ஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - டைம் லைன்

Mar 12, 2015

பாகம் ஐந்து : டைம் லைன்

இன்று கேப்பையினார் கேதீஸுடன் முரண்பட்டு அவனை தேடிவந்து கொல்வதாக சபதமிட்டேன். எடுத்த சபதம் முடிப்பேன்.
Like · Comment · December 31, 2014 ·

கேப்பையினார் கேதீஸ் நீண்டகாலமாகவே என்னோடு முரண்பட்டுக்கொண்டிருக்கிறான். கத்தி திரைப்பட விவகாரத்திலும் அவனோடு முரண்பாடு. எந்த கிரிக்கட் டீமுக்கு சப்போர்ட் பண்ணவேண்டும் என்ற விசயத்திலும் முரண்பாடு. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவேண்டுமா இல்லையா என்பதிலும் முரண்பாடு. அவன் திட்டமிட்டே என்னை தாக்குவதாக படுகிறது. அவன் பேஸ்புக்கிலோ அல்லது உயிரோடோ இருப்பது நீண்டகாலப்போக்கில் எனக்கு எவ்வித பயனையும் தரப்போவதில்லை. பாதகமே அதிகம்.
Like · Comment · December 31, 2014 ·


கேதீஸை கொல்லுவது என்று எடுத்த முடிவு மண்டைக்குள் குடைகிறது. என்ன இருந்தாலும் கொலை என்பது தவறு என்று தோன்றுகிறது. சகோதரக்கொலைகள்தான் நம்மை நட்டாற்றில் விட்டுவிட்டன.
Like · Comment · December 31, 2014 ·

நான் முதன்முதல் கொலை செய்தபோது எனக்கு பதினாலு வயசு. அண்ணன் சாமியறை பிள்ளையார் படத்துக்கு பின்னாலே ஒளித்து வைத்திருந்த ரிவோல்வரை எடுத்துக்கொண்டு, காக்கைதீவுக்குச் சென்று, குப்பை கிளறிக்கொண்டிருந்த நாயை நன்றாக நெருங்கிக் குறிபார்த்து சுட்டது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. எங்கள் ஊரிலே துப்பாக்கிச் சத்தம் கேட்டால் போதும். அக்கம் பக்கத்திலிருப்பவன் வீடுகளுக்குள் ஒளிந்துவிடுவான். அல்லது சைக்கிளில் பறந்துவிடுவான். நான் சுட்டபோது எவரும் பார்க்கவில்லை. செத்துக்கிடந்த நாயை பார்க்க பாவமாக இருந்தது. குட்டை பிடித்து, குப்பையிலே ஏதாவது நாறிய மீன் துண்டு கிடைக்காதா என்று கிளறிக்கொண்டிருந்தது. கொன்றுவிட்டேன். அன்றைக்கு முழுதும் சரியாக சாப்பிடவில்லை. அம்மா ஏன் என்று கேட்டா. கொத்தமல்லித்தண்ணி ஊத்தித்தந்தா. அந்த நாய்க்கு கத்துவதற்குக்கூட திராணி இருக்கவில்லை. அதற்குப்பின்னர் ரிவோல்வரைக் கண்டாலே பயமாக இருந்தது. இந்தச் சனியனை யார் என்னுடைய நெற்றியில் வைத்தாலும் இனிமேல் அவன் சொல்வதை கேட்டுவிடவேண்டும். சுட்டால் செத்துவிடுவோம். செத்தால் எல்லாமே முடிஞ்சுது. எல்லாமே. 

அன்றைக்கு வீடு திரும்பையிலே கலுசானுக்குள் அதை வைத்துக்கொண்டு சைக்கிள் உழக்கிய அந்த இருபது நிமிடங்களும் என் வாழ்க்கையின் நரக நிமிடங்கள். நிஜ ரிவோல்வர், நல்லூர்த்திருவிழாவில் வாங்கியதைவிட கனதியாக இருந்தது. எங்கே மாறி அமத்திவிட்டால் வெடித்துவிடுமோ என்கின்ற பயம் வேறு. வீட்டுக்கு வந்து முருகன் படத்துக்கு பின்னால் பத்திரமாக வைத்துவிட்டேன். அடுத்தநாள்தான் ஞாபகம் வந்தது, அண்ணன் வைத்தது பிள்ளையார் படத்துக்கு பின்னால் என்று. மாற்றி வைப்பதற்காக சாமியறைக்கு ஓடினேன். ரிவோல்வரைக் காணவில்லை.
Like · Comment · December 31, 2014 ·

அதற்குப்பிறகு அண்ணனையும் நாங்கள் காணவில்லை.
Like · Comment · December 31, 2014 ·

யோசித்துப்பார்க்கிறேன், முதற்கொலை கொடுத்த மன உளைச்சலை எனக்கு இரண்டாவது கொலை கொடுக்கவில்லை. இம்முறை மனிதனைக் கொன்றதும் காரணமாக இருக்கலாம்..
Like · Comment · December 31, 2014 ·

மனம் ஒரு நிலையில் இல்லை. சமயத்தில் அத்தனை தேடலும் வீணோ என்று தோன்றுகிறது. சிரிப்பு வருகிறது.
Like · Comment · January 01, 2015 ·

கேதீஸின் ஸ்டேடஸில் அவனோடு சண்டை போட்டது சுத்த முட்டாள்தனம் என்று புரிகிறது. பேஸ்புக்கிலே கொமெண்ட் பண்ணி எவனையும் திருத்த முடியாது. நானும் அவன் என்ன சொல்லுகிறான் என்று கேட்டு என் நிலையை மாற்றப்போவதில்லை. என் கருத்தை ஆணித்தரமாக சொல்லி, பார்த்தியா உன்னை விட நான் எவ்வளவு பெரிய இவன் என்று உலகத்துக்கு காட்டுவதே கொமெண்டில் சண்டை போடுபவனின் நோக்கம். ஆனால் ஒருவன் ஸ்டேடஸ் போட்டால் உடனேயே எனக்கு கை ஏன் விறு விறுவென்று அரிக்கிறது?
Like · Comment · January 01, 2015 ·

கேதீஸிடம் மன்னிப்பு கேட்டு இன்பொக்ஸ் பண்ணினேன். போடா பயந்தாங்கொள்ளி என்றான். நான் ஒரு மெண்டலாம். அமுதவாயன் என்ற ஒரு அறிவாளியை எல்லோரும் மெண்டல் என்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. நான் அவனைக் கொல்லப்போவதில்லை என்றேன். அவன் என்னை எப்படியேனும் கொல்வானாம். ரசியாவுக்கு தேடிவந்தே கொல்வானாம். இறப்பென்பது யாதனில் இவ்வோர் உலகம் என்பதை இற்றறுத்தல் என்றேன். அவனுக்கு புரியவில்லை. சியர்ஸ் என்று ஸ்மைலி அனுப்பினான்.
Like · Comment · January 01, 2015·

கடவுள் அறிவை மட்டும் ஏனோ எனக்கு அள்ளிக்கொடுத்துவிட்டான். பயன்படுத்தும் பக்குவத்தை கொடுக்கவில்லை.
Like · Comment · January 02, 2015·

எதற்காக என்னை விரும்புகிறீர்கள்? நான் நல்லவன் கிடையாது. ஒரு நாய், ஒரு மனிதன் என இருவரை கொலை செய்தவன் இந்த அமுதவாயன். பேசியும், பேஸ்புக்கில் எழுதியும் பலரைக் கொன்று போட்டவன். நான் சுவாரசியமானவன் என்பதால் என்னைப் பிடிக்கிறதா? அறிவாளி என்பதால் என்னைப்பிடிக்கிறதா? எது அறிவு? நான் இன்னும் சாதாரண டொக்டர் படிப்பைக்கூட ஒழுங்காக முடிக்கவில்லை. நான் நாலு விஷயம் விவரமாக பேசுவதால் பிடிக்கிறதா? விவரமாக பேசுபவன் எல்லாம் பெரும் அறிவாளி என்று நினைக்கிறீர்களா? அவன் வீட்டில் ஓடித்திரியுமே எலிக்குஞ்சு. அதனிடம் கேட்டுப்பாருங்கள். கெக்கலித்துச் சிரிக்கும். ஒரு எலியை பொறி வைத்துப்பிடிக்கத்தெரியாதவன் எல்லாம் அறிவாளியா? 

