Skip to main content

லிங்கா


Rajinikath-in-Lingaa-Movie

 

91ம் ஆண்டு.

தீபாவளிக்கு இன்னமும் ஒரு மாதமே இருக்கிறது. அப்போது ரஜினி “காலம் மாறிப்போச்சு” என்று ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு காரணத்தால் படத்தைத் தொடர முடியவில்லை. தீபாவளி நெருங்குகிறது. “தலீவா உன் படம் வேணும்” என்று ரசிகர்கள் ரஜினி வீட்டுக்கு முன்னால் நின்று ஆர்ப்பாட்டமே செய்கிறார்கள். ரஜினி உடனேயே கன்னடப் படமான தேவா கதையை ரீமேக் பண்ண முடிவெடுத்து ராஜசேகரை இயக்குனராகப் போட்டு நடிக்கிறார். வழமையான, தம்பிமாருக்கு உருகும் அண்ணன், அந்தத் தம்பிமாராலேயே  ஏமாற்றப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து, பின் மீள எழும் டெம்ப்ளேட் கதை. “மாசி மாசம் ஆளான பொண்ணு”, “சந்தைக்கு வந்த கிளி” என்று பல இளையராஜா ஹிட்டுகள். ஒரே மாதத்தில் மொத்தப்படமும் எடுக்கப்பட்டு தீபாவளியன்று படம் வெளியாகிறது. தர்மதுரை! அந்தப்படம் ரஜனி ரசிகர்களுக்கு செம மீல்ஸ். மற்றவர்களுக்கு சாதாரணம்.

லிங்கா, ரஜனி நமக்குத் தந்திருக்கும் இன்னொரு தர்மதுரை.

ஆற்று அணையை இன்ஸ்பெக்ட் பண்ணவந்திருக்கும் எஞ்சினியரான பொன்வண்ணன் உள்ளூர் எம்.பியின் கூட்டத்தால் கொல்லப்படுவதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. சாகும் தறுவாயில், இந்த அணையைக் காப்பாற்றவேண்டுமென்றால் பூட்டப்பட்டுக்கிடக்கும் ஊர்க் கோயிலை திறக்கவேண்டுமேன்று அந்த எஞ்சினியர் ஊர்த்தலைவரிடம் சொல்லிவிட்டு இறந்துபோகிறார்.

டேய் இதெல்லாம் ஒகே, நம்ம தலைவன் எங்கேடா?

பொறுங்க பாஸ்… இன்னும் அஞ்சு நிமிஷம்தான்

ஊர்க்கோயிலை திறப்பதற்கு அந்தக் கோயிலைக் கட்டிய ராஜா லிங்கேஸ்வரனின் வாரிசு வந்தால்தான் முடியும் என்று ஊர்த்தலைவர் சொல்ல, ஊரே அந்த வாரிசைத் தேடி அலைகிறது. யார் அந்த வாரிசு?

“தலீவா …..”

பிரமாண்ட வெளிநாட்டு செட். விதம் விதமான சொகுசு கார்கள். பில்ட் அப் எகிற, தியேட்டரில் விசில் பறக்க செம ஸ்டைலாக ரஜினியின் இன்ட்ரோ. “ஓ நண்பா நண்பா” பாட்டு.  நவீன இன்டோர் செட்டுகளில் ஸ்டைலான ரஜினியின் டான்ஸ். என்னதான் இருந்தாலும் “ஒருவன் ஒருவன் முதலாளியும்”,”ஆட்டோக்காரனும்”, “வந்தேண்டா பால்காரனும்”, ஏன், சரவச்சட்டியை கவிட்டுப்போட்டு ஆடிய “அதாண்டா இதாண்டா” வும் கொடுத்த அந்த நேட்டிவிட்டி எபக்ட், மிகப் பிரமாண்டமான இந்த ஓபனிங் பாடலில் இல்லை. ரகுமான் வேறு, ட்ராக்கைக் கொடுத்துவிட்டு அதற்குப் பிறகு பாட்டை மெருகூட்டவே மறந்துபோனார் என்று தெரிகிறது. ஏன் பாஸ்? ஆனானப்பட்ட எஸ்.ஜே.சூர்யாவுக்கே “ஆறரைக்கோடி பேர்களில் ஒருத்தன்” என்று பாடிவிட்டு, ரஜினிக்குப் போய் வெறும் கீபோர்டில அடிச்சுக் கொடுத்திருக்கிறீங்க?

