கந்தரோடை என்ற ஊரின் பெயரைச்சொன்னாலே யாழ்ப்பாண இராசதானி முழுதும் கொஞ்சம் மரியாதையாக பார்க்கும். காரணம் கந்தரோடையில்தான் அதிகம் கற்றுத்தேர்ந்த ஞானச்சித்தர்கள் இருக்கிறார்கள். அதிலும் அங்கேயிருக்கும் பரந்துவிரிந்த ஒரு நாவல் மரம் யாழ்ப்பாண இராசதானி தாண்டி வன்னியிலும் பெயர்போன நாவல் மரம். காரணம் அந்த நாவல் மரத்துக்கு கீழேதான், தினந்தோறும் ஞானமார்க்கத்தில் உள்ளவர்கள் அறிவுப்போர்களை நடத்துவார்கள். பொதுவாக சுதுமலை, கோண்டாவில், கந்தரோடை போன்ற பிரதேசங்களில் வசித்தவந்த தமிழ் பௌத்தர்களுக்கும், நல்லூர், பூநகரி, மாவிட்டபுரம் பகுதிகளில் வசித்த தமிழ் சைவர்களுக்குமிடையிலேயே கடும் விவாதம் நடைபெறும். இந்த விவாதங்களில் அவ்வப்போது சில நாத்திகர்களும் பங்குகொள்ளுவதுண்டு.
வாதங்களின்போது நாவல் கொப்பு ஒன்று ஒடிக்கப்பட்டு வாதம் செய்வோருக்கு நடுவே ஊன்றப்படும். விவாதமும் தர்க்கமும் ஆரம்பிக்கும். மக்கள் கூட்டமாக சுற்றிநின்று வேடிக்கை பார்ப்பார்கள். தங்கள் அறிவுக்கேற்றபடி அறிஞர்களின் வாதங்களுக்கு கைதட்டியும், உம் கொட்டியும், பெருமூச்சுவிட்டும், எள்ளி நகையாடியும் வினை ஆற்றிக்கொண்டிருப்பார்கள். சிலர் யார் வெல்லுவார்கள்? என்று பந்தயமும் பிடிப்பதுண்டு.
இறுதியில் ஒருவர் எதிர்வாதம் செய்யமுடியாமல் தோற்றுப்போனால், வென்றவர், அந்த நாவல் கொப்பை எடுத்து உயர்த்தி “நாவலோ நாவல்” என்பார். தோற்றவர் முறைப்படி தோல்வியை ஒப்புக்கொண்டு அவர் உடைமை எல்லாவற்றையும் வென்றவரிடம் ஒப்படைக்கவேண்டும். ஆனால் அது பொதுவாக நடப்பதில்லை. அநேகமான வாதங்களில் இருவருமே “தாமே வென்றார்கள்” என்று நாவல் கொப்புக்காக இழுபடுவார்கள். இருவரின் அதிக பலமுள்ளவன் பிடுங்கி “நாவலோ நாவல்” என்று கூவுவான். கூட்டம் ஆர்ப்பரிக்கும். உடனே மற்றவன் நாவல் மரத்தில் இன்னொரு கொப்பை வளைத்து முறித்து தானும் “நாவலோ நாவல்” என்பான்.
ஒருநாள் இப்படி ஒருவாதப்போர் புரிய, சமய ஞானத்தில் தலைசிறந்த வாதவூரரும், நாத்திகவாதத்தை பரப்புகின்ற சிவநேசச்செல்வரும் தயாராகின்றனர். கொப்பு நடப்படுகிறது. சனம் கூடிவிட்டது. வாதவூரருக்கு பின்னாலே கூட்டம் அம்மியது. ஆட்டம் ஆரம்பிக்கிறது. நாத்திகருக்கு பெரிதாக சப்போர்ட் இல்லை.
வாதவூரர் : தென்னானுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
சிவநேசச்செல்வர் : இறைவன் ஒருவனே என்றால் எதற்கு இரண்டு போற்றிகள் வாதவூரரே?
வாதவூரர் : சிவநேசரே இறை நிந்தனை செய்தால் நரகத்தில் உழல்படுவீர்.
சிவநேசச்செல்வர் : ஹ ஹா ஹா .. இறைவனே இல்லை என்கிறேன். இதில் நரகம் எங்கே இருக்கப்போகிறது? ஹ ஹா ஹா.
வாதவூரர் : பெயரிலே சிவநேசரை வைத்திருக்கிறீர். ஆனால் கடவுள் இல்லை என்கிறீர். இது கோமாளிக்கூத்து இல்லையா?
