ஒரு கொள்ளிவால் பிசாசு. ஒரு இரத்தக் காட்டேறி.

Dec 18, 2014

12645

 

கொந்தளிக்கும் சமுத்திரம். ஒரு படகு. படகிலே ஒரு தாயும் மகனும் தனியே.

நீண்டநாட்களாக தட்டித்தடுமாறி அந்தப்படகிலே பயணிக்கிறார்கள். இன்னமும் எவ்வளவுதூரம் ஓடவேண்டுமோ தெரியாது. தாயும் களைத்துவிட்டாள். மகனுக்கும் ஓடி ஓடிக் களைத்துப்போய்விட்டது. வந்த வழியும் தெரியவில்லை. இன்னமும் எவ்வளவுதூரம், எங்கே போகப்போகிறோம் என்கின்ற எந்த இழவும் அந்தச்சிறுவனுக்கு புரியவில்லை. நாட்கணக்குகளாகவிருந்த காத்திருப்பு, மாதங்களாகி வருடங்களாகிவிட்டன. பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருநாள் காலையில் படகிலே தூக்கம் கலைந்து எழுந்தபோது, தூரத்தே இரண்டு பெரும் மலைப்பாறைகளை சிறுவன் காண்கிறான். தாய் ஏற்கனவே அந்த இரண்டு பாறைகளையும் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.

“அப்பாடி .. ஒருமாதிரி தரையைக் கண்டுவிட்டோம்”

என்கிறான் அந்தச்சிறுவன். தாய் சிரிக்கிறாள். சிறுவனுக்கு விளங்கவில்லை. தாயின் சிரிப்புக்கு காரணம் கேட்கிறான்.

“இந்த இரண்டு மலைகளில் எந்த மலையை நோக்கிச் செல்லப்போகிறோம்?”

சிறுவன் அப்போதுதான் அந்த மலைகளைக் கவனிக்கிறான். இரண்டுமே காய்ந்து இருண்டுபோய்க் கிடந்த மலைகள். மரங்கள் இல்லை. வெறும் பாறைகளும் ஆங்காங்கே கள்ளிச்செடிகளும் மட்டுமே வளர்ந்திருந்தன. கள்ளிச்செடி இருந்தால் பற்றைகளுக்குள் பாம்புகளும் இருக்கலாம். ஆனால் எப்படியாவது இரண்டுநாள் தங்கவேணும் தரை வேண்டும். ஓரிரவேனும் தரை ஆடாமல் தூங்கவேண்டும். அவனுக்கு உடனேயே கரையைப் போய்ச்சேரும் ஆர்வம் எட்டிப்பார்த்தது. இடதுபக்க மலையை நோக்கி படகைத் திருப்பினான். தாய் தடுத்தாள்.

“இடது பக்க மலையில் ஒரு இரத்தக் காட்டேறி இருக்கிறது. ஆட்களைக் கண்டாலே அது அடித்துப்போட்டுவிடும்.”

சிறுவனுக்கு பயம் எட்டிப்பார்த்தது. படகை வலதுபக்க மலைப்பக்கமாக திருப்ப எத்தனித்தான். அதற்கும் தாய் தடுத்தாள்

“வலதுபக்க மலையிலே கொள்ளிவாய்ப் பிசாசு இருக்கிறது. நெருங்கினாலோ கண்கள் இரண்டையும் தோண்டி எடுத்துவிடும்”

இப்போது சிறுவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. படகிலே தொடர்ந்து பயணிப்பதென்றால் இந்த இரண்டு மலைகளில் ஒன்றிலேனும் தங்கியே செல்லவேண்டும். வந்தவழியே திரும்பிப் போகலாம் என்றால், வழியும் சரியாகத் தெரியவில்லை. அப்படியே போனாலும் தன் தந்தை, சகோதரர் போல தானும் மடிந்துவிட நேரிடும். சிறுவன் யோசித்தான்.

“பேசாமால் இங்கேயே சுற்றிக்கொண்டு நிற்போமா?”

“எவ்வளவு நாட்களாக நிற்பாய்? ஒருநாள்? இரண்டுநாள்? … ஒரு வருஷம் .. இரண்டு வருஷம் .. ஐஞ்சு வருஷம்?”

“எவ்வளவு நாளானாலும் பரவாயில்லை. இரண்டில் ஒரு பிசாசு சாகும்வரைக்கும் காத்திருப்போம்”

தாய் ஒன்றும் பேசவில்லை. நடுக்கடலிலேயே காத்திருக்கத்தொடங்கினார்கள். மழைத்தண்ணீர், மீன் என்று உயிர்வாழப்பழகிக்கொண்டார்கள். ஒருநாள் இரவிலே பெரும் சத்தம் ஒன்று கேட்டு விழித்தார்கள். பார்த்தால் இராட்சத சூனியக்காரி ஒருத்தி. இவர்களைப் பார்த்து கோபமாக தீச்சுவாலையை கக்கினாள்.

“சொல்லுங்கள் … நீங்கள் இருவரும் என்னை அழிக்கவந்த பிசாசுகள்தானே .. மனிதர் வேஷம் போட்டுவந்தால் மயங்கிவிடுவேன் என்று நினைத்தீர்களா?”

தாய் மகனைக் கைகளால் இறுக்கி அணைத்துக்கொண்டே சூனியக்காரியை நோக்கி பயத்தோடு சொன்னாள்.

“இல்லையில்லை … நாங்கள் அபலை. மனிதர்கள். வாழ்வைத்தேடி போகிறோம். உங்களுக்கு இடைஞ்சல் தரமாட்டோம். விட்டுவிடுங்கள்”

சூனியக்காரி அந்த கடலே அதிரும்படி சிரித்தாள்.

“வேடிக்கையாக இருக்கிறது. இது எனது கடல். நீங்கள் என்னை அழிக்கவந்தவர்கள். மனிதர்கள் அல்ல. உங்களை நான் முதலில் அழிப்பேன்”

தாய் தாங்கள் மனிதர்களே என்று சொல்லி அழுதாள். தன்னையும் தன் மகனையும் உயிருடன் விட்டுவிடும்படி கதறினாள். சூனியக்காரி யோசித்தாள்.

