பிடித்ததும் பிடிக்காததும்- 2014

Jan 15, 2015

 

__god_of_the_moon___by_irenukia-d3cz84y

வட ஆர்க்டிக்ட் பிராந்தியத்தில் வசிக்கும் பழங்குடியினரிடையே நிலவும் நம்பிக்கை இது.

எல்லா உயிர்களுக்குள்ளும் அவற்றினது குட்டி வடிவங்கள் உறைந்து இருக்கின்றனவாம். ஒரு மானுக்குள் அதனைப்போலவே ஒரு உக்குட்டி மான். யானைக்குள் ஒரு உக்குட்டி யானை. எறும்புக்கும் ஒரு குட்டி எறும்பு. மனிதனுக்குள் ஒரு குட்டி மனிதன். வெளிப்புற உயிரி இறக்கும்போது உடல் மட்டுமே அழிகிறது. உள்ளே உறையும் குட்டி உயிரி தொடர்ந்தும் வாழுகிறது. அது உடலைவிட்டு பிரிந்து சென்று மேலே வானத்தில் வாழ்கின்ற ஒரு தேவதையின் அடி வயிற்றினுள் அடைக்கலம் தேடுகிறது. நிலா வந்து அதனை மீண்டும் பூமிக்கு அழைத்துச்செல்லும்வரை அங்கேயே காத்திருக்கிறது.

இவர்கள் எல்லோரையும் மீண்டும் பூமிக்கு கொண்டுபோய்ச்சேர்க்கும் பெரும்பொறுப்பு நிலாவுனுடையது. மாதம் முழுதும் வேலை. வேலை. முதல்நாள் மிக மெதுவாக வேலை ஆரம்பிக்கும். நாட்கள் போகப்போக வேலை கடுமையாகி அமாவாசையன்று நிலாவை பிடிக்கவேமுடியாது. வேலைப்பளுவில் காணாமலேயே போய்விடும். பின்னர் தீற்றலாகத் தெரியும். அந்த தேவதையின் வயிறு காலியாகும்வரை அயராது உழைக்கும். எல்லா உயிரிகளையும் பூமிக்கு கொண்டுசேர்த்து முடித்தபின்னர் நிலா வலு உற்சாகமாக இருக்கும். அடுத்தநாள் ஓய்வு. வேலையில்லை. அன்றைக்கு அதனைப்பார்க்கவேண்டுமே. பூரணை நிலவு என்றால் அதுதான். வட்டமாக அழகாக இருக்கும்.

மறுநாள் யாராவது இறந்துபோய் தேவதையின் வயிற்றுக்குள் அடைக்கலம் தேடுவார்கள். நிலா தேய ஆரம்பிக்கும்.

*******************

காலையில் அலுவலகத்துக்கு வருகிறோம். ஒன்பது மணி. மெசினில் கோப்பி அரைத்து, பாலை அதே மெசினில் நுரைக்க நுரைக்க கொதிக்கவைத்து கோப்பி ஊற்றி குடித்தபடியே அலுவலக இருக்கையில் அமருவதற்குள் பதினைந்து நிமிடங்கள் கடந்துவிடும். அடுத்த பதினைந்து நிமிடங்கள் அலுவலக ஈமெயில்கள், மீட்டிங்குகள், இடையிடையே செய்தித்தளங்கள், சமூகத்தளங்கள், மீண்டும் மீட்டிங்குகள் என்று நிமிர்வதற்குள் பன்னிரண்டு மணியாகிவிடும். ஆளாளுக்கு மதிய உணவு இடைவேளைக்கு புறப்பட்டுவிடுவார்கள். நாமும் கூடவே கொண்டுவந்திருந்த சாண்ட்விச்சையோ, புட்டையோ சாப்பிட்டபடி இணையத்தை மேய்ந்து தண்ணீர் குடிக்கையில் பன்னிரண்டரை.

அம்மாளாச்சி என்று சொல்லிக்கொண்டு முதலாவது ஜாவா டெஸ்ட் கேஸை எழுதி புரோகிராம் கோடுக்குள் போகும்போது ஒரு மணி. அப்போதுதான் பரபரப்பு தோன்றும். இன்னமும் நான்கு மணி நேரத்துக்குள் இன்றைக்கென்று யோசித்துவைத்திருந்த வேலையினை முடிக்கவேண்டும். டென்ஷன் வந்துவிடும். காதில் இளையராஜாவையோ, ரகுமானையோ கொழுவியபடி, ஸ்டேடசையும் பிஸியாக மாற்றிவிட்டு மாரத்தான் கோடிங் ஆரம்பிக்கும். மூன்று மணி, நான்கு மணி, ஐந்து மணி. மாலை தேநீர். வீடு போகும் நினைப்பு. குடும்பத்துக்கு கோல். புகை வண்டி டைம் என்று எதுவுமே மனதில் ஏறாது. ஆறு, ஏழு ஆகினாலும் நினைத்த வேலை முடியாவிட்டால் அசையவே மனம் வராது. செய்து முடிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும் கிடந்து முறிவோம். மென்பொருள் வேலை ஒரு போதை. சமயத்தில் பத்து பதினொன்று மணி கூட ஆகிவிடும். புரோகிராமிங் துறையில் பணிபுரியும் அனேகமானவருக்கு இந்த அனுபவம் பரிச்சயமானதாகவே இருக்கும்.

