ஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - டெம்டேஷன்

Feb 19, 2015

பாகம் 1 : டெம்டேஷன்


 • ஒரு பெரிய பிழை விட்டிட்டன் காந்தாரி.
 • Monday
 • ஹாய் காந்தாரி ... ஆர் யூ தெயார்?

 • Tuesday
 • ரிப்ளை பண்ணன் காந்தாரி. Seen 3.46pm எண்டு காட்டுதே. பார்த்தனி, பதில் அனுப்ப மாட்டியா?

 • Wednesday
 • ரெண்டு நாளா நீ ரிப்ளை பண்ணேல்ல … கடைசில நீயும் என்னை அன்பிரண்ட் பண்ணீட்டியா காந்தாரி?
 • நீ ஞானவடிவேலிண்ட கழுசறை போஸ்டுக்கு லைக் பண்ணுறாய். அவள் சிங்களத்தி, நிரோஷினி பேரேராவிண்ட பிள்ளையை கியூட் எண்டுறாய். நான் ஒருத்தன் மூண்டு நாளா மெசேஜ் பண்ணுறன். நீ ரிப்ளை பண்ணுறாய் இல்ல. நான் உந்த சாட் விண்டோவையே பார்த்துக்கொண்டிருக்கிறன். ப்ளீஸ் காந்தாரி
 • Thursday
 • ... வட்ஸ் அப்?
 • வந்திட்டியா காந்தாரி. தெரியும் நீ வருவாய் எண்டு. நான் ஒரு பெரிய பிழை விட்டிடன் காந்தாரி. என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல … எனக்கு நிறைய கதைக்கோணும் காந்தாரி. நிறைய … மனசுவிட்டு..”
 • கொஞ்சம் பிஸி ... என்ன விசயம்?
 • தெரியும் காந்தாரி … நீ காவேரிக்கு பர்த்டே கார்ட் போட்டு டக் பண்ணுறாய். தண்ணிப்பிரச்சனைக்கு பக்கம் பக்கமா எழுதுறாய். “என்னை அறிந்தால்” பார்க்கிறாய். கருமம் பிடிச்ச கல்பனா வீடியோ ஷேர் பண்ணுறாய். நீ பிஸியா? நான் நம்போணுமா? இழவெடுத்த இந்த சாந்தன் அண்டைக்கு ஒரு பாட்டு போடுறான். நீ போய் “ஐ லவ் ஜிப்ரான்” என்று கொமெண்ட் போடுறாய். அவரும் “மீ டூ” எண்டு ரிப்ளை பண்ணுறார். புடுக்கர். ஜிப்ரான் பாட்டு எனக்கும்தான் பிடிக்கும் காந்தாரி. “கண்ணுக்குள் பொத்திவைப்பேன். என் செல்லக்கண்ணனே வா”. பிடிக்கும். அப்பிடியே ‘மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்’ எண்ட பழைய பாட்டை சேர்த்துப்பாடு. கமிர்கல்யாணி. அட ஒண்டுமேயில்ல காந்தாரி. கூகிள்தான். “kannuggul poththivaippen what raga” எண்டு தேடு. கமிர்கல்யாணி எண்டு வரும். அப்பிடியே சுடச்சுட அடிச்சிவிட்டா போதும். நம்மகிட்ட ஏதோ விஷயம் இருக்கெண்டு உலகம் நம்பிடும்.
  ஆனா இதுகளை பப்ளிக்கா பேஸ்புக்குல போடப்பயம் காந்தாரி. நான் ஏதாவது போட, இன்னொருத்தன் அதே கூகிளில கமிர்கல்யாணிண்ட சுரத்தை கொப்பி பண்ணி எண்ட ஸ்டேடஸ்ல கொமெண்ட் போடுவான். இன்னொருத்தி கமிர்கல்யாணில வந்த தமிழ் பாட்டெல்லாம் அதே கூகிளில உருவிக்கொண்டுவந்து கொமெண்டு போடுவா. கண்டுபிடிச்சிட்டாங்களாம். கூடவே ஐ லவ் கமீர் கல்யாணி. இன்னொரு கேஸ் அவளுக்கு நூலு விடுறத்துகாவண்டி, எண்ட ஸ்டேடஸ் லைக் பண்ணாம அவளிண்ட கொமெண்டை மட்டும் லைக் பண்ணும். ஒருத்தன் நிலா காய்கிறதில ரகுமான் பின்னி இருக்கிறார், ஆனா இளையராஜா பெரிசா கமிர்கல்யாணியை ட்ரை பண்ணேல்ல எண்டுவான். இன்னொருத்தன் அவர் ட்ரை பண்ணாட்டி என்ன, யுவன் நல்லா ட்ரை பண்ணுவார் எண்டுறான். டபிள் மீனிங்காம். அறைஞ்சன் எண்டா அவருக்கு சிங்கிள் டபிளாகும். டபிள் சிங்கிளாகும். இதாலதான் காந்தாரி. வெறுத்துப்போச்சு. எல்லாமே வீங்கின வேலைபோல கிடக்கு. பேசிக்கலி இஞ்ச எல்லாருக்குமே சங்கீத அறிவு பூச்சியம் காந்தாரி. கூகிளில் கச்சேரி பண்ணிக்கொண்டிருக்கிறாங்கள். உனக்கு சங்கீதம் தெரிஞ்சா நீ ஏன் பேஸ்புக்கில பாடுற. மேடைல பாடு. ஆனா முடியாதே. எனக்கும் முடியாது. அதை வெளிய சொன்னா உலகம் மதிக்காதோ எண்டு பயமா இருக்கு. எனக்கு இசையைப் பற்றி என்ன தெரியும் காந்தாரி? ஆனா ஒண்டு மட்டும் நிச்சயம் தெரியும். அந்த பன்னாடை சாந்தனுக்கு இசை எண்டால் என்னெண்டு தெரியேல்ல காந்தாரி …. அவனை நம்பாத. உனக்கு ஏதாவது பாட்டு பிடிச்சா என்னட்ட கேளு. பக்கம் பக்கமா சட் பண்ணுவம். இளையராஜாவிண்ட சொன்னாட்டா கேட்டியா? ஆசையை காத்துல தூதுவிட்டு … இண்டைக்கு உலகமே இந்தப்பாட்டில மயங்கிக்கிடக்கோணும் … விதி காந்தாரி .. எல்லாமே விதி.
