வியாழமாற்றம் 17-10-2013: எப்பவோ முடிந்த காரியம்!

Oct 17, 2013

 

சைக்கிள் கடைச்சாமி

PR9A0398

யாழ்ப்பாணம் கம்பஸ் பக்கம் வந்து சைக்கிள் கடை சாமி என்று விசாரித்துப்பாருங்கள்.  சின்னக்குழந்தை கூட கடையை காட்டும். கம்பசுக்கு முன்னாலே, பழைய பாஸ்கட் கோர்ட்டு மதில் தாண்டி ரோட் தாண்டினா இங்காலப்பக்கம் அபிராமியோட ஒட்டி இருக்கிறது தான் சாமிண்ட சைக்கிள் கடை.  கடை என்றால் வேறொன்றுமில்லை. ஒரு தகரக்கொட்டில் தான். உள்ளே ஒரு பத்து பதினைந்து பழைய டயர்கள், ஒன்றன் மேல் ஒன்றாய் கறல் பிடித்த சைக்கிள்கள். கிரீஸ் கறை அடைப்புகள். வேலியில் கூட டயர் தொங்கும்.

சாமி ஒரு கடவுள் பக்தன். காதில் ஒரு கோன் பூ எப்பவுமே இருக்கும். கடை மூலையில் செவ்வரத்தம்பூவை பார்த்தபடி யோகர் சுவாமிகள் குனிந்தபடி இருப்பார். கொஞ்சம் தள்ளி இயக்கத்தின் கடை பெர்மிட் பிரேம் பண்ணி தொங்கும். கொட்டிலின் நடுவில் இரண்டு சைக்கிள் செயின்கள், ஒட்டுச்சைக்கிள் தூக்குவதற்காக தொங்கும். வெளியே ஒரு வெள்ளை ஒயில் கான் அரைவாசியாக வெட்டப்பட்டு, டியூப் ஒட்டு கண்டுபிடிக்க பாவிப்பதற்காக ஊத்தை தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். ஒரு தேர்மோ பிளாஸ்க், பேணி, சுருட்டு, நெருப்புக்கு என்று எரி கயிறு … இருக்கும். அடிக்கடி ஷெல் அடிக்கும் பொன்னுக்கோனை கவர் பண்ணுவதற்காக கடையில் எந்நேரமும் சாம்பிராணி புகை போடப்படும். இதற்கு மத்தியில் சக்கப்பணியாரமாய் பலகைக்கட்டையில் குந்தியபடி சைக்கிள் கடைச்சாமி இருப்பார். சிரிப்பார். மூன்று பல்லுகள் புடுங்கப்பட்டு மிச்சம் எல்லாமே வெற்றிலைச்சிவப்பாக இருக்கும்…. டியூப் கழட்டும்போது சாரத்தை ஒதுக்கவும் மாட்டார்.  சாமி உள்ளுக்க போட்டதா ரெக்கோர்ட் இல்ல. லலிட்ட ஒருக்கா கேக்கோணும்.

“ஒரு பொல்லாப்பும் இல்லை”

அந்த ஏரியாவில் சைக்கிள் கழுவிப்பூட்டுறது, செக்கன்ட்ஹாண்ட் டயரில இருந்து வால்டியூப், ரிம் வரை எந்த சைக்கிள் பார்ட்ஸ் என்றாலுமே வாங்குவது என எல்லாமே சாமியரிண்ட கடையில தான். சாதாரணமாக சொலிசன் பூசி ஓட்டுற ஓட்டுக்கு பத்து ரூபா. அதுவே டியூப் ஜோயின்டால காத்து போகுது என்றால் பைண்ட் வைத்து நெருப்பில் வாட்டவேண்டும். காசு கூடவா கேட்பார். இருபது ரூபா.  சாமிக்கு கால் கொஞ்சம் ஊனம். ஒருவாறு கெந்தி கெந்தி தான் நடப்பார். சைக்கிள் காற்றடிக்க ஒரு ரூபா. பெடியங்கள் கடன் சொன்னால் தேவையில்லாமல் அம்மாவை இழுத்துவிட்டு “அடுத்தநாள் கொண்டுவந்து தா” என்பார். பம்ப் கூட அவர்களே எடுத்து அடிக்க வேண்டும். பெட்டைகள் என்றால் தானே போய் அடித்துவிடுவார், “அங்கிள்” என்றால் காசு வாங்கமாட்டார்.  “காத்து வெளியே போகுது, வடிவா அமத்தி பிடி பெட்டை” என்று சொல்ல அதுகளும் விளங்காம குனிஞ்சு வால்கட்டையை பிடிக்குங்கள். கம்பஸ் பெட்டைகள்.

