வியாழமாற்றம் 27-06-2013 : இது எங்கட கதை.

Jun 27, 2013

 

brother-and-sister-gladiola-sotomayor

நீங்க கேட்டதால ஒரு கதை சொல்லுறன். ஒண்டே ஒண்டு தான். அதுக்கு மேலே கேக்க கூடாது. நீங்க என்ன  வேணுமெண்டு கேட்டீங்களோ அதையே சொல்லுறன். திருப்பி சொல்லுறன். கேளுங்க. தம்பிராசு டேய் .. உன்னை தான்.. நித்திரை கொள்ளாம கிடந்திட்டு திரும்ப சொல்லன எண்டு அரியண்டம் பண்ணக்கூடாது சரியா? எடியே பெட்டை .. மலர் .. அங்கை இங்க ஏமலாந்தாம கேக்கிறியா? கேட்டிட்டு அப்பிடியே நித்திரையாயிடோணும். இன்னொரு கதை சொல்லுங்கப்பா எண்டா நான் எங்க போறது? ஒண்டே ஆயுசுக்குக்கும் போதும். செரியா?..வெள்ளன எழும்பி நடந்தா தான் வெயிலுக்கு முதல் யாப்பாண டவுண்ல நிக்கலாம்… ஒரு கதையை கேட்டிட்டு பேசாம படுக்கோணும். விளங்குதா?

கோயிலடி பூவரச கொப்புகளையும் சித்திரை மாசத்து திரள்முகில்களையும் உச்சிக்க்கொண்டு பூரண சந்திரன் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தது. பூநகரி சந்தி பிள்ளையார் கோயிலடியில் சாரத்தை விரித்து அதில் தம்பிராசையும் மலரையும் கிடத்திவிட்டு சுவர்க்குந்தில் சாய்ந்திருந்தபடியே சோமப்பா கதை சொல்லத்தொடங்கினார்.

 

சோமப்பா சொன்ன கதை

விருத்தேஸ்வரம் தேசம் செல்வச்செழிப்பான தேசம் இல்லாவிட்டாலும் நல்லவர்களை கொண்ட தேசம். அந்த தேசத்தின் குடியானவர்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக செய்து வந்தது கமம்; பெரும்போகம் சிறுபோகம் என்று ஆண்டின் பெரும்பாலான நாட்களில் கமமும் கமம் சார்ந்த தொழில்களும் தான் செய்வார்கள். அத்தனை பெரும் உழைப்பார்கள். உழைக்கவேண்டும். குடும்பத்தில் பத்துப்பேர் என்றால் பத்துபேரும்... பெண்கள் கால்நடைகள், வீட்டு சமையல், புழுங்கல் அவிப்பு என்று கவனிப்பார்கள். ஆண்கள் வயலுக்கு போவார்கள். தென்னைக்கு அடி வெட்டுவார்கள். சிறுவர்கள் கிளி அடிப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. சில பருவங்களில் மழை பொய்த்துவிடும். சிலவேளை வெள்ளம் பயிரை மூடிவிடும். கொடிய பயிர்கொள்ளி நோய்களும் பரவுவதுண்டு. வாழ்க்கை பஞ்சப்பாடு தான். ஆனாலும் மாசத்துக்கு ஒருமுறை அரசனுக்கு கொடுக்கும் திறை தவிர்த்து மிச்சம் உள்ளதை இல்லாதவர்களுக்கும் கொடுத்து தானும் உண்பார்கள் இந்த விருத்தேஸ்வர தேசத்து மக்கள்.

இந்த நாட்டு மக்களுக்கு இன்னொரு துன்பமும் இருக்கிறது. அங்கிருந்து எட்டு மலை தாண்டி ஒரு தொங்கு தோட்டத்து அரண்மனையில் பூதம் ஒன்று வசித்து வந்தது. அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்துக்கு வந்துவிடும். வந்து ஏதாவது ஒரு வீட்டுக்குள் சட்டென்று புகுந்து குடும்பத்தில் “ஒரு பிள்ளையை தந்துவிடு, போகிறேன்” என்று சொல்லும். “கொடுக்கமாட்டேன் போ” என்று பூதத்துடன் சண்டை பிடித்தால், பூதம் வீட்டில் இருக்கும் எல்லா பிள்ளைகளையும் பிடித்துக்கொண்டு போய்விடும்.  ஒரு பிள்ளையை தா என்றால் எந்த பிள்ளையை கொடுப்பது. பெற்றோர்கள் ஒருவரையும் கொடுக்கமாட்டோம் என்று அடம் பிடித்து அழுவார்கள். பூதம் எல்லா பிள்ளைகளையும் தூக்கிப்போய்விடும்.