எதற்காக என்னை விரும்புகிறீர்கள்? நாலு நல்லது கெட்டது தெரிந்தவன் என்பதாலா? இந்த உலகத்தில் எழுபத்தாறு வீதமான மக்களுக்கு எது சரி, எது தவறு என்பதை பிரித்தறியும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் பக்குவம்தான் கிடையாது. அவர்கள் எல்லாம் அறிவாளிகளா? பெண்களை காட்சிப்பொருள் ஆக்காதே என்று ஸ்டேடஸ் போட்டாலும் லைக் பண்ணுறன். ஹன்சிகா படம் போட்டாலும் லைக் பண்ணுறன். எனக்கு நல்லது கெட்டது தெரியுமா? அப்படி என்னதான் நான் செய்துவிட்டேன்? ஏன் உங்களுக்கு என்னைப் பிடிக்கிறது? நீங்கள் நினைப்பதை நான் புட்டுப்புட்டு வைப்பதால் என்னைப்பிடிக்கிறதா?
Like · Comment · January 02, 2015 ·

சொன்னாப்போல, உண்மையிலேயே உங்களுக்கு என்னை பிடிக்கிறதா? அதைச் சொல்லுங்கள் முதலில். அல்லது அப்படி நானே ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறேனா? எத்தனை பேர் என்னை கணக்கே எடுப்பதில்லை தெரியுமா? எத்தனை ஆயிரம் அன்பிரண்டுகள். புலொக்குகள். உங்களுக்கு என்னைப் பிடிக்கும் என்று எதை வைத்து நான் எடை போடுவேன்? நாலு பேரு என்னை பிடிக்கும் எனறு சொன்னதால் எனக்குள் உருவாகியிருக்கும் பிரமையா இது? நானும்தான் எனக்கு உன்னை பிடிக்கும் எனறு நிறையதடவை பலரிடம் சொல்லியிருக்கிறேன். காதலியிடம்கூட வாய் கூசாமல் புழுகியிருக்கிறேன். அவள் அப்பாலே போனப்பிறகு காறித்துப்புவேன். 

எண்பத்துமூன்று வீதமான ஆட்கள் இப்பிடித்தான். முகத்துக்கு ஒன்றை சொல்லிவிட்டு வீட்டுக்குப்போய் மனிசியிடமோ மனிசனிடமோ ரூம் மேட்டிடமோ ஒருவனைப்பற்றி காறித்துப்புவார்கள். எல்லோர் வீட்டு கொல்லைப்புறங்களும் எச்சில்களால் நிறைந்து இருக்கின்றது. எலெக்ரோலைட்ஸ், மியூக்கஸ், கிளைக்கோப்ரோடின்ஸ், நிறைய நொதியங்கள்… சுத்தமான காறித்துப்பிய எச்சில். பனிக்காலம் என்றால் எச்சிலோடு கூடவே சளியும் சேர்ந்திருக்கும். மஞ்சள் கலரில் திட்டு திட்டாய். உவ்வே. நீங்கள் இப்படியே இருங்கள். உங்கள் கொல்லைப்புறங்களிலேயே துப்புங்கள். நான் பாவம். உங்கள் சளியை என் முகத்திலே துப்பு வாங்கும் மனத்தைரியம் என்னிடம் இல்லை. போனால் போகிறது கழுதை வெறும் பொய்தானே. சொல்லிவிட்டு செல்லுங்கள். வீடு போய் சாவகாசமாக துப்பலாம். நான் இனிமேல் ஏன் என்னைப் பிடித்திருக்கிறது என்ற வில்லங்கமான கேள்வியெலாம் கேட்கமாட்டேன்..
Like · Comment · January 02, 2015 ·

திடீரென்று கவிதை எழுதவேண்டும் போல உள்ளது.
Like · Comment ·January 02, 2015 ·


துப்பு வாங்கியவனுக்கு
குளியலறை தண்ணிர் கூட
எச்சில்தான்.
Like · Comment · January 02, 2015 ·Edited

கவிதையை எழுதிவிட்டு பின்னர் செப்பன் செய்பவன் கவிஞன் கிடையாது. பார்பர்..
Like · Comment · January 02, 2015 ·

இன்செப்சன் படத்திலே கனவுலகத்தில் ஆழ்மனது எண்ணங்கள் எல்லாம் ஆயுதம் தாங்கிக்கொண்டு அவனை விடாமல் துரத்தும். கொல்லப்பார்க்கும். பேஸ்புக்கிலே இருப்பது எல்லாம் என் ஆழ்மனது எண்ணங்களோ என்ற சஞ்சலம் தோன்றுகிறது? எல்லாமே பேக் புரபைலில் வந்து என்னை கொல்லப்பார்க்கின்றன. எல்லாப் புரபைல்களும் நானேதானே. அல்லது நானே இன்னொருவனின் பேக் புரபைலா? டேய் சக்கர்பேர்க். கேப்பைக்கு முதல் உன்னைக் கொல்லுவண்டா.
Like · Comment · January 03, 2015 ·

கேப்பையரே, கிருபாலினியே, கதிரவனே...நீங்களெல்லாம் கானலின் நீரோ, வெறும் பேக்குப் புரபைலோ. பிரண்டு எலாம் பேக்கு என்றால், பேக்கு எலாம் பிரண்டுகளோ, நானும் பேக்தானோ. இந்த பேஸ்புக்கும் பேக்தானோ
Like · Comment · January 03, 2015·

மன விகாரங்களுக்கு ஹீரோ அந்தஸ்து கொடுக்கும் கூட்டம் ஒன்று இங்கே உருவாகியுள்ளது. நம் திரைப்படங்களில் ஹீரோக்கள் எல்லோருமே கொலை செய்கிறார்கள். அவர்களைக் கொண்டாடும் கூட்டம் மரண தண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறது. அபத்தமாக இல்லை?
Like · Comment · January 03, 2015 ·

இண்டலக்ட் பயங்கரவாதிகள் ஐஸிஸ் பயங்கரவாதிகளைவிட மோசமானவர்கள்.
Like · Comment · January 03, 2015 ·