வாழ்க்கை கூட அப்படித்தானோ? நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு புரோகிராம் எழுத வந்தவர்கள் என்று சமயத்தில் எண்ணத்தோன்றுகிறது.

பதின்மங்களில் எதிர்காலம் பற்றிய எந்த பயமும் இல்லாத படிப்பு. அந்த வயதில் எம்முடைய ரோல் மொடல்கள்போல நாங்களும் ஒருகாலத்தில் வருவோம் என்கின்ற நம்பிக்கை சார்ந்த கனவுகளுடன் திரியும் காலம். இருபதுகளிலும் அப்படியே. ஒன்றில் அதிகமாக ஆடுவோம். அல்லது சோம்பேறியாகவிருப்போம். வயதிருக்கிறது என்ற சாக்குப்போக்கு. ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து எல்லா விசயத்தையும் ஒத்திப்போடுவோம். நிறைய தவறுகள் விடுவோம். இருபதுகளுக்கு ஏன் மீண்டும் திரும்ப விளைகிறாய், அந்த பருவமே ஒரு மிசரி(Misery) என்பார் மொரி. முப்பது வயது ஆகும்போது மெல்ல பதட்டம் எட்டிப்பார்க்கும். ஸ்டீவ் ஜொப்ஸ் இந்த வயதில் அப்பிள் கணணியை சந்தைப்படுத்திவிட்டாரே. ஐன்ஸ்டீன் சார்புத்தத்துவத்தை கண்டுபிடித்துவிட்டாரே. ரகுமான் நறுமுகையே வரைக்கும் போய்விட்டார். பாரதியாரோ இன்னும் இரண்டு வருடங்களில் செத்தே போய்விடுவார்.

எதுவுமே கிழிக்காமல் வெட்டியாகக் கழித்துவிட்டோமே.

முப்பத்தைந்து வயதில் அந்த பதட்டம் எகிறிவிடும். இதுவரைக்கும் வளர்ந்துகொண்டிருந்த மரம் இனிமேல் பட்டுக்கொண்டு போகப்போகிறதோ என்கின்ற பதட்டம். பிறக்கும்போது அப்பனும் ஆத்தாளும் கொடுத்த அதே அடையாளத்துடன் அப்படியே இறந்துவிடுவோமோ என்கின்ற எண்ணம். வாழ்க்கையை பிடிப்புக்கேற்ப வாழாமல் வெறுமனே வாழ்ந்து கழித்தோமே என்று இறுதிக்காலத்தில் உழன்றுகொண்டே இருக்கப்போகிறோமோ. என்னிலும் மூத்தவர்கள் பேசுவதைக் கேட்கையில் இன்னமும் சஞ்சலம் வரும். எல்லாம் கலியாணம் ஆகும்வரைக்கும்தான். பின்னர் ஆணியே புடுங்கமுடியாது என்பார்கள். அப்படிப்பேசுவது ஒரு டிரெண்ட் ஆகிவிட்டது. இயலாமைக்கு நாம் கொடுக்கும் விளக்கம். பிள்ளை பெற்றவர்கள் இன்னும் இரண்டு வசனங்களை கூட்டுவார்கள். ஏன் இந்த சலிப்பு? வயோதிபம் கொடுக்கும் அயர்ச்சியா? அல்லது வேலைப்பளுவா? அல்லது திராட்சைப் புளிப்பா? இல்லை ஏறும் நண்டை கீழேயிருந்து இழுத்து விழுத்தும் நண்டுகள் வாழும் டிபிக்கல் யாழ்ப்பாணக் கிணறா?

இருபதுகளைப்பார்த்து இன்னொருமுறை வாழ்ந்தால் எப்படியிருக்கும் என்று நாமும் கழிவிரக்கம் கொள்வோமோ. நாளொரு மேனியும்  பொழுதொரு வண்ணமுமாக என்கின்ற விவரணங்கள் எல்லாம் இனி பொருந்தாத வயது இது. பக்கத்து வயல்கள் எல்லாம் அறுப்புக்குத் தயாராகும்போது அப்போதுதான் எந்திரித்த விவசாயியின் அவசரம் என்னில் தொற்றிக்கொள்கிறது. நான் விதைக்கவேயில்லையே. உழவு செய்து, நாற்று நாட்டு, பருவம் கடந்த மழைக்காக காத்திருந்து…

