கோச்சடையான் - வடை போச்சே!

May 24, 2014 23 comments

 

kochadaiiyaan-rajinikanth-3

சுற்றிவர கோட்டை கொத்தளங்கள். பின்னணியில் அரச உடை அணிந்த மகளிரும், வீரரும் ஆட,   நடுவே தீபிகா படுகோன், செம கியூட்டாக “மெதுவாகத்தான்” என்று பாட காட்சி ஆரம்பிக்கிறது. இருபது செக்கன்கள் கழித்து தலைவர், படு ஸ்மார்ட்டாக நடந்துவருகிறார். “எனை ஈர்க்கிறாய், பழி வாங்கவா” என்னும்போது தீபிகாவின் சேலை தலைப்பை ஸ்டைலாக தூக்கிப்போட, தீபிகா வெட்கப்பட்டு ஓடுகிறார்.  தலைவரின் அதகளம் ஆரம்பிக்கிறது. “அன்னம், மடவண்ணம்” என்னும்போது மிகவேகமான நடை. “கொடிவேண்டுமா, குடை வேண்டுமா“ என்ற ஒவ்வொரு தாள கட்டுகளிலும், இருவரும் சேர்ந்து தோன்றும் ஒவ்வொரு பிரீசிங் காட்சிகளிலும் ஒரு கட். ஒருமுறை கண் மேலே எகிறும். மற்றப்பக்கம் நாடி தாழ்ந்து காதலுடன் பார்க்கும்.  “படை வேண்டுமா, பகை வேண்டுமா, உனைப்போல வேறார் ஏது?” என்னும்போது எஸ்பிபி சிரிப்பும் சேர்ந்துகொள்ள, தலைவர் நளினமாக அதற்கு எக்ஸ்பிரஷன் கொடுக்க, அப்படியே பிரமாண்டமான பின்னணி நடனங்கள் சேர்ந்துகொள்ள…..

அந்தக்கணமே தூக்கம் கலைந்து எழுந்தேன். பார்த்தால் விடியக்காலமை மூன்று மணி. கோச்சடையானை அந்தக்கணமே பார்க்கவேண்டும்போல. தலைவரின் ரோமான்சை, ஆக்ஷனை, நடையை, டயலாக்கை, தல சும்மாவே சதிராடும். அரசகதை வேறு.  மின்னி முழங்கியிருக்குமே. அதிகாலையில் எந்த ஷோவும் கிடையாதே. அன்றைக்கு மாலைக்காட்சிக்கு போகும்வரைக்கும் கோச்சடையான் பாடல்கள்தான். காரில், வீட்டில், அலுவலகத்தில், மாசில் வீணையே, மாலை மதியமே, வீசு தென்றலே என்று ஒரே கோச்சடையான் தேவாரம்தான். எப்போதடா இரவு வரும் என்றிருந்தது.

சூப்பர்ஸ்டாரை தானும் பார்க்கவேண்டும் என்று அம்மா அடம்பிடிக்க, அம்மா, அப்பா, மனைவி, நான் என்று நான்கு டிக்கட்டுகள். தியேட்டருக்கு போய் 3D கண்ணாடிகளை வாங்கிக்கொடுக்க, அப்பா அப்போதே கண்களில் மாட்டிவிட்டார். கறுப்புக் கண்ணாடியில் ஆள், பிரிவியூ ஷோ பார்க்கவந்த கருணாநிதி மாதிரி இருந்தார். “ஆட்கள் எல்லோரும் கலங்கலாக தெரிகிறார்கள்” என்று குறைப்பட்டுக்கொண்டார். உள்ளே தியேட்டரில் முப்பது பேர்கள் கூட இருக்கமாட்டார்கள். அதில் ஐந்தாறு வெள்ளைகளும் அடக்கம். பின்னே? அவதார், டின்டின் படங்களுக்கு பின்னர் மோஷன் கப்ஷரில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஒரு படத்துக்கு சர்வதேச ரீதியில் எதிர்பார்ப்பு இருப்பது ஆச்சரியம் இல்லையே.