சிவநேசச்செல்வர் : யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த நீர் மட்டும் வாதவூரர் என்று பெயர் வைத்திருக்கலாமா?
வாதவூரர் : வீண் விவாதம் வேண்டாம், கடவுள் இல்லை என்கிறீர், எங்கே “கடவுள் இல்லை” என்பதை நிரூபியும் பார்க்கலாம்?
சிவநேசச்செல்வர் : அடக்கடவுளே .. இல்லாத ஒன்றை இல்லை என்று எப்படி நிருப்பிப்பது? அதுதான் இல்லையே.
வாதவூரர் : பார்த்தீரா பார்த்தீரா .. நீரே “அடக் கடவுளே” என்றீரே. கடவுளை நம்புவதால்தானே அப்படிச் சொன்னீர்?
“பலே .. பலே” என்று கூட்டம் கைதட்டியது. சிவநேசர் ஏமாற்றத்தோடு தலையை ஆட்டினார்.
சிவநேசச்செல்வர் : “அடக் கடவுளே” .. என்பது ஒருவித விளிப்பு. சிறுவயதுமுதல் சொல்லப் பழகிவிட்டேன். சிலது பழக்கதோஷத்தால் செய்வது. அதற்காக கடவுளை நம்புவதாக அர்த்தமா? என்ன இது தர்க்கம்?
வாதவூரர் : நம்பிக்கைதான் கடவுள் சிவநேசரே.
சிவநேசச்செல்வர் : அந்த நம்பிக்கைதான் என்னிடம் இல்லை என்கிறேனே.
வாதவூரர் : நம்பிக்கையே இல்லாத நீர் எப்படி நாளைக்கு கட்டிய மனைவியை நம்புவீர்?
சிவநேசச்செல்வர் : அந்த நம்பிக்கை வேறு. இந்த நம்பிக்கை வேறு வாதவூரர். எல்லா நம்பிக்கையையும் ஒன்றாக போட்டு குழப்பாதீர். வார்த்தை ஜாலம் வேண்டாம். தத்துவவிசாரமே இங்கு முக்கியம்.
வாதவூரர் : சிவநேசச்செல்வரே எல்லாமே நம்பிக்கைதான். கேள்வி இல்லாத நம்பிக்கை. அதுதான் கடவுள். உங்கள் விஞ்ஞானத்தால் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தரமுடியுமா? ஏன் இந்த பூமி உருவானது? இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்னர் என்ன நிகழ்ந்தது? யார் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது? இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது? பதில் சொல்ல முடியுமா?
சிவநேசச்செல்வர் : சொல்லமுடியாது. சிலவிஷயங்கள் எங்கள் அறிவுக்கு எட்டாதவை வாதவூரரே.
வாதவூரர் : புரிகிறதல்லவா? நமது அறிவுக்கு எட்டாத விஷயங்களும் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது புரிகிறதல்லவா. நமக்கு மீறிய சக்தி. நம்மைக் கட்டுப்படுத்தும் சக்தி. அதைத்தான் கடவுள் என்கிறோம்.
சிவநேசச்செல்வர் : விடைதெரியாத கேள்விகளுக்கு பதிலை தேடுவதை விடுத்து கடவுளின் மேல் பாரத்தை போட்டுவிடுகிறீர்கள்.
வாதவூரர் : ஹ ஹா. “கடவுளின் மேல் பாரத்தை”, அப்படி என்றால் கடவுள் இருக்கிறார் அல்லவா. பார்த்தீரா. “மழைக்கால இருட்டானாலும் மந்தி கொப்பிழைக்க பாயாது என்பார்கள், மந்தியிலிருந்து மருவிய சிவநேசச்செல்வர் இப்படி தடுமாறலாமா?
கூட்டம் சிவநேசரைப் பார்த்து கைகொட்டிச்சிரித்தது. அர்ப்பனசிங்கன் என்ற அறிஞன் சிவநேசரின் அருகில் வந்து அவரைப்பார்த்து “குரங்கு” என்று விளித்து நெக் காட்டினார். அதைக்கண்ட கூட்டத்தின் கரகோஷம் விண்ணை எட்டியது. “இப்படி அவமானப்படுத்தக் கூடாது” என்று சிவநேசர் சொல்ல, கூட்டம் மொத்தமும் நெக் காட்டியது. சிவநேசர் வேண்டா வெறுப்பாக வாதத்தை தொடர்ந்தார்.
