ஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - புரபைல் பிக்சர்

Feb 26, 2015

பாகம் 3 புரபைல் பிக்சர்


 • அமுதவாயன், நீ எங்க இருக்கிறாய்? உண்மையிலேயே நீ ஒருத்தனை கொலை செய்திட்டுத்தான் என்னோட சட் பண்ணிகொண்டிருக்கிறியா?
 • எத்தினை தடவை சொல்லுறது காந்தாரி? நம்ப மாட்டியா? போட்டோ எடுத்து அனுப்பவா?
 • எனக்கு வேண்டாம் … முதலில நீ அம்புலன்ஸுக்கு கோல் பண்ணு. போன் நம்பர் ஏதாவது சொல்லு அமுதவாயன். நீ எங்க இருக்கிறாய் இப்போ? ஸ்ரீ லங்காவா? ரசியாவா?
 • சொல்லுவன். ஆனா சொல்லுறதுக்கு முதல் எண்ட கதையை நீ கேட்கோணும் காந்தாரி. நாளைக்கு நான் செத்தா, இவன் இதுக்குத்தான் செத்தான் எண்டு சொல்ல ஒருத்தியாவது வேண்டாமா? நீ அந்த ஒருத்தியா இருப்பியா காந்தாரி?
 • இது எதுவுமே சரியில்ல அமுதவாயன். பக்கத்திலேயே ஒருத்தனை வெட்டிப்போட்டிட்டு வீண் வியாக்கியானம் கதைக்கிறதும், அதை நான் கேக்கிறதும். சரியில்ல. ஐ ஆம் லீவிங்.
 • கேப்பையினார் கேதீஸ்.
 • கேப்பையினார் கேதீஸ் காந்தாரி. மகா கிருமி. அவண்ட பெயரை உச்சரிக்கவே வெட்டோணும் போல கிடக்கு .. ராஸ்கல். பொறு வாறன்.
 • என்னது. கேப்பையினார் கிருமியை …. அமுதவாயன் … W R U?
 • சொறி காந்தாரி. போய் சாக்கை அவுட்டுப் பார்த்தன். கேப்பை நல்லா கறுத்திட்டான். எம்பாம் பண்ணினது காணாது. இன்னும் ரெண்டு நாள் எண்டால் வெளிய நாறத்தொடங்கிடும்.
 • கேதீஸ் … அவனோட உனக்கென்ன பிரச்சனை அமுதவாயன்? அவன் அவ்வளவு கெட்டவன் இல்லையே .. அவனைப்போய்? .. உனக்கென்ன விசரா?
 • உனக்கு மனிசரை இன்னமும் மட்டுக்கட்ட தெரியேல்ல காந்தாரி. ஸ்ரீலங்காவுக்கு திரும்பி வந்தன். ஏன் வந்தன்? தாய் நாட்டுக்கு சேவை செய்யோணும் காந்தாரி. ஆரெண்டே தெரியாத மனுஷர். குளிர். மொழி. ஏன் அதுக்க கிடந்தது முறியோணும் சொல்லு? அதால ரஷியாவை தூக்கி எறிஞ்சிட்டு வந்தன். ஆனா இண்டைக்கு அந்த கேப்பையினாரால நான் ஒரு கொலைகாரன் காந்தாரி. ஆருக்கு விசர்? எனக்கா அவனுக்கா?
 • அது எனக்கு தெரியாது. நீ எப்போ ரசியாவில இருந்து வந்தாய்? அங்க படிப்பு முடிஞ்சுதா? ஸ்ரீலங்கா எப்ப வந்தனி? என்ன நடந்துது. அத சொல்லு.
 • படிப்பு முடியேல்ல காந்தாரி. எத்தினை வருஷமெண்டு நானும்தான் படிக்கிறது. ரசியாவிலையும் சிலபஸ் சரியில்ல காந்தாரி, படிப்பு லேசுப்பட்ட வேலை இல்லை எண்டது ரஷியாவிலதான் எனக்கு விளங்கினது. படிச்ச படிப்பு ஒரு கொலை செய்யத்தான் பயன்பட்டுது. எனக்கும் மற்ற ஆக்கள் மாதிரி திங் பண்ணத்தெரியாது பார். செட் ஆகேல்ல. ஒருக்கா அனாடமி பிரக்டிகல். ஒரு பிரேதத்தை, சட்டை கூட போடாம அம்மணமா படுக்க வச்சு, உள்ளுக்க எல்லாத்தையும் துலாவுறாங்கள். அந்த ஐட்டத்தைக் காட்டி ஆம்பிளை எண்டுறாங்கள். மூஞ்சியை பாக்கவே தெரியுது. பேந்து எதுக்கு செத்த மனிசனிலயும் கிளுகிளுப்பு வேண்டிக்கிடக்கு? எனக்கு டொக்டர்மாரில எந்த கறலும் கிடையாது காந்தாரி. ஆனா ஊசி எண்டால் மட்டும் பயம். இவங்கள் ஊசியை குத்தேக்க மூஞ்சில பளாரென்று அறையோணும் போல இருக்கும். சொந்த அறிவு இல்லாதவங்கள். நுளம்பு எப்பிடி இரத்தம் உறிஞ்சுது எண்டு பார்த்து, அத கொப்பி பண்ணி ஊசியை டிசைன் பண்ணியிருக்கிறாங்கள். லூசங்கள். ஒரு ஊசில கூட ஒரிஜினாலிட்டி இல்லாத இனம். பகுத்தறிவு எண்டு சொல்லிக்கொண்டு திரியுது. இனி ஆஸ்பத்திரி பீஸை கூட பெரிய ஊசி மாதிரி ஒண்டாலதான் உறிஞ்சுவாங்கள் பார்.
 • கடவுளே .. இனி உண்ட பிரசங்கம் தொடங்கிடுவியா? நீ எங்க நிக்கிறாய் எண்டு முதலில சொல்லு?
 • எங்களுக்கு எப்பவுமே மத்தவனை குத்திறதில ஒரு சந்தோசம் காந்தாரி. கிளியோபட்ராவைத் தெரியுமா? ஒட்டகப்பாலில குளிக்கிற அந்த பைத்தியம்தான். அவ தண்ட பணிப்பெண்கள் ஒருத்தரையும் பிளவுஸ் போட விடமாட்டாவாம். ஏனெண்டா ஒவ்வொருமுறையும் அம்மணமா அந்த பணிப்பெண்களை பார்க்கேக்க, கிளியோபட்ராவுக்கு தான்தான் உலகின் சிறந்த அழகி எண்ட எண்ணம் வருமாம். அப்பிடி வராமப்போனா, கோவத்தில அந்த பணிப்பெண்களின்ட மார்புக்காம்பில தங்க ஊசியால குத்துவாவாம். அவளவை ஆ ஊ என்று கத்தேக்க இவவுக்கு பயங்கர சந்தோசம் வருமாம். இந்தப்பயத்தில பணிப்பெண்கள் எல்லாம் எருமைப்பாலில குளிச்சு தங்களை அசிங்கமாக்க ட்ரை பண்ணினதுகளாம். பகிடி என்னவென்றால் ஒட்டகப்பாலை விட எருமைப்பாலிலதான் டக்ஸ்ட்ரோஜன் சல்பைட் அதிகமாக இருக்கு. அது சருமம் பளபளவென பிரகாசிப்பதை உறுதிப்படுத்தும்.
