இது ஒரு குரங்கு எழுதும் வியாழமாற்றம்!

Mar 27, 2014

money-on-typewriter
அ ஜ க் ய் ப் ப் ப் ஸ் ஜ ந ந நடுக் ..
ஜ ஏ நடுக் ஜ ஸ் கடலில .. கப்சட்ட் பலை .. ஜ கம்
நடுக்கடலில கப்பலை க் அச க,ல் இறங்கி
நடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா?
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
எண்ட சிவபெருமானே.. இது… நடந்தே விட்டது. நிஜமாகவே. இதை எழுதுவது யார் என்று நினைக்கிறீர்கள்? சாட்சாத் நானே. ராமு ….. அதாண்டா குரங்கு. மன்னிக்கவும். அதுதான் குரங்கு. வழமையாக கிளிநோச்சிப்பக்கம் வந்து அணையுமே சாம்பல் கலர், சிவத்த மூக்கு குரங்கு? அதே சாதி. பார்த்தி இவ்வளவு காலமும் முக்கின முக்குக்கு கிடைத்த பலன். விஷயம் தெரிந்தால் சந்தோஷப்படுவான். பின்னே? ஒரு குரங்கு பதிவு எழுதுகிறது என்றால், எவ்வளவு பெரிய ஆராய்ச்சி சாதனை. ஓ கண்ட கண்ட குரங்கெல்லாம் எழுதுகிறதே என்று சொல்லுகிறீர்களா. உஷ்… நான் ஒரு நிஜக்குரங்கு. நிரூபிக்கவா? நெக் காட்டவா? மைக்கை குடுங்க.
ச்ச்சசைக்க்கக்கிக் சீச்ச்சால் இனவாத அரசியள் வேண்டாம் …குறுகிய என்னம் ஒரு நாலும் வேண்டாம் .. இந்த மாட்டு மக்கள் ஏள்ளோரும் ஒன்றாக வாழ வேண்டாம் .. வேண் டும் .. பொட்ட பொட்ட தன்னத்த…
இப்போதாவது நான் குரங்கு நம்பியிருப்பீர்களே. இது ஒரு குரங்கு எழுதும் வியாழமாற்றம்.

முடிவில்லா குரங்கு விதி

Infinite Monkey Theorem என்று ஒன்றிருக்கிறது. ஒரு குரங்கு டைப்ரைட்டர் முன்னே இருந்து தத்து பித்து என்று ஏதாவது டைப் பண்ணிக்கொண்டிருந்தால் ஒருநாள் இல்லை ஒருநாள் அது மகாபாரதத்தை … வேண்டாம் எதுக்கு வம்பு ... கம்பராமாயணத்தை எழுதி முடித்துவிடுமாம். என்ன ஒன்று. அது நிகழ பல நாட்கள், வருடங்கள் எடுக்கலாம். பல வருடங்கள். அதுவரைக்கும் இந்த உயிரினங்கள், பூமி எதுவுமே அழியாமல் சாஸ்வதமாக இருக்கவேண்டும். இருந்தால் முடியும். எப்படியா? சாதரணமான எழுவாய் மாற்றம்.
ஒரு நாணயத்தை எடுத்து சுண்டுங்கள். தலை விழுவதற்கான சாத்தியம் ஐம்பதுக்கு ஐம்பது அல்லவா? முதல் தடவையிலோ, அல்லது இரண்டாவது மூன்றாவது தடவையிலோ தலை விழுந்துவிடும். தோணி சுண்டினால் ஐந்தாறு தடவை தொடர்ச்சியாக ஒருபக்கமே விழலாம். ஆனால் எப்படியும் தலை விழுந்தே தீரும் என்று உங்களுக்கு தெரியும் இல்லையா.  நடக்காவிட்டால் ஆச்சரியப்படுவீர்கள் அல்லவா. இப்போது அதைக்கொஞ்சம் விரிவாக்குவோம்.
hundredthmonkeylarge
ஒரு டைப்ரைட்டரில் “அ” என்ற எழுத்து மாத்திமே இருக்கிறது. இப்போது ஒரு குரங்கு அந்த டைப்ரைட்டரில் “அ” என்ற எழுத்தை அடிப்பதற்கான சாத்தியம் என்ன? மிக அதிகம் அல்லவா. கட்டையை அழுத்தினால் போதுமானது. டைப் ரைட்டரில் “அ”, “ம்”, “மா” என்ற எழுத்துகள் மாத்திரமே இருந்தால், “அம்மா” என்று டைப் அடிப்பதற்கும் குரங்குக்கு அவ்வளவு காலம் எடுக்காது. ஒருநாள் அல்லது இரண்டு நாள் அல்லது ஒருவாரம் பத்து நாளில் அது சாத்தியமாகலாம். இப்படி எழுத்துக்களை அதிகரித்துக்கொண்டு போக, அதன் வரிசைமாற்றம் சேர்மானங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் குறிப்பிட்ட ஒரு சாத்தியம் நிகழ்வதற்கான எழுவாய் மாற்றம், probability குறைகிறது. மிக நீண்ட நேரம் முயன்றால் மாத்திரமே நிகழ்வு சாத்தியப்படலாம். அதுவே ஒரு முழுத்தமிழ் டைப்ரைட்டரில் ஒரு குரங்கு கம்பராமாயணத்தை எழுதவேண்டும் என்றால்…. யோசித்துப்பாருங்கள். நடைமுறையில் சாத்தியமே இல்லை என்பீர்கள்.
ஆனால் கணிதம் அந்த சாத்தியத்தை புறம் தள்ளாது. நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று வெறும் கணித அடிப்படையில் விதியென்று அறிந்திருப்பதில் என்ன பயன்? நினைத்தே பார்க்கமுடியாத ஒன்றை, நடக்கும் என்று முயற்சி செய்வதில் என்ன பிரயோசனம்? இந்த விதி இன்றைக்கு ஏன் தேவைப்படுகிறது?
தேவை இருக்கிறது. அதற்கு கொஞ்சம் மாற்றி யோசிக்கவேண்டும். ஒரு விஷயம் திடீரென்று ஆச்சரியப்படும் விதமாக நடக்கிறது. “அட” போடவைக்கிறது. விசரன் மாதிரி வெள்ளவத்தை கிடங்குகளுக்கு மேலால் தாவித்தாவி போய்க்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஒரு பெண் கிடங்கிலிருந்து எழுந்து வெளியே வந்து உங்கள் கைபிடித்து “ஹலோ ஐ லவ் யூ” என்கிறாள். நடக்கும் வரைக்கும் அதன் சாத்தியத்தை யோசிக்கவே மாட்டோம். ஆனால் நடந்த பிறகு “அட” என்கிறோம் அல்லவா? அதற்கான பின்னணியை ஆராய முடிகிறது அல்லவா? “Things are as they are because we are” என்று ஒரு பிரபல வாக்கியம் இருக்கிறது. இதை மனதில் இருத்திக்கொண்டு அடுத்த செக்ஷனுக்கு போகலாம்.


