தொப்பி

Jun 5, 2014

2

1990ம் ஆண்டு.

நமசிவாயம் மாமா, அப்போது ஒரு பிரபல பாடசாலையில் கணித ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார். கந்தர்மடம் சனசமூக நிலையத்தலைவர். ரெயில்வே ரோட்டுக்கு பக்கத்தில் இரண்டு வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கும் “சாமி”யாடும் கோயிலின் தர்மகர்த்தா. இப்படி ஊரிலே அவருக்கு பல பதவிகள்.  மாமாவை அவ்வப்போது பரமேஸ்வராச்சந்தி கூப்பன் கடையிலும் காணலாம். மனேஜருக்கு பக்கத்தில் தகரக்கதிரை ஒன்ரைப்ப்போட்டு உட்கார்ந்திருப்பார். ஆட்களுக்கு கொமெண்ட் அடிப்பார். கியூ வரிசை குழம்பினால், சரத்தை மடித்துக்கட்டி, நாலு ஏச்சுப்போட்டு சரிப்பண்ணிவிடுவார். மனேஜர் சாப்பிடப்போகின்ற சமயங்களில் பில் போடுவார். கந்தர்மடம்  பிள்ளையார் கோயில் திருவிழாவில் சாமி வீதியுலா வரும்போது, கும்பம் வைத்து சுண்டல், வடை எல்லாம் கொடுப்பார்.
நமசிவாயம் மாமா அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை.
“இந்தச்சனத்துக்கு நாம செய்யாம வேற ஆரு செய்யிறது?”
மாமா எங்களது குடும்ப நண்பர். தூரத்துமுறையில் உறவும்கூட. அடிக்கடி வீட்டுக்கு வருவார். ஹோலுக்குள் இருந்தவாறே சிகரட் பிடிப்பார். சாம்பலை கதிரைக்கு பக்கத்திலேயே தட்டுவார். சின்ன பனங்கட்டியும் வெறும் தேத்தண்ணியும் கொடுத்தால் அடுத்த இருபது வருட ஈழத்து அரசியலை எதிர்வு கூறுவார். நாங்கள் யாரும் சிக்கினால், கதை ஐம்பத்தாறிலிருந்து ஆரம்பிக்கும். மாவட்டசபை தேர்தல் சமயத்தில் எலெக்சன் டியூட்டி பார்க்கும்போது அடிவாங்கிய கதையை அவர் சொன்னால் சுவாரசியமாக இருக்கும். சலிக்காதீர்கள். மாமாவைப்பற்றிய இந்த விவரணங்கள் இந்தக்கதைக்கு தேவையானது.
ஏனெனில் இந்தக்கதை மாமாவைப் பற்றியதல்ல.
ஒருநாள், பின்னேரம் ஐந்து மணியளவில் நமசிவாயம் மாமா எங்கள் வீட்டுக்கு வந்தார். சைக்கிள் கரியரில் ஒரு பெரிய சாக்கு மூட்டை. பொதுவாக சைக்கிளை ஒழுங்கை வாசலிலேயே விடுபவர் அன்றைக்கு கவனமாக முற்றத்து மாமரத்துக்கு கீழே சாய்த்தார். அவர் முகத்தில் நல்ல சந்தோசம். ஏன்? என்று விளங்கவில்லை. வழமையாக வரும்போது வெறுங்கையோடு வருபவர், அன்றைக்கு என்னவோ, எங்களுக்கெல்லாம் எட்னா கண்டோஸ் பெரிய பெரிய பார்கள் வாங்கி வந்திருந்தார். "தேத்தண்ணி போடு பிள்ள" என்று பிளேன் டீ ஒன்று அம்மாவிடம் வாங்கிக் குடித்தார். 'நமசிவாயம், என்ன ஒரே புளுகத்தில இருக்கிறாய்?" என்று அப்பா கேட்கவும், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “இங்க வா செல்லரத்தினம்” என்று அப்பாவையும் அழைத்துக்கொண்டு மீண்டும் சைக்கிளடிக்குப் போனார். போனவர்கள் அந்தச் சாக்கு மூட்டையை காவிக்கொண்டு வீட்டுக்குள்ளே திரும்புகிறார்கள். நடு ஹோலில் இறக்கிவிட்டு, மாமா தானே கேற்றுப்பூட்டை எடுத்துப்போய் பூட்டிவிட்டு வீட்டுக்குள் வந்தார்.
எமக்கோ ஆர்வம் தாங்கவில்லை.
“சாக்குக்குள்ள என்ன இருக்கு மாமா?”