 • ஆருக்குத்தெரியும்? அடிச்சு விடுறதுதான். டிவில சொல்லேக்க எப்பவாவது விளக்கம் கேட்டிருக்கிறமா? ஒருத்தன் மினுக்கிக்கொண்டு டொக்டர் கோட் போட்டுக்கொண்டு சொன்னா நம்புவீங்கள். ஒரு கொலைகாரன் சொன்னா நம்பமாட்டீங்களா? இதாலதான் யாழ்ப்பாணத்தில கண்ட நிண்ட கொலைகாரன் எல்லாம் டொக்டர் ஆகப்போறன் எண்டு அடம் பிடிக்கிறவன்.
 • இப்ப இந்தக்கதை எதுக்கு சொல்லுறாய்?
 • விஷயம் இருக்கு. பேஸ்புக்கில மொக்கை படத்துக்கெல்லாம் லைக் விழுது காந்தாரி. ஒருத்தன் மனிசியை கொஞ்சிக்கொண்டிருக்கிறான். ஒரு கையை தோளில போட்டபடி மனிசிக்கு மூக்கால கிஸ் குடுக்கிறார். மற்றைக்கையால செல்பி. சகிக்கேல்ல காந்தாரி. அவர் தலையெல்லாம் படையா நரைச்சு, ஷேவ் எடுக்காம அஜித் மாதிரி இருக்கிறார். பக்கத்தில இருக்கிற ஷாலினிக்கு கிஸ் குடுக்கிறார். அந்த ஷாலினி உர்ர்ர்ர்ரென்று போனை பார்க்குது. போஸ் குடுக்கிறாவாம். மூதேவி மூஞ்சியை பார்த்தாலே மூண்டு நாளு வவுத்தால போகும் காந்தாரி. அறுநூறு லைக் காந்தாரி. அறுநூறு லைக். ஐஞ்சோ ஆறு மெகா பிக்ஸல், ஆறாயிரம் ரூவா கமரா போன். அவுட் ஒப் போகஸ். முழு போகசும் மனிசிண்ட காதுக்குச்சில இருக்கு. எங்களுக்கு காது குத்திறதுதான் அந்த சோடிக்கிருக்கும் ஒரே போகஸ். அறுநூறு லைக். எனக்கென்னவோ அது அறுநூறு கிளியோபட்ராக்கள் செருகின ஊசி மாதிரி இருந்துது. பேஸ்புக்கில ஒவ்வொரு லைக்கும் ஒவ்வொரு கிளியோபட்ரா ஊசி காந்தாரி. இங்க எல்லாருமே கிளியோபட்ராதான். முன்னால பிளவுஸ் போடாம போய் நிண்டா எங்களுக்கும் தங்க ஊசிதான். குத்திடுவாளுகள். தனக்கு பிடிக்காத படம். தன்னை விட பெட்டரா ஒரு படம். ஒரு ஸ்டேடஸ் போட்டா உடனே லைக்தான். ஒவ்வொரு போட்டோவையும் லைக் பண்ணும்போது 'குத்துங்க எசமான் குத்துங்க' எண்ட பீலிங்கோடதான் லைக் பண்ணுறது. கொமெண்டு போடுறது கிட்டத்தட்ட சவக்குழியில கமலஹாசன் குத்தி வைக்கிற ரோசா செடி காந்தாரி. ரோசா செடி..
 • நீயும் அந்த அஜித் ஷாலினி செல்பியை லைக் பண்ணினியா?
 • விடுவனா? ஊசி கிடந்துது, குத்தீட்டன். நான் மூண்டாவது ஆள். எனக்கு முன்னமே அஜித்தும் சாலினியும் தங்களை தாங்களே குத்தீட்டாங்கள்.
 • ஏன் அமுதவாயன், அவனவன் தண்ட புரபைலில படம் போடுறான். உன்னை ஆரும் புரபைல் போட்டோ போடக்கூடாதென்று சொன்னாங்களா? போடேன்.
 • கடுப்பை கிளப்பாத காந்தாரி. ஆனி வந்தா எனக்கு நாப்பது வயசாகுது. இன்னும் ஒரு கலியாணம் கட்ட முடியேல்ல. அம்மாக்காரிக்கு நான் குடுக்காத அலுப்பு இல்ல. ஒவ்வொரு எக்ஸாமுக்கும் ஒவ்வொரு குதிரை அரேஞ் பண்ணினனி. கலியாணம் கட்டுறதுக்கு ஒரு கழுதையை கூட அரேஞ் பண்ண மாட்டியா எண்டு வறுத்து எடுத்திட்டன். குறிப்பு பாக்கிறாவாம். டொக்டர் மாப்பிள்ளை எண்டா சும்மாவா? எண்டுறா. நாப்பது வயசுக்கு பிறகு டொக்டர் மாப்பிள்ளை இல்ல, அமெரிக்கன் ஜனாதிபதியேயானாலும் ….. இத நான் எப்பிடி அம்மாவுக்கு சொல்லுறது காந்தாரி?
 • நீயா ஒருத்தியை தேடுறதுதானே?