“நாம் அறியோம்”

PR9A0388சாமிண்ட கடைல ஒரு பழைய வாங்கு இருக்கும். ஒரு பக்க கால் உடைஞ்சு சீமெந்து கல்லு வைக்கப்பட்டிருக்கும். அதில தான் குமாரசாமிரோட்டில இருந்த ரிட்டையர் ஆன ஓவசியர் காலமை வெள்ளன வந்து இருப்பார். டோறா கவிழ்ப்பில் எத்தினை ஆமி செத்தது எண்டு ஆரம்பித்து, செத்துப்போன கரவெட்டி அன்னம்மாளுக்கு சுவிஸில எத்தின பேரப்பிள்ளைகள் எல்லாம் பாடமாக்குவார். சில்லாலையை சேர்ந்த முப்பத்திரண்டு வயதான சைவ உயர் வேளாளர் ஆசிரியை மணமகள் யார் என்று எப்பிடியோ கண்டிபிடித்து பெயர் சொல்லுவார். சைக்கிள் ஒட்ட குடுத்துவிட்டு, வெயிட் பண்ண அந்த வாங்குல நீங்கள் இருந்தீர்கள் என்றால் கதை சரி. உங்கள் வீடு, அப்பா அம்மா பெயர் தொட்டு பக்கத்து வீட்டு வேலைக்காரி வரை எல்லாமே விசாரித்து கடைசியில் “ஆர் ஆக்கள்?” என்று கண்டுபிடித்துவிடுவார். இடையிடையே தன் மகன் பிரான்ஸில் இருக்கிற கதையும் அவன் சம்பளத்தை இலங்கை ரூபாவிலும் சொல்லுவார் … சாமி வாங்கி கொடுக்கும் பிளேன்ரீயை குடித்தபடி.

சாமிக்கு சைக்கிள் கடை வெறும் “சப்” தான். அதை வச்சு ஆட்களோட லிங்க் எடுத்து சாமி சீட்டு பிடிக்கத்தொடங்கினார். காசு கொட்டியது. சீட்டு பிடிக்கும் ஆளுக்கு, முதல் சீட்டு மொத்தமா அப்படியே கையில வரும். சாமிக்கு நான்கு ஆம்பிளை பெடியளும் ஒரு பெட்டையும். ஐந்து தரம் பிடித்த சீட்டில் மூத்த மகன் ரவியை டென்மார்க் அனுப்பீட்டார். மூத்தபெடியன் போய் ரெண்டாவதை கூப்பிட்டுது. ரெண்டாவது மூண்டாவத கூப்பிட்டுது. மூண்டாவது போய் வெள்ளைக்காரி ஒருத்தியை கலியாணம் கட்டினதில, சங்கிலி உடைஞ்சு போய், நாலாவது பாவம் சைக்கிள் கடைல ஸ்டக் ஆயிட்டுது. பெட்டை சைக்கிள் கடைல அடிக்கடி காத்தடிக்க வந்த சோமர்ட மூத்தவனோட ஓடிப்போய், பிறகு காதல்துறை வந்து விலக்கு வைச்சு .. அது வேண்டாம் இப்ப. 95 இடம்பெயர்வுக்கு ஒரு கிழமைக்கு முதல் மீட்பு நிதி விஷயமாய் சாமி பங்கரை வேறு விசிட் பண்ணீட்டு வந்திருக்கவேண்டும். இடம்பெயருவதற்கு முதல் சாமி பிடித்துக்கொண்டிருந்த சீட்டு என்ன ஆனது என்று, “கூறு” எடுக்காத ஆட்கள் மட்டும் சாமியை தேடிக்கொண்டு திரிஞ்சினம். பிறகு என்னானது எண்டு தெரியேல்ல.

“எப்பவோ முடிந்த காரியம்”

கடைசிக்காலத்தில் சாமியும் மனிசியும் தனியே தான் வாழ்ந்தார்கள். பிள்ளைகள் கவனித்தார்களா? என்று தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்றபோது அதே சாமி, அதே கடை, அதே ஆட்கள் இருந்தார்கள். பெயர்கள் மட்டும் மாறியிருந்தன. ஓவசியர் போய் ஹெட்மாஸ்டர் வந்திருந்தார்.  யாழ்ப்பாணத்தில் மூலைக்கு மூலை கூவி கூவி வங்கிகள் வந்துவிட்டதால் சீட்டு மூவ் பண்ணுதில்லை என்றார்.  மோட்டர்சைக்கிள் ஒட்டுக்கென்று செட்டப் அப்கிரேட் பண்ணியிருந்தார். லுமாலாக்கள் ஹீரோ ஹோண்டாக்களாக மாறி இருந்தன. லேடீஸ் சைக்கிள்கள் ஸ்கூட்டர்கள் ஆகியிருந்தன. பெண்கள் பஞ்சாபி, ஜீன்ஸ் டீஷர்ட் போட தொடங்கிவிட்டார்கள். சாமிக்கும் வயசாகிவிட்டது. கம்பசுக்கு வெளியே நிற்கிற மப்டிகாரரும் அடிக்கடி தலை காட்டினார்கள். யோகர் சுவாமிகள் படம் புது பிரேம் போட்டு இருந்தது. வாசகமும் மாறி இருந்தது.