“அப்படியென்றால் உங்களை பரிசோதிக்கவேண்டும் … உங்கள் இருவரையும் கடலிலே தூக்கிப்போடுகிறேன். கடலுக்கடியில் மூழ்காமல் தப்பினீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் பிசாசுகள் என்பதை கண்டுபிடித்துவிடுவேன். இல்லை மூழ்கினீர்கள் என்றால் மனிதர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்”

“நாங்கள் கடலுக்கடியில் மூழ்கி இறந்துபோனால், அதன்பின்னர் மனிதர்கள் என்று நிரூபித்தும்தான் என்ன பயன்?”

சூனியக்காரி சிரித்தாள்.

“அது உங்கள் பிரச்சனை. எனக்கு நீங்கள் பிசாசுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதே மிக அவசியம்”

அந்தத்தாய் யோசித்தாள்.

“அப்படியானால் நான் மாத்திரம் கடலிலே குதிக்கிறேன். நான் மூழ்கி இறந்தபின்னே என் மகனை உயிருடன் விட்டுவிடு”

சூனியக்காரி சம்மதிக்கவே, அந்தத்தாய் தன் மகனை கட்டியணைத்து உச்சிமோர்ந்துவிட்டு, கடலிலே குதித்து மூழ்கிப்போனாள். அவர்கள் மனிதர்கள்தான் என்பதை உறுதிப்படுத்திய சூனியக்காரியும் திருப்தியுடன் மறைந்துபோக, இப்போது தாயை இழந்த அந்தச் சிறுவன் படகிலே தன்னந்தனியனாக நிற்கிறான். சுற்றிவரக் கடல். தூரத்தே இரண்டு மலைகள். இடது பக்கம் இரத்தக் காட்டேறி. வலதுபக்கம் கொள்ளிவாய்ப் பிசாசு.

படகிலே ஓட்டை விழுந்துவிட்டது.

சிறுவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்போது வேறு வழியில்லை. இரண்டில் ஒரு மலையை நோக்கி அவசர அவசரமாக சென்றே தீரவேண்டும். ஒரு பிசாசு உயிரையே எடுத்துவிடும். அடுத்தது கண்ணைத் தோண்டிவிடும். உயிரை இழந்துவிட்டாலும் பயனில்லை. கண்ணை இழந்தாலும் கடலிலே தனியாக அப்பாலே எங்கேயென்று அவன் போவான்? வேலையில்லை. சிறுவன் யோசித்தான். படகின் துவாரத்தினூடாக கடல் தண்ணீர் வளவளவென உள்ளே ஓடத்தொடங்கியது. நிறையநேரம் தாக்குப்பிடிக்கமுடியாது.

ஒரு தீர்க்கமான முடிவுடன் அந்தச்சிறுவன் மிக வேகமாக துடுப்பை வலிக்க ஆரம்பித்தான்.

**************************

முடிவு எடுத்தல் (Decision Making)

மேற்சொன்ன இந்தக்கதையில் அந்தச்சிறுவன் முடிவு எடுத்தலில் மூன்று விதமான நிலைகளை அடைகிறான்.

முதலாவது, அந்த மலைகள் இரண்டிலுமே இருக்கின்ற பிசாசுகளுமே கொடூரமானவை என்று அறிகையில் அந்தத் தாய்க்கும் மகனுக்கும் ஏற்படும் சங்கடமான நிலை.  எந்த மலைக்குப் போனாலும் அவர்களுக்குப் பயனில்லை. No win situation. படகை எந்த மலைப்பக்கம் ஓட்டினாலும் சிக்கல் என்ற நிலையில் பேசாமல் அங்கேயே கடலிலே தத்தளிக்க முடிவெடுக்கிறார்கள். ஆனால் ஒரு தீர்க்கமான திட்டம் இல்லாமல் அங்கேயே கிடந்தால், என்றோ ஒருநாள் ஒரு பிரச்சனை ஏதோ ஒரு உருவில் வந்தே தீரும். செஸ் ஆட்டத்திலே zugzwang என்று ஒரு நிலை இருக்கிறது. அதாவது இருக்கும் நிலையில் எந்தக்காயை நகர்த்தினாலும் பாதகம்தான். அதற்காக நகராமல் இருக்கமுடியாது.

தொடர்ந்து அங்கேயே நிலைகொண்டதால் இவர்களுக்கு சூனியக்காரி வடிவில் சிக்கல் வருகிறது.

அங்கே இரண்டாவது முடிவெடுக்கும் நிலை. அந்த சூனியக்காரி செய்த சோதனையிலிருந்து உயிர்தப்புவது. சூனியக்காரி அவர்கள் மனிதர்கள்தானா என்று பரிசோதித்தமுறையும் எந்தப்பயனுமில்லாதது. அதற்கு கொன்றேபோடலாம். மூழ்கினால் உயிர்போகும். மிதந்தாலோ அல்லது நீந்திக்காட்டினாலோ இது பிசாசு என்று நினைத்து சூனியக்கிழவி கொன்றுவிடுவாள். இரண்டுமே ஒன்றுதான். ஆக மகனாவது பிழைக்கட்டும் என்று அந்தத் தாய் இறந்துபோகிறாள். அதிலுமே இழப்புத்தான்.ஆனாலும் புத்திசாலித்தனமான முடிவு.

