வியாழமாற்றம் 24-07-2014 : “மகரயாழ்”

Jul 24, 2014 14 comments

 

9412038754_2b80e69323

இது நடந்தது 93ம் ஆண்டு.

"வைத்தியகலாநிதி சிவகுமாருக்கு மகரயாழ் விருது" என்று  உதயனில் தலைப்புச்செய்தி போடுகிறார்கள். யாழ்ப்பாணக் கம்பன் கழகம் “மகரயாழ்” விருது பற்றி அறிவித்தபின்னர்,  தொடர்ச்சியாக பத்திரிகைகளில் கட்டுரைகள், விண்ணப்பங்கள் என்று வெளிவந்து, இந்த விருது யாருக்கு கிடைக்கப்போகிறது? என்கின்ற ஒருவித எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இப்படி இருந்த சமயத்தில்தான் சிவகுமாருக்கு விருது கிடைத்த செய்தி வருகிறது. அதுவும் முதல் பக்கத்து தலைப்புச்செய்தி. செய்தியை வாசித்த அத்தனை பேருக்கும் திருப்தியும் பெருமிதமும். தகுதியானவருக்கு கிடைத்ததால் திருப்தி. “அட எங்கட ஆளுக்கு குடுத்திருக்கிறாங்கள்” என்பதால் பெருமிதம். டொக்டர் சிவகுமார் எல்லோருக்கும் “எங்கட ஆளாக” இருந்தார்.

ஒருநாள் என் அப்பா தொழில்நுட்பக்கல்லூரியில் விரிவுரையாற்றிக் கொண்டிருக்கும்போது வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துவிட்டார். உயர் இரத்த அழுத்தம். போதனா வைத்தியசாலையில் அனுமதித்து ஒருவாரம் வைத்திருந்தார்கள். சிவகுமார் ஒவ்வொருநாளும் அப்பாவை வந்து பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சோதித்துவிட்டே போவார். அவர் அப்படி பார்த்திருக்கவேண்டிய தேவையில்லை. அப்பாவை முன்ன பின்னவும் தெரியாது. ஆனாலும் பார்த்தார். அப்படி தன்னுடைய நோயாளிகளை யார்? எவர்? என்று பாரபட்சம் பார்க்காமல் வைத்தியம் செய்தவர் சிவகுமார். அதனாலேயே அவர் எங்கட ஆள்.

டொக்டர் சிவகுமார் யாழ்ப்பாணத்தில் இருந்த தலை சிறந்த வைத்தியர்களில் ஒருவர் என்று நான் எழுதினால் அது சூரியனுக்கு டோர்ச் அடிக்கிற விஷயம். ஆனாலும் வெற்று கிரகத்தில் இருக்கும் ஒரு சிலருக்காக சொல்லவேண்டியிருக்கிறது. பணத்தை ஒரு கணக்காகவே எடுக்காமல் போர்க்காலத்தில் மக்களுக்கு அளப்பரிய சேவை செய்தவர். போதனா வைத்தியசாலையில் நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்களை உருவாக்கிவிட்டவர். கண்டிப்பானவர். நேர்மை தவறாதவர். நேரம் தவறாதவர். இப்படி எழுதிக்கொண்டே போகலாம். இப்போதும் வைத்தியம் பார்க்கிறார். யார் வம்பு தும்புக்கும் போகாமல் தானும் தன்பாடுமாய், முதுமையில். கொழும்பிலே வைத்தியம் பார்க்கிறார்.

கம்பன் கழகம் அப்போது சிவகுமாருக்குத்தான் “மகரயாழ்” என்று அறிவித்தபோது எல்லோருக்கும் சந்தோசம். முதல் விருதை தகுந்தவர் பெற்றதால் அந்த விருது பெருமை பெற்றது. கம்பன் கழகமும் பெருமைகொண்டது. கூடவே அடுத்தாண்டு யாருக்கு அந்த விருது? என்கின்ற ஆர்வமும் ஏற்பட்டது. 

