வியாழமாற்றம் 06-06-2013:கனவு மெய்ப்பட வேண்டும்

Jun 6, 2013

 

DG12_09_27_220.jpg

வாக்கினிலே இனிமை வேண்டும்

“I owe my life to this country. I was born in a country called Sri Lanka… and we saw the way .. people lost their freedom. The years civil war …”

இந்த நாட்டுக்கு(அமேரிக்கா) நான் வாழ்நாள் கடமைப்பட்டிருக்கிறேன். நான் ஸ்ரீலங்கா என்ற நாட்டிலே பிறந்தேன்.  அங்கே மக்கள் சுதந்திரத்தை எப்படி தொலைத்தார்கள் என்பதை பார்த்தோம். உள்நாட்டு யுத்தத்தை பார்த்தோம். என்னுடைய தந்தை தாய் இருவருமே ஆசிரியர்கள். கல்வியோடு, சொந்தக்காலில் எப்படி நிற்பது என்பதையும் அவர்கள் எனக்கு கற்பித்தார்கள். உன்னுடைய சுற்றத்துக்கு எவ்வளவு உதவமுடியுமோ அவ்வளவு உதவவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள்.  வீட்டிலே நான் ஆறாவது பிள்ளை. எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. நான் தேங்காய், மாங்காய் கூட விற்றிருக்கிறேன். கஷ்டம். உங்களுக்கு தெரியும். குடும்பத்திலிருந்து ஒரு பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பும் செலவில் இருக்கிற காசு எல்லாமே தீர்ந்துவிடும். அவ்வளவு கஷ்டம். ஆனாலும் கௌரவம் என்று ஒன்றிருக்கிறது. அதை நான் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

அமெரிக்காவுக்கு நான் 1982ம் ஆண்டு வந்தேன். இலோனோய் பல்கலைக்கழகத்தில் படிக்கவென்று நான் ஓஹையோ விமானநிலையத்தில் தரை இறங்கிய பொழுதுகள் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அக்கறை ... மனிதர்களின் மீது அமெரிக்கர்கள் காட்டிய அக்கறை நம்பமுடியாததாக இருந்தது. விமானநிலையத்தில் இருந்து எந்த வழியால் செல்லவேண்டும், எங்கே போகவேண்டும், எனக்கு தங்குமிட வசதிகள் எல்லாம் சரியாக இருக்கிறதா, சின்ன சின்ன விஷயங்களை கூட பார்த்து பார்த்து செய்தார்கள். அதிசயிக்கத்தக்க அக்கறை அது. இந்த நாடு, மனிதர்கள் மீது கொண்டுள்ள வலுவான பெறுமதியை அது காட்டியது. ஒரு மனிதனை அவனுடைய நிறத்துக்காகவோ அல்லது அவனிடம் என்ன இருக்கிறதோ என்பதை வைத்து மதிப்பிடாமல் மனிதனை மனிதனாகவே பார்க்கும் பாங்கு என்னை பெருமளவில் பாதித்தது.

சிக்காக்கோவில் வந்திறங்கியவுடன் முதலில் பார்த்த விளம்பர பலகை Hotdogs தான். அமெரிக்கர்கள் நாய் இறைச்சி சாப்பிடுவார்கள் என்பது எனக்கு தெரியாமல் போயிற்றே என்று யோசித்திருக்கிறேன்… சிரிப்பு… சொசெஜ் என்றால் என்னவென்று தெரியும். ஆனால் Hotdogs கேள்விப்பட்டிருக்கவில்லை. அமரிக்காவை பற்றிய இந்தளவு அறிவு கொண்ட என்னை பல மில்லியன் டொலர்கள் கொண்ட இன்பிராரெட் நாவிகேஷன் ஆராய்ச்சிசாலையில், பொறுப்பான முதலாவது மாணவனாக எந்த நம்பிக்கையில் சேர்த்தார்கள் என்று எனக்கு இன்னமும் விளங்கவில்லை!

