மைத்திரிபால சேனநாயக்காவும் வெடி அண்ணரும்

Nov 25, 2014

Main-cartoon-25_11_2014-New-600-1(2)

கிழமைக் கடைசியில் மைத்திரிபால சேனநாயக்கா கட்சி தாவினதில அதிகம் பயனுற்றவர்  நம்ம வெடி அண்ணர்தான்.

வழமைபோல அன்றைக்கும் ஒரு "குட் ஷொட்" பார்ட்டி. வெடி அண்ணை செம போர்மில இருந்தார். அவர் போர்மில இருக்கையில் ஆனானப்பட்ட சுமந்திரன் கூட அம்மிக்கொண்டு இருக்கவேண்டும். அந்தளவுக்கு அண்ணர் இராஜதந்திரத்தை பிழிஞ்சு ஊத்துவார். அப்படி அவர் புல் போர்மில் இருந்தபோதுதான், கல்மடு குளக்க்கட்டு உடைக்கப்பட்டு இராணுவ உடல்கள் ஓமந்தை வரைக்கும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. ஒரு ஏ4 தாளில் கல்மடுக் குளக்கட்டு பிளானைக் கீறி, எப்படி தண்ணி ஓமந்தை மட்டும் மற்றப்பக்கத்தாலை பாய்ந்தது என்று அவர் ஸ்கெட்ச் போட்டு பூகொளவியலை விளக்கியபோது மொத்த பார்ட்டியே தண்ணீரில் சந்தோஷத்தில் மிதந்தது தனிக்கதை.

இப்போது கொஞ்சநாளாக பெரிய அளவில விஷயம் சிக்காததால் காய்ந்து கிடந்த வெடி அண்ணருக்கு, மைத்திரி மாமா இப்பிடி பாய்ஞ்சது  ஒல்மோஸ்ட் தமிழீழம் கிடைத்தமாதிரி உற்சாகத்தைக் கொடுத்தது. மீண்டும் தாய் நாட்டை நிர்மாணிக்க காசு கலக்ட் பண்ணி அனுப்புற அளவுக்கு ஒரேநாளில் வெடி அண்ணர் ரோட் மப் போட்டுவிட்டார். ஆளுக்கு பயங்கர புளுகம்.

நான்தான் சிக்கினேன்.


மைத்திரிபாலா எப்படி தாவினார் என்று வெகு டீடைல் டிஸ்கிரிப்ஷனை அண்ணர் கொடுக்கத் தொடங்கினார். எல்லாத்துக்கும் காரணம் சந்திரிகாதானாம். அவதான் இரகசிய பேச்சுவார்த்தைகளை முடக்கிவிட்டதாம். இதற்கு பின்னாலே பிரான்சு அரசாங்கமும் சந்திரிகாவின் நெருங்கிய நண்பரான பில் கிளிண்டனும் இயங்கினதாக புதுத்தகவல் ஒன்றையும் வெளியிட்டார்.  ஆட்களோடு பேசிறது எண்டாலும் சட்டர்லைட் போன்லதான் சந்திரிகா ரகசியமா பேசினாவாம். இந்த ஒபரேஷன் இரண்டு மாசமாகவே தொடங்கீட்டுது. ஆரம்பத்திலேயே மகிந்தவுக்கு அரசல் புரசலாக மாட்டர் கசிந்தது. மைத்திரி அங்காலப்பக்கம் போகாம தடுக்கிறதுக்காக பத்திரிகைகளில் கரு ஜெயசூர்யாதான் போதுவேட்பாளர் என்று காசு குடுத்து ஒரு வதந்தியை அரசாங்கமே பரவவிட்டிருக்கு. ஒரு கட்டத்தில் மகிந்தவே கரு ஜெயசூரியாவுக்கு போன் பண்ணி வாழ்த்து தெரிவித்ததுக்கு பின்னணியும் இதுதான். சனத்தை திசை திருப்பத்தான் சனத் ஜெயசூரியாவும் கிரிக்கட் டீமை இந்தியாவுக்கு அனுப்பி அடிவாங்க வச்சார் எண்டும் சொல்லுறினம். சங்கக்காரா ஓய்வு எண்டு அறிவிச்சதும் அதாலதான். அண்ணர் வலு டீப்பாக இறங்கி ஆடினார். ரெண்டு சிவாஸ் முடிஞ்சும் மைத்திரி ஞாபகம்தான்.