Prof-Thurairajah

94ம் ஆண்டு. விருது அறிவிக்கும் காலம் நெருங்க நெருங்க, யாருக்கு அது? என்பதை யூகிப்பது கடினமாக இருக்கவில்லை.  “அ. துரைராஜா”, எங்கள் ஊரின் ராமானுஜர். இவர் பொறியியல், கணித மாணவர்களுக்கு ஒரு கடவுள். அப்பாவின் மொழியில் “அந்தாள் எக்ஸ்ட்ரா ஒர்டினரி”. கணிதத்தில் புலியாக இருக்கும் மாணவனைப் பார்த்து படித்து துரைராஜா மாதிரி வரவேண்டும் என்று என் அப்பா தலைமுறை எமக்கு சொல்லும். பேராதனை பல்கலைக்கழக கணித மாணவர்களுக்கு “துரைஸ் தியரம்” என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். வெறுமனே பேராசிரியராக மட்டும் வாழாமல் பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட ஆளுமை வளர்ச்சியிலும் கவனம் காட்டியவர். யாழ்ப்பாணத்து அபிவிருத்திக்கான பல திட்டமிடல்களை முன்னின்று செய்தவர். கிளிநொச்சியில் விவசாயபீடம் உருவாக காரணமும் இவரே. மிக மிக எளிமையானவர். யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கும்போது வடமராச்சியில் இருந்து சைக்கிளில் வருவாராம். துரைராஜாவுக்கு விருது என்றவுடன் மகரயாழ் விருதின் மீதான மதிப்பு மேலும் அதிகரித்தது. துரைராஜா விருது விழாவுக்கு முன்னமேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். விழாவின்போது அவரின் மகன்கள் இருவருமே வந்து பரிசைப் பெற்றுக்கொண்டார்கள். புலிகள் அமைப்பும் துரைராஜாவுக்கு மாமனிதர் விருது வழங்கி கௌரவித்தது. மாமனிதர் விருது பெற்ற விஞ்ஞானத்துறை சார்ந்த கல்வியாளர் இவர் ஒருவரே. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானத்துறை பேராசிரியர் எலிசாருக்கும் மாமனிதர் விருது கிடைத்தது. ஆனால் அதற்கு காரணம் அவருடைய கல்வித்துறை சாதனைகள் அல்ல.

மூன்றாவது மகரயாழ் வைத்தியகலாநிதி ஜெயகுலராஜாவுக்கு. ஜெயகுலராஜா பரியோவான் கல்லூரிக்கு மிகவும் நெருக்கமான ஒருவர். போஷகராக இருந்தவர். ஒருமுறை பரிசளிப்புவிழா பிரதம விருந்தினராக வருகிறார். "மகரயாழ் பெற்ற ஜெயகுலராஜாவே" என்று வீரமணி ஐயர் பாட்டெழுதி விழாவில் இசையமைத்து பாடினார்கள். பாட்டை இப்போதும் நான் அடிக்கடி முணுமுணுப்பதுண்டு.

95ம் ஆண்டு இடப்பெயர்வோடு யாழ்ப்பாண கம்பன் கழகம் அடங்கிவிட்டது. மகரயாழ் விருதும் அடங்கிவிட்டது. நல்லூர் வடக்குவீதி கம்பன்விழா குருமணலும் என் காற்சட்டையிலிருந்து உதிர்ந்துவிட்டது. ஆனாலும் விருது என்று ஒரு வார்த்தையை யாராவது எனக்குச் சொன்னால், முதலில் ஞாபகம் வருவது “மகரயாழ்”தான். யாழ்ப்பாண கம்பன் கழகம் இப்போது மீண்டும் இயங்கத்தொடங்கியிருக்கிறது. இனி “மகரயாழ்” விருதை மீள கொடுக்கவும் முன்வரலாம். அப்படி முன்வந்தால், முன்னர் இந்த விருதை யாரெல்லாம் அலங்கரித்தார்கள் என்று தெரிந்துகொண்டு, தக்கோர்க்கு கொடுப்பார்கள் என எல்லாம் வல்ல ஜெகத்தீரை பிரார்த்திக்கிறேன்!

kampavaruthy_jeyaraj

 

விருது பெரிதா? வாங்குபவர் பெரிதா?

ஒரு விருதால் வாங்குபவருக்கு பெரிதா? அல்லது வாங்குபவரால் விருதுக்கு பெரிதா? அவரவர் சந்தர்ப்பத்துக்கேற்றபடி மாற்றி மாற்றி இதைச்சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டிலும் உண்மை இருக்கிறது. “மகரயாழ்” உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு லட்சம் ரூபாய் பரிசு. நல்லூரிலே கொடி குடை ஆலவட்டம் பிடிப்பார்கள். என்ன பயன்? ஒன்றுமேயில்லை. அந்த விருது தகுதியானவருக்கு கொடுக்காமல் ஒரு சுப்பனுக்கோ குப்பனுக்கோ கொடுத்திருந்தால் ஒரு நாட்டை எழுதிக்கொடுத்தாலும் ஒன்றுமேயில்லை. “மகரயாழ்” விருதை சிவகுமாரும் துரைராஜாவும் வாங்கியதால்தான் அந்த விருதுக்கு பெருமை. 

Ar Rahman Rare

ரகுமானின் ஒஸ்கார் விருதுக்கான பாராட்டுவிழாவில் இளையராஜா இப்படிச்சொன்னார்.

“Without a composer what can an award do?”

ராஜா கடுப்பில் சொன்னாரா இல்லையா என்பது வேற விஷயம். ஆனால் சொன்னது என்னவோ சத்தியமான வார்த்தை. இசையமைப்பாளன்தான் முக்கியம். விருது அல்ல. ராஜாவோ, ரகுமானோ, எம்.எஸ்வியோ விருது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சாதனையாளர்களே. அதுதான் அந்த வார்த்தைகளின் சாரம். தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படுவதன் மூலம் அந்த விருதே உயர்தகுதியை அடைகிறது.

