வியாழமாற்றம் 20-02-2013 : மகாபாரதம்

Feb 20, 2014

 

PACK Mahabharata Vol-35 c1[3]

இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தில் நின்ற காலம். பகல் பத்து மணிக்கு தான் மின்சாரம் வரும். பதினோரு மணிக்கே பறந்திடும். இடைப்பட்ட அந்த ஒரு மணித்தியாலத்தில் தான் மோட்டர் போட்டு தண்ணி டாங்கை நிரப்பவேண்டும். உடுப்பும் அயர்ன் பண்ண வேண்டும். இரண்டையுமே ஒன்றாக செய்ய முடியாது. லோட் எகிறிவிடும். அயர்ன் பண்ணினால் மோட்டர் நின்றுவிடும். மோட்டர் போட்டால் அயர்ன்பொக்ஸின் பல்ப் எரிவதே கண்ணுக்கு தெரியாது. லைட்டை போட்டால் மங்கலாக எரியும்.  தண்ணி அடிச்சவனின் கண்ணைப் போல. “ஆளு பயங்கர டிம்” என்ற வசனம் அங்கிருந்து தான் வந்திருக்கவேண்டும்.

இதுவே ஞாயிற்றுக்கிழமை என்றால் பெருஞ்சிக்கல். அதே பத்து தொடக்கம் பதினொரு மணிக்கு தான் டிவியில் மகாபாரதம் சீரியல் இருக்கும். இரண்டு போர்ப்படைகள் மோத, சங்கூதப்பட்டு, எழுத்தோட்டம் தொடங்கும். கூடவே பாட்டு. “அக்ரஸ்ரீ மகாபாரத கதா! கதாகே புருஷாத்துகி” என்ற பாட்டு. என் தேசியகீதம். செம மெலடி. அப்போதெல்லாம் அதை நான் பாடாத நாள் கிடையாது. ஒவ்வொரு முறையும் என் லுமாலா சைக்கிளில் நானே கிருஷ்ணன், நானே அர்ஜூனன். முதுகிலிருந்து ஒரு அம்பை இழுத்தெடுத்து, வில்லேற்றி, அப்படியே நெற்றியில் வைத்து பிரம்மாஸ்திர மந்திரத்தை ஓதிவிட்டு எய்தால், சும்மா ஸ்கட் ஏவுகணை வானத்தில் பறந்து, மல்டிபரல் மாதிரி தெறித்து கீழே கொட்டும்.

அந்த சீரியலின் எழுத்தோட்டம் பார்க்க வீட்டில் எப்போதுமே தடை. அதற்கு பிறகு முப்பது செக்கன் முன் கதை சுருக்கம். அதற்கும் தடை. பின்னர் இன்டர்வலுக்கும் டிவி போடமாட்டோம். இந்த டைமில் தான் டாங் நிரப்புவோம். அக்காமார் அயர்ன் பொக்ஸை ஹீட் பண்ணுவார்கள். எனக்கு இருப்பு கொள்ளாது. எங்கள் ஒழுங்கை முழுக்க வீட்டு ஹோலில் குந்தியிருக்கும். பின்னே? 21 இஞ்சி கலர் டிவியில் பார்ப்பதென்றால் சும்மாவா? டிவியின் சானல் டியூன் பண்ணுவதற்கு என்று ஒரு பிளாஸ்டிக் ஸ்க்ரூ டிரைவர் இருக்கும். அண்டனா செட் பண்ணவென்று ஒருவர் அங்கேயே நிற்பார். அசைந்தால் கிளியர் போய்விடும். அண்ணர் யன்னலுக்குள்ளால் எட்டி டிவி பார்ப்பார். 

தூர்தர்ஷனில் ஞாயிறுகளில் வெளிவந்த மகாபாரதம் ஒரு எபிக். அதன் கிரபிக்ஸ் எல்லாம் ஒரு கலக்கு கலக்கும். பாத்திரங்கள் ஒரு தேஜசோடு உலாவும். கதையிலும் ஒரு வேகம். மகாபாரதம் இல்லையா. அப்போதைய இளைஞிகளுக்கு அந்த கிருஷ்ணரை பிடிக்கும். இளைஞர்களுக்கு கர்ணனை பிடிக்கும்.

எனக்கு எப்போதுமே திரௌபதியைத்தான் பிடிக்கும்.


