பாலர் வகுப்பில் தமிழ் பாடத்தில் படித்த கதை இது.
முருகனும் கிருஷ்ணாவும் சந்தையிலே வியாபாரம் செய்யும் சிறுவர்கள். முருகன் காய்கறி, பழங்கள் விற்பவன்; கிருஷ்ணா தேங்காய்க்கடை. ஒருநாள் மாலை, வியாபாரம் முடிந்து சந்தை கலையும் சமயம்; ஒரு பெரியவர் சாமான் வாங்க வருகிறார். முருகனுடைய கடையில் எல்லாமே விற்றுத்தீர்ந்து ஒரேயொரு முலாம்பழம் மட்டுமே எஞ்சியிருந்தது. அது ஒரு பெரிய முலாம்பழம். பெரியவருக்கு பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது.
"அடடா நல்ல பெரிய பழமாக இருக்கிறது .. என்ன விலைடா தம்பி?"
முருகன் எந்த தயக்கமுமில்லாமல் சொன்னான்.
"அந்த முலாம்பழத்தில் பழுது இருக்கிறது ஐயா "
அவரும் திருப்பிப்பார்த்தார். அட ஆமாம். இதுவேண்டாம் என்று திருப்பிக்கொடுத்தார். அடுத்ததாக பக்கத்திலிருந்த கிருஷ்ணனின் கடைக்குப்போகிறார். "இது நல்ல தேங்காயா?" என்று கேட்க அவனும் "ஓம்" என்று சொல்லி ஒரு முட்டுத் தேங்காயை அவரின் தலையில் கட்டிவிடுவான். வியாபார தந்திரம் தெரியவில்லை என்று சொல்லி முருகனை எள்ளி நகையாடவும் செய்வான்.
அதற்குப் பிறகு அந்தப்பெரியவர் எப்போது சந்தைக்கு வந்தாலும் முருகன் கடையிலேயே அத்தனை காய்கறி, பழங்களும் வாங்குவார். கிருஷ்ணனின் கடையை எட்டியும் பார்ப்பதில்லை. பின்னர் அவர் தன்னுடைய நிறுவனத்திலேயே முருகனுக்கு வேலை போட்டுக்கொடுத்து, முருகன் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு முன்னேறுவதாக கதை போகும்.
சின்ன நீதிக்கதை. உண்மை சொல்லி நேர்மையாக வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்கின்ற அறிவுரையை சொல்லும் கதை. படித்து இருபத்தைந்து வருடங்கள் கழிந்துவிட்டன. ஒவ்வொருமுறையும் பொய் சொல்லலாமா என்று நினைக்கும்போதும் “இந்த முலாம்பழத்தில் பழுது இருக்கிறது ஐயா” என்பான் முருகன். அதற்காக பொய் சொல்லாமலேயே இதுவரை வாழ்ந்துவிட்டேனா என்றால் சான்ஸே இல்ல. வாய் திறந்தால் பொய் சரளமாக வரும். ஆனால் நிறைய தடவை வாய் வரைக்கும் வந்த பொய்களை, அப்படியே ரிட்டேர்ன் பண்ணி விழுங்கியமைக்கு இந்த முலாம்பழக் கதையே முழுமுதற்காரணம். திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்று எந்த நீதி நூல்களும் எனக்குச் செய்யாத வேலையை ஒரு சாதாரண கதை இலகுவாக செய்தது.
கேயா என்ற நண்பி. Thoughtworks நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். அது மென்பொருள் பொறியாளர்களின் பிதாமகரான மார்டின் பஃவுலரின் நிறுவனம். அந்த நிறுவனத்தில் வேலையைத்தவிர, புத்தக வாசிப்பு, விளையாட்டு, மனித உரிமை ஆர்ப்பாட்டங்கள், சமூக சேவை என்று பலதரப்பட்ட விசயங்களையும் ஊழியர்கள் செய்வதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள். அவற்றில் ஆர்வமுள்ள ஊழியர்களையே வேலைக்கும் எடுப்பார்கள்.
