வியாழ மாற்றம் 13-11-2014 : பூக்கள் பூக்கும் தருணம்

Nov 13, 2014

 

the_alchemist___the_desert_by_onyxserpent-d41iqwo

நீண்ட நெடும் பயணம்

அவன் பெயர் சண்டியாகோ. ஒரு சாதாரண ஆட்டிடையன். ஸ்பெயின் நாட்டில் வசிப்பவன். ஒரு ஐம்பது அறுபது ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஸ்பெயின் நாட்டின் ஊர்களையெல்லாம் சுற்றித் திரிபவன். சின்ன வயது முதலே அவனுக்கு பயணங்கள் செய்வதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்குப் பணம் வேண்டுமே? ‘ஆடு மேய்க்கிறவன்தான் ஊரெல்லாம் திரிவான்’ என்று தந்தை ஒருநாள் நக்கலாகச் சொன்னதை இவன் சீரியசாகவே எடுத்துவிட்டான். அதுவரைக்கும் ஒரு கிறித்துவ பள்ளியில் படித்துக்கொண்டிருந்த்தவன், படிப்பை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு மேய்ப்பதற்கு வந்துவிட்டான்.

ஆடுகள் பெரிதாக எந்த அலுப்பும் கொடுக்காத ஜீவன்கள். அதுகளின் தேவை இரண்டே இரண்டுதான். ஒன்று புல்லு. மற்றது தண்ணீர். வேறு எதற்குமே அவை அலட்டிக்கொள்ளாது.  அவற்றின் உணவுக்காக இவன் மேய்ச்சல் நிலங்களைத்தேடி காடு தேசமெல்லாம் அலைவான். காலம் வந்தவுடன் நகர்ப்புறத்துக்கு வந்து கம்பளி விற்பான். கூடவே இன்னொரு வேலையும் செய்வான். அவனிடத்தில் எப்போதுமே ஒரு புத்தகம் இருக்கும். நகரத்தில் அவன் அதைக் கொடுத்துவிட்டு புதிதாக இன்னொரு புத்தகத்தை வாங்குவான். தூரப் பயணம் என்றால் கொஞ்சம் மொத்தமான புத்தகம். நகரத்துக்கண்மையில் மேய்ச்சல் என்றால் சின்னப்புத்தகம்.

ஒருநாள் அவனுக்கு ஒரு கனவு வருகிறது.

"உனக்கு ஒரு புதையல் கிடைக்கப்போகிறது"

பேசாமல் விட்டுவிட்டான். அடுத்தநாளும் அந்தக் கனவு வருகிறது. தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. புதையல் கிடைக்கப்போகிறது என்று கனவு சொல்கிறதே ஒழிய, அது எங்கே, எப்போது, எப்படிக் கிடைக்கும் என்று எந்த சமிக்ஞைகளும் இல்லை. முதலில் அப்படியே விட்டுவிடுவோமா என்று யோசித்தான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கனவின் மீது அவனுக்கே நம்பிக்கை வரத்தொடங்கியது.

ஒருநாள் அவன் ஒரு நாடோடிக் கிழவியிடம் சென்று குறி கேட்கிறான். அவளும் உனக்கு நிச்சயம் புதையல் கிடைக்கும். அதைக் கண்டுபிடிக்க நீ எகிப்துக்கு போகவேண்டுமென்று சொல்லுகிறாள். எகிப்தில் எங்கேயென்று தேடுவது என இவன் கேட்க, அங்கே பிரமாண்ட பிரமிட்டுகள் இருக்கின்றன. அந்த இடத்தில் போய்த் தேடு என்கிறாள். எப்படிப்போவது என்று கேட்க, இயற்கையும் காலமும் உன்னை வழி நடத்தும் என்கிறாள். அந்தக் கிழவி கூலியாக பணம் கூட வாங்கவில்லை. புதையல் கிடைத்தவுடன் அதன் ஒரு பாகத்தைக் கொடுத்துவிடு என்கிறாள். அடடே, அவளே அப்படி நம்பிக்கை வைக்கும்போது, போய்ப்பார்த்தால்தான் என்ன என்று இவனுக்குள் ஒரு ஆசை துளிர்க்கிறது. ஆனால் ஸ்பெயின் எங்கே, எகிப்து எங்கே. நிம்மதியாக தானுண்டு, தன் ஆடுகளுண்டு என்று இருக்கிறவன். வெறும் கனவை நம்பி எகிப்துக்குப் போவதா?

கனவு விடவில்லை. துரத்துகிறது.  சரி, வருவது வரட்டும் என்று அவன் புதையலைத் தேடி புறப்படுகிறான்.

வழியில் ஒரு முன்னால் அரசன் ஒருவரை அவன் காண்கிறான். அந்த மனிதருக்கும் இவனுக்கு புதையல் கிடைக்கப்போகும் கனவு பற்றி தெரிந்திருக்கிறது. நான் இப்படி புதையலைத் தேடித்தான் செல்கிறேன் என்பது உங்களுக்கு எப்படித்தெரியும் என்று அவன் கேட்க, அவர் “Personal Legend” பற்றிச் சொல்கிறார்.

அதென்ன “Personal Legend”?

