வியாழமாற்றம் 04-07-2013 : உஷ்ஷ்ஷ்..!

Jul 4, 2013

shhh---finger-on-lips

உஷ் ….. 1

ஓமந்தை சென்றிபொயின்ட் பரபரத்துக்கொண்டிருந்தது. காந்தன், அவன் நேரத்தை அடிக்கடி செக் பண்ணியபடி கொஞ்சம் பதைபதைப்புடன் நின்று கொண்டிருந்தான். எட்டரை மணிக்கு பாதை திறப்பார்கள்.  இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. கண்டுபிடிச்சிடுவாங்களோ? பிடிக்கேலாது. என்னெண்டு பிடிக்கிறது? ஏலுமெண்டா பண்ணிப்பார்க்கட்டும் என்று உள்ளூர நினைத்துக்கொண்டே அடிக்கடி தலைமயிரை கைகளால் மேவியபடி இருந்தான். ஆனாலும் ஒரு நடுக்கம் கால்களில் இருந்தது. அடிக்கடி வரிசையில் பின்னுக்கிருந்தவரிடம் சொல்லிவிட்டு பத்தடி தள்ளி இருந்த கக்கூஸுக்கு போய் வந்துகொண்டிருந்தான்.
ஒரு போறைபாக் முழுக்க உடுப்புகளும், இன்னொரு சந்திரிக்கா பாக்கினுள் கொஞ்ச விளையாட்டு சாமான், அப்பிள், எள்ளுருண்டை என்று வவுனியாவில் வாங்கிய பொருட்களை அடைத்து வைத்திருந்தான். ஒரு பிள்ளை. பெயர் கோமதி, மனிசிண்ட பேர் ராகிணி என்று சொல்லுவதாக தீர்மானித்திருந்தான். தம்பி பிரதீபனை பேராதனை பல்கலைக்கழகத்தில் கொண்டு போய் சேர்த்துவிட்டு மீண்டும் மல்லாவிக்கு திரும்புவதாக சொல்ல வேண்டும். இவ்வளவு தான் கதை. சரிக்கட்டிவிடலாம்.
Omanthaicheckpoint
பிடிபட்டால் நிச்சயம் நான்காம் மாடி. நான்கு மாசத்தில் பூஸா. வாழ்க்கை அழிந்தது. அங்கே அதை குறடு பிடித்து திருகுவார்கள். காந்தனுக்கு அடிவயிற்றில் கொஞ்சம் பயம் எட்டிப்பார்த்தது. வரிசையை திரும்பிப்பார்த்தான். குறைந்தது நான்கு மைல் நீளத்துக்கு கியூ நின்றது. அவனுக்கு முன்னாலே ஒரு இருநூறு பேர் நின்றிருந்தார்கள். இருநூறு பேரை செக் பண்ணி முடிக்க மத்தியானம் ஆகிவிடும். சாப்பிடும் சமயம். அதிகம் செக் பண்ணமாட்டார்கள்.  காந்தனுக்கு நம்பிக்கை வந்தது. மவனே, ஆம்பிளை எண்டா மெசேஜை கண்டுபிடியுங்கள் பார்ப்பம். காந்தன் கொடுப்புக்குள் கொஞ்சம் சிரிக்கவும் செய்தான்.
காலை எட்டரை மணி. சென்றிபோயிண்டை இப்போது திறந்து ஒவ்வொருத்தராக செக் பண்ண ஆரம்பித்தார்கள். கியூ நகர்ந்தது. ஓமந்தை வெயில் அனல் பறந்தது