The lesser of two evils_e2e98a_4912688

இறுதிநிலை. இயலாக்கட்டத்தில் எடுக்கும் நிலை. மகன் தனித்துவிடப்படுகிறான். படகில் ஓட்டை விழுந்துவிட்டது. இப்போது அவன் ஒன்று மூழ்கி இறந்துபோகவேண்டும். அல்லது ரிஸ்க் எடுத்து இரண்டு மலைகளில் ஒன்றை தெரிவு செய்யவேண்டும். எந்த மலையை தெரிவு செய்வது? இரண்டுமே மோசமான பிசாசுகள் வாழும் மலைகள்தான். ஒன்று உயிரை எடுக்கும். மற்றையது கண்ணைப்பறிக்கும். அந்தச் சிறுவன் இருக்கும் நிலையில் கண்ணை இழந்து உயிர் வாழ்ந்தும் பிரயோசனமில்லை. அவன் ஒரு முடிவு எடுக்கவேண்டும். ஒன்றைத் தெரிவு செய்யவேண்டும். Lesser of the evils, இரண்டிலுமே கொஞ்சம் குரூரம் குறைந்த பிசாசை தெரிவு செய்யவேண்டும்.

எது குரூரம் குறைந்தது? உயிரைப் பறிக்கும் இரத்தக் காட்டேறியா? கண்ணைப் பறிக்கும் கொள்ளிவாய்ப் பிசாசா?

*******************************

2015 இலங்கை ஜனாதிபதித் தேர்தல்.

images

ஈழத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ் வாக்காளரும் இப்போது அந்த சிறுவனின் நிலையையே கிட்டத்தட்ட அடைந்திருக்கிறார்கள். என்ன முடிவு எடுப்பது என்கின்ற பெருங்குழப்பம். இலங்கை வரலாற்றிலேயே தமிழர் தரப்பைப்பற்றி பேசினாலே தோற்றுவிடுவோம் என்ற அளவில் சிங்கள அரசியலில் துவேசம் கொடிகட்டிப் பறக்கிறது. இதுநாள் வரையில் நிகழ்ந்த அத்தனை தேர்தலிலும் முக்கிய பிரச்சனையாக இருந்த தமிழர் தேசியப்பிரச்சனையும் தீர்வுத்திட்ட முன் வரைவுகளும் இந்த தேர்தலில் கிஞ்சித்தும் இல்லை. சுதந்திர இலங்கையில் தமிழர் அரசியலின் மிகவும் கீழ்மையான தாழ்வுப்புள்ளி இது.  2009 தேர்தலில்கூட மகிந்த ஏதோ உப்புமா தீர்வை முன்வைத்தவர். இவ்வளவு கீழே விழுவோம் என்று டக்ளஸ் உட்பட எந்தத் தமிழனும் நினைத்திருக்கமாட்டான். அவ்வாறான சூழலிலேயே தமிழர்கள் பெரும் குழப்பத்தோடு தேர்தலை சந்திக்கிறார்கள். இந்த குழப்பத்தை ஒரு அரசியல் ஆய்வாளராக இல்லாமல், ஒரு சாதாரண பொதுமகனாக ஆராய முயற்சிக்கிறேன்.

இந்த முயற்சியில் சில முன் புள்ளிகளை இங்கே தெரிவிக்கவேண்டும்.

 • நான் ஈழத்தில் வாழ்பவனல்லன். புலம்பெயர்ந்து அடுத்தவேளை சாப்பாட்டுக்குப் பிரச்சனை இல்லாமல் வாழும் நடுத்தர வருமானம் உள்ளவன். நான் ஈழத்தில் வாழும் எல்லா வாக்காளர்களின் மன நிலையையும் பிரதிபலிப்பது சாத்தியமற்றது. புலப்பெயர் தமிழர் உள்நாட்டு அரசியலில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று எண்ணுபவராக நீங்கள் இருந்தால், இந்தக்கணமே இதை குளோஸ் பண்ணுவது மன சஞ்சலம் ஏற்படுவதை குறைக்கும்.
 • மைத்திரிபால சிறிசேனா அரசாங்கத்திலிருந்து பிரிந்து பொது அணி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதும் என்னையறியாமல் உள்ளூற ஒரு மகிழ்ச்சி உருவானது. மகிந்த வீட்டுக்குப்போனால் எவ்வளவு நல்லம் என்று ஆழ்மனது அறிவுக்குத்தெரியாமல் புளகாங்கிதப்பட்டது. அதன் தாக்கம் சிலவேளைகளில் இந்தக் கட்டுரையில் வெளிப்படலாம். படாமல் பார்த்துக்கொள்ள முயன்றிருக்கிறேன்.

இனி தேர்தல் களத்துக்கு வருவோம். 2015ம் ஆண்டு ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னாலே நான்கு தெரிவுகள் இருக்கின்றன.

 1. தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துதல்.
 2. தேர்தலைப் புறக்கணித்தல்/ வாக்குச்சீட்டை செல்லுபடியற்றதாக்குதல்.
 3. மகிந்தவுக்கு வாக்களித்தல்.
 4. மைத்திரிக்கு வாக்களித்தல்.

இதிலே தமிழ் வேட்பாளர் ஒருவரை நியமித்தல் என்பது இப்போது காலம் கடந்த விடயம் என்பதால் அதனை தவிர்த்துவிடுவோம். ஏனையவற்றைக் கொஞ்சம் பார்க்கலாம்.

தேர்தலைப் புறக்கணித்தல்/ வாக்குச்சீட்டை செல்லுபடியற்றதாக்குதல்

வட அயர்லாந்து சர்வஜன வாக்கெடுப்பு முதல் 2014 தாய்லாந்து தேர்தல்வரை ஏகப்பட்ட தேர்தல்களில் ஒரு இனமோ, கட்சியோ, மதமோ பல்வேறு தருணங்களில் தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றன. 2005 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில்கூட புலிகள் அந்த முடிவை எடுத்திருந்தனர். மக்கள்மீதும் அந்த முடிவு திணிக்கப்பட்டது. புலிகள் முடிவு எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்று எத்தனைபேர் வாதாடினாலும், இராஜதந்திர ரீதியில் புலிகளுக்கு அந்த முடிவு ஒரு மரண அடி என்பதை எவரும் மனதளவினேலும் மறுக்கமாட்டார்கள். அதனால் இந்தத் தேர்தலில் அதே தவற்றைச் செய்யக்கூடாது என்று ஒரு கருத்து இருக்கிறது.