சாக்கு மூட்டையை அவிழ்க்கிறார்கள். முதலில் ஒரு பாப்பிள்ளை வருகிறது. என் தங்கச்சி ராதிகா அதனருகில் போய் நிற்கிறாள். அவளுடைய முகம் ஆவென்று அந்தப் பாப்பிள்ளையையே பார்க்கிறது. 'பிள்ள இது உனக்குத்தான்' என்று அந்த பாப்பிள்ளையை ராதிகாவிடம் கொடுக்கிறார்.
அம்மாவுக்கு சந்தேகம். மாமா களவெடுத்து வந்திருக்கிறாரோ? இருக்காது. ஒரு வாத்தியார் அப்பிடி செய்வாரா? விசரா இப்படி யோசிக்க? அம்மா தனக்குள்ளே நினைத்துக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் அப்பாவோ கேட்டே விட்டார்.
"எங்கால நமசிவாயம் இதெல்லாம்? கடை எதுவும் உடைச்சனியோ? இயக்கத்திட்ட மாட்டினியெண்டால் சம்பல்தான்"
மாமா அப்பாவை நிமிர்ந்து ஒரு முறைப்பு முறைத்தார். அப்பா அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. எனக்கென்றால் மாமாமீது சரியான கோபம். “அதெப்படி தங்கச்சிக்கு மட்டும் பாப்பிள்ளை. எனக்கு ஒண்டுமே தரயில்ல? தாற மாதிரி இந்த சாக்குக்குள்ள எதுவும் இருக்குமோ?”
சாக்கைத் தொடர்ந்தும் மாமா துலாவுகிறார்.
ஒரு டுத் பேஸ்ட். சிக்னல்.  தொடர்ந்து பத்து சிக்னல் பேஸ்டுகள் ஒன்றாக இருக்கும் பெரிய பக்கட். பிறகு கொத்து கொத்தாக கண்ணாடி வளையல். அதையும் ராதிகாவுக்கு கொடுக்கப்போனார். அம்மா வாங்காதே என்று தடுத்துவிட்டார். ராதிகாவும் அவ்வளவு அக்கறைப்படவில்லை. அவள் பாப்பிள்ளைக்கு பட்டரி போட்டுப்பார்த்தாள். சுவிட்ச் ஓன் பண்ணினால் அது சுற்றியது. இங்கிலிஷ் ரைம்ஸ் சொல்லியது. தன் கையில் இருந்த இன்னொரு குழந்தை பாப்பிள்ளையை தாலாட்டியது. எனக்கென்றால் பாப்பிள்ளையை தூக்கி எறிவோமா என்றிருந்தது.
தேடுதல் வேட்டை தொடர்கிறது.
ஒவ்வொன்றாக சாமான்கள் வெளிவரத்தொடங்கின. பவுடர். சோப்பு. ஜாஸ்மின் சென்ட். சவூதி பேரீச்சம்பழம். சுவர் மணிக்கூடு. எடுத்தெடுத்து மீண்டும் அவற்றை சாக்குக்குள்ளேயே மாமா வைத்தார். கிளறினார். லேடீஸ் ஸ்கார்ப் வந்தது. இரண்டு டசின் கறுப்பு நூல் கட்டை வந்தது. “உங்களுக்கு வேணுமெண்டால் எடுங்கோவன்” என்று அம்மாவிடம் நீட்டினார். அம்மா ஒன்றுமே சொல்லவில்லை. எனக்கு பொறுமை கெட்டுவிட்டது.
“மாமா எனக்கென்ன கொண்டுவந்தீங்கள்?”
“பொறு தம்பி” என்று மீண்டும் தடவினார். “ஆ இது” என்று ஏதோ ஒன்றை இழுத்தார். தொதல் பக்கட். வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். மீண்டும் கையை விட்டார். அட. புது ஆர்மி செட். “உனக்குத்தான் பிடி” என்று மாமா நீட்டும் முன்னமேயே போய்ப்பறித்துக்கொண்டேன். மாமா தொடர்ந்து துலாவிக்கொண்டிருந்தார். எனக்கு அந்த இடத்தைவிட்டு வெளியே போய் விளையாட மனமில்லை. ஆர்மிசெட்டை பின்னர் விளையாடலாம். “வேற ஏதும் நல்ல விளையாட்டுச்சாமான் இருந்துவிட்டால்?”. மாமாவுக்கு பக்கத்திலேயே ஆவலாக பார்த்துக்கொண்டிருந்தேன். மாமா என்னைப்பார்த்து சிரித்தபடியே கையை நன்றாக சாக்குக்குள்ளே விட்டு “என்னடா இது?” எதையோ இழுத்து எடுத்தார். வெளியே வந்ததும் பார்த்தால்,
அது முஸ்லிம்கள் அணியும் தொப்பி.