மூன்று வாரங்களுக்கு முன்னர்தான் இந்த "Bad Arguments" என்ற புத்தகத்தை கேயா அனுப்பினார். “இந்தப்புத்தகம் எங்கள் நிறுவனத்தில் ஒரு ரவுண்ட் வருகிறது, fallacies பற்றிய சுவாரசியமான புத்தகம், வாசித்துப்பாருங்கள், பிடிக்கும்” என்று சொன்னார். சாதாரணமாகவே வாசிக்கத் தொடங்கினேன். இரண்டே நிமிடங்களில் புரிந்துவிட்டது. இது என் நித்திரைக்கு ஆப்பு வைத்து தொலைக்கப்போகிறது என்று. இப்போது தொலைத்துவிட்டது.
கந்தசாமியும் கலக்ஸியும் நாவலின் "சுமந்திரன் வருகை" என்ற அத்தியாயத்தில் சுமந்திரன், இராணுவ அதிகாரி சோமரத்னவை சுத்துவது இந்த தப்பான வாதங்களை அடிப்படையாக வைத்தே. டெரி பிரச்சட்டின் எந்த நாவலை எடுத்தாலும் அவருடைய பாத்திரங்கள் குதர்க்கமான வாதங்களைப் பேசியபடி கண்ணடிக்கும். நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும். வாசிக்கும்போது எமக்கும் ஒரு சின்ன சிரிப்பு வரும். முகநூலில், மேடைகளில், பத்திரிகைகளில் இந்தவகை தப்பான வாதங்களை கவனிக்கும்போதெல்லாம் கூட அதே பீலிங். கஜன், கேதாவோடு அடிக்கடி அலசும் விசயங்கள்தான். ஆனால் இன்னதுக்கு இன்ன பெயர். இப்படி இப்படியெல்லாம் தப்பான வாதங்களுக்கு வகைகள் இருக்கின்றன என்ற விஷயம் முன்னர் பெரிதாக தெரியாது.
"Bad Arguments" புத்தகம் அதற்கான கோடியை காட்டியது.
வெறும் ஐம்பது பக்கங்கள்தான். அதிலும் இருபது பக்கங்கள் பூராக சித்திரங்கள். ஒவ்வொரு தப்பான வாதத்தையும் சின்ன சின்ன உதாரணங்களோடு அந்த புத்தகம் விவரிக்கிறது. ஆர்வக்கோளாறில் அவற்றைப்பற்றி மேலும் தேடித் தேடி மூழ்க, இது ஒரு கடல் என்று விளங்கியது. அரிஸ்டோடில் என்பவர் ஒரு தாடிக்கார தத்துவஞானி என்று மட்டுமே படித்திருக்கிறோம். ஆனால் மனுஷன் என்ன அப்படி கிழித்தது என்று அவ்வளவாக தெரியாது. தேட தேட, மனுஷன் இந்த “தப்பான தர்க்கங்கள்” துறையில் பூந்து விளையாடியிருக்கிறது. உயர்தரத்தில் Logic என்று ஒரு பாடமே இருக்கிறது. அரிஸ்டோடில் சொன்ன விசயங்கள் எல்லாம் படிப்பிக்கிறார்களா என்று தெரியவில்லை. மண்டை காய்ந்தது. வாசித்தால் வேலைக்காகாது, இதனை தொடராக எழுதினாலேயே எனக்கு வெளிக்கும் என்று புரிந்து சும்மா எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் கட்டுரையாக எழுதியது. ஆனால் ஆங்காங்கே அறிவுரைகள் பொக்குளிப்பான் போட்டதால், தொடராமல் கிடப்பில் போட்டுவிட்டேன்.