இப்போது விருது தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படுவதன் மூலம் ஒரு உயர்தகுதியை அடைந்துவிட்டால், காலப்போக்கில் அதனை பெறுபவரும் விருதால் பெருமை அடையத்தொடங்குவர். நோபல் பரிசு அப்படிப்பட்டது. பொதுவாக தகுதியானவர்களுக்கே கொடுக்கப்பட்ட விருதாகையால் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. “நோபல் லோரட்” என்று விருது பெற்றவர்களை அழைக்கத் தொடங்கிவிடுகிறோம். முதன்முதலில் அந்த பரிசை பெற்றவருக்கு அந்த பெருமை இருந்திருக்குமா? என்பது சந்தேகமே. முதல் சமாதானத்துக்கான நோபல் பரிசு ஹென்றி டுனாட்டுக்கு கிடைத்தது. சின்னவயதில் சமூகக் கல்வியில் ஹென்றி டுனாட்டுக்கு நோபல் பரிசு கிடைத்த விஷயம் யாருமே சொல்லவில்லை. காரணம் அவராலேயே நோபல் பரிசுக்கு பெருமை வந்திருக்கும். பின்னர் அது படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு நோபல் பரிசு பெரும் கௌரவமாகிவிட்டது.

ஒரு விருதின் வளர்ச்சி இப்படித்தான் அமைகிறது. தகுந்தவர்களுக்கு கொடுப்பதன்மூலம் தன்னை உயர்த்தி பின்னர் தகுந்தவருக்கு மட்டுமே கொடுக்கப்பட முடியும் என்கின்ற நிலையை ஒரு சிறந்த விருது அடையும். சிவகுமார், துரைராஜா என்ற இரண்டு மாமனிதர்களுக்கு கொடுக்கப்பட்டதால் உச்சத்துக்கு சென்றுவிட்ட மகரயாழ் விருது, பின்னர் ஜெயகுலராஜாவுக்கு கொடுக்கப்பட்டதால் தன்னிலையை தாழாமல் தக்கவைத்துக்கொண்டது. அந்த விருதை வாங்குவபருக்கு பெருமை வருகிறது. இதனாலேயே “மகரயாழ் பெற்ற ஜெயகுலராஜாவே” என்று வீரமணி ஐயர் பாட்டும் எழுதினார்.


 

லுக்கேசியன் கணித பேராசிரியர்

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் "லுக்கேசியன் கணித பேராசிரியர்" பதவியும் அப்படிப்பட்டது.

1663ம் ஆண்டு ஹென்றி லூக்காஸ் என்றவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு ஒரு பெரிய காணியை ஒதுக்கீடு செய்தார். அவர் பெயரால் உருவாக்கப்பட்ட கணித பேராசிரியர் பதவி இது. அந்த காணி மூலம் கிடைக்கின்ற வருமானம் அத்தனையும் அந்த பேராசிரியருக்கு போய்ச்சேரும். பெயர்தான் பேராசிரியரே ஒழிய, இதுவும் ஒருவகை விருதுதான். கௌரவ விருது. 

இந்தப்பதவி ஒன்றும் வெறும் குப்பனோ சுப்பனோ கிடையாது. அதனை முதன் முதல் அலங்கரித்தவர் ஐசக் பாரோ. திரிகோணகணிதத்தில் "Tan" சம்பந்தமான ஆய்வில் ஈடுபட்டவர். “சைன்”, “கொஸ்”, “டான்” என்று படிப்போமே. அதிலே “டான்”. கப்பா வளைவை கணிப்பிட டானை பயன்படுத்தியவர். பெரும் கணிதமேதை.

சரி அடுத்ததாக அந்தப்பதவி யாருக்கு போனது? கொஞ்சம் மேலே பாரு கண்ணா.

கேம்பிரிட்ஜின் இரண்டாவது லூக்கேசியன் பேராசிரியராக நியமிக்கப்பட்டவர் “சேர் ஐசக் நியூட்டன்”! வேறென்ன வேண்டும்? அதுவும் நியூட்டன் அந்த பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக பாரோ பதவி விலகினாராம். இன்றைக்கு கணித பேராசிரியர் பதவிகளிலேயே உச்சப்பட்ட பெருமைக்குரிய பதவி இது. இந்தப்பதவியை தகுதியானவர்களுக்கு மாத்திரமே கொடுப்பார்கள். ஒருவரும் இல்லையா? பதவி காலியாகவே இருக்கும்.

அண்மைக்காலத்தில் அந்த பதவியை வகித்தவர் ஸ்டீபன் ஹோக்கிங்! இப்போது அந்தப்பதவியில் இருப்பவர் ஸ்ட்ரிங் தியரில் பெரும் “மாதா”வான மைக்கல் கிரீன்.


stephen_hawking_1014465c

 


விருதின் நோக்கம்

விருதுகளின் நோக்கம் வெறுமனே சாதனையாளர்களை அங்கீகரிப்பது மட்டுமல்ல. அது ஒருவித நன்றி சொல்லும் வேலையும்தான். எங்களுக்காக இதெல்லாம் செய்தீர்களே. எங்கள் வாழ்க்கையை மேம்படுத்தினீர்களே. உங்களுக்கு நன்றி என்று சொல்லுற விஷயம். அங்கீகாரம் ஒரு முக்கிய ஊக்குவிப்பான். மேலும் மேலும் சாதிக்கத்தூண்டும் ஐட்டம் அது.