Boycott

தேர்தலைப் புறக்கணிப்பதாலோ, வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவதாலோ கிடைக்கும் இலாபங்கள்.

 • வடக்கு கிழக்கு மக்கள் எந்த சிங்களத் தலைமைகள் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. அவர்கள் தாங்கள் எப்போதுமே தனியான, சுய நிர்ணய உரிமை உள்ள இனம் என்று பட்டவர்த்தனமாக உலகுக்கு தெரியப்படுத்தலாம்.
 • என்னதான் அபிவிருத்தி, அமைதி என்று கூச்சலிட்டாலும் அது ஒன்றும் வடக்கு கிழக்கு மக்களிடம் எடுபடவில்லை. அவர்கள் கோருவது நிலையான அரசியல்தீர்வே என்பதை முன்வைத்து தமிழ் கட்சிகள் அரசியலை முன்னெடுக்கலாம்.
 • இன்னொரு தேர்தலில் சிங்களக் கட்சிகள் சரி சமன் என்ற நிலையில் இருக்கையில், வடக்குக் கிழக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவர்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தே தீரவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தலாம்.
 • முக்கியமாக எங்கள் பிரச்சனைகளை கணக்கெடுக்காத, இனப்பிரச்சனை என்ற ஒன்றே நாட்டில் இல்லை என்ற ரீதியில் அரசியல் செய்யும் அத்தனை சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் தெளிவான செய்தியைக் கொடுக்கலாம்.

தேர்தலைப் புறக்கணிப்பதாலோ, வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவதாலோ கிடைக்கும் நட்டங்கள்.

 • புறக்கணித்து புதிதாக எதனை சாதிக்கப்போகிறோம்? 77ம் ஆண்டு தேர்தலிலேயே மக்கள் தம்முடைய மனநிலையை தெளிவாகக் காட்டிவிட்டார்கள். பின்னர் வாக்களித்த ஒவ்வொரு தேர்தல்களிலும் அதனை நிரூபித்தார்கள். 2005இல் வாக்களிக்காமல் நிரூபித்தார்கள். மீண்டும் மாகாணசபைத் தேர்தலிலும் அதனையே சொன்னார்கள். மக்கள் மீண்டுமொருமுறை அதனை செய்யவேண்டிய அவசியம் என்ன? முன்னர் செய்தபோது விளைந்த பலன்தான் என்ன? எவனாவது கணக்கெடுத்தானா?
 • ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்பது நடக்கப்போவதில்லை. கிழக்கில் முஸ்லிம்கள் மைத்திரிக்கே எப்படியும் வாக்களிப்பார்கள். புறக்கணிப்பைவிட மகிந்தமீது காட்டவேண்டிய எதிர்ப்பு முஸ்லிம்களுக்கு அவசியமானது. தமிழர்களில் பெரும்பான்மையோர் புறக்கணித்தாலும் எப்படியோ மகிந்தவுக்கும் டக்ளசுக்கும் போடப்போகிறவன் போட்டே தீருவான். அந்த நிலையில் நாடு முழுதும் நீலமாகத் தெரியும். அப்படியே மைத்திரி ஆங்காங்கே தெற்கில் வென்றாலும், வடக்கில் நீலம் மட்டுமே எஞ்சும். அதற்குப் பின்னர் கூட்டமைப்பு போலவே, “இது மக்கள் தந்த ஆணை” என்று மகிந்தாவும் கோத்தாவும் வடக்கிலே கூத்தாடுவார்கள். தேவையா?
 • சர்வதேசம் தமிழர்களின் எண்ணத்தைப் புரிந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமென்பது சாத்தியமில்லாத ஒன்று. ஐம்பதுவருட பகையாளியான கியூபாவோடே அமேரிக்கா ஒப்பந்தம் புரிந்துவிட்டது. இப்போதுள்ள அரசியல் நிலையில் ஒரு அரசாங்கத்தை நெறிகளின் அடிப்படையில் எதிர்க்க எந்த நாடும் முன்வராது. ஆக இந்த அரதப் பழசான வாதங்களை விட்டுவிட்டு தமிழ்மக்கள் நடைமுறை நிலைவரத்தை அறிந்துகொள்வது முக்கியமாகிறது.
 • வெல்லப்போகும் கட்சி இனிமேல் தமது வெற்றிக்கு தமிழரின் ஆதரவு தேவையில்லை என்பதை புரிந்துகொள்ளும். அடுத்த தேர்தலில் இனத்துவேஷம் இன்னமும் அதிகரிக்கும்.

தேர்தலை புறக்கணிக்கத்தான் வேண்டுமென்ற ரீதியில் குமாரவடிவேல் குருபரனும், நண்பன் பாலாவும், தமிழ் சிவில் சமூகமும் அண்மைக் காலமாக கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர் (அல்லது பகிரத்தொடங்கியுள்ளனர்). அதற்கு அவர்கள் வலுவான காரணங்களை முன்வைத்து விளக்கம் கொடுப்பது அவசியமாகிறது. குறைந்தபட்சம் இங்கே எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதிலாவது சொல்லவேண்டும். மேற்கண்ட கதையில் சிறுவன் கொள்ளிவாய்ப் பேயிடம் சென்றாலும் விமர்சிக்கலாம். இரத்தக் காட்டேறியிடம் சென்றாலும் விமர்சிக்கலாம். கடலில் அப்படியே கிடந்தது மூழ்கினாலும் விமர்சிக்கலாம். ஆனால் இப்படியான இக்கட்டான அரசியல் சூழ்நிலையில் trade-off முடிவுகள் எடுப்பதே கடினம். ஏனென்றால் எந்த முடிவிலும் பாதகமான விளைவுகளே அதிகமாக இருக்கின்றன. அந்த விளைவுகளுள் எது குறைந்த விளைவுகளைத் தருமென்று பார்க்கவேண்டும். The lesser of the evils. அதனால் எது சிறந்த முடிவு என்பதை உணர்ச்சி வசப்படாமல் சொல்லவேண்டியது குருபரன் போன்ற அரசியல்/சமூக விழிப்புணர்வாளர்களுக்கு அவசியம்.