பூந்தளிர் அமர் சித்திரக்கதைகள்

269875_10150242787586286_2251202_n[3]ஹண்டி நூலகம். பழைய கட்டடம். சுண்ணாம்பும் மண்ணும் சேர்த்து கட்டப்பட்டது. சுவரைத்தொட்டால் தோல் உரிந்துவரும்.பொரு பொரு என்று மண் கொட்டும். இரண்டு அறைகள் ஏற்கனவே தூர்ந்துவிட்டது. ஹண்டி நூலகத்துக்குள் நுழைந்தாலே பத்தாம் நூற்றாண்டுக்குள் போகும் உணர்வு வரும். கூடவே ஹெமிங்க்வே, கம்பர், ஷேக்ஸ்பியர், லோனி, மயில்வாகனம் மாஸ்டரின் பொது அறிவுப்பூங்கா புத்தகத்தில் இருக்கும் அத்தனை பழைய அதிபர்கள், என வாசிப்பின் மூலம் தெரிந்தவர்கள் எல்லோரும் அங்கே தான் புத்தக இடுக்குகளுக்குள் ஒளிந்திருக்கிறார்கள் என்ற ஒரு பிரேமை. அதன் உயர்ந்த ஐரோப்பிய வடிவத்தின் யன்னல்களினூடாக ஆங்கிலேயர் காலத்து பாதிரியார்கள் எல்லோரும் திரிவார்கள். பழைய அதிபர் ஹண்டி ஒரு மீசையுடன் சுவரில் இருப்பார். நூலகருக்கு கால் கொஞ்சம் ஊனம். தட்டித்தடுமாறி நடப்பார்.கூடவே மணி அடிக்கிற துரையப்பா அண்ணேயும் அங்கேயே திரிவார். டயானா இறந்த சமயம், சார்ள்ஸ் டயானாவின் திருமண ஆல்பம் நூலகத்தில் சக்கைபோடு போட்டது. நூலகத்தில் இருந்த ஒரே ஒரு லிப்டு லிப் கிஸ் உள்ள புத்தகம் அது தான். அதனால் ஆளுக்கு ஐந்து நிமிஷம் தான் பார்க்க கிடைக்கும். அவ்வளவு கிராக்கி.

அப்போது நூலக வாரம் நடக்கும். போட்டி ஒன்று வைப்பார்கள். “Word Power Contest”. கடினமான இருபது சொற்களுக்கான அர்த்தத்தை அகராதி துணையோடு கண்டுபிடிக்கவேண்டும். யார் குறைந்த நேரத்தில் அதிக சொற்களை கண்டறிகிறார்களோ அவர் வெற்றியாளர். அந்த பரிசு கிடைத்தால் ஒரு திருப்தி. இன்னமும் அந்த சேர்டிபிகட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.

சென்ஜோன்ஸ் கல்லூரி பெரிதாக ஒன்றும் என்னை கட்டி அணைத்து கொண்டாடவில்லை. கவனிக்கவேயில்லை என்றே கூறலாம். ஆயிரத்து இருநூறு மாணவர்களில் அதிகம் கலர்ஸ் காட்டாத மாணவனை கண்டுகொள்ளாதது ஆச்சரியம் அல்ல. ஆனால் ஹண்டி நூலகம் அப்படியல்ல. அது என்னை கல்லூரிக்குள் நுழைந்து சில மாதங்களிலேயே கண்டுகொண்டு அரவணைத்தது. படித்த ஒன்பது ஆண்டுகளும் கூடவே இருந்தது.    துணைக்கு புத்தகங்களையும் அமைதியையும் நண்பர்களாக தந்தது. 

அப்படிக்கிடைத்த மிக நெருங்கிய நண்பன் தான் “பூந்தளிர் அமர் சித்திரக்கதைகள்”.

ஆண்டு ஆறில், யாரோ வாத்தியார்; வரவில்லை, லைப்ரரிக்கு போவோம் என்று கூட்டிப் போனார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்ந்த புதுசு. மற்றைய மாணவர்களை போல குசு குசு என்று கதைக்கவோ, பேனை அடிக்கவோ தைரியம் இல்லை. எதையாவது வாசிப்போம் என்று அலுமாரிகளை தடவினபோது மாட்டியது தான் இந்த மகாபாரத தொடர்கதைகள். காமிக்ஸ் வடிவில் மகாபாரதம். ஒன்றை எடுத்துக்கொண்டு வாசிக்க அமர்ந்தேன். அவ்வளவு தான். பெல் அடித்தது தெரியவில்லை. வேகம் என்றால் அப்படி ஒரு வேகம். வைக்கமுடியாது.  இரவில் கனவில் எல்லாம் அந்த சித்திரங்கள் வந்து ஏதோ செய்யும்.