1749ம் ஆண்டு.

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் இறுதிக்காலம். ஆரம்பத்தில் அவர்கள் மக்கள் மீது காட்டிய வன்முறை கொஞ்சமே குறைந்திருந்தது. மக்கள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தத்தமது கடவுள்களை தொழலாம் என்ற நீக்குப்போக்கு இருந்தது. யாழ்ப்பாணத்து படித்த, அரசாங்கத்தில் வேலை செய்பவர்களின் செல்வாக்கும் அதிகமாக இருந்தது. அதில் ஒருவர் இரகுநாத மாப்பாண முதலியார். ஒல்லாந்தர் அரசாங்கத்தில் சிறாப்பராக பணி புரிகிறார். சிறாப்பர் என்றால் பொருளாளர் என்று அர்த்தம். ஒல்லாந்துச்சொல். வங்கியில் வேலை செய்பவர்களையும் சிறாப்பர் என்று சொல்வார்கள். கச்சேரியில் சிறாப்பர் உத்தியோகம் என்றால் அவர்தான் காசு பொறுப்பு எல்லாமே. இந்த வார்த்தை இன்னமுமே யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருக்கிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில். பதின்மூன்றாம் நூற்றாண்டில் புவனேகவாகுவால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட இடம் குருக்கள் வளவு. இன்றைய கோயில் இருக்குமிடம். பின்னர் காலத்துக்கு காலம் இடம்பெற ஆட்சி மாற்றங்களுக்கேற்ப, கோயிலும் இடிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு, இடம் மாற்றப்பட்டு என்று பல பாடுகள் பட்டது. செண்பகப்பெருமாள் என்ற மன்னன், யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து கோயில்களை எல்லாம் இடித்து துவம்சம் செய்தான். பின்னர் ஏதோ நினைவில் மீண்டும் இடித்த கோயில்களைக் மீளக்கட்டினான்.  அப்படி நல்லூரை கட்டிய இடம் முத்திரைச் சந்தைப்பக்கம். அந்த இடத்தில் இப்போது ஒரு பழைய தேவாலயம் இருக்கிறதே. அங்கேதான். பின்னர் அந்தக்கோயிலும் 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டது. அத்திவாரமும் கிளறப்பட்டது. அவர்களால் அங்கே கத்தோலிக்க தேவாலயம் கட்டப்பட்டது. 
Kandaswamy-Kovil-JAFFNA
இப்போது மீண்டும் ஒல்லாந்தர் காலத்தில், அந்த கத்தோலிக்க தேவாலம் புரட்டஸ்தாந்து ஆலயமானது. நல்லூர் கோயில் பக்தர்களை, பக்கத்திலேயே போனால் போகுதென்று, ஒரு சின்ன மடாலயம் கட்டி கும்பிட அனுமதித்தனர்.
ஒல்லாந்தரின் இந்த நெகிழ்வுப்போக்கை சிறாப்பர் நன்றாகவே பயன்படுத்தினார். தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி கோயிலை மீண்டும் கட்ட ஒல்லாந்தரிடம் அனுமதி பெற்றார். ஒல்லாந்தரும் கோயிலை, அது இறுதியாக இருந்த தேவாலயத்தடியில் கட்ட அனுமதி கொடுக்காமல், ஆரம்பத்தில் கட்டப்பட்டிருந்த குருக்கள் வளவில் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கோயிலை குருக்கள் வளவில் கட்ட அனுமதித்தால், தேவாலயத்துக்கு பக்கத்திலிருக்கும் மடாலயத்தை அகற்றிவிடலாம்.
இரண்டாவது காரணம்.  குருக்கள் வளவில் அப்போது முஸ்லிம்கள் குடியிருந்தார்கள்!
கோயில் கட்ட நிதி சேகரிக்கப்படுகிறது. கோயிலை எழுப்புவதென்றால், முதலில் குருக்கள் வளவில் குடியிருந்த முஸ்லிம்களை எழுப்பவேண்டும். காணிகளுக்கு நல்ல விலை தருகிறோம். எங்களுக்கு விற்றுவிட்டு செல்லுங்கள் என்று தமிழர்கள் முஸ்லிம்களைக் கேட்கிறார்கள். “முடியாது, இது நாங்கள் நீண்ட காலம் இருந்துவிட்டோம். எங்கள் பள்ளிவாசல் இங்கே  இருக்கிறது. சமாதி இருக்கிறது” என்று சொல்லி முஸ்லிம்கள் இடம்பெயர மறுத்துவிட்டார்கள். இறுதியில் இரவோடிரவாக முஸ்லிம்களின் கிணறுகளில் பன்றித்தலையை வெட்டிப்போட, அதைக்கண்டு வெறுத்துப்போய், முஸ்லிம்கள் இறுதியில் அங்கிருந்து விலகி, நாவந்துறைப்பக்கம் நகர்ந்துவிட்டார்கள். போகும்போது, “இங்கே எங்கள் இனத்து பெரியவர் ஒருவரின் சமாதி இருக்கிறது. அதை வந்து வழிபட அனுமதி தரவேண்டும்” என்று கேட்க தமிழர்களும் அதற்கு உடன்படுகிறார்கள்.
பின்னாளில் நல்லூர்க் கோயில் பெருப்பித்துக் கட்டப்படும்போது அந்தச்சமாதி கோயில் உள்வீதிக்குள் அடங்கிவிட்டது. முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் கோயிலின் மேற்குப் பகுதியில் வாசல் வைத்து அந்தச்சமாதியை அவர்கள் வந்து வணங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது. காலப்போக்கில் மேற்கு வாசல் மூடிக்கட்டுப்பட்டுவிட்டாலும், இன்றைக்கும் கோயில் கர்ப்பக்கிரகத்துக்கு பின்னாலே, அந்தச் முஸ்லிம் சமாதி அமைந்திருப்பதும், அதில் ஒரு தூங்காவிளக்கு எரிந்துகொண்டிருப்பதும் முக்கியமான விடயங்கள்.
இதுபற்றி அம்மாவிடம் கேட்டேன். நல்லூரில் முஸ்லிம்களுக்கு இருக்கும் சொந்தமும் உரித்தும் மிகவும் நெருக்கமானது என்றார். அதிலும், இப்போது கால் கழுவும் தண்ணீர் பைப்புகள் இருக்கும் இடத்துக்கும், வைரவர் வாசல் வேப்பமரங்களுக்குமிடையிலான பகுதி இருக்கிறதே. கோயிலுக்கு வரும் எவரும் அந்த வழி தாண்டியே செல்லவேண்டும். அந்த வழியில் வைத்து கற்பூரம் விற்கும் உரிமை முஸ்லிம்களுக்கு மாத்திரமே இருப்பதாக அம்மா சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.