விருது ஒருவித உந்துதலும் கூட. சின்ன வயதில் நான் பார்த்து ரசித்த மகரயாழ் விருது விழா என்னையறியாமலேயே ஒரு தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. ஓகோ, இவர்கள் எல்லாம் கௌரவிக்கப்படுகிறார்கள். பெரிய மனிதர்கள். இவர்களைப்போல நாமும் வரவேண்டும். ஒரு சின்னப்பெடியனிடம் இந்த சிந்தனை கொடுக்ககூடிய தாக்கம் அலாதியானது. அவன் வளர்ந்து தன்னையும் விருதுக்கு தகுதியுள்ளவனாக்கவே முனைவான். அந்த உத்வேகம் வேறு எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று நினைக்கிறேன். சிறியவர்கள் பார்க்கும்வகையில் உரியவர் பாராட்டப்படுவது உளவளர்ச்சிக்கு முக்கியமானது. 


மாருதி விருது

அவுஸ்திரேலிய கம்பன் கழகம். கழகத்தை முன்னின்று நடத்துபவர்கள் அனைவரும் என் நண்பர்கள். அமைப்பாளர் ஜெயராம் அண்ணா சின்னவயதிலேயே எனக்கெல்லாம் ஒரு ஹீரோ. பரியோவான் கல்லூரியில் ஒரே ஆண்டில் ஆங்கில மற்றும் தமிழ் பேச்சுப்போட்டிகள் இரண்டிலும் தங்கப்பதக்கம் வென்றவர். பரிசளிப்பு விழாவில் இரண்டு பேச்சுகள். ஒன்று ஆங்கிலத்தில் ஷேர்ட், “டை” கட்டிக்கொண்டு வந்து ஒரு பேச்சு. பின்னர் பட்டுவேட்டிக்கு மாறி தமிழில் இன்னொரு பேச்சு.

ஜெயராம் அண்ணா நான் ரசித்த அதே யாழ்ப்பாணத்தை இன்னொரு மூலையிலிருந்து ரசித்தவர். கம்பன் மீதும், கம்பன் புகழ் பாடி அவுஸ்திரேலியாவின் கன்னித்தமிழ்  வளர்க்கலாம் என்பதிலும் பெரிதும் நம்பிக்கை கொண்டவர். அதற்காக உயிரைக்கொடுத்து வேலை செய்வார்.

அந்த முயற்சிக்கு கையில் பலன் இருக்கிறது. அவர்கள் கம்பன் விழா செய்தால் கூட்டம் அம்மும். இங்கே படித்து வளர்ந்த பிள்ளைகள் கூட மேடையேறுவார்கள். மைத்ரேயி என்கின்ற ஒரு பெண்பிள்ளை. ஆஸியில் படித்தவர். ஆனால் கம்பராமாயணம் தெரியும். மேடையில், எழுதிவைத்து வாசிக்காமல், அரை மணித்தியாலம் வழக்காடுமன்றம் பேசும் திறமை இருக்கிறது. அதை சாத்தியமாக்கியது அவுஸ்திரேலியா கம்பன் கழகம். சிறுவர்களுக்கு தமிழை “குற்றியலுகரம் எனப்படுவது” என்று கழுத்தறுக்காமல், கதை சொல்லி மொழி கற்பிக்கும் அழகியல் பாதையில் கற்பிக்கிறார்கள். ஜெயராம் அண்ணாவுக்கு உறுதுணையாக கம்பன் கழகத்தின் அந்தக்காலத்து தூண்களான திருநந்தகுமார், குமாரதாசன் போன்றவர்கள் இருக்கிறார்கள். இளையவர்களான கிருஷ்ணா மைத்ரேயி போன்றவர்கள் இருக்கிறார்கள். நானெல்லாம் ஜெயலலிதா வெற்றிக்கு உதவிய அணில் விஜய் மாதிரி. வாய்ஸ் மாத்திரம் கொடுப்பேன். அம்புட்டும்தேன்!

1004985_415339945260549_1708120199_n1939796_458927517568458_572049031_n1469764_415340731927137_1532738796_n

இவர்கள் நிறைய செய்கிறார்கள். தவறு விடாமல் செய்யவேண்டுமே  என்று கவனமெடுக்கிறார்கள்.  நான் ஒரு கேள்வி கேட்டால்கூட, சின்னப்பெடியன்தானே என்று விட்டுவிடாமல் ஜெயராம் அண்ணா விளக்கம் கொடுப்பார்.  எல்லாமே சரியாக இருக்கவேண்டுமென்கின்ற அட்டென்ஷன் டு டீடைல் அவரிடம் இருக்கிறது.

அதனாலேயே மாருதிவிருது நம்பிக்கை தருகிறது.