ஒரு கட்டுரையின் தரம், அதை எழுதும் ஆளை வைத்து சமயத்தில் எடை போடப்படும். ஆனால் புனைவு அதன் பொருளடக்கத்தை வைத்தே எடை போடப்படும். முலாம்பழக் கதையை யார் எழுதியது? என்று எனக்குத் தெரியாது. ஆனால் கதை சொல்லும் நீதி, இன்னமும் என் மண்டைக்குள் புதைந்திருக்கிறது. அதனாலேயே இந்தத் தொடர், கதைகளாய் எழுதப்பட்டது. Straw man, Ad Hominem, False Dilemma என்ற பெயர்களை எல்லாம், எழுதிய நானே மறந்துவிட்டேன். ஆனால் நமசிவாயம் மலை ஏறியதும், சிவகாமி கண்ணீரில் மிதந்ததும், ஸ்டீவ் ஜொப்ஸ் பைனரி பற்றி கதைத்ததையும் வாசித்தவர்கள் இலகுவில் மறக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். “கடவுள் இல்லை என்று எங்கே சொன்னேன், இருந்தா நல்லா இருக்குமென்றுதானே சொன்னேன்” என்று கமல் வார்த்தை ஜாலம் காட்டும்போது, அது Equivocation என்கின்ற fallacy என்று ஞாபகம் வராது. அடடே இதைத்தானே வாதவூரரும் கந்தரோடையில் செய்தாரே என்று ஞாபகம் வரும். வரவேண்டும். வராவிட்டால் அது எழுத்தின் தோல்வி. அடுத்தமுறை இன்னமும் மெனக்கட்டு எழுதவேண்டும்.
மூன்றுவாரங்களில் ஏழு சிறுகதைகள். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட fallacyகள். யானையை தூக்கி தலையில் வைத்திருந்த மலைப்பு வருகிறது. முதலில் இலகுவாக ஆரம்பித்து, போகப் போக, கொஞ்சம் கொஞ்சமாக கதைகளின் சிக்கலை இறுக்கமாக பிணைய முயன்றிருக்கிறேன். கதைக்களங்கள் கூட வித்தியாசமாக. அஜந்தன் அண்ணா, “தம்பி முதல் எழுதினதுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கதைக்களன் எழுதடா பார்ப்பம்?” என்று “ஏத்தி” விட, அன்றிரவு எழுதப்பட்டதே “பைனரி பிரைவேட் லிமிடட்”. இப்படி, வாசிக்கும் நண்பர்கள் நான் சரியான திசையில்தான் செல்கிறேன் என்று அவ்வப்போது லைட் ஹவுசில் வெளிச்சம் காட்டினால்தான் எனக்கும் உற்சாகமாக இருக்கும். காட்டுங்கள், தரமாக இருந்தால் மாத்திரம்.
கேதா “அண்ணே இதனை பதிப்பிட வேண்டும்” என்றான். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால், இன்னும் சில விஷயங்களை இதில் சேர்க்கவேண்டும். முக்கியமாக பல்வகைப்பட்ட paradox கள் இருக்கின்றன. எழுதவேண்டும். முதலில் fallacy, paradox இரண்டுக்கும் எளிமையான தமிழ் வார்த்தைகளை கண்டறியவேண்டும். நண்பர்கள் முயற்சி செய்யலாம்.
இப்போது ஒரு ‘anti-fallacy’ அலசல்.
இந்த தப்பான வாதங்கள், fallacy என்பதை நாம் எல்லோரும் செய்கிறோம். நாம் எல்லோரும் என்றால், நான், நீங்கள், உங்கள் வீட்டார், என் வீட்டார், பத்திரிகை, இணையம், எழுத்தாளர்கள், கடைக்காரர், ஒழுங்கையில் கிரிக்கட் விளையாடும்போது அலாப்புபவன், சாமியார், சயன்டிஸ்ட் என்று யார் எது என்கின்ற பேதம் இல்லாமல் இந்த விதண்டாவாதங்கள் எங்கும் இருக்கும். அறிவாளி, மொக்கன் என்கின்ற வித்தியாசம் இதற்கு இல்லை. காரணம் இதில் அறிவோடு, விருப்பு வெறுப்பு என்கின்ற ஆழ்மன உணர்வும் சேர்ந்து விடுகிறது. உதாரணத்துக்கு இலங்கை அணியை எதிர்ப்பவர்களும், அதனை ஆதரிப்பவர்களும் தமக்கிடையே செய்கின்ற நியாயப்படுத்தல்கள். அனேகமானவை விதண்டாவாதங்களாகவே இருக்கும். நிருபிக்கவேண்டிய தேவைகளுக்காக செய்யப்படுவது.
