடமே கேட்கலாம் என்று தோன்றியது.

1book22“ஏய் பூனை .. நான் இப்ப ..”

“ஆ .. அந்த நான் யாரு எண்டு சொல்லு”

“ஏன் சொல்லோணும்?”

பூனையில் விளையாட்டை பூனைக்கே காட்டினாள் சிவகாமி.

“மெய் தான் … என்ன விஷயம் சொல்லு சிவகாமி!”

“வந்து .. நான் இப்ப எந்த பாதையால போகோணும் எண்டு சொல்லுறியா ப்ளீஸ்?”

“அது நீ எங்க போறதெண்டதில தங்கியிருக்கு”

“எல்லாமே ஒகே .. எங்க எண்டாலும் ஒகே”

“அப்பிடி எண்டா எந்த பாதைல போனாலும் ஒகே”

இந்த பூனை கொஞ்சம் சேட்டை விடுவது போன்று சிவகாமிக்கு தெரிந்தது.  கேள்வியை மாற்றிப்பார்க்கலாம் என்று நினைத்தாள்.

“இந்த ஊரில எப்பிடிப்பட்ட ஆக்கள் இருக்கிறினம்?”

“இந்தா .. இந்த கிழக்கு திசை பக்கம் போனா சபாநாயகத்தாரிண்ட வீடு வரும், மேற்கே போனி எண்டால் சிவலிங்கத்தார் இருப்பார்.. விட்டிட்டு வடக்க போனா இரண்டு பேர்ல ஒருத்தர் இருப்பார் .. எந்த திசையிலயும் போலாம் .. ஆனா எல்லாருமே யாழ்ப்பாணத்தான் தான் .. பயங்கர கெட்டவங்கள்”

“ம்ம்ம் .. கெட்டவங்கள் எனக்கு வேண்டாம் .. நான் சின்ன பிள்ளை .. நல்லவங்கள் ஒருத்தருமே இல்லையா?”

“சான்சே இல்லை .. இங்க எல்லாருமே கெட்டவங்கள் .. சிவலிங்கம், சபாநாயகம், காசிப்பிள்ளை .. பயங்கர ஆட்கள் .. நானும் கெட்டவன் .. நீயும் தான்”

“நான் கெட்டவள் எண்டு உனக்கெப்படி தெரியும்?”

“இல்லாட்டி இங்க வந்திருக்க மாட்டாய்”

“உன்னையும் கெட்டவன் எண்டு நீயே ஏன் சொல்லுறாய்?”

“என்னை கெட்டவன் என்று சொல்லுற அளவுக்கு இங்க வேற ஒருத்தனும் நல்லவன் கிடையாது .. அதால நானே சொல்லுறேன்”

சிவகாமி இப்போது மீண்டும் பூனையை பார்த்தாள். பூனை இளித்துக்கொண்டிருந்தது. கறுப்பாக இருந்த பூனை, செம்படையாக மாறி இப்போது அதுவும் இல்லாமல் இருப்பது இப்போது தான் சிவகாமிக்கு புரிந்தது. அட பூனை நிறம் மாறவில்லை. மாறாக கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்தது. மஞ்சள் வெள்ளை, வெள்ளை அருகி அருகி அற்றுப்போய், என்னது இது? யாரிந்த பூனை? பூனை மறைந்து மறைந்து மறைந்து, அதன் இளிப்பு மட்டும் தனியே தெரிய ஆரம்பிக்க “இளிக்காத பூனையை பார்த்திருக்கிறன்… ஆனா பூனையே இல்லாத இளிப்பை இப்பதான் பார்க்கிறன்” என்று சிவகாமி மனதுக்குள் நினைத்தபடி தெற்கு திசையில் நடக்கப்போனவள், ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த, ஒரு பாட்டை ஹம் பண்ணியபடியே சடக்கென்று திரும்பிப்பார்த்தாள்.

“மறைந்த பூனை இன்னமும் இளித்துக்கொண்டிருந்தது”.