“இனி கண்ணாடிகளை அணிந்துகொள்ளுங்கள்” என்று திரையில் வாசகம் தோன்றிய பின்னர், அப்பர் ஏனோ கண்ணாடியை கழட்டி மீண்டும் மாட்டினார். படத்தின் முதல் ஐந்து நிமிடங்கள் மோஷன் கப்ஷரிங் என்றால் என்ன? என்று டொக்கியூமேண்டரியில் மொக்கை போட்டார்கள். அதற்குப்பிறகு சூப்பர் ஸ்டார் என்று திரையில் ஒவ்வொரு எழுத்தும் 3Dயில் பளிச் பளிச் என்று பரவ, இருந்த கொஞ்சக்கூட்டமும் விசில் அடிக்கத்தொடங்கியது. ”தலைவா” என்று என்னையறியாமல் கரகோஷம் எழுப்ப ஆரம்பித்தேன். நல்லூர் தேரிலே கந்தசாமியார் ஏறும்போது கிடைக்குமே அந்த பரவசம். அது. இதற்கே இப்படி என்றால் தலைவர் திரையில் தோன்றும்போது எப்படி இருக்கும்? எனக்கு இருப்புக்கொள்ளவில்லை.

படம் ஆரம்பிக்கிறது. முதலில் கொஞ்சம் சிலைகளைக் காட்டி காட்டியே கதையை சொல்லுகிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஒரு குழம்புச்சட்டிக்குள் ஒரு சரவச்சட்டி மிதக்கிறது. அந்தச் சட்டிக்குள் ஒரு சிறுவன் இருக்கிறான். என்னடா இது? என்று மனைவியிடம் கேட்க “யோவ் அது குழம்புச்சட்டியில்ல, கடல், உள்ளுக்க குட்டியாய் இருக்கிறது ஓடம்” என்றாள். என்னாடா இது பேஜாரா போயித்து. சரிவிடு நம்மாளு வரும்போது சட்டி என்ன? முட்டி என்ன?

கலிங்கபுரி நாட்டின் மிகச்சிறந்த வீரன் ராணா. பல போர்களை வென்றவன். மன்னருடைய மகனின் உற்ற நண்பன். அவனையே சேனாதிபதியாக நியமிப்பது என்று அரசர் முடிவு செய்கிறார். அவனை அழைத்துவர கட்டளை இடுக்கிறார். நம்மாளுக்கு மெசேஜ் போகிறது. குதிரை போல ஒன்று, பாய்ந்து பாய்ந்து வருகிறது. காடு மலைகள் எல்லாம். ஒரு இடத்தில் மலைகளுக்கிடையே பெரிய இடைவெளி. கடவுளே எப்படி குதிரை தாண்டப்போகிறது என்று மொத்த தியேட்டருமே சீட் நுனிக்குச் சென்றுவிட்டோம். குதிரை எம்பிக் குதிக்கிறது. குதிக்கையில் ஸ்லோ மோஷனில் குதிரை வீரனின் முகம் தெரிய .. தெரிய, ரகுமான் மியூசிக் அதிர்கிறது. நம்மாளுக “தலை…” என்று கரகொஷிக்க தொடங்கி “வா” என்று முடிக்கமுதல் முழு முகமும் திரையில் தெரிய , மொத்த தியேட்டருமே காற்றுப்போன பலூன் கணக்காய் பஸ்க்கென்று பம்மியது.

“டேய் இந்த மொக்கையை விட்டிட்டு மோஷன் கப்ஷரிங்ல பிடிச்ச நம்ம தலைவனை காட்டுங்கடா.”
”இதாண்டா அது”
”அடப்… பாவிகளா…”

17726_thumb_665

கதை என்ன? கலிங்கபுரியின் சேனாதிபதி ராணா. உண்மையில் ஒரு அண்டர்கவர் ஏஜண்ட்! கலிங்கத்தில் சிறைப்பட்டிருக்கும் கோட்டைப்பட்டணத்து வீரர்களை மீட்பதற்காக அங்கேயே வளர்கிறார். வளர்ந்து வீரனாகி, நாட்டின் சேனாதிபதியாகி, இளவரசனின் நண்பனாகி, அவனை ஏமாற்றி, வீரர்களை மீட்டுக்கொண்டு கோட்டைப்பட்டணம் வருகிறான்.