நாம் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்?

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அதெப்படி இந்தக்கணம், நான், நீங்கள், எம்மைச்சுற்றி எல்லாமே, பூமி, சூரிய மண்டலம், பால்வீதி, அன்றோமீடா, நெபுலா … எப்படி சாத்தியம்? அதெப்படி பூமியில் மாத்திரம் உயிரினம் இருக்கிறது? எப்படி நம்மைச்சுற்றிய பிரபஞ்சத்தில் எல்லாமே ஒளி சார்ந்து இருக்கிறது. பௌதீக விதிகள் எல்லாம் ஏன் இப்படி அமைந்திருக்கின்றன? ஒளியை விட வேகமான ஒரு வஸ்து ஏன் இந்த பிரபஞ்சத்தில் இல்லை? சின்ன விஷயம். குவார்க்குளுக்கிடையிலான ஈர்ப்பு விசை ஒரு சிறிதளவு பிசகியிருந்தால் கூட “நாம்” சாத்தியமில்லை. பிக்பாங்கின் போது அந்த ஹிக்ஸ்வெளி தோன்றியிருக்காவிடில் டாடா பாய்பாய். பூமி சூரியனில் இருந்து கொஞ்சம் விலகியிருந்தால் உயிரினங்களுக்கு சான்சே இல்லை. இப்படி சின்னச்சின்ன விஷயங்களை பார்த்து பார்த்து டிசைன் பண்ணியது யாரு? இதெல்லாம் இன்னது இப்படித்தான் அமையவேண்டும் என்பது விதித்தது யாரு?  கடவுளா? ம்ஹூம் .. அது நமக்கு யோசிக்கத் தோணாத விஷயங்களில் ரெடிமேட்டாக வைத்திருக்கும் பதில் .. மாற்றி யோசியுங்கள்.
anthropic_principle
இதெல்லாமே ஒரு குரங்கு எழுதும் கம்பராமாயண வகையறா என்றால் எப்படி இருக்கும். அந்தக்கிடங்குக்குள் இருந்து வெளிவந்து லவ் யூ சொன்ன பெண். கதையுள்ள விஜய் படம். அது போலத்தான் இதுவும். அசாத்தியமான ஒரு விஷயத்தை அவதானிக்கும் அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்.  அது இன்னொரு விஷயத்தையும் சொல்லுகிறது.  கதையுள்ள விஜய் படத்தை ஆச்சரியமாக பார்க்கிறோம் என்றால், ஏராளமான கதையற்ற விஜய் படங்கள் இருக்கென்றுதானே அர்த்தம்? கம்பராமாயணத்தை எழுத முன்னர் எத்தனையோ அர்த்தமற்ற எழுத்துக்களை அந்தக்குரங்கு டைப் பண்ணியிருக்கவேண்டும். அதில் நளவெண்பா கூட இருக்கலாம். புரிகிறதா? அதே போல எத்தனையோ அர்த்தமற்ற/அர்த்தமுள்ள பிரபஞ்சங்களும் உருவாகியிருக்கலாம். நம்மோடு இருக்கலாம். இனியும் உருவாகலாம். எம்மைச்சுற்றி உள்ளது அர்த்தமுள்ளதாக இருப்பதற்கு காரணம் நாம். நாமே தான்.
sudhawithsadhguruநாம் அதைப்பார்பதாலேயே அது அதுவாகிறது.
சூப்பர் ஜேகே அப்புடியே அடுத்த சுதா ரகுநாதன் கேள்விக்கு பதிலா சொல்லிப்புடுறன் - ஜக்கி

