ஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - பேஸ்புக் இலக்கியம்

Feb 23, 2015

பாகம் 2 பேஸ்புக் இலக்கியம்


 • Sunday
 • நான் ஒரு கொலை பண்ணீட்டன் காந்தாரி.
 • சின்னதா ஷேவிங் ப்ளேட்டால. தலையை இழுத்து, கழுத்தை விரிச்சு வச்சு, இரத்தம் போகுமே நாடி, அதை இலேசாக கீறினன் காந்தாரி. போய்ட்டான். கரோடிட் ஆர்டரி டிசெக்சன். இன்ஸ்டன்ட் ஹெமரேஜ். சத்தம் இல்ல. திமிறினான். இரண்டு செக்கனிலேயே அதையும் நிப்பாட்டிட்டான். ஸ்ட்ரோக். எனக்கு எவ்வளவு திமிர் காட்டினவன் தெரியுமா? என்னைப் போய் …..பச்சை தூஷணம் காந்தாரி. உன்னட்ட சொல்ல வெக்கமா இருக்கு. கொட்டினவன் காந்தாரி. ஒரு சின்ன ப்ளட் க்லொட். அவ்வளவு ஆட்டமும் குளோஸ். கொண்டிட்டன்.
 • என்ன சொல்லுறாய்? கொண்டிட்டியா .. யாரை?
 • நான் ஒரு எளிய மிருகம் காந்தாரி. நீங்கள் எல்லாம் நினைக்கிறமாதிரி டொக்டர் கிடையாது. ஒரு எக்ஸாம் கூட பாஸ் பண்ணேல்ல நான்.
 • என்ன விசர்க்கதை கதைக்கிறாய்? நீ டொக்டருக்குத்தானே படிச்சனி? நீ சொல்லுறதெல்லாம் உண்மையா?
 • Monday
 • அமுதவாயன் .. ஆர் யூ தேர்?
 • சொறி காந்தாரி. கொஞ்சம் பிஸி. எங்க விட்டம்? ஆ டொக்டர். நான் டொக்டர் இல்ல காந்தாரி. எனக்கு மெடிசின் ஓடவே ஓடாது. எல்லாம் இந்த அம்மாவால வந்த வினை. ஓஎல் படிக்கேக்க கொமேர்ஸ் எண்டால் எனக்கு பயங்கர விருப்பம் காந்தாரி. வில்லர் வாத்திக்கு ஐந்தொகை சமப்படாது. எனக்கு சமப்படும். இலாபநட்டக்கணக்குக்கு வாத்தி எண்ட விடையை பார்க்காமலே மார்க்ஸ் போடும். மில்க்வைற் கொம்பனி ஒருநாளைக்கு வங்குரோத்து ஆகும் எண்டு சின்ன வயசிலேயே சொன்ன ஆள் நான். ஆனா எண்ட அம்மாக்காரி என்னை உருப்பட விடேல்ல. நான் பயோ படிச்சு டொக்டரா வரோணும் எண்டா. அம்மா சின்னனில இருந்தே என்னை டொக்டர் அமுதவாயன் எண்டுதான் கூப்பிடுவா. அவவுக்கு தண்ட அக்காமாரிண்ட பிள்ளைகள் சிலது டொக்டர் ஆன கடுப்பு. கேட்டா அதுகளை டொக்டர் எண்டமாட்டா. ஓஎல் கூட பாஸ் பண்ணாம ரசியாவில போய் படிச்சவனெல்லாம் டொக்டரா எண்டு திட்டுவா. அவையளும் இலங்கை வந்து எக்ஸாம் பாஸ் பண்ணித்தானே டொக்டர் ஆனவை காந்தாரி? சொன்னா அதுக்கும் திட்டுவா. கட்டாக்கருவாடு குடுத்து பாஸ் பண்ணினதா சொல்லுவா. கட்டாக்கருவாடு குடுத்து பாஸ் பண்ண ஏலுமெண்டா அவன் எதுக்கு ரஷ்யா போறான் காந்தாரி? அந்தக்காசில கட்டுமரம் கட்டி, மீன் பிடிச்சு கருவாடு போட்டிருப்பானே. கள்ளவேலை செய்யிறவனுக்கு ரஷியா, ஸ்ரீலங்கா எண்டு திரியத்தேவையில்ல காந்தாரி. எங்கயும் செய்வான். அத மாதிரி நல்லா படிக்கிறவன் எந்த நாட்டிலையும் படிச்சு முன்னேறுவான். எங்கட சிஸ்டத்தை மாத்தோணும். அதுக்கு முன்னால எங்கட சீரழிஞ்ச யாழ்ப்பாணத்தானிண்ட சிந்தனைகளை மாத்தோணும் காந்தாரி.