சித்திரக்கதைகளை வீட்டுக்கு கொண்டு போய் வாசிக்க இரவல் தரமாட்டார்கள். எக்ஸ்டரா கிளாஸ் என்று அம்மாவுக்கு பொய் சொல்லிவிட்டு, பாடசாலை முடிந்தபின்னும் “எப்படியாவது வாசித்து முடிக்கவேண்டும்” என்ற உத்வேகத்தில் நூலகத்திலேயே கொஞ்ச நாள் தவம் கிடந்தேன். வாசித்துக் கொண்டிருக்கும்போது நடுப்பக்கம் கிழிக்கப்பட்டிருந்தாலோ, இல்லை கடைசி ஒற்றை காணாமல் போயிருந்தாலோ கடும் கோபம் வரும். யாராவது அதில் கிறுக்கியிருந்தால் எரிச்சல் வரும். பென்சில் என்றால் அழித்துமிருக்கிறேன். வாசித்து முடித்தபின்னர் மீண்டும் பிடித்த பகுதிகளுக்கு திரும்புவேன். அரக்குமாளிகை மிகவும் பிடிக்கும். யுத்தக்காலத்தில் திருடராஷ்டிரனுக்கு லைவ் டெலிகாஸ்ட் கிடைக்கும். பதினெட்டு நாட்களும் அலாதியானவை. அபிமன்யு, கர்ணன் மீதெல்லாம் அலாதிப்பிரியம். கர்ணன் மட்டும் இங்காலப்பக்கம் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையை செய்யாமல் எந்த சிறுவனும் ஜீன்ஸ் அணிந்திருக்கமாட்டான். இப்போது அதை யோசிக்க, அட சிறுகதை எழுதலாமே என்று தோன்றுகிறது. அதில் பிடிக்காதபகுதி, அந்த துகிலுரியல் சம்பவம் தான். உவாக்.

PACK Mahabharata Vol-7 c1[3]

அசுவமேய யாகம், அஸ்தினாபுரம், அஞ்சாதவாசம், அபிமன்யு திருமணம் கடந்து குருசேத்திர யுத்தம் முடிந்து தருமன் சொர்க்கம் போகும் வரையிலும் சித்திரக்கதைகள் தொடராக வந்தது. மொத்தமாக  அறுபது இதழ்கள். சின்னவயதில் அர்ஜூனன் இப்படி இருப்பான். தருமன் இப்படி இருப்பான். பீமன் இப்படி இருப்பான் என்று எப்படி கற்பனை செய்திருப்பீர்களோ அப்படியே எல்லோரும் அந்த புத்தகத்தில் இருப்பார்கள் . யுத்தத்தின் போது அர்த்தரதன், அதிரதன், மகாரதன் என்று வீரர்களை தரம் பிரிப்பார்கள். பாண்டவர் பக்கம் மகாரதனாக அர்ஜூனன். தேரோட்டி மகனாததால் கர்ணனை பீஷ்மர் அர்த்தரதன் என்று அழைக்கிறார். கோபம் கொண்ட கர்ணன், பீஷ்மர் வீழ்ந்துபட்ட பின்னரேயே தான் போர்க்களம் எய்துவேன் என்கிறான். படத்தோடு காட்சிகள் ஞாபகம் இன்னமும் இருக்கின்றன. போர் முடிந்தும் கூட அஸ்வத்தாமனின் அக்கினாஸ்திரத்தில் எல்லோரும் இறந்துபட்டு போயிருக்கக் கூடும். அப்போதும் கண்ணனே பாண்டவரை காப்பாற்றுகிறான்.

இதெல்லாம் முடிந்து, கடைசியில் பாண்டவர் எல்லோரும் கைலாயம் போகிறார்கள். கூடவே ஒரு நாயும் போகும். போகும் வழியில் அவர்கள் செய்த பாவத்துக்கமைய ஒவ்வொருவராய் இறக்கிறார்கள். திரௌபதி செய்த பாவம், ஐந்து கணவர்களை கொண்டிருந்தாலும் அர்ஜூனன் மீது அதிக காதல் கொண்டிருந்தது. அர்ஜூனனுக்கு தன் வில்வித்தைக்கர்வம். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு தவறு இழைக்கிறார்கள். இறுதியில் தர்மன் எஞ்சுகிறான். அவன் செய்த நற்செயல்களுக்கு அவன் கால்கள் தரையிலேயே படக்கூடாது. ஆனாலும் தரை தட்டுகிறது. ஏன் என்றால் அவனும் ஒரு பாவம் செய்திருக்கிறான். “அஸ்வத்தாமன் என்ற யானை இறந்தது” என்று சொல்லி துரோணரை ஏய்த்தான் அல்லவா.