எல்லாவற்றையும் விமர்சித்துக்கொண்டிருந்துவிட்டு இறுதியில் “I told you so”  என்று சொன்னால் அது தப்பாட்டம்.

மகிந்த ராஜபக்ச

நோயல் நடேசன். புலி எதிர்ப்பாளராகவும், மகிந்தவின் ஆதரவாளராகவும் அறியப்படுபவர். நானறிந்த வகையில் ஈபிடிபி, கருணா போன்ற ரவுடிக்கட்சிகள் தவிர்த்து படித்த தமிழர்கள் மத்தியிலிருந்து மகிந்தவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர் என்ற ரீதியில் அவர் பார்வையையும் இங்கே பதிவது முக்கியமாகிறது. அவர் தன்னுடைய முகநூலிலே இப்படி தெரிவித்திருந்தார்.

“இலங்கை அரசியலில் அரைவாசி சிங்களவர்கள் எப்பொழுதும் ஆளுவார்கள். பெரும்பான்மையான இஸலாமியர் ஆடசியன் பக்கத்தில் இருப்பார்கள். தலைவர் தொண்டமான் புண்ணியத்தால் மலையகத் தமிழர்கள் ஆட்சியோடு இருக்கப்பழகிக்கொண்டார்கள். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் தொடர்ச்சியாக வானரங்களைத் தலைமையாக வைத்திருப்பதால் எதிர்க்கட்சியாக இருப்பது மட்டுமல்ல தோற்பவர்களுக்கே தங்கள் வாக்குகளை கொடுத்துவிட்டு சூப்பின கொட்டைககூட கிடைக்காமல் தாங்கள் இராஜதந்திரம் நிறைந்தவர்கள் மூத்தகுடி ஆண்ட குடி என வாய்சவடால் அடிப்பார்கள்”

நடேசனின் அடிப்படைக் கருத்து, நாங்கள் சிறுபான்மையினர். தொண்டமான் போன்றும் முஸ்லிம்கள் போன்றும் அரசோடு ஒண்டியே வாழவேண்டும் என்பது. எனக்கு என்ன விளங்கவில்லை என்றால், அப்படியே ஒன்றாக வாழ்ந்து மலையகத் தமிழரும், முஸ்லிம்களும் எதைக் கிழித்தார்கள்? மலையகத் தமிழர் இதுநாள் வரைக்கும் நிமிரவேயில்லை. முஸ்லிம்கள் நிலையோ இன்னமும் மோசம். ஏறத்தாழ வாலைச் சுருட்டிக்கொண்டிருக்கும் நிலையே முஸ்லிம்கள் நிலை. தமிழர் நிலையோ அப்படியல்ல. தம் உரிமைக்காக குரல்கொடுத்து சமஷ்டிவரைக்கும் தீர்வு எடுக்கும் நிலைக்குப் போனவர்கள். இராஜதந்திர ரீதியில் புலிகள் விட்ட பல தவறுகள், அவர்கள் கட்டிய சாம்ராஜ்யம் அவர்களோடே சேர்ந்து அழிந்துபோகக் காரணமானது. அதனால் தமிழ் மக்கள் செய்த அரசியலே தவறு என்று சொல்வது சரியாகாது. எங்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தோமானால், ஒரு சில தவறுகள் தவிர்க்கப்பட்டிருந்தாலேயே இன்றைக்கு தமிழரின் அரசியல் நிலைமை வேறு லெவலில் இருந்திருக்கும். ஆகவே தொண்டமான், அஷ்ரப் கொள்கைகள்தான் எமக்கு ஒரே வழி என்பதில் உடன்பாடில்லை. கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் முதல் கேள்வியோடு பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு திருப்திகொள்பவர்கள் தொண்டமானும் ஹக்கீமும். அரைக்கோடி வென்றபின்னரும், இல்லையென்று நின்று கடைசிக்கேள்விவரை சென்று அதில் தோற்றதால் எந்தப் பரிசையை அடையாதவர்கள் தமிழர்கள். அதற்காக அவர்கள் கடைசிக்கேள்விக்கு முதல்கேள்விவரை பதில் சொன்னவர்கள் என்பதை இலகுவில் மறந்துவிடக்கூடாது.  

புலிகள் மீதான வெறுப்பும். மகிந்த மீதான அபிமானமும் தமிழரின் அரசியல்பாதையை மாற்றுவதற்கான போதிய காரணிகள் அல்ல.

mahinda9-436x360

இப்போது மகிந்தவை ஆதரிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்.

 • மகிந்த தலைகீழாக நின்றும் இந்தத் தேர்தலில் வென்றே தீருவார். மகிந்தவும் அவருடைய குடும்பமும் ஆட்சியில் இருக்கும்வரைக்குமே அத்தனைபேரும் ஆமா போடுவார்கள். ஆட்சிபோனால் அடுத்தகணமே அடித்துக் கலைப்பார்கள். அது மகிந்த, கோத்தா கோஷ்டிக்கு நன்றாகவே தெரியும். அதனால் தலையைக் கொடுத்தேனும் வெல்லவே முயற்சி செய்வார்கள். அப்படியே தோற்கடிக்கப்பட்டாலும், இராணுவ ஆட்சி வருவதற்கே சந்தர்ப்பமுண்டேயொழிய மைத்திரி ஜனாதிபதியாவதற்கு சாத்தியம் மிகவும் குறைவு. வெல்லும் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தால், அவர் வென்றபின்னர் வடக்கு கிழக்கு மீதான் கெடுபிடி குறைய சந்தர்ப்பம் உண்டு. நோயல் நடேசன் வைக்கின்ற தர்க்கமும் இதுவே.
 • கூட்டமைப்பும் தமிழ் மக்களும் ஆதரவளித்தால், டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்ற ஒட்டுக்குழுக்களின் செல்வாக்கு குறையவும் சந்தர்ப்பம் இருக்கிறது.
 • சோறா, தீர்வா என்கின்ற எளிமையான டக்ளஸ் ரக கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

மகிந்தவை ஆதரிப்பதால் கிடைக்ககூடிய தீமைகள்.

