வியாழமாற்றம் 08-08-2013 : சந்தோஷ கண்ணீரே

Aug 8, 2013

 

mqdefault

அதிகாலை இரண்டு மணி. பயங்கரமான மழை இருட்டு. டொக்.டொக்.டொக்.

“ஆருடா இந்த டைமில தட்டுறது?” என்று நினைத்தபடி கதவு ஓட்டைக்குள்ளால் பார்த்தால் வெளியே முப்பது பல்லு பளிச்சிட்டது. கஜன் தான். ஷேர்ட் ஏதும் போடாமல் வெற்று மேலோடு. கதவை திறந்தேன்.  கறுப்பு ஜீன்ஸ் போட்டிருந்திருக்கலாம். போடாமலும் விட்டிருக்கலாம். கவனிக்கவில்லை. காரணம் பக்கத்திலேயே .. என்ர கடவுளே. நம்ம ஸ்ருதி.

இஸிட்? நிஜமாகவே ஸ்ருதிஹாசன் தான். அடக்க ஒடுக்கமாக நாணிக்கோணி, ஒரு கையில் சூட்கேஸுடன். டைட் ஜீன்ஸ், லூஸ் டீஷேர்ட் போட்டு அதன் நுனியை அடிக்கடி ஜீன்ஸ் இடுப்புவரைக்கும் இழுத்துவிட்டு … “அண்ணா” என்றாள். ச்சே...

அப்போது தான் கவனித்தேன். தாலிக்கொடி வேறு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. அதை வினாடிக்கொருதரம் கண்களில் எடுத்து ஒற்றிக்கொண்டிருந்தாள். பக்கத்தில் கஜன் அதையும் பார்த்து, என்னையும் பார்த்து மீண்டும் இளித்தான். தலையில் அடித்துக்கொண்டேன்.

“என்னடா இது?”
“ஸ்ருதி மச்சான் .. நிறைய நாள் ட்ரை பண்ணினான்டா”
“இப்ப சேர்ந்திட்டா?”
“பாடிப்பார்த்தன் … போயிட்டுது”
”என்ன பாட்டு?”
“தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி”
“கட்டியிருக்கே”
“அதுவா …  இந்த பொண்ணு .. மூணு பட ஷூட்டிங்கில நின்னுகிட்டிருந்துது. தனுஷ காணேல்லியாம் .. அழுதுக்கிட்டு மெரீனா பீச் பக்கம் அலைஞ்சுதா? நானும் பார்த்தனா? பிரியா இருந்தா கண்ணாலம் பண்ணிக்கலாமானு கேட்டேன் .. வந்துட்டுது”

சொல்லிக்கொண்டிருக்கும்போது திடீரென்று கீழே படிக்கட்டில் கட கடவென்று சத்தம் கேட்க கஜன் அவசரப்பட்டான். இந்தியத்தமிழ் பதட்டத்தில் ஈழத்தமிழ் ஆனது.

“டேய் கதைவைத்திறவடா .. அவங்கள் துரத்திறாங்கள்.”
“அவங்கள் எண்டா யாருடா?”
“அதான் … சேரனும் .. சந்திக்கடைல நிண்டு தேத்தண்ணி குடிக்கிற அமீரும் ..”

எட்டிப்பார்த்தேன். கத்தி கோடாலியோடு ஆட்கள் ஓடிவருவது தெரிந்தது. சேரன் ஒவ்வொரு படியிலும் தள்ளாடி தள்ளாடி அழுதபடியே வந்துகொண்டிருந்தார். “அடி பாரதி கண்ணம்மா இது பாழ் பட்ட மண்ணம்மா” என்று கைகளால் கண்ணிரண்டையும் மூடி குலுங்கினார்.

“என்ன மச்சி நீ பாட வேண்டிய பாட்ட அந்தாள் பாடுது”

நான் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கும்போதே ஸ்ருதி கையில் இருந்த ஷாப்பிங் பாக்கோடு அவசரத்தில் உள்ளே நுழைய காஞ்சிபுரம் சேலை கதவு பிடியில் பட்டு டர்ர்ரென்று அறுந்தது. அதை எடுத்து விட்டபடியே கஜனும் பின்னாலே நுழைந்து கதவை உள்ளே தாழ்பாள் போட்டான். வேட்டியை காணவில்லை.