 • கிடைக்கிறாள் இல்ல காந்தாரி. ஒரு நாள் சென்பீட்டர்ஸ்பேர்க் பார்ல தண்ணி அடிச்சுக்கொண்டிருக்கிறன். தனிய இருந்துதான். உலகத்தில எல்லாத்துக்கும் சோடி இருக்கு காந்தாரி. அப்பிடி இல்லாதவனும் பாருக்கு வந்தால் ஐஞ்சு நிமிஷம், ஒரு டக்கீலா ஷாட்ல மாட்டரை பைனலைஸ் பண்ணி டான்ஸ் புளோருக்கு போயிடலாம். என்னால முடியேல்ல காந்தாரி. அண்டைக்கு ஒரு பெட்டை பார்ல தனிய இருந்துது. விட்டேத்தியா என்ன மாதிரியே இருந்துது. கையில கிளாஸ் இல்ல. ஆருக்காகவோ எதிர்பார்த்து காத்திருக்கிற மாதிரி. தன்னுடைய இளவரசன் வெள்ளைக்குதிரையில் அந்த பாருக்குள் வந்து இறங்குவான் என்று அவள் கனவு கண்டிருக்கலாம். நானும் குதிரை ஓடின கேஸ்தானே காந்தாரி. துணிவு வந்திட்டுது. ஆனாலும் அதுக்கு எப்பிடி ட்ரிங்க்ஸ் வாங்கிக் குடுக்கிறது எண்டு தெரியேல்ல. ஹாய் எண்டு சொல்லேக்கையே கண் அங்க போகுது காந்தாரி. பிரீயா கதைக்க முடியேல்ல. கை குலுக்கி “ஐ ஆம் அமு” எண்டன். ஐ அனஸ்தாசியா எண்டாள். அவளுக்கு இங்கிலீஷ் வாயில நுழையுதில்ல. எண்ட வாயில அவளிண்ட பெயர் நுழையுதில்ல. அவள் அவசர அவசரமா வெளிக்கிட்டு வந்திருக்கோணும். கால்வாசி உடுப்புத்தான் போட்டிருந்தாள். நான் இந்தமுறை ஒண்டையும் பார்க்கேல்ல காந்தாரி. “அமுதா, போக்கஸ் போக்கஸ்” எண்டு மைண்டு சொல்லுது. ஆனா அவள் விடேல்ல காந்தாரி. கதைக்கேக்க சும்மா இருக்காம ஏதாவது செய்துகொண்டிருந்தாள். போனில முகம் பார்த்து லிப்ஸ்டிக் டச் பண்ணினாள். அது ரெண்டையும் அட்ஜெஸ்ட் பண்ணுறாள். கண் மடலுக்குபோய் எதையோ தடவுறாள். அட கருமமே, கண் திறந்திருந்தா அந்த இடம் ஒருத்தருக்குமே தெரியாதே. அதில ஏன் பூசுறாய்? நித்திரை கொள்ளேக்கையும் அழகா இருக்கோணும் எண்டா? எதுக்கு? மனசுக்க நாலு வார்த்த நல்லா வந்துது. ஆனா கேக்கேல்ல. தொடர்ந்து என்னை டிஸ்டர்ப் பண்ணிக்கொண்டே இருந்தாள். நான் விடேல்ல. இதை ஒரு விரதம் மாதிரி கடைப்பிடிச்சன். தனிய மூஞ்சியை மட்டும் பாருடா அமுதவாயன். மிச்சம் எல்லாம் பிறகு. அவள் சும்மா ஆளா. நாள் முழுக்க கண்ணாடிக்கு முன்னால நிண்டு முடிஞ்ச கொண்டையை நமக்கு முன்னால சடக்கென்று அவுட்டு திரும்பவும் முடியுறாள். கையில்லாத சட்டை. ரசியாக்காரி. கமக்கட்டு கிளீனா வெள்ளையா இருந்துது. கில்லட்டா பிக்ரேஸரா பாவிக்கிறீங்கள் எண்டு கேட்க யோசிச்சன் காந்தாரி. ரசிக்க முடியேல்ல. நீ ஏன் இப்பிடி காட்டுற? காட்டாத. கதை. நிறைய கதை. உன் ஊரு இலக்கியம் கதை. ஐஸ் ஹோக்கி, ஸ்கேட்டிங் எதெண்டாலும். நான் எங்கட ஊரு இலக்கியம் கதைக்கிறன். யூ நோ வெண்முரசு? வைட் ட்ரம்ஸ். பிக் லிட்ரேச்சர். ஓல்ட் ஸ்டோரி. ரீமேக். குட் வன். கதைக்க விருப்பமா இருக்கு காந்தாரி. ஆனா அவளுக்கு அவசரம். அரை மணித்தியாலத்துக்கு முன்னூறு ரூபிள் எண்டுறாள். அதுகூட வெறும் உரைநடைக்குத்தான். கவிதை எண்டால் ஐநூறு ரூபிள்.
 • எனக்கும் அதே ஆச்சரியம் காந்தாரி. நானொரு கவிஞர் எண்டதால ஐநூறு ரூபிள் குடுக்க சம்மதிச்சிட்டன். அண்டைக்கு இரவு கவிதை பொழிஞ்சம் காந்தாரி. ஆறு மணித்தியாலம். ஐயாயிரம் ரூபிள். ஆயிரம் ரூபிள் டிஸ்கவுண்ட் தந்தாள். உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே. அவசரத்தில ட்ரான்ஸ்லேட் பண்ண முடியேல்ல. அப்பிடியே ஹஸ்கியா அவளிண்ட காதுக்குள்ள அடிச்சுவிட்டன். அவளுக்கு பிடிச்சுக்கொண்டுது. அவள் “எஸ்சி பெல்ளு புளு” எண்டாள். நான் “யதொசா” எண்டன். அதுதான் ரசியாவில நான் பண்ணின முதல் காதல் காந்தாரி. ஆறு மணிநேர காதல். அடுத்தநாளும் அதே பார். இம்முறை வேற கவிதை ஒண்டும் வரேல்ல. அவசரத்துக்கு பாவமில்ல, “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு” எண்டன். முந்தைய கவிதையை விட இது நல்லா இருக்கெண்டு ஒரு பச்சக் தந்தாள். சொர்க்கம் காந்தாரி. அப்பிடியே பிக் அப் ஆயிட்டம். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கவிதை. யூ நோ காந்தாரி. வைரமுத்து கவிதை எல்லாம் எழுதிருக்கிறார்.
 • அப்புறம் என்னாச்சு?