1325139455_1-2

விருத்தேஸ்வரம் தேசத்தின் கிழக்கு கோடியில் இருக்கு தாயாற்றுக்கு அருகே பல்லவபுரம் என்ற சிற்றூர் இருக்கிறது.  கந்தனும் அவன் மனைவி காமாட்சியும், அவர்களின் ஐந்து பிள்ளைகளும் அங்கே தான் வசித்துவந்தார்கள். மற்றவர்களை போலவே கமம் செய்து பிழைத்து வந்தார்கள். ஐந்துமே சின்னதுகள். மூத்தவனுக்கு எட்டு வயது. ஐந்தாவது கடைக்குட்டி சாரதாதேவிக்கு மார்கழி கழிந்தான் ரெண்டு வயசு. சாரதாதேவி வெறும் குழந்தை அல்ல. ஒரு தேவதை. தூளியிலே அவள் அழும்போது கேட்கவேண்டுமே. அவள் அழுகை தேனாக காதிலே வந்துவிழும். அந்த அழுகை இசையில் மயங்கி காமாட்சி அவளுக்கு பால் ஊட்ட கூட மறந்துவிடுவாளாம். அண்ணன்மார்களுக்கும் சாரதாதேவி என்றால் உயிர். குட்டி குட்டி என்று தூளி ஒரு கணம் ஓய்ந்திருக்க விடமாட்டார்கள். எங்கிருந்தோ இருந்தெல்லாம் மயிலிறகு எடுத்துக்கொண்டு வந்து கொடுப்பார்கள். கந்தனோ சாரதாதேவி ஒரு சின்ன அணுக்கம் காட்டினாலேயே எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவான். செல்லக்குட்டிக்கு கொஞ்சும்போது குத்தக்கூடாது என்று மீசை வழித்து சவரம் செய்திருந்தான். பாசம் அந்த வீட்டில் தாயாற்று நீர்மட்டத்தை மீறி பாய்ந்துகொண்டிருந்தது.

கந்தன் வீட்டுக்கு ஒருநாள் அந்த சனியன் பிடிச்ச பூதம் வந்துவிட்டது.

ஒரு பிள்ளையை பூதத்துக்கு விடிவதற்குள் தாரை வார்க்கவேண்டும். இல்லாவிட்டால் பூதம் அத்தனை பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு போய்விடும். எல்லா பிள்ளைகளுமே சிறுவர்கள். யாரை என்று கொடுப்பது? கந்தன் இரவு முழுதும் தூக்கம் வராமல் தவித்தான். அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாய், தாயம் விளையாடுவோமே சோகி, அதில் ஐந்தை எடுத்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரை எழுதி எல்லாவற்றையும் ஒரு கிண்ணிக்குள் போட்டான். கிண்ணியை கொண்டுபோய் சாரதாதேவியிடம் கொடுத்து “ஒண்டை எடு கண்ணம்மா” என்று கண் கலங்கிக்கொண்டே சொன்னான். சாரதாதேவி “அப்பா” என்று மழலை வழிய சொல்லிக்கொண்டே ஒரு சோகியை எடுத்தாள். அந்த சோகியில் இருந்த பெயரை பார்த்தால்

“சாரதாதேவி”..

பூதம் அவளை பிடித்துக்கொண்டு போய்விட்டது. கந்தன் அன்றைக்கு பைத்தியமானவன் தான். “என்ன ஒரு அப்பன் நான், என் பிள்ளையை பூதம் பிடித்துக்கொண்டு போக பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேனே” என்ற குற்ற உணர்வு. நாட்கள் கழிந்தன. கமத்துக்கு போகிறான் இல்லை. வயல் முழுதும் களை மெத்திப்போய் கிடக்கிறது. இவன் என்னடாவென்றால் வீட்டிலேயே கிடக்கிறான். ஊர் முழுக்க பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லிக்கொண்டார்கள்.  கந்தன் இதை ஒன்றுமே கவனத்தில் எடுக்கவில்லை.  தினமும் சாவு விழும் வீடு போல ஆகிவிட்டது கந்தனின் வீடு.

ஒருநாள் அதிகாலையில் திடீரென்று கந்தன் பூதத்தை தேடி புறப்பட்டு விட்டான். பூதத்தை கொன்று சாரதாதேவியை மீட்டுவருகிறேன் என்று சூழுரைத்தான். வழியில் கண்டவர்கள் எல்லாம் இவனை ஏளனம் செய்தார்கள். இரண்டு மலைகள் தாண்டும் முன்னரேயே காலணி தேய்ந்து அறுந்துவிட்டது. நான்கு மலைகள் தாண்டும்போது உடுத்த உடை கந்தலாகி உக்கி உதிர்ந்துவிட்டது. இவன் நடந்தான். நடந்து இறுதியில் பூதம் இருக்கும் தொங்குதோட்டத்துக்கு போய்விட்டான். இப்போது தொங்குதோட்டத்தில் ஏறவேண்டும். எப்படி ஏறுவது? கள்ளப்பூதம் தோட்டத்தை சந்திரனில் கயிறு கட்டி தொங்கவிட்டிருந்தது.

