நரேந்திர மோடி, இந்தியாவின் ஜே ஆர் ஜெயவர்த்தனா.

May 19, 2014

 

jr-modi

 

"மோடிக்கும் ஜே. ஆருக்கும் என்ன ஒற்றுமை?" என்று ஒரு சிங்கள நண்பன் முகநூலில் கேட்டிருந்தான். முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்விக்கான பதில் பல புதிர்களுக்கான முடிச்சுகளைப் போடக்கூடியது. தவிர்க்கமுடியாத ஒற்றுமைகளை இந்த இருவரும் கொண்டிருக்கிறார்கள். ஜே ஆரின் வாழ்க்கை ஒரு வரலாறு என்றால் அதிலிருந்து ஓரளவுக்கு மோடியின் அரசியலை எதிர்வு கொள்ளக்கூடிய அளவுக்கு இருவருக்கும் பல ஒற்றுமைகள்.

யார் இந்த ஜே ஆர்?

ஜே. ஆர். ஜெயவர்த்தனா; இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி. 1977ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தவர். ஜனநாயக முறையில் தெரிந்தெடுக்கப்பட்ட இலங்கையின் முதல் சர்வாதிகாரி. அப்போதே அத்தனை எம்பிக்களின் இராஜினாமா கடிதங்களையும்  எழுதி வாங்கிவைத்திருந்தார் என்று அப்பா சொல்லுவார். உண்மை தெரியாது. ஆட்சிக்கு வந்தவேகத்திலேயே பாராளுமன்ற நிறைவேற்று அதிகாரத்தை அகற்றி, ஆட்சி முழுதும் தன கையில் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். பாராளுமன்றம் செல்லாக்காசு ஆனது. தனிமனிதனுக்கு உகந்தபடி அரசியல் யாப்புகளை மாற்றியமைப்பதில் அவர்தான் மகிந்தவுக்கு முன்னோடி. முப்பத்திரண்டு வருடங்கள் கழித்து, மகிந்த இந்த யாப்பை இன்னமும் மாற்றி, நீதித்துறை உட்பட அத்தனை அதிகாரங்களையும் தனக்குக்கீழே கொண்டுவந்தார்.  இரண்டு தடவைகள் மாத்திரமே ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்ற விதியை தளர்த்தினார். இந்தவகையில் மகிந்த ஜே.ஆர், புடின் போன்றவர்களை விட ஒருபடி மேலே போய்விட்டார்.

ஜே ஆர், முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த உருவம். அணிசேரா நாடுகள், கம்யூனிச சார்பு, இந்திராவுடனான  நட்பு என்றிருந்த இலங்கையை அமெரிக்காவுக்கு சார்பாக திசை திருப்பியவர். சுதந்திர வர்த்தக வலயங்கள், திறந்த பொருளாதாரம் என்று நாடு புதிய திசையில் பயணித்தது.  பாணுக்கான கியூ ஒழிந்தது. பணப்புழக்கம் அதிகரித்தது. உள்நாட்டு விவசாயம், இறக்குமதிகளால் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் மன்மோகன் சிங், நரசிம்மராவ் கூட்டணி பின்னாளில் செய்ததை ஜேஆர் அப்போதே செய்தார். மேற்கே அமெரிக்கா, கிழக்கே யப்பான் என நட்புகள் அதிகரித்ததால் இந்திராவின் பகைக்கும் ஆளானார். 

தமிழர் விஷயத்தில் ஜே. ஆர் ஒரு இனத் துவேசி. அவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே 77இல் ஒரு இனக்கலவரம் உருவானது. அடக்கவில்லை. என் குடும்பம் அப்போது நுகேகொடவில் இருந்தது. என் அக்காவுக்கு நான்கு வயசு. தூக்கி மூலையில் வீசப்பட்டார். அடுத்த நாளே கைப்பையோடு என் குடும்பம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஓடிவந்தது.  இது சும்மா ட்ரெயிலர்தான்.  மெயின் பிக்சர்கள்  அடுத்தடுத்து வெளியாகத் தொடங்கின.