24cheshire_cat_fading

&&&&&&&&&&&


Alice in Wonderland

எங்கள் ஊரில் சிறுவர் புத்தகங்கள் என்றால் அரசன் நகர்வலம் வருவான், இல்லை முனிவர் சீடர்களோடு ஆறு கடப்பார். மூன்று கோடாலிகளை ஒரு தேவதை எடுத்துவந்து விறகுவெட்டிக்கு காட்டி பிரகாஸ்ராஜ் மாதிரி கேள்வி கேட்கும். அதற்குமேல் அம்மியும் நகராது. கதையின் ஆதாரமான செய்திகள் நல்லவனாய் இரு, பொய் சொல்லாதே வகையறாக்களாக இருக்கும். இதற்குள் கணிதமும், லொஜிக்கும் எப்போதாவது மகாபாரத கிளைக்கதைகளில் யாராவது பிரசங்கங்களில் சொன்னால் தான் உண்டு. அம்புலிமாமா சுத்தம்!

images

அதற்கு காரணம் இருக்கிறது. இங்கே சிறுவர் இலக்கியம் எழுதுபவர்கள் யார் என்றால் தமிழாசிரியர்கள். யாரு தமிழாசிரியர்கள்? எங்கள் காசிநாதன், கந்தசாமி, பொன்னுச்சாமி போன்ற ஆசிரியர்கள். “குற்றியலுகரம் எனப்படுவது” தொடங்கி “வாங்குவளை காட்டிடை” வாசித்து கூடவே பொருளையும் வாசித்து விளக்கும் ஆசிரியர்கள். அவர்கள் எழுதும் புத்தகத்தை வாசிக்கும் மாணவர்களும் வளர்ந்து ரமணிச்சந்திரன், லஷ்மி என்று முன்னேறி அப்படியே கொஞ்சம் புதுமைப்பித்தன், சுஜாதா வாசித்தாலும் வாழ்க்கைக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் இந்த அம்புலிமாமாக்கள் ஏதாவது செய்திருக்குமா என்றால்? சட்டியில போட்டா தானே அகப்பைல வரும்?

Alice in Wonderland புத்தகத்தை எழுதியது ஒரு சுப்பனோ குப்பனோ கிடையாது. சார்ல்ஸ் டோட்ஜ்சன் ஒரு கணிதமேதை. தன் கணித திறமையை சகட்டு மேனிக்கு புத்தகத்தில் பாவித்திருப்பார். அது சிறுவர்களுக்கு விளங்குமா? என்று கேட்டால் இல்லை விளங்காது தான். அதற்காக தான் அந்த சுவாரசிய பாஃண்ட்ஸி.  ஐஞ்சு வயசில் வாசிக்கும்போது கதையை தெரிந்து வை. பத்துவயதில் வாசிக்கும்போது சில விஷயங்கள் ஏன் வருகின்றன என்று ஆச்சர்யப்படு. இருபது வயதில் காரணங்களை தேடு. முப்பது வயதில் அதிலிருந்து உனக்கு என்ன வேண்டும் என்று எடுத்துகொள். இது தான் சார்ல்ஸ் இந்த கதையை வடிவமைத்தவிதம். எங்கள் கோளாறு என்னவென்றால் ஐந்து வயதுக்கு பிறகு நாங்கள் Alice In Wonderland ஐ வாசிக்கவேயில்லை!12976444-alice-in-wonderland-and-cheshire-cat-on-mushroom

முப்பது வயதில்(டேய் டேய் .. ஒகே ஒகே..) Alice In Wonderland ஐ படலையில் எழுதும்போது எனக்கு என்ன பிடிக்கிறதோ அதை மட்டும் எடுத்து அடித்தாட முயன்றிருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முதல் எழுதியிருந்தால் Modula N எல்லாம் எழுதியிருக்கலாம். இப்போது ஆர்வம் அங்கே இல்லை. அது வேறு எங்கோ. அதனால் தான் நோன்-யூகிலிடியன் கணிதம் சிவகாமி கதையில் வருகிறது. அதென்ன நான்-யூகிலிடியன்?


முக்கோணத்துக்கு எத்தினை பாகை?