திடீரென்று தன்னுடைய ஐபோனை எடுத்து ஒரு லிஸ்டை சத்தமாக வாசிக்கத்தொடங்கினார்.

டி. எம். ஜெயரத்ன.
ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்கா
விதுர விக்கிரமநாயக்கா
ரொனி டிமெல்.
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே.

MS0227131 "இதெல்லாம் ஆரண்னே?"

"நாளைக்கு மாறப்போற ஆக்கள். மகிந்தவுக்கு மாற அடி தம்பி."

"பெர்னாண்டோ புள்ளதான் மண்டையைப் போட்டிட்டாரே அண்ணே"

"ஓ ... இது அவரிண்ட மகனா இருக்கோணும். விதுர கூட ரத்னஸ்ரீண்ட மகன்தான்"

"ஒகே அண்ணே .. வேற யார் யாரு பாயுறாங்கள்?"

அண்ணர் துண்டின் மற்றப்பக்கம் திருப்பி வாசித்தார்.

சுசில் பிரேமஜயந்த.
மோகன் பீரிஸ்.
டக்ளஸ் தேவானந்தா.
விநாயகமூர்த்தி முரளிதரன்.
அஸ்வர் எம்.பி.
மாலக சில்வா.
‘மின்னல்’ ரங்கா.

கிழிஞ்சுது  கிருஷ்ணகிரி என்றான் பக்கத்திலிருந்தவன். நான் சுவாரசியம் காட்டாமல் சிக்கன் விங்கினை பதம்பார்த்தேன். அண்ணர் அசரவில்லை. லிஸ்ட் வேற லெவலுக்கு இப்போது நகர்ந்தது.

நிமால் ஸ்ரீபால டீ சில்வா.
ஜீ. எல். பீரிஸ்.
பசில் ராஜபக்ஸ.

சிக்கின் புரைக்கேறியது. பசிலன் தலையில் விழுந்த பீலிங். என்ன கருமம்டா இது.

“பசில் ராஜபக்ஸவா? ... என்னண்ணே  சொல்லுறீங்கள்?”

"ஓம் தம்பி ... நானும் முதலில  நம்பேல்ல .. ஆனா குடும்பத்துக்க ஒல்றேடி பெரிய பிரச்சனை. பெரியவர் தன்ர மகனை கொண்டுவாறது பசிலுக்கு பிடிக்கேல்ல. அதோட அடுத்த பார்லிமென்ட் எலெக்சனில கோத்தா கொழும்புல நிக்கப்போறாராம். அவர் எம்பி ஆனா, அடுத்த பிரதமர் கோத்தாதான். அப்புறம் பசில் கதை கம்மாஸ்"

"நம்ப ஏலாம  இருக்கண்ணே"

"பசிலிண்ட பாதுகாப்பு பிரிவில கோத்தா தன்ர ஆளை வச்சிருந்தவனாம். ரெக்கி குடுக்கமட்டும் மாசம் ஐம்பதாயிரம் அலவன்ஸ் எண்டா பாரன். ஆனா பசில் சும்மா ஆளே. நாட்டிண்ட டென் பெர்சண்ட கைக்குள்ள வச்சிருக்கிறவனுக்கு இதென்ன பெரிய விஷயம்? மணந்து பிடிச்சிட்டான்"

"அண்ணன் தம்பிமார் ஒத்துமையா ஊரை அடிச்சாங்களே அண்ணே .. அவங்களுக்க சண்டை வருமண்டோ?"

"சிவசேனா கட்சியை தெரியுமா தம்பி?"