“ஒவ்வொருவருக்கும் இளமையின்போது ஒரு ஆழ்மனது இலட்சியம் இருந்திருக்கும். சிறந்த விஞ்ஞானியாவது, பாடகனாவது, ஆசிரியனாவது, விவசாயியாவது, பயணங்கள் செய்வது, பித்தளையை தங்கமாக்குவது, நடிகனாவது, பின் வீட்டு லூசியாவைக் காதலிப்பது,  இப்படி நிறைய. இதுதான் என்றில்லை. இந்த இலட்சியங்கள் ஒருவித ஆழ்மனது விஷயம். அதை நீ அடைய முயல்கையில், மொத்த உலகமும் சேர்ந்து உனக்காக உதவ ஆரம்பிக்கும்”

“When you want something, all the universe conspires in helping you to achieve it”

இவன் குழம்பிவிட்டான்.

“அப்படி என்றால் ஏன் எல்லோரும் தம்முடைய Personal Legend ஐ அடைவதில்லை?”

“காரணம் அவர்கள் அதற்கு முயல்வதில்லை, சமிக்ஞைகளை புறம் தள்ளிவிடுவார்கள். அன்றாட வாழ்க்கை அவர்களுக்கு இதமாக இருந்துவிடும். சமிக்ஞைகளும் கொஞ்சநாளைக்கு வந்துபார்க்கும். இவன் கவனிக்கிறான் இல்லை. வேலைக்காகாதவன் என்று தெரிந்துவிட்டால் அவை வேறு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடும்”

அவன் இதைக்கேட்டுவிட்டு பேசாமல் வந்துவிட்டான். அன்றைக்கு ஆடுகளை மேய்க்கும்போதுதான் கவனித்தான். ஆடுகள் என்ன செய்கின்றன? இடையன் அதுகளை எங்கே கொண்டுபோய்விடுகிறானோ அங்கே புல்லு மேய்கின்றன. தண்ணீர் குடிக்கின்றன. பிள்ளை, குட்டி, தூக்கம் அவ்வளவுதானே அவற்றின் வாழ்க்கை.  வேறு எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. செம்மறிகள்! ஒருவகையில் தானும் ஒரு செம்மறிதானோ என்று அவன் எண்ணத் தலைப்படுகிறான். 

எகிப்து போவதற்கு உடனேயே முடிவு எடுக்கிறான்.

எகிப்து போவதென்றால், கடல் கடக்கவேண்டும். பாலைவனம் கடக்கவேண்டும். பெரும் பணம் செலவாகும். ஆடுகளை விற்க வேண்டும். அடுத்தநாளே அவன் ஆடுகளை விற்க எத்தனிக்கையில் ஒரு வியாபாரி அத்தனை ஆடுகளையும் உடனே விலைக்கு வாங்கிவிடுகிறான். ஆடுகள் உடனடியாக வில்பட்ட கதையை அந்த அரசரிடம் அவன் சொல்கிறான். அரசர் அதனை “Beginner’s Luck என்கிறார். நீ ஆரம்பிக்கும்போது எல்லாமே நன்றாகவே இருக்கும். அது ஒருவித ஊக்கம் மாதிரி. சூதாட்டத்தில் கிடைக்கும் ஆரம்ப வெற்றி போன்றது. ஆனால் போகப்போக சோதனைகள் வரும். ஏமாற்றங்கள் வரும். சமாளிப்பாயா? அவற்றையெல்லாம் கடந்துசென்றாலேயே நீயும் உன்னுடைய அந்த Personal Legend ஐ அடைவாய் என்கிறார்.

அவன் எகிப்தை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறான்.


என் கொல்லைப்புறத்துக் காதலிகள்

Kollaipurathu Kathalikal_cover-1

படலை எழுத ஆரம்பித்து சரியாக மூன்றாவது வருடம் பிறந்திருக்கும் குழந்தை. தலைப் பிரசவம். தாவு தீர்ந்துவிட்டது. எதுவுமே தெரியாது. பதிப்புத்துறையிலிருந்து, புத்தகம் விற்பனைவரை எந்த ஐடியாவும் கிடையாது. எழுதிக்கொண்டேயிருந்தால், எப்போதாவது ஒருநாள், யாராவது வாசிப்பார்கள் என்று பேசாமல் நம்மட வேலையைப் பார்த்த்துக்கொண்டிருந்த ஆள் நான். புத்தகம் வெளியிடுவது என்று தீர்மானித்தபின்னர், யாரை நம்புவது, நம்பாமல் விடுவது என்று விளங்கவில்லை. முட்டி மோதி நொங்கி நுங்கெடுத்து புத்தகம் கைக்கு வரும் தறுவாயில், எதுக்குடா இதெல்லாம் என்கின்ற பீலிங்.

புத்தகம் அச்சடித்து வீடு வந்துவிட்டது. ஆனால் கையில் வந்த புத்தகத்தை எப்படி விற்பது? ஒரு கடைக்காரரையும் தெரியாது. இந்தியாவில் தொடர்புகள் சுத்தம். என்ன செய்ய?

மீண்டும் படலையையே நம்பினேன்.

விநியோகத்தை கையில் எடுப்போம் என்று முடிவான பின்னர், மிகுதி எல்லாமே கடகடவென நடந்தது. இணையத்தில் வாங்கும் வசதி செய்து, கேதாவின் உதவியில் புரோமோ வீடியோ தயாரித்து, பல வாசகர்கள் பின்னர் புரோமோட் பண்ண, பத்திரிக்கை, ஊடகங்களில் விஷயம் வெளிவராமலேயே, ஒரு மாதத்துக்குள் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது. எஸ். ஏ. ராஜ்குமாரின் கோரஸ் பாடகிகள் சோடா குடித்துவிட்டு லாலாலா ஹம் பண்ணத்தொடங்கினார்கள். பாட்டு ஸீன்.