சனியன் பிடித்த தூக்கமே… தூரப்போ. வேலையிருக்கிறது.

youth-fountain_of_youth-wee-wees-pees-old_man-wda2209_low

ஆங்கிலத்தில் envy என்று ஒரு வார்த்தை இருக்கிறது. நம்மை விட கொஞ்சம் மேலே இருப்பவனில் ஏற்படும் ஒரு லைட்டான, பொறாமைக்கும் அவாவுக்கும் இடையிலான ஒரு உணர்வு. தமிழ் வார்த்தை தெரியவில்லை. இளையவர்களைப் பார்க்கையில் எமக்கு வருகின்ற envy நாம் வாழ்ந்த வாழ்க்கையின் தோல்வி என்பார் ’Tuesdays with Morrie’ நூலில் வருகின்ற பேராசிரியர் மோரி. ஒரு எண்பது வயதுக்காரனிடம் இருபதும் இருக்கிறது, முப்பதும் இருக்கிறது, நாற்பதும் இருக்கிறது, அறுபதும் இருக்கிறது. ஆனால் ஒரு இருபது வயதுக்காரனிடம் அது இல்லையே. அனுபவம் பெருமையான விடயம் அல்லவா. அப்படியானால் ஏன் நாங்கள் இருபதைக்கண்டு அவாப்படுகிறோம்? ஏனெனில் நாங்கள் இருபதை முறையாக வாழவில்லை. முப்பதை முறையாக வாழவில்லை. மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் வாழலாம் என்கின்ற சிந்தனை. ஆனால் அப்படி நினைப்பவன் ஒருபோதும் அதனை செய்யப்போவதுமில்லை. ஏனெனில் அவன் வாழுகின்ற எண்பதை கொண்டாடுகிறானா? இல்லையே? மோர்ரி சொல்லுகின்ற ஒரே அறிவுரை இதுதான்.

“வாழும் பொழுதை கொண்டாடு”

********************

பிடித்ததும் பிடிக்காததும் என்று கடந்த ஐந்து வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கும் தொடர் இது. எனக்கே எனக்கான தொடர்.  என் அப்ரைசல் (appraisal) . இன்னமும் பத்து ஆண்டுகளில், சரியாக ஞாபகப்படுத்தப்படக்கூட முடியாமல் போகப்போகும் ஒரு ஆண்டுதான் 2014. “அந்த மலேசியன் பிளேன் ஒண்டு காணாமல்போய் தேடு தேடென்று தேடினாங்களே, எந்த வருஷம் அது?” என்று ஞாபகப்படுத்தப்படப்போகும் ஆண்டு. இன்றைக்கு வாசிக்கையில் அபத்தமாகவிருக்கும். ஆனால் என்றோ ஒருநாள் மீள வாசிப்பு செய்கையில் அட போடவைக்கும். கூச்சமும் வரும். அழித்துவிடுவோமா என்று எண்ண வைக்கும். மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் வரும் … வந்தால் எழுதமுடியாது. “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்” நூலில் நல்லூர் பற்றிய பதிவில் மேகலா என்ற பெண்ணோடு குமரன் செய்யும் பருவக்காதல் வருகிறது. வாசித்த அன்ரி ஒருவர் “அந்த மேகலா இப்போது என்ன செய்யிறா?” என்று கேட்டார். “என்னோடு பேசிக்கொண்டிருக்கிறா, இப்ப அந்த குமரன் எங்கே?” என்று அவரையே திருப்பிக் கேட்டேன். அந்த அன்ரிதான் மேகலா. அதனை வாசிக்கும்போது அவரே மேகலாவாகிறார். அவரின் குமரன் அவருக்கு ஞாபகம் வருவான். வாசிக்கும்போது அது வராமல் எழுதிய ஏன் முகம் நினைவுக்கு வருமேயானால் கூடிய விரைவில் நான் காணாமல் போவேன்.

 