ஆண்களில் அறுபத்துநான்கு வீதமானவர்கள் ரேப்பிஸ்டாகவே இருக்கிறார்கள். அவர்களில் சந்தர்ப்பம் உள்ளவனும், சமூகத்தைக்கண்டு அஞ்சாதவனும் உடலியல் ரீதியாக பாலியல் பலாத்காரத்தை பலர் அறியப் பண்ணுகிறான். ஏனை சமூக விலங்குகள் எல்லாம் மனசிலேயே பண்ணுகின்றன. ஒவ்வொரு ஆணும் தனக்கு பிடித்த பெண்களை கனவிலே கட்டிப்பிடித்தே இருப்பான். அவள் அனுமதியில்லாமல். முத்தம் கொடுத்திருப்பான். இன்னமும் பல செய்திருப்பான். அவன் ரேப்பிஸ்ட் இல்லையா? ஒரு பாலியல் வன்முறையாளனை ஒரு மக்கள் கூட்டம் கல்லால் எறிந்து கொல்லுகின்ற வீடியோ ஒன்று பார்த்தேன். எறிந்தவனில் எண்பத்தாறு வீதமானவர்கள் ஆண்கள். அது அவர்களே அவர்களுக்கு எறிந்துகொண்ட கல். தான் எறியாவிட்டால் தனக்கு ஆரும் எறிந்துவிடுவான் என்கின்ற பயத்தில் செய்வது. பெண்களுக்கும் இந்த மனநிலை இருக்குமா என்பதை அறியவேண்டும். என்னை கனவிலே எவளாவது கட்டிப்பிடித்திருப்பாளா? கியூரியஸ். அட்லீஸ்ட் அனஸ்தாசியாவாவது? சான்ஸ் இல்லை. காந்தாரியிடம் விசாரிக்கலாம். ஆனால் அவளோ கண்ணக்கட்டிக்கொண்டு வாழ்பவள். இந்த அவஸ்தைகளை அறிவாளா?
Like · Comment · January 04, 2015 ·

பதின்மூன்றாவது வயதில் வீட்டிலே புதிய பறவை திரைப்படம் போட்டார்கள். அன்றைக்கிரவு சரோஜாதேவி கனவிலே வந்தார் ... வந்தாள். அவருக்கு என்னுடைய பாட்டி வயது என்று பின்னர் அறிந்தபோது வெட்கப்பட்டேன். ஒரு பாட்டியைப்போய்...
Like · Comment · January 04, 2015 ·

என் தார்மீக நெறிகளை யார் வகுத்தது? நானா? இந்த சமூகமா? திருவள்ளுவரா? சூப்பர் ஸ்டாரா?
Like · Comment · January 04, 2015 ·

யாருமேயில்லாத தீவிலே என்னோடு ஒரு போத்தில் விஸ்கியும், ஒரு சட்டி மாட்டிறைச்சி பொரியலும் இருக்கிறது. கூடவே கரட் போஞ்சி குவிந்து இருக்கிறது. நானோ சுத்த சைவக்காரன். சவத்தைக்கூட தாண்டமாட்டேன். என்ன செய்வேன்?
Like · Comment · January 04, 2015 ·

முதல்நாள் மரக்கறி சாப்பிடுவேன். இரண்டாம் நாள். பத்தாம் நாள் அலுப்புத்தட்டிவிடும். பதினொறாம் நாள் நாறினாலும் பரவாயில்லை என்று பொரியலை சூடாக்கி சாப்பிடுவேன். அது மாட்டிறைச்சி இல்லை, ஆடு என்பேன். ஆடு தப்பில்லை. அடுத்தநாள் குளிரும். விஸ்கியை டேஸ்ட் பண்ணுவேன். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். கப்பல் வந்து காப்பாற்றியதும் மீண்டும் நல்லவன் ஆகலாம். வள்ளுவருக்கு இந்த டிலிம்மா வந்திருக்க சாத்தியம் இல்லை. மினிஸ்டர் வேற. இன்று அமைச்சர்கள் சட்டம் எழுதுகிறார்கள். வள்ளுவரும் சட்ட நூல்தான் எழுதினார். என்ன வழமைபோல எல்லாரும் சட்டம் பேசிட்டு நடைமுறையில் மீறுகின்றோம். எத்தனைபேர் வீதிகளில் வேகக்கட்டுப்பாட்டை பேணுகிறீர்கள். ஏன் எங்களுக்கு போலீஸ் தேவைப்படுகிறது? உலகிலே ஸ்பீடிங் டிக்கட் வாங்குபவரில் தொண்ணூற்றொரு வீதமானோர் கிர்மினல்கள் அல்லாத சாதாரண பொதுமக்கள்.
Like · Comment · January 04, 2015 ·

வாழ்க்கையில் கண்ணைக்கட்டிக்கொண்டே வந்தால் நல்லவனாக வாழலாமோ?
Like · Comment · January 05, 2015 ·

குணா படம் பார்த்தேன். அழுதேன். காந்தாரி ஞாபகம் வந்தது. சட் பண்ணவேண்டும். நிறைய நாள் ஆயிற்று. காந்தாரி .. காந்தாரி…
Like · Comment · January 05, 2015 ·

எனக்கென்னவோ காந்தாரி மட்டுமே கண்ணைத் திறந்து வாழ்கிறாள் என்று படுகிறது. மற்றவர் எல்லாம் கண்ணைக்கட்டிக்கொண்டே வாழ்கிறார்கள். திருடராஷ்டிரன் உட்பட. காந்தாரி பாவம்
Like · Comment · January 05, 2015 ·

கேப்பையினார் கேதீசுக்கு அரச உடை அணிவித்தால் திருடராஷ்டிரன் போன்றே இருப்பான்!
Like · Comment · January 05, 2015 ·

இன்னொரு நூற்றுவரை இந்த உலகம் தாங்காது. கேப்பையினார் கொல்லப்பட்டிருந்தால் குருஷேஸ்திரம் நிகழ்ந்திருக்காது.
Like · Comment · January 05, 2015 ·

ஐ திங் ஐ ஆம் எ நட் கேஸ்.
Like · Comment · January 06, 2015 ·

ஆம் ஐ எ நட் கேஸ்?... ரியலி? தென் ஹூ த ஹெல் ஆர் யு?
Like · Comment · January 06, 2015 ·

கேதீஸிடம் மீண்டும் மன்னிப்புக் கேட்டேன். மச்சான் நீ நல்லவன் என்றேன். உன்னை நான் திருடராஷ்டிரனுக்கு ஒப்பிட்டது தவறு என்று மன்றாடினேன். அவனுக்கு கோபம் இன்னமும் அதிகமாகியது. மனதில் நினைப்பதை அப்படியே சொன்னால் உலகம் ஏன் என்மீது கோபப்படுகிறது? உண்மை சொன்ன என்னை கேதீஸ் நம்பத்தயாரில்லை. என்னை பாம்பு என்றான். என் பொறுமை எல்லை மீறுகிறது. அடிக்கடி தனகுகிறான். என் கையாலேதான் அவனுக்கு சாவு என்றால் யார் அதனை மாற்றமுடியும்?
Like · Comment · January 06, 2015 ·

நான் காரியத்தை நிகழ்த்த காரணம் தேடுகிறேனா? கேதிஸை கொல்ல நினைப்பது எனது ஆழ்மனது இச்சை. ஆனால் புத்தி சரியான காரணம் கிடைக்காமல் அலைகிறது. கேதீஸ் கொலை என்பது முடிந்த காரியம். முடிவான காரணம் என்ன?
Like · Comment · January 07, 2015 ·

சிங்களவர்களோடு தமிழர் இணைந்து வாழமுடியாது என்பது முடிவான காரணமா? அல்லது முடிந்த காரியத்துக்காக உருவான காரணமா?
Like · Comment · January 07, 2015 ·