சிவநேசச்செல்வர் : தவறு வாதவூரரே
வாதவூரர் : எது தவறு சிவநேசரே?
சிவநேசச்செல்வர் : குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை. குரங்கும் மனிதனும் ஒரே மூதாதயரிடமிருந்து ஏக காலத்தில் மருவிய இருவேறு உயிரினங்கள். ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாகவில்லை.
வாதவூரர் : உமக்கு கடவுளைத்தான் தெரியவில்லை என்றால், அறிவியலும் தெரியவில்லையே. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதை சின்னக்குழந்தையும் சொல்லுமே.
சிவநேசர் : அப்படி எல்லோருமே நினைத்துவிட்டோம். இந்த பூமி தட்டையானது என்றும், அதனை ஒரு ஆமை சுமக்கிறது என்றும் பல காலமாக தவறாக ஊகிக்கவில்லையா? அதுபோலத்தான்.
வாதவூரரே : நீர் மீண்டும் மீண்டும் தப்பாக பேசுகிறீர் சிவநேசரே. குரங்கிலிருந்து கூர்ப்படைந்தவனே மனிதன்.
சிவநேசர் : அப்படி என்றால் குரங்கு இனம் எதற்கு இந்த பூமியில் இருக்கவேண்டும்? மனிதனாக கூர்ப்படைந்த பின்னர் அழிந்திருக்க வேண்டுமல்லவா?
இப்போது வாதவூரர் தடுமாறினார்.
வாதவூரர் : சிவநேசரே நீர் மக்களை திசை திருப்புகிறீர். உன் அம்மா எவ்வளவு மோசமான பெண் என்று இந்த ஊரே அறியும். உன்னுடைய அப்பர் திருவிழா சமயத்தில் மாடு வெட்டி சாப்பிடுவார். உதவாக்கரை குடும்பம் உம்முடையது.
கூட்டமும் “ஓம் ஓம் .. குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான்” என்று ஒட்டுமொத்தமாக சொல்லியது. சிவநேசருக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன. இந்தகூட்டத்தில் வாதிடுவதை விட அமைதியாக இருப்பதே மேல் என்று நினைத்தார். வாதவூரர் விடவில்லை.
முறையாக வேதங்களை படிக்காத உம்மோடு வாதப்போரில் ஈடுபடுவதே என் தகுதிக்கு இழுக்கு. என்ன சொல்லுகிறீர்கள் அறிஞர் பெருமக்களே?
எங்கிருந்தோ ஒரு கல்லு பறந்துவந்து சிவநேசச்செல்வரின் நெற்றியில் அடித்தது. கூடவே அவருடைய சாதியோடு தாயின் பெயரும் அடிவாங்கியது.
கூட்டம் “எங்கட வீரர் வாதவீரர், எங்கட ஊரர் வாதவூரர்” என்று கோசம் போட்டது. வாதவூரர் வெற்றிப்பெருமிதத்தொடு நாவல் கொப்பை எடுத்து உயர்த்திப்பிடித்தபடி கூவினார்.
“நாவலோ நாவல்”
வாதவூரர்களும், சிவநேசச்செல்வர்களும் இன்றைக்கும் நம்மிடையே அடிபடுவதை காண்கிறோம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதமும் கடவுள் இல்லாதவரைக்கும் நீண்டுகொண்டே போகும். அதுவேண்டாம். கதையில் இருக்கும் தப்பான தர்க்கங்களை, fallacyகளை மட்டும் பார்ப்போம்.
வாதவூரர், சிவநேசச்செல்வருக்கிடையிலான வாதம் வெற்றி பெறுவதை மாத்திரமே நோக்கமானதாக கொண்டது. தான் சொல்லியது சரி என்று நிரூபிப்பதற்காக வாதவூரர் எந்த எல்லை வரைக்கும் போகக்கூடியவர் என்பதை படிப்படிப்படியாக அவர் எடுத்தாண்ட விதண்டாவாதங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். சிவநேசர் அவ்வப்போது யோசிக்கும்படி பேசினாலும் அவரும் வாதவூரர் வழியிலேயே எதிர்வாதம் செய்யும் நிலையை பல இடங்களில் அடைந்தார். விதண்டாவாதம் செய்பவர்களின் பிரத்தியேக திறமை இது. எதிர்வாதம் செய்பவரையும் அவர்கள் விதண்டாவாதம் செய்யத்தூண்டிவிடுவர்.