“இப்ப என்ன செய்யிறது கஜன்?”
”டைம் இல்ல மச்சான் .. முக்கியமான செக்ஷனை மட்டும் பார்க்கலாம்”
”என்ன பாடமெண்டாவது தெரியுமா?”

அஜீக்கு போன் பண்ணினான். பேசினான். கேட்டான். முகம் பிரகாசித்தது.

“டேய் .. அம்மா கணவாய் கறி வச்சிருக்கிறாவாம் .. ஒருக்கா போய் சாப்பிட்டு வருவமா?”
”பாடம் என்னவாம்?”
”தெரியாதாம் மச்சி. அவன் வழமை போல பாமினியை கொப்பி அடிக்கபோறானாம்”
”அது சரிவராது கஜன். படிச்சிட்டு போவம்.. ஏதாவது ஒரு பாடம் சொல்லு”
”தேர்மோ டைனமிக்ஸ்?”
”ஷிட் .. துண்டா படிக்கேல்ல .. இப்ப என்ன செய்யிறது”
”உன்னட்ட நோட்ஸ் இருக்கா?”
”அந்த பாடம் என்ரோல் பண்ணினதே தெரியாது”
”ம்ம்ம் … அப்பிடி எண்டா இக்கொனமிக்ஸ் படிப்பம்”
”டேய் .. அது ஒரு மண்ணுக்கும் தெரியாது..”
”உன்னோட ஆடேல்லாது .. நீயே சூஸ் பண்ணு”
”குவாண்டம் எப்பிடி?”
”ஆணியே வேணாம் .. நான் அஜியை கொப்பி அடிக்கப்போறன்”

“இல்ல மச்சான், சப்பை மாட்டார்டா.. குவாண்டம் கடவுள் எல்லாம் போட்டு குழப்பி அடிக்கலாம் .. இப்ப பாரு
”ஒன்றே எனின் ஒன்றே ஆம்
பல என்று உரைக்கின் பலவே ஆம்
அன்றே எனின் அன்றே ஆம்
ஆமே எனின் ஆமேயாம்
இன்றே எனின் இன்றே ஆம்
உளது உரைக்கின் உளதே ஆம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை”

”மொக்கை கவிதை மச்சி, ஆனைக்கும் அடி சறுக்கும் .. எறும்புக்கு ஏன் வேண்டாத ஆசை?”
”இது கம்பராமாயணம்டா”
“ஓ .. அப்ப நல்லா இருக்கு .. கடவுள் தத்துவம் சுப்பர் .. கடவுள் இருகார்டா கோமாரு … கௌசல்யா அக்கா கோல் பண்ணினவா?”
”தம்பி ஒரே ஒரு கரண்டி சாப்பிடுங்க .. வளர்ற பெடியன்”
”எப்ப அக்கா கனடாவில இருந்து வந்தனீங்கள்?  .. எனக்கு வாழ்க்கைல மூன்று பேரிண்ட சமையல் தான் பிடிக்கும்”
”ஆரு தம்பி அவை?”
”அம்மா .. அக்கா .. மற்றது ..”
”கௌசல்யா … காமாட்சி, டேய் குமரன் .. இளந்தாரிபெடியள் .. எல்லாரும் ஓடுங்கோ .. ஊருக்க ஆமி பூந்திட்டான் .. ஓடுங்கோ ஓடுங்கோ”

ஒழுங்கை பூராக அல்லோகல்லப்பட்டது. சனம் கொஞ்சம் நகை நட்டை அவசரமாக கோழிக்கூட்டு மாஸ் டின்னுக்குள் ஒளித்துவைக்க ஓடின. நாய்கள் ஊளை இட்டன. ஸ்ருதி சேலையை மாற்றி சோட்டியை போட்டுக்கொண்டு வர, கஜன் சாரத்துக்கு மாறியிருந்தான். இருவருமே மாமரத்து பங்கருக்குள் ஓடி தகரத்தால் இழுத்து மூடினார்கள்.

“டேய் வெங்கலாந்தி, ஆமி வந்தா எவனாவது பங்கருக்க ஓடுவானா?”