தூக்கம் வரவில்லை. அத்தினாபுரம் கனவில் வந்தது. நானும் திருடராஷ்டிரன், கேதீஸ் மற்றும் காந்தாரியும் பகடை ஆடுகிறோம். மற்ற மூவருக்கும் கண் தெரியாது. அதனா என் வசதிக்கேற்பவே எண்கள் விழுகின்றன. காந்தாரியே வெல்கிறாள். ஒருமுறை அவள் உருட்டும்போது ஒன்று விழுந்தது. நான் அது ஆறு என்று பொய் சொல்லி அவளுக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டேன். அவள் சந்தோசம் தாளாமல் ஹை-பை தந்தாள். தந்த வேகத்தில் வளையல்கள் உடைந்து நொருங்கின. முத்துக்கள் சிதறின. திருடராஷ்டிரன் நான் எடுக்கவா என்றான். கேதீஸ் நான் கோர்க்கவா என்றான். அது மணிமாலை அல்ல வளையல் என்றாள் காந்தாரி. அவர்கள் முத்துக்களை பொறுக்கையிலே அண்ணனின் ரிவோல்வரால் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டேன்.
Like · Comment · January 08, 2015 ·

கர்ணனைக் கொன்ற பாவம், கண்ணனுக்கே போகும் என்றால், கண்ணனுக்கே பாவம் தந்த பாவம் எங்கு போகுமென்றோ?
Like · Comment · January 08, 2015 ·

கேதீஸ் என்றவன் இந்தக்கணத்தில் உலகத்தில் இல்லை என்பதால் வரக்கூடிய நன்மை தீமைகளை ஆராய்க (15 புள்ளிகள்)
Like · Comment · January 09, 2015 ·

நன்மை கேதீஸ் என்பவன் இந்த உலகத்தில் இனிமேல் இருக்கமாட்டான். தீமை, கொல்வதற்கு நான் புது ஆளை தேடவேண்டும்?
Like · Comment · January 09, 2015 ·

இன்று குளிக்கையில் சின்னப்பெடியன் அண்ணை ஞாபகம் வந்தார். பாவம் அண்ணை..
Like · Comment · January 10, 2015 ·

எனக்கு படிப்பு அவ்வளவாக ஏறவில்லை. இடம்பெயர்ந்து வவுனியா குருமன்காட்டில் வசித்தபோது சின்னப்பெடியன் அண்ணையோடு கொஞ்சநாள் திரிந்தேன். சின்னப்பெடியன் அண்ணை அப்போது ஆர்மி இன்டலிஜென்டில் வேலை பார்த்தவர். நான் வெளிநாடு போவதற்காக ஏஜெண்டுக்கு பதிந்துவிட்டு இருந்தேன். அம்மா என்னை ரசியாவுக்குப்போய் டொக்டருக்கு படி படி என்று நச்சரித்துக்கொண்டிருந்தார். எனக்கு பிரான்சுதான் சரிப்பட்டுவரும் போல தோன்றியது. டொக்டர் படிப்பு வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டேன். ஆனாலும் அவர் தொடர்ந்து ட்ரை பண்ணிக்கொண்டிருந்தார். எனக்குத்தெரியாமல் இரண்டு மூன்று அப்ளிகேஷனும் போட்டுவிட்டார். கிடைக்கவில்லை. சின்னப்பெடியன் அண்ணாவுடன் திரிந்தபோதுதான் இடதுசாரிக்கொள்கைகள் மீது ஈர்ப்பு வந்தது. எழுதவும் ஆரம்பித்தேன். ஒருகாலத்தில் பெரும் இலக்கியவாதியாகவும் சமூகப்போராளியாகவும் உருமாறுவதாக கனவு கண்டேன். 

சின்னப்பெடியன் அண்ணை ஒரு சிறந்த படிப்பாளி. அவர் கொடுத்த மோட்டர் சைக்கிள் டையரிஸ் புத்தகத்தை இருபத்து நான்கு தடவைகள் வாசித்திருக்கிறேன். தொப்பி போட்டிருக்கிறேன். அண்ணை வெறும் வாய்ப்பேச்சு வீரர் மட்டும் கிடையாது. வவுனியாவில் பாத்தீனியம் போன்றே பாஸிசமும் பரவிவிட்டது, ஒழிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் அறிய இருபத்தெட்டு கொலைகள் செய்தார். அவருக்கு போலீசில் நிறைய செல்வாக்கு இருந்தது. இரண்டு ரிப்போர்ட் எடுத்துத்தந்தால் வெளிநாடு போவதற்கு ஈஸியாக இருக்கும் என்று கேட்டேன். செய்துதருவதாக சொல்லியிருந்தார். ரிவோல்வரை குறிபார்த்து சுடுவதற்கு பழக்கினார். காக்கைதீவில் நாயை சுட்ட கதையை நான் சொல்லவில்லை. சில நாட்களிலேயே நன்றாக குறிபார்த்து சுடுவதற்கு பழகிவிட்டேன். 

ஒருநாள் சனிக்கிழமை. ஒரு டிப் கிடைத்தது. நானும் சின்னப்பெடியன் அண்ணையும் ஹீரோ ஹோண்டாவில் பட்டாணிச்சூர் பயணமானோம். அங்கே ஒரு ஒழுங்கை திருப்பத்திலே பொதுக்கிணறு ஒன்று இருக்கிறது. பக்கத்தில் ஒரு மோட்டர் பெட்டி. அதற்குள் ஒளிந்திருந்தால் தேவதாசன் அந்த வழியால் சைக்கிளில் போகும்போது சுட்டுவிட்டு ஓடிவிடலாம். அதுதான் பிளான். எனக்கு தேவதாசன் யார் என்று தெரியாது. சாறம், நீலக் கலர் மார்டின் சேர்ட், மேல் பட்டன் திறந்திருக்கும், மோட்டர் சைக்கிளில் வருவான் என்கின்ற நாற்பது வீதமான இளைஞர்களின் அடையாளம்தான் கொடுக்கப்பட்டது. சின்னப்பெடியன் அண்ணைக்கு அது குழப்பமாக இருந்தது. கொடுத்த அடையாளம் காணாது என்று புறுபுறுத்துக்கொண்டிருந்தார். தான் கூட நீலக்கலர் மார்டின் சேர்ட்தானே போட்டிருக்கிறேன் என்று சிரித்தார். சின்னப்பெடியன் அண்ணை அவ்வளவு குழப்பமாக இருந்து நான் ஒருநாளும் கண்டதில்லை. தண்ணி விடாய்க்குது என்று கப்பிக் கிணற்றிலே தண்ணி அள்ளி ஒரு கையால் வாளியை கவிழ்த்து மற்றக்கையால் ஏந்திக்குடித்தார். காதுதான் தெளிவாகத் தெரிந்தது. இதூதான் சமயம். சுட்டுவிட்டேன். கன்னத்துக்குள்ளால் புகுந்து மூளை சிதறியிருக்கும். திரும்பிப்பார்க்கவில்லை. பார்த்திருந்தால் அழுதிருப்பேன். தெரிந்தவர்களை கொல்லும்போது பிரேதத்தை பார்க்கக்கூடாது எந்த ஐடியாவை தந்ததே சின்னப்பெடியன் அண்ணண்தான். என்னவானாலும் சின்னப்பெடியன்  அண்ணன் ஒரு துரோகி. கொல்லப்பட வேண்டியவர். அதுதான் நான் செய்த இரண்டாவது கொலை.
Like · Comment · January 10, 2015 ·

சின்னப்பெடியன் அண்ணை ஒரு துரோகி என்றால், அவரோடு கூட இருந்து அவரையே கொலை பண்ணிய நான் யார்? ஒரு துரோகி, பகிரங்கமாக சகோதரப்படுகொலை செய்தவன், அதைப்பற்றி பெருமை அடிப்பவன், எப்படி என்னால் வெட்கமேயில்லாமல் இயங்க முடிகிறது? கவிஞர் அமுதவாயன் என்று பெயர் வச்சுக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தால் இந்த ஊரில் கொலைகாரன் கூட உலகத்தை திருத்த வெளிக்கிடலாம் என்பது எவ்வளவு வெட்கக்கேடு. நாமெல்லாம் கொஞ்சம் ஊனறிப்படித்திருந்தால் டொக்டர் வேற. இந்த சமூகம் யாரை கொண்டாடும் என்பதையே விளங்கிக் கொள்ளமுடியவில்லை. எதையுமே புத்திசாலித்தனமாக காரணப்படுத்திவிட்டால் ஹில்டர் கூட காந்திதான். காந்திகூட ஹிட்லர்தான். 