தப்பாட்டம் சாரே!

பாட்டு முடிகையில், ரஜினி இருந்த இடம் ஜெயில். எல்லாமே கனவுதான். நிஜத்தில் தல திருடன். கூடவே சந்தானம், பாலாஜி என்று ஒரு திருடர் கூட்டம். பிரமானந்தம் அண்ட் கோவின் போலீஸ் ஸ்டேஷன். ரஜனி அண்டர்ப்ளே பண்ண, கூடவிருந்து சந்தானம் அடிக்கும் லூட்டி செம்ம. ஜெயிலில் இருந்து இவர்களை மீட்டுப்போக அனுஷ்கா வருகிறார். அடுத்த அரை மணிநேரம்  ரஜனி, சந்தானம், அனுஷ்கா, மதன்பாப் என்று ஒரு கூட்டமே சேர்ந்து சிரிப்பில் தியேட்டரை அதிர வைக்கிறது. இடையில் அனுஷ்காவுக்கு ரஜினிமீது காதலும் வர, படத்தின் ஹைலைட் சோங் “மோனா மோனா” வருகிறது. இந்தப்பாட்டுக்காகவே படத்தைப்பார்க்கலாம். டிப்பிக்கல் ரஜினி ஸ்டைல், மானரிசங்கள், டான்ஸ் என்று தல பின்னிப்பெடல் எடுத்திருக்கும் பாடல். அப்படியே நைசாக நடந்து கையை ஒருபுறத்தில் ஊன்றிக்கொண்டு அனுஷ்காவைப் பார்க்கும் ஒரு சீன் இருக்கிறது. ஐயோடா. அனுஷ்காவால் ரஜினியின் இந்த ஸ்க்ரீன் பிரசென்ஸுக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. ஆளும் ஒரு சுற்றுப் பருத்து, கன்னம் உப்பி கொழுக் மொழுக்கென்று வயதானாற்போல் தெரிகிறார். அவர் இனி விஜய், அஜித், சிம்பு, தனுஷ் கொஷ்டிக்குத்தான் சரி. நம்ம தலைவரின் யூத்து லுக்குக்கும் ஸ்டெப்புக்கும் அனுஷ்கா .. ம்ஹூம் .. செல்லாது.

அடுத்தபடத்தில் வி வோண்ட் சமந்தா!

1416143728rajinikanth-lingaa1

அனுஷ்கா எப்படியோ ரஜினியை அழைத்துக்கொண்டு அந்த அணை உள்ள ஊருக்குப்போக, அங்கே ஊர்ப்பெரியவரால் பிளாஷ் பக் சொல்லப்படுகிறது. படம்1939ம் ஆண்டுக்கு நகருகிறது. ஓடும் ரயிலில் நடக்கும் படத்தின் முதல் பைட் சீன். ரசித்து, ரசித்து பண்ணப்பட்டிருக்கும் நேர்த்தியான சண்டைக்காட்சியது. எல்லோருக்கும் பிடிக்கும்.