 • அவள் ரேட்டை ஏத்திட்டாள். சேல்ஸ் டெக்னிக். ஆரம்பத்தில ரேட்டை குறைச்சு, பொருளை நல்லா பாவிக்கவைத்து, அப்புறமா கூட்டிறது. ஆனாலும் ஐயாயிரம் ரூபிள் டூ மச் காந்தாரி. இத்தனைக்கு அவள் அதே “எஸ்சி பெல்லு புளூ”தான் ஒவ்வொருநாளும் சொல்லுறாள். அவள் ரசியனே கிடையாது எண்டு பிறகுதான் தெரிஞ்சுது காந்தாரி. செர்பியாகாரி. தாயும் தகப்பனும் உள்நாட்டுப்போரில செத்துப்போயிட்டுதுகள். இவள் அகதியா வந்து எப்பிடியோ இஞ்ச மாட்டியிருக்கிறாள். பாரு காந்தாரி. அவளும் என்னைப்போல ஒரு ஒடுக்கப்பட்ட இனம் எண்டு தெரிஞ்ச உடனே, காதல் இன்னும் பீறிட்டுது. ஸ்டில் அவளிண்ட ரேட்டு கொஞ்சம் கூட. காதலுக்காக வாழ்க்கைல நான் குடுத்த விலை மிக அதிகம் காந்தாரி. வேர்த் இல்ல. இத்தனைக்கும் அவளுக்கு ஒரே ஒரு ரசியன் வார்த்தைதான் தெரியும். “எஸ்சி பெல்ளு புளு”. தமிழில ட்ரான்ஸ்லேட் பண்ணினா “ஐ லவ் யூ”. இதை வச்சு ஐஞ்சு நாள் என்னை ஓட்டியிருக்கிறாள். அதுக்கு முதலும் பலரை ஓட்டியிருப்பாள். ஸ்ரீலங்கன் கூட போயிருப்பான். யாழ்ப்பாணத்தான் கட்டாயம் போயிருப்பான். அவள் தனக்கு தமிழ் தெரியும் எண்டு சொன்னவள். என்னென்று கேட்டன். ஒரே ஒரு வார்த்தை. பச்சை தூசணம். யாழ்ப்பாணத்தான்தான் எப்பவும் கெட்ட வார்த்தையை மற்ற மொழிக்காரருக்கு படிப்பிக்கிறவன். எனக்கு அவளில பயங்கர கோவம். வேண்டாம் எண்டு விட்டிட்டு வந்திட்டன். இவளுக்குப்போய் மெனக்கட்டு வெண்முரசுவை ரூசிய மொழியில ட்ரான்ஸ்லேட் பண்ண வெளிக்கிட்டனான் காந்தாரி. அப்புறமாதான் தெரிஞ்சுது. வெண்முரசு ரூசிய மொழியிலதான் எழுதியே கிடக்கு. தமிழிலதான் அதை ஆரும் இனி ட்ரான்ஸ்லேட் பண்ணோணும்.
 • இதான் உண்ட அகராதில லவ்வா?
 • என்ன செய்ய காந்தாரி? எனக்கு மனிசி இல்லை. நாற்பது வயசில அவனவன் நாலு பிள்ளையை பெத்து மேய்ச்சுக்கொண்டு திரியிறான். ஆனா எனக்கு ஒரு மனிசி கூட கிடைக்கேல்ல. போனமுறை லீவில ஊருக்கு போகேக்க, பெட்டா பஸ் ஸ்டாண்டில இரவு யாழ்ப்பாண பஸ்சுக்கு வெயிட் பண்ணிக்கொண்டிருந்தன் காந்தாரி. ஒருத்தன் வந்தான். துண்டு இருக்கு. ஐநூறு ரூவா எண்டான். ரசியன் கரன்சிக்கு மாத்திப்பாத்தன். பட்டை சீப். அறுவது அனஸ்தாசியாக்களுக்கு சமம். வாவ். ஆயிரம் ரூவாயைக் குடுத்திட்டு உள்ள போனன். செனி நாத்தம். குட்டி அறை. துண்டு, பிள்ளையைக் கிடத்தீட்டு என்னட்ட வருது. கூட்டிக்கொண்டுபோனவன்தான் புருஷன். அவன் அறைக்கு வெளிய பிள்ளைக்கு புட்டிப்பால் குடுக்கிறான். வறுமை. ஆனாலும் அதுகள் கூட கலியாணம் கட்டி குடும்பம் நடத்துதுகள் காந்தாரி. இழவு. நமக்கு ஒரு கலியாணம் ஆகேல்ல. ஏன் காந்தாரி?
 • நீ வாழ்க்கையை எதிர்மறையா பாக்கிறாய். அதான். பி பொசிட்டிவ்.
 • அஸ்தினாபுரம் தேடிவந்து உனக்கு அறைவன் காந்தாரி. கூட இருக்கிறவன் எல்லாம் கடுப்பு ஏத்தறான். எப்பிடி பொசிடிவா இருக்கிறது? சத்தியமா சொல்லுறன். இத்தனை வருஷமா பேஸ்புக்கில எவன் கலியாண வீட்டு படம் போட்டாலும் லைக் பண்ணாம விட்டதில்ல. அதில ஒருத்தர் சங்கக்கவிதை எல்லாம் எழுதி இன்வைட் பண்ணுவாராம். நான் லைக் பண்ணோனுமாம். எல்லாமே ஸீன் காந்தாரி. மற்றவன் இங்கிலீஷ்ல போட்டா, இவர் தமிழில வித்தியாசமா … புடுங்கிறாராம். ஆனாலும் லைக் பண்ணினன் காந்தாரி. எங்கட அப்பர் ஆரு செத்தாலும் அங்க போய் தேவாரம் பாடுவார். கோயிலில அவரை பாட விடுறதில்ல. சுருதி போகும். சாமி குத்தம். ஆனா செத்தவீட்டில சுருதியை பிரேதம் கூட கவனிக்காது. அவர் நல்லா இழுத்துப்பாடுவார். அவரிண்ட பரம்பரை நான். எவன் கலியாணம் கட்டி பேஸ்புக்கில படம் போட்டாலும் உடனேயே ஒரு லைக்கை இழுத்து விடுவன். “வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க”. கொமெண்டை போட்டிட்டு நோட்டிபிகேஷனை டிசேபில் பண்ணிடுவன். நானாவது பறுவாயில்ல காந்தாரி. எனக்கு அடுத்ததா ஒருத்தன் எண்ட கொமெண்டை எண்ட பெயரோட கொப்பி பண்ணி போடுவான். நாதாறி. கலியாண சோடி எனக்கும் லைக் பண்ணும். அவனுக்கும் லைக் பண்ணும். ஆரும் பெரிய கைகள் கொமெண்ட் பண்ணியிருந்தா பிறிம்பா அவயளுக்கு தாங்க்ஸ் சொல்லுவினம். என்னை எல்லாம் கணக்கே எடுக்கமாட்டினம். கொஞ்சநாள் பார்ப்பன். தாங்க்யூ எண்டு எண்ட பெயர் மென்ஷன் பண்ணி போடாட்டி கொமெண்டை தூக்கிடுவன். பிறகு ஒரு மூட் வந்தா இரண்டு பேரையும் தூக்கிடுவன். ஒவ்வொருமுறையும் கலியாணவீட்டு ஸ்டேடஸ் லைக் பண்ணேக்க கிளியோபட்ரா ஊசிதான் ஞாபகம் வரும் காந்தாரி. அடங்கொய்யால, நீ கலியாணம் கட்ட நான் லைக் பண்ணோணுமா? நான் இவ்வளவு காலமும் கட்டாம இருக்கிறனே, ஒரு நாயாவது கணக்கெடுத்தீங்களா?
 • உண்ட மனம் சுத்தமில்ல அமுதவாயன். ஏன் இப்பிடி இருக்கிறாய்?
