வியாழமாற்றம் 24-05-2013 : ஒளியில் ஒரு கவிதை!

May 23, 2013

247087_10151611421145791_2031778702_n
“சுண்டுக்குளி வேற ...கேட்கவா வேணும்?.. சின்னனில இருந்தே படம் காட்டி பழகியிருப்பாய்!”
சொன்ன குமரனை திரும்பிப்பார்த்து செல்லமாய் முறைத்தாள் மேகலா. முறைக்கும்போதும் எப்படித்தான் அழகாய் இருக்கிறாளோ! ஹேர்லி ஹேர், கார் கண்ணாடியை இறக்கும்போதேல்லாம் காற்றிலே நெற்றிக்கு முன்னால் சரிந்துகிடப்பது காற்றில் பின்பக்கம் அலைந்து போய் விழுகின்ற விவரங்கள் எல்லாம் வியாழமாற்றத்துக்கு தேவையில்லை. ஆனாலும் எழுதாமல் விட்டாலும் திட்டுவாள்.
“எதிலையாவது உங்களை விட டலண்டா இருந்தா உடனேயே நக்கலடிப்பீங்களே..”
“ரிலாக்ஸ் மேகலா ... சொல்லு ..  இந்த போட்டோ .. அதுக்காக சாப்பாடு தண்ணி மறந்து கமராவோட கிடக்கிறது .. எல்லாமே .. யாரு உனக்கு இன்ஸ்பிரேஷன்”
“…பேபி போட்டோ மாமா”
“ஹூ? .. யாரு?”
“பெரிய கதை .. சொல்லுவன் .. ஆனா எல்லாத்தையும் எழுதோணும்! நனைவிடை தோய்தல் நாட்டுக்கு கூடாது எண்டு எடிட் பண்ண கூடாது.. ஒகே?”
குமரன் சிரித்துக்கொண்டே லேன் மாற்ற, இளையராஜாவை குறைத்துவிட்டு சொல்லத்தொடங்கினாள் மேகலா.