இல்லை. இதை ஒரு கடவுளே செய்திருக்கவேண்டும். உட்கார்ந்து ஒவ்வொன்றாக டிசைன் பண்ணியிருக்கவேண்டும் என்ற வாதம் சோலி இல்லாதது. பாரத்தை போட்டுவிட்டு அடுத்த வேளை சோற்றுக்கு போய்விடலாம். ஆனால் அந்த வாதத்தை புறம் தள்ளும்போது வானம் கொஞ்சம் வெளிக்கிறது. அந்தப்பாதை கடவுள் ஒருக்கால் இருந்துவிட்டால், அதை அடையக்கூட கோடிகாட்டலாம். கடவுளே இல்லை என்று இந்த தியரி சொல்லவில்லை. ஆனால் இப்படி ஒரு பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவையில்லை என்பதே அதன் வாதம். அப்படியே இருந்தாலும் “பிள்ளையாரப்பா எனக்கு ஏஎல் சோதினையில் நல்ல ரிசல்ட் வரவேண்டும்” போன்ற சொதி வேண்டுகோள்களை எல்லாம் சோதிநாயகன் செவிசாய்க்கும் சான்ஸ் வலு குறைவு.
“Things are as they are because we are, if it had been different, we wouldn’t be here to notice it”
எங்கிறது பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹோக்கிங்கின் “His Life And Work” என்ற புத்தகம்.


ஸ்டீபன் ஹோக்கிங்

Stephen-Hawking
Caltech ஆய்வு மையம். அரங்கு அமைதியாக அவருக்காக காத்திருக்கிறது. ஒரு சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டே வருகிறார்கள். மெலிந்த வளைந்த தேகம். வயதான சுஜாதாவுக்கு கண்ணாடி போட்டது போல இருக்கிறார். நீளமான வரிசை மறந்த பற்கள்.  கால்கள் விளங்காது. கைகள் விளங்காது. நடக்கமுடியாது. பேசமுடியாது. கைகளை அசைக்க முடியாது. விரலைக்கூட அசைக்கமுடியாது. பார்க்கலாம். கேட்கலாம். கண்ணுக்கு கீழே உள்ள கன்னத்து தசை. அதை மட்டும் கட்டுப்படுத்த முடியும். கண்ணாடியில் சென்சர் ஒன்றை பூட்டி, கன்னத்து தசையால் முன்னே இருக்கும் கணனியில் வார்த்தைகளை தெரிவு செய்கிறார்.  ஒவ்வொன்றாக. தெரிவு செய்து முடித்து கன்னத்து தசையினால் எண்டர் பண்ண, ஒரு மெக்கானிக்கல் குரல் அரங்கு முழுதும் கேட்கிறது.
“Can” “you” “hear” “me”
கைத்தட்டல் அரங்கையே உலுக்குகிறது. ஒரு சின்னத்தசை அசைவு. பெரிய மூளை இது இரண்டையும் வைத்து ஹோக்கிங் செய்கின்ற ஆச்சரியங்கள் எம்மை எல்லாம் வெட்கித் தலைகுனிய வைக்கும். “இது பிழைக்காது” என்று வைத்தியர்கள் நாற்பது வருடங்களுக்கு முன்னமேயே கைவிட்ட நோயாளி. வாழும் ஒவ்வொரு நாளும் வரவு என்பதால் அதை அர்த்தமுள்ளதாக்க எண்ணினார். கூடவே அள்ளு கொள்ளையாக மூளை. பிரபஞ்சத்தை ஆச்சரியத்துடன் வியக்கும் தேடல். அதுதான் ஹோக்கிங்கின் வெற்றி இரகசியம். பிரபஞ்சம் எப்படி உருவானது? அது உருவானமைக்கு தேவையான விதிகள் என்ன என்பது முதல் கரும்பொருள் வரை ஆராய்ச்சிகளில் கலக்கியவர்.  அவருடைய Breif History Of Time அலங்கரிக்காத புத்தக அலுமாரிகளே இல்லை எனலாம். அவ்வளவு பிரசித்தம். சிக்கலான விஞ்ஞானத்தை இலகுவாக்க முயன்ற எழுத்தில் அந்த ஊர் சுஜாதா இவர்.
ஹோக்கிங்கை விட சிறந்த விஞ்ஞானிகள் இல்லையா என்று கேட்டால் இருக்கிறார்கள். அவரின் நோய் இல்லாவிட்டால் இந்த அளவுக்கு எவரும் கொண்டாடி இருக்கமாட்டார்கள் என்று அவர்மீது விமர்சனமும் இருக்கிறது. நோபல் பரிசு கிடைக்குமளவுக்கு அவர் கண்டுபிடிப்புகள் இன்னமும் ஊர்ஜிதமாகவில்லை. அடிக்கடி தன் தியரிகளை தானே மாற்றிக்கொள்வார். தியரி என்பது உண்மை கிடையாது. உண்மை மாறாதது. தியரி தன்னைத்தானே பிழைகளை திருத்தி மாற்றங்களை உள்வாங்கும் கருதுகோள் என்பார். ஸ்டீபனின் உய்த்தறிதல் என்பது ஐன்ஸ்டீனை ஒத்தது என்கிறார்கள். சும்மா படுத்துக்கிடந்தே சிக்கலான கணித சமன்பாடுகளை தீர்ப்பார். எதையுமே நினைத்த நேரத்துக்கு செய்யமுடியாது. ஒரு புத்தகம் வேண்டும் என்று கேட்கவே அவருக்கு அரை மணிநேரம் பிடிக்கும். அவர் கருந்துளையின் (black hole) பல மாயங்களை விளக்க உதவியிருக்கிறார் என்பது ஆச்சரியமே.