இந்த வாதப்போரின் தொடர்ச்சிதான் பட்டிமன்றங்களும் வழக்காடுமன்றங்களும். நாவல்மரத்துக்கு கீழே நடக்கும் வாதப்போருக்கு, நிறைவாக கூட்டம் கூடுவதைக்கண்டதும், அந்த அறிஞர்களை தங்கள் ஊர்களுக்கும் வந்து வாதம் செய்யும்படி ஏனைய ஊர்க்காரர்கள் அழைத்திருப்பார்கள். குறிப்பாக கோயில்கள் அவர்களை ஸ்பொன்சர் பண்ணியிருக்கும். இதெல்லாம் மருவி பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என்று, கொஞ்சம் ரிச்சாக, மக்களை கவரும்வண்ணம் வாதப்போர்களை அறிஞர்கள் செய்திருப்பார்கள். பின்னர் அவர்களுக்கிடையே பிரிவினைகள் வரத்தொடங்க, ஆளாளுக்கு “கம்பன் கழகம்”, “வள்ளுவர் மன்று”, “இலக்கிய சங்கம்”, “இரும்பொறை அரங்கு”, “நளவெண்பா விசிறிகள் வட்டம்” என்றெல்லாம் இல்ல விளையாட்டுப்போட்டிகளை நடத்தத் தொடங்கியிருப்பர்.
ஆளாளின் அறிவுக்கு ஏற்ப மேடைகளின் உயரமும் மாறியிருக்கும். கோயில் சபாமண்டபம், அரசவை தொடங்கி தெருமுனை, கேற்றடி, குளாயடி, கக்கூஸ் வரை மேடைகள் பலவகைப்படும். இன்றைக்கு அது இணையம், முகநூல் என்று விரிந்துவிட்டது. முகநூலில் உள்ளே ஒரே வித்தியாசம், இங்கே சபாமண்டபம் தொடங்கி கக்கூஸ் வரை எல்லாமே ஒரே இடத்தில் இருக்கிறது. அதன் பயனாக, அனைவருக்கும் வாதப்போர் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கிறது.
சாபமாக, அவ்வப்போது கக்கூஸ் வாசகங்கள் சபாமண்டபத்திற்கு வந்துவிடுகின்றன.
வார்த்தை ஜாலம் – Equivocation
வாதத்தின் நோக்கம், சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக மற்றவருக்கு விளங்கவைத்து, மற்றவர் அதில் தவறு கண்டுபிடித்து திருத்தினால், அதை ஏற்றுக்கொள்வதாகும். இதில் வெற்றி தோல்வி என்று எதுவும் கிடையாது. ஒரு விஷயத்தை விளங்கப்படுத்தும்போது வார்த்தைப் பிரயோகங்கள் சில வேளைகளில் அப்படி இப்படி மாறுபடலாம். அதை மற்றத்தரப்பு பிடித்துவைத்துக்கொண்டு முரண்டு பிடிக்கக்கூடாது.
வாதவூரர், சிவநேசர் இருவருமே இந்த தவறை தொடர்ச்சியாக செய்தார்கள்.
“தென்னானுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்பது வெறும் தோத்திர விளிப்பு. லூசில் விடவேண்டிய விஷயம். அதில்போய் ஒரு கடவுளுக்கு ஏன் இரண்டு போற்றி? என்பது லொள்ளு விவாதம். சிவநேசர் ஆரம்பித்துவிட்டது. பின்னர் அதையே வாதவூரர் பிடித்துக்கொண்டார்.