“முழுதும் உண்மை”

PR9A9613[10]


 

நேற்று அவள் இருந்தாள்

pp_thumb[4]ஒருநாள் மெல்பேர்ன் புகையிரதத்தில் புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்” வாசித்துக்கொண்டிருந்தேன். பஞ்சத்தில் வாடும் பிரமநாயகம் பிள்ளையும் மனைவி செல்லம்மாளும் தனிய இருந்து குடித்தனம் நடத்துகிறார்கள். செல்லம்மாள் ஒரு சீக்காளி. தீரா வியாதிக்காரி. உடம்பில் சக்தி எதுவுமில்லாமல் எழுந்து நடக்ககூட அவளுக்கு துணை வேண்டும். ஆனால் அவள் வாயோ சும்மா இருக்காது. தொணதொணத்துக்கொண்டே இருக்கும். சுரம் வந்தால் உளறுவாள். “என்னைய எதுக்கு கட்டிப்போட்டு வச்சிருக்கீக? நான் பொடவை எல்லாம் இனி கேக்க மாட்டேன், அவுத்து விடுக, ஆக்க வேணாமா? அம்மைய பாத்துட்டு வரவேணாமா?” என்பாள். “அம்ம எங்க போயிட்ட .. தந்தி குடு .. அம்ம வரோணும்” என்பாள். திடீரென்று “அட அம்மைய .. நீயி எப்ப வந்த? ஆரு தந்தி கொடுத்தா?” என்பாள். “இப்ப தான் வந்தேன், தந்தி வந்தது .. ஒடம்புக்கு இப்ப எப்படி?” என்று பிரம நாயகமும் அவளது தாய் போல நடித்து பதில் சொல்லுவார்.

எந்நேரமும் தொணதொணக்கும் நோயாளி மனைவி, அவள் தொணதொணப்புக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி, பார்த்து பார்த்து பணிவிடை செய்யும் ஏழை கணவன். இவனுக்கு திடீரென்று பணிவிடை செய்ய அவள் கிளம்புவாள். தோசை சுடுவாள். தோசை எங்கே தண்ணியில் சுடுவது? செம கியூட்டாக இருக்கும் இந்த இருவரின் வயோதிப காதலும். காதல் தான் அது. காதல் என்றால் சும்மா அன்பே, ஆருயிரே என்று மடியில் விழுந்து கிடக்கும் காதல் இல்லை. வயோதிபத்தில் வரும் வாஞ்சை கொண்ட காதல். ஆளாளுக்கு உரிமை எடுத்து உபத்திரம் தர தயங்காத காதல் அது. அதில் ஒரு சந்தோசம். “நோயாளி ஆனாலும் இவள் என்ர மனிசி, இவள விட்டா எனக்கு வேற யாரு இருக்காக?” என்ற பாசம் பிரமநாயகத்துக்கு. “ஆம்படையான் தானே என்னைய கவனிச்சா என்னவாம்?” என்ற விறுமாப்பு செல்லம்மாளுக்கு. சும்மா பின்னும். வாசிக்க வாசிக்க .. ப்ச் .. இப்படி இருக்கவேண்டும் என்று தோன்றும்.

கடைசி அத்தியாயத்தில் செல்லாம்மாள் இறந்துவிடுவாள். அதற்கு பிறகு பிரமநாயகம் செய்தது தான் என்னை துவட்டிப்போட்டது. இதுவரை வாசித்தவர்கள் இந்த கதையை தேடி வாசியுங்கள். துவட்டும்.

PR9A9628

“செல்லம்மாள்” வாசித்து இரண்டு நாளாய் தூக்கமில்லை. எப்படி ஒரு காதல் இது? எவ்வளவு கியூட்டாக தலைவர் எழுதியிருக்கிறார்? கை துறுதுறுத்தது. ஆனால் காதலை எழுத அல்ல. இதை அப்படியே புரட்டிப்போட்டு, அந்த தொணதொணப்பில் காதல் இல்லாமல் எரிச்சல் மட்டுமே இருந்தால் என்ன ஆகும்? யோசித்தேன்.  காதலே இல்லாமல் கடமைக்கு வாழ்ந்தவர்கள் இறுதியில் தனித்துப்போனால் எப்படி இருக்கும்?