இங்கே கோட்டைப்பட்டணத்தில், நாசர் மன்னர், சரத்குமார் இளவரசர். அவரும் ராணாவும் நண்பர்கள். சரத்குமாரின் தங்கையான தீபிகா படுகோனை ராணா லவ்வுகிறார். ராணாவின் தங்கை ருக்குமணியை சரத்குமார் கவ்வுகிறார்.  இதற்கிடையில் திருப்பமாக மன்னரை யாரோ கொல்ல முயற்சிக்கிறார்கள். பார்த்தால் அது வேறுயாருமில்லை. ராணா. சிறைப்படுகிறான். ராணா ஏன் கொல்ல முயற்சிக்கிறான்? என்பதற்கு பிளாஷ்பேக். “நீங்க யாரு … பாம்பேயில நீங்க என்ன செய்திட்டிருந்தீங்க?” என்கின்ற பாஷா மொமென்ட் அது.

பிளாஷ்பக்.

“சம்போ சிவசம்போ” என்று தாண்டவம் ஆடும் கோச்சடையான் அறிமுகம். அவர்தான் அப்போது கோட்டைப்பட்டணத்தின் தளபதி. பெரும் சிவபக்தன். சிறந்த வீரன். அவர் புகழ் மன்னனை விட அதிகமாக பரவுகிறது. இருவர் படத்தில் கூட்டத்தில் கருணாநிதி பேசிக்கொண்டிருக்கும்போது, இடையில் எம்ஜிஆர் வரும்போது கூட்டம் ஆரவாரிக்குமே, அதுபோல கோச்சடையானுக்கும் ஆரவாரிக்கிறது. மன்னர் பொறாமைப்படுகிறார். கோச்சடையானுக்கு கலிங்கம் செய்கின்ற ஒரு சதியாலே பின்னடைவு வருகிறது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மன்னர் அவருக்கு மரணதண்டனை விதிக்கிறார். மகன் கண்முன்னாலேயே தலை உருளுகிறது.

இப்போது மீண்டும் ராணா காலத்துக்கு. எப்படி ராணா சிறையிலிருந்து மீள்கிறான், மன்னரையும், போர் தொடுத்துவரும் கலிங்கத்தையும் வெல்கிறான் என்பதே மீதிக்கதை. கிளைமக்ஸில் சேனா என்கின்ற ராணாவின் சகோதரன் அறிமுகமாக படம் முடிகிறது.

கோச்சடையான் பாத்திரமே படத்தில் மிக வலிமையானது. வெகு சிரத்தையோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவர் வருகின்ற காட்சிகள் ரசிக்கவும் வைக்கின்றன. ராணா பாத்திரம் கொஞ்சம் உறுத்தலானது. “பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது” என்று கோச்சடையான் அட்வைஸ் பண்ணுவார். அவருடைய மகனான ராணா, ஹீரோ, நண்பனை ஏமாற்றி கலிங்கத்திலிருந்து வீரர்களை மீட்கிறார். கோச்சடையான் “எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு. முதல் வழி மன்னிப்பு” என்பார். ராணா படத்தில் எவரையும் மன்னித்ததாக தெரியவில்லை. எல்லோருடைய தலைகளும் பறக்கின்றன. சரத்குமார் பாத்திரம் எங்கே காணாமல் போனது என்று கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை வைக்கவேண்டும்.  அவர் எங்கே என்று கண்டுபிடிக்கப்படும்போது ஷோபனா எங்கே என்கின்ற கிளூவும் கிடைக்கலாம்.

எது என்னவோ, கோச்சடையானின் கதை செமையாக அடித்தாடக்கூடிய அரச கதை. சாண்டில்யன், கல்கி போன்றவர்கள் எழுதியிருந்தால் ஒரே மூச்சில் படித்திருப்போம். நிறைய திருப்பங்கள். சுவாரசியமாகியிருக்கக்கூடிய பாத்திரங்கள், பிரமாண்டத்துக்கான அடித்தளம் என்று இந்தக்கதை ரஜனி என்ற நடிகனுக்கு தீனி போடக்கூடிய கதை. திரைக்கதையில் கூட ரஜனியினுடைய அத்தனை பிளஸ் போயிண்டுகளையும் வெளிக்கொணரக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன. வசனங்களும் கலக்கல். இது ரஜனிக்கு டெயிலர்மேட் கதை. ரஜனிக்கு நோய் வராமல் இருந்திருந்தால், அனிமேஷன் இல்லாமல் சாதாரணமாக கே.எஸ்.ரவிக்குமாரினால் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்குமேயானால், இன்னொரு சந்திரலேகா, கர்ணன் போன்று ஒரு கலக்கு கலக்கியிருக்கும். ப்ச்..விதி வலியது.