என் அம்மா ஒரு அணு விஞ்ஞானி தெரியுமா? என்னால் நிறுவ முடியும். அவ்வையார் அணுவைக்கண்டுபிடிப்பதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். அவ்வையார் கவிதைகளுக்கு புது விளக்கம் கொடுக்கவேண்டும். அவ்வையார் எழுதியதாக நாமே ஒன்றை எழுதிப்போட்டால் விளக்கம் கொடுப்பதும் எளிது. இங்கே எவனும் ஆராயமாட்டான். கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றையே மக்களுக்கு திரும்ப திரும்ப சொல்லி, அவர்களுடைய இயலாமையையும், தாழ்வு மனப்பான்மையையும் பகடையாக பயன்படுத்தி, சிம்பதி கிரியேட் பண்ணி, நம்மால் எட்ட முடியாத உயரத்தில் இருப்பவனை தாக்கி... அது ஒரு பெரிய புரொசஸ். ஆனால் என் அம்மா ஒரு அணு விஞ்ஞானி என்பதை நிறுவுதல் இலகு. அம்மாவை அடுப்படியில் வைத்து பேட்டிகண்டு ஒரு யூடியூப் விடியோ சரிக்கட்டினால் போதும். அம்மாவை அழ வைக்கவேண்டும். அப்பா விட்டுட்டுப் போனதையும் சொல்லச்சொல்லலாம். குவார்க்குகள், அணுக்கட்டமைப்பு, சக்திவிதிகள் எதையுமே பேசத்தேவையில்லை. நம்பி விடுவார்கள். ஒரு இண்டலக்ட் பயங்கரவாதி, இரண்டாயிரம் லைக்குகளை வைத்துக்கொண்டு ஆர்ம்ஸ்ரோங் தன் அண்ணன் என்றுகூட நிறுவமுடியும். கேதீஸ் அதனையே செய்கிறான். ஆனால் கிருபாலினி பாவம், அவள் சும்மா இருந்தாலும் சமூகம் அவளை பயங்கரவாதி ஆகிவிடுகிறது. காந்தாரி மாதிரி இருந்தால் நான் மட்டுமே கணக்கெடுப்பேன்.
Like · Comment · January 10, 2015 ·

கேதீஸோடு முரண்பட்டது இன்னமும் உறுத்திக்கொண்டிருக்கிறது. மனம் தாங்காமல் அவனுடைய அத்தனை பழைய போட்டோக்களையும் இன்று லைக் பண்ணினேன். முக்கால்வாசி போட்டோக்கள் போனிலே எடுத்த செல்பிக்கள். உதவத்த போட்டோக்கள். ஆனாலும் லைக் பண்ணினேன். சிலதுக்கு அருமை என்று கொமெண்ட் போட்டேன். ஒன்றிலே கேதீஸின் மனைவி அவனுடைய பேர்த்டேக்கு கேக் ஊட்டுவதாக ஒரு போஸ். கேதீஸின் விமலினி எம்மோடு கூடப்படித்தவள். மணி டியூஷனில் படிக்கும்போது நான்தான் அவளுக்குப்பின்னால் திரிந்தேன். இடம்பெயர்ந்து நான் வன்னி வவுனியா என்று அலைந்த காலத்தில் விமலினிக்கும் கேதீஸுக்கும் கீசி விட்டது. நான் பேஸ்புக்குக்கு வந்தபின்னர் அனுப்பிய முதல் பிரண்டு ரிக்குவஸ்டே விமலினிக்குத்தான். விமலினி என்னுடைய பிரண்டு ரிக்குவஸ்டை கூட ரிஜெக்ட் பண்ணிவிட்டாள். இத்தனை வருடங்கள் ஆயிற்று. ஆயிரம் பிரண்டுகளாவது அவளுக்கு இருக்கலாம். ஆனால் என்னை இன்னமும் பலோவராகவே வைத்திருக்கிறாள். காந்தாரி அப்படியல்ல. அட் பண்ணிய அடுத்த நிமிடமே எனக்காகவே காத்திருந்ததுபோல அக்ஸப்ட் பண்ணிவிட்டாள்.
Like · Comment · January 11, 2015 ·

இன்று முழுதும் விமலினியின் பப்ளிக் போட்டோக்களை துலாவிக்கொண்டிருந்தேன். இரண்டு பிள்ளை பெற்றும்கூட இன்னமும் அவள் அழகாய் இருக்கிறாள். ஒரு பரதேசிக்குப்போய் இப்படி ஒரு மனைவி. சின்னப்பெடியன் அண்ணையின் ஞாபகம் வந்தது. அன்றைக்கு நான் அந்த ரிவோல்வரை கிணற்றுக்குள்ளேயே போட்டுவிட்டு ஓடிவிட்டேன்.
Like · Comment · January 12, 2015 ·

கேதீஸ் என்னுடைய போட்டோ கொமெண்ட் ஒன்றை டிலீட் பண்ணிவிட்டான். அவனுடைய குடும்ப படம் ஒன்றுக்கு “சும்மா டக்கரா இருக்கு மச்சி” என்று எழுதினேன். அதில் என்ன குறை கண்டான்? மனசிலே என்ன நினைத்திருப்பேன் என்று கேப்பை கண்டுபிடித்திருப்பானோ?
Like · Comment · January 12, 2015 ·

நான் ரசியா போயிருக்காவிட்டால் விமலினி கேதீஸை கலியாணம் கட்டியிருக்கமாட்டாள்..
Like · Comment · January 12, 2015 ·

கேதீஸ் என்னை மோசமாக தாக்கி கொமெண்ட் போட்டதை விமலினி பார்த்திருப்பாள். கேதீஸ் உடன் சமாதானமாக போவதுதான் இப்போது எனக்கு நல்லது. அவனுக்கு மீண்டும் இன்பொக்ஸ் பண்ணினேன். அடுத்தமுறை இலங்கை வரும்போது அவன் குடும்பத்தை சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். வரும்போது சொல்லு. அல்சேஷனை அவிழ்த்து விடுகிறேன் என்றான். அதுக்குப்பதிலாக நீயே வாசலில் நில்லு. பெரிய வித்தியாசம் இல்லை என்றேன். அவன் ரிப்ளை பண்ணவில்லை.
Like · Comment · January 12, 2015 ·

நான் ஏன் சமாதானம் பேசப்போனாலும் சண்டை பிடிக்கிறேன்?
Like · Comment · January 12, 2015 ·