கருந்துளை

Black Hole. பிரபஞ்சத்தில் நம் அறிவுக்கு இன்னமுமே எட்டாத விசித்திரம். தமிழில் கருந்துளை என்கிறார்கள். எப்படி உருவாகிறது என்று கொஞ்சம் பார்ப்போம்.
இந்த பிரபஞ்சம் தோன்றியபோது இலத்திரன், குவார்குகள் என்று பல மூலக்கூறுகள், particles உருவானது அல்லவா. இந்த மூலக்கூறுகளுக்கிடையே தொழிற்பட நான்கு அடிப்படை சக்திகள் இருக்கிறது. நான்குமே அணுவுக்குள்ளேயே இருக்கிறது. இந்த நான்கை வைத்துக்கொண்டு எந்த இயக்கத்தையும் விளங்கப்படுத்தமுடியும். பூமி ஏன் சூரியனை சுற்றுகிறது? மாமரத்தில் ஏன் மாங்காய் காய்க்கிறது? நெருப்பைத்தொட்டால் ஏன் சுடுகிறது? என்று எல்லா விளக்கங்களும் அடிப்படையில் அந்த நான்கு  சக்திகளுக்குள் இருக்கிறது. வலுவான அணுச்சக்தி, மென்மையான அணுச்சக்தி, மின்காந்த சக்தி என்று முன்னைய மூன்றை இன்னொருநாள் பார்க்கலாம். நான்காவதான ஈர்ப்பு விசைதான் இன்றைக்கு தேவை. ஈர்ப்புவிசை இந்த பிரபஞ்சத்தில் எந்த இரண்டு விஷயத்துக்கு இடையிலும் இருக்கும். ஒரு குவார்க்குக்கும் இன்னொரு குவார்குக்கும் இடையில் இருக்கும். அங்கே இருந்தாள் எங்கேயும் இருக்கும் தானே. கல்லுக்கும் கல்லுக்குமிடையில். கிரகத்துக்குள் கிரகத்துக்குமிடையில். இப்படி எல்லா இடத்திலும் இருக்கும்.
1.13743-C0141244-Black_hole_artwork-SPL-1
இந்த ஈர்ப்பு விசை திணிவு அதிகரிக்க அதிகரிக்க இன்னமும் கூடும். உதாரணமாக பூமியைவிட சந்திரன் சிறியது என்பதாலேயே அது நம்மை சுற்றி வருகிறது. சந்திரனின் ஈர்ப்பு சக்தியின் தாக்கமும் பூமியில் இருக்கிறது. கடல் நீரோட்டங்கள் பல சந்திரனின் புவி ஈர்ப்பாலேயே மாறுவது என்பதை சின்னவயதில் படித்திருப்போம்.
இப்போது ஒரு சின்ன thought experiment. கற்பனைப் பரிசோதனை. நாம் பூமியில் நின்ற இடத்தில் இருந்து துள்ளுகிறோம். அதற்கு ஒரு வலு வேண்டுமல்லவா. அதை ஒரு சும்மா ஐந்து என்று வைப்போம். இப்போது வானத்தில், ஒருவிமானத்துள் பாத்ரூமுக்கு எழுந்து நடந்துபோகும்போது எம்பிக் குதித்துப்பாருங்கள். இலகுவாக இருக்கும். காரணம் பூமியில் இருந்து தூரத்தில் இருப்பதால் அதிகம் விசை கொடுக்கத்தேவையில்லை. அதை ஒரு மூன்று என்று வைப்போமா? சரி. திடீரென்று எங்கள் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது பூமி சுருங்கிவிட்டது என்று வையுங்கள். அதாவது சின்னக் கோளமாக மாறிவிட்டது. சந்திரன் சைஸுக்கு. திணிவு அப்படியே இருக்கிறது. எங்கள் விமானம் தரையிறங்குகிறது. இப்போது குதித்துப்பாருங்கள். முடியாது. கஷ்டமாக இருக்கும். ஆக அடர்த்தியான திணிவு கூடிய பொருளில் ஈர்ப்புவிசை அதிகமாக இருக்கும். வியாழன் கிரகத்தில் ஈர்ப்பு அதிகம். சந்திரனில் குறைவு. இலகுவான விஷயம்.
பூமி மேலும் சுருங்கத் தொடங்குகிறது. என்ன நடக்கும்? அதன் மேற்பரப்பு ஈர்ப்புவிசை அதிகமாகும். துள்ளுவது கடினமாகும். காலையில் கட்டிலில் இருந்து எழும்ப முடியாது. மண்ணில் கால்வைத்தால் புதைய ஆரம்பிக்கும். இன்னமும் சுருங்குகிறது. நிலைமை மோசமாகும். பறவைகள் காலையில் கூட்டிலிருந்து பறக்க முடியாமல் விழத்தொடங்கும். விமானங்கள் மேலெழவே முடியாது. செயற்கை கோள்களுக்கு பிரச்சனை இல்லை. அவை தூரத்திலேயே இருப்பதால் பூமி சுருங்குவதால் எந்த பாதிப்பும் இல்லை. மேற்பரப்பில் இருப்பவைக்குத்தான் சிக்கல். இன்னமும் சுருங்குகிறது. ஈர்ப்பு விசை கூடுகிறது. ஒரு கட்டத்தில் ஒளி கூட பூமியைவிட்டு தப்பமுடியாது. அதைக்கூட பூமி இழுத்துவிடும். நீங்கள் மாமரத்தை நோக்கி டோர்ச் அடித்தால் ஒன்றுமே தெரியாது (அதற்கு உயிரோடு இருக்கமாட்டோம், அது வேறு பிரச்சனை).   ஒளியைக்கூட இழுக்கிறது என்றால், பிரபஞ்சத்தில் எந்த பொருளும் அதன் மேற்பரப்பில் இருந்து வெளியேற முடியாது.
தூரத்தில் ஒரு நட்சத்திரம். இப்படி சுருங்கினால்.. சுருங்கி சுருங்கி .. ஒரு கட்டத்தில் உள்ளே போகும் ஒளி வெளியேறமுடியாமல் போனால், அந்த நட்சத்திரத்தை நம்மால் பார்க்கமுடியாது. நாம் ஒன்றைப் பார்க்கவேண்டுமென்றால் ஒளி அதில் பட்டுத் தெறித்து வரவேண்டும். அதே போல ஈர்ப்பு சக்திக்கு ஒளியை தன்பக்கம் வளைக்கும் வல்லமை இருக்கிறது. ஆக மிக அண்மையில் போகும் ஒளிக்கற்றைகளை அந்த நட்சத்திரம் விழுங்கிவிடும். கொஞ்சம் தள்ளிப்போகும் ஒளி வளைந்து நெளியும். ஆக பிரபஞ்சத்தில் வெளிச்சங்களுக்கு மத்தியில் ஒரு கரும்புள்ளி தெரியும். அது தான் கரும்பொருள். இது மிக எளிமைப்படுத்திய விளக்கம். இதில் நட்ச்சத்திர சோடி என்றெலாம் ஐட்டங்கள் இருக்கிறது. சுவாரசியம் மிகுந்தவை. தேடிப்பாருங்கள். மேலும் எழுதினால் வெண்முரசு வாசிக்கப்போய்விடுவீர்கள். வேண்டாம்.