நோயல் நடேசனின் “அசோகனின் வைத்தியசாலை” நாவலைப் பற்றி அண்மையில் பேசும்போது, “நடேசனின் அரசியல் பார்வைகள் மீதான விமர்சனம் இந்த நாவலை கொண்டாடுவதற்கு தடையாகக் கூடாது” என்று பொருள்பட ஒரு கருத்து தெரிவித்தேன். பேசி முடிந்தபின்னர் தேநீர் இடைவேளையின்போது ஒரு முதியவர் அருகில் வந்தார்.
“தம்பி எனக்கு தயிர் பிடிக்காது, ஆனால் இங்கே தயிர் பரிமாறப்படுவதால் அதை சாப்பிடுகிறேன்” என்று நீர் சொல்லலாமா? நடேசனை பிடிக்காவிட்டால், அவர் புத்தகத்தையும் வாசிக்கக் கூடாதுதானே?
என்னை மடக்கிவிட்டாராம். நான் சொன்னேன்.
“அப்படி இல்லை ஐயா, எனக்கு தயிர்க்காரி தலையில் போடுகின்ற கொண்டை ஆகாது, என்பதற்காக அவள் சரியாக கடைந்து விற்ற தயிர் சரியில்லை என்று பொய்ப் பிரச்சாரம் செய்யமாட்டேன். அவ்வளவுதான்.”
“நடேசனின் அரசியல் பிடிக்காது” என்று நான் சொன்னதை அவர் “எனக்கு நடேசனையே பிடிக்காது” என்று புரட்டிப்போடும் Straw Man வேலை பார்த்தார். அது புரிந்ததால் இன்னொரு அர்த்தமற்ற விவாதத்திலிருந்து அன்றைக்கு நான் தப்பிக்கொண்டேன். Fallacies பற்றி அறிந்துவைத்திருப்பது இப்படியான பொம்மர்கள் இரையும்போது பங்கருக்குள் போய் ஒளிந்துகொள்ள உதவி செய்யும்.
சிலர் விதண்டாவாதங்களை தெரிந்தும் வேண்டுமென்று செய்வார்கள். பலர் அறியாமல் செய்யவார்கள். இதில் முக்கியம் என்னவென்றால், நாங்கள் எல்லாவற்றையும் தர்க்கரீதியாக அலசி ஆராய்ந்து பேச முடியாது. எழுத முடியாது. குடும்பம் நடத்த முடியாது. வாழ்க்கை ஒன்றும் டெஸ்ட் கேஸ் எழுதி பின்னர் புரோகிராம் எழுதும் மென்பொருள் அல்ல. சமந்தாவை பிடிக்கும் என்றால் பிடிக்கும் என்று சொல்லிவிடவேண்டும். உடனே சமந்தாவின் கண் ஒரு பக்கம் ஓடுகிறது, உயரம் காணாது, பிகினியில் வண்டி கொஞ்சம் தள்ளுகிறது என்று நொட்டை சொல்லி தர்க்க ரீதியாக மொக்கை போடக்கூடாது. இதென்ன ஈழப்பிரச்சனையா என்ன?
இயல்பை அதனோடு இணைந்த பலவீனங்களோடு கொண்டாடும் பக்குவத்தை அடைய முயல்வோம். யோக்கியன் உட்பட எல்லோருமே இங்கே தவறு விடுபவர்கள்தான். பலவீனம் எல்லோருக்கும் உரிய குணம். அதை சாட்டாக வைத்தே, மற்றவனின் பலவீனத்தை குறிவைத்து தாக்கி எமது வெற்றியை நிர்ணயிக்கிறோம். எதிர்ப்பு அரசியலில் இருக்கும் பலத்த வசதி இது. அதேநேரம் அவனுக்கும் எமது பலவீனத்தை தாக்கி வெற்றிகொள்ள ஒரு சந்தர்ப்பம் எதிர்காலத்தில் வரும். இதில் வெற்றி யாருக்குமே கிடைப்பதில்லை.