“கணக்கு, விஞ்ஞானம், குவாண்டம் என்று நீ பத்தியை தொடங்கினால் ஸ்கிப் பண்ணீட்டு ஸ்ருதிகாசனின் மக்ஸிம் படம் பார்க்க போய்க்கிட்டே இருப்பேன் மச்சி”

என்றான் கஜன். ஸ்கிப் பண்ணுவதற்குள் பத்தொன்பதாம் நூற்றாண்டு கணிதம் சொல்லுவது கஷ்டம். ஸோ ஒரு சின்ன உதாரணம்.

எட்டாம் வகுப்பில் முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூட்டுத்தொகை நூற்றெண்பது பாகை என்று படித்ததை அனேகமாக மறந்திருக்கமாட்டீர்கள். மணி டியூஷனில் படித்திருந்தால் இரண்டு கோணம் அறுபது பாகைகள், என்றால் மூன்றாவது கோணம் எவ்வளவு? என்று மொக்கை கேள்வியை கேட்டு சரியாக பதில் சொல்லுபவனுக்கு ரெனோல்ட்ஸ் பேனையை வேலாயுதம் வாத்தியார் கொடுத்திருப்பார். ஞாபகம் இருக்கா?

அவர் பேனை கொடுத்தது பிழை என்று சொல்லுவது தான் நோன்-யூகிலிடியன் கணிதம்.

முக்கோணம் தட்டையாக இருக்கும் வரைக்கும் தான் இந்த நூற்றி எண்பது பாகை மாட்டரெல்லாம். ஒரே மட்டத்தில் இருக்கும் போது, ஒரு சின்ன வீட்டை கட்டவோ, அல்லது கணக்கு செய்யவோ இந்த அளவிடைகள் பிழைக்காது. ஆனால் பெரிய அளவில் யோசிக்கும்போது, உதாரணமாக லண்டன், நியூயோர்க், டெல்லி இந்த மூன்று ஊர்களையும் இணைத்து ஒரு முக்கோணம் வரைந்து பாருங்கள்.  அந்த முக்கோணத்தின் மூன்று கோணங்களையும் கூட்டினால் நூற்றி எண்பது பாகை வருமா? ம்ஹூம். வராது. கொஞ்சம் அதிகம் வரும்? ஏன் என்றால் இந்த முக்கோணம் ஒரே மட்டத்தில் இருக்காது. வளைந்து இருக்கும். பூமி வளைந்து இருக்கிறது இல்லையா? இந்த படத்தை பார்த்தால் புரியும்.

350px-Triangles_(spherical_geometry)

இது ஒரு நோன்-யூகிலிடியன் கணிதத்தின் ஜுஜுபி விஷயம். இதை மையமாக வைத்து, கொஞ்சம் ஈர்ப்புவிசையை யோசித்து மொத்த பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் ஐன்ஸ்டீன் உய்த்தறிந்தார் என்றாலோ,  அல்லது பின்னாளில் நீல் போர் அணுவுக்குள் நுழைய அதை பயன்படுத்தினாரோ என்று நான் சொல்ல போனால், சுருதிஹாசனின் இன்னொரு படமும் மக்ஸிமில் வந்துவிட்டது பார்த்தியா மச்சி? என்பீர்கள்.

நோன்-யூகிலிடியன் அறிமுகமானபோது அதை ஆதரித்தவர்களுக்கும் எதிர்த்தவர்களுக்குமிடையில் பெருத்த சண்டை. பலரும் அதை ஏளனம் செய்தார்கள். அர்த்தமில்லாத கணிதம்,  வாழ்க்கைக்கு உதவாத கணிதம் என்றெல்லாம் சொன்னார்கள். இந்த சண்டை Alice in Wonderland கதை முழுதும் அடிக்கடி வரும். மசுக்குட்டியும் பூனையும் கதைக்கும் விஷயங்களில் சகட்டு மேனிக்கு இந்த சண்டையை நக்கலாக சார்ல்ஸ் எழுதியிருப்பார். சிறுவர் இலக்கியம் பாஸ்.