ரெக்கி அனுப்புதல்

காந்தன் பிடிபட்டானா? அவன் தென்பகுதியில் இருந்து வன்னிக்கு கொண்டுசென்ற அந்த சங்கேத தகவல் ஆர்மி கையில் மாட்டுப்பட்டதா? என்ற விஷயங்களை தொடர முதல் கொஞ்சம் கிரேக்கத்துக்கு போய்விட்டு வருவோம். இது நடந்தது கிமு ஐந்தாம் நூற்றாண்டில். அப்போது ஐரோப்பா, ஆசியா சேர்ந்த பிராந்தியத்தில் பாரசீகர்கள் கொடிகட்டிப்பறந்தார்கள். அதிலும் இந்த ராஜா சேர்ஸ் கொஞ்சம் கொடுங்கோல் ராஜா. கழுத்துல துண்டு போட்டு தாலி அறுக்கிற ஆள். அவனுக்கு எல்லா குறுநில மன்னர்களும் திறை கொடுக்க வேண்டும். கொடுக்காவிட்டால் படையெடுத்து துவம்சம் செய்துவிடுவான். ஆனால் கிரேக்கம் மாத்திரம் அவனுக்கு அடிபணிய மறுத்தது. இந்த ராஜா உடனே கிரேக்கம் மீது படையெடுக்க ஒரு பெரிய கப்பல் படையை கட்டமைக்க தொடங்கினான். இரகசியமாக. இந்த விஷயம் பாரசீகத்தை விட்டு இஞ்சி கூட வெளியே போகமுடியாதவாறு கட்டுக்காவல். கிரேக்க காரருக்கு இந்த சங்கதி தெரியாது. அவர்கள் தங்கள் பாட்டுக்கு கலை, கிளேடியேட்டர் என்று விளையாட்டு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள், வரப்போகின்ற ஆபத்தை அறியாமலேயே.
டிமார்டஸ். இவன் கிரேக்கத்தை சேர்ந்தவன். அண்ணர் ஏதோ கில்மா செய்ததால நாட்டை விட்டு ஆளை கலைத்துவிட்டார்கள். அவன் இப்போது பாரசிகத்திலே வசித்துவருகிறான். அவனுக்கு இந்த படையெடுப்பு விஷயம் தெரியவருகிறது. டிமார்டஸ் தன் தாய்நாடு தன்னை வெறுத்தாலும் தான் தாய்நாட்டை வெறுக்ககூடாது என்று நினைப்பவன் (டேய் இந்த பன்ச் டயலாக் இப்ப ரொம்ப அவசியமா?).  இவன் கிரேக்கத்துக்கு இந்த செய்தியை எப்படியாவது அனுப்பிவிடவேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் எப்படி அனுப்புவது? எல்லா பக்கமும் காவல்காரர்கள். எல்லையில் கண்காணிப்பு அதிகம். ஜட்டியைக்கூட கையால ஸ்கான் பண்ணித்தான் அப்பாலே விடுவார்கள்.cover_m
எஸ்கிஸ் மீ அண்ணே .. ஒரு டவுட்டு.
இந்த இடத்தில உனக்கு என்ன டவுட்டுடா?
அந்த காலத்திலயும் ஜட்டி போட்டிருப்பாங்களாண்ணே?
வாடா என் தெய்வமே … உனக்கு கீழே நஸ்ரியா படம் போட்டிருக்கேன் .. பார்த்திட்டு அப்பிடியே எஸ்கேப் ஆயிடு!
டிமார்டஸுக்கு இது ஒரு சாலன்ஞ். இப்போது என்ன செய்வது? ஒரு ஐடியா வந்தது. அந்த காலத்திலே எழுதுவதற்கு மெழுகு பலகைகளை தான் பயன்படுத்துவார்கள். ஆங்கிலத்தில் Wax Tablet என்று அழைப்பார்கள். iPad போன்ற கருவிகளுக்கு டாப்லட் என்ற பெயர் வந்த காரணம் இதுதான்.  இந்த மெழுகு பலகையில் எழுதவென்று கூரிய எழுத்தாணி இருக்கும். Stylus. அதனாலே மெழுகிலே எழுதி, அழித்து எழுதி பயன்படுத்தலாம் இல்லையா. பேப்பர், சிலேட் வகைகள் வரமுன்னர் இவை வந்திருக்கலாம்.
mytablet
இந்த டாப்லட்டிலே எழுதி அனுப்பினால் எல்லைக்காவலர்களிடம் எப்படியும் அது சிக்கிவிடும். தூக்கு நிச்சயம். ஸோ ஏதாவது வித்தியாசமா செய்யவேண்டும். இவன் என்ன செய்தான் என்றால், மொத்த மெழுகையும் சுரண்டி எடுத்துவிட்டு, உள்ளே இருந்த பலகையிலே அந்த இரகசிய செய்தியை எழுதினான். பின்னர் மெழுகை உருக்கி பழையபடி பலகை மேலே பூசி, ஏதோ வெற்று டாப்லட்டை கொடுத்துவிடுவது போல கொடுத்துவிட்டான்.  ஒபரேஷன் சக்ஸஸ். டாப்லட் கிரேக்கத்தை போய் சேர்ந்துவிட்டது. கொண்டுபோன கபோதிக்கு இந்த மாட்டர் தெரியாது. அவன் போய் வெற்று டாப்லட்டை கொடுக்கவேண்டியவர்களிடம் கொடுத்துவிட்டு தன் ஜோலியை பார்க்க போய்விட்டான்.
இப்போது டாப்லாட் கிரேக்க ராஜதந்திரிகள் வசம். மேசை நடுவே வைத்துவிட்டு எல்லோருமே சுற்றி சுற்றி வருகிறார்கள். என்னா மாட்டர் இருக்கும் இதிலே? டிமார்டஸ் போன்ற ஒரு கில்மா மண்டைக்காய் வெறும் டாப்லட்டை கொடுத்துவிடமாட்டானே என்று அவர்கள் யோசித்தார்கள். மண்டையை உடைத்தார்கள். எப்படித்திருப்பிப்பார்த்தாலும் ஒன்றுமே தெரியவில்லை. மெழுகிலே ஒரு செய்தியும் இல்லை. இந்த இடத்திலே தான் கிளியோமேன்ஸ் என்கின்ற பெண் மூளையை பாவித்தாள். மெழுகை சுரண்டிப்பார்க்க சொன்னாள். இரகசியம் வெளிப்பட்டது. கிரேக்க மன்னன் அலெர்ட் ஆனான். கிரேக்கம் இரகசியமாக பதிலடிக்கு தயாரானது. பாரசீக கப்பல் படை கிரேக்க குடாப்பரப்பு ஒன்றுக்குள் நுழைய, தந்திரோபாய பின்வாங்கலை நிகழ்த்தி, நல்லா ஆக்களை உள்ளே வரவிட்டு, சுத்திவளைத்து செம அடி. துண்டை காணும் துணிய காணும் என்று பாரசீகர்கள் ஓடிவிட்டார்கள்.
இந்த சம்பவம் தான் நவீன செக்குயர் கொமினிகேஷனின் முதல் அடி என்கிறார்கள்.
அட .. ஒரு வரலாற்று கதை எண்டு எழுதோணுமப்பா.