இது அவுஸ்திரேலியாவில் பன்னெடுங்காலமாக தன்னார்வு தொண்டாற்றிய பெரியோர்களுக்கு கொடுக்கப்படுவது. விளக்கம் எல்லாம் தேவையில்லை. முதல்தடவை விருதைப் பெற்றவர் இதய மருத்துவ நிபுணர் மனமோகன். அதுவே போதும் என்று நினைக்கிறேன். ஆஸியில் இருப்பவர்க்கு தெரிந்திருக்கும். மனமோகனுடைய பெயர்தான் மன்மோகன்சிங் போன்று ஒலிக்கிறதே ஒழிய மனுஷன் கடும் உழைப்பாளி. உழைப்பதெல்ல்லாமே ஊருக்கு கொடுப்பதற்கே. இவர் இந்த ஊரின் “மகரயாழ் சிவகுமார்”. இரண்டாம்தடவை விருது சிசு நாகேந்திரத்துக்கு போனது.

இது மூன்றாவது வருடம். மாருதி விருது இப்போது மனமோகன், சிசு என்று இரண்டுபேரை அலங்கரித்து அழகாக மிளிர்கிறது. அது மேலும் மிளிர இவ்வருடமும் தகுந்தவருக்கு செல்லவேண்டும். “அதை புரமோட் பண்ண ஒரு கவிதை தாடா தம்பி” என்று ஜெயராம் அண்ணா கேட்டார். எனக்கும் கவிதைக்கும் காத தூரம். ஆனால் விருது பற்றி நான் என்ன உணர்கிறேனோ, அதை நான்கு வரிகளில் எழுதியிருக்கிறேன். இங்கே.

FBCover_2

ஆஸியிலே தகுதியுள்ள ஒருவரை நீங்களும் முன்மொழியலாம். இதைப்பற்றிய மேலதிக தகவல்கள் இங்கே இருக்கின்றன. நிறையப்பேர் இருக்கிறார்கள். பொதுவாக ஒரு இலக்கிய கழகம் கொடுக்கும் விருது இலக்கியவாதிகளுக்கே கொடுக்கப்படும் என்கின்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால் இவ்விருது இலக்கியம் என்ற எல்லைக்குள் மட்டுப்படாதது.  மனமோகன் இலக்கியவாதி அல்ல. இந்த ஆண்டு இவ்விருது ஒரு கணித மேதைக்கு கூட கிடைக்கலாம். விஞ்ஞானி, பேராசிரியர், வைத்தியர், பொறியியலாளர், கவிஞர், ஆன்மீகவாதி முதற்கொண்டு தமிழ் பள்ளி ஆசிரியராக கூட இருக்கலாம். வெவ்வேறு துறையானவர்களையும் விருதுகள் உள்வாங்குவது மிகமுக்கியது. பாரதரத்னா போல.

யார் அந்த மாருதி? என்பதை அறியும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். 


விருதின் வீழ்ச்சி

தகுந்தவருக்கு கொடுக்கப்படாத விருதும், காலம் தாழ்த்தி கொடுக்கப்படும் விருதும் தன் பெருமையை இழக்கவே செய்யும். இதிலே அதிகம் சிக்கி சின்னாபின்னமாகியது நோபல் பரிசே. பல தகுதியானவர்களுக்கு கொடுத்து தன்னை வளர்த்துக்கொண்ட விருது, சமயங்களில் தகுதியற்றவர்களுக்கு கொடுத்து தன்னை தாழ்த்தியும் கொண்டது.

மிக சமீபத்திய உதாரணம் ஒபாமாவுக்கு கொடுக்கப்பட்ட சமாதானத்துக்கான நோபல் பரிசு. நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் கொடுக்கப்பட்ட முதல் விருது. அபத்தத்தின் உச்சம் அது. அந்த அபத்தம்தான் இன்றைக்கு காசா மீது குண்டுபோடும் இஸ்ரேலிய படையினருக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும் என்று இஸ்ரேலிய அமைச்சரை சொல்ல வைக்கிறது. அந்தக் காலத்தில் சந்திரிகாவுக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு 2010ம் ஆண்டு கிடைக்கும் என்று யாரோ ஒரு சாத்திரி சொன்னதும் ஞாபகம் வருகிறது. நோபல் விருது மிகப்பெரும் அரசியல் நிறைந்தது. அதிலும் சமாதானத்துக்கான விருதில் ஒரு பனிப்போரே நிகழ்கிறது. சென்ற ஆண்டு இரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்புக்கு கொடுக்கப்பட்டதிலும் ஏகத்துக்கு அரசியல் இருக்கிறது.

காலம் தாழ்த்தி கொடுக்கப்படும் விருதும் சோபை இழக்கும். ஐன்ஸ்டீனுக்கு கிடைத்த நோபல் பரிசு அப்படிப்பட்டது. ஐன்ஸ்டீனின் சார்புவிதிக்கு 1905ம் ஆண்டே விருது கொடுத்திருக்கவேண்டியது. நிரூபிக்கப்படவில்லை, வெறும் சிந்தனையோட்டம் என்று ஆளாளுக்கு லொள்ளுப் பண்ணியதால் விருது கொடுக்கப்படவேயில்லை. கூடவே நாசி விஞ்ஞானி ஒருவர் (அவரும் ஒரு நோபல் பரிசாளர்தான்) ஐன்ஸ்டீனுக்கு எதிராக நோபல் கொமிட்டிக்கு பெட்டிசன் வேறு போட்டதால் ஒவ்வொரு வருடமும் விருது தவறியது.