 • இன்னொரு ஆறு வருடங்கள். வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி. புத்த கோயில்கள். சிங்கள மயமாக்கல். 95ம் ஆண்டு பிறந்த தலைமுறைக்கு இன்னமும் ஆறுவருடங்களில் இருபத்தாறு வயதாகிவிடும். புத்தம் புதுத் தமிழ் தலைமுறை. நிஜமான நம் அடையாளங்கள் மேலும் தொலைந்துபோய், புதிய அடையாளங்கள் உருவாக்கப்பட்டு, அந்த அடையாளங்களிடையே வளரும் தலைமுறை. மிக இலகுவாக எம்மை தொலைத்துவிடுவோம். மகிந்த, கோத்தா போன்றவர்கள் இந்த விசயத்தில் கொண்டிருக்கும் உறுதியும் போடும் திட்டங்களும் மிரட்டுகின்றன. வீராவேசம் பேசி பயனில்லை. படித்தவர்கள் அதிகமாக நாட்டை விட்டு வெளியேறவே முயல்வர். கட்டமைப்பு முற்றாக குலைந்துவிடும். வசாவிளான் என்ற மொத்த ஊருமே இங்கே மெல்பேர்ணிலும், டோராண்டாவிலும் இருக்கிறது. நிஜமான வசாவிளானில் ஆர்மி இருக்கிறான். கமம் செய்கிறான். அடுத்ததாக அவன் குடும்பம் வந்து குடியேறும். கட்டாய குடியேற்றமாகவே இருக்கவேண்டியதில்லை. வெற்றுக்காணிகளும், வளங்களும், ஆளணித் தேவைகளும் இருந்தால், வெள்ளம் பள்ளத்தை நோக்கி ஓடுவதைப்போல தெற்கிலிருந்து மக்கள் வருவார்கள். தடுக்கமுடியாது.
 • ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வு என்று தீர்மானித்தால், அப்படியான ஒரு தீர்வுக்கு நாட்டில் அடிப்படை ஜனநாயகம் என்று ஒன்று இருக்கவேண்டும். மகிந்தவும் அவரின் குடும்பமும் நாட்டை சிரியா, வட கொரியா பாணி ஆட்சிமுறைக்கே இட்டுச்செல்கிறார்கள். மகிந்தவின் மகன் பக்கிங்காம் மாளிகையிலிருந்து குதிரை வாங்கி இலங்கையில் ஒட்டுகிறானாம். அவனிடம் தனியாக ஒரு ஹெலிகப்டரே இருக்கிறது. சர்வாதிகாரிகளே அசரும் வண்ணம் நாட்டின் ஆட்சி போய்க்கொண்டிருக்கிறது. இலங்கை நாட்டுக்கு ஜனநாயகம் மீளவும் வருவது அவசியமாகும். அந்த அவசியத்தை தமிழர்களும் நிராகரிக்கமுடியாது. ஜனநாயகம் இல்லாத நாட்டில் சுயநிர்ணய உரிமை, தேசியம் என்ற விஷயங்களை ஆயுதப்போராட்டம் இல்லாமல் பேசவே முடியாது. ஆயுதப்போராட்டம்? Forget it. இனியும் யாரும் எங்களுக்காக சாகவேண்டாம். நிறைய இழந்துவிட்டோம்.
 • வெகு சீக்கிரம் கூட்டமைப்பு உடையும். மகிந்தவால் கை வைக்கமுடியாத ஒரே கட்சி கூட்டமைப்புத்தான். அது கூட்டாக இருப்பதற்கும் ஒரே காரணம் மக்களின் ஒற்றுமையே ஒழிய கூட்டமைப்பின் ஒற்றுமை அல்ல. எப்போது மக்கள் மகிந்தவுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்று தெரியவருகிறதோ அடுத்தகணமே கூட்டமைப்பின் முக்கிய புள்ளிகள் பாய்ந்துவிடுவார்கள். தமிழனத்தில் கொஞ்சமேனும் மூக்குடைபட்டு நிற்கும் ஒற்றுமை அரசியல் சிதறிவிடும்.

 

மைத்திரிபால சிறிசேனா

நிறைவேற்று ஜனாதிபதிமுறையை ஒழிப்பேன் என்று சொன்னாலும் பொது அணியின் ஒரே பொதுக்கொள்கை ஆட்சிமாற்றமே. முதலில் மகிந்தவை ஒழித்துக்கட்டுவோம், பின்னர் ஏனையவற்றைப் பார்ப்போம் என்பதே அவர்கள் அடுத்தடுத்துப் போடும் ஒப்பந்தங்கள் சொல்லுகின்ற விஷயம். சம்பந்தமே இல்லாத கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நிற்கின்றன. ஆட்சிமாற்றம் என்ற ஒன்று நடந்தால், அதன் பின்னர் என்ன என்பதற்கு யாருமே பதில் சொல்லமுடியாத நிலை. காரணம் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சி பிரதான கட்சியாகிவிடும். மைத்திரி, சந்திரிகா குழு சுதந்திரக் கட்சியாகிவிடும். மீண்டும் குழாயடிச் சண்டை. மகிந்த மட்டும் இருக்கமாட்டார். அவ்வளவே. மைத்திரி அளவுக்கு மிகவும் பலவீனமான தலைவரை இலங்கை அரசியல் கண்டிருக்க சந்தர்ப்பமில்லை. ரணில், சந்திரிகா, பொன்சேகா, ஜேவிபி, உறுமய என்று ஏராளம் தலைமைகள். முன்னாள் நீதியரசர் கூட வசனம் பேசுகிறார். பொது அணியில் ஆளாளுக்கு தம்முடைய கொள்கைகளை சொல்கிறார்கள். மகிந்த என்ற ஒரு குவியம் மட்டுமே இவர்களின் இணைப்புப்புள்ளி.