உஷ் ….. 2

காந்தன் சோதனை சாவடியை அடையும் போது பன்னிரண்டு தாண்டியிருந்தது. நின்றவன் சோமரத்ன என்ற ஒரு ஆர்மி கோப்ரல். அவனுக்கு பக்கத்திலேயே மதுரிகா, மிலிட்டரி போலிஸ்காரி நின்று செக் பண்ணிக்கொண்டிருந்தாள். இடையிடையே சோமரத்ன அவளை செக் பண்ணிக்கொண்டிருந்தான். இதைப்பார்த்த காந்தனுக்கு தைரியம் பிறந்தது.
அரைவாசி சாக்கு தொங்கிக்கொண்டிருந்த ஒரு குட்டி அறைக்குள் முதலில் அழைத்தார்கள். கைகளை தூக்கச்சொல்லிவிட்டு தலையில் இருந்து ஜீன்ஸ் அடிப்பக்கம் வரை காந்தனை சோமரத்ன தடவினான். நடுவிலே கொஞ்சம் பிடித்துவிட்டு பார்த்து இளித்தான். “வடுவா சேட்டையா விடுறாய். பிடிடா பிடி. எல்லாருக்கும் ஒரு நாள் செய்யிறம் வேலை” நினைத்துக்கொண்டே காந்தன் பதிலுக்கு சின்னதாக புன்னகைத்தான், பெல்டை கழட்ட சொன்னார்கள். சேர்ட், ஜீன்ஸ் பொக்கட், ஜீன்சுக்குள்ளே உள் பொக்கட் இருக்கிறதா? எல்லாமே செக் பண்ணினார்கள். பண்ணும்போது காந்தனின் தாத்தாவை விசாரித்தார்கள். சொன்னான். கோமதிக்கு ஆறுமாதம் என்றான். ராகிணி ஒரு டீச்சர் என்றான். வாய்க்குள் எது வந்ததோ எல்லாமே சொன்னான். சொமரத்னாவும் மதுரிகாவும் பாக்குகளை செக் பண்ண தொடங்கினார்கள்.
military-checkpoint-2
போரைபாக்கை அப்படியே தலைகீழாக கொட்டினார்கள். ரெண்டு சோடி பென்டோர்ச் பட்டறி இருந்தது. விளையாட்டு காரை காட்டி அதற்கு தேவை என்றான். காரை ஒருமாதிரி நோட்டம் விட்டுவிட்டு, உள்ளே குண்டு இருக்கும் கொண்டுபோக முடியாது என்றான் சொமரத்னா. பாப்பிள்ளைக்கும் அதே கதி தான்.  மதுரிகா அனே பௌ என்றாள். சொமரத்னா பென்டோர்ச் பட்டறியை மாத்திரம் திருப்பிக்கொடுத்துவிட்டு விளையாட்டு சாமான்களை தன் பக்கம் வைத்துக்கொண்டான். எள்ளுருண்டையும் போனது. கேட்டுப்பார்த்தான். மாத்தையா உதவுகரன்ன ப்ளீஸ் என்று ரெண்டு சிங்களம் விட்டுப்பார்த்தான். ம்ஹூம். இரண்டு பையில் கொண்டுவந்த சாமான் செக்கிங் முடிந்து வெளியே போகும்போது ஒரு பை ஆனது. பயங்கர வெயில். காந்தனுக்கு வியர்த்து வழிந்தது. சேர்ட் கையால் மாறி மாறி கன்னத்தை துடைத்துக்கொண்டான். ஹரி யன்ன என்றார்கள். அப்பாடி.
காந்தன் தப்பிவிட்டான்.


காமசூத்ரா … அய் … ஜாலி!