ஸ்டூடியோ மாமா

பேபி ஸ்டூடியோ மாமா. இந்த பெயர் திருநெல்வேலியை சேர்ந்த எவருக்கும் இலகுவில் மறந்துபோய் இருக்காது. கூலிங் கிளாஸ். வெள்ளை வேட்டி வெள்ளை ஜிப்பா. தூரத்தில் பார்த்தால் இளையராஜா சைக்கிளில் வருவது போல இருக்கும். இராமநாதன் வீதியில் பழைய நிதர்சனத்துக்கு முன்னாலே நீண்ட காலமாக “பேபி ஸ்டூடியோ” என்ற கடை வைத்திருந்தவர். ரெண்டு பொம்மர் அடியோடு பரமேஸ்வரா சந்திக்கு போய்விட்டார். அப்புறமாக ஆலடிச்சந்திக்கு போனவர் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் கமராவும், பிளாஷும் அதில் செய்யும் சாகசங்களும் ஞாபகம் இருக்கிறது.
ஊருலகத்தில் என்ன நிகழ்ச்சி என்றாலும் பேபி மாமா வந்தாகவேண்டும். மாமா வந்து போட்டோ பிடிக்கும் வரைக்கும் மாப்பிள்ளை தாலியும் கையுமாய் வெயிட் பண்ணுவான். பிறந்த பிள்ளைக்கு பெயர் வைக்கமாட்டார்கள். செத்தவீட்டில் பிரேதம் எடுபடாது. வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு பெஃயார் அண்ட் லவ்லி பெண்கள் முந்தானையை முன்னுக்கு ஒரு கையால் நைசாக பிடித்துகொண்டு அசட்டுச்சிரிப்பு சிரிக்கும் படங்களும் போயிருக்காது. வயதுக்கு வந்த பெண் கூட இவர் கமராவுக்கு தான் முதன் முதலில் வெட்கப்படும்.
எங்கேயாவது சாமத்தியவீடு என்றால் மாமா காலையிலேயே வந்துவிடுவார். அனேகமாக தோட்டத்தில் தெரியும் செம்பரத்தை, பார்பட்டன்ஸ் வீட்டுப்படலையின் இரண்டு பக்கமும் கட்டப்பட்டிருக்கும் வாழைக்குலைகள் என்று ஷூட்டிங் ஆரம்பித்து உள்ளே போய், இரண்டு மூன்று டெக்கரேஷன் எடுத்துவிட்டு தான் பொம்பிளை உட்கார்ந்திருக்கும் ட்ரஸ்சிங் டேபிளுக்கு வருவார். முன்னாலே பதினாலு வயசு சரோ காஞ்சிபுரம், கனகாம்பர ஜடை, ஒட்டியாணம், அட்டியல், பதக்கம் சங்கிலி, முகத்தில் சிவப்புக்கலர் வியர்வை என்று ஒரு மார்ageக்கமாக நிற்பாள். கமரா பிளாஷ் இரண்டு அடிக்க முதலே பிளவுஸ் கை தொப்பலாய் நனைந்து  அவ்வப்போது மேக்கப் அக்கா லேன்ஜியால் டச்சப்பண்ணி விடுவாள். இவளை இப்போது சின்னத்தம்பி குஷ்புவாக்க வேண்டிய கட்டாயத்தோடு மெல்லிதாய் சிரிக்க சொல்லுவார் ஸ்டூடியோ மாமா.
நீ சிரிச்சியா?
சொல்லிக்கொண்டிருந்த மேகலாவை இடைமறித்து நமுட்டிச்சிரிப்புடன் கேட்டான் குமரன். அவள் கணக்கெடுக்கவில்லை.
அப்பெல்லாம் கமரா என்றாலே பிலிம் ரோல் தான். கொடாக் கொனிக்கா என்று கொஞ்ச பிராண்ட்ஸ் இருந்தது. கொடாக் ரோலை விட கொனிக்கா ரோல் நல்லது என்பார்கள். முன்னதில் 28 படங்களும் பின்னதில் 36 படங்களும் எடுக்கலாம் என்று ஒரு ஞாபகம். ஒரு சாமத்திய வீட்டுக்கு இரண்டு ரோல் எடுபடும். கல்யாணவீடு என்றால் மூன்று நாலு வரை எடுப்பார்.  பின்னர் பில்ம் ரோலை கிளாலி, ஓமந்தை தாண்டி கொழும்புக்கு அனுப்பி கழுவி எடுத்து, படம் கைக்கு வந்து சேர எப்படியும் மூன்று நான்கு மாதம் பிடிக்கும். ஒரு பிரவுன் என்வலப்பில் மாமா கொண்டுவந்து கொடுப்பார். ஒரிஜினல் முப்பது ரூபாய். கொப்பிக்கு பதினைஞ்சு ரூபாய்.  அந்த காலத்தில இப்பிடி ஏதும் நிகழ்ச்சி என்றால் ஆளாளுக்கு ஒரு அல்பத்தை கொண்டுவந்து பரிசளிப்பார்கள். அதற்குள் பெரிதாக ஒன்றை எடுத்து இந்த படங்களை பஞ்சு வைத்து போட்டு பார்த்தால் … மாமாவின் படங்கள் கிறிஸ்டல் கிளியர் எண்டுவான்களே அப்பிடி இருக்கும்.  அப்பொது கூட ஒன்றிரண்டு கறுப்பு வெள்ளை படங்கள் தருவார் தெரியுமா? கலரே இல்லாம ஆளோட கரக்டர் மட்டுமே தெரியும் படங்கள். ஹீ வோஸ் எ ஜீனியஸ்.
“இப்ப எங்க இருக்கிறார்?”
உதட்டை பிதுக்கியவாறே தோள்களை குலுக்கினாள் மேகலா. சடக்கென்று அவள் முகத்தை சூம் பண்ணி கிளிக்கி கறுப்பு வெள்ளை ஆக்கி பார்த்தான். அவள் சொன்னது போல கரக்டர் மட்டுமே ..
அடங்கா பிடாரி!
கம் எகைன்?