 • நல்லவன் மாதிரி கதைக்கிறது இருக்கட்டும். நீ முதலில என்ன பண்ணினாய்?.. அத சொல்லு.
 • நான் ஓஎல் பாஸ் பண்ணினான் காந்தாரி. ஆறுபாடம் ஸி. கொமர்ஸ் டி. இங்கிலீஷ் பெயில்.
 • ஐயோ .. அதை கேக்கேல்ல.
 • ‘ஏஎல்’ லில பயோ செய்தனான். முதல் மூண்டு மாசம் நல்லாத்தான் போனது. அங்கால ஒரு அறுப்பும் விளங்கேல்ல. எனக்கு இந்த சிலபிசல நம்பிக்கை இல்ல காந்தாரி. குணசீலனுக்கு என்னில நம்பிக்கை இல்லை. டியூஷனில ஒருக்கா பீஸ் கூட்டினாங்கள். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தனாங்கள். குணசீலன் கண்ணால தண்ணி ஓடுது. அருளும் அழுறார். குமரன் வாத்தியே அழுததெண்டா பாரன். நான் உருப்படமாட்டன் எண்டு குணசீலன் சாபம் போட்டார். அவர் சொல்லாட்டிமட்டும் உருப்பட்டிருப்பனா? ஆனாலும் படிச்சன் காந்தாரி. அம்மாவும் சேர்ந்து படிச்சா. கேள்வி கேட்பா. பதில் சொல்லாட்டி அகப்பங்காம்பு எடுப்பா. கடைசியில நான் ஏ. எல் பெயில்.முதல் ரெண்டு தடவையும் மூன்று பாடமும் பெயில். மூண்டாவது தடவை ரெண்டு பாடம் அப்சென்ட். பிஸிக்ஸ் மட்டும் ஏ.
 • ஒவ்வொரு பாடத்துக்கும் குதிரை பிடிச்சனான். ஆனா பிஸிக்ஸ்காரன் மட்டும் குடுத்த காசுக்கு ஒழுங்காபோய் ஓடினவன். மத்தவன் எல்லாம் காசை வாங்கிட்டு உச்சிட்டாங்கள். அவங்கள் மட்டும் ஒழுங்கா எக்ஸாம் செய்திருந்தா இண்டைக்கு நான் எம்.டி முடிச்சிருக்கலாம்.
 • வெக்கமா இல்லையா? உனக்கெல்லாம் எப்பிடி ரஷியால அட்மிஷன் கிடைச்சது?
 • அங்கயும் குதிரைதான். எங்கட சிலபஸ் சரியில்லை எண்டது எக்ஸாமுக்கு பிறகுதான் அம்மாவுக்கும் விளங்கினது. ஆனா நான் டொக்டர் ஆகோணும் எண்ட கனவு மட்டும் அம்மாவை விட்டு துரத்திக்கொண்டே இருந்துது. அம்மா திடீரென்று பெரியம்மாண்ட பிள்ளைகளை டொக்டர் எண்டு சொல்லத்தொடங்கினா. கோல் பண்ணிக் கதைச்சா. ரசியாவில சில நல்ல யூனிவேர்சிட்டிகளும் இருக்காம். ஆறே மாசத்திலே காணியை அடகு வச்சு எனக்கு அட்மிசன் எடுத்திட்டா. போர்ம் நிரப்பினதில இருந்து கையெழுத்து வச்சு, இண்டர்வீயூவுக்கு குதிரையை பிடிச்சதுவரை அவதான் செய்தது.
 • அப்போ உனக்கு இதில விருப்பம் இல்லையா?
 • ஆரம்பத்தில இருக்கேல்ல. ஆனா என்னோட படிச்சவனெல்லாம் டொக்டருக்கு படிக்கிறத பார்க்க எனக்கும் ஆசை வந்திட்டு. அதோட நான் பிறவி இலக்கியவாதியா, எனக்கு ரஷியா ஒருக்கா போயிடோணும் எண்டு பயங்கர விருப்பம்.