கதைக்கு அடுத்ததாக படத்தில் எனக்கு பிடித்தது ஓவியங்கள். பின்னணி காட்சிகளும், கோட்டை கொத்தளங்களும், யுத்தகளமும், அவற்றின் வடிவமைப்புகளும் என்று ஓவியங்கள் மிக அழகாக கோச்சடையானில் அமைந்திருக்கிறது. மெதுவாகத்தான் பாடலின் பின்னணி மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கும். கப்பல் சண்டை, தாண்டவம் பின்னணி, நாகேசின் சிற்பச்சாலை என்று எங்கெனும் ஓவியரின் கை வண்ணம் மிளிர்கிறது. அதிகம் பேசப்படாத கலைஞர்கள் அவர்கள். ஆனால் அனிமேஷன் படங்களின் மூலங்களில் முக்கியமானவர்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட்.

கமலைப்பற்றி எல்லோரும் ஒன்றைச் சொல்வார்கள். அவர் நடிப்பென்று வந்துவிட்டால், ஒரு கழுதையை முன்னால் கொண்டுவந்து நிறுத்தினால்கூட அதைப்பார்த்து காதலிப்பார். அவர் பார்வையில் அந்தக் கழுதைக்கும் காதல் வந்துவிடும். அது ஏ ஆர் ரகுமானுக்கும் பொருந்தும். படம் கழுதையா, ஹன்சிகாவா என்று எதைப்பற்றியும் ரகுமான் யோசிக்கவில்லை. “ஏ கர்ம வீரனே, கடமை வீரனே” என்று ரகுமான் தன்னைத்தானே பார்த்து பாடியிருப்பார் போல. பாடல்கள் அத்தனையும் சொக்கத்தங்கங்கள். “மெதுவாகத்தான்” அதன் உச்சம். கூடவே “மந்தி உருட்டும் மயில் முட்டை”, “திருமணப்பாடல்கள்”, “மாசில் வீணையே” என்று எல்லாமே சிக்ஸர்கள்தான். பின்னணி இசையைப்பற்றி கேட்கவேவேண்டாம். எவ்வளவு நாட்களுக்குத்தான் சூரியனுக்கு டோர்ச் அடிப்பது? ரகுமான் இசையமைத்திருக்கிறார். டொட்.

வைரமுத்துவுக்கும் அடித்து ஆடக்கூடிய களம். நிறைய சிக்ஸர்கள். அதில் சில ஹைலைட்டுகள் இதோ.

“கைப்பொருள் யாவும் கரைந்தாலும்
கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோற்பேன்”

”வாழை மரம் போல  என்னை
வாரி வழங்குவேன் !
ஏழைக்கண்ட புதையல் போல,
ரகசியம் காப்பேன்”

இனி, அனிமேஷனுக்கு வருவோம்.

கில்லி படத்திலே போலீஸ் மோப்ப நாய்கள் விஜய்யின் வீட்டைத் தேடி மிகவேகமாக வருகின்றன. அவற்றுக்கு போக்கு காட்டவேண்டும். கீழே வீதியால் நாய்கள் ஓடிக்கொண்டிருக்க, நம்மாளு அணில், மிளகாய்த்தூளை கட்டடத்தின் மேலிருந்து கொட்டுவார். கொட்டும்போது ஒரு கட்டடத்திலிருந்து இன்னொரு கட்டடத்துக்கு தாவுவார். அப்போது படத்தில் வருகின்ற கிராபிக்ஸ் செம மொன்னையாக, இங்கிருந்து அங்கே மவுஸ் பொயின்டரால் போல்டரை இழுத்து கொப்பி பண்ணுவதுபோல இருக்கும்.