அதிலே ஒரு சுவாரசியம் இருக்கிறது. ஐன்ஸ்டீன் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்யும்போது, “தனக்கு எப்படியும் நோபல் பரிசு கிடைக்கும், அந்தப்பணத்தை உனக்கு தருகிறேன்” என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் நோபல் பரிசு வந்தபாடில்லை.

இறுதியில் 1921 இல் நீல் போருடன் சேர்த்து கொடுக்கப்பட்டது. அதுவும் சார்பு விதிக்கு அல்ல. அது ஐன்ஸ்டீனின் போட்டோன் பற்றிய ஒரு ஆய்வுக்கு. வேறுவழியில்லாமல் கொடுத்தார்கள் எனலாம். விருதை ஏற்றுக்கொண்டு பேசிய உரையில் ஐன்ஸ்டீன் போட்டோ சிந்தசைஸ் ஆய்வு பற்றி மூச்சே விடவில்லை. வேண்டுமென்றே சார்புவிதி பற்றிமட்டுமே பேசினார். அதுதான் தலைவர். சொன்ன பேச்சுப்படி முதல் மனைவிக்கு மொத்த பரிசு பணத்தை கொடுத்தும் விட்டார்!

இளையராஜாவுக்கு கிடைத்த பத்மபூஷணும் காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்ட ஒன்று. பாரதரத்னா கொடுக்கப்படவேண்டிய ராஜாவுக்கு பத்மபூஷன் கொடுத்தார்கள். எவனுமே கணக்கெடுக்கவில்லை. எம்எஸ்விக்கு எதுவுமே கிடைக்கவில்லை. கமலுக்கு பத்மபூஷன் கொடுக்கப்பட்டாலும் எப்போதோ கொடுத்த பத்மஸ்ரீதான் அவர் பெயரோடு கூட வருகிறது. காரணம் பத்மஸ்ரீ கொடுக்கும்போது கமலை விட விருதுக்கு ஏக தகுதியிருந்தது. தற்போது பத்மபூஷனை தாண்டி கமல் எங்கேயோ போய்விட்டார். பாரதரத்னாவையும் தாண்டிப்போக முன்னர் அவ்விருது கமலுக்கு கொடுக்கவேண்டியது விருதுக்கு பெருமை.

Sujatha_27214_m3

அடுத்தது நம்ம வாத்தியார். குண்டுகல்யாணத்தோடு நிறுத்தி சுஜாதாவுக்கு கலைமாமணி விருது கொடுத்து அவமானப்படுத்தினார்கள். “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்”, “ஸ்ரீரங்கத்து தேவதைகள்”, “நகரம்” உட்பட ஏராளமான சிறுகதைகள், “என் இனிய இயந்திரா”, “ஏன் எதற்கு எப்படி”, “குறுந்தொகை ஒரு எளிய அறிமுகம்” என்று சுஜாதா எழுதாத எழுத்தா? ஒரு தலைமுறையையே வளர்த்துவிட்டு போயிருக்கு மனுஷன். ஒரு சாகித்திய அக்கடமி விருதுகூட இல்லை. ஏன் என்று கேட்டால்?

சுஜாதா வெறும் உரைநடையப்பா!


 

ஈரக்குரலோன்

இதெற்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு நகைச்சுவை அண்மையில் விஜய்  அவார்ட் நிகழ்ச்சியில் இடம்பெற்றது. இயக்குனர் ராம் தன் படத்து பாட்டையோ, படத்தில் நடித்த சிறுமியையோ அங்கீகரிக்கவில்லை என்று மேடையில் குறைப்பட்டார். சரி விருது கிடைக்காமல் போவதும் ஆதங்கப்படுவது இயல்பு. அதுபோல வியாபார நோக்கத்துக்காக விருதுகளை எல்லோரையும் கவர் பண்ணிக்கொடுத்து டிஆர்பி ஏற்றுவதும் டிவிகளுக்கு புதிதில்லைதானே என்றுவிடலாம் என்றால், இல்லை என்று விஜய் டிவி பதிலுக்கு ஒரு சீன் போட்டது. “நூறு தகுதியானவர்களுக்கு இந்த விருது கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் ஒரு தகுதியற்றவருக்கு கூட இந்த விருது கொடுக்கப்படுவதில்லை” என்று பஞ்ச் டயலாக் அடித்தார்கள். நானும் அது உண்மைதானோ என்று நம்பிவிட்டேன். 

 

சிறந்த பாடகருக்கான விருது. விருதுக்கான நோமினேஷன் லிஸ்ட் அமர்க்களம். "அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்? கண்ணாடி முன்னின்று பார்த்துக் கொள்வேன்" என்று பாடிய ஷங்கர் மகாதேவன். "அடியே .. அடியே .. எங்க நீ கூட்டிப்போறே" என்று ஆச்சரியப்படுத்திய ஸ்ரீராம். "ஆனந்த யாழை" என்று உருகவைத்த ஸ்ரீராம் பார்த்தசாரதி. "நெஞ்சே எழு" என்ற வழமையான ஏ ஆர் ரகுமான் மந்திரம். இப்படி பல பாடகர்கள். இத்தோடு “கடல் ராசா” தான் என்று முக்கு முக்கிய யுவன்சங்கர்ராஜா.