நேற்று மீண்டும் “Castaway” திரைப்படத்தை மனைவியோடு இருந்து பார்த்தேன். அந்த வொலிபோல் வில்சன் பாத்திரம் ஒவ்வொருமுறையும் உதட்டோர புன்னகையை வரவழைக்கும். சேம் பின்ச். என்னுடைய வில்சன் இந்த படலை. படலைக்கும் எனக்கும் இந்த ஆண்டு முக்கியமானது. என் முதற்குழந்தை பிறந்த ஆண்டு. “என் கொல்லைப்புறத்துக் காதலிகள்”. படலை என்ற ஒரு இணையத்தளம், அதன் வாசகர் பரப்பை நம்பியே அச்சடிக்கப்பட்ட புத்தகம் இது. பதிப்பாளர் மூலம் ஒரு பிரதிகூட விற்பனை செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் இருந்தாலும், அதனை மீறி நானூறு புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன என்பது நம்பிக்கையளிக்கிறது. நூல் பற்றிய விமர்சனங்கள் எல்லாமே வாசகர்களால் தரப்பட்டது. எழுத்தாளர்களால் அல்ல. எழுதியே பழக்கமில்லாதவர்கள் பக்கம் பக்கமாக பேப்பரில் எழுதி ஸ்கான் பண்ணி அனுப்புகிறார்கள் என்றால் வேறென்ன வேண்டும்? மூத்தவர்களாலும் சம வயது எழுத்தாளர்களாலும் இந்தப்புத்தகம் பெரிதாக கவனிக்கப்படாதது வருத்தம் என்றாலும் என்னை விட பத்துவயது இளையவர்கள் வீடு தேடிப்போய் புத்தகம் வாங்குவது அந்த வருத்தத்தை துடைத்தெறிகிறது. புத்தகத்தை ஓரிரு எழுத்தாளர்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்தை கேட்போமா என்று யசோ அக்கா கேட்டார். இதை எழுதியிருக்கிறேன் வாசிச்சிட்டு சொல்லுங்கோ என்று கேட்கும் மனநிலை எனக்கில்லை. “புத்தகங்களை அனுப்பாதீர்கள், தேவையென்றால் நானே தேடி வாங்குவேன்” என்று சுஜாதா ஒரு சமயம் எழுதியிருந்தது மண்டைக்குள் காய்கிறது.

தமிழில் எழுத ஆரம்பித்தபோது “வேலையில்லாமல் நிறைய வெட்டி டைம் கிடைப்பதால் எழுதுகிறாயா?” என்று விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது திரும்பிப்பார்க்கையில் உள்ளூற ஒரு சந்தோசம் பரவுகிறது. இன்றைய தேதியில் படலைக்குள் குறைந்தது இரண்டு சிறுகதைத் தொகுதிகள், கந்தசாமியும் கலக்சியும் நாவல், மூன்று வியாழமாற்றங்கள், நாவலோ நாவல், தீண்டாய் மெய் தீண்டாய், படிச்சதென்ன, கவிதைத்தொகுப்பு என்று பத்து புத்தகங்களேனும் இருக்கின்றன. பதிப்பாளர் தேடவேண்டும். இந்திய புத்தகக்கடைகளில் விற்பனை செய்யக்கூடிய பதிப்பாளர் வேண்டும். விற்பனை செய்யப்பட்ட நானூறு புத்தகங்களில் ஒரேயொரு இந்திய முகவரிக்குத்தான் இதுவரைக்கும் புத்தகம் அனுப்பப்பட்டிருக்கிறது. மார்கட்டிங்கை எழுத்தாளரே ஓரளவுக்குமேல் செய்தால் எள்ளி நகையாடுவார்கள். அதை செய்யக்கூடிய பதிப்பாளர் வேண்டும். மீண்டுமொருமுறை ஏமாற தயாரில்லை.

2015இல் ஒரு உருப்படியான பதிப்பாளர் கிடைப்பார் என்று நம்புகிறேன். இதை விண்ணப்பமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

நூல் வெளியீட்டைத் தவிர்த்து சென்ற வருடம் படலையில் நிகழ்ந்த குறிப்பிடத்தகுந்த விஷயம் “நாவலோ நாவல்” தொடர். ஏழு நாட்கள், ஏழு கதைகள் என்று ஆரம்பித்து நான்கு நாட்கள் கழிந்து ஐந்தாம் நாள் வேலை முடிந்து வீடுபோய் கணணியை திறக்கும்போது நித்திரை சொருகியது. முடியவில்லை. ஜெயமோகனுக்கு கோயில் கட்டி கும்பிடத்தொன்றிய தருணம் அது. மனுஷன் என்னமா எழுதித்தள்ளுது. அதைவிட “பச்சை மா”, “குட் ஷாட்”, “சியாமா”, “சப்புமல் குமாரயாவின் புதையல்”, “தூங்காத இரவு வேண்டும்”, “MH370”, “மண்ணெண்ணெய்”, “ஷண்முகி” என்று எட்டு சிறுகதைகள். ஏழு வியாழ மாற்றங்கள், கவிதைகள், நூல் விமர்சனம் என்று எழுத்து சொர்வைத்தராத ஆண்டு 2014.

மேடைகள் என்று பார்க்கும்போது இரண்டு நூல் விமர்சனங்களில் உரையாற்றியிருக்கிறேன். மற்றும்படி மூன்று கவியரங்கங்கள். கவியரங்கங்கள் சோர்வையே தருகின்றன. நான் பிறவிக் கவிஞன் கிடையாது. கவிதை புனைகின்ற அதீத கற்பனையிலும் வார்த்தை ஜாலத்திலும் ஆரம்பத்தில் இருந்த ஈர்ப்பு இப்போது வெறுப்பாக மாறுகிறது. 2015 இல் எந்த கவியரங்கமும் செய்வதாக இல்லை. கம்பன் கழகம் என்னை இந்த வருடம் மீண்டும் கவிஞனாக்கி கொடுமைப்படுத்தாமல் உரையாற்ற மட்டுமே சந்தர்ப்பம் தரும் என்று நம்புகிறேன்.