1591ம் ஆண்டு.

போர்த்துக்கேயர் நல்லூர் இராசதானியை கைப்பற்ற முன்னேறுகிறார்கள். தமிழர் படைக்கும் போர்த்துகேயருக்குமிடையில் வீரமாகாளி அம்மன் கோயிலடியில் பெரும் அடிபாடு நடக்கிறது. அந்தச்சண்டையில் முஸ்லிம்களும் போரிட்டிருக்கிறார்கள். உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். அப்போது யாழ்ப்பாணத்தில் வசித்த  யோகியர் சிலரும் அந்தச் சந்தையில் மாண்டார்கள். அவர்களுக்கு முஸ்லிம்கள் நினைவுத்தூபிகள் எழுப்பினார்கள்.
ஆரம்பத்தில் மிருசுவில் பக்கம் இருக்கும் உஷன் என்ற கிராமத்தில் (உஷன், முஸ்லிம் பெயர்), பின்னாளில் நல்லூரடிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அங்கே பள்ளிவாசல் கூட கட்டியிருக்கிறார்கள்.  யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்ட போர்த்துக்கேயர், தமக்கெதிராக முஸ்லிம்கள் தாக்குதல் நடத்துக்கூடும் என்ற அச்சத்தில் முஸ்லிம்களை சிரச்சேதமும் செய்திருக்கிறார்கள். நல்லூரில் சோனகக் குடிகளை சூறையாடியும் இருக்கிறார்கள். எவற்றை எல்லாம் சூறையாடியிருக்கிறார்கள்? என்றும் தகவல் இருக்கிறது.
10000 கண்டி நெல், மற்றும் 400 கண்டி அரிசி.