 • காந்தாரி .. ஆர் யூ தேர்?
 • Friday
 • ஓகே. பார்த்திட்டாய். Seen எண்டு வந்திட்டுது. என்னை நீ ஒரு மெண்டல் எண்டு நினைக்கலாம் காந்தாரி. ஆனா உனக்கு ஒரு உண்மையை சொல்லோணும். நீ ஒருத்திதான் எனக்கு இப்ப மிஞ்சி இருக்கிறாய் காந்தாரி. மொத்தம் இரண்டாயிரத்து நானூறு பேஸ்புக் பிரண்ட்ஸ் இருந்துது. இரண்டாயிரத்து நானூறு. இரண்டாயிரத்தை எட்டினோன “So proud to have two thousands friends” என்று ஸ்டேடஸ் போட்டன். ஏழு லைக்குத்தான் விழுந்துது. இப்பெல்லாம் டைம்லைன்ல எல்லா பீடும் வராதாமே? பயலுகள் மிஸ் பண்ணீட்டாங்கள் எண்டு நினைச்சு ஒருநாள் இரவு இரண்டாயிரம் பேரையும் அந்த ஸ்டேடஸ்ல டக் பண்ணினன். கறுமம். வந்த ஏழு லைக்ல ரெண்டைக் காணேல்ல. இரண்டாயிரம் பிரண்டில இருநூறைக் காணேல்ல. நான் எப்பவுமே “தமிழ் பிராமணர் பேஸ்புக் நண்பன்” க்கு ஓட்டோ லைக் பண்ணுறனான். அவா கூட எண்ட ஸ்டேடஸ லைக் பண்ணேல்ல காந்தாரி. அதுக்குப்பிறகு ஊருலகத்து ஆட்களை எல்லாம் இன்வைட் பண்ணி, அவையளிண்ட பப்ளிக் போஸ்ட்டுக்கு லைக் பண்ணி இன்னொரு இருநூறு பிரண்ட்ஸ் தேடுறதுக்குள்ள மண்டை காய்ஞ்சு போச்சு. இப்பிடியே போய் அட் மை பீக், எனக்கு இரண்டாயிரத்து நானூறு பிரண்ட்ஸ் இருந்துது. ஆரு கண்ணு பட்டுதோ. இப்ப ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று நீ மட்டும்தான் எண்ட பேஸ்புக் பிரண்ட் காந்தாரி. எல்லாரும் என்னை அன்பிரண்ட் பண்ணிட்டாங்கள். முன்னூற்று தொண்ணூற்றியொன்பது பேர். ஒழுங்கா லைக் பண்ணி கொமென்ட் பண்ணிக்கொண்டிருந்தவங்கள். சொல்லிக்கொள்ளாம ஓடீட்டாங்கள்.
 • மிகுதி இரண்டாயிரம் பேரும்?
 • அவங்களை நானே தூக்கிட்டன்… மடையள் கூட்டம்
 • இரண்டாயிரம் பேரையுமா?
 • கோவம் .. இயலாமை .. சொல்லத்தெரியேல்ல காந்தாரி ... எனக்கென்னவோ நான் ஒரு முட்டாளா என்ற சந்தேகம் கொஞ்சநாளா வரத்தொடங்கி இருக்கு. பள்ளிக்கூடத்தில வடிகட்டின முட்டாள் எண்டு நான் நினைச்சவனெல்லாம் பெரிய அறிவாளி எண்டது பேஸ்புக் வந்தாப்பிறகுதான் எனக்கு தெரியுது காந்தாரி. நான் ஒரு செம முட்டாள் எண்டதும் இப்பத்தான் விளங்குது. முட்டாளா இருக்கிறது பெரிய பிழையா காந்தாரி? எனக்கு மட்டும் ஏன் பெரிய அறிவாளிமாதிரி சிந்திக்க முடியேல்ல? நேற்று ஒருத்தன். அஞ்சாம் வகுப்பு ஸ்கோலர்சிப்பில அறுவத்துநாலு மார்க்ஸ் எடுத்தவன். இருநூறுக்கு அறுவத்துநாலு காந்தாரி. பெஞ்சமின் பிராங்கிளின் பற்றி பக்கம் பக்கமா பேஸ்புக்கில எழுதி ஐம்பத்தாறு லைக் வாங்கிறான். படிகேக்க நான் முப்பதாம் பிள்ளை எண்டால் அவன் முப்பத்தொண்டு. ஆனால் அவன் இண்டைக்கு பேஸ்புக்கில ஒரு ஹீரோ. விஞ்ஞானி. விளையாட்டு வீரன். இசை அமைப்பாளன். சமூக போராளி. எழுத்தாளன். கவிஞன். அரசியல் விஞ்ஞானி. என்னால ஒண்டுமே பண்ணமுடியாம இருக்கு காந்தாரி. நான் நிறைய யோசிச்சுப் பார்க்கிறன். என்னால முடியுதில்ல காந்தாரி. எண்ட எண்ணம் சிந்தை எல்லாம் கீழ்த்தரமாவே இருக்கு. என்ன சனியனுக்கு எண்ட யோசினை இப்பிடி எல்லாம் போகுதெண்டும் விளங்கேல்ல. உனக்கு சொன்னா நீ வெட்கப்படுவாய் காந்தாரி. பத்து வருஷத்துக்கு முன்னால திரிஷா குளிச்சாவல்லோ. காலமை எழும்பி டீ குடிக்கிறனோ இல்லையோ, திரிஷாவிண்ட பாத்ரூம் வீடியோ பார்க்காம நான் பாத்ரூம் போனதில்ல அப்ப. போன கிழமை ஆரோ ஹன்சிகாவும் குளிச்சா எண்டு ஸ்டேடஸ் போட்டான். இருப்பு கொள்ளேல்ல காந்தாரி. வேலைக்கு லீவு. ஒருநாள் புல்லா இருந்து தேடி, கொம்பியூட்டரில வைரஸ் அடிச்சும் அசராம கண்ட கழுசறை வெப்சைட் எல்லாம் துலாவி, ஒருமாதிரி லிங்கை பிடிச்சிட்டன். டவுன்லோட் பண்ணும் வரைக்கும் பொறுமை இல்லாம அரைவாசி வீடியோவை ப்ளே பண்ணினதில வீடியோ கொரப்ட் ஆகி திரும்பவும் டவுன்லோட் பண்ணினான். ஹன்சிகா குளிக்கிறத பார்க்க பார்க்க மயிர் கூச்செறியுது. ஆரோ ஒருத்தன் ஸ்டீபன் ஹோக்கிங் படம் பார்க்கேக்க மயிர் கூச்செறிந்ததா புருடா ஸ்டேடஸ் போட்டிருந்தான். மசிர். எனக்கு இதை பார்க்க சும்மா அப்பிடி இருக்கு. எக்சைட்மெண்டல் வீடியோவில ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பேஸ்புக்கில படத்த போட்டன் காந்தாரி. டோன்ட் மிஸ் அவுட் எண்டு சொல்லி லிங்கும் குடுத்தன். ஒருத்தனும் லைக் பண்ணேல்ல. ஏன் காந்தாரி?
