சம்பவங்கள் நாளாந்தம், மணித்தியாலம், நிமிடம், கணம் என்று நடந்துகொண்டே இருக்கும். யாருக்கும் காத்திருக்காது. ஒருநாள் சிட்னி செல்லும் ஹியூம் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது கண் சொருக ஆரம்பிக்க, காரை அவசர லேன் பக்கம் நிறுத்தினேன். நண்பன் சிகரட் பற்றவைத்துக்கொண்டான். முகத்தை போத்தல் தண்ணீரால் அடித்து கழுவிவிட்டு, ஆயாசமாய் காரிலே சாய்ந்தபடி நெடுஞ்சாலையை அவதானித்துக்கொண்டிருந்தேன். வாகனங்கள், வேகமாக, மிகவேகமாக மணிக்கு 100, 110, 120, 140 கிலோமீட்டர்கள் என்று பறந்துகொண்டிருந்தன. சில வாகனங்களில் சிரிப்புகள், சிலதில் குழந்தைகள், ஒன்றில் வயோதிபர் ஒருவர் தொப்பியும் அணிந்தவாறு மனைவி சகிதம், இன்னொன்றில் நான்கு இளைஞர்கள் யன்னல் இறக்கி கூக்குரலிட்டுக்கொண்டு. இடையிடையே லாரிகள், கெண்டையினர்கள், பெருத்த உருவத்தில் ஓட்டுனர்கள். எல்லோருக்குமே பொதுவான ஒன்று இருந்தது. அது வேகம். அப்படி எங்கே போகிறார்கள். வேகக்கட்டுப்பாட்டை மீறி அப்படி ஓடுவதற்கு என்ன அவசரம்?
திடீரென்று ஒரு காருக்கு முன்னால் பாய்ந்து தடுத்து நிறுத்தி, ஓட்டுபவனின் குரல்வளையை பிடித்து “எங்கேடா போகிறாய்?” என்று கேட்கவேண்டும் போல இருந்தது. ஒவ்வொருத்தனுக்கு பின்னாலேயும் ஒரு வாழ்க்கை வரலாறு இருக்கிறது என்றான் நண்பன். அவன் அவசரம் அவனுக்கு. அவன் வரலாறு அவனுக்கு.
வரலாறு; கவனிக்கப்பட்டால் தான் அது வரலாறு. கவனிக்கபடாவிட்டால் அது வெறும் சம்பவம். சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கும். யார் கவனிக்கிறார்கள் என்ற கவலை சம்பவங்களுக்கு இல்லை. இந்தக்கணம் என் யாழ்ப்பாண வீட்டின் சாமியறை தட்டுக்கு கீழே இருக்கும் என் ஐந்தாம் ஆண்டு தமிழ் கொப்பியின் மேலாக ஒரு கரப்பான் பூச்சி ஊர்ந்துகொண்டு இருக்கலாம். "C.Jeyakumaran, Year 5A " க்கு மேலே உட்கார்ந்திருக்கலாம். ஆனால் அது வரலாறு இல்லை. வெறும் சம்பவம். ஏன் எதற்கு என்ற காரணங்கள் இல்லாமல் நடக்கும் நிகழ்வுகள். அல்லது எமக்கு தேவையில்லாத காரணங்கள்.
ஆனால் வரலாறு அப்படியில்லை. அதை யாராவது பார்க்கவேண்டும். “History has to be observed, otherwise its not history. Its just … well, things happening one after the other” என்று டெர்ரி பிரச்சடின் “Small Gods” நாவல் சொல்லும். என் பூட்டனார் பெயர் “கந்தர்”. அந்த அளவிலே அவர் வரலாறு ஆரம்பித்து முடிகிறது. அதற்கு மேல் அவர் வாழ்க்கை தலைமுறை தாண்டி கவனிக்கப்படவில்லை. அவர் எப்போது பிறந்தார்? என்ன படித்தார்? முதற்காதலி யார்? நயினாதீவில் அவரை ஏதாவது ஒரு பெட்டை நாய் துரத்தியதா? கள்ளுகுடித்தாரா? மனைவியை முதன்முதலில் முத்தமிடும்போது என்ன சொல்லியிருப்பார், அவருக்கு என் தாத்தாவை விட வேறு பிள்ளைகள் இருந்தார்களா? எப்போது இறந்தார்? … எதுவுமே வரலாற்றில் இல்லை.
“வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று பகடிக்கு சொன்னாலும் எவ்வளவு சத்தியமான வாக்கு அது. ஒருவர் இறக்கும்போது அந்தியேட்டிக்கு கல்வெட்டு வெளியிடுவதற்கு காரணமே அது தானே. சின்னவயதில் சிரித்திருக்கிறேன். சும்மா கல்வெட்டு வெளியிடுவதற்கு பதிலாக பொது அறிவு புத்தகமாக வெளியிடலாமே என்று நினைத்திருக்கிறேன். இப்போது சில்லிடுகிறது. என் பேரன், பூட்டன் காலத்தில் நான் சார்ந்த விஷயங்கள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டிருக்கும். நான் பத்து நிமிடங்களுக்கு முன்னர் குசினிக்குள் தண்ணீரி குடிக்க போனபோது கால் சறுக்கிவிட்டேன். சம்பவம். நாளைக்கே மறந்துவிடும். மூன்று வாரங்களுக்கு முன்னர் எழுதிய "இரண்டாம் உலகம்" சிறுகதைக்கு கிடந்து மல்லுக்கட்டியதை மனைவி இரண்டு மாதத்தில் மறந்துவிடுவாள். எனக்கு இரண்டு வருடங்களில் மறந்துவிடும். அந்த கதை தமிழில் எழுதப்பட்டதே மறக்கப்படும்.
ஆண்டுகளும் அப்படியே. 2013 முடிந்து 2014 ஆரம்பிக்கிறது. மற்றும்படி இது வெறும் இன்னொரு நாள், மணி, நிமிடம் தானே என்று நினைக்கலாம். உண்மை தான். ஆனால் அப்படி கடப்பதில் ஒரு ஆபத்து இருக்கிறது. வரலாறு ஆக மாறக்கூடிய சம்பவங்கள் வெறும் சம்பவங்களாகவே இருந்துவிடும் ஆபத்து. ஒவ்வொரு ஆண்டுக்கும் கல்வெட்டு தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொருவரும் கல்வெட்டு எழுதவேண்டிய தேவையும் இருக்கிறது. இல்லாவிடில் வரலாறு ஒபாமாவுக்கும் மகிந்தாவும் மைந்தன் சிவாவுக்கு மாத்திரம் உரித்தாகிவிடும் அபாயம்.
ஒரு அடர் காட்டுக்குள் மரம் முறிந்து விழும்போது சத்தம் கேட்குமா என்ன? யாருக்கு தெரியும்? நான் இருந்திருந்தால் எனக்கு கேட்டிருக்கும். அல்லது கேட்டவன் சொல்லியிருந்தாலும் தெரிந்திருக்கும். யாராவது இருந்தானா? இருந்தான். இருந்தாள். இருந்தார்கள். அவர்கள் எல்லாம் குட்டி குட்டி கடவுள்கள். பெரிதாக வரம் கொடுக்காத, சின்ன சின்ன செயல்களை கவனிக்கவென்று உருவான கடவுள்கள். ஒரு மரத்தின் சருகு, எங்கே எப்படி விழுந்தால் அது ஒரு ஆற்றில் தத்தளிக்கும் எறும்பு பிழைப்பதற்கு மிதவையாக மாறும் என்பதை தீர்மானிக்கும் கடவுள்கள். அந்த குட்டி கடவுளுக்கும் எறும்புக்கும் சருகுக்கும், அந்த சருகு விழுந்த சம்பவம் வரலாறு. எனக்கும் உங்களுக்கும், எத்தனையோ கோடி உயிரினங்களுக்கும் அதெல்லாம் கவனிக்கபடாத சம்பவம்.
2013ம் ஆண்டு ஒரு சருகு. அதை பற்றிப்பிடித்து பயணம் செய்த எறும்பு நான். சருகை என் கைக்கு எட்டவைத்த எண்ணற்ற இறைவர்கள். என் கூட இருக்கும் குட்டி குட்டி கடவுள்கள். இது எனக்கு வரலாறு. இதை வாசிக்கும், என்னோடு கூட வாழும் குட்டி கடவுள்களுக்கும் 2013 வரலாறு. மற்றவர்களுக்கு இது எங்கோ உதயனில் மூன்றாம் பக்கத்தில் முகம் தெரியாத தாத்தா ஒருவரின் அந்தியேட்டி தின கல்வெட்டு.