 • உனக்கும் இலக்கியத்துக்கும் … இலக்கியத்துக்கும் ரஷியாவுக்கும் என்ன தொடர்பு?
 • ஒவ்வொரு செம்மொழி இலக்கியவாதியும் வாழ்க்கைல ஒருநாளேனும் பீகார் போகோணும் காந்தாரி. ஒவ்வொரு பின்நவீனத்துவ எழுத்தாளனும் ஒருநாள் சிலே போகோணும். அதே மாதிரி ஒவ்வொரு முன்நவீன எழுத்தாளனும் ரசியா போகோணும் காந்தாரி. போகாட்டி அவன் என்னத்த எழுதியும் பிரயோசனம் இல்ல.
 • அப்பிடி அங்க என்ன இருக்கு?
 • ஒரு படைப்பாளிக்கான முழு சுதந்திரமும் ரசியாவிலதான் இருக்கு காந்தாரி. ஸ்னோடவுனை தெரியுமா? அமெரிக்காவில அவனை தேடுறாங்க. ரஷியாவில கொண்டாடுறாங்கள். ரஷ்யா போய் ஸ்நோடவுனோட மொஸ்கோவில ஒரு கோப்பி குடிக்கோணும் காந்தாரி. அவனின்ட விடுதலைக்காக குரல் கொடுக்கோணும். தோஸ்தாவஸ்கியிண்ட அண்டர்கிரவுண்டை பார்க்கோணும். சென் பீட்டர்ஸ்பேர்க்கில ஓவர்கோட் போட்டு தாடி வச்சு பிச்சை எடுக்கோணும். நிக்கோல் கோகுல், டோல்ஸ்டே வீட்டயெல்லாம் போகோணும். இப்பிடி நிறைய விருப்பம்.
 • இவ்வளவு இலக்கியம் எல்லாம் படிச்சும் நீ ஏன் இன்னும் ..?
 • லூசு மாதிரி கதைக்கிறன் எண்டு சொல்லுறியா? நான் இந்த இலக்கியம் எல்லாம் படிச்சனான் எண்டு எப்ப சொன்னன்? எல்லாமே விக்கிபீடியா காந்தாரி. ஒரு முன்நவீன எழுத்தாளனுக்கு இந்த பெயர்கள் எல்லாம் பரிச்சயமா இருக்கோணும் காந்தாரி. ஒருநாள் பூரா விக்கிபீடியாவில “ரூசிய எழுத்தாளர்கள்” எண்டு தேடினன். லிஸ்டு போட்டன். ஒருத்தரையும் வாசிக்கேல்ல. ஒண்டு வாசிச்சுப்பார்த்தன். விளங்கேல்ல. எதுக்கு வில்லங்கம்? ஆனா ஒருத்தனிண்ட ரிவ்யூவில இருந்து ஒரு பிட்டை எடுத்து பேஸ்புக்கில போட்டன், இவன் ஏதோ விவரமா எழுதிறான் எண்டு கனபேர் நம்பிட்டாங்கள். புக்கு ரிவியூக்கு எல்லாம் இப்ப கூப்பிடுறாங்கள். அதோடதான் நான் பெயரை எழுத்தாளர் அமுதவாயன் எண்டு மாத்திட்டன்.
 • ஆருக்காக இந்த சீனெல்லாம் போடுறாய்? நீ உண்மையிலேயே ஆரு?