அந்த கில்லி படத்து சரித்திரப் பிரசித்தி வாய்ந்த கிராபிக்சை விட மோசமானது கோச்சடையானுடைய அனிமேஷன். மோஷன் கப்ஷரிங் மோஷன் கப்ஷரிங் என்று பீலா விட்டானுக. மொஷனை கப்ஷர் பண்ணினாங்களா மோஷன் போவுறதை கப்ஷர் பண்ணினாங்களான்னு ஒரே டவுட்டா இருக்கு. அத்தனை பாத்திரங்களும் கிராபிக்சில் வரைந்தது போன்றே வருகிறது. உயிர் இல்லை. அனிமேஷன் பாத்திரத்துக்கு ஏது உயிர் என்று கேட்காதீர்கள். மிகச்சிறந்த அனிமேஷன் படங்களான டோய்ஸ்டோரி, ஐஸ் ஏஜ், அவதார் போன்றவற்றின் வெற்றிகள் எல்லாம் அவற்றில் வரும் பாத்திரங்களுக்கு ஜீவன் கொடுத்ததாலேயே சாத்தியமானது. கோச்சடையானில் அது மிஸ்ஸிங். ஆனால் கோச்சடையானின் தாண்டவம் இதில் விதிவிலக்கு.

மற்றையது, காட்சியில் வருகின்ற பாத்திரங்களும் ஏனைய விஷயங்களும் ஒரு ப்ரோபோஷனில் இல்லை. குதிரைகள் எல்லாம் டைனோசர் உயரத்தில் இருக்கின்றன. போர்க்கப்பலில் ஒரு காட்சியில் கோச்சடையான் குளோசப்பில் நோர்மல் சைஸில் இருப்பார். கயிற்றில் தொங்கும்போது எறும்பு சைஸுக்கு போய்விடுவார். ஆட்கள் நின்றால் தரையில் கால்படாது. ஒவ்வொரு காட்சியினது உயிரோட்டமும் இப்படியான மொன்னை கிராபிக்ஸினால் அறவே இல்லாமல் போகிறது. இந்த வகை விஷயங்களை சாதாரணமான கேம் மென்பொருளில் கூட கவனிப்பார்கள். ம்ஹூம்.

யாரோ ஒரு அரசனுக்கு உயிர் ஒரு கிளியின் கழுத்தில் இருக்குமாம். அதுபோல ரஜனியின் ஜீவன் அவர் கண்களில்தான். காதல், வீரம், கோபம், சோகம் என்று ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொரு மொழி பேசும் ஆச்சரிய கண்கள் அவை. குட்டிக் கண்களில் ஒன்று மேலே பார்த்தால் மற்றொன்று கீழே பார்க்கும் அதிசய நடிப்பு அவருடையது. இந்தப்படத்தில் ரஜனியின் கண்கள் எப்போதுமே விட்டத்தையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்கும். தீபிகா படுகோனை பார்க்கும்போதும் ரஜனியின் கண்கள் பனைவட்டையே பார்க்கின்றன. ஏன் பாஸ் அப்படி ஒரு விரக்தி என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது தீபிகா!

deepika-padukone-still-from-kochadaiyaan_1394439744160

தீபிகா படுகோன், சிரிக்கும் போதெல்லாம், பார்ப்பவன் அந்த இடத்திலேயே பேதி போகிறான். செம டெரரா இருக்கு பாஸ். என்னாத்த கப்ஷர் பண்ணி மூஞ்சில போட்டானுகளோ தெரியேல்ல. தீபிகா தப்பித்தவறி இந்தப் படத்தை பார்க்க நேரிட்டால், தற்கொலை முடிவுக்கும் போகலாம். அவ்வளவு மோசம்.  அதுவும் மெதுவாகத்தானில் இருக்கும் சில நடனங்கள். சர்க் சரக்கென்று கால் கையை அடித்து, கல்வியங்காட்டுச் சந்தியில், கோழி வாங்கி உரிக்கையில், அது படக் படக்கென்று செட்டை அடிக்குமே. ஞாபகம் வந்தது. கொஞ்சம் கூட நளினம் இல்லை. அதான் வருதில்லையே சவுந்தர்யா? பின்ன எதுக்கு அந்த ரிஸ்க்கி அனிமேஷன் எல்லாம்? இந்த விருத்தத்தில, “எங்கே போகுதோ வானம்” பாட்டில் சவுந்தர்யா கூட எட்டிப்பார்க்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் பாணி. முடிவில் தொடரும் என்றுவேறு போட்டு எம்மை டென்ஷனாக்குகிறார்கள். அதற்குப்பிறகு நிஜ சவுந்தர்யா “பிகைண்ட் த ஸீன்” காட்சிகளில் கை தட்டி முடித்து வைக்கிறார். தியேட்டரில் ரியாக்ஷனே இல்லை. முன்னாலிருந்தவன் செம குறட்டை. அந்தக் கைதட்டுக்கும் எழும்பவில்லை.