விடை தெரியாத கேள்வி

1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், முஸ்லிம்களை ஜின்னா மைதானத்துக்கு புலிகள் அழைக்கிறார்கள். அப்போதைய யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் இளம்பரிதி வருகிறார். அங்கே அறிவித்தல் கொடுக்கப்படுகிறது. அடுத்த இரண்டு மணி நேரங்களில் முஸ்லிம்கள் அனைவரும் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்ற அறிவிப்பு. ஏன் எதற்கு என்ற எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. எந்தப்பொருளும் கொண்டுபோக அனுமதியில்லை. வீடு, நகை, காணி, பத்திரம், உடை, எதுவுமே கொண்டுபோக தடை. ஐஞ்சு சந்தியில் முழுமையான உடன் சோதனை செய்துவிட்டே பஸ்ஸில் ஏற்றியிருக்கிறார்கள். இந்த அனுபவத்தை எழுத்தின் வடிக்கமுடியாது. இதை முஹம்மட் யாசீன் சொல்லுகிறார். பாருங்கள்.


“Still we don’t know what for we were chased from Jaffna”.

ஏன் நடந்தது? யாரால் நடந்தது?

யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை, வெளியேற்றத்தின் பழியை பொதுவாக பலரும் புலிகள் மீதே சுமத்துவர். மிதவாத தலைவர்கள், புலிகளின் செயலால் நாணிக் கோணுகிறோம் என்பர். புலி எதிர்ப்பாளர்கள், பாசிசப்புலிகளின் அடாவடி என்பர். ஆனால் உண்மையில் புலிகள் இங்கே உடனடிக் காரணம் மாத்திரமே. புலிகளைக் கேட்டால்கூட இதற்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் திணறுவார்கள். அவர்களுக்கே காரணம் சரியாக தெரியாது.
ஈழத்து வரலாற்றில் நிகழ்ந்த அத்தனை சம்பவங்களுக்கும் விளக்கம் கொடுக்கமுடியும். சரியான முடிவோ, தவறான முடிவோ, ஏன் இப்படி செய்தார்கள்? என்பதை ஆய்வுகொண்டு அறியமுடியும். ஆனால் முஸ்லிம்கள் வெளியேற்றத்துக்கு அப்படி ஒரு நேரடியாக விளக்கத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
சிலர் கிழக்கில் நிகழ்ந்த சம்பவங்கள்தான் காரணம் என்பர். சிலர் உளவாளிகள் முஸ்லிம்களில் அதிகம். அவர்கள் தமிழ்போராட்டத்துக்கு சிக்கலைக் கொடுக்கலாம். அதனாலேயே வெளியற்றப்பட்டனர் என்பர். சுமந்திரன் இதனை இனச்சுத்திகரிப்பு என்பார். இந்த மூன்றையும் முழுமையாக அப்படியே ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. உண்மையில் அந்தச்சமயத்தில் உளவு வேலையில் முஸ்லிம்களை விட தமிழர்களே மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். கிழக்கில் நடந்த சம்பவத்தில் வடக்கில் வன்மம் தீட்டப்பட்டது என்பதைக் கேட்கவே அபத்தமாக இருக்கிறது. இனச்சுத்திகரிப்பா அது? என்றால், அப்படியொரு முட்டாள்தனத்தை, ஒரேநாளில் செய்யத்துணிந்த இயக்கம் பின்னாளில் இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்க சாத்தியமில்லை. ஆக என்னதான் நிகழ்ந்தது?