வெள்ளை யானை

white-elephant
சின்ன வயதில் ஒரு வெள்ளை யானை கதை படித்திருப்போம். ஒரு விவசாயியின் கரும்புக்காட்டுக்குள் தினம் தினம் இரவு ஒரு வெள்ளையானை வந்து மேயுமாம். அது புறப்படும் சமயம் அந்த விவசாயி அதன் வாலை பிடித்து தொங்குவானாம். அது சொர்க்கம் போகுமாம். அதனோடு சேர்ந்து அவனும் போய்விட்டு வருவான்.
இந்த விஷயம் ஊருக்கே தெரிந்துவிட, அடுத்தநாள் இரவு வெள்ளையானை புறப்படும் சமயம் ஒளிந்திருந்த மொத்த ஊரும் வாலில் ஒருவர் பின் ஒருவராக சங்கிலி போல தொத்திவிட்டார்கள். யானை பறந்து கொண்டிருக்கிறது. திடீரென்று கீழே தொங்கிக்கொண்டிருந்த ஒரு சொங்கி,  “சொர்க்கம் எவ்வளவு பெரியது?” என்று கேட்டுத் தொலைக்க, வாலைப்பிடித்து தொங்கிக்கொண்டிருந்த விவசாயி “இவ்ளோ பெரிசு” என்று இரண்டு கைகளையும் விரித்துக்காட்ட அத்தனை பெரும் தொப்பென்று விழுந்தார்களாம்.
கரும்பொருள் ஒருவிதத்தில் வெள்ளை யானை என்கிறார் ஸ்டீபன் ஹோக்கிங். எம் பௌதீக விதிகளான ஐன்ஸ்டீனின் பொதுச்சார்பு விதியும், நியூட்டனின் விதிகளும் கரும்பொருள் விஷயத்தில் மக்கர் பண்ணுகின்றன. செல்லுபடியாவதில்லை. கருந்துளைக்குள் போகும் எந்தப்பொருளும் மீள்வதில்லை. அதே சமயம் கருந்துளைகள் சிறுத்துக்கொண்டே போகலாம். ஈர்த்து, ஈர்த்து, ஈர்த்து .. ஒருகட்டத்தில் எல்லாமே இல்லாமல் போகிறது. கருந்துளையே இல்லாமல் போகிறது. அதற்குள் சென்ற ஒளிக்கு என்ன ஆயிற்று? ஏனைய பொருட்களுக்கு என்ன ஆயிற்று? நமது முக்கியமான விதி ஒன்று சொதப்பும் இடம் இது. அதுதான் “சக்தி காப்பு விதி”.
அதென்ன சக்தி காப்பு விதி? செல்வவடிவேல் வாத்தி மொங்கி மொங்கி படிப்பிச்ச ஐட்டம். மொத்த சக்தி எப்போதும் மாறாதது. ஆனால் ஒன்றிலிருந்து இன்னொன்றாகலாம். தகவல் கூட அப்படித்தான். ஒரு புத்தகத்தை கிழித்துப்போட்டாலும், கிழித்த துண்டுகளை ஒட்டி ஒட்டி மீண்டும் புத்தகத்தை உருவாக்கலாம். எரித்தால் கூட அது சாத்தியமே. புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் மூலக்கூறுகள் ஊடாக வேறுவடிவம், வேறு சக்தி எடுத்திருக்கிறது அவ்வளவே. மற்றும்படி இந்த பிரபஞ்சத்திலிருந்து எதுவும் தொலைந்து போகப்போவதில்லை. எதை நீ கொண்டுவந்தாய்? அதை நீ கொண்டு போவதற்கு? விஷயம்.