 

இதில் விருது யாருக்கு? ஒரே டென்ஷன். ரகுமான் வேறு விருதை அறிவிக்க வந்திருப்பதால் இன்னும் டென்ஷன். நான் சங்கர் மகாதேவன் என்கிறேன். மனைவி ஸ்ரீராம் என்கிறாள். ரகுமான் விருதுக்குரிய பெயரை அறிவிக்கிறார்.

“யுவன்சங்கர் ராஜா”

ஜெர்க் ஆகிவிட்டோம். யுவனின் குரலில் எந்தவிஷயம் உங்களுக்கு பிடிக்கும்? என்று கோபிநாத் ரகுமானிடம் கேட்க, ஏற்கனவே விருதுப்பெயரை  நம்ப இயலாமல் மீண்டும் மீண்டும் செக் பண்ணியதில் குழம்பிப்போன ரகுமான், இந்தக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை. “என்னைப்பார்த்து எப்பிடிடா இப்பிடி ஒரு கேள்வியை கேப்பே?” என்று ரகுமானின் மைண்ட் வாய்ஸ் கேட்டது. “உன்னைக்காணாமல் நானிங்கு நானில்லையே” பாடிய சங்கர் மகாதேவனை நினைத்திருப்பார் போலும். அவருக்கு கண்கள் இரண்டும் ஈரமாகிவிட்டது. உடனே சொன்னார்.

“ஈரம் … யுவனின் குரலில் உள்ள ஈரம் பிடிக்கும்”

யுவனின் முகத்தில் “சொல்லவேயில்ல?” எக்ஸ்பிரஷன். ஆனால் ரகுமான் ஈரம் என்று சொன்னதில் நிறைய அர்த்தம் இருக்கிறது. இந்தா முக்கு முக்கினா, அப்புறமா தண்ணி ஊத்தி கழுவத்தானே வேணும். அதை சொல்லியிருக்காப்ள.

அத்தோடு விட்டிருக்கலாம். ஆனால் டிடி வாய் சும்மா இருக்குமா? வந்தது வினை. அந்தப்பாட்டை பாடச்சொல்ல, இரண்டுவரி பாடினாரே யுவன். ஆகா.

Shruti Hassan Hot in 3 Movie Stills“நான் ஒத்தையிலே பாடுறனே தன்னாலே, இந்த புத்தி கெட்ட பாறைகளின் முன்னால.. ”

இந்த “சுருதி”ப்பொண்ணு ஏன் தெலுங்குக்கு ஓடிப்போயிட்டான்னு அப்பத்தான் தெரிஞ்சுது. விஜய் டிவியின் பஞ்ச் டயலாக் மீண்டும் ஞாபகத்தில் வந்து தொலைத்தது.


“நூறு தகுதியானவர்களுக்கு இந்த விருது கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் ஒரு தகுதியற்றவருக்கு கூட இந்த விருது கொடுக்கப்படுவதில்லை”

அடங்கொய்யாலே.


Comments

 1. சூப்பர் பதிவு அண்ணா.... விஜய் விருதுகள் பற்றிய பதிவு அருமை. (நானும் ஏற்கனவே என்னுடைய பதிவில் கழுவி கழுவி ஊத்திவிட்டேன்). மாருதி விருது பற்றி ஞாபகப்படுத்தியது இன்னும் அருமை. அதே டொக்டர் சிவகுமார் தான் நோய் வாய்ப்பட்டு படுக்கையாக இருந்த என்னுடைய அம்மாவுக்கும் மருத்துவராக இருந்தார்...

  உங்களிடம் இருந்து கொல்லைப்புறத்துக் காதலிகளை இன்னும் எதிர்பார்க்கின்றேன்...

  ReplyDelete
  Replies
  1. கொல்லைப்புறத்து காதலிகள் புத்தகத்தில் இப்போது பிசியாக இருக்கிறேன் தல.கூடிய விரைவில் எழுதுகிறேன். நன்றி.

   Delete
 2. இவை போல் ஒரு விருது
  உங்களுக்கும். ஒரு நாள் நிச்சயமாக கிடைக்கும்

  ReplyDelete
  Replies
  1. எதுக்கு இப்ப இந்த லொள்ளு? :

   Delete
 3. இறுதியில் சொல்லவந்த ஓரிரு வரிகள்தான் மாட்டரே [ நானும் பார்த்து அதே ஜெர்க் ஆனேன்!!] - ஆனா, அத எவளவு அழகாக தொகுத்து இவ்வளவு விடயங்களை [ 90இலேயே இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்ததால் பல விடயங்களை முதன்முறையாக அறிகிறேன்!] ஒரு வியாழமாற்றமாக போடும் உங்களுக்கே ஒரு விருது கொடுக்கலாம்.
  Uthayan

  ReplyDelete
  Replies
  1. சேம் பிளட்? ஹ ஹா.