என் சக குட்டி கடவுள்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள்.
அரசியல்
இந்த ஆண்டின் முக்கிய அரசியல் ஹீரோக்களுக்கு மூன்று தேர்வுகள்.
ஸ்நோடௌன். இவர் வெளியிட்ட அமெரிக்க உளவு தகவல்கள் உலகையே ஒரு உலுக்கு உலுக்கியது. அவுஸ்திரேலியாவின் உதவி மூலம் இந்தோனேஷியா அதிபர், மனைவி, பிள்ளைகளின் தொலைபேசி உரையாடல்களை கூட அமெரிக்க உளவு பார்த்திருக்கிறது என்ற அதிர்ச்சி செய்தி, இருநாட்டு இராஜதந்திர உறவுகளை அசைத்துப்பார்த்தது. இவர் அமெரிக்காவை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ரஷ்யாவுக்கு தூபம் போட்டது சர்வைவல் சறுக்கல்.
அடுத்தவர் டேவிட் கமரூன். யாழ்ப்பாணம் வந்து, பிரச்சனை பற்றி சரியான தெளிவோடு உரைகளை ஆற்றி சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சனைக்கு ஒரு சின்ன வெளிச்சத்தை கொடுத்தார். உள்நாட்டில் டேவிட் மிலிபாண்ட் தலைமையிலான எதிர்கட்சியை சமாளிக்கத்தான் இந்த ஆக்ரோஷம் என்றாலும் நாம் எதற்கு நாடி பிடித்து பார்க்கவேண்டும்?
மூன்றாவது தேர்வு வேறு எவருமல்லர். கிளிநொச்சி வரை யாழ்தேவி கொண்டுவந்து, பணத்தை அள்ளி கொட்டி, அடங்காதவர்களை மிரட்டி உருட்டி, நாயை வெட்டி வாசலில் போட்டு, முழு ஆளணியோடு இலங்கை அரசாங்கம் வடமாகாண தேர்தலில் இறங்கினாலும், சிவனே என்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, பின்னர் தேர்தல் நாளன்று கூட்டமைப்புக்கு வாக்களித்து தங்கள் அரசியல் கடமையை சரியாக செய்த ஈழம் வாழ் தமிழ் மக்கள். இவர்களை நம் தலைவர்கள் எப்படி வழிநடத்துகிறார்கள் என்பது 2014 இல் தெரிந்துவிடும்.
2013 ன் மிகச்சிறந்த அரசியல் நாயகர் - ஈழம் வாழ் தமிழ் மக்கள்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
2013 Yarl IT Hub க்கு ஒரு முக்கிய ஆண்டு. பாடசாலை மாணவர் மத்தியிலே Yarl Geek Challenge நடத்தியதும், திறமைசாலி மாணவர்களை தம் பக்கம் திரும்ப வைத்ததும் முக்கிய முன்னேற்றங்கள். நாங்கள் வழிநடத்தாமலேயே அடுத்த கட்டத்தை கொண்டு செல்லும் திறமைசாலி மாணவர்கள் இப்போது இருக்கிறார்கள். இவர்களை இனி நாங்கள் நடத்தாமல் எட்ட நின்று கவனிக்கவேண்டும். வெறுமனே ப்ரொஜெக்ட், மீட்டிங் என்று செய்துகொள்ளாமல், ஒரு நல்ல புரஜெக்ட்டை புரோடக்ட் ஆக்கி மக்களை அடையும் வழியை யாழ் மாணவர்களுக்கு காட்டவேண்டும். பணம் பண்ணாமல் எத்தனை புரோஜெக்ட் செய்தாலும் நீண்டநாளைக்கு இந்த மாணவர்கள் தாக்குப்பிடிக்கமாட்டார்கள். இவர்களை சிறந்த வியாபாரிகளாக ஆக்கி, Yarl IT Hub இன் தேவையை இல்லாமல் ஆக்கும் நிலைமை யாழ்ப்பாணத்தில் தோன்றவேண்டும். அதற்கு ராமோஷன், பிருந்தாபன், உதயா போன்ற சிலிக்கன் வாலி சிங்கங்கள் இதில கொஞ்சம் கவனம் எடுக்கவேணும். மற்றவனுக்கு வேலைபார்த்து திருப்திப்படும் மனநிலை எங்கள் தலைமுறையோடு ஒழியட்டும்.