இந்த விதி கருந்துளைககளுக்கு பொருந்துவதில்லை.  கருந்துளைக்கு உள்ளே போகும் எந்த ஐட்டமும் வெளியேறவில்லை. கிட்டத்தட்ட நம்மூர் மரமண்டைகள் மாதிரி. இரவிரவா இருந்து படிப்பாங்கள். அடுத்தநாள் ஐம்பது எம்ஸீகியூவில் இரண்டே இரண்டுதான் சரிவரும். தேய்ந்து தேய்ந்து ஒருகட்டத்தில் கருந்துளையே இல்லாமல் போகிறது. முடிவிலி சக்தியுடன். இதிலே ஹோக்கிங் ரேடியேஷன், entrophy என்று சில விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும் உள்ளே போனதெல்லாம் எங்கே போய்த் தொலைந்தது? அந்த சக்திக்கு என்ன ஆயிற்று?
Vadivelu13_bஎன்ன சனியனோ ஆகட்டும் மச்சி .. தலை சுத்துது. கருந்துளைக்குள்ள துலைஞ்சா என்ன துலையாட்டி என்ன? கோச்சடையான் மொக்கையா தானே வரப்போகுது? முந்தி எண்டாலும் அப்பப்போ ஹன்சிகா படமாவது போடுவாய். இப்ப பயத்தில மொடங்கிட்டாய். … மாட்டரை சீக்கிரமா முடி. பாட்டிலை ஓபன் பண்ணனும்.
ஒகே பாஸ்.
இப்படி கருந்துளையே இல்லாமல் போவதை ஐன்ஸ்டீன் சிங்கியூலாரிட்டி என்கிறார். அதற்கு உருவம் இல்லை. அருவமும் இல்லை. காலம் தூரம் எதுவுமில்லை. ஆனால் அந்த சக்தி ஏதோ ஒரு வடிவத்தில் இருந்தே ஆகவேண்டும். அதுவே Big Bang ஆக வெடித்திருக்க வேண்டும் என்கிறார் ஹோக்கிங். நமது பிரபஞ்சம் கருந்துளையில் இருந்து தோன்றிய ஒன்றே. அப்படி என்றால் அதற்கு முதல் …. அதற்கு முதல் என்று பேசுவதே அபத்தம். காலம் என்பது நம் பிரபஞ்சத்து வஸ்து. பிக்பாங்கின் போது ஒளி எப்படி உருவானதோ. திடப்பொருட்கள் எப்படி உருவானதோ. விசை எப்படி உருவானதோ. அதே போலத்தான் காலமும். முன்னால் நகரும் நேரம். அதுகூட நிலையற்றது. ஓடும் பொருளுக்கும் நிலையாக நிற்கும் பொருளுக்கும் காலம் வேறுபடும். நான் தின்னவேலிச்சந்தியில் முப்பது வருடம் அசையாமல் நிற்கிறேன் என்று வையுங்கள். என் அப்பா  ஒளியின் வேகத்தில் எங்கேயோ எல்லாம் சுற்றிவிட்டு திரும்பி வருகிறார். வரும்போது அவர் என்னைவிட இளமையாக இருப்பார். காலம் சார்பானது. சீராக இயங்குவதில்லை. இது நிரூபிக்கப்பட்ட விதி. ஆகவே பிரபஞ்சத்துக்கு முன்னால் என்ற அந்த விவாதம் அபத்தமானது. ஆனாலும் நம் மனது அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும்.
ஆக ஏக காலத்தில் பலவித பிரபஞ்சங்கள் அந்த உயிரினம் சார்ந்த பௌதீக விதிகளோடு இயங்கிக்கொண்டு இருக்கலாம்.  அப்படி என்றால் உயிரினங்கள் ஒன்றை ஒன்று மீட் பண்ணலாமா?
முதலில் எது உயிரினம்?