பரீகஷித்து படலத்தோடு தொடர் முடிவடையும். எல்லாமே அந்த சித்திரக்கதைகளில் படித்தது. இன்றைக்கும் காட்சிகளோடு ஞாபகம் இருக்கிறது.  விளம்பரம் ஒன்று அஸ்தினாபுரத்து பத்திரிகை போலவே அச்சடிக்கப்பட்டது. இங்கே பாருங்கள். கிரியேட்டிவிட்டி அட் இட்ஸ் பெஸ்ட்.

Maha025

ஹண்டி நூலகத்தில் இருந்த சித்திரக்கதைகளுக்கு  என்ன ஆனது என்று தெரியவில்லை. பிற்காலத்தில் அந்த பழைய நூலகத்தை இடித்துவிட்டார்கள். அதோடு சேர்ந்து இன்னும் சில கட்டடங்களை அழித்து புதிய கதீடறல் வடிவில் கட்டடங்கள் எழுந்திருக்கின்றன. உள்ளே போனால் புதுப்பெயின்ட் வாசம் வரும். ஆனால் ஹெமிங்க்வேயும் ஹண்டியும் முன்னர் போல திரியமாட்டார்கள். உயிர் போன உடலுக்கு செய்த போஸ்ட்மோர்டம் போல அந்த புது நூலகம் இருக்கும். சென்ஜோன்சின் ஜீவன் அந்த பழைமையும், காவிச்சுண்ணாம்பு சுவர்களில் படிந்திருக்கும் பாடசாலையின் கலாச்சாரமும் தான். அந்த பழைய கட்டடங்களில் தலைமுறை தலைமுறையாக பெருமையுடன் இருந்து படித்துப்போன திறமைசாலி மாணவர்களின் வெம்மை இருக்கிறது. ஆசி இருக்கிறது. இருக்கும்போது அதை உணரலாம். இன்றைக்கு அந்த பழைய கட்டடங்கள் இல்லை. கலாச்சாரம் கிலோ என்ன விலை? என்கிறார்கள். திறமைசாலி மாணவர்கள் சென்ஜோன்சில் இருக்கிறார்களா? என்றால் சிரிக்கிறார்கள். வெளிநாடுகளில் நூற்றாண்டு கட்டடங்களை இடிக்க விடமாட்டார்கள். நாங்கள் பழுதாகிவிட்டது என்று நொறுக்கிவிடுவோம். நவீனத்தை கொண்டாடும்போது புராதனத்தையும் பேணுவது பற்றி ஜப்பானியர்களிடம் நாங்கள் நிறைய படிக்கவேண்டும்.

அந்த சித்திரக்கதைகள் யாரிடமாவது இருக்கிறதா? …… ப்ளீஸ்.


கம்பவாரிதியின் மகாபாரதம்

94ம் ஆண்டு கம்பவாரிதியின் மகாபாரத சொற்பொழிவு. மேஜர் கணேஷ் வீதியில் இருக்கும் சிவன் கோயிலில் நடந்தது. அதே சிவன் அம்மன் சோடி ஆலயங்களின் சிவன் கோயில் தான். தொடர்ந்து நாற்பத்தைந்து நாட்களுக்கு பிரசங்கம். அது முதலில் முப்பது நாட்களாக இருந்தது. பிறகு அதன் சுவாரசியத்தையும், ரெஸ்போன்சையும் பார்த்து நாற்பத்தைந்து நாட்களாக்கி விட்டனர்.  பிரசங்கத்தின் போது காண்டவ வனம் எரிப்பு பற்றியதை சொல்லாமல் தாண்டிப்போய்விட, அன்றிரவு அவர் வீடு திரும்பும்போது காரை மறித்து இளைஞர்கள் “எப்பிடி காண்டவ வனத்தை மிஸ் பண்ணலாம்?” என்று கேட்டிருக்கிறார்கள். அடுத்தநாள் கம்பவாரிதி முழுமையாக ஒரு மணித்தியாலமும் காண்டவவனம் பற்றியே பேசினார். அதிலே கூட தப்பிவரும் நரி, முயல் பற்றி முஸ்பாத்தியும் விட்டார். தொடர் சொற்பொழிவு முடிந்து பரீட்சை எல்லாம் வைத்தார்கள். பரிசும் கிடைத்தது. நான்கு புத்தகங்கள். 

download

யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த அரிதான மகாபாரத பிரசங்கம். என்னோடு அதே கூட்டத்தில் இருந்தவர்கள் யாரேனும் அனுபவத்தை பகிரலாம்.


யார் கொடையாளி?