b-j-schonberg-hot-dogs

என் திறமையை முழுமையாக பயன்படுத்தினார்கள். திறமையின் உச்சப்பட்ட எல்லையை அடையும்வரை ஊக்குவித்தார்கள். வழிகாட்டினார்கள். சென்ஸர் கனியங்கள்(material) சார்ந்த ஆராய்ச்சி. இந்த பொருளை இப்போது பல விஷயங்களில் பாவிக்கிறார்கள். அப்போது அது வெறும் ஆராய்ச்சி நிலையிலேயே இருந்தது. இதை இப்படியே விட்டுவிடாமல் பயன்பாட்டுக்கு உரியதாக, இந்த தொழில்நுட்பத்தை பாதுகாக்கவேண்டுமானால், பல்கலைக்கழகத்தை தாண்டி அதை சார்ந்த தொழில் நிறுவனம் ஆரம்பிக்கவேண்டும் என்று 1997ம் ஆண்டு உணர்ந்து கொண்டேன். ஆரம்பித்தேன். வீட்டில் பேஸ்மண்டிலே  மனைவியின் அனுசரணையோடு ஆரம்பித்த நிறுவனம். என் மனைவி ஒரு டென்டிஸ்ட். கொஞ்சநாட்களில் தன்னுடைய டெண்டல் கிளினிக்கிலேயே இந்த நிறுவனத்தை நடத்துவதற்கு உதவி புரிந்தார். இப்போது இந்த நிறுவனம் 30,000 சதுரஅடியில் எழுபது தொழிலாளர்களுடன் இயங்குகிறது.

பிரச்சனை என்ன? ஆராய்ச்சிகளுக்கும் நிறுவனப்படுத்தலும் இங்கே தொடர்புகள் இல்லை. அமெரிக்காவின் 17வீதமான பௌதிகவியல் நிபுணர்கள் midwest(சிக்காக்கோ, இலியோனாஸ், ஓஹியோ…) பிராந்தியத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆராய்ச்சியை சந்தைப்போருளாக்கும் நிறுவனங்கள் தான் இங்கே இல்லை. அதை ஆரம்பிக்கவேண்டும். நான் அமெரிக்காவுக்கு வரும்போது பெல் லாப்ஸ், ஐபிம் லாப்ஸ் பற்றிய கனவுகளுடனேயே வந்தேன். இப்போது நான் ஆரம்பித்திருக்கும் நிறுவனம் கூட அந்த கனவு நிறுவனங்களை மனதில் வைத்தே ஆரம்பித்தது. இந்த நிறுவனம் வளர்ந்து மேலும் மேலும் இந்த நாட்டுக்கு சேவை செய்யும் என்று நம்புகிறேன்.

ஒரு நாட்டுக்கு குடிபெயர்ந்து அங்கே சாதிக்க என்ன செய்ய வேண்டும்? முக்கிய விஷயம். நீங்கள் பல இடங்களில் விழுவீர்கள். விழுபவன் எப்படி எழுந்து நடக்கிறான் என்பதில் தான் வெற்றி தங்கியிருக்கிறது. “இது கஷ்டம் .. முடியாது” என்று சொல்ல பலர் இருப்பார்கள். ஆனால் இந்த நாடு சாத்தியங்கள் நிறைந்த நாடு. தவறுகளை திருத்திக்கொண்டு எழுந்து நடக்க ஆரம்பியுங்கள்.


தரணியிலே பெருமை வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் அமெரிக்காவை முன்னணி நாடாக மாற்ற பாடுபட்ட குடியேற்றவாசிகளுக்காக வழங்கும் “Champion of Change” விருது சிவலிங்கம் சிவானந்தனுக்கு கிடைத்திருக்கிறது.  தலைவர் நம்மாளு. அந்த நிகழ்வில் நம்மாளு கொடுத்த ஏற்புரையை தான் மேலே கொஞ்சம் தமிழில் தழுவியிருக்கிறேன்.

பிறந்தது மட்டுவிலில். அப்பா வல்வெட்டித்துறை. “வடாகாரன்”. சொல்ல தேவையில்லை. அண்ணே மண்டையாய் பிறந்தது ஆச்சர்யமில்லை. படித்தது மட்டுவில் சரஸ்வதி மகாவித்தியாலயம். அப்புறம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி. பின்னர் உயர்தரத்தில் யாழ் இந்துவிலும் படித்திருக்கிறார். பின்னர் பேராதனை படிப்பு, மட்டகளப்பில் கொஞ்சக்காலம் படிப்பிப்பு என்று கழிந்து, அதற்குப்பின்னர் 1982 இல் அமேரிக்கா போயிறங்கிவிட்டார். செட்டிலான பிறகு மனைவியை கூப்பிடலாம் என்ற ஐடியா.