ரஜினி பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பணிபுரியும் கலக்டர். தண்ணீர்ப் பஞ்சம் உள்ள ஒரு ஊருக்கு எப்படி தன் செல்வத்தையும் அறிவையும் பயன்படுத்தி அணை கட்டிக்கொடுக்கிறார். வெள்ளைக்காரரோடு ஏன் முரண்படுகிறார். சோனாலி சின்ஹா எப்படி ரஜனிமேல் காதல் வயப்பட்டு டூயட் பாடுகிறார். ரஜினி எப்படி ஊர் மக்களால் ஏமாற்றப்படுகிறார். விடுகதையா லைக் சோகக் காட்சி ஒன்று. தன் சகலதையும் இழந்து, ஊர்மக்களால் துரத்தப்பட்டு இறுதியில் சமையல்காரர் ஆகும் ரஜினி என்பதோடு பிளாஷ்பக் முடிகிறது. நிகழ்காலத்தில் தற்போது அணைக்கு வில்லன்களால் ஆபத்து. அதை எப்படி அந்த திருடன் ரஜினி காப்பாற்றுகிறார் என்று … அடப்போங்கப்பா கதையா முக்கியம்.

படமாகப் பார்த்தால் லிங்கா சாதாரண படமே. இயல்புகளைத் தொலைத்த, ரஜினியைத் தவிர வேறு எந்தக் கொம்பன் நடித்திருந்தாலும் மரண மொக்கையாகப் போயிருக்கக்கூடியப் படம். ஆனால் நடித்தது ரஜினி. கதை எப்படி, மொக்கையா, சக்கையா என்று எவன் சீந்தினான். ரஜினி படத்தில் நாங்கள் ஷிண்ட்லர்ஸ் லிஸ்டையோ, இன்டர்ஸ்டெல்லரையோ, மகாநதியையோ தேடிப் போவதில்லை. இது வேற டிபார்ட்மெண்ட். அதனால் படத்தைப் பார்த்துவிட்டு “கதை சரியில்லை, படத்திலே ரியலிசம் குறைவு” என்று எவனாவது சொன்னால் அது வெறும் ஹைப்போக்கிரஸி. உள்ளூர ரசித்துவிட்டு வெளியிலே சீன் போடும் பேர்வழிகள். அடுத்த ரஜினி படத்துக்கும் முதல் ஷோ பார்த்துவிட்டு இதே ஸ்டேட்மெண்ட் விடுபவர்கள். அதில் அவர்களுக்கு ஒரு கெளரவம், போகட்டும்.

நாங்கள் ரஜினி படத்தில் ரஜினியை மட்டுமே தேடிப்போவோம். ரஜினியின் அண்மைக்காலப் படங்களான எந்திரன், கோச்சடையான் இரண்டிலுமே அந்த “ரஜினி” எலிமென்ட் மிஸ்ஸிங். இந்தப்படத்தில் வட்டியும் முதலுமாக ரஜினியைக் படம் முழுக்க ரஜினியாகவே கொண்டுவந்தமைக்கு ரவிக்குமாருக்கு ஒரு தாங்க்ஸ். கிழிஞ்ச டெனிம் ஜீன்ஸ், ஜக்கட் என்று படு காசுவலாக நடந்துவரும் ரஜினியைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது. ஆளுக்கு அறுபதோ, அறுபத்தைஞ்சோ என்னெல்லாம் வயது சொல்கிறார்கள். ஹூ கேர்ஸ்? திரையில் ரஜினி ரஜினியாகவே தெரிகிறார். மோனா மோனாவில் ஒயிலாக நடந்துவரும்போது ராஜாதி ராஜா படம் ஞாபகம் வருகிறது. பிளாஷ்பேக்கில் படிகளில் இறங்கிவரும்போது “முத்து” ராஜா ஞாபகம் வருகிறார். வெள்ளைக்கார கலக்டரோடு ஆக்ரோஷமாக பேசும் காட்சிகள், சரத்பாபு, ரகுவரனோடு அந்த நாட்களில் ரஜனி விடும் சவால்களை ஞாபகப்படுத்துகிறது. சின்ன அலுமாரிக்குள் அனுஷ்காவும் ரஜினியும் சிக்குப்பட்டு நடக்கும் சில்மிஷக் காட்சிகளில் தொண்ணூறுகளின் ரஜினி - குஷ்பு காட்சிகளும் ஞாபகம் வருகிறது.