   Delete
  2. பி பொசிடிவ் :)

   Delete
  3. https://www.youtube.com/watch?v=sPrHg9jvJGo&list=UUuF8-WmBJvhV5rZj2aYSoYw

   FYI

   Delete
 4. Yes. Good idea for magara yarl virruthu, I am thinking in point Jeyaraj current state, here short listed candidates:
  1. Duglas
  2. Mahinda
  3. Kota
  3. Chandra sri (governor)

  Any other guess?

  ReplyDelete
  Replies
  1. Hi Friend, I would appreciate you put your name if the intention was genuine. Nevertheless, I think I have an obligation to answer this matter. So thanks for taking this up.

   Its not a rocket science to Padalay readers that I am a huge huge fan of both Jeyaraj and Sujatha. During my childhood, these two names were instrumental in whatever my knowledge and growth in Tamil and Tamil literature. Sujatha goes beyond it and introduced the affection on Science to me. So with that in mind, I will never ever lose the respect on these two people.

   Now the criticism on Jeyaraj.

   That news about he praised Douglas very high was in Dinakaran paper. We all know what Dinakaran is and how can it tweak the news. But we still chose to believe it. That's a choice. Anyway personally I was told by Jeyaraj's inlaw that, Jeyaraj did only say to Douglas that "Its now your chance to bring something to Tamils". In addition Douglas went to donate the money volunteer, without the invitation, obviously to fish something out from it. As it stands, neither Jeyaraj nor Kamban Kazhagam made a press release denying the Dinakaran report. So that raised the genuine doubts like what you just put here. I do have the same confusion if not the doubts.

   Nobody is immortal. Nobody is perfect. Neither Kambavarithi. Neither Sujatha. Neither me and nor you. But we try to be good. Its a pursue. People in public life, we expect them to be perfect. And whenever they seem to be going against the righteous, they will be questioned as you did. I respect that and I will continuously ask that question again and again whenever I meet Jeyaraj or kamban kazhagam people. I can assure you that. But we can not, repeat, can not take Kamban Kazhagam's contribution to eelam literature away just because of these political distractions. As I written in my Kollaipuraththu Kaathalikal, kamban kazhagam and Jeyaraj are so inspiring to kids like us and reason for why we read and followed Tamil literature even-though we were in Mathematical streams. In that literature sense, Kamban Kazhagam is immortal.

   I am genuinely sad about this derogatory state of Kamban Kazhagam and I want Kamban Kazhagam to clarfy its position openly. As for your question on awards, I repeatedly insisted, its the laurettes who make the award respected. Not the other way round. The moment its given to the wrong person, award will lose its dignity.

   We can hope you are wrong, rather I wish you are wrong. Time will tell what its going to be. I am not going to predict any. Because I don't personally think Mahara yaazh would be awarded to a wrong person. I really hope they won't dissappoint me.

   And now I deserve your good name I guess. Thanks.

   JK


   Delete
  2. 1) I am not the anonymous above but another.I think you cant question his/her genuineness for raising the issue which has been on the public domain for a while.Not everyone are fortunate enough to live beyond the reach of white vans.

   Delete
  3. Although I discourage anonymous comments, I don't reject then unless they are solely for bullying. This above comment is for one's own judgement, I took my time to reply him or her. So I just wanted to know whether he or she wanted my genuine reply or just provocation. My email is always there and he or she can choose to message me personally too. Finally that comment is not something will bring you to white van. If so many wouldn't be living in SL now. Those white van people have more serious candidates to look for I think. Even you could have revealed your identity. There is nothing alarming in your comment either. It's my personal take.

   Delete
 5. எங்கேயும் எப்போதும் ராஜா -கனடா , இளையராஜாவின் சங்கீதத் திருநாள் - மதுரை இந்த இரண்டிலும் யுவன் பாடியது கமல் அவர்களின் "போட்டு வைத்த காதல் திட்டம்". யுவனுக்கு அது Situation Song ஆக இருக்கலாம்.அதுக்காக யுவன் தனது Toilet இல பாடவேண்டியதை Stage இல பாடினா...? கமலுக்கு அற்புதமான குரல். "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் " என்று கீழ் ஸ்தாயிலும் "காவேரி அல்ல கரை போட்டு " என்று உச்ச ஸ்தாயிலும் பாடும் மந்திர குரல். SPB ஒரு முறை சொல்லி இருக்கிறார் கமல் ஒரு முழு நேர பின்னணி பாடகர் ஆகி இருந்தால் எனக்கு இவ்வளவு பாடல்கள் பாட கிடைத்திருக்காது எண்டு.புகழ்ச்சிக்காக என்றாலும் அதில் உண்மை நிறைந்தே உள்ளது.Botany செல்வநேசன் Sir அடிக்கடி ஒண்டு சொல்லுவார் " மூலம் வெளிக்கிட கத்திறது" எண்டு. அது இப்ப எனக்கு விளங்குது.நன்றி யுவன்! -(Vimal)

  ReplyDelete
  Replies
  1. Kamal as you said, is an excellent singer. We can no way compare him to Yuvan and attempting Kamal's songs on stage is a suicide too (even for Kamal himself)

   Delete

Post a comment

Contact form