“நட்சத்திர யன்னலால் வானம் எட்டிப்பார்க்குது, சிறகை விரித்துப் பறப்போம்”

“நங்” என்று குட்டு. மனைவிதான்.

“என்ன கனவா? இவ்வளவு புத்தகத்தையும் என்ன செய்யிறதா பிளான்?”

காதைத் திருகியபடியே அறைக்குள் அழைத்துச் சென்றாள். ஐநூறு புத்தகங்கள். லைக்குகளை எண்ணிபார்த்து கொடுத்த ஓர்டர். இப்போது மலையாக குவிந்து கிடந்தது. ஜெயமோகன் வெண்முரசு விற்பனை பற்றி இவ்வளவு லேட்டாவா பதிவெழுதுவார்? முதலே எழுதியிருந்தால் அலெர்ட் ஆகியிருப்பேனே. ஆனாலும் ஒரு நம்பிக்கை.

ஜூட் அண்ணாவுக்கு தொலைபேசி அழைத்தேன்.

"அண்ணே … நம்மட புத்தகம் ஒண்டு வெளிவருது ... வீட்டில ஒரு டீ பார்ட்டி வச்சு கொண்டாடுவமா?"

"ஒகே தம்பி"

அழைக்கும்போது அவர் பாத்ரூமில் இருந்திருக்கவேண்டும். அதிகம் பேசவில்லை. நான் விடவில்லை. மீண்டும் அழைத்தேன்.

"அண்ணே ... பேசாம வெதர் நல்லா இருக்கேக்க பாபிகியூ பார்ட்டி ஒண்டு போட்டு ரிலீஸ் பண்ணுவமா?"

"ஒகே தம்பி"

திரும்பவும் கோல்.

"இல்லை அண்ணே, இது முதல் புத்தகம் .. ஒரு சின்ன மீட்டிங் மாதிரி வச்சு வெளியிடாட்டி மரியாதை இல்ல"

"செய்யலாம் தம்பி"

திரும்பவும்.

"அண்ணே மீட்டிங் வச்சு இலக்கியம், தாதாவஸ்கி, மண்ணு, மட்டை எண்டு மொக்கை போடாம, கொண்டாட்டமா ஒரு நிகழ்ச்சி பண்ணுவமா?"

"பண்ணலாம் தம்பி"

திரும்ப..

“அண்ணே … பாரதியோட பாடல்களை ஒருவித பியூஷன்மாதிரி பரதநாட்டியத்தில செய்தா பின்னும் … ஜீவிகாட்ட கேட்டன். ஆனா அவ மாட்டன் எண்டிட்டா”

“ஓ .. பிறகு?” 17.2சூப்பர்ஸ்டார்

“காலில விழுந்திட்டன் … ஒகே எண்டிட்டா”

“என் இனம்டா நீ”, போனை வை.

திரு..

“அண்ணே”

ஜூட் அண்ணா கடுப்பாகிவிட்டார்.

“இப்ப என்னடா…”

"வந்து ... எனக்கு கன காலமாவே அகிலனையும் கஜனையும் ஒண்டா மேடை ஏத்தி அழகு பாக்கோணும் எண்டு ஆசை"

"அதுக்கு"

"செய்வமா?"

"கர்நாடக சங்கீதக் கச்சேரியா?"

"இல்லை அண்ணே, நம்மளமாதிரி மூசிக் அரிவரி தெரியாதவனும் ரசிக்கிறமாதிரி. ஒரு ராகம் பாடி ... அந்த இராகத்தில ஒரு ராஜா சோங் பாடி, நம்மாளு அட இது அந்தப்பாட்டு என்று நிமிர்ந்து உட்காருகையில், அதற்குள் சுரம்போட்டு … அகிலனால மட்டும்தான் இந்த எக்ஸ்பெரிமென்ட் செய்யமுடியுமண்ணே .. மிருதங்கம், வயலின் .. மோர்சிங் .. அடி பின்னுமில்ல .. செய்யலாமா?"

“பண்ணலாம்”

தி….

“அண்ணே”

“இப்ப ஆருடா? சுஜாதாவை கூப்பிடப்போறியா? அவர்தானே செத்துப்போயிட்டாரே?”

“இல்லை அண்ணே, வந்து … புத்தகத்தில சுப்பர்ஸ்டாரும் ஒரு கட்டுரையாக வாறதால, அவரையும் கூப்பிட்டுப் பார்ப்பமா?”

தொலைபேசியில் டோய்லட் பிளஷ் பண்ணிய சத்தம் கேட்டது. பின்னர் கட்டாகிவிட்டது.

சூப்பர்ஸ்டார் லிங்கா டப்பிங்கில் இருந்ததால் பாஜக போன்று நானும் அவரை தொந்தரவு பண்ணவிரும்பவில்லை. சிவசுதன் அண்ணாவுக்கு போன் பண்ணி “அண்ணே, எனக்கு நிகழ்ச்சி அரேஞ்மெண்ட் எண்டால் என்னவென்றே தெரியாது, நீங்கதான் செஞ்சு தரோணும்” என்று கெஞ்ச, “உனக்கில்லாததா?” என்றார். 

imagesஎன் குணத்துக்கு நான் மார்க்கட்டிங் வேலையில் ஆணியே புடுங்கமாட்டேன் என்று தெரியுமென்பதால் ஜெயதீபன் அண்ணாவிடம் தமிழ் அவுஸ்திரேலியன் அந்த உதவியை செய்யுமா? என்று கேட்டேன். அவரோடு ஏற்கனவே ஒரு சங்கடம் எனக்கு முன்னர் இருந்தது. எதையுமே வெளிக்காட்டாமல் “ஜேகே இதனை நாங்கள் செய்கிறோம்” என்றார். நன்றி அண்ணா.