 • இந்த உலகம் என்னை மாத்திட்டுது காந்தாரி. இது பறுவாயில்ல. புதுசா லவ் பண்ணுற ஆக்கள், நூலு விடுறவங்கள் எண்டு இன்னொரு கூட்டம் பண்ணுற லொள்ளு தாங்கவே முடியேல்ல காந்தாரி. அமேசான் காட்டுக்குள்ள ஒரு குட்டி சில்வண்டு இருக்காம். அதிண்ட ஆண் வண்டு, பெண் வண்டை லவட்டுவதற்காக ஆகாயத்தில ஒரே இடத்தில நிற்குமாம். படுவேகமா செட்டை அடிச்சுக்கொண்டு ஒரே ஸ்போட்ல பறந்துக்கொண்டு பலன்ஸ்ல நிற்கிறது இலேசான காரியமில்ல. பெட்டை சில்வண்டுக்கு சீன் போடுறதுக்காக பெடியன் வண்டு செய்யிற வேலை அது. சிங்கன் கனநேரம் அப்பிடியே நிண்டா இவன் ஒரு பெரிய வீரன் எண்டு நினைத்து பெட்டை சந்தோசமாக பறந்துவந்து கிஸ் அடிக்குமாம். நவீன ஹெலிகொப்டர் தொழில் நுட்பங்களுக்குகூட அந்த ஆண் சில்வண்டின் இயக்கங்களை நாசாவுல இப்போ ஆய்வு செய்யிறாங்களாம்.
 • சும்மா அடிச்சு விடுறதுதான் காந்தாரி. அந்த சில்வண்டு மாதிரித்தான் நம்மாளு அப்பிடியே ஆகாயத்தில பறந்துகொண்டே அசையாம நிப்பான். பறக்கத்தானே செட்டை இருக்கு. நீ ஏன் அதை அடிச்சுக்கொண்டு பறக்காம நிக்கிற? அவன் யோசிக்கவே மாட்டான் காந்தாரி. காதல் எண்டு சொல்லி கவிதை எழுதியே சாகடிப்பான்.
  அன்பே.
  நீ போடும் லைக்குக்காய் - என்
  நிலைத்தகவல் ஏங்குதடி.
  நீ போடும் படத்துக்காய்
  கொமேண்டுகள் வேகுதடி. - ஒரு
  முறையேனும் போக் பண்ணி
  என் உயிரென்று சொல்லாயோ?
  உதவத்த கேமெல்லாம்
  இன்வைட்டு பண்ணாயோ?
  பாவம். இப்பிடி கவிதை எழுதினா இவன எவள் சீண்டுவாள்? மொத்தமா விழுவதே ஆறு லைக்குகள்தான். பலன்ஸ் இல்லாம சில்வண்டு தொபுக்கென்று கீழே விழுந்திடுவார். அப்புறம் இன்னொரு கவிதை. ஐந்து லைக்கு. இது வேலைக்காகாது என்று இங்கிலீஷ்ல ஏதாவது பீட்டர் விடுவார். எவனும் எட்டியே பார்க்கமாட்டான். சுப்பர் சிங்கர் ஜெசிக்காவை கிழி கிழி எண்டு கிழிச்சு ஒரு ஸ்டேடஸ். ம்ஹூம். அவள் ஒரு சுத்த தமிழச்சி என்று பாராட்டி இன்னொரு ஸ்டேடஸ். அதுக்கும் ம்ஹூம். என்ன செய்யிறதெண்டு தெரியாம நம்ம சில்வண்டு காத்தில பாலன்ஸ் பண்ண முக்கிக்கொண்டு இருக்கேக்க, அந்தப்பொண்ணு வேற லெவலில கவிதை எழுதும். பெண் இலக்கியவாதி வேறு. விளங்கிடுமா? ஏதோ ஒரு பெரிய தத்துவம் சொல்லுறாப்போல இருக்கும். ஆனா என்னெண்டு கேட்டா ஒரு சனியனும் சொல்லத்தோணாது. சாம்பிளுக்கு ஒண்டு.
  என்னோடு கூடவே
  ஏங்கியது விட்டில்.
  எட்டத்திலே நிலா.
 • அய். நல்லாயிருக்கே. நீ எழுதினியா?
 • நல்லாருக்கா? நாசமறுப்பு. உனக்கெழுதாம, பேஸ்புக்கில போட்டிருக்கலாம். சரி விடு. போட்டாலும் லைக்கு வந்திடுமா காந்தாரி. பொண்ணு சில்வண்டு இப்பிடி கவிதை போட்டா நம்ம ஆம்பிளை சில்வண்டுக்கு ஏதாவது கொமெண்ட் போட்டு பொண்ணை இம்ப்ரஸ் பண்ணோணும் எண்ட விருப்பம் வந்திடும். ஆனா தலைவருக்கு கவிதை விளங்குதில்ல. கூகிளில பொழிப்புரை தேடலாம் எண்டால், இது சொந்தக்கவிதை, அந்த பொண்ணே சொன்னாத்தான் உண்டு. அவளுக்குக்கூட அர்த்தம் தெரியுமோ தெரியாது. சும்மா புளோவில அடிச்சுவிடுறதுதானே காந்தாரி. இவருக்கு வேற வழியில்ல. ஒரு கொமெண்டு போட்டார். “நிலா”வை “நிலவு” ன்னு எழுதியிருந்தா தளை தட்டாது. மற்றும்படி கவிதை அருமை. கிரிட்டிகல் ரிவியூவாம். மூதேவி.
  எனக்கு உதுகளிண்ட அலப்பறை தாங்கமுடியாம அப்பிடியே போய் ரெண்டுக்கும் அப்பினா என்னெண்டு இருக்கும் காந்தாரி. “டேய் …லவ் பண்ணுங்கடா. ஆனா எங்களை ஏண்டா சாவடிக்கிறீங்கள்?” எண்டு தாங்கமுடியாமல் ரெண்டு சில்வண்டிண்ட கவிதையிலையும் போய் கொமெண்டை போட்டிட்டன். போட்டிருக்கப்படாதுதான் காந்தாரி. ஆனா இந்த சாவு வீட்டில தேவாரம் பாடுற குடும்ப குணம் பாரு. விட முடியேல்ல. ஒவ்வொரு ஸ்டேடசும் செத்த பிணம் மாதிரி இருக்கு காந்தாரி. தோடுடைய செவியன் பாடு பாடு எண்டு உமா தேவியார் அங்கர் பால்மாவோட நிக்கிறா. வழியுது. விடேலுமா? ஆனா நான் பாடினா எனக்கு பாடுறாங்கள். பிறகென்ன வழமையான கேஸ்தான்.
 • என்ன கொமெண்டை தூக்கிட்டாங்களா?
 • என்னையே தூக்கிட்டாங்கள்.