ஜே ஆருக்கு இன்னொரு பெயர் உண்டு. குள்ள நரி. தனிநாட்டை முன்வைத்து தேர்தலில் வென்ற செல்வா/அமிர்தலிங்கம் கோஷ்டியை, மாவட்ட சபையை ஏற்றுக்கொள்ள வைத்த சகுனி அவர். நாட்டில் துவேசம் உச்சத்தில் இருந்த சமயம் அது. யாழ்ப்பாணத்திலோ நிலைமை மோசம். இயக்கங்கள் மாவட்டசபைத் தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை. வன்முறை வெடித்தது. ஜே ஆரிடம் மாவட்டசபை தேர்தலை நடத்தமுடியாது என்று அரசாங்க அதிபர் சொல்லியும், இல்லை என்று தேர்தலை நடத்தினர். தேர்தல் ஊழியர்களாக தெற்கிலிருந்து பீயோன்களை எல்லாம் கூட்டி வந்தார்கள். பத்தாம் வகுப்பு கூட பாஸ் பண்ணாதவர்கள். முறைகேடுகள் தலைவிரித்தாடின. உச்சகட்டமாக அரச சார்பு தீவிரவாதிகளினால் யாழ்ப்பாண பொது நூலகம், தமிழரின் பெருமை, தீயிட்டு கொளுத்தப்பட்டது.

அப்போது கூட ஜே.ஆர் அசரவில்லை.

83-riots1-436x360

83ம் ஆண்டு ஜூலை பதினைந்து அன்று , மீசாலையில் நடந்த சண்டையில் முதன்முதலில் சீலன் கொல்லப்படுகிறார். பதிலுக்கு தபால் பெட்டிச் சந்தியடியில் ஜூலை 23ம் திகதி பதின்மூன்று ஆர்மிக்காரர் கொல்லப்படுகிறார்கள். அடுத்தநாள் படையினரின் பிரேதங்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அன்று மாலையே தமிழர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இவர் அடக்கவில்லை. அடுத்தநாளும் தமிழர்கள் எரிக்கப்படுகிறார்கள். இருபத்தெட்டாம் திகதி பாராளுமன்றத்தில் தமிழர்களைப் பார்த்து "நீங்கள் அடித்ததாலேயே நாங்கள் திருப்பி அடிக்கிறோம்" என்கிறார். கலவரக்காரர் வாக்காளர் இடாப்பை கையில் வைத்துக்கொண்டு, தமிழ் வீடுகளை அடையாளம் கண்டு அடித்தார்கள். எரித்தார்கள். கொன்றார்கள். இந்த கலவரங்களின் பலனாக, ஜேஆரும் அவர் சார்ந்த கட்சியும் அடுத்த தேர்தலில் வென்றது. அதற்கடுத்த தேர்தலிலும் வென்றது. இன்றைக்கும் பெரும்பான்மை படித்த சிங்களவரிடம் கேட்டால் ஜே.ஆரை பெருமையாகவே சொல்வர்.

தமிழரிடம் கேட்டால் ... த்தூ...

இப்போது நரேந்திர மோடிக்கு வருவோம். இவரை இந்தியாவின் எதிர்காலம் என்கிறார்கள். இந்தியாவை ஒளிரவைக்கப்போகிறார் என்று பெரும்பான்மை இந்தியர்கள் நம்புகிறார்கள். அதற்கு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் குஜராத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. வீதிகளும், மின்சாரங்களும், குடிநீரும், தொழிற்சாலைகளும் மாநிலம் முழுதும் பரவியிருக்கிறது. அந்நிய செலாவணி அங்கே அதிகரித்திருக்கிறது. ஊழல் அதிகமில்லை. இதற்கெல்லாம் காரணம் குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடிதான். அவர் இந்தியாவை இன்னொரு குஜராத் ஆக்குவார் என்ற பூரிப்பில் ஒட்டுமொத்த இந்தியாவும் இவருக்கு வாக்களித்திருகிறது.