இந்த ஆண்டு எனக்கு முக்கியமான ஆண்டு. சின்னவயது பௌதீகவியல் ஆசை மீண்டும் துளிர்விட்டு அதற்கென செலவிட நிறைய நேரமும் கிடைத்ததால் ஓரளவுக்கு படிக்க கூடியதாக இருந்தது. விளைவு. கொஞ்சம் சார்புக்க்கோட்பாடு, குவாண்டம் மற்றும் கொஸ்மோ சார்ந்த விஷயங்களோடு மல்லுக்கட்டும் வாய்ப்பு. அலுவலகத்தில் இந்த விஷயத்தை அடிக்கடி விவாதிக்கும் பீட்டருக்கு மிக்க நன்றிகள். ஒரு நாள் மீட்டிங் ரூம் புக் பண்ணி, ஐன்ஸ்டீனின் நகரும் கோல்கள் பரிசோதனை பற்றி மணிக்கணக்காக விவாதித்தது என்னளவில் முக்கியமானது. இந்த அறிவு “கந்தசாமியும் கலக்சியும்” நாவல் எழுதவும் துணை போனது. "ஏண்டா பல்கலையில் பௌதீக விஞ்ஞானம் படிக்காமல் போனோம்" என்று ஏங்க வைத்த ஆண்டு இது.
விளையாட்டு
நம்ம தல பெடரர் தரைவரிசையில் பின்னுக்கு போனாலும் இன்னமும் விளையாடிக்கொண்டிருப்பது நிம்மதி. அவுஸ்திரேலியன் ஒபினில் பெடரருக்கும் முரேக்குமான ஆட்டத்தை பெடரேஷன் சதுக்கத்தில் சுகிந்தன் அண்ண, தவா மற்றும் கொரானா பியர் சகிதம் விசில் அடித்து பார்த்தது யோசித்தால் புன்னகைக்க வைக்கும்.
எழுதும்போது டிவியில் பிரிஸ்பேன் ATP இறுதியாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. மோதுபவர்கள் ஹெவிட்டும் நம்ம தல ரோஜரும். இரண்டாவது செட்டில், ஏஸ், ஏஸ், ஏஸ், ஏஸ் என்று தல ஒரு பொயிண்டை அனாயாசமாய் எடுத்தார். இறுதிவரை உயிரை கொடுத்து போராடி கிண்ணம் வெல்கிறார் ஹெவிட். இருவருக்குமே வயது முப்பதுகளில். டெனிசை பொறுத்தவரையில் கொமென்றி போக்ஸில் இருக்கும் வயது. ஆனால் இறுதியாட்டத்தில். சரக்கென்று தல அடிக்கும் பக்ஹாண்ட் சிலைஸ் ஷாட்டை பார்க்கும்போது ஒரு புத்துணர்ச்சி. எல்லாமே சாதித்தபின்னும் எது இவர்களை இயக்குகிறது? ஆர்வம் மாத்திரமே. இன்னமுமே ராக்கட்டில் படும் அந்த பந்தின் சத்தத்தில் லயிக்கும் ஆர்வம். பெடரர் எமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி. எவருடைய விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் தனக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யும் உத்வேகம். ஹெவிட்டும் அப்படியே. இவர்களை பார்க்க, ஒரு ஆண்டு முடிந்து ஒரு வயது எகிற, சாதிக்கவேண்டுமே என்கின்ற வெறி அதிகரிக்கிறது. எவர் எதிர்ப்பையும் கடந்து சென்று எமக்கு எது பிடிக்கிறதோ அதை செய்யவேண்டும்.