 • காதல், கலியாணம் இப்பிடி ஒருபக்கத்தால சீன் போகேக்க இங்கால காதல் தோல்வி, தனிமை எண்டு ஒரு கோஷ்டி புறப்பட்டிடும். தனிமை கொடுமையே. கொடுமை கொடுமையே என்று அடிக்கடி சூரியா நியூயோர்க்கில சுத்துவான். காந்தாரி. எனக்கு இப்போ நாப்பது வயசு. கடந்த இருபது வருஷத்தில அட்லீஸ்ட் ஆறு பெட்டைகளை சீரியசாக காதலிச்சிருப்பன். அதில நாலு என்னைக் காதலிச்சிருக்கும். ஒவ்வொருமுறையும் எண்ட காதல் உடையேக்க மண்டை காயும். வெள்ளைக்காரன் எண்டால் பக் எண்டு சொல்லிட்டு போய்க்கொண்டேயிருப்பான். தமிழில அது தூஷணம் எண்டதால சொன்னா நல்லா இருக்காது. ஆனா அத சொல்லோணும் போல இருக்கும். அப்பிடி ஒரு பீலிங். ஆனா இவனெல்லாம் பாட்டுப்பாடி கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான். எப்பிடி காந்தாரி? ஒண்டு சொல்லட்டா? வலியில துடிக்கிறவன் ஏன் அழுறான் தெரியுமா? வலிக்குதெண்டா? ம்ஹூம். அவனை தனியை விட்டிட்டு ஒளிச்சிருந்து பாரு. கத்தவே மாட்டான். ஆராவது சுற்று வட்டாரத்தில இருந்தா கத்த தொடங்குவான். தன்னுடைய வலியின் கொடுமையை விட, அந்த வலி மற்றவனுக்கு தெரியோணும் எண்டதிலதான் எல்லாருக்கும் விருப்பம் காந்தாரி. என்னத்துக்கு செத்தவீட்டில ஊரறிய ஒப்பாரி வைக்கிறாங்கள்? எல்லாரும் பாருங்க மக்களே. வீட்டில சாவு விழுந்திட்டுது. அதால நான் அழுறன். என்ன பாருங்கடா. எண்ட கண்ணீரை பாருங்கடா எண்டு உலகம் பூரா கூவுவாங்கள். கூவிட்டு கக்கூசுக்க போயிருந்து போன்ல ‘சிரிச்சா போச்சு’ பார்ப்பாங்கள். இந்த ஒப்பாரி இப்போ பேஸ்புக்கிலயும் வந்திட்டுது காந்தாரி. அதாலதான் காதல் தோல்வி எண்டாலும், அம்மாவுக்கு காரியம் எண்டாலும் பேஸ்புக்கில அழறது. அழுதாலும் அறுபது லைக் போடவும் இங்க ஆள் இருக்கிறான். செத்தவீட்டு ஸ்டேடஸ் எண்டால் லைக்கு செஞ்சரி அடிக்குது காந்தாரி.
 • அவனவன் கவலையை பகிர்ந்து கொள்ளுறான். உனக்கென்ன?
 • ஆளாளுக்கு ரிப்பு ரிப்பு எண்டுறான் காந்தாரி. ஆத்தா செத்தாலும் ரிப்பு. அமெரிக்க ஜனாதிபதி செத்தாலும் ரிப்பு. ஆறுதலா ‘ரெஸ்ட் இன் பீஸ்’ எண்டு அடிக்கக்கூட உனக்கு நேரமில்ல. அப்புறம் என்ன மயிருக்கடா உனக்கு அஞ்சலி தேவையா இருக்கு? உனக்கொண்டு தெரியுமா காந்தாரி? “RIP” என்று ஸ்டேடஸ் போடுற நாப்பத்துரெண்டு வீதமான கேசுகளுக்கு அந்த சுருக்கத்திண்ட விளக்கம் தெரியாது.
 • திரும்பவும் ஸ்டடிஸ்டிக்கா?
 • இல்ல தெரியாமத்தான் கேக்கிறன் காந்தாரி. உனக்கு கவலை எண்டா ஒண்டு அவனின்ட வீட்ட போ. இல்ல மெசேஜ் அனுப்பு. செத்தவனிண்ட நினைவுகளை பகிரு. அட்லீஸ்ட் “ஆழ்ந்த அனுதாபங்கள்” எண்டு முன்னால கிடக்கிற கொமெண்டை கொப்பி பண்ணியாவது போடேன். எதுக்கு ரிப்பு? வந்து ஒரு அறை அறைஞ்சன் எண்டால் உனக்கு ரிப்பு போடுவாங்கள் எல்லாரும்.
  இப்பிடித்தான் எண்ட பிரண்டு ராஜேஷ்வரன் ஒருநாள் “அம்மா ஐ மிஸ் யூ” எண்டு ஸ்டேடஸ் போட்டான். அவனின்ட அம்மா கொள்ளி வைக்ககூட ஆளில்லாம நாறிப்போய் சாகேக்குள்ள, அண்ணர் சுவிஸ்ல புட்போல் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தவர். உசிரோட இருக்கேக்க ரெலிபோன் கார்ட் வீண் எண்டு போன் கதைச்சதே இல்லை. மனிசிண்ட வீட்டுக்காரருக்கு காசு அனுப்புவார்ர். பெத்த தாயுக்கு காசு அனுப்பமாட்டார். அவர் “அம்மா ஐ மிஸ் யூ” எண்டு ஸ்டேடஸ் போடுறார். எனக்கு வந்த கோவத்துக்கு அவனை போய் கொலை செய்து புதைக்கலாமா எண்டு இருந்துது காந்தாரி. பிறகு யோசிச்சன். அவனை ஏன் கொல்லுவான்? அவன் ஏற்கனவே ஒரு செத்த பிணம். உடனே செத்தவீட்டுக்கு தேவாரம் பாடுற புத்தி. போய் ஒரு கொமெண்ட் போட்டன்.
 • டேய், நாதாரி, நீ அம்மாவை மிஸ் பண்ணினா ஒண்டு கோயிலுக்கு போ, இல்ல சமாதிக்கு போ, அட்லீஸ்ட் போயஸ்கார்டனாவது போடா. இஞ்ச பேஸ் புக்கில போட்டா, செத்துப்போன உண்ட அம்மா வந்து உனக்கு லைக் பண்ணி “தாங்க்யூ, மச் அப்பிரிசியேட்டட்” எண்டு போடுவாவா? ஒரு வேகத்தில போட்டிட்டன். போட்டாப்பிறகுதான் யோசிச்சன். கொஞ்சம் ஓவராப்போயிட்டுது காந்தாரி.
 • தூக்கிட்டானா?
 • புளக் பண்ணீட்டான் காந்தாரி.
 • உனக்கு என்னதான் பிரச்சனை அமுதவாயன்?