ஆகவே ஒருவன் தப்பான வாதம் ஒன்றைச் செய்யும்போது அவனை எள்ளி நகையாடுவதிலோ, கேலி செய்வதிலோ அர்த்தமில்லை. நாளைக்கு நமக்கும் அந்த நிலை வந்தே தீரும். ஆனால் இவன் இதை இதற்காகத்தான் செய்கிறான் என்கின்ற ஒரு புரிந்துணர்வு, அவனுடைய தப்பான வாதங்களை அலசுவதன்மூலம் வந்துசேரும். இதனால் கிடைக்கும் பலாபலன்கள் அநேகம்.
முதலாவது, அவனுடைய வாதத்தை புறந்தள்ளினாலும் அவனை தள்ளிவைக்க மாட்டீர்கள். நாளைக்கே அவன் ஒரு அர்த்தமுள்ள வாதத்தை முன் வைக்கும்போது நமக்கும் புது விஷயம் ஒன்று எட்டும். மிக எளிமையான உதாரணம் ஜெயமோகன். ஜெயமோகன் செய்கின்ற, தப்பான வாதங்கள் என்று நமக்குப் படுவதை, அதன் காரண காரியங்களோடு சேர்த்து புறக்கணிக்கலாம். எதிர்க்கலாம். ஆர்ப்பாட்டம் கூட செய்யலாம். ஆனால் ஜெயமோகனே வேண்டாம் என்றால், நட்டம் அவருக்கல்ல, எமக்கே. அந்தாள் எழுதிக்கொண்டேயிருப்பார். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயங்களையும் தர்க்கரீதியாக அலசி புறக்கணிக்க ஆரம்பித்தோமானால், ஒரு கட்டத்தில் எதற்கு வாழ்க்கை? என்ற சிந்தனை வந்து, தனித்து, தலைமயிர் பிஞ்சி, தற்கொலை செய்யும் நிலை வந்துவிடும். புறக்கணிச்சு புறக்கணிச்சு புறம்போக்காக போய்விடுவோம்.
Fallacy பற்றிய அறிவு இப்படியான சண்டைகளையும், கருத்துகளையும் இனம்கண்டு நாம் தாண்டிச்செல்ல உதவியாக இருக்கும். முக்கியமாக நாம் அந்த சண்டையை பிடிக்காமல் இருப்பதற்கு நிறைய ஹெல்ப் பண்ணும். அதை ஓரளவுக்கு இந்தத் தொடரில் கொண்டுவர முயன்றிருக்கிறேன். தொடர்ந்து முயலுவேன். அவ்வப்போது வண்டிக்கு கொஞ்சம் பெட்ரோல் அடியுங்கள். போதும்.
இப்போதைக்கு, நாவலோ நாவல் கொஞ்சம் ஓவர் டோஸாக போவதால் ஒரு நன்றி சொல்லி ,
அறிமுகம் : ஏழு நாட்கள், ஏழு கதைகள்
கதை 1 : நமசிவாயமும் சூரியனும்
கதை 2 : சிவகாமியின் கண்ணீர்
கதை 3 : கந்தரோடை கலகம்
கதை 4 : குண்டர் கூட்டம்
கதை 5 : கோட்டைப்பிரச்சனை
கதை 6 : பைனரி பிரைவேட் லிமிடட்
கதை 7 : சகுந்தலாவின் வெருளி
முடிவுரை : சுட்ட பழமா? சுடாத பழமா?
'எலியின் வால் மட்டும் பூரெல்ல' நிலைமையில் தான் இப்போதும் நான்! அறிவை வளர்க்க வாசிக்காவிட்டாலும், உங்கள் எழுத்தின் அருமையை வாசிக்க காத்திருகின்றேன் - தொடருங்கள்.
ReplyDeleteUthayan
நன்றி அண்ணே உங்கட தொடர்ந்த ஆதரவுக்கு. I really mean it.
Deleteஅறிவை வளர்க்கோணும் எண்டு நானும் எழுதிறதில்ல. எழுதிறதில விருப்பம். எழுதேக்க அங்கனக்க கொஞ்ச விசயங்களை செருகிறது. அவ்வளவுதான். ஆனா எழுத்தின் நோக்கம் ஹெமிங்வே சொன்னதுதான்.