 • இதெல்லாம் ஒரு அறிவாளி செய்யிற விசயமா?
 • ஒரு உண்மையை சொல்லட்டா காந்தாரி? எண்ட பிரண்ட்ஸ்ல இருக்கிற தொண்ணூற்றேழு வீதமான ஆட்கள் அந்த லிங்கை கிளிக் பண்ணி வீடியோவை பார்த்திருப்பாங்கள். பெட்டை பெடியள் எண்டு வித்தியாசம் இல்லாம, போன் டேட்டா போற கவலைகூட இல்லாம, ரோட்டில நிண்டே கிளிக் பண்ணி பார்த்திருப்பாங்கள். ஆனா வெளிய சொல்லுறாங்கள் இல்லை. எல்லாரும் பார்க்கிறமாதிரி ஒரு லிங்க் ஷேர் பண்ணியும் லைக் விழுகுதில்ல. எனக்கு அதுதான் விளங்குதில்ல காந்தாரி. இவனுங்கள் எல்லாம் நல்லவங்களா காந்தாரி? நல்லவன் எண்டா ஆரு? ரோட்டில ஆருமே இல்லாத போதும் குப்பையை தொட்டியில போடுறவன்தானே நல்லவன். நீ என்னண்டா, ஆரும் பார்க்கேக்க தொட்டியிலை போடுறாய். ஒருத்தருமே இல்லாட்டி ரோட்டிலை அப்பிடியே போட்டிட்டு போய்க்கொண்டே இருக்கிறாய். நீ நல்லவனா? எல்லாமே நடிப்பு காந்தாரி. உனக்கேன் மரியாதை… உனக்கேன் மரியாதை எண்டு கேக்கிறன்?
 • எல்லாரும் நடிக்கிறதில்ல
 • அத நீ சொல்லாத காந்தாரி. உன்னை மாதிரி ஒரு முட்டாளை நான் உலகத்தில பார்த்ததில்ல. புருஷன்காரனுக்கு கண்ணு தெரியேல்ல எண்டதுக்காக எந்த லூசாவது கண்ணை கட்டுவாளா? நீ பேக்கு மாதிரி கண்ணை கட்டிட்டு திரிய, அவன் வேலைக்காரிக்கு வேலையை குடுத்தானே அதைக்கூட மறந்திட்டியா?
 • இப்ப எதுக்கு தேவையில்லாத கதை?
 • இருக்கு காந்தாரி, புருஷன்காரன் அவ்வளவு மோசமானவனாக இருந்தும் நீ கண்ணைக்கட்டிக்கொண்டு வெளியில திரிஞ்சாய். ஆனா நீ கூட பாத்ரூம்ல கட்டை அவுத்துட்டு பேஸ்புக் பாக்கிறனிதானே காந்தாரி. நீ கட்டை அவுத்துட்டு எடுத்த போட்டோ நான் வச்சிருக்கிறன்

 • ஐயோ .. அது வெறும் நடிப்பு
 • அததான் நானும் சொல்லுறன் காந்தாரி. ஏன் இந்த நடிப்பு உனக்கு? பப்ளிக்காவே அதை செய்யேன். அதான் சொல்லுறன். எல்லாமே இங்க நடிப்பு காந்தாரி. உலகத்துக்கு நல்லவனா நம்மளை காட்டுற ரியாலிட்டி ஷோ இது. இதில எவன் நல்லா நடிக்கிறானோ அவன் லைக்கை அள்ளுறான்.
 • மற்றவனை பற்றி இவ்வளவு கதைக்கிற .. நீ திறமா? நீ ஏன் அந்த வீடியோவை பார்த்தனி?
 • அது டெம்டேஷன் காந்தாரி. நான் நல்லவன் கிடையாது. மகா அயோக்கியன். பிறர் வாட பல செய்கை செய்து, நரை கூடி கிழப்பருவம் எய்தி, கொடும் கூற்றுக்கிரையாகி மாயும், சில வேடிக்கை மனிதரை போலவே, நானும் வீழ்வேன் என்று நினைத்தியா காந்தாரி? வாழ்வாங்கு வாழோணும். வாழ்ந்து காட்டோணும் எண்டு சொல்லுறீங்கள். ஒருத்தன் சந்தோசமா இருந்தா பிழை எண்டுறீங்கள். ஹன்சிகா சீன் பார்த்தது ஒரு வாழ்க்கை காந்தாரி. அந்த படத்தை போட்டு லிங்கை ஷேர் பண்ணினது வாழ்ந்தத காட்டுறதுக்கு. நான் வாழ்ந்தத காட்டினா எதுக்கு கடுப்பாகிறீங்கள்? விளங்கேல்ல காந்தாரி. எனக்கு எது பிடிக்குதோ அதை செய்யிறன் காந்தாரி. நான் என்ன செய்யோணும் எண்டத நீ ஏன் சொல்லுற? சுதந்திரம் எண்டது எது தெரியுமா காந்தாரி? ஒருத்தன் தான் நினைக்கிறத செய்யிறதுதான் சுதந்திரம். அதுக்கு காரணம் இருக்கோணுமெண்டதில்ல. நான் ரோட்டால நடந்து போறன். முன்னால டக்கரா ஒரு பொண்ணு போகுது. அங்க இங்க தெரியுது. பாக்கிறன். அப்பிடி பாக்கிறது பிழை எண்டு புத்தி சொல்லுது. எங்கட புத்தி சமூகக் கட்டமைப்புக்க சிக்கியிருக்கு காந்தாரி. புத்தி எப்பவுமே எதிர்மறையாத்தான் அட்வைஸ் பண்ணும். இத செய்யாத. இத பண்ணாத. எழும்பு. குனி. ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடும். சுதந்திரம் எண்டது அதையும் தாண்டினது காந்தாரி. என் புத்திக்கும் எதிரா என் இச்சை வழி போறதுதான் சுதந்திரம். புத்தி பேதலித்தவனுக்குத்தான் இந்த உலகத்தில உண்மையான சுதந்திரம் இருக்கு காந்தாரி. எனக்கு பார்க்கோணுமெண்டு தோன்றினா பார்க்கிறதுதான் சுதந்திரம். உடனே போய் அவளுக்கு லிப்டு லிப் ஒரு கிஸ் அடிச்சா எப்பிடி இருக்கென்றும் தோன்றும். தோன்றினா ஓகே. அவளுக்கும் தோன்றினா அடிக்கிறதும் ஒகே. அவளுக்கு தோன்றாட்டி நீ விட்டிடோணும். ஒருத்தனிண்ட சுதந்திரம் சக மனிதனிண்ட சுதந்திரத்தை பாதிக்கக்கூடாது காந்தாரி. மற்றும்படி மனசுக்க வச்சு நீ என்னத்த யோசிச்சாலும் எவன் கேட்கமுடியும் சொல்லு? மாரியம்மாவா, மனீஷா கோய்ராலாவா .. உண்ட விருப்பம்
 • நீ எப்பவாவது மத்தவனை பற்றி யோசிச்சிருக்கிறியா?