டிமார்டஸ் அனுப்பிய டப்லட்டை சுரண்ட சொல்லி சொன்னது ஒரு பெண் என்று பார்த்தோமில்லையா. பெண்களுக்கு இப்படியான கள்ள மூளை நன்றாக வேலை செய்யும் என்று கஜன் சொன்னான். அந்த ஐடியாவை போட்டு அனுப்பினதே ஒரு ஆம்பிளை தாண்டா அப்பிரசிண்டா! அட ஆமால்ல?.
நம்ம வாத்சாயனார் எழுதின காமசூத்திரத்திலும் இது பற்றி இருக்கிறது. பெண்ணுக்கு அறுபத்து நான்கு கலைகள் தெரிந்திருக்கவேண்டுமாம். பார்டா. ஆ அப்புறம்? சமையல், உடுப்பு போடுறது மசாஜ் பண்ணுறதில இருந்து செண்டு தயாரிக்கிறது வரைக்கும் லிஸ்ட் இருக்கு. விரல்வித்தை காட்டுறது, செஸ் விளையாடுறது, புக் பைண்டிங் தொடங்கி மேசன் வேலை கூட பெண்கள் படித்திருக்கவேண்டுமாம். என்னாங்கடா நீங்க. காமசூத்திரா என்றுவிட்டு கப்ஸா விடுறீங்க? மையின் மாட்டர் எங்கேடா ஜேகே?
Kama-Sutra-artwork-008
இந்த லிஸ்ட்ல நாற்பத்தைந்தாவது இடத்தில ஒரு ஐட்டம் இருக்கு. அதுக்கு பெயர் மேலக்சிட்ட விகல்ப. அது சொல்கின்ற விஷயம் மெயின் மாட்டர்.  சங்கேதமாக செய்திகளை பரிமாறுவதற்கு பெண்களுக்கு தெரிந்திருக்கவேண்டுமாம். கோட் வேர்ட். அந்த கோட் வேர்டை யாராவது சொன்னால் அது என்ன என்று இன்டர்ப்ரிட் பண்ணவும் தெரியவேண்டும். ஏனாம்?
இந்த இடத்தில சீன் வருகிறது. இது தெரிந்தால் தான் பெண்கள் கள்ளக்காதலனுக்கு கணவனுக்கு தெரியாமல் மெசேஜ் அனுப்பலாமாம். இட்டுக்கட்டுகிறேன் என்று நினைக்காதீர்கள். “mlecchita-vikalpa, the art of secret writing, advocated in order to help women conceal the details of their liaisons” என்கிறார் The Code Book என்கின்ற புத்தகத்தை எழுதிய சைமன் சிங். ஆரம்பிச்சிட்டான்யா ஒரு புத்தகத்தை பற்றி என்று பயப்பிடாதீங்க. அந்த புத்தகம் இன்னும் வாசிச்சு முடிக்கேல்ல. முடிச்சப்புறம் தாக்கலாம்.
வாத்சாயனார் சொல்கின்ற டெக்னிக் அவ்வளவு கஷ்டமில்லை. கோட்வேர்ட் தான். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஜோடியை முதலிலே தீர்மானித்து வைப்பது. ‘அ’ என்றால் ‘வ’. ‘ம்’ என்றால் ‘ண்’. ‘மா’ என்றால் ‘டி’. அம்மா என்ற சொல் வண்டி என்ற கோட்வேர்டால் அழைக்கப்படும். அவ்வளவு தான்.
இந்த வகை கோட் வேர்டிங்கை, கிரிப்டோ நுட்பத்தை “காமசூத்ரா ஸைபர்” அல்லது “வாத்சாயனா ஸைபர்” என்று அழைக்கிறார்கள். ஆனால் இதை கிராக் பண்ணுவது எளிது. ஒரு பெரிய பந்தியிலே அதிகமாக வருகின்ற சொற்களை, தொடர்களை கணித்து பட்டேர்ன்களை அவதானித்து கோர்ட் வேர்டுகளை கண்டுபிடிக்கலாம். உதாரணமாக ஆங்கில வார்த்தைகளில், the, and, he, she போன்றவை அதிகம் வருமல்லவா. ஆக மூன்று எழுத்து, இரண்டு எழுத்து சொற்கள் அதிகமாக கிரிப்டோ மெசேஜில் இருந்தால் அவற்றை the, and, he, she என்பவற்றோடு பொருத்திப்பார்க்கலாம். அப்படிக்கண்டுபிடிக்கும்போது t, h, e, a, n, d, s என்ற எழுத்துகளின் கோட் எழுத்துக்களை கண்டுபிடித்துவிடலாம் இல்லையா. இப்போது ஏனைய இடங்களில் இந்த எழுத்துக்களை பொருத்தமாக ரிப்ளேஸ் பண்ணினால் ஏனைய சொற்களும் பிடிபடும்.   இப்படி கொஞ்சம் முக்கி முனகினால் எல்லா வார்த்தைகளையும் ஊகிக்கலாம். கீயை கூட இப்படி கோட் உடைக்கும் முறையை Frequency analysis என்று சொல்லுவார்கள். இதற்கு மேல் இதை விளங்கப்படுத்தினால் பேஜாராகிடும். வேண்டாம்.
Russell-Crowe-in-A-Beauti-009
ரசல் குரோ கணிதமேதையாக நடித்த “The beautiful mind” படத்தில் இப்படிப்பட்ட Frequency Analysis ஐ அவர் செய்வார். ஊருலகத்தில இருக்கின்ற பத்திரிகைகள், புத்தகங்களை பரப்பி அவற்றின் வாசகங்களுக்கிடையே ஏதாவது பட்டேர்ன் இருக்கிறதா? ரஸ்யாகாரன் உளவு செய்தி பரிமாறுகிறானா என்று மறை கழன்று போய் தேடுவார்.
Beautiful Mind ஒரு கிளாசிக் படம்.  அதில் வருகின்ற ஹாலுசினேஷன் தாக்கத்தில் எழுதினது தான் நம்மட கிளாசிக்கான மேகலா என்கின்ற சிறுகதை. அந்த கதை எனக்கொரு ஒரு குழந்தை மாதிரி.