305

1983 இல் பல்கலைக்கழக அனுமதி பரீட்சைக்கு சிக்காக்கோவில் தயார் பண்ணிக்கொண்டிருக்கும்போது தான் இலங்கை கலவரம் பற்றிய செய்தி வருகிறது. மனைவியோடு தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா? எங்கேயாவது ஒளிந்திருக்கிறாரா? எதுவுமே தெரியவில்லை. மனைவியை தேடி திரும்பவும் இலங்கைக்கு போவதா? இல்லை சிக்காகொவிலேயே இருந்து பரீட்சை எடுப்பதா? என்ற குழப்பம். போய் எதுவுமே நீ சாதிக்கப்போவதில்லை, அகப்படுவாய். அதைவிட இங்கிருந்தே விசாரித்து பார்க்கலாம் என்று சிவானந்தனின் பேராசிரியர் சொல்ல, இவரும் அப்படியே செய்ய, கொஞ்சநாளில் மனைவி பாதுகாப்பாக இருக்கிறார் என்று தெரியவருகிறது. சிவானந்தனும் படித்து நுழைவுத்தேர்வில் சித்தியடைகிறார். கூடவே மனைவியும் இவரோடு வந்திணைகிறார்.

What followed was then became a history!

Siva_Sivananthan2

கொஞ்சநாளிலேயே புதிதாக ஆரம்பித்த பல்கலைக்கழக ஆராய்ச்சி சாலையின் பேராசிரியர் பிரான்ஸ் திரும்பிவிட, ஆராய்ச்சியின் பொறுப்பு சிவானந்தன் கைகளில் வருகிறது. அப்புறம் என்ன? தல அந்த துறையிலேயே தேர்ச்சி அடைந்து, தனியாக நிறுவனம் ஆரம்பித்து, தொழில்நுட்பத்தை சந்தைப்படுத்தி …. பலதை கண்டுபிடித்து, பலருக்கு வேலைவாய்ப்பை கொடுத்து, வெள்ளைமாளிகை விருது வரைக்கும் போய்விட்டார். இவர் வெற்றிக்கு எது உறுதுணையாக இருந்தது? என்று கேட்கும்போது சிவானந்தன் சொல்லும் பதில்.

ஆசிரியர்களான என் பெற்றோர்கள் எனக்கு கொடுத்த நம்பிக்கை அலாதியானது. எல்லா சமயங்களிலும் எனக்கு போதிக்கப்பட்ட வார்த்தை ஒன்று தான். அது.

“உன்னால் முடியும்”


 

உண்மை நின்றிட வேண்டும்!

சிவானந்தனுக்கு விருது கிடைத்தவுடன் “தமிழன்டா!”, “ஈழத்தமிழண்டா”, “இந்துவின் மைந்தனே வாழிய”, “சிவானந்தன் சத்தம்போடாம நிறைய வேலை இயக்கத்துக்கு செஞ்சவர்”, “1987ம் ஆண்டு அவர் தமிழில கவிதை எழுதியிருக்கிறார்”, “திருக்குரல் கூட தெரியுமாம் பாஸ்” (எழுத்துப்பிழையோடே!) என்று ஒரு இரவுக்குள்ளேயே பேஸ்புக் ஸ்டேடஸுகள் பொங்க ஆரம்பித்துவிட்டன. “எங்கட ஒண்டை விட்ட மாமிண்ட பக்கத்து வீட்டில தான் சிவானந்தனிண்ட மனிசி இருந்ததாம்” என்று சாட்டில் ஒருத்தன் வந்து வெடியை கொழுத்திப்போட்டான்.