இந்தப்படம் படையப்பாவோ முத்துவோ கிடையாது. ஆனால் ரஜினியிடமிருந்து இன்னொரு படையப்பா, முத்து கூடிய சீக்கிரமே வரும், அதற்கு தல தயார் என்று கட்டியம் கூறும் படம் லிங்கா. ரஜினியிடம் அந்த நெருப்பு அப்படியே இருக்கிறது. ரவிக்குமார் அதைக்கொஞ்சம் ஊதி ஜூவாலை கூட்டியிருக்கிறார். இனி யாராவது பெட்ரோல் ஊற்றினால், நெருப்பு தன்னாலே பற்றும். யார் கண்டது. ஒரு பாஷா, அண்ணாமலை கூட வரும் வருடங்களில் வரலாம். ரஜினி இஸ் ரெடி. தலைவரே, இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அந்த சீனிகம் படத்தை ஒருதடவை பாருங்கள். நீங்களும் அனுஷ்காவும் அதில் நடித்தால், அந்தப்படம் ஒரு சகாப்தமாக மாறும். பிளீஸ். இனிமேல் கமல்மாதிரி, ஒரு மசாலா, ஒரு கிளாசிக் என்று மாறி மாறி செய்யுங்கள். சொதப்பினாலும் ஒகே. கோச்சடையானையே பார்த்தவர்கள் நாங்கள். அதைவிட மோசமான படமொன்று வந்துவிடுமா என்ன?

You got nothing to lose or prove.

முழுக்க முழுக்க ரஜினி படமாகவிருந்தும் இது ஏன் முத்து, பாஷா வகையறா இல்லை என்றால், ரஜினியின் முக்கிய இரண்டு அம்சங்கள் லின்காவில் மிஸ்ஸிங்.

ஒன்று சண்டைக் காட்சிகள். எங்கேயோ பார்த்துகொண்டு “என் நண்பனைக் கொன்னுட்டியேடா” என்று அடிக்கும் அடி. பாஷாவில் இந்திரனுக்கு மாணிக்கம் சாத்தும் முதல் சண்டைக்காட்சி. முத்துவில் இடம்பெற்ற நகைச்சுவையான சண்டைக்காட்சிகள் என்று எதுவுமே இங்கே இல்லை. அந்த ட்ரெயின் சண்டைக்காட்சி தரமானது என்றாலும் அதில் ரஜினி ட்ரேட்மார்க் போதாது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை சவுந்தர்யாப் பொண்ணு வடிவமைத்திருக்கிறார் போலும்.  படத்தின் திருஷ்டிப்போட்டே அந்த கிளைமெக்ஸ் பலூன் சண்டைதான்.செம மொக்கை.

இரண்டாவது மிஸ்ஸிங் எதுவென்றால் ரஜினி ஸ்டைல். “கொஞ்சம் மேலே பாரு கண்ணா” பாஷா காட்சிகள் எதுவுமே படத்தில் இல்லை. சும்மா சடக்கென்று ஊஞ்சலை உருவி உட்கார்ந்து நீலாம்பரிக்கு முன்னாலே கால்போடும்  படையப்பா இல்லவே இல்லை. “பஜ்ஜி சீன்” இல்லை. அண்ணாமலை போர்ட் மீட்டிங் கிடையாது. “கறுப்பு ஆடு” கத்தவில்லை. ரஜினியின் ஸ்டைல் என்பது வெறும் கிமிக்ஸ் கிடையாது. அது கதையின் ஓட்டத்தோடு வரும்போது அதன் பரிமாணமே வேற லெவல்.  இந்தப்படத்தில் ஸ்டைல் தனித்தனியாக வருகிறது. காட்சியோடு ஒட்டியதாக எதுவும் … ம்ஹூம். அவ்வப்போது ஸ்டைலாக முடியை சுருட்டினாலும் அதையும் சந்தானம் காமடியாக்கிவிடுகிறார். பன்ச் வசனங்களும் அப்படியே. மிக வேகமாக கட கடவென்று பேசிவிட்டு திடீரென்று பிரேக் போட்டுப் பேசும் அவருடைய வசனநடை எதுவுமே இந்தப்படத்தில் இல்லை. வரும் ஒன்றிரண்டு வசனங்களிலும் சோபையே இல்லை. ஏதோ ஒரு களைப்போடு டப்பிங் பேசியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