 

மும்மூர்த்திகள்!

இரவு அல்லது வெளிச்சம் குறைந்த பொழுதுகளில் பார்க்கும்போது எங்கள் கண்கள் நன்றாக அகல விரியும் அல்லவா. இருட்டில் ஒரு பொருளை பார்ப்பதற்கு எங்களுக்கு போதியளவு வெளிச்சம் கண்ணுக்குள் நுழைவதற்காக தான் அந்த விரிவு. அதுவே வெய்யிலில் சூரியனை அண்ணாந்து பார்க்கும்போது சுருங்கும். கண் கூசும்.
கண் கூசுவதற்கு காரணம் கண்ணில் இருக்கும் விழித்திரை … ரெட்டினா. இது தான் ஒளிக்கற்றைகளை உள்வாங்கி படம்பிடிக்கும் திரை.  விழித்திரையில் நாங்கள் “பார்க்கும்” படம் சரியாக விழுவதற்கு கண்ணின் மற்ற ஐட்டங்கள் ஒன்றிணைந்து வேலைசெய்யவேண்டும். முதலாவது கண்ணின் லென்ஸ். வில்லை. அது தன்னுடைய வளைவை இயல்பாக மாற்றுவதன்மூலம் குவியத்தூரத்தை கூட்டிக்குறைக்கும். கூடவே எந்த அளவுக்கு கண்ணை திறந்து மூட வேண்டும் என்றும் சில நரம்புகள் கணக்கு போடும். இந்த மாறும் வில்லையின் குவியத்தூரமும், திறந்திருக்கும் கண் விழியின் விட்டமும் கண்ணுக்குள் எவ்வளவு ஒளி புகுந்தால் சரியான “பார்வை” கிடைக்கும் என்பதை தீர்மானிக்கின்றன! இந்த இரண்டு விஷயத்தையும் கூட்டிக்கழிச்சு போடும் அளவிடையை தான் Aperture என்பார்கள். தமிழில் மொழி பெயர்த்தால் அப்பேர்ச்சர் என்பார்கள்!
இப்போது கமராவுக்கு வருவோம். கமராவின் ஆதாரமான தொழில்நுட்பம் அப்படியே கண்ணை சுட்டு விளையாடியது தான். இங்கேயும் விழித்திரைக்கு பதிலாக சென்சர் இருக்கிறது. லென்ஸ் இருக்கிறது. Zoom lens என்று சொல்வார்கள். கண்ணை போல நினைச்சபாட்டுக்கு ஒரே வில்லையை சைஸ் மாற்றும் அளவுக்கு பயோ பைஃபர் வில்லைகள் எதுவும் கமராவில் கிடையாது. ஆனால் இரண்டுமூன்று வில்லைகளை வைத்து அவற்றை கைகளால் zoom in out பண்ணும்போது குவியத்தூரத்தை மாற்றலாம். கண்ணை போலவே இங்கேயும் எவ்வளவு சைஸ் விட்டத்தில் லென்ஸை திறந்து வைத்திருக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். இதை தான் கமராவிலும் அப்பேர்ச்சர் என்பார்கள்!
அப்பேர்ச்சரை எப்படி பாவிப்பது என்று பார்க்கலாம். அப்பேர்ச்சர் அளவு (f-number) கூட்டினால், குறைந்த வெளிச்சம் தான் வரும். அதே நேரம் பரவலான போக்கஸ் கிடைக்கும். சீனரி எடுப்பதற்கு அதிகமான f-number பாவிக்கலாம். நீலவானம் படத்தின் f-number 36.
அப்பேர்ச்சர் அளவு குறைந்தால் அதாவது 1.8 என்றால் நிறைய வெளிச்சம் கமராவுக்குள் போகும். அதே நேரம் எந்த விசயத்தை போக்கஸ் பண்ணுகிறோமோ (Depth of Field) அது மட்டும் தெட்டத்தெளிவாக தெரிந்து மிச்சம் எல்லாமே மங்கலாக தெரியும். அர்ஜூனன் கிளியின் கழுத்தை கூர்ந்து கவனித்த விஷயம் தான். பல படங்களில் பூ மட்டும் தெட்டத்தெளிவாக தெரிந்து பின்னணி எல்லாமே மங்கலாக தெரியுமே? இந்த காளானை போல. காரணம் அபெர்ச்சர் செட்டிங்.
906567_10151627599660791_779063159_o
538542_10151382157015791_725578140_n
அப்பெர்ச்சர் ஒகே. அது என்ன ஷட்டர் ஸ்பீட்? இப்போது ஒரு படம் பிடிக்கப்போகிறீர்கள். அபெர்ச்சர் அளவு எட்டு என்று முடிவு செய்தாயிற்று. கண் இமை போல கமராவுக்கும் ஒரு ஷட்டர். அதை கிளிக் பண்ணவேண்டும் இல்லையா? கிளிக் பண்ணாமல் அப்படியே திறந்தே வைத்திருந்தால் ஒளி தொடர்ந்து வந்து சென்சரை, படத்தை பாழாக்கி விட்டுவிடும். அதற்காக தான் இந்த ஷட்டர் ஸ்பீட். எவ்வளவு நேரத்துக்கு கமராவின் கண்ணை திறந்து வைத்திருக்கவேண்டும் என்று முடிவு செய்யும் விஷயம். சட்டென்று மூடித்திறந்தால் கொஞ்சம் ஒளி தான் வரும். நீண்ட நேரம் திறந்து வைத்திருந்தால் நிறைய ஒளி வரும். ஆக செனசரில் எவ்வளவு ஒளியை அனுப்பவேண்டும் என்று தீர்மானிக்க அப்பெர்ச்சரும் ஷட்டர் ஸ்பீடும் இணைந்து செயல்படவேண்டும். இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஷட்டரை அதிக நேரம் திறந்து வைத்திருக்கவேண்டும். ஆக ஷட்டர் ஸ்பீடை குறைக்கவேண்டும். இதையே வேகமாக பாயும் ஒருவரை படம் பிடிக்க ஷட்டர் ஸ்பீட் அதிகமாக வேண்டும்.
550861_10151382192055791_1880970326_n540949_10151382156705791_1353719390_n 