நாங்கள் மாயாவி, ஹீரோ, டெவில், டமால், டுமீல் என்று மெனக்கட்டதில் எவ்வளவு மிஸ் பண்ணிவிட்டோம்? .


யாழ்ப்பாணத்தில் Yarl IT Hub சந்திப்பு

இரண்டு வருடங்களுக்கு முன்னர் “தொடங்குவோமா?” என்று சயந்தன் கேட்டபோது, யாழ்ப்பாணத்தை சிலிக்கன் வாலி ஆக்கோணும், நிறைய பேர் கொம்பனி தொடங்கோணும் என்று பெரிய பெரிய கனவுகளை, Time Zone பிரச்சனைகளை தாண்டியும் கண்டாலும் எனக்கு கூடவே ஒரு சின்ன சந்தோசமும் இருந்தது. அது சின்னவயதில் மிஸ் பண்ணியதை இதற்கூடாக கொஞ்சம் டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் என்பது தான். வளர வளர எதையெல்லாம் அம்மாவும் அப்பாவும் அக்காவும் பள்ளிக்கூட வாத்தியும் சயன்ஸ் ஹோலும்,  நண்பர்களும் சொல்லித்தரவில்லையே என்று கவலைப்பட்டேனோ அதெல்லாம் Yarl IT Hub க்கூடாக சொல்லிக்குடுக்கவேண்டும். சொல்லிக்குடுக்கும் சாக்கில் நாமாவது அதை படிக்கவேண்டும் என்பது. அந்த கனவு. அது என்னோடு சேர்த்து இதை ஆரம்பித்த அத்தனை நண்பர்களுக்கும் இருந்ததும், இல்லாதவர்களை கூட கட்டிலில் வலுக்கட்டாயமாக போட்டு நித்திரையாக்கி கனவு காண வைத்ததும் சந்தோஷமான விஷயங்கள்.

“இப்போதெல்லாம் யாழ்ப்பாணத்திலே எப்ப பார்த்தாலும் IT மீட்டிங் தான், இதில நாங்க எதுக்கு இன்னொரு மீட்டிங் வைக்கோணும்?” என்று சயந்தன் கேட்க எழுந்து நின்று கை தட்டினேன். இந்த IT மீட்டிங் என்று யாராவது சொன்னாலே கூடவே தூக்கமும் வந்துவிடுகிறது. தமிழ் வளர்க்கிறோம் என்று சொல்லி தொல்காப்பியத்தை  எவனாவது படிப்பிப்பானா? IT வளர்க்க டெக்னோலொஜியை சொல்லிக்கொடுப்பதும் அப்படித்தான். இன்டர்நெட்டில் தேவை என்றால் தேடி எடுக்ககூடியதை மீட்டிங் போட்டு, இது இப்படி தான் என்று சொல்வதில் அர்த்தமில்லை. எனக்கு யாராவது திடீரென்று புதிதாக Clojure என்று ஒரு கணணி மொழி வந்திருக்கிறது. படிக்க போறியா? என்று கேட்டால், போடாங். தேவை என்றால் நானே படிக்க போகிறேன். நீ என்ன சொல்லி குடுக்கிறது?

4413409946_52c21b243f[3]

அப்படி என்றால் IT சந்திப்புகள் எப்படி இருக்கவேண்டும்? என்று கேட்கலாம். அங்கே IT என்பதே இருக்ககூடாது என்பது தான் எங்கள் வாதமே. எப்படி சார்ள்ஸ் “Alice in Wonderland”  புத்தகத்தில் சத்தம் போடாமல் கணிதத்தை சகட்டு மேனிக்கு விதைத்து தள்ளினாரோ, அது போல தான் IT இலும் செய்யவேண்டும். புத்திசாலி இளைஞர்களுக்கு தண்ணியை காட்டினால், குடிச்சு, குளிச்சு, உடுப்பு தோச்சு, நீந்தி, கப்பல் விட்டு .. எல்லா மாட்டருமே தண்ணிக்குள் செய்ய பழகிக்கொள்வார்கள். எங்கள் வேலை இங்கே பாரு குளம் என்று காட்டுவது தான்.