என் நண்பன் குஜராத்திக்காரன். இளமைக்காலத்தில் ஆர்எஸ்எஸில் இணைந்து செயற்பட்டவன். “ஏன் இணைந்தாய்?”  கேட்டதுக்கு, "அவர்களுடைய அமைப்பும், அது நடாத்தும் நிகழ்வுகளும் சுவாரசியமானவை. எங்கள் வீட்டுக்கு அருகே,  ஆர்எஸ்எஸ் இளைஞர்கள் எல்லோரும் வீர விளையாட்டு விளையாடுவார்கள். எல்லோருக்கும் ஆர்எஸ்எஸ் சின்னங்கள் தருவார்கள். அந்த சீருடை அணிந்தாலே கெத்தாக இருக்கும்" என்றான். "குஜராத் கலவரங்களுக்கு ஆர்எஸ்எஸ் காரணமல்லவா?" என்று கேட்டதுக்கு, "கோத்ரா ரயிலில் கரசேவர்களை எரித்தால் ஆர்எஸ்எஸ் சும்மா இருக்குமா?" என்று திருப்பிக்கேட்டான். கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்த மதக்கலவரங்களில் நூற்றுக்காணக்கான முஸ்லிம்களும் இந்துக்களும் கொல்லப்பட்டனர். மாநில அரசு கலவரங்களை அடக்கத்தவறியது. முயலவே இல்லை எனலாம். காரணம் மோடி. இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய ஒரு கலவரத்தை, அடிபட்டு அடங்கட்டும் என்று விட்டுவிட்டவர். கலவரத்தின்போது ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே இழுத்து எறிந்து கொன்றார்களாம்.

images

ஜே ஆர், மோடி இருவருமே தேர்தலில் வெற்றி பெற்ற சூழ்நிலைகள் ஏறத்தாள ஒன்றே. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருந்த சமயம். மக்களுக்கு ஒரு மீட்பர் தேவையாக இருந்தார். 77ல் சிங்களவர்களுக்கு ஜே ஆர். 2014 இல் இந்தியர்களுக்கு மோடி. இருவருமே முதலாளித்துவத்தின் அடி வருடிகள். ஜே ஆரை யங்கி-டிக்கி (Yankie Dickie)  என்பார்கள். ஜேஆர் இனவாதி என்றால் மோடி மதவாதி. இருவருமே, கலவரங்களை அடக்கத்தவறியமைக்கு பொறுப்பேற்று, தார்மீக ரீதியில் பதவி விலகியிருக்கவேண்டும். 3000 டொலர் வைன் போத்தலை பரிசாக வாங்கிய ஊழல் சர்ச்சையில் பதவி விலகும் முதலமைச்சர்கள் உள்ள உலகம் இது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தடுக்கமுடியாதவர்கள், பதவியில்   அமர்ந்திருக்க எந்த தார்மீக உரிமையும் அவர்களுக்கு கிடையாது. அவர்களை தேர்ந்தெடுக்க மக்களுக்கும் உரிமை இல்லை. 

ஆனால் மோடிக்கான ஆதரவு அலை இவற்றை எல்லாம் தூக்கிவீசி விட்டது. அந்தவகையில் எல்லோரும் சொல்வதுபோல இது ஒரு சுனாமி அலையே. சாருநிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் கூட மோடியை ஆதரிக்கிறார்கள். கலவரம் பற்றிப் பேசினால், காங்கிரஸ் சீக்கியர்களை கொலை செய்யவில்லையா? என்கிறார் சாரு நிவேதிதா. என்ன வகை வாதம் இது? என்று புரியவில்லை. தார்மீக ரீதியில் இரண்டு கட்சிகளையுமே ஒரு எழுத்தாளன், சமூகவாதி என்று சொல்லிக்கொள்பவர் மறுதலிக்க வேண்டாமோ? வீண் விளக்கம் எதற்கு?