சொல்லிவிட்டு தின்னவேலிப்பக்கமாக ஓட ஆரம்பித்தேன். தூரத்தில் துவக்குச்சத்தம் கேட்டது. ஒரு ஓட்டோ அப்புகாமி பெத்தெடுத்ததை நிறுத்திவிட்டு  “அன்பார்ந்த தமிழீழ மக்களே” என்றது. “இவங்கள் வேற” என்று மிச்சத்துக்கு அன்னமா கிழவி வள்ளுவர் எழுத மறந்த குறளை எடுத்து வீசியபடியே ஓடியது.  நானும் ஓடினேன். ஓடிக்கொண்டே இருந்தேன். தபால் பெட்டி சந்திவந்துவிட்டது. இதுக்கு மேலே ஓட முடியாது. ட்ரெட்மில்லை பார்த்தேன்.  பதினோண்டில விட்டிட்டு ஓடியிருக்கிறேன். இருநூறு கலோரி எரிஞ்சிருக்கும். ஆமி கிட்ட வந்துவிட்டான். அவன் எப்பிடியும் பன்னிரண்டில் துரத்தியிருக்கவேண்டும். வரும் வழியில் சிவத்திரன் அண்ணாவின் அண்ணாவை சுட்டு போடுவது தெரிந்தது. கத்தமுடியாது. தபால் பெட்டிக்கு பின்னால் 83-riots3-436x343ஒளிந்திருக்கிறோமே. கண்டுபிடித்துவிடுவானா? பெட்டிக்கு பின்னால் பெரிதாக ஒன்றையும் மறைக்கமுடியவில்லை. ஒடுங்கிப்பார்த்தேன். முடியவில்லை.  பெட்டியை கொஞ்சம் பெரிதாக்க தொடங்கினேன். இப்போது ஒகே. உடம்பை மறைத்தாயிற்று. தலை மட்டும் தான் வெளியே. இட்ஸ் ஓகே. அவன் என்னை கண்டுவிட்டானா என்று பார்ப்பதற்கு எப்படியோ தலையை  வெளியே நீட்டதானே வேண்டும்? நினைத்துகொண்டிருக்கும்போது சடக்கென்று ஒரு கை என் தோளை பிடித்து கீழே பதித்தது. பார்த்தால் மனீஷா கொய்ராலா. பொட்டு வைக்காமல், சல்வார் முக்காடு போட்டு, அவிச்ச இறால் கணக்கா, கண்ணிலே எப்போதுமே முந்தநாள் இரவு டக்கீலா அடிச்சு மட்டையான ஒரு சோகம் குடி இருந்தது.


“பயமா இருக்கா?”
”பயமா? பயத்தை பற்றி உனக்கென்ன தெரியும்”

ஆர்மி சுட்டுக்கொண்டு வந்தான். சங்கக்கடை பெரேராவை பிடிச்சு போஸ்ட்டில கட்டிவிட்டு ஏதோ மிரட்டிக்கொண்டிருந்தான்.

“ஐயோ எனக்கு தண்ணி வேண்டாம் .. சோடா காணும்.. இனி தண்ணி தாங்க எண்டு கேக்க மாட்டன் விட்டிடுடுங்க .. ஐயோ ஐயோ”

“டப்” என்று சத்தம் கேட்க பெரேரா சரிந்தான். “தண்ணீ ஐயோ தண்ணீ.. விடாய்க்குது” என்று பிதற்றிக்கொண்டிருக்க இன்னொரு “டப்” பில் ஊமையானான். அதைக்கண்ட பயத்தில் “ஆ” என்று நான் கத்த ஆர்மி என்னை திரும்பி பார்த்துவிட்டான். சுடப்போறான். கடவுளே. அம்மாளாச்சி. சுட்டா படக்கூடாது. கடவுளே. சொல்லிக்கொண்டிருந்த நேரம் பார்த்து என்னை மனீஷா இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பிக்கிறாள். ஏ ஆர் ரகுமான் ஒலிம்பிக்ஸ் ஸ்டேடியத்தில் புகைகளுக்கு மத்தியில் மேலெழுகிறார். ஊஊஊஊஊஊஊஊ.

uyirae1cl”இருபூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிராடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே”

குண்டு வெடிக்கிறது. மனீஷா இழுத்துக்கொண்டு ஓடுகிறாள்.