 • நான் அடிப்படையில ஒரு லெப்டிஸ்ட் காந்தாரி. யோசிச்சுப்பாரு. விண்டரில, பனி அரை மட்டும் கொட்டி கிடக்கேக்க, சண்டிக்கட்டோட அருவாளும் கையுமா பைக்கால் ஏரிக்கரையில பழஞ்சோறு சாப்பிடுற மாதிரி ஒரு படம். எப்பிடியிருக்கும்? சும்மா நடுங்கும். இரண்டு நிமிஷம் கூட நிண்டால் குளிருல உறைஞ்சு செத்துடுவோம். ஆனாலும் அப்பிடி நிண்டு ஒரு படம் எடுத்துப் போட்டனான் காந்தாரி. ஒரு இலக்கியவாதி இலக்கியம் படைக்கிறானோ இல்லையோ, அப்பப்போ இலக்கியத்தனமா படம் எடுத்து போடோணும் எண்டது நான் வாழ்க்கைல கண்டறிந்த உண்மை காந்தாரி. ஏனெண்டா இங்க எவனுக்கும் ஒரு படைப்பை வாசிக்க டைம் இல்லை. வாசிச்சவனும் எதுக்கு மத்தவன் எழுதினதை தான் வாசிக்கோணும் எண்டு தானே எழுதி தானே வாசிக்கிறான். ஆக எங்கட இலக்கியம் மற்றவனை போய்ச்சேருவதற்கு இருக்கும் ஒரே வழி, போட்டோ பிடிச்சு போடுறதுதான். போட்டோ போட்டா உடனே தக்காளிகள் நம்மள இலக்கியவாதி எண்டு நம்பிடுவாங்கள். ஒருக்கா நம்பிட்டாங்கள் எண்டால், அதுக்குப்பிறகு சும்மா கிடுகு வேஞ்சுகொண்டு இருந்தாலும் தேடி வந்து பேட்டி எடுப்பாங்கள். விருதெல்லாம் குடுப்பாங்கள். சக இடதுசாரிகள் சேர்ந்து தோழர், சகோ எண்டுவாங்கள். ஆனா நான் அதோட விட்டிருக்கோணும் காந்தாரி. குளிருக்க கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிடன். விஷயம் தெரியாம இடதுசாரிகளை சீர்திருத்த வெளிக்கிட்டன்.
 • என்ன செய்தனி?
 • "இனிமேலும் இடதுசாரிகள் குளிருக்க அம்மணமாக இருக்காம, முதலில் ஓவர்கோட் போடோணும்” எண்டு அந்த படத்தோட ஒரு ஸ்டேடஸ் போட்டன்.
 • நல்லாத்தானே இருக்கு?
 • எண்டுதான் நானும் நினைச்சன் காந்தாரி. ஆனா என்னை முதலாளித்துவ அடிமை நாய் எண்டிட்டாங்கள். லைக் ஒண்டுமே விழேல்ல. தோழர் எண்டு இவ்வளவுகாலமும் சொன்னவன் கூட ஜகா வாங்கிட்டான். எல்லாமே சந்தர்ப்பவாதம் காந்தாரி. இவனெல்லாம் இடதுசாரியா. சேகுவாரா எண்டா நெத்தில போட்டிருப்பான் காந்தாரி. நானெண்ட படியா அன்பிரண்ட் பண்ணினதோட விட்டிடன்.
 • இடதுசாரி எண்டாலே அடுத்தது சேகுவாராதானா? ச்சிக். நீ உண்மைலேயே கொலை பண்ணினியா? பொய்தானே? நீ இப்போ எங்க இருக்கிறாய்? ரஷ்யாவா?
 • ரசியா நான் நினைச்சமாதிரி இல்லை காந்தாரி. இஞ்ச இடதுசாரித்துவம் செத்துப்போயிற்றுது. எப்ப வாழ்ந்தது எண்டு குறுக்க கேக்காத. இடதுசாரித்துவம் எண்டால் என்ன என்று மறுக்கா கேப்பன். பதில் சொல்லுவியா? ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே ரூசிய இலக்கியமும் செத்துப்போயிற்று காந்தாரி. முந்திமாதிரி மூளை கழண்டு எழுதிறதுக்கு எவனுமே இப்ப ரஷியாவில கிடையாது. எல்லாருமே இப்போ பலோவர்ஸ். பேமசானவன் என்ன சொன்னாலும் அது பேதி மாத்திரையேயானாலும் குடிச்சிட்டு கக்கூசுக்கேயே கிடப்பாங்கள். அங்கிருந்தே அருமை எண்டுவாங்கள். எவனுமே சுயமா சிந்திக்கிறதில்ல. கேள்வி கேக்கிறதில்ல. எல்லாமே அவனுக்கு வரம். அம்மா வரம். அப்பா வரம். சாப்பிடுற சாப்பாடு, முதலாளி, நண்பன், புடின் எண்டு எல்லாமே வரம் காந்தாரி. ஜனநாயகம் எண்டா அதுவும் வரம். கம்யூனிசம், சோசலிசம், கிறிமியா எதெண்டாலும் வரம். கேள்வியே இல்லாம கொண்டாடுவாங்கள். கொண்டாடாதவனை திட்டுவாங்கள். சொந்தநாடு, சுதந்திரம், எண்ணை கலக்காத தண்ணி, இது எல்லாமே வரம். கிடைச்சா எடுக்கிறான். கிடைக்காட்டி போயிடுவான். கேள்வி கேக்கமாட்டான். அப்படியே கேக்கத்தொன்றினாலும் கண்ணாடிக்கு முன்னால நிண்டு காணி நிலம் வேணும் பராசக்தி எண்டு கவிதை பாடுவான். புரட்சி எல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பக் பண்ணப்பட்ட பால்மா. காலாவதியாயிற்று. இண்டைக்கு எல்லாருமே வசதியா, கோர்ட்டு சூட்டு போட்டுக்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறாங்கள் காந்தாரி. இந்த உலகத்தில எனக்கு இடமில்ல காந்தாரி. எண்ட உலகத்தில எவனுக்குமே இடமில்ல. இவங்களோட சேர்ந்து என்னால ஆட ஏலாது காந்தாரி. 
