ஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - கொலை அக்டிவிட்டி லொக்

Mar 22, 2015

பாகம் ஆறு : கொலை அக்டிவிட்டி லொக்

அமுதவாயன் ஆகிய நான் கேப்பையினார் கேதீஸ் என்கின்ற துரோகியை எந்த மனக்குமுறலோ, குழப்பங்களோ இல்லாமல் கொலை செய்வதற்காக இலங்கை மண்ணில் காலடி எடுத்துவைக்கிறேன். Feeling excited.
Like · Comment · January 26, 2015 ·

கட்டுநாயக்க ஏர்போர்டில் இருக்கும் இண்டர்நெட் டேர்மினலில் நின்றுகொண்டு டைப்புகிறேன். இலங்கையில் பிளேன் வந்து லாண்ட் பண்ணிய கையுடன் கூடவே அடிவயிற்றுள் இன்னொரு ப்ளேனும் லாண்ட் பண்ணுகிறது.
Like · Comment · January 26, 2015 ·


கடவுளே, என் மனது தேவையில்லாத வியாக்கியானங்கள் எதுவும் செய்து குழம்பாமல் தெளிவாக கேப்பையினாரை கொல்லுவதற்கு உதவிசெய்யவேண்டும்..
Like · Comment · January 26, 2015 ·

டெர்மினலால் இறங்கி நடந்து வருகையில் ஆங்காங்கே போலீஸ்காரர்கள் நின்றார்கள். இன்டெலிஜெண்டும் நடமாடியது. அவன் எப்போதும்போல சமாதான காலத்திலும் அலேர்ட்டாகவே இருக்கிறான். என்னைக்கண்டுபிடித்துவிடுவார்களோ? கேப்பையினார் துப்பு கொடுத்திருப்பானா? கொல்லப்படப்போகிறோம் என்று தெரியவந்தவுடன் ஆர்மியின் பக்கம் சாய்ந்திருப்பான். துரோகி.
Like · Comment · January 26, 2015 ·

நடந்துவரும் வழியில் ஒரு பெரிய புத்தரும் இருந்தார். கீழே ஆயிபொவன் என்று மும்மொழியிலும் எழுதியிருந்தது. வயிற்றை கலக்கியது. இப்போதெல்லாம் சிங்களம் தெரியாமல் இலங்கையில் இலகுவாக ஒரு கொலை பண்ணிவிட்டு தப்ப முடியுமா? சனியன் ஹிந்திகூட எனக்கு தெரியாதே.
Like · Comment · January 26, 2015 ·

இந்த நாட்டில் மட்டும்தான் புத்தரைப் பார்த்தாலே வயிற்றை கலக்குகிறது.
Like · Comment · January 26, 2015 ·

கொன்சென்ரேட் அமுதவாயா. கொலைபற்றி மட்டுமே யோசி. திட்டமிடு. மனதை அலை பாயவிடாதே. வந்தவேலையை மறந்துவிடாதே. விமலினியை மறந்துவிடு. காந்தாரியை மறந்துவிடு. கிருபாலினி, அனஸ்தாசியா என்ற எந்தக்கிளி வந்தாலும் கலைத்துவிடு. உன் டார்கட் கேப்பையினாரின் கழுத்து மாத்திரமே. அங்கேயே போகஸ் வேண்டும். போகஸ் போகஸ் போகஸ். உடனடியாக பாத்ரூம் போனேன்.
Like · Comment · January 26, 2015 ·

பாத்ரூமில் முகம் அலம்பிவிட்டு நிமிர்ந்தேன். “உன்னை நான் அறிவேன். என்னை அன்றி வேறறிவார்”, நிலைக்கண்ணாடியில். காந்தாரி... நீயா? எப்பிடி இங்கே வந்தாய் காந்தாரி?
Like · Comment · January 26, 2015 ·