 • முடியேல்ல காந்தாரி. என்னால முடியேல்ல. சென் பீட்டர்ஸ்பேக்கில, டொக்டருக்கு படிக்கிற ஐயர் பெடியன் ஒருத்தன் சைட் பிஸினஸா ஒரு குட்டி வைரவர் கோயில் நடத்திறான். அங்க கொஞ்சநாளைக்கு முன்னால ஒரு வடை மாலை சாத்தினனான். வடை மாலை எண்டா எங்கட வடை இல்லை. டோனட்டை நைலோன் நூலில கோர்த்து வைரவருக்கு கொழுவிவிட்டன். ஐயர் அந்த டோனட் மச்சமா, மரக்கறியா எண்டு கேட்டார். சிலவேளை முட்டை போடுவாங்கள். மற்றும்படி மரக்கறி எண்டன். புறோயிலர் முட்டை மரக்கறிதான் எண்டு அவனும் வைரவருக்கு பூசை செய்தான். டோனட்டை பிச்சு அரைவாசியை தட்டில எனக்குத் தந்திட்டு மிச்சத்தை வீட்ட கொண்டு போயிட்டான். படுபாவி. அப்பத்தான் கவனிச்சன் காந்தாரி. வைரவர் அந்தக் குளிருக்கையும் சம்மர் உடுப்பு போட்டிருந்தார். எனக்கு கோவமா வந்திட்டுது. உண்மையான நாத்திகன் ஆரு தெரியுமா காந்தாரி? உந்த ஐயர்மார்தான்.
 • பகுத்தறிவா. கிழிஞ்சுது. அது சரி வைரவர் கோயிலில என்ன வேண்டினாய்?
 • “கடவுளே ஹைப்போகிரிஸியை ஹரிஹரன் பாட்டு மாதிரி ரசிக்கிற ரசனையைக் எனக்கு குடு” என்று வேண்டினனான். இஞ்ச எல்லாமே ஹைப்போகிரிஸி காந்தாரி. சிலர் தெரியாமலேயே செய்யிறான். பலர் தெரிஞ்சு செய்யிறான். ஆளாளுக்கு குரல் கொடுக்கிறான் காந்தாரி. எல்லாத்துக்கும். தண்ணி பிரச்சனையா? ஒரு ஸ்டேடஸ். சுப்பர் சிங்கர் பிரச்சனையா? ஒரே ஸ்டேடஸ். ஐநா தீர்மானமா? இந்தா பிடி. ஒஸ்கார் விருதா. இன்னும் ரெண்டு. ஒலக இலக்கியமா? வச்சுக்கோ. அதிக பகிடி என்னெண்டா. அவனே ஒரு ஹிப்போகிரிட். அதில அவன் சொல்லுவான், மலாலா ஒரு ஹிப்போகிரிட் எண்டு. முடியல காந்தாரி.
 • மற்றவனிண்ட கதையை விடு. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லேல்ல நீ. நீ புரபைல் போட்டோ போடமாட்டியோ?
 • போட விருப்பம் காந்தாரி. எதை எண்டு போடுறது? எனக்கு சும்மா சீனரிக்கு முன்னால பேக்குமாதிரி நிண்டு படம் போடுறதில விருப்பமில்ல. படம் போட்டா அதில ஒரு கெத்து இருக்கோணும். அதுக்கு யாரையாவது கிஸ் பண்ணோணும் காந்தாரி. ஆரைக் கிஸ் பண்ணுறது. ரசியாக்காரியை ஈஸியா கிஸ் பண்ணிடலாம் காந்தாரி. ஆனா அந்தப்படத்தை போடேல்லாது. தப்பித்தவறி எண்ட கலியாண குறிப்பும் பொருந்தி, அம்மாவுக்கும் பிடிச்ச ஒரு பொண்ணு வந்து, ஒரு கிஸ்ஸிங் படத்தால கலியாணம் குழம்பிடக்கூடாது பார். அதால ரசியாக்காரிகளிட்ட போகேக்க நான் கமராவைக் கொண்டுபோறதில்ல. போன் கூட சுவிட்ச் ஓப்தான். இதில நான் புரபைல் போட்டோல யாரை கிஸ் பண்ணுறது? ஒருநாள் ஷேவ் எடுத்துக்கொண்டிருக்கேக்க ஒரு பிளான் வந்துது. கிளாசிக் ஐடியா. அரைவாசி ஷேவிங் கிறீம் மூஞ்சில இருக்கு. தலைமயில் கன நாளா வெட்டாம பத்தைமாதிரி வளர்ந்திருக்கு. மொட்டையங்கள் கடுப்பாகட்டும் எண்டு வளர்த்த தலைமயிர். உடனேயே எண்ட எஸ்எல்ஆரை எடுத்து ட்ரைபோட்ல செட் பண்ணினன். பாத்ரூமில வெறும் மெலோட நிண்டு கண்ணாடில எண்ட மூஞ்சியை நானே கிஸ் பண்ணி ஒரு ஷாட். டைமர் எல்லாம் செட் பண்ணி டீ. டீ.. டீ. என்று கிளிக் ஆகேக்க அடிச்சன் ஒரு கிஸ். பிப்டி எம்எம். அப்பிடியே இரண்டு லிப்பும் போகசுல. செம ஷோட். உடனேயே லைட்ரூமில ப்ராசெஸ் பண்ணி, கறுப்பு வெள்ளை ஆக்கி புரோபைல் போட்டோ போட்டன் காந்தாரி.
 • எத்தினை லைக் விழுந்துது?
 •  "மறவன்புலவு மகாமாரியம்மன் கோயில் தர்மகத்தா சபை” மட்டும் ஒரேயொரு லைக் பண்ணிச்சுது.
 • அட பாவமே. இவ்வளவு காலமா பேஸ்புக்கில இருக்கிற. உன்னால ஒருத்தியை கூட கொளுவ முடியேல்லையா?
 • இல்லையே. எல்லாரும் உன்னமாதிரி குருடனுக்கல்லோ வாக்கப்படுறாளவை. அது ஏன் காந்தாரி பள்ளிக்கூடத்தில படிக்கேக்க தேவதைகளாட்டம திரிஞ்ச பெட்டைகள் வளர்ந்து குரங்குகளை கட்டுறாளுகள்? பெடியளும் அப்பிடித்தான். படிக்கேக்க பெரிய ஹீரோவா இருந்திருப்பான். ஆனா முப்பது வயசில மூஞ்சூற கட்டிட்டு பேஸ்புக்கில சிரிச்சுக்கொண்டு நிக்கிறான். உனக்கொண்டு தெரியுமா காந்தாரி, பள்ளிக்கூடத்து ஹீரோக்கள் எல்லாம் மைக் மோகன் மாதிரி. ஒரு ரெண்டு வருஷம் ஓட்டப்போட்டி, கிரிக்கட், ஸ்டைலா உடுப்பு போடுறது எண்டு சீன் போடுவினம். பள்ளிக்கூடம் முடிஞ்சு சொந்தக்காலில நிக்கிற டைமில சோத்துக்கு சிங்கிதான். ஸ்டைலா உடுப்பு போட்டா எவன் வேலை குடுப்பான்? மூளை இருக்கோணும். படிக்கோணும். அப்பல்லாம் அட இவனமாதிரி வரமுடியேல்ல எண்டு ஆரைப்பார்த்து ஏங்கினனோ அவன் எல்லாம் லூசு மாதிரி திரியிறான். இவளைக் கட்டி குடும்பம் நடத்தோணும் எண்டு நினைச்சனோ, அவளுகள் எல்லாம் அம்மா பகவானை கும்பிட்டுக்கொண்டு திரியிறாளுகள்.