pulikesi29030623lv2

“ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் இலங்கைத் தமிழர்” என்று ஒரு வீரகேசரி தலைப்பு போட்டிருந்தது. உதயன் இன்னும் ஒரு படி அதிகமாக போய் “ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்கன் திட்டத்தில் யாழ் தமிழன்“ என்று எழுதிவிட்டது. ஒரு நண்பன், இந்துக்கல்லூரி பழையமாணவன். டென்ஷன் ஆகிட்டாப்ல. “ஒபாமாவை கொலை செய்யும் திட்டத்தில் இந்துவின் மைந்தன்” என்று அடிச்சுவிட்டு அறுபது லைக் வேற வாங்கிவிட்டான். “ஒபாமா இல்லடா அது ஒசாமாடா” என்று ஒரு கொமெண்ட் விழுந்தது. சிங்கன் ஜெர்க் ஆயிட்டார். ஸ்டேடசை இனி எடிட் பண்ணவும் ஏலாது. டிலீட் பண்ணினா அறுபது லைக்கும் வீணாக போயிடும். இன்டெலிஜெண்டா தலைவர் அந்த “ஒபாமா இல்லடா அது ஒசாமாடா” என்ற கொமெண்டை டிலீட் பண்ணீட்டு கம்முன்னு இருந்திட்டாரு. அதுக்கு பிறகும் ஒரு முப்பது லைக்கு வந்தது. டேய் அப்பிரசிண்டுசுகளா அந்த அண்ணே இதை நோட் பண்ணி ஒபாமாவுக்கு அறிவிச்சா உங்களை எல்லாம் பகலிலேயே தூக்கிடுவாங்கடா. ஜாக்கிரத.

இப்படியான அவசர அவசரமான பெருமைகளில் நாங்கள் ஆதாரமான விஷயம் ஒன்றை தவறவிட்டுவிடுகிறோம். அது தான் அந்த விருதுக்கான காரணம் என்னவென்பது. சிவானந்தன் செய்த ஆராய்ச்சி சுவாரசியமானது. அதை பிரித்து மேய்ந்தோமானால், பார்க்கும் பத்து பதினைஞ்சு வயசு சிறுவர்கள் டென்ஷன் ஆகலாம். சிவானந்தனுக்கு பெல், ஐபிம் லாபுகளில் இருந்த ஆர்வம் போல இந்த சிறுவர்களுக்கு சிவானந்தன் லாபு மேலே ஆர்வம் வரலாம். இன்னொரு சிவானந்தன் பத்து வருடங்களுள் சிக்காகோ போயிறங்கலாம். ஆக பெருமைகள் பேசுவது, மொக்கைகள் போடுவது தவறில்லை. ஆனால் இவற்றுக்கு மத்தியில் சிலவிஷயங்களை செய்யாமல் விட்டுவிட கூடாது. இளையராஜா இதைப்பற்றி அழகாக ஒருமுறை சொல்லியிருந்தார்.

மியூசிக்கில தவறு என்று ஒன்றில்லை. எது வேணும்னாலும் பண்ணிக்கலாம்…. அப்பிடி ஆகிப்போச்சு! ஆனால் எது பண்ணணுமோ … எது பண்ணணுமோ அத பண்ணாம விட்டிட கூடாது!

 


 

காரியத்தில் உறுதி வேண்டும்

ஒசாமா மாட்டரில் இருந்தே ஆரம்பிப்போம். நிலவே இல்லாத நட்ட நடு சாமத்தில் கூட முன்னே இருக்ககூடிய விஷயங்களை பார்க்ககூடிய கருவியை ஒசாமா தாக்குதல் படையணி பயன்படுத்தியதாம். வேவு விமானங்கள் இரவில் கண்காணிப்பதற்கு இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. அப்படி என்ன தான் இந்த கருவிகளில் இருக்கிறது? என்ன மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கருவிகளால் இரவில்ல பார்க்கமுடிகிறது?

அதை விளங்குவதற்கு, நமக்கு இரவில் ஏன் பார்வை தெரிவதில்லை என்ற சப்பை மாட்டரை முதலில் டிஸ்கஸ் பண்ணவேண்டும்.

ஒரு பொருள் எங்கள் கண்ணுக்கு தெரியவேண்டுமென்றால் அந்த பொருளில் இருந்து ஒளிக்கதிர் எங்கள் கண்களை வந்தடையவேண்டும். இரவில் பின்னாலே ஒண்டுக்கு போகும்போது பற்றைகளோ, மரங்களோ கொஞ்சமேனும் தெரிவதற்கு, நிலவு ஒளி, நட்சத்திரங்கள், பக்கத்துவீட்டு அரிக்கன் லாம்பு, தெரு விளக்கு இதெல்லாம் தான் காரணம். இவற்றில் இருந்து சன்னமாக வரும் ஒளிக்கதிர்கள் பற்றையில் பட்டு தெறிக்க, பருமட்டாக மாட்டர்கள் புலப்படுகிறது. ஒகேயா பாஸ்?