ஒருமுறை தவறு செய்த காரணத்தாலேயே மோடியை புறக்கணிக்க வேண்டுமா? இல்லையா? என்பது ஒவ்வொரு இந்தியனினதும் தனிப்பட்ட முடிவு. சிலருக்கு கலவரம் அவ்வளவு பெரிய விஷயமாக தென்படாது. அடிவாங்கினால்தான் வலி புரியும். இத்தனை பெரும்பான்மையிலும், ஒரு முஸ்லிம் எம்பி கூட பிஜேபி சார்பில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதையும் கணக்கில் எடுக்கவேண்டும். ஒருசிலர் கலவரத்துக்கு பின்னராக மோடியின் ஆட்சியை சீர் தூக்கிப் பார்த்திருக்கலாம். சிலருக்கு காங்கிரசுக்கு வேறு மாற்று இல்லாததால், இவருக்கு வோட்டுப்போட வேண்டிய தேவை இருந்திருக்கலாம். மோடிக்கும் தன்னை நிரூபிக்கவேண்டிய தேவையிருக்கிறது. இன்னொரு கலவரத்தை இந்தியாவில் அடக்கத் தவறினால் அது மோடியின் அரசியல் தற்கொலையாக மாறிவிடும். ஆக அவர் நேர்மையான ஆட்சியை தருவதற்கும் சந்தர்ப்பம் இருக்கிறது. மறுப்பதற்கில்லை. அந்த சந்தர்ப்பத்தை மிதவாத இந்தியர்கள் கொடுத்திருக்கிறார்கள் போலும்.

இதே நம்பிக்கையைத்தான் போரின் பின்னர் பல தமிழர்கள் மகிந்த மீதும் வைத்தார்கள். இன்னமும் வைத்திருக்கிறார்கள். இருக்கட்டும்.

ஈழத்தமிழரில் பலர் மோடியின் வெற்றியில் குதூகளிக்கிறார்கள். அவர்களுக்கு மோடியின் வெற்றியில் ஒரு சந்தோசம். ஈழத்தமிழனின் முதுகில் குத்திய காங்கிரஸ் அரசு தோற்றதில் இரட்டிப்புச் சந்தோசம். எங்களுக்கு இப்படியான அற்ப சந்தோஷங்கள் அவ்வப்போது கிடைப்பதுண்டு. நாங்கள் மகிந்தவை வீழ்த்த சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கவில்லையா? அதுபோலத்தான். சோனியா தோற்பதற்கு மோடியை ஆதரிக்கிறோம். மோடியின் கடந்தகாலம் எங்களை உறுத்தவில்லை. ஒரு ஈழத்தமிழன். இடம்பெயர்ந்து கனடாவில் வசிப்பவன். சோனியாவை இத்தாலிக்கு திரும்பிப் போகச்சொல்லுகிறான். சிரிப்புத்தான் வருகிறது.

மோடி ஈழத்தமிழருக்கு ஆதரவாளர் என்கிறார்கள். எங்கிருந்து இந்த கருத்து வந்தது? என்று தெரியவில்லை. மோடி ஈழத்தமிழருக்கு எதிராக இருக்கமாட்டார் என்பதற்கு எந்த முகாந்தரமும் இல்லை. சில தமிழர்கள் மோடியின் இந்துத்துவாவை தமக்குச் சாதகமாக பார்க்கிறார்கள். தப்பான, அபாயமான அரசியல் அது. ஈழத்தமிழர் எப்போதுமே இன அடிப்படையிலேயே தம்மை அடையாளம் காண்பவர்கள். மதத்தை முன்னிலைப்படுத்துவது படுபாதாளத்துக்குள் எம்மைத் தள்ளிவிடும். மேலும் எங்களுக்கு மோடியா? தமிழகமா? முக்கியம் என்றால் தமிழகமே மிக மிக முக்கியம். தமிழகம் திராவிட அரசியல் சார்பானது. எங்கள் வரலாற்றைப் புரிந்துகொள்ளாமல் தப்பான வாதங்களை முன்வைப்பது பெருஞ்சிக்கலையே தோற்றுவிக்கும்.