எழுத்தில் இந்த வருடம் ஒரு நாவல் ஆரம்பிக்கவேண்டும். ஒன்று சமகால பொலிடிக்கல் திரில்லர். அல்லது ஒருவித வரலாற்று நகைச்சுவை. தீர்மானிக்கவில்லை. சென்ற வருடம் ஆரம்பித்த தீண்டாய் தீண்டாய் தொடர் இரண்டோ, மூன்று அத்தியாயங்களுடன் தேங்கிவிட்டது. இந்த வருடம் ஒரு ஐந்தேனும் எழுதவேண்டும். மற்றும்படி புது வடிவங்களில் நிறைய ட்ரை பண்ணலாம். கொல்லைப்புறத்துக் காதலிகளுக்கு படம் வரைந்த ஜனகனோடு ஒரு கொமிக்ஸ் தொடர் செய்யலாமா என்றும் ஐடியா இருக்கிறது. பார்ப்போம்.

என்னளவில் 2014 இன் என் துயரம் எதுவென்றால், மிகையாக நேரமும் பொழுதும் இருந்தபோதும் அவற்றை வெட்டியாக போக்கியதுதான். எழுத்துக்கும் வாசிப்புக்கும் நிறைய நேரம் செலவிடவேண்டும்.

இனி பிடித்ததும் பிடிக்காதது 2014.

மிகவும் பாதித்த சம்பவம்

அது வடக்கு நைஜீரியாவில் ஒரு குக்கிராமம். பெரும்பாலான ஏழைகள். சில நிலச் சுவான்தார்கள். ஊழல் அரசியல்வாதிகள். காட்டுக்குள் தீவிரவாதிகள். சாதாரண தீவிரவாதிகள் இல்லை. உலகின் அத்தனை கீழ்த்தரமான வசவுகளைச்சேர்த்தாலும் திட்டுவதற்கு போதாமல்போகும் அளவுக்கு தரம் கெட்ட தீவிரவாதிகள். அவர்கள் ஒருநாள் அந்தக் கிராமத்து பெண்கள் கல்லூரியின்  இருநூறு சிறுமிகளை கடத்தி காட்டுக்குள் கொண்டுபோகிறார்கள். அவர்களை பின்னால் வைத்தபடி வீடியோவில் ஒரு தீவிரவாதி கவட்டை சொறிந்தபடி பேசுகிறான். ஏதோ ஒரு கருமாந்திரம் பிடித்த சுதந்திரத்துக்காக போராடுகிறார்களாம். கடத்தப்பட்ட பெண்களில் சிலர் தப்பியிருக்கிறார்கள். நாளைக்கு பலர் என்று ஒவ்வொருநாளும் சிறுமிகளை அந்த தீவிரவாதிகள் கற்பழித்திருக்கிறார்கள். பலரை திருமணம் செய்து அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். இதுவரைக்கும் தெளிவான தகவல் இல்லை. உலகம் ஓரிரு நாள் கவலைப்பட்டுவிட்டு தன்னுடைய ஏனைய கவலைகளுக்கு பின்னர் தாவிவிட்டது. அந்தச்சிறுமிகளுக்கு என்னென்ன நோய் வந்து என்னவெல்லாம் அல்லல்கள் வருகின்றனவோ. இந்த இக்கணம் அதில் ஒரு சிறுமி கால்களை அகல விரித்தபடி விட்டத்தைப் பார்த்து தன் அம்மாவையும் அப்பாவையும் நினைத்து ஏங்கிக்கொண்டிருக்க ஒரு தீவிரவாதி அவளை வல்லுறவு செய்துகொண்டிருக்கலாம் என்ற எண்ணமே பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

போக்கா ஹராம். இந்த வார்த்தையின் அர்த்தமே “மேற்கத்திய கல்வி தடை செய்யப்பட்டது” என்பதாம். இப்படி ஒரு கேலிக்கூத்தான இயக்கப்பெயரை முன்னர் அறிந்ததில்லை. நைஜீரியாவின் இந்த தீவிரவாதிகளும் உலகில் உள்ள ஏனைய தீவிரவாத இயக்கங்கள் மற்றும் தீவிரவாத அரசாங்கங்களும் நாம் இன்னமுமே மிருகங்கள்தான் என்பதை உணர்த்தி நிற்கின்றன.

பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் 2014இன் மீளமுடியா துயரம்.