 
இப்போது எங்கள் கண்ணிலே ஷட்டர் ஸ்பீட் இல்லையா? என்ற கேள்வி எழுகிறதா? யோசியுங்கள். கண் சிமிட்டும் நேரம் தான் ஷட்டர் ஸ்பீட். என்ன ஒன்று எங்கள் கண் இமை மூடி திறக்கும் நேரத்துக்குள் ஒரு போட்டோவுக்கு பதிலாக வீடியோவே எடுத்துவிடுகிறது. Got it?
“ஒகே … மும்மூர்த்திகளில் அப்பேர்ச்சர் ஷட்டர் ஸ்பீட் என்று இரண்டு மூர்த்திகள் சொன்னாய் .. மூணாவது ஆளு ஆரு?”
“அவர் தான் ISO.  சென்சர் அளவை மாற்றும் விஷயம் .. உள்ளே புகும் லைட்டை எந்த அளவின் உணரவேண்டும் என்ற சென்சிட்டிவிட்டியை தீர்மானிக்கும் ஐட்டம்  .. noise  என்றெல்லாம் ...”
“ம்ஹூம் .அது இப்ப வேணாம்... ஓட்டோ மோடுக்கும் மனுவல் மோடுக்கும் என்ன வித்தியாசம்? .. அதை சொல்லு”
கமராவை ஓட்டோ(auto) மோடிலே படம் பிடிக்கும்போது, அபெர்ச்சர் எவ்வளவு ஷட்டர் ஸ்பீட் எவ்வளவு, ISO என்று கமராவே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. நீங்கள் எதை போக்கஸ் பண்ணுகிறீர்களோ அதை தெளிவாக படமாக எடுத்துத்தர எவ்வளவு வெளிச்சம் தேவை என அதுவே தீர்மானிக்கிறது. அதன் தீர்மானமும் சரியாகவே இருக்கும். உங்கள் வேலை கமரா சொல் மந்திரம் என்று தலையாட்டி கிளிக் பண்ணுவது தான். கண்ணால் நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அதையே கமராவும் பிடிச்சு தரும்.
ஆனால் போட்டோகிராபி என்பது அதுவல்ல.
முன்னரே சொன்னது போல, Depth of Field ஐ தீர்மானித்து, சகட்டு மேனிக்கு அபெர்ச்சர் சைஸை குறைத்து ஒரு ஏரியாவை தெளிவாக்கி மிகுதி எல்லாவற்றையும் மங்கலாக்கும் புத்திசாலித்தனம் ஓட்டோ மோடுக்கு கிடையாது.  சிலர் நீர் வீழ்ச்சிகளை படம் பிடிக்கும்போது, தண்ணி பசுந்தாக, பஞ்சு போல தெரியுமே? அதற்கு ஷட்டர் ஸ்பீடை குறைக்கவேண்டும்.  ஓடும் காரை படம்பிடிக்கும்போடு அது மூவ் பண்ணுவது போல ஒரு எபக்ட் வருமே. அது கூட ஷட்டர் ஸ்பீட் தான். இந்த வேலை எல்லாம் ஓட்டோ மோடில் பண்ண முடியாது. creativity என்பது Manual model இல் தான் இருக்கிறது.
சிம்பிளா சொன்னால்.. . ஓட்டோ மோட் என்றால் கணவனை மனைவி கொன்ரோல் பண்ணுவாள். மனுவல் மோட் என்றால் மனைவியை கணவன் கொன்ரோல் பண்ணுவான்!