தவிரவும் மோடி ஒரு டிப்பிக்கல் அரசியல்வாதி. முதலாளித்துவ வலதுசாரி அரசியலில் தார்மீக நெறிகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடமில்லை. வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தைக்காக எதையும் செய்யக்கூடியவர் மோடி. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தான் ஒரு தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி மக்களிடம் அனுதாபம் தேட முயன்றவர். ஏற்கனவே பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று எல்லை நாடுகளுடன் பிரச்சனை. இந்த வேளையில் அவர் ஒரு அரசாங்கத்தை தேவையில்லாமல் எதிர்க்கமாட்டார். தொட்டும் தொடாமலுமே அரசியல் செய்வார். இப்படிப்பட்ட தலைவர்களை சமாளிப்பது இலங்கை ஜனாதிபதி மகிந்தவுக்கு அல்வா சாப்பிடுவதுபோல.

மகிந்த அரசு அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு அல்வா கொடுக்கவில்லையா? படகு மூலம் அகதிகளை அனுப்பும் வியாபாரம் செய்வதே மகிந்தவின் மகன் என்கிறார்கள். அதே நேரம் அவர்களே படகுகளை தடுக்கிறோம் என்று சொல்லி அவுஸ்திரேலியாவை வழிக்கு கொண்டுவருகிறார்கள். தாங்கள் காசுவாங்கி அனுப்பிய படகினை தாங்களே வழிமறிக்கிறார்கள். அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு உச்சி குளிர்கிறது.. வழமையாக மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் ஆவுஸ்திரேலியா, கடந்தமுறை இலங்கையின் புகழ் பாடியது. இந்தவகை அணுகுமுறையையே மகிந்த அரசு மோடியின் அரசாங்கம் மீதும் பயன்படுத்தும். மோடி ஒன்றும் தீவிரமான அமெரிக்க சார்பையும் எடுக்கப்போவதுமில்லை. அமெரிக்க இராஜதந்திரிகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு கொடுத்ததுபோல மோடி அரசாங்கத்துக்கு அழுத்தமும் கொடுக்கமுடியாது. இந்நிலையில் இலங்கை அரசும் மோடியும் நட்பு பாராட்டும் சூழ்நிலையே அதிகம்.

இதில் இன்னொருவிஷயமும் இருக்கிறது. மோடிக்கு ஈழத்து அரசியல் எந்த அளவுக்கு தெரியும்? என்பதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. மோடி இன்றைக்குத்தான் தேசியத்தலைவர் ஆனவர். நேற்று வரைக்கும் மோடி இந்தியாவின் வடகோடியில் இருக்கும் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தவர். குஜராத்தியரிடம் “விடுதலைப்புலிகள் யார்?” என்று கேட்டுப்பாருங்கள். “தமிழ்நாட்டு தீவிரவாதிகள்” என்பார்கள். ஈழத்து அரசியல் பற்றிய அவர்களது அறிவு அவ்வளவுதான். ஓரளவுக்கு ஈழத்து அரசியல் தெரிந்த பிஜேபி தலைவர், இலங்கைத் தூதுக்குழுவில் அங்கம் வகித்த சுஷ்மா சுவராஜ் மற்றும் யஸ்வந்த் சிங். இதில் சுஷ்மாவுக்கும் மோடிக்கும் ஆகவே ஆகாது. இந்த சூழ்நிலையில் ஈழத்தில் ஒரு சிக்கல் என்றால், அறிவுரைக்கு மோடி சோ.ராமாசாமியையே நாடுவார். அல்லது சுப்பிரமணியசுவாமி ஈழப்பிரச்னைக்கு தீர்வு சொல்லுவார். நிலைமை என்னாகும்? பெரும் அரசியல் முடிவுகள் பொதுவாக தனிமனிதர்களாலேயே எடுக்கப்படுபவை. இந்திரா, ஜேஆர், பண்டா, பிரபாகரன், பிரேமதாசா, மகிந்தா, ராஜீவ்காந்தி, ஏன் டிக்ஸிட், சிவசங்கர் மேனன், நம்பியார் கூட இந்தவரிசையில் வருகிறார்கள். இனிவரும் காலங்களில் அந்த தனிமனிதர் யார்? என்பதிலேயே முடிவுகள் தங்கியிருக்கின்றன.