அனிமேஷனில் இருக்கின்ற அத்தனை குளறுபடிகளும் சேர்ந்து நன்றாக இருந்திருக்கக்கூடிய திரைக்கதையை பாதித்துவிட்டது. காட்சிகள் ஒரு கொண்டினியூட்டி இல்லாமல் இருப்பதால் படத்தின் ஓட்டம் தடைப்படுகிறது.  தலை இடிக்கிறது. அனிமேஷன் படங்களில், ரசிகர்களை ஒன்றவைக்க இந்த கொண்டினியூட்டி மிக முக்கியம். உறுத்தாமல் எம்மை மயக்கும் எடிட்டிங் முக்கியம். டோம் அண்ட் ஜெரி போன்ற கார்ட்டூன் படங்களின் வெற்றிக்கும் இந்த கொண்டினியூட்டியே மிக முக்கியமான காரணம். இதில் வேகமான, மெதுவான காட்சி என்று ஒன்றில்லை. உறுத்தாமல் இருக்கவேண்டும். அவ்வளவே. அது கோச்சடையானில் டோட்டலாக அவுட். சர்க் சர்க்கென்று சுதாரிக்க முதலேயே காட்சிகள் மாறுகின்றன. பிரேமுகள் படக் படக்கென்று உருளுகின்றன. காரணம் பிஃல்லிங் பிரேமுகளுக்கு அதிகம் இவர்கள் மெனக்கெடவில்லை. இந்தவகைப்படங்கள் எடுப்பதற்கு குறைந்தது ஐந்துவருடங்களாவது வேண்டும். சின்ன சின்ன சலனங்களையும் பார்த்து பார்த்து செதுக்கவேண்டும். இதை இரண்டு வருடங்களில் எடுத்துவிட்டோம் என்று பெருமையுடன் சொல்லுவதில் எந்த அர்த்தமுமில்லை.

இந்தியாவின் முதல் மோஷன் கப்ஷரிங் திரைப்படம், பட்ஜட் பத்மநாதன், சவுந்தர்யாவின் முதல்முயற்சி என்ற கதைகள் எல்லாவற்றையும் மூட்டைகட்டி வையுங்கள். இது ஒரு இலவச படம் என்றால் பார்த்து ஊக்குவிக்கலாம். ஆனால் காசு கொடுக்கிறோம். அதுவும் அவதார், டின்டின்னுக்கு கொடுத்த அதே பணம். கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம். எனவே தரத்தில் குறைவாக இருந்தால் பார்ப்பவன் விமர்சிக்கவே செய்வான். முதல் முயற்சி என்பதற்காக “Apple 1” கணணியை எல்லோரும் பாராட்டிவிடவில்லை. மணிரத்னம் பகல்நிலவு, இதயக்கோவில் எடுத்தபோது எவருமே அவரை கொண்டாடவில்லை. ஏனென்றால் இதயக்கோவில் ஒரு மொக்கைப்படம். அவ்வளவுதான். ரஜனி குசேலன், கதையுள்ள படம் நடிக்கிறார் என்று எவராவது ஊக்குவித்தார்களா. இல்லையே. படம் மோசம். அவ்வளவுதான் விஷயம். இங்கே எந்த ரசிகனும் சவுந்தரியாவை ஊக்குவிக்கவோ, இந்திய சினிமாவை வளர்க்கவோ பணம் கொடுப்பதில்லை. அவன் தான் திருப்தியாக படத்தை ரசிக்கவே பணம் கொடுக்கிறான். அந்த திருப்தியை கொடுக்காவிட்டால் திட்டவே செய்வான். சமயத்தில் கொடுத்த காசுக்கும் மேலாக.