1
முஸ்லிம்களும் தமிழர்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல ஒற்றுமையானவர்கள் என்று மறைந்த தலைவர் ஆஷ்ரப் அடிக்கடி கூறிக்கொள்வார். அதிலே ஒரு உள்குத்தும் இருக்கிறது. புட்டும் தேங்காய்ப்பூவும் சேர்ந்திருக்குமே ஒழிய கலந்திருக்காது. சேர்வைக்கும் கலவைக்கும் வேறுபாடு இருக்கிறது. தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்வை போல. மொழியால் சேர்ந்து இருந்தாலும் அவரவருக்கென்று தனிப்பட்ட கலாச்சாரம், ஆளுமை. வாழ்க்கை நெறிகள், மதம்… கூடவே சச்சரவு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. ஐநூறு அறுநூறு ஆண்டுகளாக இருக்கும் சச்சரவு. முஸ்லிம்கள் ஒன்றும் வெளியிலிருந்து வரவில்லை. எப்படி இங்கிருந்த திராவிடர் இந்து மதத்தை தழுவினரோ, எப்படி கிறிஸ்தவர்கள் ஆனார்களோ அதே போலவே முஸ்லிம்களும் தம் மதத்தை தழுவினர். அவ்வளவே. போர்த்துக்கேயருக்கு எதிராக முஸ்லிம்கள் தம் நாட்டுக்காக போராடி மடிந்தனர்.   அவர்களையே, ஒரு கோயில் கட்டவேண்டும் என்ற அற்ப காரணத்துக்காக, இருந்த இடத்தைவிட்டு துரத்தியிருக்கிறார்கள் பண்டைய தமிழர்கள். கோயில் கட்ட புறப்பட்டவர்கள், பன்றித்தலை எல்லாம் வெட்டிப்போட்டிருக்கிறார்கள். இன்றைக்கு மாற்று இயக்கங்கள் நாயை வெட்டி வாசலில் போடுகிறார்கள் என்று செய்தி வருகிறது அல்லவா.
இது தமிழனின் “டி என் ஏ” பிரச்சனை.
90களிலும் இதுவே நிகழ்ந்தது. கூட இருந்து, எம்மோடு சேர்ந்து வாழ்ந்த, ஒன்றாக பிரச்சனைகளில் சிக்கித்தவித்து, இணைந்து அடக்குமுறையை எதிர்த்து குரல்கொடுத்த ஒரு தனித்துவ சமூகத்தை மிக இலகுவாக, இரண்டு மணிநேரம், இரண்டாயிரம் ரூபாய்களுக்குள் அனுப்பிவைத்துவிட்டோம்.  “மாவீரர் மேஜர் அன்பு என்கின்ற முஹம்மது அன்வர்” ஞாபகமாக தீரன்.என்.ஏ எழுதிய கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு தடவையும் வாசிக்கும்போது என் செவிப்பறை அவமானத்தில் அறை பட்டுச்சிவக்கும்.
நம்மூர் நிலா
குளத்தினுள் விழுந்து கிடந்த
ஒரு இரவில் என்னிடமிருந்து
நீ விடை பெற்றாய்.

சந்திர விளக்கு
அணைந்த ஓர் இருட்டில்
சந்திக்க வந்தாய். மறுபடி
ஒரு திருடனைப் போல.
”அன்வர்” என்றேன்.
”அன்வர் இல்லை மேஜர் அன்பு”
என்றாய்.
உந்தன் ஈரவிழிகளில் – தமிழ்
ஈழ வரைபடம் தெரிந்தது.
நம்மூர் நிலாக்கள் வன்னிக்
குளத்தினுள் விழுந்தன.
உம்மாவின் விழிகள் கண்ணீர்க்
குளத்தினுள் வாழ்ந்தன.
நீ திரும்பி வரவில்லை இதுவரை.
தீப்பந்தம் அணைத்து
தீபங்கள் ஏற்றி ஒப்பந்தம் செய்து
ஒப்பங்கள் இடும் இந்நேரம்
உம்மா பாவம் மகிழ்கிறாள்.
ஈகைச்சுடர் கொளுத்தி
பொங்கும் தமிழர்களிடையே
தேடுகிறாள் - உனக்காக
தின்பண்டம் செய்கிறாள்.