உண்மையில் பிஜேபியின் தனிப்பெரும்பான்மை வெற்றி என்பது ஈழத்தமிழருக்கு பின்னடைவே. ஆண்டாண்டு காலமாக ஈழத்தமிழருக்கு இந்தியா சார்பாக கிடைத்த சின்ன நன்மையேனும் தமிழக அரசியல்கட்சிகளின் தூண்டுதலால்தான் உருவானது. அதை நாம் மறுதலிப்பது தற்கொலைக்கு சமானமானது. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று ஆளாளுக்கு நம்மை வைத்து அரசியல் செய்தார்கள். சிலசமயம் அவை நன்மை பயத்தது. சில சமயம் காவு வாங்கியது. எது எப்படியோ, தமிழக அழுத்தம் இல்லாமல் இந்திய மத்திய அரசாங்கம் எமக்கு ஏதும் சார்பாக செய்யுமா? என்பது சந்தேகமே. ஆனால் எதிராக செய்வதற்கு எவருடைய அழுத்தமும் தேவையில்லை. இந்த வகையில் பிஜேபி அரசாங்கத்துக்கு அதிமுகவின் தயவு தேவைப்படாமல் போனது எமக்கு துரதிர்ஷ்டமே. அதிமுக எந்தப்பெரிய வெற்றியை பெற்றிருப்பினும், அதில் எமக்கு பிரயோசனம் இல்லை. மோடியின் அபரிமிதமான வெற்றியை சில ஈழத்தமிழர்கள் கொண்டாடுவதிலும் அர்த்தம் எதுவுமில்லை. ஜெயலலிதா இனிமேல் தொடர்ச்சியாக சட்டசபையில் தீர்மானம் போடுவார். கருணாநிதி தந்தி அடிப்பார். மாணவர்கள் போராட்டம் நிகழ்த்துவார்கள்.   எமக்கு பயன் வரப்போவதில்லை.

இஸ்ரேலிய அரசியலில் ஒரு பொது நடைமுறை இருக்கிறது. இஸ்ரேலிய அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ, அமெரிக்காவின் எந்த அரசியல் கட்சிகளுக்கும் சார்பாக குரல் கொடுப்பதில்லை. அதேபோல் எதிராக கருத்து தெரிவிப்பதுமில்லை. அடிப்படையில் அவர்கள் குடியரசுக் கட்சியனருக்கு ஆதரவாளர்கள். ஆனால் அதனை வெளிக்காட்ட மாட்டார்கள். ஜனநாயக கட்சிக்கு பங்கம் வருவது போல கருத்து தெரிவிக்க மாட்டார்கள். சென்ற தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோமனி இஸ்ரேலுக்கு விஜயம் செய்தபோது, இஸ்ரேலிய மக்கள் அவரை வரவேற்றார்கள். ஆனால் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜனநாயக கட்சி விஜயம் செய்தாலும் இந்த நிலையே. ஏனென்றால் இஸ்ரேலுக்கு அந்த இரண்டு கட்சியுமே வேண்டும். எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது தயவு இஸ்ரேலுக்கு வேண்டும். எவரை எதிர்த்தும் அரசியல் செய்யமுடியாது. இதில் வீராப்புக்கு இடமில்லை. சுற்றுவர முஸ்லிம் நாடுகள். கரணம் தப்பினால் இஸ்ரேலின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும். 

jayalalitha_karunanidhi_tamil_nadu_20040322

ஈழத்தமிழருக்கு இஸ்ரேல் செய்யும் அரசியல் ஒரு பாலபாடம். அரசியல் சார்பு நிலைகளை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கக்கூடாது. ஜெயலலிதா ஒன்றும் கருணாநிதிக்கு எந்த அளவிலும் மேலும் இல்லை. கீழும் இல்லை. இரண்டு கட்சிகளுமே தங்கள் சுயலாபத்துக்காக எம்மை பயன்படுத்துபவை. கருணாநிதியை கருநாகம் என்று திட்டிப்பயனில்லை. மக்கள் பாடம் கற்பித்துவிட்டார்கள் என்று துள்ளுவதிலும் அர்த்தமில்லை. அடுத்த சட்டசபை தேர்தலிலேயே திமுக பெரும்பான்மையோடு வெற்றிபெற சந்தர்ப்பம் இருக்கிறது. இதுதான் யதார்த்தம். இதிலே ஈழத்தமிழ் உணர்வுகளுக்கு பெரிதாக இடமில்லை. வைகோவின் தோல்வியே அதற்கு நல்ல உதாரணம். எங்கள் மீதான அனுதாபம் அங்கே வாக்காக மாறுவதில்லை.