“அடக் கடவுளே” என்று நாத்திகர் சொல்லுவதும் அப்படிப்பட்டதே. அது ஒரு பழக்கம். “சிவ சிவா இயேசுவை மறப்பேனா” ரகம். நாத்திகர்களில் பெரும்பாலானோர் ஆரம்பத்தில் ஆத்திகராகவே இருந்திருப்பர். ஐந்து வயதில் தேவாரமோ, பைபிளோ படித்திருப்பார். சில பழக்கங்கள், கொள்கை மாறினாலும் இலேசில் போகாது. ஒரு ஆஸ்திரேலியனுக்கு முன்னாலே திடீரென்று இயேசுநாதர் தோன்றினால், அவன் பரவசத்தில் “ஓ ஷிட்” என்றுசொல்லிவிட்டே பின்னர் அவரை வணங்கத் தொடங்குவான். அமெரிக்காக்காரன் “வட் த !@#$” என்று கடவுளைக் கண்ட வியப்பில் உணர்ச்சிவசப்படுவான். அதற்காக அவன் கடவுளைப்பார்த்து தூஷணம் கொட்டிவிட்டான் என்று சொன்னால் அது முட்டாள்த்தனம். அவனுக்கு அது பழக்கம். அவ்வளவே. அதுபோலத்தான் “அடக்கடவுளே”. “நம்பிக்கை”யும் அதுவே. வாதவூரர் கடவுள் நம்பிக்கையையும், வேறு விஷயங்களிலும் இருக்கும் நம்பிக்கையையும் ஒன்றாக சேர்த்து குழப்பி சிவநேசரை மடக்கப்பார்த்தார். வாதத்துக்கு இதுவெல்லாம் சம்பந்தமில்லாத விஷயங்கள். ஆனால் பார்க்கும்போது, கேட்கும்போது அது கவர்ச்சியாக இருக்கும். மக்கள் மத்தியில் எடுபடும். “சூப்பர், என்னமா வெட்டியாடுறான்” என்பார்கள்.
விஞ்ஞானம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லத் திணறுகிறது. எல்லா “ஏன், எதற்கு, எப்படி” கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் திணறுகிறது. ஆகவே அதற்கு பதிலளிக்க கூடிய இன்னொரு விஷயம் வேண்டும். இதுகூட வார்த்தைச்சித்துதான். எல்லா கேள்விகளுக்கும் விஞ்ஞானத்தால் பதில் சொல்ல முடியாததால் மெய்ஞானம் உண்மையாகிவிடாது. மெய்ஞானம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறதா? என்பதை பதிலுக்கு வாதவூரர் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் வாதவூரர் சிவநேசர் சொல்லுவதை வெட்டியாடி கைதட்டு வாங்குவதிலேயே குறியாக இருந்தார். முகநூல் மொழியில் லைக்குகள் மீதே குறியாக இருந்தார்.
நீ மட்டும் பெரிய இவனா? – Appeal to hypocrisy
நாத்திகனாக இருந்துகொண்டே எதற்கு “சிவநேசச்செல்வர்” என்று பெயர்வைத்திருக்கிறாய்? என்று வாதவூரர் கேட்க, சிவநேசர் பதிலுக்கு “யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு எதற்கு வாதவூரர் என்று பெயர்வைத்திருக்கிறாய்?” என்று திருப்பிக்கேட்கிறார். இது கேள்விக்கு பதில் அளிக்காமல் மறு கேள்விகேட்டு மடக்கும் தந்திரம். சரியான வாதமென்றால், “சிவநேசச்செல்வர் என்பது என் இயற்பெயர், அப்பா அம்மா வைத்தது, மாற்றவேண்டும் என்று தோன்றவில்லை, தேவையுமில்லை, பெயருக்கும் நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்?” என்று சிவநேசர் பதிலளித்திருக்கவேண்டும். ஆனால் அதைவிடுத்து அவர் வாதவூரரை அதே கேள்வியைக் கேட்டு மடக்குகிறார்.
இந்த வகை “நீ மட்டும் பெரிய இவனா?” என்கின்ற வகை விவாதம் நம் மத்தியில் இம்மை மறுமை இல்லாமல் நடைபெறும். மாவீரர்தினத்துக்கு விளக்கேற்றினால், போராடாமல் ஓடிவந்துவிட்டு இப்போது ஏன் சீன் போடுகிறாய் என்பார்கள்.
அமெரிக்கா அரசாங்கம் இலங்கை மனித உரிமைகள் பற்றி அறிக்கை வெளியிட்டால், உடனே பல சிங்களவர்கள் அமெரிக்க மனித உரிமைகளைப்பற்றி ஏதாவது லிங்க் ஷேர் பண்ணுவார்கள். “மடக்கிவிட்டோம்” என்று கொலரை தூக்கிவிடுவார்கள். தன் நாட்டில், தன் சக மனிதரை இன அழிப்பு செய்திருக்கிறார்கள். அதை நினைத்து வெட்கமோ வேதனையோபடாமல் அமேரிக்காகாரனை திட்டுவதில் அவர்களுக்கு ஒரு சந்தோசம். ரெடிமேட் வாசகம் ஒன்று எப்போதுமே கைவசம் இருக்கும். “The pot calling the kettle black”. அமெரிக்க செய்வது கபடமாகவே இருந்தாலும் சொல்லும் விஷயத்தில் ஞாயம் இருக்கிறது அல்லவா. அதை உணர்ந்தும், காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதம்தான் இந்த fallacy. ஒருவரின் வாயை இலகுவில் இதன்மூலம் அடைக்கலாம்.