இப்போதெல்லாம் இளைய தலைமுறையிடம் வாசிப்பு பழக்கம் அருகிவிட்டது” என்று கேதீஸ் ஸ்டேடஸ் போட்டான். உண்மைதான் என்று பலர் ச்சுக்கொட்டியிருந்தார்கள். எனக்கு கோவம் வந்துவிட்டது. “டேய் சின்ன வயசில் நீ என்னத்த பெரிசா வாசிச்சு கிழிச்சாய்? இல்லை இப்பதான் என்னத்த கிழிக்கிறாய்? ரமணிச்சந்திரனையும் ராஜேஷ்குமாரையும் வாசிச்சவன் எல்லாம் பெரும் படிப்பாளி ஆயிட்டாங்கள்” என்று கொமெண்ட் போட்டேன். அவன் கொமெண்டை அழித்துவிட்டான். தொடர்ச்சியாக தான் வாசித்த புத்தகங்களை பட்டியலிட்டான். மோகமுள், நகுலன் கவிதைகள். ஒரு புளிய மரத்தின் கதை. விஷ்ணுபுரம். எனக்கு செம கோவம். விஷ்ணுபுரம் யார் எழுதினதென்றே அவனுக்கு தெரிந்திருக்காது. விமலினி காத்து வாக்கில் அவனிடம் சொல்லியிருப்பதை தன்னுடைய லிஸ்ட் என்கிறான் லூசன். அவனுடைய நிஜ லிஸ்டை நான் தருகிறேன் என்று ஒரு கொமெண்ட் போட்டேன். முதலாவது அறிவுக் களஞ்சியம். இரண்டாவது கோகுலம். மூன்றாவது ஜூனியர் விகடன். நான்காவது சினிமா எக்ஸ்ப்ரஸ். மற்றது போட்டோகொப்பி பண்ணிய ஒரு சரோஜாதேவி புத்தகம். அவன் கொமெண்டை தூக்கிவிட்டான். நான் விடவில்லை. துரத்தி துரத்தி கொமெண்ட் போட்டேன். என் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அவன் டிலீட் பண்ணமுதல் நோட்டிபிகேஷனை பார்த்து ஏனைய கொமேண்டுகளை போட்டவர்கள் என் கொமெண்டை வாசித்துவிடவேண்டும். நாலு பேருக்கு கேப்பையினார் கேதீஸின் வண்டவாளம் தெரியவேண்டும். இடையில் விமலினி நோட் பண்ணிவிட்டால் அது போனஸ். அவ்வளவுதான். இயலாக்கட்டத்தில் கேப்பையினார் அந்த ஸ்டேடசையே தூக்கிவிட்டான். பிளடி லூசர்.
Like · Comment · January 13, 2015 ·

நாற்பது வயதில் நாய்க்குணம் வரும் என்பார்கள். எனக்கு கலியாணமும் ஆகவில்லை. நான் என் செய்வேன்?
Like · Comment · January 14, 2015 ·

நான் ஒரு நாய்.
Like · Comment · January 14, 2015 ·

நாய்கள் அவ்வளவு கெட்டவை அல்ல. நான் ஒரு எளிய நாய்..
Like · Comment · January 14, 2015 ·

நான் எளிய நாய் என்றால் கேப்பை ஒரு குட்டை நாய்.
Like · Comment · January 14, 2015 ·

ஏன் ஒருவரை கீழ்மைப்படுத்த நாயை இழுக்கிறோம்? நான் ஒரு எளிய புழு.. அதுவும் பாவம். என்ன பாவம் செய்தது?
Like · Comment · January 14, 2015 ·

என் பிரச்சனயே இதுதான். எனக்கு என்னிலும் கீழான ஒன்றை கண்டுபிடித்து ஒப்பிட முடியவில்லை. அந்த அளவுக்கு வாழ்வின் அடி அந்தத்தில் நான் இருக்கிறேன். எனக்கு கீழே ஆதியும் அந்தமும் வியாபித்திருக்கும் கடவுள் மட்டுமே தெரிகிறார்.
Like · Comment · January 14, 2015 ·

நான் ஒரு எளிய கடவுள்.
Like · Comment · January 14, 2015 ·

கேப்பையினார் ஒரு குட்டைக் கடவுள்.
Like · Comment · January 14, 2015 ·

நம் புராணங்களில் எங்கேயாவது கடவுள் இன்னொரு கடவுளை வதம் பண்ணியிருக்கிறாரா? இல்லை. காரணம் வதம் செய்த கடவுள் வதைக்கப்பட்டவனை அசுரன் என்று வரலாற்றில் குறித்திருப்பார். சூரபத்மன் பெயரைப்பார்த்தால் அது கடவுளின் பெயர் போன்றே இருக்கிறது. சூரனை வணங்கியவன் எல்லோரும் வதைக்கப்பட்டிருப்பார்கள். சிலர் மதம் மாறியிருப்பார்கள். சிலர் ஐரோப்பாவுக்கு தப்பியோடு இயேசுவிடம் தஞ்சம் புகுந்திருப்பார்கள். இந்தத்தலைமுறை முருகனை தமிழ்க்கடவுளாக கும்பிடத்தொடங்கிவிட்டது. #மாற்றம்.
Like · Comment · January 14, 2015 ·

கேப்பையினார் கேதீஸ் ஒரு அரக்கன். வதைக்கப்படவேண்டியவன்.
Like · Comment · January 14, 2015 ·

கேப்பையினார் கேதீஸ் ஏன் இன்னும் என்னை அன்பிரண்ட் பண்ணாமல் இருக்கிறான்?
Like · Comment · January 15, 2015 ·

கேப்பையினார் கேதீஸிடம் மீண்டும் மன்னிப்புக் கேட்டேன். Seen என்று வந்தது. ரிப்ளை இல்லை.
Like · Comment · January 15, 2015 ·

நான் திரும்பி திரும்பி அவன் ஸ்டேடசை லைக் பண்ணுகிறேன். படங்களுக்கு கொமெண்ட் பண்ணுகிறேன். மெசேஜ் பண்ணுகிறேன். ஆனால் அவன் என்னை ஐஞ்சியத்துக்கும் மதிக்கிறான் இல்லை. டபிள் ஏஜெண்டா வேலை பார்த்த சின்னப்பெடியன் அண்ணையையே கூட இருந்து வெடி வச்சவன் நான். கேப்பையினார் கேதீஸ் ரொம்பத்தான் ஆடுறான். ஆடு ராமா ஆடு.
Like · Comment · January 15, 2015 ·

துரோகிகளை மன்னிக்கக்கூடாது. போரிலே நாம் செய்கின்ற ஒவ்வொரு கொலையும் ஒருவிதமான Collateral Damage என்று சின்னப்பெடியன் அண்ணை ஒருக்கா சொன்னவர். யோசிக்காமல் சுட்டுவிடவேண்டும். அல்லது அவன் நம்மை சுட்டுவிடுவான்.
Like · Comment · January 16, 2015 ·

கேப்பையினார் கேதீஸ் ஒரு துரோகி.
Like · Comment · January 16, 2015 ·

இரண்டு கொலை பண்ணினதில் ஆச்சரியமாக எனக்கு துவக்கு என்றாலே பயங்கரப் பயம். அது நம் கையில் இருக்கும்போது நாமே ராஜா. எதிராளி கையில் இருந்தால் நாம் கூஜா. இலங்கை ஜனாதிபதி பதவியும் துப்பாக்கியும் ஒன்றுதான். எப்போது கைமாறுகிறதோ அப்போதே முன்னையவனை சுட்டுவிடவேண்டும். பேசிக்கலி நாட்டிலே சுடத்தெரிந்தவன் கூடவுள்ள அத்தனை பேரையும் சுட்டுவிடவேண்டும். நண்பனோ எதிரியோ. அது பிறகு செத்தபிறகு தீர்மானிக்கலாம். விமர்சிக்கலாம்.்.
Like · Comment · January 16, 2015 ·