 

உஷ் ….. 3

கிளிநொச்சியின் கிழக்குப்பக்கம் பன்னங்கண்டி பாலம் தாண்டி கொஞ்சத்தூரம் உள்ளே போனால் பழைய விவசாயத்துறை பண்ணை வரும். அந்த பண்ணை நடுவே இருக்கும் பெரிய வீடு இப்போது இரகசிய தளம். மேலாலே  எவ்வளவு சுப்பர்சோனிக், ஹெலி, கோள்மூட்டி வந்தாலும் கண்டுபிடிக்கமுடியாது. அவ்வளவுக்கு தென்னஞ்சோலையால் அந்த இடம் மூடப்பட்டு கிடக்கும். அந்த வீட்டின் சமையலறை மேசையில் தான் எல்லோரும் காந்தனுக்காக காத்திருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் ஒருவித அவசரம் பரபரப்பு தொற்றிவிட்டிருந்தது. அம்மான் காந்தன் மூலம் என்ன மெசேஜ் அனுப்பியிருப்பான்? காயா பழமா? எப்ப தொடங்கவேண்டிவரும்? எல்லாவித குழப்பங்களும் வந்து போயின. இந்த குழப்பங்கள் எல்லாவற்றுக்குமான விடையை தான் காந்தன் வவுனியாவில் இருந்து போர்டர் தாண்டி கொண்டுவந்துவிட்டான். இப்போது பாத்ரூம் போயிருக்கிறான். அவனுக்காக தான் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.
07_07_08_Vaddakkachchi_01_70035_445
பாத்ரூமில் காந்தன் ஷேவ் எடுத்துக்கொண்டிருந்தான். நான்கு நாள் மழிக்காத தாடி, மீசை அதில் ஆரம்பித்து பின்னர் சோப்பே தடவாமல், தண்ணி போடாமல் கொஞ்சம் கொஞ்சமாக …. தலை மயிரை ஷேவ் செய்ய தொடங்கினான்.
கவனமாக முன் மண்டையில் இருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அவன் ஷேவ் பண்ண சிக்கல் சிக்கலாக நிறைய எழுத்துக்கள், நம்பர்கள், கோடுகள் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தன. உச்சி மண்டை வழித்து, பிடரியில் ஆரம்பிக்க இன்னமும். காந்தன் திரும்பி நின்று கண்ணாடியில் பிடரியை பார்க்க முயற்சித்தான். சிக்கல் சிக்கலாக புரியாத வடிவங்களில் சங்கேத செய்திகள். எல்லாமே தலை மண்டையில் எழுதப்பட்டு இருந்தது. முழுக்க வழித்து துவாயால் தலையை தட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தால் காந்தனின் தலை முழுக்க பச்சை குத்தியது போல பல்வேறு சங்கேத வார்த்தைகள். கோட் வேர்ட்ஸ்.
காந்தன் மெல்லிய பெருமித புன்னகையோடு மொட்டைத்தலையோடு சமையலறைக்குள் நுழைய அங்கே இருந்தவர்கள் அவசரமாக அவனை சூழ்ந்து அவன் தலையை ஆராய தொடங்கினார்கள்.
முற்றும்