சில நேர்மையான இவ்வகை வாதங்களும் இருக்கிறது. உதாரணத்துக்கு அமெரிக்காரன் இலங்கையை கேள்வி கேட்கும்போது, “நாமே ஆப்கான், ஈராக்கில் அநியாயம் பண்ணுகிறோம், எப்படி இலங்கையை கேள்வி கேட்க முடியும்?” என்று அமெரிக்க பத்திரிகைகள் அமெரிக்க அரசாங்கத்தை கேட்டால் அது நேர்மையான கேள்வி. மகிந்த பாலஸ்தீனியர்களுக்கு குரல் கொடுக்கும்போது, “சொந்த நாட்டில் நீ முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை அடக்கத் தவறிவிட்டாயே” என்று இலங்கைப் பத்திரிகைகள் கிழி கிழித்தால் அது நேர்மை. ஆனால் அது ஒன்றும் நடக்காது.
என்னில் குற்றம் சொல்லுபவனின் மீது, நானும் ஒரு குற்றத்தை சாட்டிவிட்டால், நான் நிரபராதியாகிவிடுகிறேன். அதுவே Appeal to hypocrisy.
அறியாதவன் அறிஞன் – Appeal to ignorance
அறியாமையால் சில முன்முடிபுகளை உருவாக்கி வைத்துக்கொண்டு, அது பொய் என்று நிரூபணமாகும்வரை உண்மை என்று நம்புவதே appeal to ignorance. முன்முடிபுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அது ஒகே. ஆனால் பிழையாக இருந்துவிட்டால்?
இந்த விவாதத்தில் சிவநேசர் ஒரு முக்கிய விஞ்ஞான உண்மையை சொல்லுகிறார். “குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை”. ஆம் அது உண்மையே. குரங்கினத்திலிருந்து மனித இனம் கூர்ப்படையவில்லை. இரண்டு இனமுமே ஏக காலங்களில் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றி வளர்ந்த இருவேறு விலங்குகள். ஒன்றுக்கு கூர்ப்பு அதிகமாக இருந்தது. மற்றதற்கு குறைவு அவ்வளவே. இது புராதன எலும்புகளை பரிசோதித்து கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. இந்த உண்மையை வாதவூரரோ, கூடியிருந்த கூட்டமோ அறிந்திருக்கவில்லை. பொதுவாக எல்லோரும் நினைப்பதுபோல “குரங்கிலிருந்தே மனிதன் உருவானான்” என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள். சிவநேசர் உண்மையைச் சொல்ல, அவர்கள் எக்காளித்து சிரித்தார்கள். ஒருவன் சிவநேசரை குரங்கு என்றான். கூட்டம் அவரை எள்ளி நகையாடியது.
இது appeal to ignorance.
முதன்முதலில் சந்திரனில் மனிதன் காலடிவைத்தபோது பலரால் அதனை நம்ப முடியவில்லை. எப்படி அது சாத்தியமில்லையே என்று நினைத்தார்கள். அது பொய், conspiracy, சதி என்று இன்றைக்கும் கட்டுரைகள் வருகின்றன. காரணம் நம்மால் முடியாததை இன்னொருவன் சாதிக்கும்போது மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சாக்குப்போக்குச் சொல்லி அவனை அவமானப்படுத்தவே முயலுகிறோம். அதில் சின்ன சந்தோசம். வாதங்களில் இது பயங்கரமாக நடைபெறும்.
இப்படியான தருணங்களில் சொல்லுவதை நிரூபிக்கவேண்டிய தேவை சொல்லுபவனுக்கே போய்ச்சேரும். குரங்கிலிருந்து மனிதன் வரவில்லையா? நிரூபித்துக்காட்டு. கடவுள் இல்லையா? நிரூபித்துக்காட்டு. குடைவார்கள். விஞ்ஞானத்துக்கான நோபல் பரிசு பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கே கொடுக்கப்படும். பெரும்பாலும் கற்பனை பரிசோதனைகளைக் கொண்ட ஐன்ஸ்டீனுக்கு சார்பு விதிக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. ஸ்டீபன் ஹோக்கிங்கின் கருந்துளை கதிரியக்கத்துக்கு விருது கொடுக்காமைக்கும், பீட்டர் ஹிக்சுக்கு ஐம்பது வருடங்கள் தாமதித்து நோபல் கிடைத்தமைக்கும் இதுவே காரணம்.