அதை இம்முறை கொஞ்சம் வெள்ளோட்டம் விடுவதாக இருக்கிறம். இம்முறை Alice In Wonderland சிறுவர் நாவலையே எடுத்து டிஸ்கஸ் பண்ணுவோம். போகிற போக்கில் நிறைய விஷயங்கள் கொட்டலாம். கொட்டும். அதை அள்ளுவதற்கு IT தெரிந்திருக்கவேண்டியதில்லை. தெரிந்திருக்காவிட்டால் தான் நல்லது.

இதை வாசிப்பவர்கள் மாணவர்களாக இருந்தால் வாருங்கள். உங்களுடைய தம்பி தங்கச்சிமார் மண்டைக்காரர், சந்தர்ப்பம் கிடைச்சால் கலக்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் கூட்டிவாருங்கள். எதிர்நீச்சல் ஷோ ஞாயிற்றுகிழமையும் இருப்பதால், Yarl IT Hub இன் சனிக்கிழமை சந்திப்புக்கு வருவது அவ்வளவு சிரமமில்லை என்று நினைக்கிறேன்.

சும்மா சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்தப்பக்கம் தலையை காட்டலாம். எவனாவது மொக்கை போட்டால் எஸ்கேப்பும் ஆகலாம். ஷர்ட் போட்டு யாழ்ப்பாண வெய்யிலில் ஷூ போட்டு அவிய வேண்டிய தேவையில்லை. கழுத்து கொலர் பட்டன் போட்டு டை கட்டி அஜ்மல் கசாப்புக்கு பண்ணியது போல கப்பிடல் பனிஷ்மெண்ட் கொடுக்கமாட்டோம்.  பெண்கள் பிடித்ததை போடலாம். ஆண்களும் தான். ஷோர்ட்ஸ் போட்டுக்கொண்டே வரலாம். சாரம் கூட ஓகே.

பட் மறக்காமல் உள்ளே ஏதாவது போட்டுக்கொண்டு வாருங்கள் ப்ளீஸ்!

meetup3

http://www.yarlithub.org/yarl/community-meet-up/

 

&&&&&&&&&&&&&&&&&&&

Comments

 1. "angels and demons" is an another good science fiction.
  Every one who is having passion about science should read about it.

  >> போடாங். தேவை என்றால் நானே படிக்க போகிறேன். நீ என்ன சொல்லி குடுக்கிறது?
  அது !!! same blood பாஸ் !!


  >> அப்படி என்றால் IT சந்திப்புகள் எப்படி இருக்கவேண்டும்?

  1. it should enable dreams.
  2. it should enable global marketing opportunities

  வெப்சைட் எப்பிடி டிசைன் பண்ணுறது எண்டும் மொக்கை lecutre பண்ணுறதாலையும் சில பல கைதட்டல் கிடைக்கும். but we can't go future.

  but instead of that we have to organizing serious projects like darpa challenge
  http://www.youtube.com/watch?v=M2AcMnfzpNg
  http://www.youtube.com/watch?v=TDqzyd7fDRc

  for sure we may not find large number of volunteers in this type of projects.
  but we can find few very very dedicated and talented peoples.
  it will be like a atomic bomb. think about it :-)

  we may not find large number of people. but we can find very serious
  ReplyDelete
  Replies
  1. Thanks JJ ..

   Yarl IT Hub ran a competition "Yark Geek Challenge" last year, was a Super Singer like competition with elimination, wildcard round and all .. it was pretty successful last year. We try to go against the usual norms to do something. Lots of volunteers involved as its a non-profit organization. Hope it continues to do better.

   I personally feel we need to attract the school kids, a fresh intelligent minds before getting corrupted by the AL/University pressures. Hope the readers will spread the word to their Jaffna children wisely. Lets see.

   Delete
 2. well done.
  ur are thinking in all360 degree (one plae X, Y) I mean u are thinking include z axis as well.

  Next time write something about Purpose, Secret of CREATION. may be u have written before. (I think Sujatha has mentioned something about these)

  Ambulimama: story about intellegent brother and innocent brother about sharing a tree, blanket and cow is interesting.