“தில்சேரே தில்சேரே .. தில்சேரே தில்சேரே”

என்றபடி நெருப்பு பந்தத்தை விலத்திவிட்டு மனீஷா பார்த்தால் அதே காந்தக்கண்கள். ஆர்மி துரத்துகிறான். கூட்டிக்கொண்டு ஓடினேன்.

ச ச நி நி |  நி நி நி ப நி | ம ம நி நி| ம ம நி ப ப நி
ச ச நி நி | நி நி நி ப நி | ம ம நி நி| ம ம நி ப ப நி

ஓடி ஓடி, சிக் சிக் சாங் சிக் சாங், ஓட்டம், மனிஷாவின் சாண்டில்ஸ் அறுந்து விழுகிறது, ஓடுகிறோம். மக்கர் மாஸ்டர் வீடு பின்வளவால் நுழைந்து முன் ஒழுங்கைக்கு போய், முத்துத்தம்பி பள்ளிக்கூடத்துக்க போனா சனத்தோட சேர்ந்திடலாம். ஆடியபாதம் ரோட்டு கடக்கோணும். வன் டூ த்ரீ போர். கூட்டம் ரகுமானோடு சேர்ந்து அலறுகிறது.  .. உன்னோடு நான் கண்ட பந்தம். எட்டிப்பார்த்தாள். ஆர்மி. மெயின் ரோட்டால் வந்துவிட்டான். கடவுளே. மண்ணோடு மழை கொண்ட பந்தம். ஆர்மி கண்டுவிட்டான். மனீஷாவை பார்க்கிறேன். அவள் கண்கள் தீட்சயண்மாக, சலனமில்லாமல் இருந்தது. காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும். என் கைப்பிடியை தளர்த்திக்கொண்டு நடக்க ஆரம்பித்த்தாள்.

போகாத .. போகாத பிளீஸ்.

போனாள். போகாத பிளீஸ். திரும்பி ஸ்லோ மோஷனில் சிரித்துக்கொண்டு, ப்ளீஸ் போகாத. ஆர்மிக்காரன் ஐயோ .. பார்த்திட்டான். அதே மோகனப்புன்னகை.

பேரன்பே உந்தன் நினைவு,
என் கண்ணை சுற்றும் கனவு.
இது உயிரை திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு.

சடக்கென்று திடுக்கிட்டு எழுந்தேன். திரும்பிப்பார்த்தால், மேகலா நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தாள். தட்டினேன். முழித்தாள். பார்த்தாள். முழித்தாள்.

என்னடா இப்பிடி வேர்த்திருக்கிது? கனவு கண்டியா? இண்டைக்கு ஆரு? சமந்தாவா?

பேசவில்லை.

“ஹேய் .. ஆர் யூ ஓகே? என்ன சொல்லு?”
”உன் துன்பம் என்பது வரவு” இதுக்கு அர்த்தம் என்னடி?.

சிரித்தாள்.

“சும்மா படுடா”
”சொல்லு .. தல வெடிச்சிடும் போல”

மேகலா ஒருகணம் கண்ணைமூடி யோசித்துவிட்டு சொன்னாள்.

லூஸா.. அதாண்டா பாட்டே .. சந்தோஷ கண்ணீரே!

&&&&&&&&&&


கனவு காணுங்கள் Guys

காசி ஆனந்தன் தொட்டு அப்துல்கலாம் வரை ஆ ஊ என்றால் கனவு காண சொல்லுவார்கள். தெரிந்து தான் சொன்னார்களா தெரியாது. ஆனால் கனவு என்பது கண்ணால் காண்பது தானாம். கனவுகள் நித்திரையின் Rapid Eye Movement (REM) நிலையின் போது தான் உருவாகிறது என்கிறார்கள்.  அந்த நேரம் மூளை கவேகமாக, நாம் முழித்திருக்கும்போது இயங்குவது போல இயங்குமாம். கண்கள் கிடுகிடு என்று அசையுமாம். அதாவது கனவின் போது கண் காட்சிகளை டிவியில் பார்ப்பது போல இமையை மூடியபடியே பார்க்கிறது என்கிறார்கள். அப்படிப்பார்ப்பதால் வருகின்ற தூண்டல்களால் தான் மூளை பரபரப்பாக அந்த சமயம் இயங்குகிறது.