 • ஏன் யோசிக்கோணும் காந்தாரி? நான் உன்னட்ட ஒண்டு கேக்கிறன். நீ எப்பாவது உன்னை மாதிரி இருந்திருக்கிறியா? எப்ப பார்த்தாலும் மத்தவனுக்கு என்ன பிடிக்கும், மத்தவன் என்ன நினைப்பான், எங்கட இமேஜ் என்னாயிடும் எண்டு சதா யோசினை. ஒருநாள் உன்னை மாதிரி இருந்து பாரு காந்தாரி. நான் இருந்திருக்கிறன். அப்ப கொழும்புக்கு வந்த புதுசு. தாஜ் சமுத்ராவில ஒரு டின்னர். எங்கட தமிழ் கோஷ்டிதான் வச்சுது. உண்மைல நான் அண்டைக்கு போயிருக்கக்கூடாது. புத்தி போகாத போகாத எண்டுதான் சொன்னது. எல்லாரும் படிச்சவங்கள். கொழும்புக்காரர். இங்கிலீஷ் கதைப்பாங்கள். உனக்கு ஒரு சனியனும் தெரியாது எண்டு புத்தி படிச்சு படிச்சு சொன்னது. அதுவேற பெட்டைகள் வரும். தெனாலி படம் வந்த சீசன். கட்டையா ஜோதிகா மாதிரி ஷோர்ட்ஸ் போட்டு, ஏனெண்டே தெரியாம வெட்கப்பட்டு, எனக்கு அதுகள் முன்னுக்கு போயிருந்தாலே கண் அங்கதான் போகும். நான் அண்டைக்கு போயிருக்ககூடாது. ஆனா அது எங்கட கிட்டடி சொந்தம். மாமா வீடு. அதில ஒரு ஜோதிகாவுக்கு சூரியாவ பிக்ஸ் பண்ணியிருக்கெண்டு அண்டைக்கு சூரியாவும் வாறார். எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல. காய்ச்சல், வரமாட்டன் எண்டு சொல்ல கோல் பண்ணினன் காந்தாரி. என்ன பிஸியா? வரமாட்டியா? எண்டு ஜோதிகாண்ட அம்மா, அதான் மாமியார் கேட்டா. எனக்கு சர்க்கெண்டிச்சு. வராத எண்டுறாவா? நல்ல சான்ஸ், வரேல்ல எண்டு சொல்லச்சொல்லி புத்தி சொல்லிச்சு. நான் யோசிச்சிட்டு வாறன் எண்டு சொல்லீட்டன். தரித்திரம்.
  அண்டைக்கு போட நல்ல உடுப்புகூட இல்ல காந்தாரி. ஒண்டும் தோய்க்கிறதில்ல. பெண்டர் நாறினா ஆப்டர் ஷேவை தெளிச்சிட்டு ஆறு கிழமையா போடுற ஆள் நான். ஜீன்ஸ், சேர்ட் எல்லாம் எப்பிடி இருக்கும். உருப்படியா இருந்த ஒரே சேர்ட்டில கூட ரோலக்ஸ் கொத்துரொட்டி துண்டு ஒண்டு ஒட்டிக்கிடக்கு. சரி எண்டு ஆப்டர் ஷேவை எல்லா இடமும் தடவிக்கொண்டு ஓட்டோ பிடிச்சு போயிட்டன். கருமாந்திரங்கள், பார்ட்டி எண்டு கூப்பிட்டிட்டு பெரிய விழாவே அரேஞ் பண்ணியிருக்கிறாங்கள். சூரியா டிப் டோப்பா மார்க் அண்ட் ஸ்பென்சர் அடிச்சுக்கொண்டு நிக்கிறார். நானும் மார்க் அண்ட் ஸ்பென்சர் தான். ஆனா பெட்டா பிராண்ட். சூரியா என்னை கூப்பிட்டு பக்கத்தில வச்சிருந்தான். அடிக்கடி இங்கிலீஷ்ல பேசிக்கொண்டிருந்தான். எல்லாத்துக்கும் யூ நோ போட்டான். இங்கிலீஷ் சரியில்ல காந்தாரி. நான் பிடிச்சிட்டன். ஒரு வசனம் கூட கிறம்மர் மிஸ்டேக் இல்லாம சூரியாவால பேச முடியேல்ல. ஆனா அக்கா தங்கச்சி எண்டு எல்லா ஜோதிக்காக்களும் அவனுக்கு மேலே விழுதுகள். நான் இதவிட நல்லா செண்டன்ஸ் அமைப்பன் காந்தாரி. ஆனா அவனுக்கு முன்னால வருகுதில்ல. பிழையா கதைச்சிட்டா? நடுங்குது. இங்கிலிஷ்ல எனக்கு பிடிச்ச ஒரே வார்த்தை “யியா” காந்தாரி. என்னமா சமாளிக்கலாம் தெரியுமா?