ஸ்டேக்னோகிராபியும் கிரிப்டோகிராபியும்

பன்னிரண்டு வயசில பார்த்த சீன். அப்பிடியே கண்ணுக்க நிக்குது.
“மாப்பிள்ள என்ன வேலை பார்க்கிறாரு?”
“கிரிப்டோலஜிஸ்ட்”
“என்னது கிரிப்டோலைட்டா? ஒண்ணுமே புரியலையே தம்பி”
“அட இது தெரியாதா? அதான் போட்டோ பிடிக்குற வேலை”
இருபத்தொரு வருஷத்துக்கு முதல் தலைவர் எழுதின வசனம் முடிய கூட்டம் கொல்லென்று சிரிக்கும். ரோஜா படத்தில பாகிஸ்தான் அனுப்புகின்ற கிரிப்டோகோடுகளை உடைக்கிற வேலை தான் அந்த படத்தில் அரவிந்சாமிக்கு. அத கொஞ்சம் மண்டை காயவைக்காம அடிப்படை விஷயங்கள் மட்டும் என்னவென்று பார்ப்போம். மிச்சம் தேவை என்றால் நீங்களே பிறகு படித்துக்கொள்ளலாம்.
டிமார்டஸ் மரத்திலே அந்த செய்தியை செதுக்கிவிட்டு அதற்கு மேலே மெழுகை பூசி அனுப்பினான் இல்லையா. அது வந்து ரகசியங்களை மறைத்து அனுப்பும் முறை. Security by Obscurity, மூடி மறைத்து ரகசியம் காப்பது என்று இதை சொல்லுவார்கள். இதை தான் Steganography என்று அழைப்பார்கள் (Stegan என்றால் மூடுதல் என்று அர்த்தமாம்).  ஏதாவது சில வீடியோக்களை ஓபன் பண்ணும்போது மேலே வெறும் கலர் மட்டும் இருக்கும். காசு கொடுத்து வாங்கினால் தான் அந்த கலர் எடுபடும். வோட்டர்மார்க் எடுபடும். இது கூட Steganography தான். இதில் இருக்கிற பிரச்சனை என்னவென்றால்,  மூடி வைத்திருக்கும் மாட்டரை தூக்கிவிட்டால் ரகசியம் தெரிந்துவிடும். யோசித்துப்பாருங்கள். பாரசீக காவலாளிகள் டிமார்டஸின் டப்லட்டை சுரண்டிப்பார்த்திருந்தால் குட்டு வெளிப்பட்டு இருக்கும். மேலும் அந்த காவலாளிகள் புத்திசாலிகளாக இருந்திருந்தால் அந்த மரத்தில் வேறு ஏதாவது பொய்யான தகவலை எழுதி மீண்டும் மெழுகை போட்டு கிரேக்கத்துக்கு அனுப்பியும் இருக்கலாம். கதை கந்தலாகி இருக்கும். இப்படி ஒரு ரிஸ்க் அந்த வழிமுறையில் இருக்கிறது. அப்படியென்றால் தப்பித்தவறி மாட்டுப்பட்டாலும் கொண்டுபோகின்ற செய்தி எதிராளிக்கு கிடைக்காமல் இருக்க என்ன செய்வது?
அதற்கு தான் காந்தன் கதை கை கொடுக்கிறது.
காந்தன் தலையை அம்மான் முதலில் மொட்டை அடித்து,  செங்கேத குறியீடுகளை எழுதி பின்னர் ஒன்றிரண்டு மாசம் வெயிட் பண்ணி முடி நன்றாக வளர்ந்து மறைத்த பின்னரேயே வன்னிக்கு அவனை அனுப்பியிருக்கிறான். இந்த கதையின் ஐடியா வந்தது கூட பாரசீக யுத்தத்தில் ஒரு ராஜதந்திரி செய்ததை வாசித்ததனால் தான் (அதே The Code Book புத்தகம்).
இரகசியத்தை, மயிரை நன்றாக வளர்த்து மறைத்தது Steganography. தப்பித்தவறி ஆர்மிக்காரன் அதை கண்டுபிடித்திருந்தாலும் காந்தன் மண்டையில் என்ன எழுதியிருந்து என்பதை அவனால் வாசிக்கமுடியாமல் போயிருக்கும். அதுக்கு காரணம் அதை எழுதியிருந்தது சங்கேத வார்த்தைகளில். இது தான் ரிஷிகுமாரின் கிரிப்டோகிராபி. காந்தன் மண்டையில் இருந்த அந்த கிரிப்டோ கோடை உடைக்கும் திறப்பு, கீ கொழும்பில் இருந்த அம்மானுக்கும், பண்ணை வீட்டில் இருந்த யாரோ ஒருவனுக்கும் மாத்திரமே தெரிந்திருக்கும். காந்தனுக்கு கூட தெரிந்திருக்காது. அவன் வெறும் காரியர் தான். அந்த கோடுக்கு உரிய கீயை கூட இன்னொரு காரியர் மூலம் அம்மான் வன்னிக்கு அனுப்பியிருக்கலாம்.
இந்த ஆதாரமான விஷயங்களை மட்டும் சரியாக புரிந்துக்கொண்டால், பின்னாளில் நீங்கள் சிலவேளைகளில் படிக்கக்கூடிய Public Key, Private Key security algorithm எல்லாம் சப்பை மாட்டர் என்று புலப்படும். பேசிக் எல்லாமே ஒன்று தான். ஆனால் அதை புரிந்து கோடிங் எழுதும்போது …. அது சொர்க்கம். யார் கண்டது. சிலவேளை பொண்ணு பார்க்க போகும்போது, செம்பகம் மாட்டேன் என்று சொல்லி ரோஜா கூட கிடைக்கலாம்!