இப்படி மூளை இயங்குவதால் தான் சில நேரம் எங்களுக்கு வியர்க்கிறது. படக்கென்று எழும்பி தாகமெடுத்து தண்ணீர் குடிக்கிறோம். குமரனுக்கு ட்ரேட் மில்லில் ஓடும் களைப்பு வருகிறதே கதையில். இந்த விஷயம் தான்.  அது இருக்கட்டும்.

dream-theater-art-print

எங்கிருந்து இந்த கனவு உருவாகிறது? கனவு உருவாவதற்கான மூலங்கள் பற்றி பல வித ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இது தான் சரி என்று எவராலும் இன்னமும் நிறுவமுடியவில்லை. ஆனால் இருக்கும் தியரிகளுக்குள் ஜீ ஷாங் என்றவரின் Continual Activation Theory கொஞ்சம் லோஜிக்களாக இருக்கிறது.  விளங்கப்படுத்த ட்ரை பண்ணுகிறேன்.

எங்கள் மூளையில் நாளாந்த நடவடிக்கைகளை, நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தும் சுயநினைவுப்பிரிவு இருக்கிறது. அதை Conscious related memory (declarative memory) என்கிறார்கள். மற்றையது ரோட்டால போற மொக்கை பொண்ணை பார்த்தாலும் உள்ளுக்க ஜெஸ்ஸி ஜெஸ்ஸி என்று சொல்லுமே. அது. Unconscious related memory(procedural memory). பெயரை விடுங்கள். சிம்பிளா சொல்லப்போனாள். சுயநினைவு, ஆழ்மனது நினைவு. இந்த இரண்டும் எப்படி தூக்கத்தின் போது தொழிற்படுகிறது என்பதை பொறுத்து தான் கனவு இடம்பெறுகிறதாம்.

Buckle up guys.

முன்னம் சொன்னேனே, REM, நித்திரை, அதாவது அடித்துபோடும் நித்திரை, அப்போது ஆழ் மனதின் நினைவுகள், அந்த டீப் மெமரி கொஞ்சம் பிஸியாக வேலை செய்யுமாம். அதே நேரம் உடல் ஓய்வில் இருப்பதால்,  சுயநினைவு மெமரிக்கான இன்புட்டுகள் குறைந்து இருக்குமாதலால் அந்த மெமரி கொஞ்சம் சுவரில சாவகாசமா சாய்ந்து ரெஸ்ட் எடுக்கும். இப்ப என்ன நடக்குது என்றால், ஆழ்மனதில் அலை அடித்துக்கொண்டிருக்கும் மெமரி சிக்னல்கள் சுயநினைவு பக்கம் ஓவர்ப்ஃளோ பண்ணப்படுது. அதனாலே ரெஸ்ட் எடுக்கின்ற சுயநினைவு மெமரி விழித்துக்கொள்கிறது. தனக்கு உடலில் இருந்து பிசிக்களாக தான் இன்புட் வருகிறது என்று தவறாக நினைத்துக்கொள்கிறது. விளைவு, மூளை முழுதும் சிக்னல்கள் பறக்கின்றன. மூளைக்கு மட்டும்தான். ஆர்மி வாறான் என்று ஓடச்சொல்கிறது. ஸ்ருதியை கட்டிக்கொண்டு வந்த கஜனை பொறாமையாய் பார்க்கசொல்கிறது. எக்ஸாமுக்கு படிக்கவில்லையே என்ற ஆழ்மனது தாக்கம் சுயநினைவு மெமரியில் தூண்டப்படுகிறது. காட்சியின் சிக்னல்கள் கண்ணுக்கு போய், reverse engineering மூலம் கண் காட்சியை காண ஆரம்பிக்கிறது. கனவின் போது உடல் ஒரு வேலையும் செய்வதில்லையே ஒழிய ஆழ்மனதின் தூண்டுதலால், சுயநினைவு, உடல் வேலை செய்கிறது என்றே நினைத்துக்கொள்கிறது. வியர்க்கிறது. நாவு வறல்கிறது. You get it?