"அந்த இந்து முஸ்லிம் வன்முறையை தூண்டின ஆக்கள்தானே… பாபரி மசூதி எரிப்போட பேமஸ் ஆன கட்சி"

"அவங்களேதான் .. மகாராஷ்டிராவில ஒரு புள்ள கைவைக்க ஏலாத கட்சி ... ஆனா பால் தாக்கரே தன்ர மகனை தலைமைப் பதவிக்கு கொண்டுவாறார் எண்டு தெரிஞ்சோன ராஜ் தாக்கரே பிரிஞ்சிட்டார் .. கட்சி குலைஞ்சு போய், இண்டைக்கு பிஜேபி ஆட்சி அங்க நடக்குது"

வெடி அண்ணரின் அரசியல் பரம்பலறிவைக் கண்டு பிரமித்தேன். ஸ்டேட் பொலிடிக்ஸ் கூட தெரிஞ்சு வச்சிருக்குது மனுசன்.

"வரலாறு ஒரு சிறந்த ஆசான் தம்பி. அதே நிலைமைதான் இஞ்சையும். பசில் அந்தப்பக்கம் பாய்ஞ்சு மகிந்தவை கவுக்கப்போறார்"

"முடியுமா அண்ணே?"

"அங்கதான் டுவிஸ்ட் இருக்கு .. தேர்தலில மகிந்த தோத்தாலும் .. இராணுவ ஆட்சி கொண்டுவருவாங்கள். பாகிஸ்தான் மியான்மர்ல நடந்தமாதிரி .. என்ன நடந்தாலும் மகிந்தவையும் கோத்தாவையும் ஆட்சியைவிட்டு தூக்கமுடியாது .. ஆட்சி போனா அவையளுக்கு கடாபி நிலைமைதான் .. அதால மிலிட்டரி ரூல் எப்பிடியும் கொண்டுவருவாங்கள்"

"அப்போ ஆணியே புடுங்க ஏலாதா அண்ணே ... மைத்திரிக்கு பெப்பேயா"

“அதேதான் …. அதால சந்திரிகாவுக்கு ஓம் சொன்ன பெரிய புள்ளிகள் பேசாம காசை வாங்கிட்டு போர்த்திக்கொண்டு படுக்கவும் சான்ஸ் இருக்கு”

“அப்படி எண்டா பொது வேட்பாளர் இந்த முறையும் புகையப்போகுது எண்டுறீங்கள்”

“அப்பிடி சொல்ல முடியாது தம்பி … தமிழரும் முஸ்லிமும் ஒட்டு மொத்தமா வோட்டு போட்டா, பண்டாரநாயக்கா வோட்டுகளும் சேர, கொஞ்சம் சான்ஸ் இருக்கு”

“அப்ப எங்கட கூட்டமைப்பு மைத்திரியை ஆதரிக்கோணுமா?”

"ஆணியே புடுங்கக்கூடாது … தம்பி வலு இண்டெலிஜெண்டா நாங்க இதில மூவ் எடுக்கோணும். கூட்டமைப்பு ஒண்டுமே சொல்லாம கம்மெண்டு வாயைப் பொத்திக்கொண்டிருக்கோணும்.."

"ஏன் அண்ணே .. தமிழரின் கட்சி எண்ட வகையில தங்கட நிலைப்பாட்டை அவயள்  சொல்லத்தானே வேணும்? அப்பத்தானே தமிழ்ச்சனமும் அவையள் சொல்லுறபடி செய்யும்"

“தமிழ்ச்சனம் வேற வழியில்லாம கூட்டமைப்புக்கு வோட்டு போடுறதே ஒழிய, அதுக்காக கூட்டமைப்பு சொல்லுறதே வேதம் எண்டு நினைக்கிறதில்ல”

“அப்பிடி எண்டா அவையள் இந்த எலக்ஷனில வொயிஸ் குடுக்கக்கூடாதா?”

"குடுத்தா கிழிஞ்சுது ... இவனுக .. சுய நிர்ணயம் .. தேசியம் ... அது இது எண்டு அடுத்த எலக்ஷனுக்காக நாலு இழுத்துவிடுவாங்கள். அதையே பூச்சாண்டி காட்டி மகிந்தா வந்திடுவான் .. சொல்லப்போனா கூட்டமைப்பு பகிரங்கமா மகிந்தவை ஆதரிச்சு அறிக்கை விடோணும்.  சிங்களவனும் ஏமாந்துடுவான். மகிந்தவுக்கும் ரி.என்.ஏ க்கும் டீலிங் எண்டால் சிங்களவன் குழம்பிடுவான்."