மகாபாரதத்தில் துணைக்கதைகளுக்கு பஞ்சமில்லை. கர்ணபரம்பரைக்கதைகள் என்று சொல்வோமே அது. தலைமுறை தலைமுறையாக பல கதைகளை மகாபாரத பாத்திரங்கள் கொண்டு எழுதிவிட்டார்கள். அதனாலே ஒட்டுமொத்தமாக இந்த கதைகளை சேர்க்கும்போது பாத்திரங்களின் வயது, உறவு, காலம் எல்லாம் குளறுபடியாகும். அவைகளை ஒதுக்கிவிட்டே காப்பியத்தை அணுகவேண்டும். குற்றம் பார்க்கின் எந்த படைப்புமே ஈடேறாது.

மகாபாரத துணைக்கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை கதைமலர் சஞ்சிகையில் வெளிவந்தது. 

“அதென்ன கர்ணனை மாத்திரம் கொடையாளிகள் என்கிறார்கள்?”

ஒருநாள் அர்ஜூனனுக்கு கடுங்கோபம். “நானும் கொடையாளி தானே” என்கிறான். கண்ணன் சிரிக்கிறான். “சோதித்து பார்க்கலாமா?” என்று கண்ணன் கேட்க அர்ஜூனனும் சவாலுக்கு தயாராகிறான்.

Picture5

தங்கத்தாலும் வெள்ளியாலுமான இரண்டு பெரிய மலைகள் கண்ணனால் படைக்கப்படுகின்றன.  அந்தி சாய்வதற்குள் அவற்றை கொடையளித்து முடிக்கவேண்டும். இது தான் நிபந்தனை. அர்ஜூனனுக்கு ஒரே டென்ஷன். ஊர் முழுக்க பறை அடிக்கிறான். குடியானவர்கள் வரிசையில் வந்து நிற்கிறார்கள். எல்லோருக்கும் மலையை குடைந்து குடைந்து தங்கத்தையும் வெள்ளியையும் பாளம் பாளமாக கொடுக்கிறான். அந்தி சாய்கிறது. மலையின் அரைப்பகுதி கூட முடிந்தபாடில்லை. ஊர் முழுக்க குடுத்தாயிற்று. கொடுப்பதற்கு யாருமே இல்லை. அர்ஜூனன் தலைகுனிந்து நிற்கிறான்.

இன்னமும் அரைநாழிகையில் அந்தி சாய்ந்துவிடும். அப்போது கண்ணன் கர்ணனை அழைக்கிறான். “தானம் கொடு” என்கிறான். கர்ணனோ ஒன்றையும் யோசிக்கவில்லை. அந்த வழியால் வந்த இரண்டு வழிப்போக்கர்களிடமும் ஆளுக்கு ஒன்றாக இரண்டு மலைகளையுமே கொடுத்துவிடுகிறான்.

இந்தக்கதை சொல்லும் நீதி அலாதியானது. ஈய்தல் என்பது பண்பு. அது புத்தி கொண்டு செய்வதல்ல. மனசு கொண்டு செய்வது. அர்ஜூனன் புத்திகொண்டு செய்தான். கர்ணன் மனசு கொண்டு செய்தான். அதனாலே தான் அவன் தானத்தில் சிறந்தவன்.

சின்னவயதில் படித்த இந்த கதை மனதைவிட்டு அகலவில்லை. நல்ல செயல்களை எப்போதுமே தெரிந்து செய்பவன் நான். இது நல்லது, இது கெட்டது என்ற புத்தி ஓரளவுக்கு இருப்பதால் கெட்டதை தவிர்த்து நல்லதை செய்கிறோம். அதனாலேயே நான் நல்லவனா என்றால் ம்ஹூம். மனதளவில் நல்லவனாக இருக்கவேண்டும். புத்தி அதை சொல்லக்கூடாது எங்கிறது இந்த நீதி. மைக்கல் ஜாக்ஸனிடம் “நீங்கள் ஆடும்போது என்ன மாதிரி யோசித்துக்கொண்டு ஆடுவீர்கள்?” என்று ஒரு செய்தியாளர் கேட்க மைக்கல் சொன்ன பதில்.

“You don’t think when dance, you just feel it” 


உள்ளத்திலே நல்ல உள்ளம்

தமிழ் திரைப்படங்களில் மகாபாரத கதை என்றால் அதில் கர்ணன் தான் ஹீரோ. துரியோதனன் கர்ணன் நட்பு வட தமிழர்களுக்கு அலாதியானது. வில்லன் மீதோ அல்லது எவன் பக்கம் கொஞ்சம் தாழ்ந்திருக்கிறதோ அவன் மீதோ ஒரு கழிவிரக்கம் காண்பிப்பதும் எமது குணம். சைவர்கள் அதிகமாதலால் கிருஷ்ணன் வடஇந்தியர்களின் அளவுக்கு எமக்கு முக்கியம் இல்லை. நாங்கள் கிருஷ்ணனை கேள்வி கேட்போம். கள்ளன் என்போம். துரியோதனன் மீது ஒருவித பற்றும் இருக்கும். துரியோதனன் மனைவிக்கு தனிப்பாடலே கொடுத்த திரையுலகம் இது. மன்னவன் தன்னை மறந்து நாட்டின்மீதே பற்றில் இருக்கிறான் என்று பொய்க்கோபம் கொள்ளும் பானுமதியின் பாடல். கண்ணதாசன் என்று நினைக்கிறேன். வரிகள் கம்பனுக்கு நிகராக இருக்கும்.