என்னாச்சு ரவிக்குமார்?

Linga-Movie-Latest-Photos-1 படத்தின் இன்னொரு லெட் டவுன் ரகுமானின் பின்னணி இசை. ‘இந்தியனே வா’, ‘மன்னவா’ பாடல்கள் ரசிக்கும் படியானவை. ‘மோனா மோனா’ ரகுமானின் டொப் லிஸ்டில் சேரப்போகும் பாடல். ஆனால் பின்னணி இசை ஒட்டவேயில்லை. நம்மாளு ஒரு டியூனுக்கே ஆறுமாசம் வேலை செய்பவர். ஆறுமாதத்தில் படத்தையே எடுத்துக்கொண்டு போய்க்கொடுத்ததால் ரகுமான் ஆடிப்போயிருப்பது பின்னணி இசையில் தாராளமாகவே தெரிகிறது.

வி மிஸ் தேவா!

ஒன்பது மணிக்கு ஷோவுக்கு எட்டுமணிக்கே கூட்டம் கூடிவிட்டது. வரிசையின் முதல் ஆளாக நின்றது என்னுடைய நெருங்கிய வைத்திய நண்பர்கள். கிளினிக்கையும் மூடிவிட்டு, பொப்ஹோர்னும் கையுமாக உட்கார்ந்து, சுப்பர் ஸ்டார் என்ற எழுத்துக்கள் வரவும் கூடச்சேர்ந்து விசிலும் அடித்தார்கள். முதல்பாதி முழுதும் அந்த விசிலுக்கும் கைதட்டலும் குறைவில்லை. இரண்டாம்பாதி சீரியசாகவே போகிறது. “அதிரடிக்காரன்” மாதிரி ஒரு பாஸ்ட் நம்பர் இரண்டாம்பாதியில் வந்திருக்கவேண்டும். வரவில்லை. அவசர அவசரமான எடிட்டிங் படத்தின் ஓட்டத்துக்கு அவ்வப்போது தடை போடுகிறது.

இது எல்லாவற்றையும் ரஜினி என்கின்ற தாரக மந்திரம் தூக்கி நிறுத்துகிறது. அதனால்தான் ரஜினி சூப்பர்ஸ்டார்.

நானெல்லாம் பாபா படத்தையே பத்து தடவை பார்த்தவன். எந்திரனில் ரஜினியைத் தேடி களைத்துப்போனவன். கோச்சடையான் பார்த்து வெறுத்துப்போனவன். மூன்று மணிநேர முழுநீளப் படம் முழுதுமே ரஜினி வந்தால் கசக்குமா? ‘

I loved it.

இரண்டு மட்சில் சச்சின் டக் அடித்தால், மூன்றாவது மட்சிலே ஐம்பது ரன்கள் அடித்தாலும் கைதட்டி ரசித்துப்பார்ப்போம் அல்லவா. Form is temporary, class is permanent என்பார்கள். இத்தனை வருடங்களுக்குப் பின்னர் மைதானத்தில் இறங்கி ரஜினி அநாயசமாக அடித்த ஐம்பது ஓட்டங்கள்தான் லிங்கா.

செஞ்சரிக்காக வெயிட்டிங்.