கந்தனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  கத்தினான்.

“சனியன் பிடிச்ச பூதமே .. நீ உண்மையான வீரனாக இருந்தால் வந்து என்னோடு மோது பார்ப்போம்.. ”

இவன் சத்தம் கேட்டு பூதம் வெளியே வந்தது. இவ்வளவு காலத்தில் ஒரு அப்பன் துணிந்து தன்னை தேடி வந்திருக்கிறானே என்று பூதத்துக்கு ஆச்சர்யம்.

“உன்னோடு எதுக்கு நான் சண்டை பிடிக்க வேணும்?”

“நீ என் கடைக்குட்டி தேவதையை தூக்கிக்கொண்டு வந்துவிட்டாய். அதற்காக உன்னை கொல்லப்போகிறேன்.”

“ஹ ஹா ஹ .. நான் இப்படி நிறைய பேரின் தேவதைகளை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறேனே”

“தெரியும் .. அவர்கள் எல்லோர் சார்பிலும் நான் உன்னை கொல்லப்போகிறேன்”

பூதத்துக்கு கந்தனின் துணிச்சலும் ஓர்மமும் பிடித்துவிட்டது. ஒரு நூலேணியை கீழே இறக்கியது. கந்தன் வேக வேகமாக ஆத்திரத்தோடு அந்த ஏணியில் ஏறினான். ஏறி தொங்குதோட்டத்தில் காலடி வைத்தகணமே சுற்றும் முற்றும் பார்க்காமல் பூதத்தை அடிக்க போனார்.

“பொறு பொறு .. அங்கே பார்” என்றது பூதம். கந்தன் திரும்பிப்பார்த்தான். அங்கே சாரதா தேவி. நிஜமாகவே தேவதை போல, அவளை ஒத்த குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தாள். எந்நாளும் காணாத சந்தோஷ சிரிப்புடன் இருந்தாள். மற்ற ஊர்களில் பிடிக்கப்பட்ட குழந்தைகளும் அப்படியே. அவர்களுக்கு அங்கே எல்லாமே இருந்தது. உணவு, உடை, இருக்க இடம், கல்வி .. எல்லாவற்றுக்கும் மேலே பாசம். கிடைத்தது.

“யோசிச்சு பார், இந்த குழந்தையை நீ திரும்ப கூட்டிக்கொண்டு போனால், மீண்டும் இங்கே திரும்பிவர முடியாது… இப்படி உன்னால் இந்த குழந்தையை பார்த்துக்கொள்ள முடியுமா .. சொல்லு? இப்படி ஒரு வாழ்க்கையை அந்த குழந்தைக்கு உன்னாலே கொடுக்கமுடியுமா சொல்லு?”

கந்தன் யோசித்தான்.

“ஆனா என்னால அவளை மறக்கவே முடியாதே .. அவள் என் குழந்தை ஆயிற்றே .. அவள் இல்லாம ஒவ்வொரு நாளும் உயிர் போகுதே .. ”

பூதம் சிரித்தது.

“பார்த்தியா பார்த்தியா .. அவளுடைய சந்தோசமான வாழ்க்கை உனக்கு முக்கியமா? இல்லை அவள் உன்னோடு இருக்கிறபோது கிடைக்கும் உன்  சந்தோசம் உனக்கு முக்கியமா?”

பூதம் கேட்டுவிட்டு கந்தன் முன்னே ஒரு மணல் கடிகாரத்தை வைத்தது. மேல் பாதி மணல் கீழ் பாதிக்குள் கொட்டி முடியும் முன்னர் நீ முடிவெடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு போய்விட்டது. கந்தன் தலையில் கைவைத்து யோசிக்க தொடங்கினான்.

மணல் கடிகாரத்தில் மண் சொட்டு சொட்டாக கீழ்ப்பாதிக்கு கொட்ட ஆரம்பித்தது.


 

கொஞ்சம் பெர்சனல் ... வேணுமெண்டால் ஸ்கிப் பண்ணுங்க!

இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஷ்பேக் சொல்லவேண்டும். படலையின் முதல் பதிவான அரங்கேற்றவேளையில் வரும் பகுதி இது.

“நான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தது 2004இல் என்று நினைக்கின்றேன். அப்போதெல்லாம் “The Namesake” வாசித்து கொண்டிருந்த காலம். மனதிலே ஒரு Jhumpa Lahiri யாகவோ அல்லது இன்னொரு Khaled Hosseini ஆகவோ எங்கள் வாழ்கையை எழுதி  ஒரு காலத்தில் வருவேன் என்ற நம்பிக்கை இருந்தது.”