imagesஅரண்மனை அறிவான்
அரியணை அறிவான்
அந்தப் புரமொன்று
இருப்பதை அறியான்
வருகின்ற வழக்கை
தீர்த்து முடிப்பான்
மனைவியின் வழக்கை
மனதிலும் நினையான்.

அந்த நட்பு தளபதியிலும் தொடர்ந்தது. இங்கேயும் கர்ணன் தான் சூப்பர் ஸ்டார். எதையுமே யோசியாமல் தெரிந்த பெண்ணின் வளையலை வாங்கி ஏழைக்கு கொடுக்கும் பண்பு கொண்டவன். சூரியனையும், எதையோ தொலைத்த ஏக்கத்தையும் கூடவே சுமந்து திரிபவன். பிடித்த பெண்ணை தம்பிக்கு தாரை வார்த்தவன். செய்நன்றியறிதலில் உச்சம் கண்டவன். இந்த இரண்டு படங்களிலுமே துரியோதனன் பாத்திரத்தில் ஒரு மதிப்பு வரும்படி படைத்திருப்பார்கள். அசோகன்… மம்முட்டி. இருவருமே.

 

“உள்ளத்திலே நல்ல உள்ளம் உறங்காது” பாடலையும் எம்மையும் பிரிக்கவே முடியாது. அந்த காட்சியையும் மறக்கமுடியாது. அது விட்டுச்சென்ற தழும்பும் அழியாதது. அந்த ராகத்திலே ஒரு ஆழ்மன சோகம் இழையோடும். அதை சந்தோஷ மெட்டாக மாற்றும்போதும் சோகம் சொட்டும். “நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது பெண்ணே” என்ற இளையராஜா பாட்டு. அதே இராகம் என்றே நினைக்கிறேன். காதல் பாட்டு.  அனாலும் மெல்லிய சோகம் ஒன்று அதிலே இருக்கும். அதே ராகத்தில் வந்த குத்துப்பாட்டில் கூட சோகம் தான். “சின்ன ராசாவே சித்தரும்பு உன்னை கடிக்குதா … ” கூட ஒரு வித மென் மெட்டு தான். தெக்காலத்தான் மேயும் காத்து. தென்னமர கீத்தை பாத்து! முத்துவை முதலாளி வீட்டைவிட்டு கலைத்தபோது ரகுமான் போட்ட மெட்டும் இதே தான். “வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் நாங்கள் போவதெங்கு?”.

அப்படி வாழ்வை தேடி திரும்பிவந்த கிட்டுவும் சக போராளிகளும் கொல்லப்பட்டபோது, அவர்கள் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட “தளராத துணிவோடு” பாடல்கூட அதே ராகம் தான். அந்நாளில் வயலின் ஜெயராமன் சென்ஜோன்ஸில் நிகழ்ச்சி ஒன்றில் வாசித்தபோது எனக்கு “உள்ளத்திலே நல்ல உள்ளம்” தான் ஞாபகம் வந்தது. அர்த்தம் கூட.  இப்படிப்பட்ட மெட்டுகளோடு ஈழத்திலே பாடல்கள் வந்திருக்கிறது என்பதை புதிய ஈழத்து இசையமைப்பாளர்கள் ஞாபகம் கொள்ளவேண்டும். சுயம் உள்ள இசைகள் இவை. 

 