கிரிக்கட்டை பொறுத்தவரையில் இந்த வருடம் சாவு வீடு தான். சச்சினும் கலிசும் ஓய்வுபெற்று கிரிக்கட் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது கலங்கவைக்கும். இங்கே லோக்கலில், நம்ம கிரிக்கட் அணி கிட்டு ஞாபகார்த்த கிண்ணத்தில் ரன்னர்ஸ் அப் ஆக வந்தது. வெற்றிக்கு கொஞ்சம் உதவியதும் நமக்கெல்லாம் வரலாறு தான். அதே தொடரில், வைகுந்தன், சுகிந்தன் அண்ணா என்று கொஞ்சபேரை சேர்த்து கரப்பந்தாட்ட அணி அமைத்து விளையாடி மண் கவ்வினோம். வருடம் பூராக ஒவ்வொரு சனிக்கிழமையும் டெனிஸ் விளையாடியும் இன்னமும் ஒழுங்காக ஒரு போர் ஹாண்ட் ஸ்மாஷ் அடிக்கமுடியாமல் இருப்பது இந்த வருடத்தின் துன்பியல் சாதனை.
“பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்” என்று வைரமுத்து சொன்னது போல, ஓய்வுபெற்று இந்த ஆண்டின் ஹீரோவாகிறார் சச்சின்.
சினிமா/இசை
பார்த்த தமிழ்படங்கள் : கடல், விஸ்வரூபம், சூது கவ்வும், என்றென்றும் புன்னகை.
பார்த்த ஆங்கிலப்படங்கள் : Life Of Pi, The Internship, Jobs, Elysium, Before Midnight மற்றும் டிவியில் பார்த்த பல பழைய ஆங்கில படங்கள்.
சினிமா சார்ந்த அத்தனை விருதுகளும் Life Of Pi க்கே போகும். இப்படி ஒரு படம் இதற்கு முன்னர் நான் பார்க்கவும் இல்லை. இனியும் பார்ப்பேனா என்பதும் சந்தேகமே. ஒரு கல்லை நகர்த்திய படம் இது. இது பற்றி நிறையவே எழுதியாயிற்று.
பிடித்த இசை : ஏ ஆர் ரகுமான் (மரியான், Raanjhanaa)
பிடித்த பாடல் : Tum Tak (Raanjhanaa)
பிடித்த பாடகர் : விஜய் பிரகாஷ் (நேற்று அவள் இருந்தாள்)
பிடித்த பாடகி : ஸ்வேதா மோகன் (சின்னஞ்சிறுகிளியே)
புகைப்படங்கள்
இந்த வருடம் கஜன் மிகவும் போஃர்மில் இருந்த வருடம். அடிக்கடி படம் ஒன்றை அனுப்பி, மச்சி விவரணம் எழுதித்தா என்பான். அனேகமாக எதுவுமே எழுத தோன்றாது. அவ்வளவு விஷயத்தை அந்த படம் கவர் பண்ணியிருக்கும். கேதாவோடு இலையுதிர் காலத்தில் Bright போய் படம் எடுத்த அனுபவமும், ஒரு நாள் அதிகாலை மெல்பேர்ன் நகரம் முழுதும் ஹர்ஷலோடு அலைந்து திரிந்து படம் எடுத்த அனுபவங்களும் அலாதியானவை. மாலைதீவுகளிலும், பதுளையில் இருந்து கண்டிவரையான ரயில் பயணத்தின் போது கிளிக்கியவையும் இனிப்பவை. கேதா வீட்டில் நான்கைந்து பிளாஷுகளோடு நடந்த ஸ்டூடியோ ஷூட்டை எப்படி மறக்கமுடியும்?
அவ்வப்போது தனிமை கொல்லும்போது கமராவும் காருமே துணையாக இருந்ததை இப்போது மறப்பதும் அழகல்ல!
மிகவும் பிடித்த படம் – கஜன் (www.colorishi.com)

நான் கிளிக்கியதில் பிடித்தது.