Black-Lab-3-months-old-puppy

ஆனால் இரவில் எங்களை விட நாய் பூனைக்கு பார்வை துல்லியமாக புலப்படும். ஏன்? இது சுவாரசியமான விஷயம் டாபிடம் லூசிடம் (Tapetum lucidum) என்று ஒன்று இருக்கிறது. பெயர் வாய்க்குள் நுழையாவிட்டால் நமிதா என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த நமீதா ஒரு குட்டி நிலைகண்ணாடி போன்று, கண்களின் விழித்திரைக்கு பின்னால் இருக்கிறது. இரவில் தட்டுத்தடுமாறி வரும் ஒன்றிரண்டு ஒளிக்கதிர்களை வந்த வீச்சுக்கு தெறிப்படைய செய்து மீண்டும் விழித்திரைக்கு அனுப்புகிறது. விளைவு? விழித்திரைக்கு ஐஞ்சு ஒளிக்கதிர் வந்தால் அது இப்போது டபிள் ஆகி பத்து ஆகிறது. வெளிச்சம் இரட்டிப்பாகி தெளிவாக தெரிகிறது. இந்த நமீதா, நாயின் கண்களில் இருக்கிறது. பூனையின் கண்களில் இருக்கிறது. ஆனால் நம்ம கண்களில் இல்லை. இதனால் தான் இரவில் டோர்ச் அடித்தால் நாய் பூனையின் கண்களில் நமீதா பளீரென்று கலர் கலராக மின்னும். நம்ம மூஞ்சியில் டோர்ச் அடிச்சா சக்கென்று இருக்கும்.

ஆனால் ஒசாமா அட்டாக் நாளின் போது இந்த வெளிச்சமும் இல்லை. அரிக்கன் லாம்பு, தெருவிளக்கு எதையுமே எதிர்பார்க்கமுடியாது. Pitched dark என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். நம்ம கஜன் போல. அப்படியான சமயத்தில் கண்காணிப்பு கருவியில் நமீதாவை ஒட்டிவிட்டாலும் பயனில்லை. ஏதாவது உள்ளே நுழைந்தால் தானே டபிள் ஆகும்? ஆணியே இல்லை என்றால்? இங்கே தான் சிவானந்தன் அண்ணே சிங்கனாகிறார்.

ஒளியை குவாண்டம் துணிக்கைகளின் கற்றைகளாகவும் கருதலாம், அதே சமயம் மின் காந்த அலையாகவும் கருதலாம் என்று ஐன்ஸ்டீன் சொன்னார் இல்லையா (சொன்னாரா என்ன?). குவாண்டம் விஷயத்தை இன்னொரு நாள் கவனிப்போம். இன்றைக்கு ஒளியை மின்காந்த அலையாக பார்ப்போம். லோஷன் சக்தியில் பேசினாலும், வெற்றியில் பேசினாலும் சூரியனில் பேசினாலும் நம்மை சேர்ந்து அடையும் ரேடியோ அலை(ஒலி அல்ல) மின்காந்த அலை தான். X-Ray அது இன்னொரு மின்காந்த அலை. ஆனால் ஒளி ஒரு பொருளில் பட்டு தெறித்து நம் கண்களை அடைந்தால் அந்த பொருளை பார்க்கமுடிகிறது. ஆனால் எல்லா மின்காந்த அலைகளையும் அப்படி எம்மால் பார்க்கமுடிவதில்லை. அதற்கு காரணம் நம் கண்களின் உணர்வுத்திறன் குறிப்பிட்ட அலைநீளத்துக்கே டிசைன் பண்ணப்பட்டிருக்கிறது.  (எல்லாமே முதலில் ஒளி போன்று ஒரு பொருளில் பட்டு தெறிக்குமா என்பது அடுத்த கேள்வி,ரேடியோ அலை அநேகமான பொருட்களில் ஊடுருவிவிடும்!)