நான் யார் யாரவர் யாரோ?

ai_artificial_intelligence_zps933c533d
எது உயிரினம் என்பதை தீர்மானிப்பது கடினம். கந்தசாமியும் கலக்சியும் நாவலில் மொத்த பூமியே ஒரு கணணி ப்ரோகிராமாக இயங்கும். அதில் மனிதர்கள் எல்லாமே சின்ன சின்ன ப்ரோகிராம் கூறுகள். அது சாத்தியம் என்கிறார் ஹோக்கிங். உயிரினம் என்றால் இரண்டு கை, இரண்டு கால், மூளை, இதயம், காதல் என்று ஓர்கானிக் உணர்ச்சிக் குவியலாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அது நிலையற்றது. குறுகிய கால ஆயுளை கொண்டது. எதிர்காலத்தில் இலத்திரனியல் உயிரிகளே இந்த பூமியை ஆளும். பூமி என்றில்லை, அக்கப்பக்கத்து கலக்சிக்கு கூட போய்வரலாம். அவற்றால் ஒளியின் வேகத்தில் செல்லமுடியும். சூரியனை எட்டு நிமிடத்தில் அடைந்துவிடலாம். உயிரினங்கள் என்பதே சிக்னல்களின் தொகுப்பு ஆகிவிடும். நான் யோசிப்பதற்கு என் மூளையின் சிக்னல் போதுமே. நடப்பது, உண்பது, சிரிப்பது, அழுவது எல்லாம் ஓர்கானிக் கூர்ப்புகள் மாத்திரமே. உடல். தேவையில்லை. படலை வெளிவரும். ஆனால் நான் யார் என்றால் “Its Me” என்று ஒரு இலத்திரனியல் சமிக்ஞை ஸ்மைலி அனுப்பும். சர்வைவல் என்பது எந்த வகையிலும் இருக்கலாம். அப்போது நம்மால் சாத்தியப்படாத விஷயங்கள் பல சாத்தியப்படலாம். நிஜமான உயிரிகள் குவாண்டம் குவார்க்குகளோ என்ற சந்தேகமே எனக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் என்டாங்கில்மென்ட் எப்படி சாத்தியம்?
AI, Artificial Intelligence என்ற ஸ்பில்பேர்க் படத்தின் கிளைமக்ஸ் அப்படித்தான். பூமியை ரோபோக்கள் ஆண்டுகொண்டிருக்கும். மனிதர் காலத்து ரோபோ ஒன்றை கண்டுபிடித்து நாம் டைனோசர் ஆராய்ச்சி செய்வது போல ஆய்வு செய்யும். மனிதர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அறிய. அங்கே ரோபோக்கள் தான் உயிரிகள். நாம் அழிந்துபோன டைனோசர்கள் கேசுகள்.அதிகாலை நிலவே