தேவன் அண்ணையும், அஜந்தன் அண்ணையும் மனைவிமாரின் காலில் விழுந்து சம்மதம்பெற்றபின்னர், கெத்தாக என்னிடம் “தம்பி, நாங்கள் கேக் கொண்டுவருகிறோம்” என்றார்கள். அம்மா வடை சுட்டுத்தருகிறேன் என்றார். ஜூட் அண்ணாவும் பங்காவும் எம்.கே.எஸ் நிறுவனத்தில் றோல்ஸ் அன்பளிப்பாக வாங்கிவந்தார்கள். கேஸி தமிழ் மன்றத்து நண்பர்கள் சவுண்ட் சப்போர்ட் கொடுத்தார்கள். வேந்தன் அண்ணா இருக்கும் வேலையை விட்டுவிட்டு வந்து எம்மோடு வேலை செய்தார்.

இப்படி ஆளாளுக்கு வடம் பிடிக்க, தேர் நகர ஆரம்பித்தது.

எல்லோருமே இது தங்கள் நிகழ்ச்சி என்று தலைப்பாகை கட்டினார்கள். ஆளணி ரெடி. ஆனால் நிதியுதவி? லைக்கா நிறுவனத்திடம் கேட்கலாம் என்றால் என்னுடைய தமிழின பச்சை இரத்தம் அதற்கு இசைந்து கொடுக்கவில்லை. முழித்தேன். ஆபத்பாந்தவனாய் இருவர் வந்து கைகொடுத்தார்கள்.

எதிர்பார்க்காத இருவர்!


பரியோவான் கல்லூரி

படிக்கும் காலத்தில் என்னதான் நல்லாப் படிச்சாலும், என் பள்ளிக்கூடம் என்னை அங்கீகரிக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்கு எப்போதுமேயிருந்தது. அதெல்லாம் படிக்கும்வரைக்கும்தான். ஏ.எல் முடிந்து அடுத்தநாளே உதவி அதிபர் வீடு தேடிவந்துவிட்டார்.

St.-Johns-logo

“தம்பி, நீ வந்து கல்லூரியில் டபிள் மத்ஸ் படிப்பிக்கவேண்டும்”

அப்படி என்றால் நான் கொஞ்சமாவது படிப்பேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கிறது. முதல் அங்கீகாரம். ஹூம். பின்னர் அடுத்தடுத்து தங்கப் பதக்கங்கள். என்னடா பீத்துகிறானே என்று நினைக்கவேண்டாம். படித்த பாடசாலை கொடுக்கின்ற அங்கீகாரம் போன்றதொரு அங்கீகாரம் வேறொன்றுமில்லை. அது எனக்கு உள்ளே இருக்கும்போது கிடைக்கவில்லை. வெளியிலே வந்தபிறகு கிடைத்தது. மொத்த குருஷேத்திரத்தையும் பிரிட்ஜுக்குள் வைத்து பிரீஸ் பண்ணிவிட்டு, கர்ணனை நெருங்கிவந்து கிருஷ்ணர் கட்டிப்பிடிப்பாரே. அந்த ஸீன் ஞாபகம் இருக்கிறதா. சில்லிடும் ஒரு உணர்வு அது. கர்ணனுக்கு மட்டுமே புரியக்ககூடியது.

அதன் நீட்சி மெல்பேர்ன் வந்தும் நிற்கவில்லை. புத்தக வெளியீடு பற்றி கேள்விப்பட்டவுடனேயே, பழைய மாணவனின் நிகழ்ச்சிக்கு நாங்கள் இல்லாமலா? என்று பரியோவான் கல்லூரி பழைய மாணவர் சங்க மெல்பேர்ன் கிளையினர் தாமாகவே முன்வந்து நிதியுதவி செய்தார்கள். ஆளுக்கு ஒரு சிறப்பு பிரதி வாங்கிப் பெருமைப்படுத்தினார்கள். முக்கியமாக நிகழ்ச்சிக்கு வருகைதந்து சிறப்பித்தார்கள். மெல்பேர்ன் என்றில்லை, கொழும்பு பழைய மாணவர் சங்கமும் தன் பங்குக்கு புத்தகத்தை புரோமோட் பண்ணுகிறது.

ஒருவன் வெற்றி பெற்றபிறகு அவனை கூப்பிட்டு கௌரவிப்பதுதான் பொதுவாக பழையமாணவர் வட்டாரங்களில் நடப்பதுண்டு. ஆனால் கத்துக்குட்டிப்பெடியனை, இவன் நன்றாக வரவேண்டும் என்று தட்டிக்கொடுக்க அத்தனை பழைய மாணவரும் முன்னின்றது பெரு மகிழ்ச்சி. என்ன ஒன்று புத்தகம் பற்றி அவர்கள் விசாரிக்கும் விதம்தான் கொஞ்சம் வயிற்றில் புளியைக் கரைக்கும்.

“ஹேய் ஜேகே .. வாட் இஸ் யுவர் புக் நேம்”

“என் கொல்லைப்புறத்துக் காதலிகள்”

“வாட் டாஸ் இட் மீன்?”