சிவநேசருக்காவது ஒரு கல்லுத்தான். ஆனால் கலிலியோ பாவம். கல்லடிவாங்கியே செத்துப்போனார்.
பின்னணியை இழுத்தல் : Genetic Fallacy
ஒருவன் வாதம் செய்துகொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் அவன் குடும்பத்தையும் பின்னணியையும் இழுத்து, இவன் இப்படித்தான் சொல்லுவான் என்று முடிவு கட்டுவதை genetic fallacy என்கிறோம். சிவநேசர் சொல்லும் கருத்தை ஆராயாமல், அவரின் தந்தை கோயில் திருவிழா சமயம் இறைச்சி சாப்பிடுபவர். தாய் நடத்தை கெட்டவள், அவர் சாதி குறைவு இப்படி பலவிஷயங்களை இழுத்து, அதனாலேயே சிவநேசர் நாத்திகம் பேசுகிறார் என்று சாடுவது genetic fallacy.
இந்த வகை Genetic Fallacy யில் அதிகம் அடிவாங்கியவர் பத்திரிகையாளர் ஞாநியாகத்தான் இருப்பார். அவர் திராவிடக் கட்சிகளை சாடினால், உடனே அவருக்கு பார்ப்பனிய முத்திரை குத்துவார்கள். சுஜாதாவுக்கும் இது நடைபெறும். ஊரிலே சம்பந்தமேயில்லாமல் சாதியை இழுத்து ஆட்களை அவமானப்படுத்துவார்கள். பாரதியின் பூட்டிக்கு தமிழே தெரியாது. டெக்சாஸில் வசிக்கிறாராம். அவரை தமிழ் விழாக்களுக்கு நம்மவர்கள் அழைப்பார்கள். இதுவும் genetic fallacy தான்.
இதை இன்னொருவிதமாகவும் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு “பரதேசி’ ஒரு சிறந்த படம் என்பார்கள். காரணம் கேட்டால், பாலா படம், பிதாமகன், சேது எல்லாம் நல்ல படம் இல்லையா? so what? சிலர் இன்னும் கொஞ்சம் ஓவராக போய், “கடல் நல்ல படம், மணிரத்தினம் எப்போதும் நல்லாத்தான் எடுப்பார், ஆனா எமக்குத்தான விளங்கவில்லை” என்பார்கள். மணிரத்னம் நல்ல படம் எடுப்பார் என்று எதிர்பார்ப்பது தவறில்லை. ஆனால் அவர் படம் என்பதாலேயே படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லுவது genetic fallacy.
தகுதியில்லை பேசாதே - Ad Hominem
சிவநேசரின் வாயடைக்க வாதவூரர் வைத்த கடைசிவாதம், அவருக்கு தகுதியில்லை என்று சொன்னது. வேதங்களை படிக்காதவன், உனக்கு என்னோடு வாதிட தகுதியில்லை என்று ஒருமணிநேரம் வாதாடிவிட்டு பின்னர் இயலாக்கட்டத்தில் சொன்னது. இதைத்தான் ஏகலைவன் மீது துரோணர் வைத்தார். கர்ணனை நோக்கி திரௌபதி சொன்னாள். காலம் காலமாக வகுப்பறைகளில் “உனக்கொண்டும் தெரியாது” என்று வாத்திமார் சொல்லுவதும் இதுதான்.
யாராவது கிரிக்கட் பற்றி பேசினால், சச்சினை விமர்சித்து எழுதினால், உடனே உனக்கு பட் பிடிக்கத்தெரியுமா? என்று ஒரு பிரகிதி கேட்கும். கோச்சடையானை விமர்சித்தால், “மோஷன் கப்ஷர் பண்ணிப்பாருடா, அப்போ தெரியும் கஷ்டம்” என்பார்கள். சொல்லவந்த விஷயத்தை கவனிக்கமாட்டார்கள்.