அப்படி யோசிக்க பிறந்தது தான் “நேற்று அவள் இருந்தாள்”. என் கதைக்கு வலுவான ஒரு ஆண் பாத்திரம் தேவையாய் இருந்தது. யாரைப்போடலாம் என்று நினைத்த பொது தான் சைக்கிள் கடை சாமி மனதில் வந்தார். அப்புறம் எழுத தொடங்க கதை அருவி போல ஓடியது. புதுமைப்பித்தன் எழுதியது காதலை. நான் எழுதியது வன்மத்தை.  கேதா வாசித்துவிட்டு “அண்ணே இது உங்கட பெஸ்ட்” என்றான். ஒரு வாரம் கழித்து வாசித்துவிட்டு “கலக்கீட்டடா ஜேகே” என்று யாருமே இல்லாத சமயம் நானே கண்ணாடியை பார்த்து கொலரை தூக்கிவிட்டேன்.  வழமை போல பென்ஸ் காரை கனபேர் ஒட்டுவதில்லை என்பதால் படலை வெறிச்சோடியது!

தனுஜா ரங்கநாத். எவா அவா என்று தெரியவில்லை. நம்ம ஜெயமோகனுக்கு இந்த கதையை அனுப்ப, வாசித்த ஜெயமோகனும் அதை தனது தளத்தில் பதிவேற்றிவிட்டார்.  சுமுகன் அதிகாலையிலேயே அண்ணே “உங்கட கதை ஜெமோ தளத்தில் இருக்கு” என்றவுடன் ஓடிப்போய் பார்த்தேன். இருந்தது. அட “கலக்கீட்டடா ஜேகே”.  ஒரே வினாடி தான். எழுதியவர் பெயர் பார்த்தேன். “தனுஜா ரங்கநாத்” இருந்தது. அடப்பாவிகளா. கிணற்றை இப்படியுமா திருடுவீங்கள்? ஜெர்க்காகிட்டேன் பாஸ். திருடுறது தான் திருடுறீங்க. எங்க கிட்ட எதுக்கடா திருடுறீங்க? நமக்கு வடக்கு மாகாணசபை அமைச்சர் பதவி கூட இல்லடா. அப்பிரசிண்டுகளா.

DSC_0829

ஜெமோவுக்கு விஷயத்தை சொல்லி உடனேயே மெயில, அவர் உடனேயே தவறை திருத்தி தன் தளத்தில் போட்டார். மிக்க நன்றி எழுத்தாளரே.

அன்புள்ள ஜேகே
மன்னிக்கவும் thanuja.thanu91@gmail.com என்ற மின்னஞ்சலில் இருந்து இக்கதை அனுப்பப்பட்டது. ஒரு மோசடி என அறிந்தது வருத்தமளிக்கிறது.
இதைச்செய்தவர் இதன்மூலம் புத்திசாலி என்று தன்னை நிரூபிக்க முயல்கிறாரா அல்லது அசடு என நிரூபித்துக்கொண்டிருக்கிறாரா என்பதுதான் குழப்பமாக இருக்கிறது
-ஜெ
http://www.jeyamohan.in/?p=40666

சரி பரவாயில்ல. அட்லீஸ்ட் இப்பிடியாவது நம்ம கதையை ஒரு எழுத்தாளர் வாசித்துவிட்டாரே என்று ஒரு பிளேன்ரீ குடிச்சிட்டு கோடிங் எழுதுவோம் என்று உட்கார்ந்தால், இன்னொரு நாதாரி, நான் எழுதின கடல் திரைப்பட விமர்சனத்தை ஜெமோவின் பேஸ்புக் பக்கத்தில ஷேர் பண்ணி வச்சிருக்கு. எழுதினத நானே மறந்துபோனேன். ஒருதடவை போயி வாசிச்சு பார்த்தன். “என்ர அம்மாளாச்சி!”. பதிவில ஜெமொவிண்ட டங்குவாரு அறுந்து தொங்குது. எனக்கு அண்டைக்கு எழுத்துல சனி நின்று நர்த்தனமாடி இருக்கிறது என்று இண்டைக்கு தான் தெரிஞ்சுது. இந்த பதிவை கிண்டி எடுத்து ஷேர் பண்ணினவன் மட்டும் என் கையில கிடைச்சான் …. ம்ம்ம். எங்கேயிருந்தடா கிளம்பி வரீக?

Kadal-Movie-Stills-837i00001162013i

அவ்வ்வ்!


திருப்தியும் நெகிழ்ச்சியும்

"திருமணத்துக்கு வாற ஆக்களுக்கு என்ன குடுக்கலாம்?”