இது எழுதி இரண்டு நாட்களில் “அக்கா” கதை வெளியாகிறது.  உண்மையில், அந்த கதை எழுதியபிறகு தான் படலையே ஆரம்பிக்கலாம் என்ற ஐடியா வந்தது. அக்கா கதைக்கு பின்னாலே ஒரு பெரிய சங்கதி இருக்கிறது.

ஆஸிக்கு விடைபெறும்போது சிங்கபூர் ஏர்போர்டில் அஜி கேட்ட கேள்வி, “எங்களை எல்லாம் விட்டிட்டு போய் தனிய இருந்து என்ன செய்யபோறாய் மச்சான்?”. நான் சொன்ன பதில் ஒன்றே ஒன்று தான் “எழுதோணும்”. ஏர்போர்ட்டில் பிளேனுக்கு வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கும்போதே இன்னிங்க்ஸ் ஆரம்பித்துவிட்டது. அன்று எழுதிய பதிவு My Relationships!.

sister-and-brother-natalia-tejera

ஆஸி வந்து கொஞ்சநாளிலேயே ஆரம்பித்த நாவல் தான் அக்கா! யெஸ். நாவல். அதுவும் ஆங்கிலத்தில். அக்கா என்ற ஒரு உறவு எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். அந்த உறவிலே ஒரு வித உயிர் இருக்கும். அதே சமயம் ஒரு ஹோல்ட் பாக்கும் இருக்கும். அக்கா இருப்பவர்களுக்கு அது புரியும். பாசம் பரிவு அத்தோடு “என்ன தானே செய்றானே பாக்கலாம்” என்ற ஒருவித விட்டுப்பிடித்து பார்க்கும் உறவு அது. விழுந்தா மட்டும் வந்து தூக்கிவிடுவார். மற்றும்படி தூரத்தில் நின்று என்ன செய்யிறான் என்று ரசிக்கும் உறவு அது. அந்த அக்கா உறவை நான் மூன்று பேரிடம் அனுபவித்திருக்கிறேன். என் சொந்த அக்கா. மற்றது கஜன். மூன்றாவது அமுதா. மூவரும் அதை தெரிந்து கொடுத்தார்களா என்று தெரியாது. ஆனால் நான் எடுத்துக்கொண்டேன். I needed it.

இப்போது அக்கா நாவலை யோசியுங்கள். ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கை. ஒரு குடியேறி. ஒரு வெளிநாட்டு பெண். வன்னிக்கு இடம்பெயர்ந்து கடைசிவரை சில்லுப்பட்டு வட்டக்கச்சியில் வசிக்கும் ஒரு இளைஞன். இந்த நான்கு பாத்திரங்களை நாவலின் பல்வேறு சூழல்களால் தொடுத்து இறுதியில் உணர்வோடு முடிக்கவேண்டும். இந்த நான்கு பாத்திரங்களும் தம்பாட்டுக்கு தங்கள் வாழ்க்கையை கொண்டு போயிருப்பார்கள்.அவர்களுக்கென்று உறவுகள், சந்தோஷங்கள், தருணங்கள் எல்லாமே இருக்கும். ஆனால் எதையோ ஒன்றை தொலைத்தது போல ஒரு இழை நாவல் பூராக நூற்க வேண்டும். அது எது என்ற ஆதாரமான விஷயம் இறுதி அத்தியாயத்தில் அவிழும்.

இது டிசைன். முன்னூறு நானூறு பக்கம் தேறும், மூன்று வருடத்தில் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ரெண்டு மூன்று பக்கம் எழுதியிருப்பேன். வழமை போல சுற்றத்துக்குள்ளேயே இருந்து ஒரு குரல். 

“நீ என்ன பெரிய இவனா? எழுதி என்னத்த கிழிக்கப்போறாய்?”


 

And the mountains echoed.

ஒரு நாவல், அதுவும் அரசியல் இல்லாமல் எங்கள் வாழ்க்கையை அதன் இன்ப துன்பங்களோடு இயல்பாக, இப்பிடித்தான் வாழ்ந்தோம், இப்பிடித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று, என் அக்காவின் பிள்ளைகள் ஆங்கிலத்திலேனும் வாசிக்க ஒன்றை எழுதவேண்டாமா? என்ற கேள்வியை கேட்கவைத்தவர் காலித் கூசைன். அவரும் லாகிரியும் இல்லை என்றால் இன்றைக்கு படலை இல்லை …ஏன் நானே இல்லை. சக்திவேல் அண்ணா வீட்டுக்கு முதன்முதல் போனபோது கூட கொடுத்தது The Kite Runner தான். எனக்கு அதன் மதிப்பும் மரியாதையும் அலாதியானது. இப்படி ஒன்றை எழுதினால் அது சும்மா பிச்சி உதறும் என்று நான் ஒரு ஸ்கெட்ச் போட்டால், தலைவர் அதில் வீடு கட்டி குடிபூரலே பண்ணுவார். அப்பிடி ஒரு உறவு அவர் புத்தகங்களுக்கும் எனக்கும் இருக்கும்.