maithripala_sirisena

மைத்திரிக்கு ஆதரவளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

 • ஆட்சி மாற்றம். அதுவே எமக்குக் கிடைக்கக்கூடிய ஆகச்சிறந்த நன்மை. ஒரு சர்வாதிகாரியினதும் அதன் குடும்பத்தினதும் ஆட்சியிலிருந்து இலங்கை தப்பிக்கும். நாட்டில் மீண்டும் ஜனநாயகம் உருவாகும். ஜனநாயகத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் சம்பந்தம் கிடையாது. உதாரணத்துக்கு இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடு. ஸ்திரமான நாடா என்றால் இல்லை. சிங்கப்பூர் ஸ்திரத்தன்மையான நாடு. ஜனநாயக நாடா என்றால் இல்லை. சிங்கப்பூரின் ஒரேயொரு நல்லவிஷயம், ஆட்சியாளர்கள் சுயநலமிகளாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்றும் நினைப்பதுதான். ஆனால் இலங்கை போகும் போக்கில் ஜனநாயக விழுமியங்கள் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை. போலீஸ், இராணுவம், நீதி, தனி மனித சுதந்திரம், பத்திரிகைத்துறை என்று எல்லா இடங்களிலும் விஷம்போல இந்தச்செடி பரவிவிட்டது. இப்போது அறுக்காவிட்டால், இன்னமும் ஆறுவருடங்களில் நினைத்தே பார்க்கமுடியாத நிலை வரலாம்.
 • வடக்கு கிழக்கில் நடைபெறும் கட்டாய குடியேற்றம், இராணுவ ஆட்சி போன்றவற்றின் பரம்பல் குறையலாம். குறைந்தபட்சம் அதன் வேகம் குறையும். சந்திரிகா, ரணில் போன்றவர்கள் வலதுசாரி கொள்கைகளிலும், மேற்கத்திய சிந்தனைகளிலும் மிதமிஞ்சிய நம்பிக்கை கொண்டவர்கள். தமிழர்களை இவ்வளவு வெளிப்படையாக, யாருக்கும் பயப்படாமல் அடக்கியாள முயல்வார்களா என்பது சந்தேகமே. தமிழர்கள் ஓரளவுக்கேனும் மூச்சுவிடும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஓரளவுக்கு தமிழர்களாலேயே வடக்கு கிழக்கில் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் தற்போதுள்ள கெடுபிடிகள் குறையும். வெளிநாட்டு நிறுவனங்களின் பிரசன்னம் அதிகமாகும்.
 • மைத்திரி வென்றால், அது நாட்டை இராணுவ ஆட்சிக்கே இட்டுச்செல்லும். மகிந்தாவே இராணுவ ஆட்சியாளராக இருப்பார். ஏதாவது ஒரு காரணம் சொல்லலாம். புலிகள் கொடுத்த காசு. அமெரிக்க கொடுத்த காசு. அந்நிய சதி, ஏதாவது காரணம் சொல்லி, மைத்திரியை உள்ளே போட்டு மகிந்த ஆட்சியில் தொடர்ந்து இருக்கலாம். அப்படிப்போனால் நாட்டில் ஜனநாயகம் இல்லாமல்போகும். சீனா மீதான போக்கு அதிகரிக்கும். மேற்கத்திய மற்றும் இந்திய எதிர்ப்பு அதிகமாகும். தொலை நோக்கில் நாட்டின் இந்த ஸ்திரமற்றதன்மை தமிழர்களுக்கு நன்மையையே பயக்கும்.

மைத்திரிக்கு ஆதவளிப்பதால் கிடைக்கும் தீமைகள்.

 • முதலாவது கொள்கை ரீதியானது. நிறைவேற்று ஜனாதிபதி ஒழிப்பு என்பது தமிழர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றா? பாராளுமன்ற அமைப்பு ஒன்றில் அரசாங்கம் விரும்பினாலும்கூட தமிழர்களுக்கு தீர்வுத்திட்டம் என்பது சாத்தியமேயில்லை. பாராளுமன்றத்தை நடத்தவே விடமாட்டார்கள். இந்தியாவில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை, காங்கிரசும், பிஜேபியும் ஆதரித்த நிலையில் சாதாரண சமாஜ்வாதி கட்சி அதனை நிறைவேற்றமுடியாமல் பண்ணியது. இதுதான் யதார்த்தம். அதுவே நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கும் பட்சத்தில் ஒரு தீர்வு என்பதைக் கொண்டுவருவது முடியுமான காரியம். பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எளிது. அதற்கு எந்த சிங்கள ஜனாதிபதிகளும் இசையவில்லை என்பது வேறுவிடயம். ஆனால் அரசியல் அமைப்புப்படி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிமுறை நடைமுறையில் இருக்கும்போதே தமிழருக்கான தீர்வு உருவாக சாத்தியங்கள் அதிகம். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பட்ஜெட்டை பாஸ் பண்ணுவதே முயல்கொம்பாக இருக்கிறது. இந்த விஷயத்தை தமிழ் அரசியல்தலைவர்கள் விரிவாக ஆராயவேண்டும்.
 • மைத்திரி வென்று ஆட்சிக்கு வந்தால், தமிழருக்கு ஏதாவது தீர்வு கொடுக்கவேண்டும் என்ற தேவை அவருக்கு இல்லாமல் போகிறது. என்னுடைய இந்தக் கொள்கைகளுக்குத்தானே நீங்கள் வாக்களித்தீர்கள் என்று அவர் சொல்லக்கூடும். மகிந்தவை வீட்டுக்கனுப்பவே நாங்கள் வாக்களித்தோம் என்று அவருக்கு நாங்கள் அப்போது சொல்லமுடியாது. அரசியல் சட்டத்திருத்தம், ஜனாதிபதி ஒழிப்பு, பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் என்ற சரத்துகளோடு நாசூக்காக மாகாணசபைகளுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரங்களும் தூக்கி எறியப்படும்.
 • மைத்திரியும் அவர்களின் கூட்டாளிகளும் ஒரு கொள்கைவாதிகள் அல்ல. யாரெல்லாம் மகிந்தவுக்கு எதிராக திரும்புகிறார்களோ அவர்களையெல்லாம் சேர்க்கிறார்கள். ஹெல உறுமயவோடு ஒப்பந்தம். சரத் பொன்சேகாவுடன் ஒப்பந்தம். ஜேவிபியுடன் ஒப்பந்தம். தமிழர்கள் சகவாசமே வேண்டாம் என்கிறார்கள். ராஜபக்சவை சரவதேச விசாரணையிலிருந்து காப்பாற்றப்போகிறோம் என்கிறார்கள். என்னதான் சந்திரிகாவும் ரணிலும் முயன்றாலும் இவர்கள் கூட்டணியில் இருக்கும் தீவிர சிங்கள பௌத்தர்கள் இவர்கள் வாயை அடைத்துவிடுவார்கள்.
 • மைத்திரிக்கு வாக்களித்தும் அவர் தோற்றாலும் நட்டமே. மகிந்தவுக்கு தான் தலைகீழாக நின்றாலும் வடக்கு கிழக்கில் தன் காலைப் பாதிக்கமுடியாது என்று தெரியவரும். கொஞ்சம் கொஞ்சமாக இனம்பரம்பல் மாற்றப்படும். வவுனியா வட மத்திய மாகாணத்துக்குள் செல்லும். அல்லது அனுராதபுரம் வட மாகாணத்துக்குள்ளும், பொலனறுவை கிழக்குக்கும் போகும். அடுத்த ஆறுவருடங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் அரைவாசியாகக் குறைக்கப்படும். இது வெறும் appeal to fear கிடையாது. சாத்தியமே.