ஜீவா கேட்டபோது உடனேயே “பாரதியார் கவிதைகள்” என்றேன். "பழைய ஐடியா ஜேகே வேற சொல்லுங்க" என்றாள். வித்தியாசமாக இளையராஜாவின் “How to name it?” சிடி கொடுப்பதாக தீர்மானித்து கஜனிடம் சொல்லி ஓர்டரும் குடுத்தாயிற்று. ஆனாலும் ஒரு சந்தேகம் உறுத்திக்கொண்டிருந்தது. வரும் ஆட்களில் எத்தனை பேர் Bach ஸ்டைல் ரசிப்பார்கள்? சிடி எங்கேயாவது மூலையில் முடங்கும் அபாயம் இருந்தது. குழம்பினோம். திடீரென்று ஜீவா

"யோவ் பேசாமல் புத்தகமே குடுப்போம், ஆனா இந்த திருக்குறள், பாரதியார் இல்லாம contemporary எண்டால் நல்லா இருக்கும்".

அட ஆமால்ல. புத்தக வேட்டை தொடங்கியது.

வருகைப்பட்டியலை வைத்து யாருக்கு என்னென்ன புத்தகம் என்று தீர்மானித்தோம்.  இறுதியில் நூற்றைம்பது கவிதை தொகுப்புகள். நூறு நாவல்/கட்டுரை வகை புத்தகங்கள். நூறு ஆங்கில நூல்கள் என்று பிரித்தோம்.

நாவல்/கட்டுரை கவிதை தொகுப்பு ஆங்கில நூல்கள்
 

கடவுள்களின் பள்ளத்தாக்கு

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

Outliers

கடவுள்

கம்பனின் அரசியல் கோட்பாடுகள்

Alice in wonderland

எழுத்தும் வாழ்க்கையும்

தமிழுக்கு நிறமுண்டு

Madal Doova

நகரம்

தண்ணீர் தேசம்

Hitchhiker's guide galaxy

என் இனிய இயந்திரா

வைகறை மேகங்கள்

Life Of Pi

மீண்டும் ஜீனோ

சிகரங்களை நோக்கி

Interpreter of Maladies

ஆட்டக்காரி

பெய்யேன பெய்யும் மழை

The Namesake

திசை கண்டேன் வான் கண்டேன்

 

Two States

 

 

Animal Farm

கெத்தாக பிளான் பண்ணிவிட்டோமே ஒழிய இதை செயற்படுத்துவது இலகுவாக இருக்கவில்லை. முதலில் புத்த்தகங்களின் விலையை கூட்டிப்பார்த்தால் தாலிக்கொடியின் விலைக்கு மேலே போகும் போல இருந்தது. ஆரம்பத்தில் தெரிவு செய்த பல புத்தகங்களை தூக்கவேண்டி வந்தது.  ஈழத்து படைப்புகள் எழுதுவுமே ஸ்டோக்கில் இல்லை என்றார்கள். இந்தியாவில் இருந்து வர லேட்டாகும் என்றார்கள். “என்னடா இது வழமை போல குங்குமச்சிமிழும் தாங்க்யூ கார்டும் தான் குடுக்கோணுமா?” என்று இரண்டு பெரும் குழம்பிப்போய் இருந்த சமயம் தான் ஆபத்பாந்தவனாய் துஷி வந்து சேர்ந்தான். “அண்ணே இந்த ஐடியாவுக்கு ஹாட்ஸ் ஒப், மிச்சத்தை நான் பார்க்கிறேன்” என்றான். எனக்கு நம்பிக்கையில்லை. “சொதப்பிடாத மச்சி” என்றேன்.

“அண்ணே பொண்ணு மாட்டர்ல வேணுமெண்டா சொதப்புவன் ஆனா பொத்தக விஷயத்தில சொதப்பமாட்டேன்”

என்றான். அட நம்ம பயல்!

நான் கொழும்பு போயிறங்க புத்தகம் எல்லாம் வந்திறங்கியது. எல்லாவற்றிலும் நாங்களே கை பட எங்கள் பெயர்கள் எழுதி இரண்டு குடும்பங்களும் சேர்ந்து கவர் கவர் போட்டோம். மணவறையில் ஆட்களுக்கேற்றபடி பார்த்து தெரிவு செய்து கொடுப்போம் என்று ஜீவா சொன்னாள். சூப்பர் ஐடியா, ஆனால் திருமணத்தன்று நம்மாளுங்க மின்னல் மாதிரி வந்து போனதில நாங்கள் திணறிப்போனோம். பிளான் பி போட்டு இந்தூஷனை அழைத்து “தம்பி நீயி ஒரு ஜட்ஜ்மெண்ல குடுடா” என்று சொல்லி அவனும் சரியாகவே வேலையை முடிய மனதில் சந்தோசம். ஆனாலும் ஒரு உறுத்தல். என்னடா இது உயிரை குடுத்து ஒரு வேலை செய்திருக்கிறோமே. ஒருத்தருமே அதை கண்டு கொள்ளவில்லையே என்ற ஒரு சஞ்சலம். சொதப்பீட்டோமோ?

இல்லை.. உண்மையிலேயே இது நல்ல முயற்சி என்று கலியாணத்தன்றே நம்ம லோஷன் படமும் போட்டு இப்படி எழுதியிருந்தார்.