“ஐ மீன் … பக் யார்ட் லவ்வர்ஸ்”

“பக் யார்ட் லவ்வர்ஸ் ... பக்கிங் இண்டரெஸ்ட்டிங் மேன் …”

கண்டுக்காதிங்க மக்கள்ஸ். Johnians. Always Play The Game!


ஜெய் சிறிகாந்தா

இசை நிகழ்ச்சிக்கு கஜனை சிங்கப்பூரிலிருந்து வரவைக்கவேண்டும். அகிலனுக்கும் கஜனுக்கும் நட்பின் காரணமாக பணம் கொடுக்கவேண்டியதில்லை. ஆனாலும் ஏனைய பக்க வாத்தியங்களுக்கு கொடுக்கவேண்டும். மண்டபச் செலவு வேற. எகிறிவிடும் போலத்தோன்றியது. புத்தகவெளியீடுதானே என்று விட்டுவிட மனமில்லை. இதைவிட்டால் இப்படி ஒரு அரங்கை அமைக்க சந்தர்ப்பம் அமையாது. அனுசரணை கேட்கவேண்டும். யாரிடம் கேட்கலாம் என்று யோசிக்கையில், எனக்கு ஜெய் ஸ்ரீகாந்தா அண்ணா ஞாபகம் வந்தார். எப்போது நான் மேடையில் Printபேசும்போதும் முன் வரிசையில் அமர்ந்து ரசிப்பவர். அவர் அம்மாவுக்கும் இலக்கிய ரசனை அதிகம். படலையை அடிக்கடி வாசித்து சிலாகிப்பவர். ஜெய்லாப்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துபவர். கேட்டேன். எவ்வளவு வேண்டும் என்றார். நான் செலவுகளை லிஸ்ட் பண்ணி, நீங்கள் இவ்வளவு கொடுத்தால் சமாளிப்பேன் என்றேன். மேலதிகமாகவே தந்தார். சந்தோசத்தில் நான் வேலையைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டேன். இரண்டுவாரத்தில் அவரே தொடர்புகொண்டு பணத்தைத் தந்தார்.  தரோ ஜென்டில்மன். நான் ஒரு நன்றி கூறி ஈமெயில் கூட அனுப்பவில்லை. அவரே புத்தகத்தை வாசித்து விமர்சனம் செய்தார்.

நன்றி அண்ணா!


நூல் அறிமுக அரங்கு

1

இப்படி இவர்கள் எல்லோரும் கூடச்சேர்ந்து உதவி செய்கிறார்கள் என்றவுடன் என் டென்ஷன் எகிறிவிட்டது. ஆனந்தும் நித்யாவும் சிட்னியிலிருந்து பிளைட் பிடித்து நிகழ்ச்சியைப் பார்க்க வருகிறோம் என்றார்கள். இனி சொதப்பினால் நான் தலைகாட்ட முடியாது. அந்த ஒரு காரணத்துக்காகவே நிகழ்ச்சி டிசைனில் நண்பர்களுக்கு இல்லாத அலுப்பு அடித்தேன். ஒவ்வொரு பேச்சுக்கும் சமரசங்கள் இல்லாமல் நண்பர்களோடு கூடிக் கலந்து ஆட்களை தெரிவு செய்தோம். தலைமையுரை ஜூட் அண்ணா என்பதில் எந்த குழப்பமும் இல்லை. ஏனென்றால் இது ஒருவகையில் அவருடைய நிகழ்ச்சியும் கூட. புத்தக அரங்கை நடத்த எனக்கு குமாரதாசன் அண்ணாதான் வேண்டுமென்று முதல்நாளே சொல்லிவிட்டேன். கம்பன் கழகம்தான் எனக்கு தமிழை அறிமுகப்படுத்தியது என்பது பொதுவான காரணம். தனிப்பட்ட ரீதியில் குமாரதாசன் book3அண்ணா ஒரு வெள்ளந்தி. மிக நேர்மையான மனிதர். அப்படிப்பட்டவர் அந்த வெளியீட்டை செய்வது மிக முக்கியம். நிகழ்ச்சியை தொகுப்பது சிவசுதன் அண்ணா என்பதும் தீர்மானமான விடயமே. ஏனென்றால் அவருக்குத்தான் என்னைவிட நிகழ்வு பற்றிய தகவல்கள் அதிகம் தெரியும்!

நிகழ்ச்சியில் மூன்று பேச்சுகள் என்று தீர்மானமானது. “பங்கர்”. அதற்கு அஜந்தன் அண்ணா கலக்குவார் என்று உள்ளூர பட்சி அடிக்கடி சொல்லியதால் கேட்டு சம்மதம் வாங்கிவிட்டேன். “யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்” பற்றி கேதா பேசுவது ஓட்டமடிக் செலக்சன். “குட்டி” பற்றிப்பேச சந்திரன் அண்ணாவுக்கு அதிக தகுதியுமுண்டு. அனைவருமே ஒரு கலக்கு கலக்கினார்கள் என்று சொன்னால் லிங்குசாமியே என்னைய கலாய்க்கும் சந்தர்ப்பம் இருப்பதால், வீடியோக்களை வரும் வாரங்களில் இணைக்கிறேன்.  நீங்களே சொல்லுங்கள்.

இப்போதைக்கு ஜூட் அண்ணாவின் தலைமையுரையை மட்டும் இங்கே இணைக்கிறேன்.