8347051_0_9999_med_v1_m56577569853216552அப்படி அவர் கட்டின வீடு தான் “And the mountains echoed”

சென்ற மாதம் தான் வெளியான புத்தகம். ஆப்கான் வாழ்க்கையோடு ஒன்றிய கதைக்களம். ஐம்பதுகளில் இருந்து ஆரம்பிக்கிறது. ஒரு தந்தை தனது நான்கு வயது மகளையும் அவள் அண்ணனையும் கூட்டிக்கொண்டு கால்நடையாக காபுலுக்கு போகிறார். போகும் வழியில் ஒரு பூதக்கதை சொல்லுகிறார். காபுலில் மகளை ஒரு பணக்கார குடும்பத்துக்கு தத்துக்கொடுக்கிறார். பாசமுள்ள அண்ணனும் தங்கையும் இப்படித்தான் பிரிகிறார்கள். தங்கை பேர் பாரி. அண்ணன் பேர் அப்துல்லா.

பாரி அந்த வீட்டில் வளர்ந்து, தத்தெடுத்த தாய் அவளை பிரான்ஸ் கூட்டிப்போய்விட, பின்னர் பிரான்சிலேயே வளர்கிறாள். அவள் வாழ்க்கை. தாய் பிரபல கவிஞர். குடிப்பழக்கத்தில் தன்னை தொலைத்தவள். பாரி கணித்ததில் மிளிர்ந்து பேராசிரியர் ஆகிறாள். அவளுக்கு நண்பர்கள். குடும்பம். பிள்ளைகள். பிள்ளைகளுக்கு பிள்ளைகள். எத்தனை வாழ்க்கைகள். ம்ஹூம்.

அப்துல்லா கஷ்டப்பட்டு, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து அமெரிக்கா போய் அங்கே ஒரு ரெஸ்டோரன்ட் வைத்து செட்டில் ஆகிறான். காபுலில் பாரி இருந்த வீட்டில் இருக்கும் நபியுடைய வாழ்க்கை இன்னொன்று. நாட்டுக்கு வந்த NGO சேவையாளரான மார்க்கஸின் வாழ்க்கை இன்னொன்று. மார்க்கஸ் கிரீசை சேர்ந்தவர். அவருக்கு ஒரு அம்மா. ஒரு உடன் பிறவா சகோதரி.

hosseini-khlaled404 பக்க நீண்ட நாவலை நாற்பது வரியில் எழுதிவிட முடியாது. காலித் பாத்திரங்களை செதுக்கும் முறையில் ஆச்சர்யப்படுத்துகிறார். பாரியும் அப்துல்லாவும் சந்திக்கும் இறுதி அத்தியாயம் நம்மை விசர் பிடிக்கவைக்கும். அதற்கு காரணம் உணர்ச்சிவசப்படாமல் இயல்பாக அந்த சந்திப்புகளை நிகழ்த்துவார். பாத்திரங்கள் தங்கள் அன்பை, கோபத்தை, விரக்தியை வெளிக்காட்டும் விதம் பயங்கர ஷட்டலாக இருக்கும். அழுது தொலையுங்களேன் என்று எங்கள் மனம் சொல்லும். அவர்கள் அழமாட்டார்கள். அது எங்களை அழ வைக்கும். அது தான் எழுத்தாளனின் வெற்றி. காலித்தோடு ஒரே வண்டியில் சேர்ந்து பயணித்தால் தான் நம்மால் அதை உணரமுடியும். உணர்ந்தேன். வண்டில் நிறைய பொறாமையுடன்!

இது The Kite Runner ஆ? என்றால் இல்லை. A Thousand Spelendid Suns ஆ? என்றால் இல்லை. அவை இரண்டும் ஆப்கானை சுற்றிவரும் கதைகள். இந்த நாவல் உலகெங்கும் வாழும், ஆப்கானோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்புபட்ட மக்களின் கதை. இடம்பெயர்ந்தவர்கள், அவர்களின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள்… ஆப்கான் என்றாலே என்ன என்று தெரியாத, அந்த மொழி தெரியாமல் பிரஞ்சும் ஆங்கிலமும் பேசும் தலைமுறையின் வாழ்க்கையை சொல்லும் கதை. இந்த வாழ்க்கையோடு தொடர்புபட்ட வெளிநாட்டு உதவி நிறுவனங்களை சேர்ந்தவர்களின் குடும்ப வாழ்க்கையையும் இங்கே புகுத்தியது தான் காலித்தின் சிறப்பு. நாவலின் எந்த இடத்திலும் தலிபான் பெண்களை சிரச்சேதம் செய்யவில்லை. அமெரிக்காகாரன் குண்டுபோடவில்லை. அல்லாஹு அக்பர் என்று இஸ்லாமியர்கள் தொழுதுவிட்டு குண்டுவைக்கவில்லை. அதுவல்ல ஆப்கானிஸ்தானின் ஒரே முகம். அதற்கு நிஜமான உணர்வும் உயிரும் உள்ள மக்கள் கூட்டம் இருக்கிறது. People என்று சுமந்திரன் சொல்லுவார். அது. அதை சொல்லவேண்டும். இதைவிட யதார்த்தமாக அதை சொல்லமுடியாது என்னுமளவுக்கு பாத்திரங்களால் கதை சொல்லுகிறார் காலித். In one word, he is a genius.