Infrared_dog-croppedஆனால் இந்த பிரச்சனையே இங்கே ஆதாயமாகிறது. Infrared கதிர்கள். ஒளியின் அலைநீளத்துக்கு அண்மையாக இருப்பவை. வெற்றுக்கண்களால் உணரமுடியாத கதிர்கள். இப்போது இந்த கதிர்களை நட்ட நடு சாமத்திலே பீய்ச்சி அடித்தால் யாருக்குமே ஒன்றுமே தெரியாது. ஒசாமா மூஞ்சியில் அடித்தாலும் அவருக்கு ஒரு மண்ணுமே விளங்காது. அதே சமயம் அவரில் தெறிச்சு வரும் Infrared கதிரை உணரக்கூடிய கருவி எம்மிடம் இருந்தால் ஒசாமாவை நாங்கள் அந்த கருவியில் பார்க்கமுடியும். அப்படிப்பட்ட கருவியை இரண்டாம் உலகமகாயுத்த காலத்திலேயே கண்டுபிடித்துவிட்டார்கள். என்ன ஒன்று, அந்த உணர்வு கருவியை மெய்ன்டைன் பண்ணுவது பயங்கர கஷ்டம். தசாவதாரம் படத்து  வையில் போன்று எப்போதுமே கடும் குளிர்ச்சியான இடத்தில் பொத்திவைக்கவேண்டும். இதுக்காக பிரிட்ஜையும் தூக்கிக்கொண்டா ஒசாமாவை தாக்க போவாங்க?  இங்கே தான் நம்மாளு ஒரு மாட்டரை கண்டுபிடித்தார்.

Mercury cadmium telluride. பாதரசம், கட்மியம் சேர்ந்த டெலூரியப்பொருள். சுருக்கமாக MCT, எங்கள் பாஷையில் மேகலா, கன்சிகா கலந்த ஒரு பொண்ணு என்று அழைப்போமா? இந்த பொண்ணு சாதாரண பார்வை அலைநீளத்தை விட ஏனைய அலைநீளங்களையும் உணரும் ஆற்றல் கொண்டது. இதிலே இருக்கும் கன்சிகாவின் அளவைப்பொறுத்து வெவ்வேறு அலைநீளங்களையும் உணரலாம். முக்கியமா இந்த பொண்ணை பிரிட்ஜுக்குள் பூட்டி வைக்கத்தேவையில்லை. சாதாரண காலநிலையிலும் இது இப்படியே இயங்கும்.  சென்சிட்டிவிட்டி கூட இதற்கு அதிகம். இந்த துறையில் இவ்வளவு காலமும் இருந்த தொழில்நுட்பத்தை தூக்கிச்சாப்பிடும் திறன் கொண்ட பொண்ணு இது.

ஒசாமாவை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட கருவிகளில் இந்த பொண்ணை சகட்டு மேனிக்கு பாவித்திருக்கிறார்கள். செலவு குறைவு. பராமரிப்பதும் இலகு.  ஒசாமா மாட்டர் இதன் ஒரு பகுதி தான். மருத்துவம், வானியல் என்று ஆரம்பித்து இப்போது இதை சோலார் சக்திக்கு பயன்படுத்த ஆராய்ச்சிகளை செய்ய சிவானந்தன் பணிகளை முடக்கிவிட்டிருக்கிறார். அமெரிக்க அரசாங்கமும் மில்லியன் கணக்கில் அள்ளிக்கொடுக்கிறது!

mzl.pjcczvfp.320x480-75

இதன் அடுத்த கட்டமாக குவாண்டம் போட்டோ …

எக்ஸ்கியூஸ் மீ பாஸ்

என்ன டவுட்டா? டெல் மீ மீ ..

இல்ல பாஸ் .. தூக்கம் தூக்கமா வருது .. நஸ்ரியா மாட்டர் இல்லையா?

இல்லையே ராஜா

வழமையா சீரியஸ் ஆன்மீக பதிவிலும் எதையாவதை செருகுவீங்களே பாஸ். ப்ளீஸ் .. அட்லீஸ்ட் சமந்தா?

இல்லடா ராஜா … நீ போய் தூங்கு .. அடுத்தவாரம் நஸ்ரியா சமந்தா ஹன்சிகான்னு மும்முனை தாக்குதல் ரெடி பண்ணிடலாம்.

ஒகே பாஸ்

 

மன்னிக்கவேண்டும் மக்களே. நல்ல புளோவில இருக்கேக்க ஒரு நாதாரி இடைக்க பூந்து மூடை குழப்பீட்டான். அவ்வளவு தான் சயன்ஸ். அடுத்த செக்ஷன்!

 


கைவசமாவது விரைவில் வேண்டும்!

அண்மையில் ஊரில் இருந்து ஆஸிக்கு குடிபெயர்ந்த ஒரு நண்பனை நேற்று சந்தித்தேன். “மச்சான் எல்லாம் முடிஞ்சு போச்சு” என்றே ஆரம்பித்தான். “ஏண்டா அப்பிடி சொல்லுறாய்?” என்று கேட்டதுக்கு அவன் கொட்ட ஆரம்பித்தது, நள்ளிரவு பன்னிரண்டு தாண்டியும் புலம்பல் அடங்கவில்லை. அத்தனையும் ஊரில் நடக்கும் அடக்குமுறை அட்டூழியங்கள் சம்பந்தமானது. இங்கே வேண்டாம்.