 

நூலின் சிறப்புப் பிரதிகளை வழங்குமாறு நான் மிகவும் மதிக்கின்ற முருகபூபதி ஐயாவைக் கேட்டுக்கொண்டேன். வழங்கியதோடு மாத்திரமில்லாமல் ஓரிரு வார்த்தைகளும் பேசினார். ஐயாவுக்கும் பிரதிகளை வாங்கி எனக்கு பெருமை சேர்த்த பெருமக்களுக்கும் நன்றிகள். சிறப்புப் பிரதிகளை வாங்கி நம்ம கம்பனி கையைக் கடிக்காமல் காப்பாற்றியவர்கள் இவர்கள்தான்.

book2திருமதி வள்ளி ஸ்ரீகாந்தா
திரு அம்பி அம்பிகைபாலன்
வைத்திய கலாநிதி சிவகடாட்சம்
திரு நவரத்தினம் வைத்தியலிங்கம்
திரு குகதாஸ்
திரு கந்தையா சம்பந்தர்
திரு சிவயோகநாதன் இராமநாதன்
திரு சுஜந்தன் தயானந்தன்
திரு ராஜன் விஜயராஜன்
திரு ஐங்கரன்


மன்னிப்பு ஒன்று - வஜ்னா அக்காவுக்கு

மருதூர்க்கனி ஐயாவின் மகள். எனக்கு மிக நெருக்கமான, நான் மிகவும் மதிக்கும் நபர். வஜ்னா அக்கா. சிறப்புப் பிரதிகள் வாங்கும் பட்டியலில் முதலில் இருந்த பேர். “அக்கா நீங்க வந்து கட்டாயம் வாங்கோணும்” என்று மிகவும் அன்புடன் வற்புறுத்தி அவரையும் ரபீக் அண்ணாவையும் அழைத்திருந்தேன். அன்றைக்கு அரங்கில் பெயர் எப்படியோ மிஸ் ஆகிவிட்டது.  அவர்கள் மேடைக்கு அழைக்காமல் என்னை நானே அவமானப்படுத்திவிட்டேன். தம்பி, நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது என்று ஒவ்வொரு நண்பரும் தொலைபேசி அழைத்து சொல்லும்போது சரக்கென்று வலிக்கும். அவரை அழைக்காதது நிகழ்ச்சியின் கரும்புள்ளியாகிப் போனது. அவரோ பெருந்தன்மையாக “லூசா ஜேகே, இதுக்குப் போய் ஏன் டென்சன் ஆகிறீங்கள்?” என்றார். இன்னொரு புத்தகம் வராமலேயா போய்விடும்.

அக்கா பெரிய மனிசி. மன்னித்துவிடுவார்.


மன்னிப்பு இரண்டு - நடன ஆசிரியை ஜீவிகாவுக்கு

முதலில் நான் பரதம் ஆடமாட்டேன் என்று அடம் பிடித்தார். இல்லை செய்யவேண்டும் என்று காலைக் கையப் பிடித்து சம்மதம் வாங்கி பாரதி படத்து “எதிலும் எங்கும் இருப்பான்” பாடலுக்கும் ஸ்வேதாமேனன் பாடிய பாரதியின் “சின்னஞ் சிறுகிளியே” பாடலுக்கும் அரங்கு அமைப்பதற்கு முடிவானது. எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம். சின்னஞ் சிறுகிளியே பன்னிரெண்டு நிமிட நீண்ட பாடல். அதற்கு நடன அரங்கு அமைத்தால் ஒரு சோர்வு வந்துவிடாதா என்கின்ற சந்தேகம். ஜீவிகா முதற்கொண்டு அவருடைய குருவான திருமதி யசோதரா விவேகானந்தன் வரை அத்தனைபேரும் எடுத்துச் சொன்னார்கள். ஆத்மார்த்தமான பரதம் என்றுமே சோர்வைத் தராது என்றார்கள். நான் கேட்கவில்லை. இது என்னைப்போல சாதாரண ரசிகர்கள் வருகின்ற அவை. அதனால் முதல் தடவை சின்னதாக செய்வோம் என்றேன். வேண்டா வெறுப்பாக பன்னிரண்டு நிமிடப் பாடல் ஆறு நிமிடங்களுக்கு எடிட் செய்யப்பட்டது.

ஆனால் திரை விலகிய கணம் முதல் முடியும்வரை நாட்டிய அரங்கை கண் வெட்டாமல் அந்த அவை ரசித்தபோதுதான் புரிந்தது, சுத்த மடத்தனம் செய்துவிட்டேன். ஜீவியிடம் ஒரு மன்னிப்பு. தனியாக காலில் ஏற்கனவே தொபுகடீர் பண்ணியாச்சு. ஒரு சிறந்த நடனத்தை பத்து நிமிடங்களுக்குள் சுருக்கிய பாவத்துக்காக அவையோரிடமும் ஒரு மன்னிப்பு.

பாரதி கண்ணம்மா நாட்டிய அரங்கின் ஒளி வடிவம் இங்கே.

 


நட்புக்காக 

அகிலன் கர்நாடக சங்கீதத்தில் துறை போனவன். கஜனும் மிருதங்கத்தில் அப்படியே. கூட வயலின் வாசித்த பைரவியும், கடம் வாசித்த சதீபனும் சாஸ்திரிய சங்கீதம் இசைப்பவர்கள். இவர்களுக்கென்று ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லைக்குள் நின்று புதுமை செய்யவேண்டும் என்று தீர்மானது. அதுவும் சாஸ்திரிய சங்கீதம் தெரியாத, சரியாக தாளம்போடப் பயிலாத ஒரு அவையை தலையாட்ட வைப்பதுதான் டார்கட்.

ahilan

எப்படிச் செய்யலாம்?