 

நட்சத்திர யன்னல்!

இந்த டைம்ல என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
கேட்டுக்கொண்டே தூக்கக்கலக்கத்தோடு அருகே வந்தமர்ந்தான். நேரம் நள்ளிரவு தாண்டி இரண்டு மணி இருக்கலாம். சுற்றுவட்டாரத்தில் எந்த வெளிச்சமும் இல்லை. அவுஸ்திரேலியாவின் சனநடமாட்டம் இல்லாத மைய பாலைவன பகுதி அலைஸ் ஸ்பிரிங்க்ஸ். பாலைவனத்தில் நடுவே இருக்கும் ஐயர் பாறை நட்சத்திரங்களது தெறிப்பில் செந்நிறத்தில் ஜொலித்துகொண்டிருந்தது.  மேகலா கமராவை tripod இல் செட் பண்ணிவிட்டு அதையே கவனித்துக்கொண்டிருந்தாள். சில செக்கன்கள் இடைவெளியில் படம் சடக் சடக்கென்று அடித்துக்கொண்டிருந்தது.
ஸ்டார் ட்ரைல்ஸ்(Star Trails) எடுத்துக்கொண்டிருக்கிறன்.
அதென்னது ஸ்டார் ட்ரைல்ஸ்?
அதோ அந்த துருவ நட்சத்திரத்தை குறிவச்சு கமராவை லோங் எக்ஸ்போஷர்ல வச்சு போட்டோ எடுத்து சேர்த்துப்பார்த்தா நட்சத்திரங்கள் எல்லாமே ஒரு பெரிய வளையம் வளையமா சுத்தி வருவது போல தெரியும்.
எப்பிடி?
StarTrail
பூமி தன்னை தானே சுத்துது இல்லையா? அப்பிடி என்றால் கமராவும் மூவ் பண்ணுது தானே. ஆக கமராவின் சட்டத்தில நட்சத்திரம் சுத்திறது போல தெரியும் .. அதான் ஸ்டார் ட்ரைல்.
சுத்துது!
விடு .. விளக்கம் தேவையில்ல.. ரசிச்சா போதும். கஜன் இந்தோனேசியா போன சமயம் இரண்டு சாமம் இப்பிடி கமராவும் கையுமா கிடந்து எடுத்திருக்கிறான். இந்த டைம் லாப்ஸ் (Time Lapse) வீடியோ பார்த்தா நான் சொல்லுறது புரியும்!