  சாப்பாடு ரெடி. பெரிய மேசை. ஆளாளுக்கு துணியை மடியிலையும், பட்டின்லயும் சொருகீட்டு பானை எடுத்து பட்டர் தடவுறாங்கள். எனக்கு காலமை சாப்பாடும் பாணும் பட்டரும்தான். அந்த சனியனை பைவ் ஸ்டார் ஹோட்டலில சாப்பிடுறதா? ஒரு சலட்டுக்க நிறைய இறால் கிடந்திச்சு. பொறுக்கி சாப்பிட்டிடன். கையால. மாமி கண்ணைக் காட்டுறா. எல்லாரும் கரண்டியால சாப்பிடுறாங்கள். எனக்கு முள்ளுக்கரண்டி குத்திட்டுது எண்டா என்ன செய்யிறதெண்ட பயம். அதோட எல்லாரும் அந்த இடத்தில என்னை ஒரு பொருட்டாகவே மதிக்காம ஏளனமா பார்க்கிறதும் எனக்கு பிடிக்கேல்ல. சூரியா வேற என்னை வச்சுக்கொண்டு தான் ஸ்கோர் பண்ண பார்த்தான். புத்தி எழும்பி போ எண்டு சொல்லிச்சு. ஆனா அத நான் செய்யேல்ல. பெரிசா ஒரு ஏவறை விட்டிட்டு கையால அவுக் அவுக்கெண்டு அள்ளி எங்கட தம்பிராசா மாதிரி தின்னத் தொடங்கீட்டன். டேய் சூரியா. நான் நானா இருக்கிறன்டா. ஏலுமெண்டா நீ நீயா இரு பார்ப்பம். கேவலம் உனக்கு நீ ஆரெண்டே மறந்துபோயிருக்கும். அண்டைக்கு நான் சூரியாவை வெண்டுட்டன் காந்தாரி. எனக்கு முன்னால அவன் ஒரு லூசன் மாதிரி தெரிஞ்சான். ஆனா பெட்டைகளுக்கு லூசுகளைத்தான் பிடிக்குது. என்ன செய்ய?
  காந்தாரி. அண்டைக்கு சும்மா தனியா இருந்திருந்தா நான் கரண்டியால ஸ்டைலா சாப்பிட்டிருப்பன். ஆனா நீ அப்பிடி நட்டுக்கொண்டு நிண்டா நான் லோக்கலாத்தான் இருப்பன் காந்தாரி. இந்த குணம்தான் பேஸ்புக்கிலையும் வருது. நான் ஸ்டேடஸ் போட்டா எந்த நாயும் கணக்கெடுக்குதில்ல காந்தாரி. ஏனென்டா எண்ட ஸ்டேடஸ்ல விசயம் இல்ல. நான் எழுதுற கவிதை, போடுற ஜோக் எதுவுமே நல்லா இல்ல. லைக் விழேல்ல. ஆனா நீ லைக் போடேல்ல எண்டதுக்காக நான் நல்ல கவிதை எழுதிடுவனா? சிரிக்கிற மாதிரி ஜோக் சொல்லிவிடுவனா? உனக்காக நான் எதையும் மாத்தமாட்டன் காந்தாரி. நீ லைக் பண்ணாதவரைக்கும் நான் ஸ்டேடஸ் போட்டுக்கொண்டே இருப்பன் காந்தாரி. அதே மாதிரி, அறிவுத்தனமா ஸ்டேடஸ் போடுற எவனுக்கும் நான் லைக் செத்தாலும் கொடுக்கமாட்டன். நான் லைக் பண்ணேல்லையே எண்டு அவன் நித்திரை இல்லாம சாகோணும் காந்தாரி.
 • உனக்கேன் புத்தி இப்பிடி போகுது?
 • உண்மையை சொல்லோணும் காந்தாரி எண்டா எனக்கு ஈகோ … எதையுமே சாதிக்காதபடியால வாற இயலாமை ஈகோ இது. எனக்கு என்னை மட்டுமே எல்லாரும் பார்க்கோணும். கொண்டாடோனும். கூட இருக்கிறவனை குப்பிற விழுத்தோணும். உற்ற நண்பனோ, பெத்த தாயோ, கதையில்ல. நானே உலகம். யோசிச்சுப்பாரு. இந்த உலகமே நான் செதுக்கினதுதானே காந்தாரி. உன்னை, அமெரிக்காவை, அரசியல், வரலாறு, முன் வீட்டுக்காரன், பக்கத்துவீட்டுக்காரன், ஆடு, மாடு, சாப்பாடு, ரஜினிக்காந்த் எண்டு எல்லா விஷயமுமே என்னை மையமா வச்சு இயங்குது காந்தாரி. நான் கோமாவுக்கு போனா இந்த உலகமே கோமாவுக்கு போயிடும். நான் செத்துப்போனா இஞ்ச எதுவுமே இல்ல காந்தாரி. இது நான் சிருஷ்டிச்சது காந்தாரி. இப்பிடி ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு உலகத்தை படைச்சு வச்சிருக்கிறான். ஒவ்வொருத்தன் சாகேக்கையும் உலகம் அழியுது காந்தாரி. ஒவ்வொருத்தன் வளரேக்கையும் உலகம் பரிமாணம் அடையுது. என்ன ஒண்டு, எண்ட உலகத்தில பிரேசில் நாட்டில கோப்பியும் புட்போலும்தான் இருக்கும். பிரேசில்காரனிண்ட உலகத்தில எண்ட உலகத்தில இருக்கிற பாரதியார் இருக்கமாட்டார். அவ்வளவுதான். கோவம் என்னெண்டா, மினக்கெட்டு படைச்சாலும் என்னால இந்த உலகத்தை கொன்றோல் பண்ண முடியுதில்ல. அனுபவிக்கமுடியேல்ல. அவ்வளவுதான். நான் படைச்ச உலகம், நான் உருவாக்கின பேஸ்புக். நான் பார்க்கிற நண்பர். ஆனா அங்க கூட என்னை கவனிக்கிறாங்கள் இல்லை காந்தாரி, என்னால ஒபாமாவிண்ட வீடியோவை மூவாயிரம் பேர் ஷேர் பண்ணுறத தாங்கிக்கொள்ள முடியுது. ஆனா முன்வீட்டு மூதேசி அப்லோட் பண்ணுற வீடியோவை ரெண்டு பேர் ஷேர் பண்ணினாலும் தாங்கமுடியேல்ல. ஏன் காந்தாரி?