ஆனால் ஒவ்வொரு தமிழக குடிமகனும் ஈழத்தமிழரின் நிலை கண்டு கலங்குபவர்தாம். இதனால் எந்தக்கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அவர்களை எங்கள் சார்பாக எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்று பார்க்கவேண்டுமே ஒழிய, எதிர்ப்பு அரசியல் செய்யக்கூடாது. சகட்டுமேனிக்கு எல்லோரையும் கரித்துக்கொட்டுவது இனிவரும் காலத்தில் ஈழத்தமிழனை வளம் படுத்தப்போவதில்லை. வெறுமனே மேற்குலகத்தையும் இந்தியாவையும் திட்டித் தீர்ப்பதை விட்டுவிட்டு, எல்லாவற்றுக்கும் இது பூகோள பிராந்திய இராஜதந்திரம் என்ற வார்த்தை விளக்கம் கொடுப்பதை நிறுத்திவிவிட்டு, அந்த பிராந்திய இராஜதந்திர அரசியலை நாங்களும் செய்யத் தொடங்கவேண்டும். 

அவனை இவனை நம்பி பிரயோசனம் இல்லை. நாமே நம் விதியை தீர்மானிக்கவேண்டும் என்று ஒரு வாதம் இருக்கிறது. கொஞ்சம் விதண்டாவாதம். நாங்கள் சிறுபான்மையினர். அதுவும் உலகம் முழுதும் சிதறிக்கிடக்கும் வலுவற்ற சிறுபான்மையினம். உள்நாட்டில் முள்ளிவாய்க்கால் துயர்நாளில் ஒரு பீடியைக் கூட பற்றவைக்க முடியவில்லை.      வெளிநாடுகளில் அதே முள்ளிவாய்க்கால் மக்களுக்காக ஒரு நினைவுத்தூபி எழுப்பமுடியவில்லை. உலகில் ஒடுக்கப்பட்ட எந்த சிறுபான்மையினமும், பிராந்திய, சர்வதேச ஆதாயங்கள் இல்லாமல் விடுதலை பெற்றதாக சரித்திரம் இல்லை. ஒருநாட்டில் பெரும்பான்மையினம் ஒடுக்கப்ப்ட்டிருந்தால், அவர்களாகவே போராடி விடுதலை அடையலாம். தென் ஆபிரிக்கா, இந்தியா போன்றவை அவற்றுக்கு சிறந்த உதாரணங்கள். மற்றும்படி ஒரு சிறுபான்மை இனத்தின் விடுதலைக்கு, பிராந்திய, சர்வதேச அரசியல் ஆதாயங்கள் தேவைப்படுகிறது. பங்களாதேஷ், கிழக்குத்தீமோர், இஸ்ரேல் என்று எல்லாமே சர்வதேச பகடையாட்டத்தை தமக்கு சார்பாக பயன்படுத்தியவை. அதிலும் கிழக்குத்தீமோர், இஸ்ரேல் போன்ற நாடுகளிடமிருந்து  நாம் படிக்கக்கூடிய பாடங்கள் ஏராளம். 

எவரையும் நம்பத்தேவையில்லை. ஆனால் எல்லோரையும் பயன்படுத்த பழகவேண்டும்.

ஈழத்தமிழரின் எதிர்காலம், இந்த பகடையாட்டத்தில் எப்படி தம்மையும் பங்குதாரர்களாக்கி, ஆட்டத்தில் வெற்றிகொள்கிறோம் என்பதில் தங்கியிருக்கிறது. விலகிநின்று பண்ணும் எதிர்ப்பு அரசியலில் அல்ல.

****************

Contact Form