  ஒண்டு கேட்கட்டா காந்தாரி? இரண்டும் இரண்டும் நாலு எண்டத எவன் தீர்மானிச்சது? அண்டைக்கு திடீரென்று ஒரு டவுட் வந்திச்சு. யாரோ ஒருத்தன் நியமிச்சு வைக்க அதை பின் பற்றுறதுதான் இஞ்ச நடக்குது. நான் இரண்டும் இரண்டும் ஐஞ்சு எண்டுறன். நீ கேப்பியா? இரண்டும் இரண்டும் எத்தினை சொல்லு பார்ப்பம்?
 • காந்தாரி.. எங்க போயிட்டாய்?
 • ரெண்டும் ரெண்டும் எத்தினை எண்டு சொல்லேன்?
 • ஏன் இப்பிடி விசர்க்கேள்வி கேக்கிறாய்?
 • பார்த்தியா? கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கிறவனை லூசு ஆக்கிட்டாய். ஏன் இரண்டும் இரண்டும் ஐந்தாகக்கூடாது காந்தாரி. இரண்டு + இரண்டு + அமு கொன்ஸ்டன்ட் = ஐஞ்சு. இப்ப விளங்குதா? நான் உலகத்துக்கு அமுதவாயன் கொன்ஸ்டன்டை அறிமுகப்படுத்திறன். இதால வாற நன்மையைப் பாரு காந்தாரி. மார்ஜின் ஒப் எரர் ஒண்டு. மார்ஜின் ஒப் எரர் எண்டது ரெண்டும் ரெண்டும் நாலுலயும் இருக்கு காந்தாரி. இரண்டு தேங்காயும் ரெண்டு தேங்காயும் கூட்டேக்க ஒரு தேங்காய் அழுகலா கூட இருக்கலாம். ஒரு தேங்காய் பெரிசாகவும் இருக்கலாம். எது தேங்காய் எண்டதில கூட்டல் பெறுமானம் தங்கியிருக்கு. விளங்குதா? இப்போ ரெண்டும் ரெண்டும் ஐஞ்சு எண்டு சொல்லுறதும் அப்பிடித்தான். என்ன வித்தியாசமெண்டால், அரை, கால் எண்டு இருக்கிற மார்ஜின் ஒப் எரர் இந்த விதில ஒண்டாகுது. அவ்வளவுதான். அதாவது கூட்டேக்க ஒண்டை விட்டாலும் பிறகு போட்டிடலாம். ஒருத்தன் ஐஞ்சு தேங்காய் கேக்கிறான். நீ ரெண்டு ரெண்டா சாக்குக்குள்ள போட்டுட்டு ஐஞ்சு தேங்காய்க்கு காசை வாங்கலாம். அவன் கண்டுபிடிக்காட்டி உனக்கு ஒரு தேங்காய் லாபம். கண்டுபிடிச்சாலும் அமுதவாயன் கொன்ஸ்டன்ட் எண்டு சொல்லி ஒரு தேங்காயைக் கொடுக்கலாம். விளங்குதா? முதலாளித்துவம் காந்தாரி. சிலர் ஏமாற்றுவித்தை எண்டுவாங்கள். பேசிக் மதமடிக்ஸ். பஸ்சுக்கு டிக்கட் காசு குடுக்கேக்க கொண்டக்டர் மிச்சகாசு தராம போறான். உன்னை பொறுத்தவரைக்கும் அங்க ஒன்பது ரூவாவுக்கும் பத்துரூவாவுக்கும் வித்தியாசமில்ல. ஆனா ஒரு டொபி வாங்கிட்டு, மிச்சக்காசு ஒரு ரூவா கடைக்காரன் தராட்டி உனக்கு கோவம் வருது. எல்லாமே உண்ட மூளைல எப்பிடி பதிவாகுது எண்டதில இருக்கு காந்தாரி. ஒரு காலத்தில எண்ணிக்கை எண்டது எதை எண்ணுறம் எண்டதில தங்கப்போகுது பாரு. சார்பு வேகம் மாதிரி சார்பு கூட்டல். சார்பு கழித்தல். அமுதவாயன்ஸ் ரிலேட்டிவிட்டி தியரி ஒப் நம்பர்ஸ். எப்பிடி?