1185125_10153220889725368_1497750989_nவழமையாகத் திருமணவீடுகளில் தாம்பூலப் பைகளையும் நினைவுச் சின்னங்களையும் (அநேக நேரங்களில் விநாயகர் சிலை அல்லது குங்குமச் சிமிழ்) வீட்டில் கொண்டுவந்து சேர்க்கும் எமக்கு இன்று Jeyakumaran Chandrasegaram திருமணத்தில் கிடைத்த இனிய ஆச்சரியம்...

சுஜாதா பைத்தியமான எனக்கு மட்டும் தான் சுஜாதா நூல் தரப்பட்டதா? எனவும், மற்றவர்களுக்குக் கிடைத்த நூல்கள்/நூல்களா பற்றி அறியவும் ஆவல்.
(JK ஆறுதலாகச் சொல்லட்டும் )

பலதரம் வாசித்தும் என் வீட்டு நூலகத்தில் இல்லாத புத்தகத்தை எனக்கு அளித்த மற்றொரு சுஜாதா சிஷ்யன் புது மாப்பிள்ளையின் மணவாழ்க்கை மேலும் மகிழ்வாக அமைய மீண்டும் வாழ்த்துக்கள்.

(இதே ஐடியாவை இனித் திருமணம் முடிக்கப்போகும் எல்லோரும் பின்ப�ற்றுக... என்னிடம் இல்லாத நூல்களின் பட்டியலைப் பிறகு தருகிறேன்)

 

திருப்தியாக இருந்தது. நேரில் அழைக்காவிட்டாலும் நண்பர்களும் வாசகர்களும் என் திருமணம் என்று நிஜமாக உவப்பெய்தி வந்து வாழ்த்தினார்கள். திருமண பரிசில்களை ஆவலாக நானும் ஜீவாவும் பிரித்து பார்த்துக்கொண்டிருக்கும் போது (சரிடா சரிடா மொய்யையும் தான்) இன்னொரு ஆச்சர்யம். ஜனனி என்ற வாசகி திருமணத்துக்கு வராதுவிட்டாலும், கௌரி மூலம் தான் கைப்பட வரைந்த இந்த ஓவியத்தை அனுப்பியிருந்தார்.

IMG_54802

தலைவரே வைகுண்டத்தில் இருந்து எங்களை வாழ்த்தியது போல… எழுத்து எப்படிப்பட்ட ஆட்களை சேர்த்திருக்கிறது பாருங்கள்.

வேறென்ன வேண்டும் பராபரமே?


வாரிதி வரும் கம்பன் விழா!

“தம்பி விழாவுக்கு கம்பவாரிதியும் வாறார், நீங்கள் மூன்று நிகழ்ச்சியில பேச வேண்டி வரும்”

என்று ஜெயராம் அண்ணா சொன்ன நாள் தொட்டு கால் தரையில் படவில்லை. என்னுடைய முதலாவது கொல்லைப்புறத்து காதலி. தூர நின்று பார்த்து வளர்ந்த ஒழுங்காக வித்தை பயிலாத ஏகலைவன் நான். தலைவரை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் இப்போது. இலேசுல கிடைக்குமா என்ன? கூடவே ஒரு நப்பாசை. மூன்று நிகழ்ச்சியிலே ஒன்றில் கூடவா அவரோடு கூட மேடையேறும் சந்தர்ப்பம் கிடைக்காது? அது பிறந்த பலன் அன்றோ?

Vizha 2013 Large Poster VIC 

சிட்னியில் சனிக்கிழமை (26-10-2013) காலை அமர்வில் இளையோர் அரங்கில் “இன்றெம்மை உயர்த்த இவரே துணையாவார்!” என்ற தலைப்பில் இலக்குவனை எடுத்து பேசுகிறேன். அடுத்தநாள் ஞாயிறு (27-10-2013) மாலை அமர்வு கவியரங்கில் “பேசாப்பொருட்கள் பேசினால்” என்னும் தலைப்பில் “சூர்ப்பனகை மூக்கு” என்று வாசம் பிடிக்கிறேன். இங்கே மெல்பேர்னில் ஞாயிறு (03-11-2013) மாலை அமர்வில் சுழலும் சொற் போர். “சிறந்த இல்லாள் எனும் தகுதிக்கு உரியவள்” என்ற தலைப்பில் என்னது “தாரை”.  கம்பன் மேடை. அதற்கென்று ஒரு தரம் இருக்கிறது. அதனால் டிஆர்பி குறைந்த டைம் ஸ்லாட்டில் எங்கள் நிகழ்ச்சிகள் இருந்தாலும் தரத்தில் குறையாது என்று உறுதி கூறலாம். நான் சொதப்பினாலும் நம்ம தல கேதா இருக்கிறான். இப்பவே ஆள் வேட்டி கட்டி நிற்பதாக கேள்வி. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்களை வரவேற்க பத்து வரி கவிதை எழுதித்தா என்றார்கள். மொக்கை போட்டேன். கவிதை என்றார் அமைப்பாளர். நீங்க என்ன சொல்லுதீக மக்களே?