வாசிப்பும் எழுத்தும்
சென்ற ஆண்டு புதுவருட சபதமாக “நிறைய வாசித்து கொஞ்சமே எழுதுவது” என்று சொல்லியிருந்தேன். அது ஓரளவுக்கு சாத்தியமாகியிருக்கிறது. வாசிப்பது கூட கூட எழுதுவது குறைந்து விட்டது. அதிலே சந்தோஷமே. இந்த வருடம் ஓரளவு கிடைத்த சமயமெல்லாம் வாசித்த புத்தகங்களை தருகிறேன். அநேகமானவை பயணங்களின் போது வாசித்தவையே. அந்த ரயில், விமான இருக்கைகளுக்கும் அவற்றில் யன்னல் திரைகள் காட்டிய கதை மாந்தர் காட்சிகளுக்கும் நன்றி.Frances Harrison உடனான சந்திப்பும், கம்பவாரிதி அனுப்பிய வாழ்த்து மடலும் எழுத்து கொண்டுவந்த நெகிழ்வு தருணங்கள்.
1. Still Counting The Dead – Frances Harrison
2. The mountains echoed – Khalid Hossainei
3. The Code Book – Simon Singh
4. Stephan Hawking – His Life And Work.
5. Albert Einstein – His Life And Universe
6. 1984 – George Orwell
7. Animal Farm – George Orwell
8. Freakonomics
9. Alice In Wonderland
10. The Immigrant – Manju Kapoor
11. Outliers – Gladwell
12. கம்பனைப்போல - ஸ்ரீ பிரஷாந்தன் (தொகுப்பு)
13. இருபதாம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் கவிதைகள் - ஸ்ரீ பிரஷாந்தன் (தொகுப்பு)
14. கம்பனின் உவமைத்திறன் - ஸ்ரீ பிரஷாந்தன் (தொகுப்பு)
15. கம்பன் என் காதலன் – சிவகுமார்
16. கம்பனின் அரசியல் கோட்பாடுகள் - அப்துல் ரகுமான்
17. மஹாகவியின் ஆறு காவியங்கள் – எம். ஏ. நுஃமான்
18. பூமியின் பாதி வயது - அ முத்துலிங்கம்
19. வானும் கனல் சொரியும் - செங்கை ஆழியான்
20. மீண்டும் வருவேன் - செங்கை ஆழியான்
21. ஆச்சி பயணம் போகிறாள் - செங்கை ஆழியான்
22. ஒரு காதலின் கதை - அராலியூர் ந. சுந்தரப்பிள்ளை
23. கிமு, கிபி – மதன்
24. கதாவிலாசம் – எஸ்.ரா
25. புதுமைப்பித்தன் சிறுகதைகள் (Android Application)
26. 401 காதல் கவிதைகள் – சுஜாதா
27. திசை கண்டேன் வான் கண்டேன் – சுஜாதா
28. விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா
29. தண்ணீர் – அசோகமித்திரன்
பிடித்த நாவல் : 1984 – George Orwell
பிடித்த நூல் : Still Counting The Dead – Frances Harrison
பிடித்த சிறுகதை : செல்லம்மாள் – புதுமைப்பித்தன்
பிடித்த இணைய படைப்பு : தூக்குத்தண்டனை (சக்திவேல்)
பிடித்த கவிதை : கம்பன் விழாவிலே “அகலிகை கல்” தலைப்பில் கேதா சொன்ன அரங்க கவிதை. மஹாகவியின் ஏளனம், பெண்ணுக்குரிய ஆதங்கம், காதல், “நான் என்ன பெண் இல்லையா?” வகை அகலிகை ஏக்கம் கேதா குரலில் அட போட வைத்தது. அட போட்டார்கள்.
பிடித்த கொல்லைப்புறத்து காதலி : குட்டியன்
எழுதியதில் பிடித்த சிறுகதை : எளிய நாய்
எழுதியதில் பிடித்த கவிதை : உயிரிடை பொதிந்த ஊரே
எழுதியதில் முகம் சுழிக்க வைத்த பதிவு : டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!
எழுதியதில் பிடித்த குட்டி கவிதை:
யாருமே அற்ற தருணங்களில்
பேசிப்பேசியே கொல்கிறது
மௌனம்.
&&&&&&&&&&&
பிடிச்சதும் பிடிக்காததும் 2012
பிடிச்சதும் பிடிக்காததும் 2011
பிடிச்சதும் பிடிக்காததும் 2010
பிடிச்சதும் பிடிக்காததும் 2009
பிடிச்சதும் பிடிக்காததும் 2008