143

ஆசை படத்தில் காதலை சொல்ல இந்த காமசூத்ரா-ஸைபர் பாவிப்பார்கள். I LOVE YOU என்பதற்கு 143 என்பார்கள். இது கூட கோட் தான். கார்ட்ஸ் விளையாடும்போது மூக்கை சொரிந்தால் டயமண்ட் துரும்பு. நெஞ்சை தடவினால் ஹார்ட்ஸ். காதை சொறிந்தால் கலாவறை என்று பேசி வச்சு கள்ள விளையாட்டு விளையாடுவாங்கள். குழந்தைகளுக்கு முன்னாலே ஏதாவது கொஞ்சம் அப்படி இப்படி மாட்டர் பெசுவதேன்றாலும் அப்பா அம்மா இந்த வேலை பார்ப்பார்கள். எங்கள் ஊரில் சங்கக்கடை மனேஜர் கூட ஒவ்வொன்றுக்கும் கோட் வேர்ட் வச்சிருப்பார்.
மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் “மீசை இல்லாத பாரதி” என்பார்கள். பிரண்ட்ஸ் படத்தில் தல விஜய் ல்தாகா சைஆ என்பார்.  இப்படி வரிசையாக மொக்கை போடலாம்.  இதைவிட பல ஈழத்து படைப்பாளிகளின் எழுத்துக்களே க்ரிப்ட்டோ ஸ்க்ரிப்டில் இருக்கும். ஒரு சனியனும் விளங்காது. இப்படி எழுதினால் தான் இலக்கியவாதி என்று ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்காக நானும் ட்ரை ஒன்று போட்டுப்பார்த்தேன்.
..காத்திரமான படைப்பு வெளியின் உச்சம் என்பது எமது மேலாண்மை விழுமியங்களின் சங்கிலித்தொடர்களை இணைக்கும் செவ்விய நீரோட்டத்தின் ஆளுமையை எடுத்தியம்புவதாக இருக்கவேண்டும். ஈழத்து இலக்கியத்தின் ஒவ்வொரு படிநிலைகளையும் இந்த யதார்த்த விழுமிய காரணகூறுகளுடன் புணருமிடத்து, போருக்கு பின்னரான நமது படைப்பு கூறுகள் , ரூசியப்புரட்சின் பின்னரான சோவியத் அடையாளங்களை…
எழுதிக்கொண்டிருக்கும்போதே கேதா இடையில் வந்து குழப்பிவிட்டான். அண்ணே என்ன அண்ணே எல்லாருக்கும் புரியுமாப்போல எழுதுறீங்க. இப்ப பாருங்க நானு ஒரு க்ரிப்ட்டோ இலக்கியம் எழுதுறன். புரியுதா என்று பாருங்க. என்றான். சொன்னான்.
எல்லைகளற்ற ஒரு பெருந்தேடலுக்கான உந்துவிசையற்ற ஒரு சடத்துவ இனமாக மாறிக்கொண்டிருக்கும் தமிழ் இனக்குழுமம், வலுவிழந்து பிரபஞ்ச பொதுவெளியில் தனக்கென ஒரு அக மற்றும் புற வெளிகளை இனங்கண்டு தக்கவைக்கும் திறனற்று பூகோள இயக்கத்தில் ஒத்திசைய முடியாமல் புறந்தள்ளப்படுவது யதார்த்தமாக புலப்படுகிறது. ஆழமான புரிந்துணர்வும், காலவெளியை கடந்த தொலைநோக்கும், காத்திரமான சமுக பேரெழுச்சி ஒன்றை தோற்றுவிக்கக்கூடிய தகைமை வாய்த்த தலைமையும் தன் வசம் ஆகாததால், அது தன அக விழுமியங்களை அணு அணுவாக அழித்து தன ஆதாரமான அடிப்படை கட்டமைப்புகளை சிதைவடைய செய்கிறது. இந்த பேருண்மையை புரிந்துகொள்வதே இன்று எம்முன்னுள்ள வாரலாற்று சவாலாகும்.
சேகர் செத்தாண்டா!

நீ தானே என் காதல் வேதம்!

இவனுக்கு அவள் என்றால் அவ்வளவு பிடிக்கும். அவளுக்கும் தான். என்ன ஒன்று. கொஞ்சம் பிகு பண்ணுவாள். நான் ஈ படத்தில் சமந்தா நானியை போட்டு அலைக்கழிப்பாளே அப்படி.  ஆனாலும் இவன் லூஸன் அதை பெரிசா கணக்கெடுக்கமாட்டான். ஏனென்றால் காதல். அவளைக்கண்டாலே அண்ணருக்கு கவிதை வரும். கற்பனை எகிறும். வானவில், நிலா, இசை, பூ, என்று பெண்ணை வர்ணிக்க பாஸ்ட்டில கம்பர் புகழேந்தி ஆட்கள் என்னெல்லாம் பாவித்தார்களோ அதை எல்லாம் பாவிப்பான். அவ்வளவு காதல். பீறிடும். அதை அப்படியே கொட்டி அவளை கொஞ்சமேனும் புன்னகைக்க வைக்கவேண்டும். அந்த மோகன புன்னகையில் மயங்கி அவன் இன்னமும் கடிவாளத்தை தட்டவேண்டும்.
இது கங்கை அமரன் சொன்ன சிட்டுவேஷன்.  தல அந்த மோகனம் என்ற சொல்ல மைண்ட்ல எடுத்திருக்கவேண்டும். பாட்டு கூட ராகம் மோகனத்திலேயே வந்து விழுகிறது. எஸ்பிபி குரலை செருமிவிட்டு ஆரம்பிக்கிறார். சைலஜாவும் இணைவார்.
கீதம்......
கீதம்......
சங்கீதம்...
சங்கீதம்...
அண்ணர் இந்த இடத்தில செம நெளிவு நெளிவார். வெட்கமாம். அண்ணிக்கும் தாண்டா! எஸ்பிபிக்கு “பாடும்போது நான் தென்னங்காற்று” ஞாபகம் வந்திருக்கவேண்டும். மோகனம் அல்லவா. ஒரு புன்னகை பாட்டு முழுதும் இருந்துகொண்டே இருக்கும். அந்த குரலில் இருக்கின்ற பாவம் எந்த பெண்ணையும் கரைக்கும். ஜீனியஸ் (தன்யாக்கா நோட் திஸ் பாயிண்ட்!)
பாட்டு தொடர்கிறது.Nazriya-Nazeem
கீதம்......
கீதம்......
சங்கீதம்...
சங்கீதம்...