கேதீஸிடம் துப்பாக்கி இருந்தால் என் நிலை என்னாவது?
Like · Comment · January 16, 2015 ·

கேதீஸ் கேதீஸ் கேதீஸ். எப்போது பார்த்தாலும் கேதீஸ் நினைப்புத்தான். அவன் உயிரோடு இருக்கும்வரைக்கும் எனக்கு நித்திய கண்டம்தான்.
Like · Comment · January 16, 2015 ·

இன்றும் விமலினியின் பழைய பேஸ்புக் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். குழந்தையோடு கண்கட்டு விளையாட்டு ஆடிக்கொண்டிருந்தாள். கறுப்புத் துணியால் கண்களை கட்டியபடி அவள் குழந்தையை தேடுகிறாள். "குழந்தை பின்னால்தான் நிற்கிறது. நீ ஏன் முன்னுக்கு தேடுகிறாய்? திரும்பு விமலினி" என்று கொமெண்ட் போட்டேன். அழித்துவிட்டாள். கடைசிவரை விமலினி பின்னால் நின்ற குழந்தையைக் கண்டுபிடிக்கவில்லை. நான் நானூற்று ஏழாவது தடவையாக மீண்டும் அதே கொமேண்டைப் போட்டேன். அவளும் நானூற்று ஏழாவது தடவையாக டிலீட் பண்ணிவிட்டாள். அவள் என்னை புளக் செய்யமுடியாது. கேப்பையினார் கேதீஸ் எமகாதகன். இரகசியமாக அவளுடைய புளக் லிஸ்டை பார்த்துவிடுவான். அது விமலினிக்கும் தெரிந்து என்னை புளக் பண்ணாமல் இருக்கிறாள். ஆனால் வீடியோவை ஏன் பப்ளிக்காகவே வைத்திருக்கிறாள்? ஒருவேளை உள்ளூர அவள் என்னுடைய கொமெண்டை எதிர்பார்க்கிறாளா? இல்லை ஒரு லைக் போய்விடும் என்பதற்காக சும்மா இருக்கிறாளா? இல்லை ஏலுமெண்டா பண்ணிப்பார் என்று சவால் விடுகிறாளா?
Like · Comment · January 17, 2015 ·

கண்கள் கட்டப்பட்ட விமலினி இன்று கனவில் வந்தாள். நான் பின்னாலேயே நிற்கிறேன். அவள் கண்டுபிடிக்கவில்லை. முன்னாலே போகாதே. அங்கே கேப்பையினார் கேதீஸ் நிற்கிறான். வேண்டாம். பின்னாலே திரும்பு. கத்துகிறேன். அவளுக்கு கேட்கவில்லை. உன் பின்னாலேயே நிற்கிறேன் விமலினி. நீ தான் திரும்புகிறாய் இல்லை.
Like · Comment · January 17, 2015 ·

பிறன்மனை நயத்தல் கொடிய பாவம். அழித்தனை மனையின் மாட்சி என்று இராமன் வாலிக்கு எடுத்துச்சொல்லுவான். இல்லிறப்பது முகநூலில் எளிதாகிறது. அதனாலேயே வள்ளுவன் சொன்னான். எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. தவறு என்று தெரிகிறது. இப்படி செய்யக்கூடாது என்று தோன்றுகிறது. ஆனால் மன விகாரங்கள் சால்ஜாப்பு சொல்கின்றன. யாருமே இல்லை, விமலினிக்கு தெரியவா போகிறது? கேப்பையினார் குறைஞ்சா போயிடுவான். நீ பாரேன் என்கிறது. நான் என் செய்வேன். அந்த யாருமில்லாத தீவில் மாட்டிறைச்சியும், விஸ்கியும், தூரத்தே விமலினியும் இருந்தால் என்ன செய்வேன்? ஒருவாரம் பத்துநாள் தாங்குவேனா... வோமா?
Like · Comment · January 17, 2015 ·

சமூகத்தைப்பற்றி எனக்கு கவலையில்லை. இந்தச்சமூகம் பிறன்மனை நயப்பவனையும் கொண்டாடும். வாலியை கொண்டாடுபவர்கள் எத்தனைபேர் இந்நாட்டில். வாலி படத்தோடு அஜித்குமாரே பெரும் ஸ்டார் ஆகிவிட்டார். எத்தனை பேருக்கு அந்த அஜித்மீது கோபம் வந்தது? இங்கே ஒருவன் நல்லவன் என்பதால் ஹீரோ ஆக்கப்படுவதில்லை. ஹீரோ என்பதால் நல்லவன் ஆக்கப்படுகிறான். இராவணன் சீதையை காமுறவில்லையா? கொஞ்சம் தமிழ் பித்து, கொஞ்சம் ஆரிய வெறுப்பு, மீதி ஹிப்போகிரஸி, இவற்றால் நாங்கள் இராவணனை கடவுள் ஆக்கவில்லையா? எங்கள் வசதிக்கு கதையையே மாற்றி சீதையை இராவணன் தங்கை ஆக்கிவிட்டோம். உனக்கு திராவிட ஹீரோ வேண்டுமென்றால் சிலப்பதிகாரம் படி. எதற்கு இராமயணக்கதையை மாற்றுகிறாய்? அப்படியே மாற்றுவதென்றால் ராமனை திராவிடனாக்கி இராவணனை ஆரியன் ஆக்கேன். ஏன் கெட்டவனை ஹீரோவாக்கிறாய்?
Like · Comment · January 17, 2015 ·

எங்கள் ஹீரோ எப்போதுமே நல்லவன். எதிரி நல்லவனாகவேயிருந்தாலும் கெட்டவன். நான் ஹீரோ ஆகவேண்டுமென்றால் ஒரு ராமனை கெட்டவன் ஆக்கவேண்டும்? யாராவது ராமர்கள் இருக்கிறீர்களா?
Like · Comment · January 17, 2015 ·

ஒரு சாத்தான் வேதம் ஓதுகிறது..
Like · Comment · January 17, 2015 ·

அக்சுவலா சாத்தான்தான் வேதம் ஓதவேண்டும். சாத்வீகன் எதுக்கு ஓதவேண்டும்?
Like · Comment · January 17, 2015 ·

என் பிரச்சனை என்ன? வீட்டில் அண்ணாவும் நானும்தான். அப்பாகூட நினைவு தெரிந்த நாளில் எம்மோடு இருந்ததாக ஞாபகம் இல்லை. அம்மா எப்போதுமே படி படி படி என்றே குட்டி குட்டி வளர்த்தார். நல்லது கெட்டது சொல்ல யாருமே இல்லை. சின்னப்பெடியன் அண்ணையை கொன்றுவிட்டு வீட்டிலே எந்த குழப்பமும் இல்லாமல் மீன் குழம்பும் புட்டும் சாப்பிட்டேன். இப்போது யோசித்துப்பார்க்கிறேன். தவறு செய்யும்போது எப்போதுமே நான் சங்கடப்பட்டதில்லை. ஏனென்றால் அது தவறு என்று சின்னவயதில் எவருமே எனக்கு உணர்த்தவில்லை. சொன்னார்கள். ஆனால் உணர்த்தவில்லை. சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து சொல்வர் செல்வர் சிவபுரத்தில் உறைவர் என்றார் மணிவாசகர். அவரைத்தவிர வேற யாரும் சிவபுரத்தில் உறைந்ததாக தெரியவில்லை.
Like · Comment · January 18, 2015 ·