இப்படி ஒவ்வொரு தெரிவையும் யோசித்தாலும் அது தமிழருக்கு எந்த பயனையும் கொடுக்காது என்றே எண்ணத்தோன்றுகிறது. No win situation. அதற்கு இவ்வளவு காரணங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் என் அறிவுக்கு எட்டியவை மாத்திரமே. வெறுமனே செய்திகளையும் புத்தகங்களையும் வாசிக்கும் எனக்கே இவ்வளவு எட்டுகிறது என்றால், நிஜமான அரசியல் அறிவு உள்ளவர்கள் இதனிலும் பத்து மடங்கு ஆலோசித்திருப்பார்கள். அதனாலேயே அவர்கள் சரியான விளக்கம் கொடுக்கும் கடப்பாடு உடையவர் ஆகிறார்கள்.

எனக்குத் தெரிந்து கூட்டமைப்பு மற்றும் தமிழ் சிவில் சமூகம் இரண்டுமே முக்கியமான அரசியல் சார்ந்த அமைப்புகளாக வடக்கு கிழக்கிலே தொழிற்படுகின்றன. இதிலே கூட்டமைப்பு மைத்திரி மீது ஒரு மென் அபிப்பிராயம் வைத்திருப்பது தெளிவாகிறது. ஆனால் வெளிப்படையாக இன்னமும் சொல்லவில்லை. குருபரன் தீவிரமாக இயங்கும் சிவில் சமூகம், தேர்தல் புறக்கணிப்பு சார்ந்த கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருவதை அறியக்கூடியதாக இருக்கிறது. இவர்கள் இருவருமே இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடை கொடுப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

இவ்வளவு எழுதுகிறாயே. உன் நிலைப்பாடு என்னவென்று கேட்டால், நிஜத்தில் என் நிலைப்பாடு எவருக்கும் முக்கியமானதல்ல. சரியானதாக இருக்கவேண்டிய அவசியமுமில்லை. அதனால் சுத்திவளைக்காமல் நான் சொல்லக்கூடிய பதில் இதுதான்.

vikneswaran-sampanthan

கூட்டமைப்பு, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கக்கூடாது. கொள்கை ரீதியாக இரண்டு வேட்பாளர்களுமே தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களை நிராகரிக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தவேண்டும். ஆனால் ஜனநாயக தேர்தலில் Tactical Voting என்று ஒன்றிருக்கிறது. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றாலும் who is the lesser of two evils என்ற அடிப்படையிலும், மகிந்தவின் கடந்தகால நடவடிக்கை காரணமாகவும் தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களிக்கலாம். அதனை கூட்டமைப்போ, முக்கிய தலைவர்களோ கொள்கை முடிவாக எடுக்காமல், மக்களின் தனிப்பட்ட முடிவுகளாக விட்டுவிடலாம். எப்படியோ யார் என்ன சொன்னாலும் சாதாரண பொதுமகன் தன் மனசு என்ன சொல்கிறதோ அதையே கேட்பான். அதனால் அரசியல் தலைவர்களின் முடிவுகள் ஒரு ரெக்கோர்டுக்காக தேவைப்பட்டாலும் மக்களுக்கு அது வேண்டியதில்லை.

இந்த தேர்தலில் எந்த முடிவு எடுத்தாலும் சாதகங்களை விட பாதகங்களே இருப்பதால், எந்த முடிவும் எடுக்காமல் முடிவு எடுப்பவர்களை விமர்சிப்பதே இப்போது செய்யக்கூடிய மிக எளிதான வேலை. அது வேண்டாம். சிவில் சமூகம் கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் குறை சொல்லுவதையே தம்முடைய அரசியல் ஆக்காமல், இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பயன்படுத்தி மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். சொல்லப்போனால் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்களிடமே விட்டுவிட்டு அவர்களுக்கு நிலைமையையும் தமிழர் அரசியலை எடுத்துச் சொன்னாலே போதுமானது.

மக்கள் அறிந்திருக்க வேண்டிய மிக முக்கிய விஷயம்.

"When you choose the lesser of two evils, always remember that it is still an evil." – Max Lerner
              

*********************

Contact form