 • அதான் சொல்லீட்டியே ஈகோ எண்டு
 • அதான் ஏன் எண்டு கேட்கிறன் நான்? சரி நான் முட்டாளாகவே இருந்திட்டுப்போறன் காந்தாரி. முட்டாளா இருக்கிறது எண்ட பிறப்புரிமை. எனக்கு லோக்கலாதான் யோசிக்கமுடியும். விஜய் படம்தான் விளங்கும். நான் இண்டர்நெட்டில கில்மா படம்தான் பார்ப்பன். ரசியாவில குளிர் எண்டா ரெமி மார்டின் கோக் கலக்காம குடிப்பன். எனக்கு படிப்பு ஏறேல்ல காந்தாரி …. ஆனா சினிமா எண்டாக் காணும். அவா. ஆசைத்தம்பி எண்டு அப்பாஸ் நடிச்சபடம் தெரியுமா உனக்கு? எட்டு தடவை தொடர்ச்சியா நான் பார்த்தனான். அப்பாஸ் எண்டா அவ்வளவு பிடிக்கும். சிம்ரன் அப்பவெல்லாம் குட்டையாதான் பாவாடை போடுவா. ஒவ்வொரு தடவையும் துள்ளும்போது என்னவோ செய்யும் காந்தாரி. சிகரட் எண்டா இன்னும் பிடிக்கும். ஏஎல் படிக்கிற காலம். கையில அஞ்சுரூவா இருக்காது. கன்னாதிட்டி சந்தியடியில ஒரு பீப்பிள்ஸ் பாங் இருக்கல்லோ? அதுக்கு பின்னால ஒரு குட்டி ஓடை தெரியுமா? பெடியளுக்கு தெரியும். அவசரமா ஒண்டுக்கு வந்தா அதுக்குள்ளதான் பூருறது. அந்த இடத்தில பத்தரைக்கு பாங்க் ஆக்கள் சிகரட் பிடிக்க வருவினம். நாம பத்தே முக்காலுக்கு போவம். அவங்கள் போட்டுவிட்ட அடிக்கட்டை சிகரட்டுகளை பொறுக்கி ஒவ்வொரு இழு இழுப்பம். இண்டைக்கும் வெளிநாட்டில சிகரட் அடிக்கட்டை ஏதும் குப்பைத்தொட்டிக்கு மேல புகைஞ்சுகொண்டு கிடந்தா, அதை எடுத்து இழுக்காம போறதில்ல. சிலர் என்னை கேவலமா பார்த்துக்கொண்டு போவினம். ஆனா இதுதான் நான் காந்தாரி. நான் களவெடுக்கிறனா? இல்லையே. அந்த குணம் பேஸ்புக்கிலயும் வருது காந்தாரி. பார்க்கத்தானே பேஸ்புக்கில போடுறினம். பாக்கிறன். பிழையா? காட்டினா எவனாவது பார்க்காம இருப்பானா? சொல்லு காந்தாரி. இத இதை பார்த்தா புத்திசாலி, இத இத பார்த்தா முட்டாள் எண்டு எத வச்சு சொல்லுறீங்கள்? நான் சொல்லட்டா? எண்பத்து நாலு வீதமான ஆட்கள் தங்களுக்கு எது பிடிக்கிறது எண்டதவிட தங்களுக்கு எது பிடிக்குது எண்டு மற்றாக்களுக்கு தெரியோணும் எண்டதுக்காக லைக் பண்ணுறினம். லைக் பண்ணின வீடியோவிலோ, கட்டுரையிலோ என்ன இருக்கு எண்டு கேளு. முழுசுவினம்.
 • இந்த எண்பத்துநாலு வீதம் கணக்கு ஆரு சொன்னது?
 • ஆருக்குத் தெரியும்? சும்மா அடிச்சு விடுறதுதான் காந்தாரி. இப்பெல்லாம் ஸ்டடிஸ்டிக்ட் இல்லாம எதையும் கதைக்கக்கூடாது. உனக்குத்தெரியுமா? பேஸ்புக்கால அறுபது வீதமான குடும்ப உறவுகள் பிரியாம நீடிக்குது. ஏனெண்டா கட்டிப்பிடிச்சு, ஐ லவ் யூ சொல்லி, காதல், கவிதை, செல்பி எண்டு நாளுக்கு நாள் அடிச்சுவிட்டி, ஆயிரத்து சொச்சம் “கங்கிராட்ஸ் கைஸ்” வாங்கிட்டு அப்புறமா பிரிஞ்சா உலகம் காறித்துப்பாதா? வெளில தலை காட்டேலாது காந்தாரி. நாளைக்கு நீ ஸ்டேடஸ் போட்டா ஒரு லைக் கூட விழாது. அதால வீட்டில மௌனராகம் மோகனும் ரேவதியும். கம்பளிப்பூச்சி ஊறும். பேஸ்புக்கில அது பட்டாம் பூச்சியா பரிணாமம் அடைஞ்சிடும். வீட்டில தாமரை மேலே நீர்க்குமிழ் போல தலைவனும் தலைவியும். பேஸ்புக்கில செம்புலப்பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் சும்மா கலந்தடிக்கும்.
 • Saturday
 • காந்தாரி. நீ இருக்கிறியா? போயிட்டியா?. இனி போகேக்க சொல்லிட்டுப் போ காந்தாரி. நான் என்ன லூசா இஞ்சயிருந்து அலம்பிகொண்டிருக்க?
 • Sorry went out, நீ ஏன் இப்பிடி ஊரை வைஞ்சுகொண்டிருக்கிறாய்?