கண்ணோடு கண்ணினை கவ்வி
உம்மை எல்லாம் உண்ணவும்
கம்பன் கவி பாடி
உள்ளத்தை கொள்ளை கொள்ளவும்
எம்மவர் வருகிறார்.
ஏகலைவர் பலர் இங்கிருந்து வில்லேற்ற
இவர்க்கு ஆழி தாண்டி கொஞ்சம் வாளி பயிற்ற
வாரிதியும் அவர்தம் வாரிதியும்
995198_341655659295645_1782746374_nசாரதியின் புகழ் பாட
ஊர்தி ஏறி வருகிறார்.
பாரதியும் வியந்தேற்றும்
நாடனவன் மொழியாலே
கன்னி எங்கள் தமிழினையே
காதலுற்று, மோகமுற்று
வதுவை செய்து, காமுற்று
கூடி, அமுதுண்டு கொண்டாடி
ஆடி பாடி
அது அடங்கும் போதினிலே,
தேடுகின்ற வாழ்க்கையெல்லாம்
உணரவைக்கும் உரைகளாற்ற
முனைவர் எல்லாம் வருகிறரே.
அசையும் உலகின் அசையா மொழியின்
அரவம் கொஞ்சம் அழகாய் கேட்க
அன்புடையீர் நீவீர் வந்திடுவீர்.
வந்துமே கம்பர் அவையறிவீர்.
அவையறிந்து தமிழறிந்து
அகுதின் பொருள் சுவை அறிந்து
உரையறிந்து கருவறிந்து
அறியாதன பல அறிந்து – ஈற்றில்
உமை அறிவீர்!
செம்புலப் பெயல் பாய்ந்திட்ட
வானுடை நீரை போல!
வந்தவரை வாழவைக்கும்
தமிழோடு உம்மையும் கலந்திடுவீர்.

கவிதை எப்படி என்று கஜனிடம் கேட்டேன். வாசிக்காமல் சொன்னான்.

வழமை போல விளங்க இல்ல . அத விடு.. கம்பவாரிதியோட ஒரே மேடைல நீயும் ஏறுவியா?
இல்ல மச்சி … நாம இன்னமும் இளையோராம்.. இப்பவே ஏற முடியாதாம்.
அட பாவி .. உனக்கு தானேடா தாடி கூட லைட்டா நரைச்சிட்டுது ..அத சொன்னீயா?
இல்லையாம்டா நாங்க ஸ்டில் யூத்து தானாம்
இன்னுமாடா நீயி யூத்து? மனிசி கூட நம்பாதேடா?
மூத்த கலைஞர்கள் இருக்கும் வரை நாமெல்லாம் ஸ்டாலின்கள் தான் மச்சி .. அவ்வ்வ்வ்

 


வா வா வா கண்ணா வா

maxresdefaultசிம்லாவில ஷூட்டிங். சூப்பர்ஸ்டார் அமலா டூயட். மெலடி என்று சிட்டுவேஷன் குடுத்தால் தல சதிராடும் என்பது உலகறிந்தது. ரத்தமாக இரண்டு சரணம், ராஜாவின் விருப்பத்துக்குரிய ராகம் ஹம்சத்வனி (பூ முடித்து போட்டு வைத்த வட்ட நிலா, மாலைகள் இடம் மாறுது மாறுது, எங்கு பிறந்தது? எல்லாம் ஒரே ஆக்கள் தான் பாஸ்). தல பின்னிப்பெடல் எடுத்து இருக்கும். இன்டர்லூட் எல்லாம் வயலின், பேஸ் கிட்டார் என்று சதிராடும் இசை, சரணம் வந்ததும் ஆளை அடிக்கும் மெலடிக்கு மாறும். “ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே” என்று சித்ரா சிணுங்கும் போது ஐயோடா சொல்லி காதலியின் அருகாமையை நாடி மனம் சிலிர்க்கும். அப்படி ஒரு பாடல்.

இந்த பாடலை எப்படி படமாக்கவேண்டும்? சும்மா புது வெள்ளை மழை போன்று எடுக்கவேண்டாமா? ஆனால் எஸ்பி முத்துராமன் ரஜனிக்கும் அமலாவுக்கும் உடற்பயிற்சி பழக்கியிருப்பார். அவ்வளவு மொக்கை. எடுத்த சீனை இவர் இளையராஜாவுக்கு கொண்டுவந்து போட்டு காட்டியிருக்கிறார். ராஜா சீனை பார்த்திட்டு எஸ்பி முத்துராமனின் செவிட்ட பொத்தி ஒரு அறை விடுகிறார்.