"Read the literature for the pleasure of reading it"
அத எழுதுறவன் மறந்தா மாட்டர் ஓவர்.
ஒன்றும் over dose இல்லை JK அண்ணா... ஒவ்வொரு நாளும் விடாமல் வாசிக்கிறனான். நீங்கள்தான் இடைக்கிடை லீவு விடுகிறதால dose சரியா வேலை செய்யுதில்லை😋😋
ReplyDeleteஇப்ப "bad argument" ebook download பண்ண தேடிக்கொண்டிருக்கிறன்.
- அரவிந்
நன்றி தம்பி. இது போதும். புத்தகத்துக்கான லிங்க், கட்டுரைக்கு அடியில் இருக்கிறது.
Deleteஇரண்டு வாரங்களாக விடுமுறையில் ஊருக்குச் சென்று விட்டதால் படலை பக்கம் வர முடியவில்லை. இன்று வந்ததும் "நாவலோ நாவல்" தொடர் முழுவதையும் வாசித்து முடித்தேன். அனைத்துக் கதைகளும் நன்றாகவே இருந்தது.,,
ReplyDeleteThanks & Regar
நன்றி முருகேசன்.
Deleteஅண்ணா, நாவலோ நாவல் கதைகள் ஒவ்வொண்டும் அருமை. அதுக்குள்ள வந்த முலாம்பளக் கருத்துக்கள் ஒவ்வொண்டும் பச்சக். தினமும் வந்து புதுசா ஏதாவது போட்டிருக்கிறாரோ எண்டு பாப்பேன். உப்பிடி எழுத ஒரு சிலராலதான் முடியும். அதோட வாசித்த பிறகு சிந்திக்க வைக்கிற எழுத்து... அருமை. சினிமா விடுப்புகளையோ வேறு கதைகளையோ வாசிக்கும் போது நல்லாயிருக்கும். பிறகு நேரம் வீணான ஃபீலிங்க் வந்து கவலை தரும். ஆனா நாவலோ நாவல் வாசித்த பிறகு ஏதோ ஒரு நிறைவு... ஒரு நல்ல கச்சேரி கேட்டது போல. எழுதியமைக்கு உண்மையான நன்றி. - Bavan
ReplyDeleteநன்றி தம்பி .. அடுத்த கச்சேரிக்கு தயாராவோம்.
Deleteஅருமையான தொடர். இயல்பாகவே இந்த வாதங்கள் சர்ந்த விடயங்களில் அதிக ஈடுபாடாகையால் தொடரே ரொம்பப் பிடித்துவிட்டது.
ReplyDeleteஅதற்குள் முடிந்துவிட்டதே என்று எண்ணச்செய்துவிட்டது.
கந்தசாமியும் கலக்சியுமிலே அந்த சுமந்திரன் வருகை பாகம் ரொம்பப்பிடிக்கும். மனிசன் என்ன மாதிரி எழுதிக்கலக்குது என்று எண்ணச்செய்த பாகம் அது.இந்தத் தொடரிலே குண்டர் கூட்டமும் அவ்வாறு என்னை மீண்டும் உணரச்செய்த பாகம். கலக்கீட்டிங்க அண்ணா.
அந்த Bad arguments வாசிக்கணும். விரைவில்..
அடிக்கடி இப்படித் தொடர்களும் எழுதிக் கலக்குங்கள்.
-ஜனா.
நன்றி ஜனா... ஒரு கிழமை லீவுக்கு பின்னர் மீண்டும் சிந்திப்போம்.
Deleteஅருமை அருமை அருமை இதை தவிர வேறு வார்த்தையில்லை .
ReplyDeleteமுடிய போகுதே என்று ஏங்க வைத்த பதிவு ....
இன்னும் கொஞ்சம் எழுதினால் என்ன குறைந்தா போய்விடுவார் என்று கோபப்பட வைத்த பதிவு ....
சுட்டதோ சுடாததோ பழத்தை தரலாம் தானே
வரம்புயர நீர் உயரும்
நீர் உயர .....
நன்றி