வெளிநாட்டிலிருந்து ஈழத்தைப்பற்றி பேசினால், “அங்க வசதியா இருந்துகொண்டு என்னத்தையும் கதைக்கலாம்” என்பார்கள். கொழும்பிலிருந்தபடி “யாழ்ப்பாணத்தில் காணி அபகரிப்பு நடக்கிறது” என்று கர்ஜித்தால், “டேய் .. கொழும்பை விட்டிட்டு வந்து ஊரில இருந்துகொண்டு கதை” என்பார்கள். ஊரில் இருந்துகொண்டு முள்ளிவாய்க்கால் பற்றி பேசினால், “உள்ள இருந்தவன் மட்டுமே கதைக்கோணும்” என்பார்கள். உள்ள இருந்தவன் கதை எழுதினால், “விசுவமடுவிலேயே வெளிக்கிட்டவன் கதைக்கக்கூடாது” என்கிறார்கள். முள்ளிவாய்க்கால் இறுதிநாள்வரை கஷ்டப்பட்டவன் ஏதாவது சொன்னால், “அவனவன் போராடி செத்துப்போனான், சரணடைஞ்சவன் கதைக்கிறியே, வெட்கமாக இல்லையா?” என்பான்.
கடவுள் காக்க.
நாளை தொடரும்
நாவலோ நாவல் : ஏழு நாட்கள், ஏழு கதைகள்
நாவலோ நாவல் : நமசிவாயமும் சூரியனும்
நாவலோ நாவல் : சிவகாமியின் கண்ணீர்
நாவலோ நாவல் : கந்தரோடை கலகம்
நாவலோ நாவல் : குண்டர் கூட்டம்
Interesting article. Reminds me of the scene in ‘Ponniyin Selvan’ where ‘Aalwarkadiyan Nambi’ starts a fight about Saivam Vs Vaishnavam.
ReplyDeleteYes its inspired from ponniyin selvan and "mani pallavam" novels. Its the namesake of this series too. Explained in the first part of the series.
Deleteஓரிரவுக்குள் இவ்வளவு தகவல்களா? அருமை ஜேகே. இதயெல்லாம் வாசித்தபின் மௌனமாக இருப்பதே சிறந்தது எனப்பட்டது, ஆனாலும் பாராடாமல் இருக்க முடியவில்லை.
ReplyDeleteவாதவூரர்-சிவநேசசெல்வர் வாதம் - பலே - உண்மையிலே நடந்ததுபோல் ஒரு உணர்வு. பதிவை முடித்தவிதம் - ஆஹா :D
எப்பிடி போட்டாலும் அடிக்கிற ஆக்கள் இருக்கும்வரை ரொம்ப கஷ்டம்.
Uthayan
நன்றி உதயன் அண்ணே ... நாலு நாளா தொடர்ச்சியா எழுதி கொஞ்சம் தூங்கினாலும் உங்கட கொமெண்ட் வந்து எழுப்பிடுது! அதுக்கு பெரிய நன்றி!
Deleteஆத்திக நாத்திக விவாதம் வெகு அருமை,..சொல்ல வந்த பொருளை கதை,விவாதம்,சமகால நிகழ்வு மற்றும் வரலாற்று நிகழ்ச்சிகளின் மூலம் தாங்கள் விவரிப்பது வாசிப்பதை சுவாரசியமான அனுபவமாக மாற்றுகிறது.
ReplyDeleteஇந்தத் தொடரில்,இதுவரையிலான மூன்று கட்டுரைகளும் கருத்துச் செறிவு மிகுந்து இருப்பதால் தங்களது வாசகர்களை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்கிறீர்கள். தொடர்ந்து இது போன்ற முத்தான ஆக்கங்களைப் படைக்க வாழ்த்துக்கள்.
நன்றி முருகேசன். ஊக்கத்துக்கு நன்றி.
Delete(சரணடஞ்சவன் கதைக்கிறியே,வெக்கமா இல்லையா என்பான்....) முள்ளி வாய்க்காலில செத்துப் போனவங்கட ஆவியைக் கண்டா "உனக்கென்னப்பா நீ போய்ச் சேந்திட்டாய், இருக்கிற நாங்கள் எல்லே தினம் தினம் செத்துப் பிளைக்கிறம் என்பான். -Vimal
ReplyDeleteஅவனேதான்.
Deleteபட்டிக்குள் பட்டிமன்றம் என்றால் நாலும் இருக்கத்தான் செய்யும் படலை. ஆக்கம் "ஆ " என வைத்தது .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆஹா பொன்னியின் செல்வன் தாக்கம் தெரிகிறது
ReplyDeleteபதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு மட்டம் தட்டி மடக்கி பேஸ் புக்கில் லைக்குகளை மட்டுமே அள்ளுவதில் குறியாக இருக்கும் காலத்தில் கடவுள் காக்க என்று முடித்திருப்பது புத்திசாலித்தனம் ।