முக்கிய அரசியல் சம்பவம்

இந்த ஆண்டில் இரண்டு முக்கிய சர்வசன வாக்கெடுப்புகள் ஜனநாயகத்தின் பேரில் நிகழ்ந்தன. ஒன்று ஸ்கொட்லாண்டு வாக்கெடுப்பு. ஜனநாயகம் என்றால் என்ன என்று பிரிட்டன் மீண்டும் எமக்கு பாலபாடம் எடுத்த சம்பவம் அது. மக்கள் என்ன தீர்மானித்தார்கள் என்பது அந்த மக்களுக்கு மாத்திரமே முக்கியமான விஷயம். ஆனால் அந்த வாக்கெடுப்பு நிகழ்ந்தவிதம் உலகம் முழுதுமே படிக்கவேண்டிய விஷயம். ஜனநாயகத்தின் அடிப்படையை பாதுகாக்கும் அந்த சம்பவத்துக்கு ஒரு சல்யூட்.

இதே ஆண்டில் ஜனநாயகத்தின் கேலிக்கூத்தும் நிகழ்ந்தது. அதுதான் கிரிமியா வாக்கெடுப்பு. ஆயுதமுனையில் கிரிமியாவை கையகப்படுத்தி மக்களுக்கு விருப்பமில்லாத இரண்டு தெரிவுகளைக் கொடுத்து வாக்களிக்கச்செய்த வட கொரியா ஸ்டைல் ஜனநாயகம் அது. ஜனநாயகத்தை முழுமையாக கற்றுக்கொண்டு உள்வாங்காமால், வெறுமனே மேலோட்டமாக பின்பற்றும் பிற்போக்கு நாடுகளில் ஜனநாயகம் எந்த அளவுக்கு கேலிக்கூத்தாக்கப்படலாம் என்பதற்கு ரசியா போன்ற நாடுகள் பெருத்த உதாரணங்கள். “நீங்கள் ரசியாவுடன் சேரப் போகிறீர்களா? இல்லை சுதந்திரநாடாகி பின்னர் ரசியாவுடன் செரப்போகிறீர்களா? என்கின்ற இரண்டே கேள்விகள்தான் வாக்குச்சீட்டில் இருந்தன. எதற்கு வாக்களித்தாலும் இறுதியில் ரசியாவுடன்தான் சேரவேண்டும்.

ஒரு புத்திசாலி கொடியவனாகவும் இருக்கும் பட்சத்தில் விளைவுகள் பாரதூரமானவை.புடின் இன்றைய உலகின் மிக அபாயமான நபர்.

விஞ்ஞானம்

விஞ்ஞான கண்டுபிடிப்புகளைப் பொறுத்தவரையில் இரண்டு துறைகள் இப்போதைக்கு முக்கியமானவை.

ஒன்று சூழல் மாசடைதலில் நடைபெறும் ஆராய்ச்சிகள். சூழல் மாசடைதல் சம்பந்தமான விஞ்ஞானத்தில் நாங்கள் இன்னமுமே கற்றுக்குட்டிகள். எப்படி சக்தியை மிச்சம் பிடிக்கலாம், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் கையாலாகாத நிலை விஞ்ஞானத்தில் நாம் இருக்கிறோம். கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதன்மூலம் பூமியின் ஆயுட்காலத்தை சில நூறு ஆண்டுகளே நீடிக்கச் செய்யலாம். எமக்குத்தேவை வெளியேறும் காபனை எப்படி சூழலுக்கு கசியவிடாமல் வேறு வடிவங்களுக்கு மாற்றுவது என்கின்ற விஞ்ஞானம். அதில் தேர்ச்சி அடைந்தால், ஒரு கட்டத்தில் கார்பன் வெளியேற்றம் பெரிதான பிரச்னையை உருவாக்காது.  முதலாளித்துவ கொள்கைதான். சேமிப்பின் மூலம் பணம் சேர்க்கப்போகிறாயா இல்லை புதிய வருமானங்களை ஏற்படுத்தி பணம் சேர்க்கப்போகிறாயா என்றால் முதலாளித்துவம் இரண்டாவதையே மேற்கோள்காட்டும். இந்த விஞ்ஞானத்திலும் அது ஒரு முக்கியமான வழி. புவி வெப்பமடைதலுக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. இந்த வகை ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தகுந்த கண்டுபிடிப்புகள் இந்த ஆண்டு நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் இதெல்லாம் ரைட் சகோதரர்கள் சந்திரனில் காலடி வைக்கும் முயற்சிதான். நிறைய செய்யவேண்டியிருக்கிறது.

cover

இவை பற்றி ஒரு நீட்டி முழக்கிய வியாழமாற்றம் விரைவில் வரும்.