ஒரு குட்டிக்கதை.

நம்மாளு ஒருத்தனுக்கு நல்ல பசி. சாப்பிடுவோம் என்று கடைக்குப் போகிறான். கடையில் ஸ்பெஷல் தோசை இருக்கு என்கிறார்கள். உலகத்திலேயே முதன்முதலில், யாழ்ப்பாணத்தில், சதுர வடிவில் தோசை சுடுகிறோம் என்று அறிவிக்கிறார்கள். தொட்டுக்கொள்ள டொமாட்டோ சோஸ் தருகிறோம் என்றும் சொல்கிறார்கள். இவனுக்கு ஆர்வம் தாங்கமுடியவில்லை. தீர்ந்து போனாலும் போய்விடும் என்ற பயத்தில் பத்து தோசைகளுக்கு உடனடியாக ஓர்டர் கொடுக்கிறான். தோசை வருகிறது. சதுர வடிவம் இல்லாமல் தோசை கோணல்மாணலாக இருக்கிறது. அவனுடைய வீட்டில் அவ்வப்போது சுடுகின்ற தோசைகூட பிழைத்துவிட்டால், அந்த ஷேப்பில்தான் வருவதுண்டு. இவனுக்கு கோபம். ஏன் தோசை சதுரமாக இல்லை? என்று கேட்கிறான். கடைக்காரன் “இது முதல் முயற்சிதானே தம்பி” என்கிறார், டொமாட்டோ சோஸ் கொஞ்சம் தொட்டுப்பார்க்கிறான். பயங்கரப்புளி. கடைக்காரரிடம் கேட்கிறான். அவர் “ஹோம் மேட் சோஸ் தம்பி” என்கிறார். தோசையை வாயில் வைத்துப்பார்த்தால் அது இன்னமும் மோசம். “அரிசி ஊறப்போட அவகாசம் இல்லை தம்பி, இது கோதுமை மாவுல கரைச்சது” என்று விளக்கம் வருகிறது. இவன் கடுப்பாகிவிட்டான். “இந்த தோசையை வீட்டிலேயே சுட்டிருப்பேனே” என்று கோபத்துடன் கிளம்புகிறான். வெளியே வந்து கடை போர்டைப் பார்க்கிறான். “கோச்சடையான் உணவகம்” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டு, கடை போர்டில் கோச்சடையான் வணங்கியபடி நிற்கிறார். பக்கத்திலேயே கழுத்தில் மாலையுடன் சிவலிங்கம் படம்.

“தோசைண்ட திறத்துக்கு, ஆட்டுக்கல்லுக்கு மாலை வேற போட்டிருக்கிறாங்கள்”

என்று சொல்லிக்கொண்டே 3D கண்ணாடியை தூர எறிந்துவிட்டு கோபத்துடன் ரசிகன் வீட்டுக்குப் போகிறான்.

******************


தொடர்புடைய பதிவுகள்:

கோச்சடையான் -  இது சும்மா ட்ரைலர் கண்ணு.
என் கொல்லைப்புறத்து காதலிகள் : சூப்பர்ஸ்டார்
மணிரத்னம் எழுதிய கவிதை.
உயிரேந்தும் கற்றாளை.

Comments

 1. Mokka pad am kazhisadayaan

  ReplyDelete
 2. சரியான விமர்சனம் J.K. தமிழ் நாட்டின் பல விமர்சகர்கள் ஆஹா ஓஹோ எண்டு புளுகி இருக்கிறார்கள். நான் மிக நீண்ட காலமாக அவர்களின் விமர்சனங்களை வாசித்து வருகிறேன்.முன்னர் நடுநிலையாக விமர்சித்த பிரபல வலை பதிவாளர்கள் இப்போது அதில் தவறி வருகிறார்கள்.அதுவும் பெரும் நடிகர்களின் படங்கள் என்றால் பம்மியே விடுகிறார்கள். Kochchadaiyan Trailer ஐ காச்சு காச்சு எண்டு காச்சின ஒருத்தர் Main Picture ஐ புகழுகிறார்.ஒரு வலை பதிவாளர், பட தரப்பில் (கோச்சடையான் தரப்பு அல்ல ) இருந்து அழுத்தம் வருவதாக தானே ஒத்துக் கொள்கிறார். பணம் பாதாளம் வரை பாய்கிறது போல் தெரிகிறது. (Anbudan Vimal)