நீதானே என் காதல் வேதம்
நீதானே என் காதல்
என்னாடா இந்தாளு இப்பிடி மியூசிக் போடுதே. நாம யாரு என்று காட்டவேணாமா? இது வைரமுத்து மைண்ட் வொயிஸ். வைரமுத்து சரணத்தில் கியரை போடுகிறார்.
வாசமான முல்லையோ
வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ
நடந்து வந்த சோலையோ
உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
ராஜா கடுப்பாகிவிட்டார். நிறுத்துயா.. நிறுத்து என்று புளோவில பின்னுகின்ற வைரமுத்துவை இடை நிறுத்துகிறார்.
என்ன ராஜா?
என்னாய்யா கவிதை இது? முல்லையோ பிள்ளையோ சோலையோ என்று ஒரு டிம்பர் இல்லாத லிரிக்ஸ்யா. மெட்டை கவனிச்சியா. அப்பிடியே கீழே இருந்து நோட்ஸ் கொஞ்சம் கொஞ்சமா மேலே போகுதுய்யா. காதல்யா. கற்பனை போகவேண்டாமா. இப்பிடி ஒரு மோகனப்புன்னகையோட பொண்ணு வந்து முன்னுக்கு நிண்டா ஒரு பரவசம் வரவேணாமா? அப்பிடியே கடைசி நோட் அங்கே எட்டேக்க பொண்ணு மயங்கோணும்யா. அப்பிடி இருக்கோணும் லிரிக்ஸ்.
வைரமுத்து ஜெர்க் ஆகிட்டார். யோசித்து பார்த்தார். திடீரென்று ஒரு ஐடியா வருகிறது.
“ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்”
என்று ஒரு பிட்டை போட்டார். போய்யா இது ஏற்கனவே கண்ணதாசன் எழுதிட்டாரு. புதுசா எழுதுய்யா என்று ராஜா சொல்ல வைரமுத்து ஒரு ப்ளேன்டீ அடித்துக்கொண்டே யோசிக்கிறார். பார்த்தா பரவசம் வரவேண்டும். போட்டு தாக்கோணும். இதல்லவோ பெண். இதுக்கு மேலே என்னத்த சொல்ல என்ற உணர்வு. அட.. சடக்கென்று வைரமுத்துக்கு அப்பர் சுவாமிகள் ஞாபகம் வருகிறார்.
திருக்கைலாயத்தில சிவனை ரசிக்கப்போகிறேன் பேர்வழி என்று அப்பர் உழவாரத்தையும் தூக்கிக்கொண்டு ரஜனி மாதிரி வடக்கே போனார் இல்லையா. கனகாலம் நடந்தா பிறகு வயோதிபராக அப்பர் சுவாமிகள் சரியாக கஷ்டப்பட்டார். உடனே சிவபெருமானே அப்பருக்கு . கயிலை காட்சியை காட்டவென்று திருவையாற்றில் டோட்டல் செஷனை லைவ் கவரேஜ் டெலிகாஸ்ட் பண்ணுவார். அங்கே இருந்து ப்ரொஜெக்டர் ஸ்கரீன்ல கயிலை காட்சியை பார்த்து மெய்சிலிர்த்த அப்பர் ஒரு தேவாரம் இழுப்பார்.
large_197837மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!
யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!
கண்டேன் அவர் திருப்பாதம்!
கடைசியில் That’s it mate. I can’t express it anymore. என்று முடிவெடுத்து ஒரு வரி விடுவார்.
கண்டேன் அவர் திருப்பாதம்!
கண்டறியாதன கண்டேன்!!.
வைரமுத்து யுரேகா என்று கத்தினார். இங்கேயும் அதே நிலைமை தானே. இப்படி ஒரு பெண், முன்னே வந்து நிற்கும்போது இதுக்கு மேலே என்னத்த சொல்லுறது? This is the moment இல்லையா. வரிகளை பாருங்கள்.
உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
அப்புறம் வரிகளுக்கு இடமேது. ஆலாப் தான்!

இதுக்கு பெயரு தான் உயிரை குடுத்து பாட்டை ரசிக்கிறது எண்டுறது!


படங்கள் : Google Images.


Contact form