அடுத்த விஞ்ஞான பகுதி குவாண்டம். இதில் செய்கின்ற ஆராய்ச்சிகள் சிறிய விளைவுகளைத் தந்தாலும் நீண்டகாலப்போக்கில் அவை முக்கியமானவை. கனக்க எழுதியாயிற்று. இந்த ஆண்டு குவாண்டம் டெலிபோர்டிங்கில் போட்டோனை 25 கிலோமீட்டர் தூரம் கடத்தியிருக்கிறார்கள். இன்னொரு நூறு ஆண்டுகாலத்தில் இந்த விஞ்ஞானம் வேற லெவலில் இருக்கும்.

ஐடி துறையைப் பொறுத்தவரையில் பெரும் மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. சிலிக்கனுக்கு மாற்றான மெல்லிய ட்ரான்சிஸ்டர் மூலகம் அடுத்த தலைமுறை கணணி வடிவமைக்கு உதவலாம். மற்றும்படி The Next Big Thing என்று எதுவும் நடைபெறவில்லை. என் கணணி மொழியான ஜாவாவின் புது வேர்ஷன்(java 8 புது வடிவமைப்பு என்றே கூறலாம்)  ஜாவா இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு நின்றுபிடிக்க உதவும். பதினைந்து வருடங்களாக ஒரு மொழி அசையாமல் நீடிப்பது என்பது தமிழ் இரண்டாயிரம் ஆண்டுகள் நீடித்ததுக்கு சமானம்.

விளையாட்டு

டொக்கு தீர்ந்துவிட்டது என்று எல்லோரும் நினைத்தாலும் இன்னமும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரை இறுதியோ இறுதியோ விளையாடிவரும் பெடரர் ஒரு ஆச்சரியம். அவர் ஓய்வுபெற்ற வேண்டுமென்றால் உலகில் மூன்று வீரர்களைத் தவிர ஏனைய அனைவரும் ஓய்வுபெறவேண்டும் என்பதை விமர்சகர்கள் உணரவேண்டும். என் சந்தோசம். விளையாடுகிறேன் என்று கலக்கும் தலைக்கு வாழ்த்துகள்.

531470187_216945908

இந்த ஆண்டின் விளையாட்டு என்றால் அது கால்பந்து உலகக்கிண்ணம்தான். அதுவும் பிரேசில் சொந்த மண்ணிலேயே ஜெர்மனியிடம் வாங்கிக்கட்டியது இன்னமும் கண்களில்.

ஆண்டின் சிறந்த வீரர் : முல்லர் (ஜேர்மனி)  

சினிமா

இந்த ஆண்டு மொத்தமாக பார்த்த படங்களே ஐந்துதான். பிகே என்ற அமிர்கானின் படம், இருபது நிமிடங்களில் தூக்கம் வந்துவிட்டது. கோச்சடையான், Noah போன்ற படங்களுக்கு தியேட்டரிலேயே தூக்கம் வந்துவிட்டது. அதையும்தாண்டி நோலனும், பாரிடா பாச்சாவும் மிரட்டுகிறார்கள். பார்த்த ஐந்து படங்களில் இயக்குனர், நடிகரை எல்லாம் தெரிவது ஓவர் என்பதால் அதெல்லாவற்றையும் விட்டுவிடலாம். 2015ம் வருடம் கமல், மணிரத்னம் மற்றும் பால்கி படங்கள் வரவிருப்பதால் வெயிட்டிங்.

பார்த்த படங்கள் : Interstellar, Planet of the apes, Noah, My Name Is Salt, கோச்சடையான், லிங்கா.

பிடித்தபடங்கள் : My Name Is Salt, Interstellar

பிடிக்காத படம் : கோச்சடையான்

 

 

 

இசை

இந்த வருடம் ரகுமானின் இசையில் ஒரு ரவுண்டு பாடல்கள் வந்தன. லிங்காவில் சிறிது அவசரம் தெரிந்தாலும் ஐ, கோச்சடையான், காவியத்தலைவன் என்று தலை பின்னிப்பெடலேடுத்தது.  வருட இறுதியில் வெளிவந்த ’என்னை அறிந்தால்’ கேட்க கேட்க பிடிக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது. இந்த வருடத்தின் ஆச்சரியம் எஸ். ஜே. சூரியா. இசையில் இன்னொரு பாக்யராஜ் என்று நிரூபித்திருக்கிறார்.

reah-sing-1 பிடித்த அல்பம் : காவியத்தலைவன் – ஏ. ஆர். ரகுமான்

பிடித்த பாடல் : மெதுவாகத்தான் – ஏ. ஆர். ரகுமான்

பிடித்த பாடகர் : எஸ்.பி.பி (மெதுவாகத்தான்)

பிடித்த பாடகி : சாஷா திருப்பதி (ஏய் மிஸ்டர் மைனர்)  

ஆச்சரியப்படுத்திய பாடல் : அதோ வானிலே (இசை எஸ்.ஜே சூரியா)

 

 
வாசிப்பு.