REM-sleep

ஆக ஒரு கட்டத்தில் இந்த ஆட்டம் எல்லை மீறி, டென்ஷனாகி, புற இச்சைகளை உருவாக்கி, தாகமெடுத்து தண்ணீர் குடித்தே ஆகவேண்டுமென்ற நிலை வர, படக்கென்று கண் விழித்து, வியர்த்து விதிர்விதிர்த்து போய் செம்பில் தண்ணி வார்த்து மொண்டு மொண்டு குடிக்கும்போது, குறை கனவில் எழுந்ததால், உங்களுக்கு ஸ்டில் கனவு ஞாபகம் இருக்கும். ஏனெனில் சிக்னல்கள் இப்போது சுயநினைவில் இருக்கின்றன. ஆனால் எழும்பாமல் அப்படியே தூங்கிவிட்டிருந்தால் அதிகாலையில் எல்லாமே மறந்துபோயிருப்பீர்கள்.

Night at the museum படத்தை இந்த விஷயத்தோடு ஒப்பிட்டு யோசித்துப்பாருங்கள். ஸ்ட்ரைக் பண்ணும்.


நானும் ஓர் கனவோ?

கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன தத்துவ அறிஞர் தான் கந்தசாமி. (உண்மை பெயர் Zhuang Zhou ஐ தமிழில் எழுதினால் ஸ்கிப் பண்ணி விடுவீர்கள்). அவருடைய “Zhuangzi என்ற தத்துவ நூல் மிக பிரபலம்.  அந்த புத்தகத்தில் “வண்ணத்துப்பூச்சியின் கனவு” என்று ஒன்று வருகிறது.

Once Zhuangzi dreamt he was a butterfly, a butterfly flitting and fluttering around, happy with himself and doing as he pleased. He didn't know he was Zhuangzi. Suddenly he woke up and there he was, solid and unmistakable Zhuangzi. But he didn't know if he was Zhuangzi who had dreamt he was a butterfly, or a butterfly dreaming he was Zhuangzi.

images

கொஞ்சம் லோக்கலாக மொழி பெயர்க்கிறேன்.

ஒரு நாள் கந்தசாமி, தான் ஒரு வண்ணாத்துப்பூச்சியாக பறப்பதாக கனவு காண்கிறார். அது சுற்றி சுற்றி படபடத்து பறக்கிறது. கந்தசாமிக்கு வலு  புளுகம்.  பறக்கிறார். ஏதாவது பூவின் மேலே இருந்து ரெஸ்ட் எடுக்கிறார். கேதா மக்ரோ லென்ஸ் வச்சு ஜூம் பண்ணி படம் எடுக்கிறான். அண்ணருக்கு இன்னும் புளுகம். போஸ் கொடுத்துவிட்டு பறக்கிறார். பறக்கும்போது இன்னொரு வண்ணத்துப்பூச்சியை பார்க்கிறார். மாட்டர் பண்ணுகிறார். யூ நோ. இப்படியாக வாழ்க்கை சூப்பராக போய்க்கொண்டு இருக்கிறது.

திடீரென்று கந்தசாமிக்கு கனவு கலைகிறது. தூக்கம் கலைந்து எழுந்தவர் கண்ணாடியில் முகத்தை பார்த்தால், ஷிட், அதே கந்தசாமி. தொப்பையோடு, குழி விழுந்து, நெஞ்சு முடி நரைத்து, தூரத்தில் செல்வராணி தொணதொணத்துக்கொண்டிருக்க,

கந்தசாமி குழம்பிவிட்டார். தான் வந்து, வண்ணாத்துபூச்சியாக பறப்பது போல கனவு கண்ட கந்தசாமியா? இல்லை கந்தசாமி போல துன்பப்படுவதாக கனவு காணும் வண்ணாத்திப்பூச்சியா?

நம்மாளு பாரதி, இதே தத்துவத்தை தான் பாட்டில் சொன்னான். அவன் சுயமாகவே சொல்லியிருக்கலாம். அல்லது Zhuangzi வாசித்தும் கூட சொல்லியிருக்கலாம். பல்மொழி வித்தகன் இல்லையா. அவன் பாணியே தனி.

bharathiநிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?

என்றவன் இந்த இடத்தில் கந்தசாமி ஆகிறான்.

போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

Ontology பற்றி ஆராய்ச்சி செய்பவர்களை மண்டை காயவைக்கும் தத்துவம் இது. யோசித்துப்பாருங்கள். விசர் பிடிக்கும். ஐயோ சொல்லவைக்கும். தலையில் போட்டு இடிக்கவேண்டும் போல இருக்கும். நெற்றியில் இடி இடி இடி

திடுக்கிட்டு விழித்தாள் மேகலா. வியர்த்திருந்தது. அடடா என்னமாதிரி கனவு இது? எழுதவெல்லாம் செய்கிறேனே. அதுவும் ஆண் வேஷத்தில். தனக்குள் சிரித்தாள். பக்கத்தில் திரும்பிப்பார்த்தால் குமரன் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.  அவனை டிஸ்டர்ப் பண்ணாமல், எழுந்து போய், தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு, மீண்டும் வந்து படுக்கும்போது குமரன் புரண்டு கை போட்டான். நசுக்கிடாமல் அவன் கையை தூக்கி அப்பால் வைத்துவிட்டு கண்ணை மூடும்போது, கண்ட கனவு ஞாபகம் இருந்தது. அதை நினைத்தபடியே தூங்க ஆரம்பிக்க…

இடி இடி என்று இடிக்கவேண்டும் போல இருக்கிறதா? சரி விடுங்க பாஸ். இதுல காஞ்சது காணாட்டி Inception படத்த subtitles இல்லாம ஒருக்கா போட்டு பாருங்க. ஏற்கனவே பார்த்திருந்தாலும் காரியமில்லை. திரும்பிப்பார்க்கலாம். புதுசா இருக்கும்!காதல் மயக்கம்!

நம்மாளு வள்ளுவர் அனேகமாக நான்கைந்து ரமணிச்சந்திரன் நாவல்கள், எஸ்.ஜே.சூரியா, அகத்தியன் படங்கள் பார்த்துவிட்டு தான் காமத்துப்பால் எழுதியிருக்கவேண்டும். கற்பனை சும்மா புறக்காம்மாஸ் அடிக்கும்.  இந்த குறளை பாருங்கள்.

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்.

ஒகே இதை இப்போது தமிழிலே மொழிபெயர்க்கலாம்.

காதலி சொல்கிறாள் கேளுங்கள். அவள் ஒருநாளும் கண் இமைப்பதே இல்லையாம். இமைத்தால் இவள் கண்ணுக்குள்ளேயே எப்போதும் குடியிருக்கும் காதலன் அவள் இமைகளுக்கு உள்ளே மறைந்துவிடுவானாம். இந்த விஷயம் தெரியாத ஊரார் எல்லாம் காதலன் இவளிடம் அன்பு கொள்ளாமல் ஊரை விட்டு ஓடி ஒளிந்துவிட்டான் என்று தப்புக்கணக்கு போடுவார்களாம். எதுக்கு இப்பிடி ஒரு பிரச்சனை என்று அக்காகாரி கண்ணையே இமைக்க மாட்டாளாம். வள்ளுவர் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இந்த குறளை எல்லாம் எடிட்டிங்கில் தூக்கியிருப்பார். சரி விடுங்க.

images (2)

வள்ளுவன் இப்பிடி எழுதிவிட்டால், கம்பன் பார்த்துக்கொண்டு இருப்பாரா? பாஷா படத்து தலைவர் மாதிரி, கொஞ்சம் மேலே பாரு கண்ணா என்கிறார். இடம் சுந்தரகாண்டம். அசோகவனத்தில் சீதை!

“துயில் எனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும்  துறந்தாள்”

என்று சீதையின் தனிமைத்துயர் சொல்வார் கம்பர். அதாவது அசோகவனத்தில் சீதை கண் தூங்குவதோ, ஏன் இமைப்பதையோ கூட துறந்தாளாம். எதற்கு என்று யோசித்தால் வள்ளுவன் குரலுக்கு கம்பன் கொடுக்கும் விளக்கம் என்று அது புரியும். எங்கே தான் இமைக்கும் பொழுதில், இராமன் தன்னோடு இல்லை, தன்னினைவு இராமனுக்கு இல்லை என்று அசுரர்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது என்ற, இராமனை ஏதிலர் என்றிடுமே இந்த ஊர் என்கின்ற குறள் விளக்கம் அது. செம இல்ல. கமபராமாயணமே வள்ளுவன் குறளுக்கான காப்பிய விளக்கம் என்பார் கம்பவாரிதி. உண்மை தான் போலும்.