மகனே அன்வர் எங்கே?
மேஜர் அன்பு எங்கே?
அன்பே நீ எங்கே?

என்னால் உம்மாவுக்குச்
சொல்ல முடியவில்லை.
சொல்லவும் போவதில்லை.

அஞ்சலிச் சுவரொட்டியில்
அந்நேரமே நீ
ஒட்டப்பட்டு இருந்ததை,
மாவீரர் துயிலிடத்தில்
ஓரிடத்தில்
தனியிடத்தில் நீ
”கபனி” டப்படாமலே
விதைக்கப்பட்டிருப்பதை.

-- தீரன் என்.ஏ

இந்த பதிவு ஒருவித சுய ஆராய்ச்சி. தெரியாத பதிலை தேடிக்கண்டுபிடிக்க எழுதப்பட்ட எழுத்து. வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கு இனிமேலும் புலிகளை குற்றம் சொல்லி நாங்கள் தப்பிக்கொள்ளலாமா? இந்தப்பிரச்சனையை அதைவிட பரந்த வெளியில் அணுகவேண்டும் என்று நினைக்கிறேன். ஆயுதம் இல்லாதவர்கள் மனதுக்குள் நினைத்ததை ஆயுதம் உள்ளவர்கள் வெளிப்படையாக செய்தார்கள். இங்கே பாவிகள் யாரென்றால், முஸ்லிம்கள் வெளியேறும்போது உள்ளூற சந்தோசப்பட்ட அனைவருமே. அவர்கள் போனபின்னர், அவர்களுடைய உடைமைகளை வெட்கமேயில்லாமல் கொள்ளையடித்தவர்கள். வியாபாரங்களையும் வீடுகளையும் கைப்பற்றிக்கொண்டவர்கள். அப்போது படித்தவர்கள், பண்பாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் கூட இதை இரகசியமாக ஆதரித்தார்கள். முஸ்லிம்களோடு தனிப்பட்ட ரீதியில் நட்பு பாராட்டியவர்களே பெரும்பாலும் அந்தச்செயலுக்காக விசனப்பட்டார்கள். ஒல்லாந்தர் காலத்தில் பன்றித்தலை போடும்போதும் இதேபோன்றே மக்கள் உள்ளூற நினைத்திருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.
ஆக இதற்கு என்னதான் வழி? தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழவே முடியாதா? இணைந்து வாழ முடியுமா? முடியாதா? என்பதை பெரும்பான்மை இனம் தீர்மானிக்கமுடியாது. கூடாது. அதை சிறுபான்மை இனமே தீர்மானிக்கவேண்டும். ஆனால் இணைந்திருக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதில் பெரும்பங்கை பெரும்பான்மை செய்யத்துணியலாம். காந்தி ஜின்னாவுக்கு பிரதமர் பதவியே கொடுக்கத்துணிந்தார். சம்பந்தர் கிழக்கின் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் தலைவருக்கு கொடுக்க முன்வந்தார். இவை இரண்டுமே இதயசுத்தியுள்ள நகர்வுகள் என்றால் பாராட்டத்தக்கதே. இரண்டும் நடைபெற்றிருந்தால்தான் அந்த நகர்வுகளின் நேர்மைத்தன்மை பின்னாளில் தெரியவந்திருக்கும். நடைபெற எவருமே விடவில்லை.
இப்படியான இருண்ட, சில்லுப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வெறும் தனிமனிதர்களிடமிருந்தே வெளிவரும். சோ.பாவின் இந்தப்பேட்டி அத்தகையது. நம்பிக்கையூட்டுவது.