 • வெறுத்துப்போயிற்று காந்தாரி. நான் வாழ்க்கைல எதையுமே சாதிக்கேல்ல எண்டத நினைக்க நினைக்க சீவன் போகுது. நான் சின்ன வயசில நல்லா கிரிக்கட் விளையாடுவன். பனிக்கர் வளவு மட்சுகளில் நான்தான் ஓபன் பட்ஸ்மேன். வெங்சர்கார்மாதிரி வருவன் எண்டு எண்ட அப்பர் ஒருக்கா சொன்னதிலிருந்து நான் நம்பர் த்ரீயா மாறீட்டன். ஆனா என்னதான் ஸ்டைலா கவர் டிரைவ் அடிச்சாலும் டெனிஸ்போல் பனிக்கர் வளவுக்குள்ள உருளாம இரண்டு மீட்டர் பக்கத்திலேயே புல்லுக்க சிக்கிடும். சிங்கிள் கூட ஓடேலாது. தூக்கித்தான் அடிக்கோணும். ஆனா நான் தூக்கமாட்டன். ஒரு நல்ல டெஸ்ட் பிளேயர் தூக்கி அடிக்கக்கூடாது எண்டு அதே அப்பர்தான் சொல்லித்தந்தவர். ஆனா ரெண்டு மூண்டு மட்சியிலேயே என்னை தூக்கிட்டான்கள். இருபது வருஷம் கழிச்சு ஒருநாள் டிவில இந்தியன் மட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறம். வெங்சர்கார் நல்லா இங்கிலீஷ் பேசுறான் என்று அதே அப்பன் சொல்லுது. ஆரெண்டு பார்த்தா அது ரவி சாத்திரி. எண்ட அப்பன் ஒரு லூசு எண்டது எனக்கு அண்டைக்குத்தான் தெரிஞ்சுது காந்தாரி. அந்தாளுக்கு வெங்சர்காருக்கும் ரவி சாத்திரிக்கும் கூட வித்தியாசம் தெரியாது. இந்த அப்பனை நம்பி கிரிக்கட்டை கோட்டை விட்டிடன்.
 • இப்ப அதுக்கென்ன வந்துது?
 • ஆனா என்னை மாதிரி இல்லாம, நிறையப்பேர் கிரிக்கட்டில சாதிச்சிருக்கிறாங்கள் காந்தாரி. பேஸ்புக்கில பார்த்தா தெரியும். ஒவ்வொருத்தனும் ஸ்ட்ரெயிட் டிரைவ் அடிக்கிறான். ரிவேர்ஸ் ஸ்விங் போடுறான். அப்பர் கட் அடிக்கிறான். அண்டைக்கு பார்க்கிறன். இரண்டுகாலையும் ஒருத்தர் விரிச்சபடி போலரை பார்த்துக்கொண்டு நிண்டு பந்த நடுவால கிண்டி தலைக்கு மேலால அடிக்கிறார். கேட்டா டில்ஸ்கூப்பாம். அவனவன் தனியா வீட்டில பண்ணுறத இப்பெல்லாம் கிரிக்கட் பிட்சில பண்ணுறான் காந்தாரி. சச்சினை தெரியுமா? பழைய பிளையர். எனக்கு கடவுள்மாதிரி. ஆனா அண்டைக்கு ஒருத்தன் எழுதிறான். சச்சினுக்கு கொஞ்சம் அவுட்சைட் ஓப் ஸ்டம்ப் பந்தை எகிறிப்போட்டா கீப்பரிட்ட குடுத்திட்டு வீட்ட போவாராம். யோசிச்சுப்பார்த்தன். போயிருக்கிறார்தான் காந்தாரி. அந்தக்காலத்தில சச்சினை பெரிய கிரிக்கட்டர் எண்டு கொண்டாடினாங்கள். ஆனா இப்ப பேஸ்புக்கில இருக்கிறவங்கள் எங்கள மாதிரி இல்ல காந்தாரி. விவரமா இருக்கிறாங்கள். சச்சின் ஒரு பட்ஸ்மனே கிடையாது எண்டது இவங்களுக்கு எப்பிடியோ தெரிஞ்சு போச்சு. சச்சினை விட சங்கக்காராவுக்கு அவரேஜ் கூட எண்டு விலாவாரியா விளங்கப்படுத்தியிருந்தாங்கள். அதுக்குப்பிறகுதான் எனக்கே அது விளங்கினது. சங்கக்காரா வலு வீரன்தான் காந்தாரி. இங்கிலிஷும் நல்லா கதைக்கிறான். அதோட எங்கட நாட்டுக்காரன். தாய்நாடு. எனக்கு சாப்பாடு தந்து, படிப்புத்தந்து, சவுக்காரம் தந்து எண்டு எல்லா ஐட்டங்களும் தந்த தேசம். யோசிச்சுப்பாரு காந்தாரி. நான் இண்டைக்கு நாலு வரி தமிழில எழுதிறன் எண்டா, அதை சொல்லித்தந்தது தாய்நாடுதானே. எங்கிருந்தோ எனக்குள்ள ஒரு மாற்றம் திடீரென்று பாஞ்சுது. விளையாட்டிண்ட மகிமை அது காந்தாரி. அதாலதான் விளையாட்டை அரசியலுக்க கொண்டுவாறது. அது பிரிஞ்சிருக்கும் எல்லைகளையும், மனங்களையும் ஒன்று சேர்க்கும் அற்புத ஐட்டம். இது விளங்கின உடனேயே நான் போய் சங்கக்காராவிண்ட பேஸ்புக் பேஜை லைக் பண்ணீட்டன். சச்சினுக்கு ஒரு அன்லைக்.
  ஆனா நான் சச்சினை அன்லைக் பண்ணினது கனடாவில இருக்கிற சர்வேஸ்வரனுக்கு பிடிக்கேல்ல. அவர் இந்தியன் சப்போர்டர். புரபைல் பிக்சர்ல எப்பவுமே கோலியும் அனுஷ்கா சர்மாவும்தான் இருப்பினம். அவருக்கு நான் எடுத்துச்சொன்னன். இஞ்ச பாரு தம்பி. சங்ககாராவிண்ட அவரேஜ் எங்க? சச்சினிண்ட எங்க? அதோட சச்சின் செஞ்சரி அடிச்சா அந்த மட்ச் இந்தியா தோக்கும். சங்கக்கார அடிச்சா வெல்லும் எண்டன். அவருக்கு வந்ததே கோவம். உடனே “புங்குடுதீவு சனசமூக நிலையத்து வளவில விளையாடி, இப்ப கனடா கவுண்டி டீம்ல இருக்கிற யசோகுமாருக்கு அவரேஜ் எழுபது” என்று ஸ்டேடஸ் போடுறார். சங்கக்காராவை விட யசோகுமாருக்கு அவரேஜ் கூட எண்டு சொல்லி, சங்கக்காராவை மட்டம் தட்டுறதுதான் அவரிண்ட பிளான். அதில என்னையும் டக் பண்ணுறார். ஒரு விளையாட்டுக்குப்போய் ஏன் இவ்வளவு சீரியஸா அடிபடுவான்?