 • அம்மா பகவானா?
 • அதான் காந்தாரி, உப்பு வெங்காயம் இல்லாம சோறு குடுத்து சாகடிப்பாங்களே, அவங்கள்.
 • கடவுளே, அது பிரம்மகுமாரிகள்.
 • என்ன இழவோ. பிரம்மாக்கு பொம்பிளைப்பிள்ளைகள் இருக்கா என்ன? சரி நமக்கெதுக்கு. ஆனா அவங்களின்ட அலப்பறை தாங்க முடியேல்ல காந்தாரி. மூச்சுவிட்டாத்தான் வாழலாம் எண்டது வீட்டு நாய்க்குக்கூட தெரியும். அதை நமக்கு சொல்லித்தாறாங்கள் காந்தாரி. ஒருநாள் பாக்கிறன். சாப்பாட்டில வெங்காயமே போடக்கூடாது எண்டு ஒரு பிரம்மகுமாரி ஸ்டேடஸ் போடுது. நான் கடுப்பாயிட்டன் காந்தாரி. “ஆட்டிறைச்சிப் பிரட்டலுக்கு வெங்காயம் நிறைய அள்ளிப்போடாட்டி டேஸ்ட்டா இருக்காது” எண்டு கொமென்ட் போட்டன். தூக்கிட்டாள்.
 • உனக்கு வயசு போயிட்டுது.
 • உண்மைதான் காந்தாரி. நாற்பது வயசுக்கு மேலே வாழுறதே ஒரு பெரிய பாவம். எதையாவது சாதிக்கோணும் எண்டால் அதை நாற்பது வயசுக்கு முன்னாலேயே செஞ்சிடோணும். உலகத்தில இருக்கிற சாதனையாளர்கள் முக்காவாசிப்பேரும் நாப்பது வயசுக்கு முன்னால சாதிச்ச ஆக்கள். ஆனானப்பட்ட ஐன்ஸ்டீனுக்கே நாப்பதுக்கு மேலே ஒரு ஐடியாவும் வரேல்ல. சாதிக்காம சும்மா இருந்தாலும் நாப்பது வயசுக்கு மேலே வண்டி வச்சிடும். கொலஸ்ட்ரோல், அதிலயும் நல்ல கொலஸ்ட்ரோல், கெட்ட கொலஸ்ட்ரோல். சீனி, கான்சர் எண்டு ஆயிரத்தெட்டு வருத்தங்கள். ஆயுளை நீடிக்க டெஸ்டுகள். பயிற்சிகள். பயத்தங்காயும் பாவக்காயும் அவிச்சு சாப்பிடுற டயட். இருபது வயசு பெட்டையை பார்க்கேக்க அடி வயிற்றில மட்டத்தேள் ஊறும். எல்லாருக்குமே வாழ்க்கையை பற்றி இலவசமா அட்வைஸ் பண்ணோணும் போல இருக்கும். நாப்பது வயசுக்கு பிறகும் வாழ்ந்து என்ன பயன் காந்தாரி? எல்லாருமே நாப்பதில சாகிறான் காந்தாரி. அதுக்கே மேலே அவனவன் நரகத்தில வாழுறான். அது விளங்காம பெர்த்டே கொண்டாடுறாங்கள். லூசுக்கூட்டம். ஒரு நாதாறி வெல்கம் டு கிளப் எண்டு கொமெண்ட் போடுது. அவர்தான் நரகத்தில ரிசெப்ஷனிஸ்ட் எண்ட நினைப்பு. ஏறிக்கொண்டு வந்திச்சு. அவனுகளை பார்க்கேக்க நானும் நரகத்தில இருக்கிற பீலிங் வருது. அதால நாப்பது வயசுக்கு மேலே எவன் பேஸ்புக்கில இருந்தாலும் அன்பிரண்ட் பண்ணிட்டன்.
  ஏன் காந்தாரி? இந்த பூமிதான் சொர்க்கம். பூமிதான் நரகம். நாம் செய்யும் பயனுக்கு உடனுக்குடன் பலன். நீ சந்தோசமா பீல் பண்ணினா அந்தக்கணம் நீ சொர்க்கத்தில இருக்கிறாய். மனசு உடைஞ்சு கவலைப்படுறாய் எண்டால் யூ ஆர் இன் ஹெல். புரியுதா? மூவுலகமும் இங்கேயே இருக்கு. எமன் இங்கேயே பேஸ்புக்கில எருமைல சுத்திறாப்ள. பிள்ளையார் எலில. சூரனில இருந்து ஹம்சன், நரகாசுரன் வரை எல்லாரும் இப்போ பேஸ்புக்கில தான் அவ்வளவு வேலையும் செய்யிறாங்கள். தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வேக்க, கடவுள் அவதாரம் செய்வார் காந்தாரி. கடவுளின் அடுத்த அவதாரம் பேஸ்புக்கிலதான் காந்தாரி. நான்கூட ஒரு அவதாரமாக இருக்கலாம். இப்ப தெரியாது. கைலாயத்துக்கு ரிட்டேர்ன் ஆனபிறகுதான் எனக்கே விளங்கும்..
  கேப்பையினார் கேதீஸ் எண்டவனும் ஒரு தீய சக்தி காந்தாரி. மாயை இருள். அதான் அவனை நான் சம்ஹாரம் பண்ணிட்டன்.
 • யூ ஆர் கிரேசி. நீ என்ன நடந்தது எண்டு இப்ப சொல்லப்போறியா இல்லையா? இட்ஸ் த லாஸ்ட் வோர்னிங். இதுக்கு மேல உண்ட அலம்பலை கேட்கமுடியாது.
 • சொல்லுறன் காந்தாரி. அதுக்கு முதல் கேப்பையினார் கேதீஸின் கடைசி ஸ்டேடஸ போய்ப்பாரு. மீதி அப்புறம் சொல்லுறன்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------
- அடுத்த வியாழன் தொடரும்

பாகம் ஒன்று : டெம்டேஷன் பாகம் இரண்டு : ரூசிய இலக்கியம்

Contact form