எனக்கு நீண்டகாலமாகவே ஒரு பெருவிருப்பு. ஒரு சினிமாப்பாடலை வைத்து ராகம், சுரம் என்று பூந்து விளையாடவேண்டும். நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது என்று ஒரு அரை மணி நேரம் ராகாலாபனை செய்யவேண்டும். “சின்னக்கண்ணன் அழைக்கிறான்” நீட்டி முழக்கவேண்டும். ஏலவே இருக்கும் பாடலை அப்படியே ஒப்புவிக்காமல் அதற்குள் ஒரு புதுமையை தனித்துவத்தை புகுத்தவேண்டும். தயங்கி தயங்கி அகிலனிடம் கேட்டேன். கஜன் தாடியைச் சொறிந்தான். பின்னர், போனால் போகிறது, நட்புக்காக செய்கிறோம் என்றார்கள்.

அவ்வளவுதான்.

அதற்குப் பிறகு ரிகர்சல் என்றெல்லாம் ஒன்றுமில்லை. கஜன் முதல்நாள்தான் மெல்பேர்ன் வந்திறங்கினான். வயலின் பைரவி மேடையில்தான் என்ன பாட்டு என்று கேட்டார். ஆனால் இதெல்லாமே “ததரினா” வரையிலும்தான். அதன்பின்னர் அந்த ஒரு மணி நேரம் எப்படிச்சென்றது என்று … வேண்டாம். அவர்கள் நண்பர்கள். ஓரளவுக்கு மேல் புகழ்ந்தால் நட்புக்கு அழகில்லை.

கேட்டவர்கள் நீங்கள் சொல்லுங்கள்.

நிகழ்ச்சியன்று காலையில் அவனிடம் கேட்டேன். எனக்கு “கண்டேன் கண்டேன் கண்டேன்” பாட்டு வேண்டும், பாடுவியா  என்று. அதுக்கென்ன பாடினா போச்சு என்றான். பாடினான். சும்மா யோசித்துப்பாருங்கள். அனுமன் இலங்கையில் சீதையைக் கண்டவிட்டு மீண்டும் கிஷ்கிந்தா திரும்பி இராமனிடம் தகவல் சொல்லும் இடம். என்னா கொம்பசிஷன்.

 

அடுத்தது … ரீதி கௌளை. எனக்கு இசை அறிவு பூச்சியம். ஆனால் தூக்கத்தில்கூட இந்த ராகத்தில் உள்ள பாடல்களைக் கண்டுபிடிப்பேன். அவ்வளவு பைத்தியம். இதில் ஒரு கொம்பொசிசன் செய்யவேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்று கேட்டு வாங்கியது. என்ன செய்யப்போகிறார்கள் என்று இறுதிவரைக்கும் தெரியாது. அவையில் கேட்டபோது .. ப்ச். 

 

அடுத்தபாட்டு, அகிலன் முதன்முதலில் பாடிக்கேட்டு சரியாக பதினெட்டு வருடங்கள். இந்த பதினெட்டு வருடங்களில் எவ்வளவு விஷயங்கள். இன்னொரு பதினெட்டு வருடங்கள் கழிந்தும் நாங்கள் கேட்டு ரசிக்கவென்று இம்முறை பதிவு செய்துவிட்டோம்.

 

 

இப்படி ஒரு மணி நேரம் கச்சேரி. கூட்டம் அசையாமல் அப்படியே இருந்தது. அந்தப்பெருமை எல்லாமே அகிலனுக்கும் கஜனுக்குமே போய்ச்சேரும். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்தாலும், எனக்காக அவ்வளவுதூரம் வந்து நிகழ்ச்சி செய்துதந்த கஜனுக்கு ஸ்பெஷல் நன்றிகள். நிகழ்ச்சி முடிந்து வெளியேறுகையில், ஒரு நண்பர் வந்து சொன்னார்.

“ஒவ்வொரு வருடமும் அகிலனை வைத்து இப்படி ஒரு கச்சேரி செய்யவேண்டும் ஜேகே”

சிரித்தேன்.

ஒரேயொரு கொல்லைப்புறத்துக் காதலிகள்தான். 1984 will never be like 1984!

crowd

கொஞ்சப்பெடியள் சேர்ந்து ஏதோ செய்ய முயற்சிக்கிறாங்கள் என்று, தம்முடைய பெறுமதி மிக்க மாலைப்பொழுதை எம்மோடு செலவழித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள். அவ்வளவுதூரம் மெனக்கெட்டு வந்ததுக்கு நிகழ்ச்சி சுவராசியமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம்.

நன்றிகள்.