தமிழில் மகாபாரதம்

மகாபாரதம் ஆழமான சிக்கலான கதைக்களம் கொண்டது. இராமாயணம் கூட அப்படியல்ல. இராமாயணத்தை கம்பர் தவிர வேறு எவர் எழுதியிருந்தாலும் ஜில்லா வீரம் நிலைமை தான். கம்பரின் அளப்பரிய கவித்திறமையால் தான் இராமனும் சீதையும் தமிழில் விழா காண்கின்றனர். ஆனால் மகாபாரதம் அப்படியல்ல. அதை அவிழ்க்க அவிழ்க்க கிடைக்கின்ற பரவசம் ஆண் பெண் உறவுக்கு ஒப்பானது. பதட்டம், ஏக்கம், தாபம், வியப்பு, பரவசம் என்று எல்லா நிலைகளையும் கொண்டது. இங்கே கதை மாந்தர்கள் பூரணமானவர்கள் இல்லை. ஏன் கடவுள் கூட நேர்மையாளன் கிடையாது. என் அக்கா சொல்வது போல, ராஜநீதி என்பதே அரியணை ஏறுவதையும் அதை தக்கவைத்து கொள்வதையும் அடிப்படையாக கொண்டது. அதற்கான போட்டி தான் கதை. அதனாலேயே மகாபாரதம் சுவாரசியம். காலாவதியான மனுசாஸ்திரங்கள் இருந்தாலும் அதை சொல்லும்கதையின் சுவாரசியம் காலாவதியாகவில்லை.

அப்படிப்பட்ட களத்தை தமிழில் எப்படி எடுத்து கலக்கியிருக்கலாம்? ம்ஹூம். எழுதப்படவேயில்லை.  வில்லிபுத்தூரர் வெறும் மொக்கை தான் போட்டிருக்கிறார். கம்பரின் மிதிலைக்காட்சி எங்கே. வில்லிபாரதத்தின் சுயம்வரம் எங்கே. கொஞ்சம் வாசித்தேன். கதையை பாட்டாக கடகடவென்று சொன்னால் காப்பியமாகிடுமா? வில்லிபாரதம் ஒரு இலுப்பைப்பூ.

எங்கள் வீட்டில் ஒரு மகாபாரத சுருக்கம் இருந்தது. முன்னூறு பக்கங்கள் இருக்கலாம். காய்ச்சல், அம்மாள் வருத்தம் வந்து படுக்கையிலேயே கிடக்கும்போது மீண்டும் மீண்டும் வாசித்து பாடமாக்கிய புத்தகம். யார் எழுதியது என்று தெரியவில்லை. அதைவிட உரைநடையில் வேறு மகாபாரதம் வாசித்ததாக ஞாபகம் இல்லை. சித்திரக்கதைகள் கூட மொழிபெயர்ப்பு தான். சங்ககாலத்தில் பலர் முயன்றிருக்கிறார்கள். ஆனால் காலத்தை வென்று அவை நிலைக்கவில்லை. குறுந்தொகையில் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றே ஒருவர் இருந்திருக்கிறார். ஆனால் அவர் எழுதிய பாரதப் பாடல்கள் எதுவுமே சிக்கவில்லை. கடவுள் வாழ்த்து மட்டும்  மாட்டியிருக்கிறது. அந்தப்பாட்டு “முருகன் காத்தருள உலகம் பத்திரமாக இருக்கிறது” என்பதை நீட்டி முழக்கி புரியாத பழந்தமிழில் சொல்லுகிறார்.

Capture

தமிழுக்கும் மகாபாரதத்துக்கும் ஆகாதோ என்னவோ. இன்றைக்கும் கூட மகாபாரதம் புரியாத மொழியிலேயே எழுதப்படுகிறது. ஜெயமோகனின் வெண்முரசு வாசிக்கும்போது வருகின்ற ஆயாசம் இது.

“புறத்தை கட்டுப்படுத்தியவன் அதன் அகப்பிம்பமான அகத்தையும் கட்டுப்படுத்தியவனாவான். இருபுடை வல்லமைகொண்ட அவனையே ஸவ்யசாச்சி என்று தனுர்வேதம் போற்றுகிறது” என்றார் அக்னிவேசர். “ஒருகையால் உள்ளத்தையும் மறுகையால் உடலையும் கையாள்பவன் அவன். ஒருமுனையில் அம்பும் மறுமுனையில் இலக்கும் கொண்டவன். அவன் ஒருமுனையில் பிரபஞ்சமும் மறுமுனையில் பிரம்மமும் நிற்கக்காண்பான்.”

ஏன் இந்த புரியாத தமிழ்? செவ்வியழ் எழுத்து என்ற வழிந்த திணிப்பு எதற்கு? அதில் சமஸ்கிருதம் வேறு. தமிழின் மார்க்சிய எழுத்தாளர்களுக்கு நிகராக ஜெயமோகன் போட்டிபோடுகிறாரா? ஒன்றுமே விளங்குதில்ல. இந்த சமயத்தில் கல்கி இதை எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. கல்கியின் கல்லறை தேடிப்போய் தோண்டி எடுத்து உயிர்கொடுக்க வேண்டும் போல் இருக்கிறது. மகாபாரதம் எழுத ஒரு கம்பர் பிறக்காமலேயா போயிடுவார்? பார்ப்போம்.