அங்கே இருக்கிறவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. வெளிநாட்டு தமிழர்கள் ஏதாவது செய்வார்கள் என்றால், இங்கே பிள்ளைகள் தமிழில் கூட பேசுகிறார்கள் இல்லை என்றான். “தேவையில்லை” என்று நான் சொல்ல, ஆச்சர்யமாக பார்த்தான். தமிழ் தேவையில்லை என்று மொத்தமாக சொல்லவில்லை. ஆனால் பிள்ளைகளுக்கு தமிழ் தெரிந்தால்தான் அவர்கள் தமிழுணர்வோடு வளர்வார்கள் என்று எந்த கட்டாயமும் இல்லை, ஒருமுறை மாவீரர் தினத்தில் ஒரு குழந்தை மைக்கல் ஜாக்சனின்  “what about sunrise” பாடலை உணர்ந்து பொருத்தமாக பாடியது என்றேன். அடிக்க வந்தான். இதை விளக்க வேண்டும். அதற்கு மீண்டும் ஜூதர்களிடமே செல்லவேண்டும்.

ஜூதர்கள். உலகின் அத்தனை மூலைகளிலும் அடி வாங்கினார்கள். ஜெர்மன் மொழி பேசியவர்கள், ரஷ்ய மொழி பேசியவர்கள், இத்தாலி மொழி பேசியவர்கள். யாரென்றில்லை. எல்லோருமே அடி வாங்கினார்கள். ஜெர்மனியர்கள் ஓவராக இந்த விஷயத்தில் நடந்ததால் மற்ற நாட்டுக்காரன் நல்லவனாகினான். அவ்வளவே. மற்றும்படி நிஜத்தில் ஜூதன் மீதான துவேஷம் அப்படியே இருந்தது.

EinsteinHebrOrgஇந்த பாங்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாஸிக்களின் கொடுமையின் விளைவாக ஏனைய இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது. அதற்கு காரணம் ஜீதர்கள் தாங்கள் வாழும் நாட்டின் தவிர்க்கமுடியாத பிரஜைகள் ஆனதும் தான். ஐன்ஸ்டீன், மக்ஸ் போர்ன், ஹேபர், நீல் போர் என்று நம்ம ஹீரோக்கள் எல்லோருமே ஜூதர்கள். இன்றைக்கு ஹாலிவுட்டை ஆட்டிப்படைப்பது கூட ஜூதர்கள் தான். அமெரிக்காவின் ஒவ்வொரு கட்டமைப்பின் வளர்ச்சியிலும் ஜூதர்களின் பங்களிப்பு இருக்கும். அவர்கள், அவர்களின் குழந்தைகள் எல்லோருமே அமெரிக்கர்களாகவும் அதே சமயம் ஜூதர்களாகவும் வளர்ந்தார்கள்.  வளர்கிறார்கள். அந்த நாட்டின் தவிர்க்கமுடியாத பிரஜைகள் ஆனார்கள். ஆனவர்கள் சும்மா இருந்தார்களா?

Jewish Lobby என்று அலுவலகத்தில் நண்பர் ஒருவன் சொல்லுவான். ஜூதர்கள் தங்களுடைய கொள்கைகளை, கருத்துக்களை, தம் இனத்தின் மீதான கொடுமைகளை, தேவைகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களுக்கு சொல்வார்கள். அலுவலம், வீடு, தெருவில் ஆரம்பித்து வெள்ளை மாளிகை கொள்கை வகுப்பு வரை இது இடம்பெறும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் வாழ்ந்த நாட்களில் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் இந்த வேலையை செய்தார். இஸ்ரேல் உருவாக அமெரிக்க ஜூதர்களின் பங்கு சாதாரணமானதல்ல. ஜனாதிபதி நிக்ஸன் 1973ம் ஆண்டு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்துக்கு இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு செய்தமைக்கு கூட இந்த Jewish Lobby தான் காரணம்.