பலதரப்பட்ட பாத்திரங்கள் வருவதாலும், நீண்ட நாவல் என்பதாலும் ஆங்காங்கே கொஞ்சம் சலிப்பு, குழப்பங்கள், பக்கங்களை பர பரவென்று தாவுதல்கள் எல்லாம் செய்யவேண்டியிருந்தது. ஆனால் வயோதிப பாரி அப்துல்லாவின் மகள் பாரியுடன் தொடர்பு கொள்வது முதல் நாவல் சுப்பர்சோனிக் வேகம் பிடிக்கும். சில இடங்களில் குண்டு போடும். பல இடங்களில் அழுவீர்கள். பல தடவை நல்லவர்கள் ஆவீர்கள்!

ஒரு சதம் கூட பெயராத வேலைல ஏழெட்டு மணித்தியாலம் கிடந்து ஏன் குத்திமுறியிறாய்? என்று எழுதுவதை கேலிபண்ணி அப்பாவே கோபித்துக்கொள்வார். சில நேரங்களில் எழுதி என்னத்தை காணப்போகிறோம் என்று மற்றவர்கள் கேட்டு கேட்டு எனக்கே அந்த சலிப்பேற்படுத்துவதுண்டு. காலித்தை வாசிக்கும்போது அது பறந்துவிடும். அண்ணர் ஒரு வைத்தியர். வைத்தியராக இருந்துகொண்டே தான் Kite Runner எழுதினார். எழுதி அதை ஒருத்தன் பதிப்பித்து ஹிட் ஆனது வேற விஷயம். முதல் அத்தியாயம் எழுதும்போது அதெல்லாம் அவர் யோசித்திருக்க சாத்தியமில்லை. ஒன்றே ஒன்று தான் யோசித்திருப்பார்.

எழுதோணும்!


 

பூவிலே மேடை நான் போடவா?

பூத கதையிலே பல யதார்த்தங்கள் இருக்கிறது. அந்த யதார்த்தங்கள் தான் “And the mountains echoed.” என்ற நாவலை ஒருமுகப்படுத்தும். நாவலின் ஆரம்பமே இப்படித்தான் இருக்கும்

“You want a story and I will tell you one. Just one.”

சோமப்பா பூநகரியில் தன் பிள்ளைகள் இருவருக்கும் சொல்லும் பூதக்கதை சொல்லும் ஒரு கசப்பான யதார்த்தம்; நான்கு விரல்கள் தப்புவதற்கு ஒரு விரலை சிலவேளை காவு கொடுக்கவேண்டி வரும் என்பது. குடும்பத்தை சமாளிக்கமுடியாமல் பாரியை தத்து கொடுக்கிறார்கள். ஆனால் பாரி நல்ல நிலைக்கு வருகிறாள். ஏனைய சகோதரர்கள் ஆப்கானில் இருந்து கஷ்டப்படுகிறார்கள். பாரி, அப்துல்லா சகோதரர்கள் நாவலின் ஆரம்பத்தில் பிரிந்தவர்கள் இறுதியில் தான் சேருகிறார்கள். சேரும்போது அப்துல்லாவுக்கு அதை உணரும் வயது கடந்துவிட்டது.

நாவல் முழுக்க இருவர் வாழ்க்கையிலும், எதையோ தொலைத்த ஒரு உணர்வை காலித் ஏற்படுத்திக்கொண்டே இருப்பார். அது வெறும் பாசமோ சகொதரத்துவமோ கிடையாது. ஒரு உணர்வு. வாசிக்கும்போது அது இருந்தது. அதை எனக்கு மொழியில் புரியவைக்க முடியவில்லை. ஆனால் இசையால் புரியவைக்க முடியும். ஏனென்றால் அதற்கு ராஜா இருக்கிறார்!