இறுதியில் “நான் எப்படி என்னுடைய முஸ்லிம் நண்பர்களுக்கு முகம் கொடுப்பேன்?” என்று சோ.பா கேட்கிறார். அந்த குற்றவுணர்ச்சிதான் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கான ஆதாரமான சங்கதி. எங்களில் எத்தனைபேருக்கு அந்த குற்ற உணர்ச்சி இருக்கிறது? இன்றைக்கும் சிங்களவர்கள் முஸ்லிம் பள்ளிவாசல்களை இடிக்கும்போது உள்ளூற சந்தோஷப்படும் பேர்வழிகளை பார்க்கிறேன். “நல்லா வாங்கட்டும், நாங்கள் அடிவாங்கேக்க சும்மா இருந்தாங்கள்தானே” என்று குரூர திருப்திப்படும் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். கூடவே, சிங்களவர் சிறுபான்மையை அடித்தால், சர்வதேச ரீதியில் அவர்களுக்கு அபகீர்த்தி வந்துவிடும். எங்கள் விடுதலையை அது வேகப்படுத்தும் என்று இன்னொரு கணிப்பு.  இன்னொரு சிறுபான்மையில் வீழ்ச்சியில் எப்போது நாம் இன்பம் காண்கிறோமோ, அந்தக்கணத்திலேயே சிங்களவரை குற்றம் சொல்லும் தகுதியை நாங்கள் இழக்கிறோம்.
சோ.பா கேட்கும் “எப்படி நான் முகம் கொடுப்பேன்?” கேள்வியின் வெப்பத்தை நானும் அண்மையில் அனுபவித்தேன். வஜ்னா அக்கா, மறைந்த கவிஞர், முன்னை நாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் மருதூர்க்கனி ஐயாவின் புத்திரி. இங்கே மெல்பேர்னில்தான் இருக்கிறார். வைத்தியர். ஒருநாள் அவர் கணவர் ரபீக் என் வீட்டுக்கு வருகிறார். “தம்பி, மருதூர்க்கனி கவிதைகள்” என்ற நூலை வெளியிடுகிறோம். நூலுக்கு ஒரு நயப்புரை செய்யவேண்டும்” என்றார். கவிதைப்புத்தகத்தை வாங்கி வாசித்தேன். மருதூர்க்கனியைப்பற்றி நான் என்ன சொல்ல? அவர் கவிதை ஒன்று சின்ன சாம்பிளுக்கு.
"காலில் போடும் செருப்பும்தான்
ஹஜ் யாத்திரை
செல்கிறது"
நிகழ்ச்சிக்குப் போனேன். முதன்முதலில் மெல்பேர்னில் ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு போகிறேன். விழா மண்டபம் ஒரு திருமண மண்டபம் போல ஜொலித்தது. முன்னூறுக்கு மேற்பட்ட கூட்டம். பேச்சாளர்கள் சுட்டிக்காட்டிய ஒவ்வொரு சுவாரசிய விஷயங்களுக்கும் கூட்டம் புரிந்து கைதட்டி உற்சாகம் தந்தது. அங்கே இருந்த தமிழ்த்தனம். வரிக்குவரி வள்ளுவரையும் பாரதியையும் உமறுப்புலவரையும் எடுகோள்காட்டிய பேச்சாளர்கள். அதிலும் ஒரு இளைஞர், வைத்தியர், இங்கே வளர்ந்தவர். மேடையில் தொகுத்து வழங்கினார். தமிழ் அவர் பேச்சில் வார்த்தை ஜாலமிட்டது. கவிதைகள் சராமாரியாக விழுந்தன. அந்த இடத்திலேயே. எழுதி வைத்தெல்லாம் பேசவில்லை.
dsc_0853
விடைபெறும்போது ரபீக் அண்ணா கார் வரைக்கும் வந்து வழியனுப்பினார்.
“இதே மெல்பேர்னில்தான் நான் ஆறு வருடங்களாக இருக்கிறேன். ஒருநாள்கூட இன்றைக்கு பேசிய பேச்சாளர்களை எந்த தமிழ் மேடைகளிலும் கண்டதில்லையே? இன்றைக்குத்தான் முதன்முதலில் காண்கிறேன்”
என்று ரபீக்கிடம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.
“அப்படியென்றால் இதுதான் நீங்கள் கண்ட முதல் முஸ்லிம் மேடை”
மேடைகள் இரண்டு. மொழி ஒன்று. அந்த புள்ளியை எப்படி சரியாக பாவிக்கிறோம் என்பதிலேயே இந்த கசப்பான வரலாறு திரும்புமா இல்லையா என்பது தங்கியிருக்கிறது.

உசாத்துணைகள்
படங்கள் - கண்ணன் அருணாசலம்
ஈழத்தவர் வரலாறு - செங்கை ஆழியான்
ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் - ஸ்ரீ பிரஷாந்தன் (தொகுப்பாளர்)
மருதூர்க்கனி கவிதைகள்
முகநூல் நிலைத்தகவல்

Contact form