  Siva

  ReplyDelete
  Replies
  1. Siva That's the plan. Its not axis Z. Its more of a curved axis. The concept of "universe is never a non-ending one, but curved in sort of elliptical shape with space time" is proved with non-euclidean mathematics(None other than Einstein did it). I will for sure write that. I touched on Big Bang before. Its a risk and no point scaring the readers with too much of science. So it gotta be a calculative gradual writing. Definitely will do it..

   Delete
 3. Interesting and informative post. I will (buy and) read Alice In Wonderland soon, in addition I will make sure my sons read it during summer break. By the way, I finished reading Frances Harrison's book, thanks for referring that.

  ReplyDelete
  Replies
  1. Thanks Mohan ... Its a good novel to read to kids.

   Delete
 4. “நரி மாதிரி சிரிக்கிற பூனையை இண்டைக்கு தான் பார்க்கிறன்”

  “நரி சிரிச்சு பார்த்திருக்கிறியா?”

  “இல்ல .. ஆனா இங்கிலீஷ் படிப்பிக்க வாற கஜன் சேர் இப்பிடி தான் சிரிப்பார்”
  அண்ணா, 10.05.2013 சூரியன் fm சூரிய ராகங்கள் "பேப்பர் பெடியன் " உங்கடை ஜோக்கை சுட்டுட்டன்ங்காஆஆஆஅ......................

  ReplyDelete
  Replies
  1. செல்வி .. லோஷன் பெயர் சொல்லி தான் பாவிச்சவர். நம்ம நண்பர் தான்!

   Delete
  2. ஹி ஹி ஹி.... அப்பச் சரி......................
   படலை இப்போது எங்கும் பேசப்படுகிறது......
   வாழ்த்துக்கள் அண்ணா

   Delete
 5. Hi JK, I have read Alice in Wonderland in my childhood. As you said I never thought it might have other motives behind the story except a fictitious novel for kids, it never insisted me to read it again. Even now, when I read your Tamil bits of it, I get some nice logical/ philosophical arguments behind it. But couldn't relate to Maths :( My bad! Have downloaded the story book and started to read it. I don't think I'm going to get it!

  About the triangle, when we studied, we defined that a polygon(which is made of straight lines) with 3 sides is a triangle. So by definition I still think what we learnt is correct. Reuleaux triangle is the best fit name I was able to find online for the curved triangle (still it's said to have equal length! and not sure whether the curves also lie in the same plane as the triangle). Also I think even the curved triangle could be approached using Euclidean geometry (given the curvature) with more complex calculations. Non-Euclidean makes things easier and there have been many different ways of representing X,Y,Z are being researched and proposed. Anyway, I'm not sure about what I wrote here :)

  It's really good to create an out of the way thinking from the schooldays, which I didn't and don't have much. All the best with YIT initiations.

  Keep writing such thought provoking articles. Thanks JK :)

  ReplyDelete
  Replies
  1. Thanks Veena ..

   //(which is made of straight lines)//
   The fact is, there is no straight line. Its true that it wouldn't affect as long as we do our mathematics on paper but will impact when we apply them in practice. That even would be ok with architecture and construction fields. But GPS, communications and of-course in the study of cosmology, non-euclidean is damn important. Why would one needs to study cosmology? Because it gives greater understanding on how things work around us. Gives a big rationale and reasoning for everything (from Bosons/quarks to universe as a whole).

   So I always believe the understanding of non-Euclidean should be told early in our life but doesn't necessarily to be in the syllabus.

   Doesn't make sense??? :(

   Delete
 6. வழமைபோல ஒரு கலக்கல் பதிவு..!
  நாங்களெல்லாம் இந்த காமிக்ஸ் புத்கங்களோடு எங்கள் பால்யத்தைக் கடந்தவர்கள்தான்,Alice in Wonderland போன்ற சமாச்சாரங்களைப் பற்றிய தகவல்களுக்கு நன்றிகள். மேலே கதை வெகு சுவாரஷ்யம், அதுவும் எங்களது மொழிவழக்கில்...!

  ReplyDelete

Post a comment

Contact form