இது ஒரு தொடர்கதை

இதிகாசகதைகள் நம்மோடு முடிவதல்ல. அது என்றைக்கும் நிலைக்ககூடியவை. ஆகையால் தான் அவை இதிகாசங்கள். ஒவ்வொரு தலைமுறையும் தம்மோடு தமிழ் அழிந்துவிடும் என்றே நினைத்திருக்கிறார்கள். இன்றைக்கு உலகமயமாதல், இதற்கு முன்னே வெள்ளையர்கள், அதற்கும் முன்னே கலிங்கர்கள், அந்தந்த தலைமுறை,  தமிழ் தமக்கு பின்னே ஒழிந்துவிடும் என்றே நினைத்திருக்கிறார்கள். பரணி பாடியிருக்கிறார்கள். ஆனால் தமிழ் ஆச்சரியமான மொழி. வற்றாத ஓடை. முப்பது வருஷ போரும் முன்னூறு வருஷ ஆங்கிலமும் இரண்டாயிரம் ஆண்டு மொழியை ஒழிக்கும் என்றால் … வாட் த ஹெல்?

1545755_1451947515024197_491160676_nஇப்போது விஜய் டிவியில் மீண்டும் மகாபாரதம். எவ்வளவு மொக்கையாக எடுத்தாலும் மகாபாரதம் என்பதால் சுவாரசியத்துக்கு குறைவில்லை. அம்புராத்துணியே இல்லாத வில்வீரர்கள். வில்லை வளைக்க அம்பு ஸ்பெஷல் எபெக்டில் வருகிறது. கறுமம். குந்தி, சுபத்திரை, ருக்குமணி ஏன் காந்தாரி கூட காஜல் அகர்வால் ரேஞ்சில் இருக்கும்போது திரௌபதியாக ஒரு பேக்கிழவாண்டியை போட்டிருக்கிறார்கள். திரௌபதியை விட இடும்பி அழகாக இருக்கிறாள். பீமன் அதிர்ஷ்டசாலி. ஆனாலும் ரசிக்கமுடிகிறது. அலுவலகம் முடிந்து வந்து டீ குடித்துக்கொண்டே யூடியூபில் அதையே ப்ளே பண்ணிபார்க்கிறேன். அது தான் அந்த கதையின் காந்தம்.

அக்காவின் மகன். சிங்கப்பூரில் பிறந்தவன். ஏழு வயது. இங்கிலீஷ் மீடியம் படிப்பு. ஆனால் டிவியில் மகாபாரதம் தொடங்கினால் இமை வெட்டாது பார்க்கிறான். அன்றைக்கு துருபதனின் வேள்வித்தீ பிரகாசமாக வீச “திருஷ்டதுய்ம்மன் வருவான் பாருங்க” என்கிறான். எப்படி உனக்கு தெரியும்? என்று கேட்டால், “நூலகத்தில் சிறுவருக்கான மகாபாரதம் வாசித்து முடித்து விட்டேன்” என்றான். டிவியில் பார்த்து முடிக்கும் வரைக்கும் பொறுமை இல்லையாம். வாசித்து முடித்ததுமில்லாமல் அட்சரம் பிசகாமல் பெயர்களை சொல்லுகிறான். அவன் சொல்லும்போது இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர் ஹண்டி நூலகத்தில் தவமாய் கிடந்த குமரன் ஞாபகம் வருகிறான்.

starplus_promo_mb_draupadi_30sec_300x200

அக்கா புட்டுக்கொத்திக்கொண்டு இருக்கிறார். மகாபாரதம் போகிறது.

“அம்மா அடுத்ததாக திரௌபதி கமிங்”

சொன்னது போலவே நெருப்புக்குள்ளே இருந்து எலும்பும் தோலுமாக அவள் வெளிவர அக்கா சொல்லுகிறார்.

“எனக்கு திரௌபதியை பிடிக்கேல்ல .. நொட் குட்”

அவனுக்கு கொஞ்சம் கோபம்.

“ஏன் அப்பிடி சொல்லுறீங்கள்? இல்லையே .. அவ வடிவா தானே இருக்கிறா..”

சொல்லிவிட்டு தொடர்ந்து பார்த்தவன், திடீரென்று எழுந்துவந்து சொன்னான்.

“ஐ லைக் ஹேர்”

கவலையே வேண்டாம். மகாபாரதம் … தொடரும்.


தொடர்பு பட்ட படைப்புகள்
கதை சொல்லாத கதை
பூந்தளிர் சித்திரக்கதைகள்
இசைகுறிப்புகள் கேள்விஞானத்தில் எழுதியவை. தவறெனில் சுட்டுக.

Contact Form