கம்பன் வெறும் கவிஞன் கிடையாது. அவன் ஒரு கதைசொல்லி. ஸ்க்ரீன் ப்ளே, Foreshadowing டெக்னிக் எல்லாம் தெரிந்த கேஸ் அவன். முன்னே இந்த இமைத்தாலும் முகிழ்த்தலும் மாட்டரும் சொன்னதால், பின்னாடிக்கு திரிசடை சீதையோடு பேசும் இடத்தில் அந்த விஷயத்தை நைசாக புகுத்துகிறான். மனப்பொருமலில் இருந்த சீதைக்கு திரிசடை சொல்லுகின்ற ஆதரவு வார்த்தை அது. அண்ணல் வந்து உன்னை காப்பதாக கனவு கண்டேன் என்கிறாள். அந்த கனவு தனக்கு வராமல் உனக்கு எப்படி வந்தது என்கின்ற லோஜிக்கல் டவுட் சீதைக்கு வராதமாதிரி வார்த்தை போடுகிறாள்.

'துயில்இலை ஆதலின், கனவு தோன்றல;
அயில்விழி! அனைய கண் அமைந்து நோக்கினேன்;

சீதா, உனக்கு தான் தூக்கமே இல்லையே. கண்ணே இமைப்பதில்லையே. உனக்கு எப்படி கனவு வரும்? அதனால் எனக்கு ஒரு நற்கனவு வந்தது. சொல்கிறேன் கேள் என்கிறாள் திரிசடை.

இனி வைரமுத்து இன்னிங்க்ஸ். கவிப்பேரரசர், காதல் என்றால் சும்மா சலங்கையை கட்டி ஆடும் வித்தகர். சும்மா இருப்பாரா. இப்போது தான் அவனுக்கும் அவளுக்கும் காதல் வந்து கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது. போக்கு வரத்து ஒரு சனியனும் விளங்குதில்ல. இது சிட்டுவேஷன்.

images (1)

இதிலே காதலன் ஒரு மண்டு. ஆனாலும் தான் ஒரு விண்ணன் என்ற நினைப்பிலே கற்பனை எடுத்துவிடுறார். இம்பரஸ் பண்ணணுமில்லையா.

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை

அவள் கேட்டுவிட்டு ஒரு சின்ன கிளுக் சிரிப்போடு சொல்லுகிறாள். கம்பன் வள்ளுவன் தெரிந்தவள் அல்லவா. இந்த மாட்டர் அண்ணருக்கு தெரியாது.

நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை.

அடச்சிக். இப்பிடி தாக்குவாள் என்று இவருக்கு தெரியாது. நம்பவே முடியவில்லை. கேட்கிறார்.

மெய்யா பொய்யா?

அவள் மீண்டும் கிளுக்.

மெய்தான் அய்யா.

கிராதகி. அய்யா என்று தன்னை நக்கலடிக்கிறாள் என்று அவனுக்கு புரிகிறது. காட்டிக்கொள்ள முடியாது. அவமானம்.இவளுக்கு செய்யிறன் வேலை. சும்மா கற்பனை அடிச்சு தூக்கோணும் என்று நினைத்து அடுத்த வரியை தலைவர் பிய்த்து போடுகிறார்.

பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே
மார்பினை தீண்டு மார்கழியே

அவள் அதற்கும் அசையவில்லை. பாடுகிறாள்.

பட்டும் படாமல், தொட்டும் தொடாமல்
என் பெண்மை திண்டாடும்,
உன்னோடு மன்றாடும்.

என்னடா இது. இன்னமுமே படவும் இல்லை தொடவும் இல்லை. இதில் என்ன திண்டாட்டம். இதற்கு ஏன் ஒரு மன்றாட்டம் என்று இந்த விவஸ்தை கெட்டவன் கேட்டு வைக்க, அவளோ பொறுமை கெட்டுவிட்டாள்.

அட பன்னிப்பரதேசி .. இந்த பன்னாடை படலையை முதலில சாத்துடா.
அப்ப தான் நீ எல்லாம் உருப்படுவ!

&&&&&&&&&&&&&&&&&

Contact form