சிங்கப்பூரின் இயந்திரவாழ்க்கையிலிருந்து தப்பியோடி ஆஸ்திரேலியா வந்தமைக்கு முக்கிய காரணம் இந்த வாசிப்பும் எழுத்தும்தான். நிறைந்த அமைதியையும் நேரப்பொழுதையும் தரும் நாடு இது. அதுவும் காலை, மாலை ரயிலில் பிராயாணம் செய்யும் இரண்டு மணிப்பொழுதுகள் கொடுக்கின்ற உலகமே தனி. இந்த வாழ்க்கைக்கு நன்றிகள். இன்னமும் சரியாக பயன்படுத்தவேண்டும். புத்தகங்கள் கிப்டாக கிடைக்கும்போது ஒரு குழந்தைத்தனம் தொற்றிக்கொள்கிறது. பிறந்தநாளுக்கு எனக்கு எது பிடிக்கும் என்று மனைவி தேடித்தேடி வாங்கித்தந்த மூன்று நூல்கள் முக்கிய நண்பர்களாயினர். கர்ணனுடைய புத்தகங்களையும் தன்னுடைய மறுவளம் நூலையும் வாசிக்கத்தந்த கிருஷ்ணமூர்த்தி அண்ணனுக்கு நன்றிகள். நோயல் நடேசன் தன்னுடைய மூன்று புத்தகங்களையும் கொடுத்தார். மயூ மனோ கனடாவில் இருந்து நான் கேட்டேன் என்பதற்காக தன் புத்தகத்தை அனுப்பினார். உங்கட புத்தகம் அடுத்த தீண்டாய் தீண்டாய் தொடரில் வருகிறது மயூ. மிக்க நன்றிகள்.

2014 இல் வாசித்த புத்தகங்கள். 

 1. The Lowland – Jhumpa Lahiri
 2. The Alchemist – Paulo Coelho
 3. Digital Fortress – Dan Brown
 4. Playing My Way – Sachin Tendulkar 10568849_10152550121240791_8861409042826808508_n  
 5. Half Girlfriend – Chetan Bhagat
 6. Gota’s War – C.A. Chandraperuma
 7. And Then They Came For Me – Raine Wickramatunga
 8. To Kill A Mocking Bird – Harper Lee
 9. Small Gods – Terry Prachchett
 10. The Monk Who Sold His Ferrari – Robin Sharma
 11. Bad Arguments – Ali Almossawi
 12. Quantum Theory Cannot Hurt You – Marcus Chown
 13. Tuesdays With Morrie – Mitch Albom
 14. கொலம்பசின் வரைபடம் – யோ. கர்ணன்
 15. தேவதைகளின் தீட்டுத்துணி – யோ. கர்ணன்
 16. ஈழத்தமிழர் வரலாறு – செங்கை ஆழியான்
 17. சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு – செங்கை ஆழியான்
 18. அசோகனின் வைத்தியசாலை – நோயல் நடேசன்
 19. வண்ணாத்திக் குளம் – நோயல் நடேசன்
 20. சொல்ல மறந்த கதைகள் – லெ. முருகபூபதி
 21. மறுவளம் – கிருஷ்ணமூர்த்தி
 22. மருதூர்க்கனி கவிதைகள்
 23. மணிபல்லவம் – தீபம் ந பார்த்தசாரதி
 24. ஜலதீபம் – சாண்டில்யன்
 25. சிறுகதை எழுதுவது எப்படி – சுஜாதா
 26. விழித்திருப்பவனின் இரவு – எஸ் . ராமகிருஷ்ணன்
 27. ஒன்றுக்கும் உதவாதவன் – அ. முத்துலிங்கம்
 28. நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை – மயூ மனோ
 29. மாங்கனி - கண்ணதாசன்

பிடித்த நாவல் : To Kill A Mocking Bird (இந்த வருடம்  வாசித்தவற்றுள்), The Lowland (இந்த வருடம் வெளியானவற்றுள்)

பிடித்த சிறுகதை : சடகோபனின் விசாரணைக் குறிப்பு – யோ. கர்ணன் (தேவதைகளின் தீட்டுத்துணி)

பிடித்த அபுனைவு : And Then They Came For Me – Raine Wickramatunga

பிடித்த இணையத்தள பதிவு :  “இரண்டு வானோக்கிய சாளரங்கள்” - ஜெயமோகன்

பிடித்த கவிதை – வாசிப்பு மனிதரை முழுமையாக்கும் -  முரளிதரன் மயூரன் 

 

*****************************

 

பிடிச்சதும் பிடிக்காததும் 2013
பிடிச்சதும் பிடிக்காததும் 2012
பிடிச்சதும் பிடிக்காததும் 2011
பிடிச்சதும் பிடிக்காததும் 2010
பிடிச்சதும் பிடிக்காததும் 2009
பிடிச்சதும் பிடிக்காததும் 2008

Contact Form