பத்துவயதிலே பெண் என்பவள் அலிபாபா குகை போன்றே எனக்குத்தோன்றினாள். என்னதான் உள்ளே இருக்கிறது? பெண் என்பது அவள் எழுதும் கவிதை போன்றே புரியாமல் போய்விட்டது. இப்போது நாற்பது வயதில் அறிவு எதைத்தான் படிச்சுச்சொன்னாலும் the damage is done. ஆழ்மனது விகாரங்கள் அறிவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. அதேநேரம் அந்த விகாரங்களுக்கு அறிவை நன்றாகவே பயன்படுத்தத் தெரிகிறது. ஒகே, பிழைதான், நான் செய்யக்கூடாதுதான் என்று சொல்லிக்கொண்டே விமலினியின் புரபைலை நோண்டுகிறது. எனக்குத்தேவை விமலினியா? அனஸ்தாசியாவா? இல்லை வெறும் பெண்ணா? இது இச்சையா? புரியவில்லை. விமலினியை விமலினி என்பதால் பிடிக்கிறதா? கேப்பையினாரின் மனைவி என்பதால் பிடிக்கிறதா? எனக்கு ஒரு மனைவி இல்லாததால் பிடிக்கிறதா? அம்மாவிடம் சொல்லி சீக்கிரமே ஒரு பெட்டையை எனக்கு கட்டிவைக்கச் சொல்லவேண்டும்.
Like · Comment · January 18, 2015 ·

யூடியூபில் விஜய் டிவி மகாபாரதம் பார்த்தேன். காந்தாரியை பார்க்க பார்க்க விமலினியின் போட்டோதான் ஞாபகம் வந்தது. பாவம் விமலினி. பாவம் பீஷ்மர். கொல்லோணும் திருடராஷ்டிரனை.
Like · Comment · January 19, 2015 ·

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொலைதான். பிரேமதாசா பிரச்சனையா? கொல்லு. ராஜீவ்காந்தி பிரச்சனையா? கொல்லு. பிரபாகரன் பிரச்சனையா? கொல்லு. கதிர்காமர் பிரச்சனையா? கொல்லு. சுமந்திரன் பிரச்சனையா? கொல்லு. கோத்தா, ராஜபக்ஸ என்று எவர் எவரை எமக்கு பிடிக்குதில்லையோ அவரை எல்லாம் கொல்லு. கொன்றுவிட்டால் பிரச்சனை முடிஞ்சுதே. சப்டர் குளோஸ். வரலாறு நமக்கு உணர்த்திய ஒரே பாடம் இதுதான். எவனோடாவது பிரச்சனை என்றால் யோசிக்காதே, உடனே கொல்லு. பிரச்சனை இல்லாட்டியும் அவ்வப்போது யாரையாவது கொல்லு. அப்போதுதான் மற்றவன் சீண்டமாட்டான்.
Like · Comment · January 19, 2015 ·

Done with Paralysis by Analysis. Lets get on with it.
Like · Comment · January 20, 2015 ·

கேப்பையினார் கேதீஸை நான் கொல்லப்போகிறேன்.
Like · Comment · January 21, 2015 ·

இது எப்போதோ முடிந்த காரியம். காரணம் தேடத்தான் இவ்வளவு நாட்களாயிற்று.
Like · Comment · January 22, 2015 ·

கேதீசுக்கும் அவனைத் தேடிவந்து கொல்லப்போவதாக இன்பொக்ஸ் பண்ணிவிட்டேன். அவன் சீரியஸாக எடுக்காமல் தம்ஸ் அப் என்றான். சின்னப்பெடியன் அண்ணையை கொன்ற சம்பவத்தில் நான் வெறும் கருவிதான். வெறும் அர்ஜூனன். அரவிந்த்சாமி. ஆனால் கேப்பையினாரை கொல்லுவதற்கு காரணமும் நானே. காரியமும் நானே. கண்ணன். இராமன் என்றும் சொல்லலாம். இப்படியான விசயங்களில் கடவுள்களை துணைக்கழைப்பது நாம் செய்யும் செயலை இலகுவில் நியாயப்படுத்த உதவும். மதவாதிகள் எதிர்க்கமாட்டார்கள். பின்னர் பகுத்தறிவையும் துணைக்கழைத்தால் புரோப்ளம் ஸோல்வ்ட்.
Like · Comment · January 22, 2015 ·

கேதீசுக்கு அவன் சாகமுதல் மரண பயத்தை ஏற்படுத்துவது முக்கியமானது. அவனிடம் நான் சின்னப்பெடியன் அண்ணையையும் காக்கை தீவு நாயையும் சுட்டுக்கொன்ற கதையை விலாவாரியாக மெசேஜ் பண்ணினேன். ரிப்ளை வரவில்லை. சின்னப்பெடியன் அண்ணையை கொலை செய்யச்சொல்லி ஓர்டர் கொடுத்தவர் மலாவியில் இருக்கிறார். வேண்டுமானால் தொடர்புகொண்டு செக் பண்ணு என்று பேஸ்புக் லிங்க் கொடுத்தேன். ரிப்ளை இல்லை. ஏதாவது ஆதாரம் காட்டவேண்டும்.
Like · Comment · January 22, 2015 ·

இங்கே ரசியாவிலே நரியை செல்லப்பிராணியாக வளர்க்கலாம். இன்று காலை ஒரு பிராணியை வாங்கிக்கொண்டுவந்து, சமையலறையில் கொன்றுவிட்டு செல்பி எடுத்து கேதீசுக்கு அனுப்பினேன். பயந்துவிட்டான். என்னை அன்பிரண்ட் பண்ணிவிட்டான். விமலினியும் புளக் பண்ணிவிட்டாள்.
Like · Comment · January 23, 2015 ·

நான் கேப்பையினார் கேதீஸை கொலை செய்யப்போவதை காந்தாரியிடம் சொல்லவில்லை. அவளுக்கு கொலை பிடிக்காது. நான் நல்லவனாக இருப்பதே அவளுக்கு பிடிக்கும். நடிப்போம்.
Like · Comment · January 24, 2015 ·

ரூம் மேட்டின் கிரெடிட்கார்டை திருடி இன்று டிக்கட் வாங்கிவிட்டேன். நாளைக்கே பிளைட். கையில் கொஞ்சம் காசு இருகிறது. அனஸ்தாஸியாவின் தொலைபேசி இலக்கத்தை தேடவேண்டும். கடைசியாக ஒருமுறை வைரமுத்து கவிதை..காந்தாரி என்னை மன்னித்துவிடு.
Like · Comment · January 25, 2015 ·

@Pulkovo Airport , St.Petersburg, Russia​. இன்னும் ஒரு மணிநேரத்தில் பிளைட். என்னுடைய கடைசி ரூசிய ஸ்டேடஸ் இலக்கியம் இதுவாகத்தான் இருக்கும். கேப்பையினார் கேதீஸை எப்படி கொல்லப்போகிறேன் என்ற பிளானை பிளைட்டிலேயே போடப்போகிறேன்.
Like · Comment · January 26, 2015 ·


அடுத்தவாரம் : கொலை விழும்!


Contact form