albright_at_war-thumbமடலின் அல்ப்ரைட் என்ற பெயரை என் வயதுக்காரர்கள் மறந்திருக்கமாட்டார்கள். கிளிண்டன் ஆட்சிக்காலத்திய அமெரிக்க இராஜாங்க செயளாளர். அவர் பிறந்தது செக்கோஸ்லோவேகியாவில். தாய் தந்தையர்கள் ஜூதர்கள். பின்னர் கத்தோலிக்க மதத்துக்கு மாறிவிட்டார்கள். என்றாலும் ஹிட்லர் நாட்டை கைப்பற்றியபோது இங்கிலாந்துக்கு தப்பியோடவேண்டி வந்தது.  பிறகு போர் முடிந்தபின் நாட்டுக்கு திரும்பினாலும், கம்யூனிச ஆட்சி. சோவியத் யூனியனின் தொல்லை, தாங்க முடியாமல், மடலின் குடும்பம் அவருக்கு பத்து வயசு இருக்கும்போது அமெரிக்க வந்தார்கள். மடலின் தந்தையை போலவே அரசியல் விஞ்ஞானத்தில் கலக்க, ஐந்தாறு மொழிகளில் தேர்ச்சி அடைந்த இந்த பெண் ஜனநாயக கட்சி ஏணியில் ஏறி ஏறி ஏறி .. இறுதியில் நாட்டின் இராஜாங்க செயளாளர் ஆகிவிட்டார். Secretary of the state.

மடலின் சிறுவயதில் சர்வாதிகாரிகளின் ஆட்சியில் பந்தாடப்பட்டதும், அவரின் பால்கன் பிராந்தியம் மீதான அக்கறையும், கொசோவா யுத்தத்தில் அமெரிக்காவின் கொள்கையை தீர்மானித்தது என்கிறார்கள். 98ம் ஆண்டுவரை தீவிரவாத இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட கொசோவோ விடுதலை இயக்கம் எந்த விளக்கமும் இல்லாமல் அந்த லிஸ்டில் இருந்து ஒரே நாளில் தூக்கப்பட்டது. நேட்டோ களத்தில் இறங்கியது. இதை விமர்சகர்கள் மடலினின் யுத்தம் என்றே அழைக்கிறார்கள். கொசோவோ இன்றைக்கு தனிநாடாக இருப்பதற்கு, அதுவும் கிளிண்டன் போன்ற மிதவாத ஜனாதிபதி காலத்தில் இது நிகழ்ந்தமைக்கு மடலின் தான் தனிக்காரணம்.

428px-Canadian_Sri_Lankan_Tamil_Children

Are you getting it? நான் சொல்லவந்த செய்தியின் ஆதாரத்தை உணர்ச்சிவசப்படாமல் யோசியுங்கள். ஆரம்ப உரையில் சத்தம்போடாமல் சிவானந்தன் செய்தது ஒருவித lobbying தான். வெளிநாடுகளில் எங்கள் பிள்ளைகளை அந்தந்த நாட்டு பிரஜைகளாகவே வளரவிடுவோம். அவர்கள் போக்கிலேயே சாதனைகளை செய்யவிடுவோம். மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், வியாபாரம், துப்பரவாக்கல், தொழிற்சாலை, Blue collar, Red Collar எதுவானாலும் சரி. வளரவிடுவோம். ஆனால் சில விஷயங்களை சொல்லாமல் மாத்திரம் வளர்த்துவிடவேண்டாம்.

யார் கண்டது, இன்னும் முப்பது வருஷத்தில் என்ன நடக்கும் என்று. விருட்சம் இதுவென்று விதையை பார்த்து கண்டுபிடிக்க முடியுமா என்ன? தண்ணியை மறக்காமல் ஊற்றிப்பார்ப்போம்.

கனவு மெய்ப்படவேண்டும்!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மூலங்கள்

http://www.youtube.com/watch?v=2V0HXyha6Hs
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36373
http://www.jaffnahindu.org/news/dr-sivalingam-sivananthan-honored-as-a-white-house-champion-of-change-57.html
http://news.bbc.co.uk/2/hi/special_report/1999/03/99/kosovo_strikes/315053.stm
http://en.wikipedia.org/wiki/Jewish_lobby
http://news.medill.northwestern.edu/chicago/news.aspx?id=182831
http://onlineuthayan.com/News_More.php?id=129722076802280301#
http://www.virakesari.lk/article/local.php?vid=4968
www.sivananthanlabs.us

Contact Form