  ReplyDelete
  Replies
  1. நன்றி விமல். சிலர் தாம் சார்ந்த படங்களுக்காக விமர்சனம் பண்ணுகிறார்கள். விமர்சனங்கள் எல்லாமே நடுவுநிலைமையாக இருப்பதில்லை. தவிர என்னுடையது என் ரசனையின் அடிப்படையிலான பார்வையே. படம் ஹிட்டாகுமா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது. படம் பார்த்த அனுபவத்தை ஒரு கட்டுரை வடிவில் ரசிக்கும்படியாக முயற்சித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறுகள் இதில் இருக்கலாம். எல்லோரும் உடன்பட வேண்டியதுமில்லை.

   Delete
 3. ரொம்ப நன்றி தல - என்னோட வடைய காப்பாத்தி தந்ததுக்கு!!
  உங்க மொத்த விமர்சனத்த விட, கடைசியா சொன்னீங்களே ஒரு குட்டி கதை - with that final touch [comment] - classic boss!!! :D
  Uthayan

  ReplyDelete
  Replies
  1. இப்போதான் நெட்ல பாத்து முடிச்சோம் நானும் மகனும்!
   அவனுக்கென்னமோ கொஞ்சம் பிடிச்சுது. எனக்கு 'நாகேஷ்' போஷன் மட்டும் ஓரளவுக்கு புடிச்சுது - முக்கியமா குரல் குடுத்தவனுக்கு ஒரு கும்புடு!

   Delete
  2. I think it would have been little better in the theater than in TV/Computer. Still is it worth the go? I wouldnt think so.

   Delete
 4. Wonderful! Athuvum... Thalaivaroda kannai pathi oru comment pottiruntheengale! Perfect! Avarukku udambu nadikka vendaam... kanne nadikkum! Athai suthama keduthu vachchirukkaanga! Had a great laugh... at the same time, felt so bad!

  ReplyDelete
 5. விமர்சனத்துக்கு நன்றி பொஸ்:

  நல்லவேளை இரண்டு வாரம் கழித்து படம் பார்ப்போம் என்று நினைச்சு தள்ளிப் போட்டது. எப்படியும் 1 டொலர் டி.வி.டி வந்துடும், அப்ப பார்க்கின்றேன்.

  - நிழலி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நிழலி.

   Delete
 6. படம் பார்க்கவில்லை , விருப்பமும் இல்லே.குட்டி கதை கலக்கல் .செம டச்.

  ReplyDelete
 7. பிறேம்குமார்6/03/2014 7:58 pm

  படம் பார்க்கவில்லை. பார்க்கத்தேவையுமில்லை என்று நினைக்கின்றேன்.

  ReplyDelete
 8. தாங்கள் வழங்கிய - தங்களின் அனுபவத்தை மிகவும் ரசித்தேன்.. மேலும் அந்த தோசைக் கதை - சுவை!..

  ReplyDelete
 9. சுவையான தோசை கதையுடன் அருமையான விமர்சனம்
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.!

  ReplyDelete
  Replies
  1. நன்றி இராஜராஜேஸ்வரி .. வலைச்சரத்தில் இத்தோடு பத்துமுறையாவது அறிமுகமாகியிருக்கிறேன் :D

   Delete
 10. நிஜத்தை எடுத்துச் சொல்லுவது உண்மையான சினிமா ரசிகனின் கடமை. நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி உங்கட கருத்துக்கு அண்ணே.

   Delete
 11. எனக்கும் இது ஒரு சோகக்கத ....விடுங்க தல நம்ம தளபதி காட்டிலுமா .

  ReplyDelete

Post a comment

Contact form