 • உனக்கு மறை கழண்டுட்டு. வேலை வெட்டி இல்ல. அதாலத்தான் இப்பிடி அலம்புறாய்.
 • எனக்கு வேலை வெட்டி இல்லைத்தான் காந்தாரி. உலகத்தில என்னைத்தவிர மிச்ச எல்லாரும் பிஸியா இருக்கிறத பார்க்கேக்க நாம வேற உலகத்தில்தான் வாழுறோமா எண்ட டவுட்டு வருது. வேலைக்கு வாறவங்கள் எல்லாம் பயங்கரமா குத்தி முறியிறாங்கள். யாரைக்கேட்டாலும் பிஸி. பிஸி டே. பிஸி மோர்னிங். பிஸி வீக் எண்டு. அப்பிடி என்னடா பிஸி? எனக்கு விளங்கிறதேயில்ல. வேலை பிஸி. பிள்ளை வளர்க்கிற பிஸி. அதுவும் இந்த கலியாணம் கட்டினவங்களிண்ட அலப்பறை தாங்க முடியேல்ல. உள்ள சினிமாப்படம் எல்லாம் பார்க்கப் போறியள். வெள்ளிக்கிழமை கிளபுக்கு போறாங்கள். அத்தினை கிரிக்கட் மட்சும் பாக்கிறாங்கள். நேரம் காலம் இல்லாம பேஸ்புக்கில நீங்க தாலி அறுக்கிறீங்கள்? அப்பிடி நீங்க என்னதான் பிஸியா பண்ணுறீங்கள் எண்டு விளங்கேல்ல.
 • அவை அவைக்கு அவை அவைண்ட இண்டரெஸ்ட். பிஸியா இருக்கிறினம். உனக்கென்ன?
 • எனக்கு கடுப்பு காந்தாரி. என்னால எல்லாரையும் போல பிஸியா இருக்கேலாம இருக்கே எண்ட கடுப்பு. எல்லாரும் பிஸி எண்டு சொல்லுறதால நான் இப்ப சும்மா இருக்கத்தொடங்கீட்டன். சும்மா இருக்கிறதெண்டா சும்மா இருக்கிறது. காலமை கட்டிலிலேயே கிடக்கிறது. பல்லு விளக்காம ஒரு டீ. பிறகு அப்பிடியே பிரிட்ஜுக்க இருக்கிற பர்கரை அவனுக்க வச்சு சூடாக்கி சாப்பிடுறது.பிறகு கக்கா. படுக்கிறது. பிறகு ஒரு டீ. பிறகு சாப்பிடுறது. படுக்கிறது. ஏலாது. செத்தாலும் வேண்டாம் எண்டுவாய் காந்தாரி. ஆனா நான் வலு பிடிவாதமா சும்மா இருக்கிறன். ஏழு நாள் சும்மா இருந்தன். எட்டாவது நாள் முடியேல்ல காந்தாரி. சும்மா இருக்கேலாம ஒரு ஸ்டேடஸ் போட்டன்.
 • "ஏழு நாட்கள் சும்மா இருந்தேன் ... பீலிங் எக்சைட்டட்."