வாசிக்கும்போது இந்த பாட்டு எனக்கு பிஜிஎம் இல் போய்க்கொண்டிருந்தது. இப்படியான எது என்று தெரியாமல் தொலைத்துவிட்டு தேடும் உணர்வுகளுக்கு  ராஜா சும்மா லாலாலலா என்று பீலிங்கை பொழியமாட்டார். அவர் தெரிவு அனேகமாக வெஸ்டேர்ன் கிளாசிக்காக இருக்கும். அங்கே தான் அவர் தன்னை தேடுவதும் கூட.

இந்த உணர்வுக்கு தல தேர்ந்தெடுத்தது பாஷ்(Bach) இசையை.  Bach Sonata என்று சும்மா யூடியூபில் தேடிப்பாருங்கள். அது எப்படிப்பட்ட சாத்தான் என்று புரியும்.  நீங்கள் கடற்கரையில் படுத்திருக்கும்போது இடைவிடாமல் மெல்லிய நுண்ணலைகள் அடுத்தடுத்து உங்கள் கால்களை நோகாமல் நனைக்கும்போது எப்படி இருக்கும்? அது Bach Sonata! இதை ராஜா பல பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார். இந்த பூவிலும் வாசமுண்டு, ஏதோ மோகம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

ராஜாவின் How to name it அல்பத்திலே “I met bach at my house” என்று ஒரு கொம்போசிஷன் இருக்கும். எவன்டா இப்பிடி எங்களை சாகடிக்கமுடியும்? என்னா இசைடா.

ராமேஸ்வரம் என்று ஒரு மொக்கை படம் கொஞ்ச நாளைக்கு முன்னர் வந்தது. ஈழத்து கதை தான். அதன் இசை நம்மாளு. நிரு என்று பெயர். ரெண்டு படம் இசையமைத்துவிட்டு இப்போது பாரீசில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் அந்த படத்திலே ஒரு பாட்டு போட்டார். பக்கா Bach. ஆரம்ப செல்லோ ஓடும் ஓட்டத்திலேயே தெரிந்துவிடும் அது Sonata அரேஞ்மெண்ட் என்று.  அலை அடிக்கும். அந்த பாட்டிலும் ஒரு இழப்பு, வலி, தேடல், காதல் எல்லாமே இருக்கும். நம்மாளுடா. Bach போட்டு இசையமைச்சிருக்கிறான். கொண்டாடவேண்டாம்? யாருக்காவது அவர் தொடர்பு இருந்தால் தாருங்கள். தலயோடு பேசிவிட்டு தனிப்பதிவே போடவேண்டும்.

 

நான் இங்கே நேரடி Bach வீடியோ எதையும் கொடுக்கவில்லை. ஆனால் இந்த லிங்கை படுக்கபோகும் முன்னர் கேட்டுப்பாருங்கள். இந்த Sonata மாட்டர் என்ன எண்டு அறிஞ்ச அளவில டெக்னிக்கலாக எழுதலாம் தான். ஆனால் அகிலன் திட்டுவான்! கஜன் டிலீட் பண்ணு என்பான். வேண்டாம். Bach இசையை ஐன்ஸ்டீன் இப்படி சொல்லியிருப்பார்.

This is what I have to say about Bach’s life work: listen, play, love, rever—and keep your mouth shut!“


 

கவுஜர் கஜனோடு ஒரு சம்பாஷனை

நேற்று கஜனோட பேசிக்கொண்டு இருக்கும்போது, வியாழமாற்றம் இப்ப எல்லாம் ரொம்ப சீரியஸா போகுதடா. ஒரு ஏ ஜோக் சொன்னாய் எண்டால் போட்டு மனேஜ் பண்ணலாம் என்றேன். “அப்பிடியெல்லாம் பண்ணாத நாளைக்கு ஒரு ஐடியாவோட வாறன் பொறு” என்றான். காலம ஆறு மணிக்கே சாட்டுக்கு வரும்படி எஸ்எம்எஸ் வந்தது. எனக்கு ஆறு மணி எண்டா அண்ணருக்கு மூண்டு மணி. தக்காளி தூங்கேல்லே போல. சாட்டில கதைச்சத அப்பிடியே கொப்பி பேஸ்டிங் ஹியர்!

“என்னடா என்ன ஐடியா .. சொல்லு”

“ஒரு கவிதை எழுதலாம் மச்சி”

“அதாண்டா போன வாரமே எழுதி ஐஞ்சு பேரு லைக் பண்ணி இருந்தாங்களே .. பாக்கலியா?”

"இல்ல மச்சி .. நீ போனவாரம் எழுதின மொக்கை கவிதையை பார்த்தனா… எனக்கும் கவிதை எழுதோணும் என்று ஆசையா இருக்கு"

ஜெர்க் ஆகிட்டேன்.

"டேய் வேணாம்டா .. பயலுக கொன்னே போட்டிடுவாங்க .. கவிதை எழுதிறது ஒன்னும் கலியாணம் கட்டுறது மாதிரி ஈசி வேலை கிடையாது .."