"ஆக அடிப்படையில தமிழனுக்கு எதிரானவனுக்குத்தானே சிங்களவன் வோட்டு போடுறான் .. அதனால எந்த தீர்வும் நிலைக்காதே அண்ணே. மைத்திரி வந்தும் ஒண்டும் தரமாட்டாரே"

"அதுக்குத்தான் வெளிநாட்டு சக்திகளின் துணையை நாங்கள் எடுக்கவேணும். யோசிச்சு பாரு தம்பி. தேர்தலிக மகிந்த தோத்து, அடுத்தநாளே இராணுவ ஆட்சி வந்தா, நாடே குழம்பிப்போயிடும். குழம்பின குட்டையில நாங்கள் மீன் பிடிக்கலாம். நான் இப்ப அந்த அலுவலிலதான் பிசியா இருக்கிறன்"

"கொன்னுட்டீங்கள் அண்ணே ... இப்போ எங்கள மாதிரி புலம்பெயர் தமிழர் என்ன செய்யோணும்? அவையள் ஏதாவது மூவ் எடுக்கோணுமா? "

"புலம்பெயர் தமிழர் ஒரு பிரச்சனையே இல்லை .. வழமைபோல எல்லா சிங்களவனும் ஒண்டுதான் எண்டுவினம் ... மைத்திரியை ஏற்றுக்கொள்ளமாட்டினம் ... ஏற்றுக்கொள்ளுற ஆக்களையும் நக்கல் அடிப்பினம் ...தமிழன் தானே போராடி தீர்வு எடுக்கோணும். அமெரிக்காவும் இந்தியாவும் எங்களுக்கான தீர்வை ஒருபோதும் தராது எண்டு பழைய விளையாட்டை காட்டுவினம். அவங்கள் பெரிய ப்ரோப்ளம் இல்ல. ஆக்களை நக்கல் மட்டும் அடிப்பாங்கள். அவ்வளவுதான். என்னைக்கூட வெடியன் எண்டு முதுகுக்கு பின்னால சொல்லுறவங்களும் இருக்கிறாங்கள் தம்பி .. இவயளைப் பார்த்தா நாங்க இந்தளவுக்கு வளர்ந்திருக்கேலுமே?"

வெடி அண்ணர் போகும் வேகத்துக்கு சீக்கிரமே தமிழரின் எல்லாப் பிரச்சனைகளையும் கிளியர் பண்ணுவார் என்றே தோன்றியது.

"இரும் தம்பி வாறன் .. பாத்ரூம் வருது"

அண்ணர் கிளாசும் கையுமாக பாத்ரூம் நோக்கி செல்ல, வேறொரு கை என் தோளை பின்னாலிருந்து தட்டியது. திரும்பினேன். அட. எங்கட றொக்கட் அண்ணே. றொக்கட் ரெண்டு மூண்டு ரவுண்டு கட்டி இப்போது செவ்வாய்க்கிரகத்தை எட்டியிருந்தது.

“தம்பி … இலங்கை நியூஸ் தெரியுமே?”

“என்ன .. மைத்திரிபால பொதுவேட்பாளர் .. அதுதானே”

“அது இல்ல தம்பி “

“பசில் பாயப்போற நியூஸா”

“வெடி சொன்னானே? .. பாவம் .. அதுவும் பழைய கதை”

“அப்ப?”

றொக்கட் அண்ணர் சலனமேயில்லாமல் மாட்டரை மெதுவாக அவுட்டுவிட்டார். 

“கோத்தாவுக்கும் மகிந்தாவுக்கும் கொளுவீட்டுதாம்”

டமார்… பசிலன் வெடித்துச் சிதறியது.

***********************

Photo Credits : Dailymirror.lk, dbsjeyaraj.com

Contact Form