சிலவாரங்களுக்கு முன்னர் ஒருநாள் காலைவேளை ரயிலில் ஸ்டீபன் ஹோக்கிங் பற்றிய புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது இந்தப்பாடல் எதிர்பாராமல் வந்தது. “தவித்தேன் உன் அணைப்பில் தினம் துடித்தேன் என் உயிரே, இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன் என் உயிரே”, சாதாரணமான வரிகள் தான். ஆனால் இசைதேவன் இசை. என்னவோ செய்தது. அது ஏன் நல்ல இசையை கேட்கும்போது மனம் இவ்வளவு வீக் ஆகிறது? என்று ஒரு ஆயாசம். உங்களுக்கு எப்படி?
அந்தக் கணத்தில் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுதிய கவிதை உணர்வு இது. 
வெள்ளி அதிகாலை.
காதுகளில்
இலையுதிர் பருவத்து கூதல்.
கூடவே ஸ்டீபன் ஹோக்கிங்கும்
இளையராஜாவும்.
1064862_470431386381097_1007488176_oரயில் பயணத்தில்
யன்னலோரமாய் நான்.
நீயும் இருந்து பாரேன்.
நிச்சயம் பிடிக்கும்.
யன்னலோரத்தையும் பிடித்துவிடுவாய்.
வரிகள் மாறுகிறது.
யன்னலோரமாய் நீ.
இயர்போனில்
எனக்கு ஒரு காது.
உனக்கு மறு காது.
"இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே"
யூகலிப்டஸ் மரங்களில் அப்படி என்ன பித்து?
திரும்பிப் பாரேன் என்னை.
கருந்துளை விழிகளால்
கவர்ந்திழுக்கிறாய்.
விழுந்தவன்
தொலைந்து போனேன்.
"உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்.
நமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும்"
தான் நாணி நமை வாழ்த்தும்
தமிழும்
தன் வார்த்தை தொலைத்தது!
குறுஞ்செய்தி ஒலி.
பக்கத்தில் இருந்தும்
எஸ்எம்எஸ் அனுப்பும்
வேடிக்கை விநோதக்காரியே.
இந்த விடியலை கூடி ரசிக்கும் வேளை இது.
அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நான் பாட வேண்டாமா?"
சுணங்காமல் வந்துவிடு- இங்கே
குளிர்காலம் வந்துவிட்டது.
“பொன்வானம் பன்னீர் தூவும் இந்நேரம்” என்று ராஜாவின் ஒரு மாணிக்கம் இருக்கிறது. ஜானகி பாடியது. பல ராஜாரசிகர்களில் டொப் 10 வரிசை பாடல் அது. இன்னொரு பாடல் “கண்ணா வருவாயா”. படம் மனதில் உறுதி வேண்டும். இவற்றின் ராகம் கௌரி மனோகரி என்கிறார்கள். அறியேன். அனால் இந்த இரண்டு பாடல்களின் தொப்புள்கொடி ஒன்றுதான். அதே தொப்புள் கோடியில் பிறந்த இன்னொரு குழந்தை தான் “அதிகாலை நிலவே”. ஜெயச்சந்திரன் ஜானகி பாடியது. தலைவர் இசை.
நாங்கள் கொடுத்துவைத்தவர்கள். 


யார் முட்டாள்?

2003ம் ஆண்டு பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் ஒரு பரதேசி இந்த “முடிவில்லா குரங்கு விதி” யை பரிசோதனை செய்ய புரபோசல் எழுதிக்கொடுத்து 2000 பவுன்ஸ் நிதியுதவியும் எடுத்துவிட்டான். ஒரு அறைக்குள் ஆறு குரங்குகளையும் ஒரு கணனியையும் செட்டப் பண்ணினார்கள். இணையத்தில் நேரடி ஒளிபரப்பு. கணனியில் டைப் பண்ணுவது இணையத்தில் வருமாறு பார்த்துக்கொண்டார்கள். ஒருமாசம் இந்த பரிசோதனை நடந்தது. என்னாச்சு?
ஐந்து பக்கங்கள் டைப் பண்ணுப்பட்டது. அனேகமான அடி வாங்கிய எழுத்து “S”. கொஞ்ச நாட்களில் அந்த குரங்குகளில் பலசாலியான ஆண் குரங்கு கல் ஒன்றை எடுத்து அந்தக்கணணியை உடைக்க ஆரம்பித்தது. மாச முடிவில் கணணி முழுக்க குரங்கு சீச்சாவும் கக்காவும் குவிந்து கிடந்தன. ஆராய்ச்சி முடிவில் அந்த விஞ்ஞானி சொன்னார்.
“குரங்குகளால் ஷேக்ஸ்பியரின் ஹாம்லட்டை எழுத முடியவில்லை”
29659805-monkey-cartoon


போடாங்!
S  S  S    S  S  S S S S S SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
S S S S S S S S  S
S
******************
Contact form