  சர்வேஸ்வரன் பேசிக்கலி ஒரு தமிழ் தேசியவாதி காந்தாரி. இலங்கை கிரிக்கட் அணியை எதிர்ப்பது ஈழப் போராட்டத்தின் யதார்த்த விழுமியங்களில் ஒரு முக்கிய தார்மீகப் புள்ளி எண்டது அவருடைய கொள்கை. அதனால இலங்கை அணியை ஆதிரிப்பவர்களை துரோகிகள் எண்டுவார். விளையாட்டுக்க ஏன் அரசியலை கொண்டுவாறீங்கள் எண்டது எனக்கு தெரியேல்ல. இந்த சர்வேஸ்வரன் இலங்கை டீமோட சிம்பாப்வே விளையாடினாலும் சிம்பாப்வேவுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவார். ஏனென்டா இலங்கை இனப்படுகொலை செய்த நாடாம். சிம்பாப்வேயில மட்டும் என்ன வாழுதாம்? கோலி அடிச்சா நீ ஏண்டா “வந்தே மாதரம்” எண்டுறாய். கோலி உண்ட அண்ணனும் கிடையாது. இந்தியா உண்ட தாய் நாடும் கிடையாது. இலங்கை அணி இனப்படுகொலை செய்ஞ்சா, இந்தியா என்ன இடியப்பம் அவிச்சுதா? அவனும் கொண்டான். இவனும் கொண்டான். எல்லாரும் எல்லாரையும் கொண்டுகொண்டிருந்தாங்கள்.
  ஆனா காந்தாரி சர்வேஸ்வரன் படிக்கிற காலத்திலிருந்தே இப்பிடித்தான். சர்வேஸ்வரணிண்ட அண்ணன் எண்பத்தாறாம் ஆண்டு வில்லூன்றித்தேரண்டைக்கு எட்டுப்பேருக்கு நெத்தில போட்டவன். சர்வேஸ்வரனுக்கு வந்துதே கோவம். அவனும் அவனின்ட அண்ணனும் ஒரே பள்ளிக்கூடம். அண்டைல இருந்து அவன் அந்த பள்ளிக்கூட கிரிக்கட் டீமை சப்போர்ட் பண்ணாம விட்டிட்டான். அந்த பள்ளிக்கூடத்தில தன் அண்ணனால உயிருக்கு ஆபத்து எண்டு சொல்லி தக்காளி டவுன் பள்ளிக்கூடத்தில அட்மிசன் எடுத்திட்டான். ஆனா ஒரே வீட்டில்தான் அண்ணனும் தம்பியும் இருந்தது. பள்ளிக்கூடம் மாறினதிலயிருந்து சர்வேஸ்வரன் தண்ட பழைய பள்ளிக்கூடத்தையும் அதிண்ட கிரிக்கட்டீமையும் திட்டின திட்டு கொஞ்ச நஞ்சமில்ல. இப்பகூட பேஸ்புக்கில திட்டிக்கொண்டேயிருப்பான். ஆனா புதுசா போன பள்ளிக்கூடத்தில இவன் எருமை தண்ட பங்குக்கு இரண்டு பேரை சுட்டுட்டான். அதுக்குப்பிறகு கப்பல், சிலி, மெக்ஸிகோ எண்டு ஒருமாதிரி கனடாவுக்கு போயிட்டான். ஆனாலும் அந்த கோவம் பயபுள்ளைக்கு இன்னும் குறையேல்ல. இவன் தமிழ் தேசியவாதி. இன்னொரு வார்த்தை வருது. வேண்டாம்.
  எனக்கு சர்வேஸ்வரனிண்ட ஹிஸ்டரி தெரிஞ்சுதான் இவ்வளவுநாளும் சும்மா இருந்தனான். ஆனா அண்ணர் ஒருநாள் என்னையே சீண்ட தொடங்கிட்டார். நான் பச்சோந்தியாம். துரோகியாம். எனக்கு எதையும் தாங்கமுடியும் காந்தாரி. ஆனா முத்தையா முரளிதரனை ஆரும் என்னவும் சொன்னாலோ தாங்கவே முடியாது. சர்வேஸ்வரன் முரளி ஒரு தமிழனே இல்லையாம் என்று ஒரு ஸ்டேஸ் போடுறார். மூஞ்சியைப் பொத்திக் குடுக்கோணும் போல இருந்திது காந்தாரி. ரகுமான் கூட ரெண்டு ஒஸ்கார் வாங்கிட்டுதான் பெரிய தமிழன் மாதிரி சீன் போட்டார். ஆனா முரளி எண்ணூறு விக்கட் எடுத்துட்டு பெருமையா காலி மைதானத்தில ஒரு சிரிப்பு சிரிச்சான் பாரு. அக்மார்க் தமிழனின்ட குழந்தை சிரிப்பு காந்தாரி. அங்கதான் நம்மாளு உசக்க நின்னான். முரளி நிக்கேக்க எனக்கு எப்பிடி சிலிர்த்துது தெரியுமா? தமிழன் இல்லையாம். சர்வேஸ்வரன் சொன்னார் முரளிக்கு தமிழ் தெரியாதாம். நீ கோபி வித் அனு பார்த்தியா காந்தாரி. முரளி உசக்கப்பணிஞ்சத பார்த்து ஒவ்வொரு தமிழனும் தலை நிமிரோணும் காந்தாரி. எனக்கு சரியான கோவம். நான் சர்வேஸ்வரனுக்கு சிங்களத்தில “ஸ்ரீலங்காட்ட ஜெயவேவா” எண்டு ஒரு கொமெண்ட் போட்டன். அவன் உடனே “ஸ்ரீலங்கா அணிக்கு சப்போர்ட் பண்ணிற ஒவ்வொருத்தரையும் தமிழனை சுடுற மாதிரி சுட்டு பொசுக்கோணும்” எண்டு ரிப்ளை பண்ணினான். நான் பயந்திட்டன் காந்தாரி. மூதேவி. சுட்டாலும் சுட்டுடுவான். உடனே சங்கக்காராவை அன்லைக் பண்ணீட்டு கோலியை லைக் பண்ணினன். சர்வேஸ்வரன் விடேல்ல. “துரோகிகள் திரும்பிவந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் வாசலில் வைத்தே சுடுவோம்” எண்டு அடுத்தநாள் ஸ்டேடஸ் போட்டான். எனக்கு ஒண்டுக்கு வந்திட்டுது.
  சர்வேஸ்வரனை அன்பிரண்ட் பண்ணீட்டன்.
- பாகம் 2 திங்களன்று!

Contact form