ஒரு இரவின் ஆச்சர்யங்கள் … அப்பிடியே .. அதென்ன டைம் லாப்ஸ் வீடியோ? முழு இரவையும் வீடியோ எடுத்து எடிட் பண்ணுவதா?
You kidding? .. ஒவ்வொரு பிஃரேம் பிஃரேமா போட்டோ எடுக்கோணும்… முப்பது செக்கனுக்கு லோங் எக்ஸ்போஷர் ஷட்டரில ஒரு போட்டோ படி தொடர்ந்து எடுத்து .... அந்தி சாயும் நேரம் தொடங்கி பொழுது புலரும் வரை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒன்றன் மேலே ஒன்றாக கொழுவி போட்டோக்களால் கோர்க்கின்ற வீடியோ மாலையை தான் டைம் லாப்ஸ் என்று ….. போட்டோகிராபியின் உச்சம் இது..
வாவ் .. இவ்வளவு இருக்குமா .. நட்சத்திரம் எல்லாமே நீ சொன்னது போல முழுசா வளையமாவே தெரியுதே .. .
பால்வீதி .. எரி நட்சத்திரம் கூட தெரியுது பாரு .. ஒரு இரவுக்குள்ளே எவ்வளவு விஷயங்கள் .. டிவைன் பீலிங் ..சான்ஸே இல்ல!
நட்சத்திர யன்னலில் வானம் எட்டிப்பார்க்குது .. ஹம் பண்ணினாள்.
ஐ கெட் இட் .. உனக்கொண்டு தெரியுமா மேகலா?
சொல்லு.
இந்த நிமிஷம் இந்த கணம் நீ இங்கிருந்து போட்டோ எடுக்கிறதை போல .. முடிவில்லா இந்த பிரபஞ்சத்தில, மே பி எங்கட பால்வீதியா கூட இருக்கலாம் .. எங்கேயோ ஒரு கிரகத்தில நீ .. இதே மேகலா உன்னையே படம் பிடித்துக்கொண்டிருக்கலாம் .. இந்த நீயும் அந்த நீயும் எண்டாங்கில்ட்டா இருந்தா நடக்கலாம் .. தெரியுமா?
வாவ் .. குவாண்டம்!
yep .. எல்லாமே சாத்தியம் … ஸ்பேஸ் டைம் .. ..
இன்னொரு மேகலா அழகா … இன்னொருத்தி அசிங்கமா … ஒருத்தி கடவுளா ..
எக்ஸாக்ட்லி. பிடிச்சிட்டாய்.. ஒரு கிரகத்தில இந்த கணத்தில உன்னை நான் நெருங்கி ..கன்னம் காது என்று தொடங்கி …
இன்னொன்று தெரியுமா உனக்கு ..?
ம்ம்ம்?
நீ என்ன தான் குவாண்டம் .. பரலல் யூனிவேர்ஸ் டகால்டி செய்தாலும் இன்னும் மூணு மணிநேரம் ஸ்டார் ட்ரைல் தான் … நீ போய் டெண்டுக்க போர்த்திக்கொண்டு படுடா ராஜா!
சிரித்துக்கொண்டே அவனை தள்ளிவிட்டாள்.
இராட்சசி!
முறைத்துக்கொண்டே எழுந்து டென்டுக்கு போனவன் திரும்பினான்.
ஒண்டு தெரியுமா உனக்கு?
சொல்லு..
இதே கணத்தில ஏதாவது ஒரு கிரகத்தில உன்னைய ஒருத்தன் குத்தியும் கூட கொல்லலாம்!
பக்கத்தில் கிடந்த கல்லை எடுத்து ஓங்கி குமரன் மேலே எறிந்தாள் மேகலா!

&&&&&&&&&&&&&&&
நன்றிகள்.

Contact form