“என்னையா பாட்டு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறே? … முப்பது வயலின் போட்டு மூசிக் வாசிச்சா நீயி அவுங்களை விட்டு கிச்சு மூச்சு விளையாட விட்டிருக்கிறே… அந்த மாதிரி ஒரு பரதநாட்டிய கலைஞர்,  மொத்த உருவமே ஸ்டைலா நம்ம தல… பாட்டை பின்னி இருக்கவேண்டாமா… இதோ பாரு இன்னொரு சரணம் போட்டு தர்றேன்.. என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது .. பாட்டு அப்பிடி இருக்கோணும்.. போய் எடு என்றிருக்கிறார்”

ராஜா போட்டுக்கொடுத்த மூன்றாவது சரணம் தமிழிசையின் ஒரு மைல்ஸ்டோன் இசை. அந்த இன்டர்லூடில் கர்னாடக சங்கீதத்தை தல அப்படியே நுழைக்கும். மிருதங்கம் முழங்கும். இதை சவாலாக எடுத்து காட்சி அமைத்திருப்பார் எஸ்பி.

ஆலாப்புடன் பெண்கள் கோரஸ். இன்டர்லூட் ஆரம்பிக்கிறது. அப்படியே பனி மழையில் இருந்து கமராவை இறக்கினால், பனிமேடையில் கம்பளம் விரித்து அமலா பரதம் ஆடிக்கொண்டிருப்பார். நம்ம ஸ்டைல் மன்னன், சும்மா, விஷுக்கேன்று ஒரு ஷோலை உதறிப்போட்டுக்கொண்டு சுற்றுவருவார். மிருதங்கம் முழங்கிக்கொண்டிருக்கும். அப்படியே காட்சி மலைப்பாதைக்கு வர மனோ தொடங்குவார்.

r11031

காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்

அப்படியே தல ஸ்டைலாக நடந்து வர அமலா நடனமாடிக்கொண்டிருக்க நடையா நடனமா வென்றது என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்.

எனக்கொரு சிறுகதை நீ – இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் – தனிமையில்
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா வா கண்ணா வா!

இது பாட்டுடா!

 


அரோகரா

அண்ணே அரசியல் எழுதுங்க என்று ஒரு அல்லக்கை காலைலேயே மெசேஜ் அனுப்பினான். நான் அரசியல் எழுதினா மாண்புமிகு கால்நடை தீவன அமைச்சர் ஐங்கரநேசன் ஓட்டைச்சிரட்டைக்குள்ள தண்ணியை ஊத்தி விழுந்து சாகவேண்டி இருக்கும். அவ்வளவு இருக்கு அவரை பற்றி. வேண்டாம். அரசியல் வேண்டாம் என்று மனிசி குரல்வளையை பிடிக்குது. ஆனாலும் விதி எவன விட்டுது? சும்மா இருந்த என்னட்ட, “அண்ணே ஒரு கவிதை இருக்கு, தாக்குவமா?” என்று கேட்டு எமன் ஸ்கைப்பில கேதா மூலமா சாட் பண்ணியிருக்காப்ள. சூப்பர் கவிதை. இத போடாட்டி பேந்தென்ன வியாழமாற்றம்?

1391988_10151902924641037_646086721_nவேல் முருகன் துணை இருக்கு
அவர் துணைக்கு பொலிஸ் இருக்கு
அவர் கேட்கும் பொலிஸ் காணி
அதுக்கேனோ இழுத்தடிப்பு?

ஒற்றுமையே பலம் என்றார்
ஒன்றாய் எம்மை நிற்க சொன்னார்
தம்பிக்கொரு கதிரை வேண்டி
இப்போ தனித்தனியே பிரிந்து நின்றார்

அப்ப சொன்ன கதை மறந்து இப்ப என்ன சொல்லுறியள்
எட கொஞ்சம் பொறுங்கோவன் இது இராச தந்திரமாம்
கல்லறையின் அரசியல் காலம் கடந்திட்டுதாம்
இனி கற்றறிந்தோர் செய்யும் காய்நகர்த்தல் வித்தைகளாம்

-- கேதா

&&&&&&&&&&&&&&&&&&


நன்றிகள்
சைக்கிள் கடை படம் வேண்டுமென்றவுடன், வீட்ட ஓடிப்போய் உடனேயே படத்தை அனுப்பிய கஜனுக்கு.
விக்கி படத்தை வச்சு கவிதையை உடனே அனுப்பு என்று சொல்லி முடிக்கமுதலே அனுப்பிய கேதாவுக்கு.

Disclaimer : சாமிக்கதை “யாவும்” உண்மை அல்ல!

Contact form