  உடனே எங்கே இருந்தானோ தெரியாது. வந்திட்டான் ஒரு எழுத்தாளர். “கிளாட் டு கியர் … சும்மா இரு என்று பாரதியே சொல்லியிருக்கிறான். அதனை திருக்குறள் போல சுருக்கமாக ஸ்டேடஸ் போட்டு தமிழ் அழியாமல் வளர்க்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்”. கொமெண்டு போடுறார் மாப்பிள்ள. தமிழ் என்னடா தாடியா மீசையா வளர்க்கிறதுக்கு? ஆளாளுக்கு வளர்க்க வெளிக்கிட்டீங்கள்? ஆரெல்லாம் தமிழ் வளர்க்கிறதெண்டு ஒரு விவஸ்தையே கிடையாதா? சும்மா இருந்தா ஞானம் வந்திடுமா? ஒருத்தன் ஏழு நாள் வெட்டியா இருந்திட்டு எட்டாம் நாள் ஸ்டேடஸ் போட்டா, இவர் ஞான மார்க்கமாம். பாரதி சும்மா இருந்தானா காந்தாரி. அறைஞ்சன் எண்டால் தெரியும். இப்பிடித்தான் ஒரு கஞ்சாகேஸ் பாரதியும் கஞ்சா அடிச்சான் எண்டு சொல்லி சிரிக்கிறான். எல்லாத்துக்கும் ஏண்டா அவனையே இழுக்கிறீங்கள்? அவன் மனிசிக்கு இழுத்தமாதிரி நான் உங்களுக்கு இழுக்கப்போறன். வழமையா இதெல்லாம் வெளிய சொல்லமாட்டன் காந்தாரி. ஆனா அண்டைக்கு மனசு கேக்காம, அப்பிடியே எழுதீட்டன். தப்புத்தான். நான் பப்ளிக்கா போட்டிருக்கக்கூடாதுதான். குட்டி பாரதி கோவிச்சிட்டான். பாரதிட்ட இருக்கிற முற்கோபம் அப்பிடியே இருக்கு பயலிட்ட. அடுத்த கணமே அன்பிரண்ட் பண்ணீட்டான். பண்ணினாப்பிறகும் பெடிக்கு கோவம் குறையேல்ல. தண்ட டைம்லைன்ல ஸ்டேடஸ் போடுறார்.
  "நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்து
  விட்டால்"
  ஓ இஸ் இட்? நல்லாய் கவிதை எழுதுறாய் தம்பி. ஆனா சொந்தமா எழுது. ஒருகாலத்தில பள்ளிக்கூட விளையாட்டு இல்லத்துக்கு உண்ட பெயரை எல்லாரும் வைப்பாங்கள். பிளடி பெக்கர். அதே கவிதைல தாண்டா இந்த வரியும் வருது.
  "அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்
  ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
  நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு
  நெடுநாளிருவரும் பகைத்திருப்பார்"
  போட்டிட்டன் காந்தாரி. அப்பனுக்கு கோவம் வந்திட்டுது. எண்ட கொமெண்டை தூக்கிட்டார். கூடவே என்னை புளொக்கும் பண்ணீட்டார். புளக் பண்ணினா என்னட்ட இருந்து தப்பிடுவீங்களா? பேக் ஐடில வந்து டார்ச்சர் பண்ணுவன்.
 • வர வர உண்ட டோன் சரியில்ல அமுதவாயன். நீ எங்க இருக்கிறாய் சொல்லு? பக்கத்தில ஆரும் இருக்கிறிமா?
 • ஒருத்தன் இருந்தான். இப்ப இருக்குது.
 • Wt r u talking? .. ஆரு? எது? ...
 • டி கொம்போஸ் ஆகுது காந்தாரி. அனேரபிக் மேடபலிசம். பிரேதம் புளோட் ஆகி ஆளு கொஞ்சம் கொஞ்சமா நாறிக்கொண்டிருக்கிறான். தன்னுடைய ஸ்டேடஸால இவ்வளவு காலமும் நாறடிச்சவன். அத கடைசி ஸ்டேடஸ்லயும் விடேல்ல பாரு.
 • யூ நீட் ஹெல்ப் அமுதவாயன் ... நீ எங்க இருக்கிறாய். சொல்லு


---------------------------------------------------------------------------------------------------------------------------------------
- பாகம் 3 வியாழன் அன்று!

பாகம் ஒன்று : டெம்டேஷன்

Contact form