"அத நீ சொல்லுறியா ? ஐயோ ஐயோ என்னால சிரிப்ப தாங்க முடியலியே…"

"(மைண்ட் வாய்சில் .. ச்சே சந்தம் வருது எண்டதுக்காக உளரிட்டமோ) .. இல்லடா, இந்த ஊரில நிறைய கவிஞர்கள் மச்சி ... அவங்கள் கவிதையும் வேற எழுதுவாங்கடா ..  நமக்கெதுக்கு .. நானே தேவையில்லாம மூக்குல மருந்து கட்டீட்டு நிக்கிறன் .. "

thirumathi-thamizh_135729412914"இல்லடா சின்ன வயசில நிறைய கவிதை எழுதி இருக்கிறன் .. கோட்ட மட்டத்துக்கெல்லாம் போயிருக்கோம்ல "

"பிறகேண்டா கொண்டினியூ பண்ணேல்ல?"

"பதினாறு வயசு ஆனப்பறம்  லேடிஸ் சைக்கிளில போறது எல்லாமே நான் எழுதினத விட நல்லா இருந்துதடா .. அதாலா அன்னைக்கு தொட்டு கவிதையை எழுதுறத நிறுத்தீட்டு ரசிக்கலாம்னு முடிவு பண்ணீட்டேன்!"

"அப்புறம் திடீர்னு எதுக்கடா இன்னிக்கு கவிதை எழுதோணும்னு ஆசை?"

"ஹி ஹி .. வயசாயிடிச்சி மச்சி .. இப்பெல்லாம் கவிதைய முன்ன மாதிரி ரசிக்க முடியேல்ல ..  ஹி  ஹி ரசிச்சா வீட்டில வேற கும்முறாங்கடா .. ஹி ஹி .. "

"..வழியுது . துடைச்சுக்கோ .. அப்படி என்னதாண்டா எழுதியிருக்க?"

"நீ தான் போனவாரம் "பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென" எண்டு பார்த்தீபன் மாதிரி பீல் பண்ணினியே மச்சி ..  "

"அதுக்கு ..அண்ணனுக்கு ஒரு தேவயாணி பிடிச்சிட்டியா ?"

“நீ ராஜகுமாரன் தாண்டா .. ஆனா தேவயாணிங்க எல்லாம் இப்ப அலெர்ட்டா இருக்காங்கடா”

(ச்சிக் …திரும்பவும் நாமளே வாயை கொடுத்து மாட்டிக்கிட்டோமே).

"அப்புறம் என்னடா செய்திருக்க?"

“அண்ணியை தேடி ஒரு கவுஜ எழுதியிருக்கேன் .. இத படலைல போடு .. சும்மா பின்னும்டா”

“அப்படீங்கறே?”

“டேய் நான் சொல்லி உனக்கு எது சரி வரேல்ல சொல்லு?”

“அதாண்ட வவுத்த கலக்குது..”

“போடுறா போடு .. அப்புறம் பாரு கொமெண்டுகளை ”

“டேய் என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணலியே?”

 


 

அண்ணி நீ எங்கே !!

மழைக்கால மேகம் மலையோரம் சாரும்
2இடைகால தேர்தல் இவன் நெஞ்சில் தாவும்
கனாகாணும் உலகில் இவன் கொஞ்சம் மிஞ்சும்
இவன் வாழ உலகு தனி ஒண்டு வேணும்

படலையில் சில கடலைகள் போட
குழலிகள் விடை கேட்பது பஞ்சம்
தரணியில் பல தாவணிகள் பார்க்க
தல கண்டிஷனை இன்னும் குறைச்சா நல்லம்

காதலை தேடி விண்ணை தாண்டி போகணுமாம்
சமர்த்து பெண் வந்தால் சமந்தாவே வேணாமாம்
சொல்லா காதல் போட்டுத் தாக்கணுமாம் - பாவம்
காத்திருந்த காரிகைகள் அடுத்த பஸ்சுல ஏறிடிச்சாம்

காத்திருப்பேன் என்கிறானே காலம் தான் போன பின்னே - இவன்
யாத்திரைகள் செல்லுமுன்னே சீக்கிரமாய் நீயும் வந்துவிடேன்
குட்ட எல்லாம் தேவையில்லை கும்மி விட்டால் போதுமனே
மொட்டையிவன் என் நண்பன் முகத்தை வந்து காட்டிவிடேன்

அண்ணி நீ எங்கே !!

உன் கண்களில் தன் உயிரையும்
தன் கரங்களில் உன் உடலையும்
உன் கன்னம் சேர் வண்ணம் சேர்த்து
எண்ணம் போல் இல்லறம் செய்ய
எங்கே நங்கி இருக்கிறாய்?
எப்பன் ஒருக்கா வந்துவிடேன்!

--கஜன்


Contact Form