புதையல் காண் படலம்

அந்த ஆட்டிடையன் புதையலைத் தேடி எகிப்துக்கு பயணம் செய்கிறான் அல்லவா. ஆரம்பத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருந்த பயணம், நாட்கள் கடக்க கடக்க கடினமானது. கப்பலேறி மத்தியதரைக் கடலைக் கடந்து அந்தப்பக்கம் போய்ச்சேர்ந்தால், போய்ச்சேர்ந்த முதல்நாளே கையிலிருந்த காசை களவு கொடுக்கிறான். பின்னர் ஒரு பளிங்குகள் விற்கும் கடையில் வேலைக்கு சேருகிறான். பணம் சேர்க்கிறான். அதிஷ்டக்காற்று அடிக்கிறது. இடையனாக இருந்தபோது சேர்த்த செல்வத்தைவிட இப்போது டபிள் மடங்கு செல்வம். பேசாமல் மீண்டும் ஊர் போய் செட்டிலாவோமா என்று யோசிக்கிறான். ஆனாலும் கனவு விடாமல் துரத்துகிறது. பாலைவனத்துக்குள்ளால் கொடிய பயணத்தை எகிப்து நோக்கி தொடர்கிறான். பாலைவனம் ஒரு போதிமரம்போல. அந்தப்பயணம் நிறைந்த அனுபவத்தை அவனுக்கு வழங்குகிறது. இடையில் ஒரு ஊரில் தங்குகிறான். அங்கே பாத்திமா என்கின்ற அழகிய பெண்ணிடம் காதல் கொள்கிறான். பணம் இருக்கிறது. அவனுக்கு உதவி செய்கின்ற சமிக்ஞைகள் எப்போதுமே கூட இருக்கின்றன. வாழ்க்கைத்துணை கிடைக்கிறது. இதற்குமேல் என்ன புதையல் வேண்டிக்கிடக்கிறது?

ஆனாலும் அவன் நிறுத்தவில்லை. இன்னொரு பாலைவனம். எகிப்தை வந்தடைகிறான். பிரமிட்டுக்கடியில், தனக்கு கிடைத்த சமிக்ஞைகளின் பிரகாரம் ஒரு இடத்திலே தோராயமாக தோண்ட ஆரம்பிக்கிறான். எதுவுமே கிடைக்கவில்லை. ஒரு அடி. இரண்டு அடி. மூன்றடி. நான்கடி. ஐந்தடி. ஆறடி. ஏழடி.

“நங்” என்று ஒரு அடி.

அவன் பின் மண்டையில் விழுகிறது. திருடன். இவன் ஏதோ புதையலை ஒளித்து வைக்கவே தோண்டுகிறான் என்று தவறாக நினைத்தபடி அந்த திருடன் இவனை தாக்கத்தொடங்குகிறான். திருடனே அந்த கிடங்கை மேலும் தோண்டுகிறான். ஒன்றுமே அகப்படவில்லை. எங்கே ஒளித்துவைத்தாய்? என்று திருடன் ஆட்டிடையனின் குரல்வளையை நெரிக்கிறார். இதற்குமேல் விட்டால், சாவுதான் என்று தெரிகையில் ஆட்டிடையன் உண்மையை சொல்ல ஆரம்பிக்கிறான்.

“ஐயா, நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள், நான் ஒரு கனாக்கண்டேன். அதிலே இங்கே எனக்கு ஒரு புதையல் கிடைக்குமென்று அது சொன்னதால் நான் தேடிவந்தேன்”

இதைக்கேட்ட திருடன் சிரிக்க ஆரம்பித்தான். நீண்ட நேரம் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு ஆட்டிடையனைப் பார்த்துச் சொன்னான்.

“அடேய் முட்டாளே, எனக்கும்தான் ஒரு கனவு அடிக்கடி வருவதுண்டு. ஸ்பெயினிலே, ஒரு குக்கிராமத்திலே இருக்கின்ற தேவாலயத்துக்கு பின்னாலே புதையல் ஒன்று இருக்கிறது. போய் தேடு என்று. அதை நம்பி எந்த மடையனாவது ஸ்பெயினுக்கு போவானா? நீயும், உண்ட புதையலும்”

திட்டிவிட்டு திருடன் சென்றுவிட்டான். இவனுக்கு சந்தோசம் பிடிபடவில்லை. அட, நான் அன்றாடம் வாழ்ந்த, ஆடு மேய்த்த தேவாலயப்பகுதியில்தான் புதையல் இருக்கிறது. அதை அறிவதற்கு நான் இப்படியொரு நீண்ட நெடிய பயணத்தையும் அனுபவத்தையும் அடையவேண்டியிருந்திருக்கிறது. அப்படி அடைந்தால்தானே எனக்கும் அந்த புதையலின் அருமை விளங்கும்.

அவன் சந்தோசத்தில் மீண்டும் ஸ்பெயின் நோக்கி பயணத்தை ஆரம்பிக்கிறான்.


 

என் கொல்லைப்புறத்துக் காதலிகள்

சின்ன வயதுக் கனவு. பதினொரு வயதில் யாருமே வாசிக்காதபோதும் எழுதி எழுதி கொட்டியது. இடம்பெயர்ந்து, எத்தனையோ பட்டு, பலதை இழந்து, ஊர் ஊராகத் திரிந்து, கடைசியில் இந்த ஊருக்கு வந்து,  இனி என்னதான் வாழ்க்கை என்று நினைக்கையில், மீண்டும் எழுத்துத்தான் தோள் கொடுத்தது. An omen. என் personal legend இந்த எழுத்துத்தான் என்று புரியவைத்தது. எழுத ஆரம்பிக்கையில், உனக்கான புதையல் இங்கு இல்லையடா, நீ வாழ்ந்த வீட்டின் கொல்லைப்புறத்தில்தான் அது இருக்கிறது, அதை எழுது முதலில் என்று சமிக்ஞை சொன்னது. எழுதினேன். எழுதியது மட்டுமே நான் செய்தது. மிகுதி எல்லாமே தன்னாலே நிகழ்ந்தது.

“When you want something, all the universe conspires in helping you to achieve it”
- Paulo Coelho, The Alchemist

cover


நிகழ்வின் படங்கள் இங்கே 

கொல்லைப்புறத்துக் காதலிகள் நூலை வாங்குவதற்கு இங்கே கிளிக்குங்கள்.

Contact form