நம்பமுடியவில்லை காந்தாரி. உனக்கெப்படி நான் இலங்கை வந்தது தெரியும்? “கண்ணிலே என்ன உண்டு கண்கள்தானறியும். கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்? என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத்தெரியும்?" காந்தாரி பாடாதே. போய்விடு. உன்னை இஞ்ச ஆரும் ஆராத்தி பிடிச்சு கூப்பிடேல்ல. கொல்லவந்த இடத்தில நானே குழம்பிப்போய்க்கிடக்கிறன். இல்ல இல்ல. நான் கொல்ல வரேல்ல காந்தாரி. சும்மா… அம்மாவை பார்க்க .. நான் சும்மா சுற்றிப்பார்க்கத்தான் வந்தன். உன்னைநான் கொன்டகட் பண்ணுவன் காந்தாரி. நீயாக வந்து தாலி அறுக்காதே. எனக்கு ஒரு அமுதவாயனை சமாளிப்பதே கஷ்டமாக இருக்கிறது. நீ வேணாம் … வேணும் ஆனா இப்ப வேணாம் காந்தாரி. போய்விடு. நானே உன்னிடம் வருகிறேன்.
Like · Comment · January 26, 2015 ·

“உனக்கு என்ன வேண்டும் எண்டத எப்பவிலயிருந்து தீர்மானிக்கத்தொடங்கினாய் அமுதவாயன்?” காந்தாரி கேட்டாள். இவள் கேள்வி கேட்கத்தொடங்கினால் பதில் சொல்லமுடியாது. இவளை கலைக்கவேண்டுமே. இவள் நிஜமா? சான்ஸ் இல்லை. ஆண்கள் பாத்ரூமில் எப்படி காந்தாரி. கனவுதான். இழவு. என் கனவுகள் எல்லாம் நிஜமாகும் இழவு. என்ன செய்வேன் நான். கடவுளே. கண்களை மூடினேன். இவள் எப்படி வந்தாள்? இவளிடம் கவனமாக இருக்கவேண்டும். கண்டுபிடித்துவிடுவாள். கண்ணைக்கட்டிக்கொண்டு திரிந்தாலும் நீக்கலுக்குள்ளால் எல்லாவற்றையும் பார்த்துவிடுவாள். மறைக்கமுடியாது.
Like · Comment · January 26, 2015 ·

அரை மணிநேரம் வெயிட் பண்ணியும் எனக்கு பாத்ரூம் வரவில்லை. பக்கத்தில இருக்கிறவன் பார்த்தால் எனக்கு துளிகூட வராது. காந்தாரி பார்க்காதே. போய்விடு என்றேன். அவள் அசையவில்லை. நான் வெளியே வந்துவிட்டேன்..
Like · Comment · January 26, 2015 ·

வெளியில் வந்தால் மீண்டும் அதே புத்தர். காந்தாரி பார்ப்பதுபோலவே இருந்தது. “அமுதவாயன் நீ என்ன கள்ளம் செய்யப்போகிறாய்?” என்று கண்கள் சொருகி ஒரு விதமாய் கேட்கின்ற காந்தாரி. கனித்த மனத்தில் இருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா. ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா. கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ. இது தகுமோ.. இது முறையோ..இது தருமம் தானோ … காந்தாரி பிளீஸ். வட் ஆம் ஐ டூயிங்? நான் ஒரு பெர்வேசிவ் மெண்டலி ரிட்டார்ட்டாக மாறிக்கொண்டிருக்கிறேனா. புத்தரைப்பார்த்தாலும் காந்தாரி தெரிகிறாளே. ஷிட். இது புத்தர். வெறும் புத்தர். கௌதம சித்தார்த்த புத்தர். போகஸ் அமுதவாயன்.
Like · Comment · January 26, 2015 ·

புத்தர் சிலையைக்கு அருகே சித்தார்த்தனின் மனைவி யசோதராவும் மகன் ராகுலனும் பாய் விரித்து தர்ணா பண்ணிக்கொண்டிருந்தார்கள். புத்தர் இரவோடு இரவாக காணாமல் போய்விட்டார் என்று, கோபத்தோடு புத்தர் சிலைக்கு கீழேயே அமர்ந்துகொண்டு பேட்டிகொடுத்தார்கள். வீட்டிலே குடும்பத்தைக் கவனிக்கமுடியாதவர் எப்படி ஞானத்தை போதிப்பார்? முதலில் அத்தனை அரசமரங்களையும் தறிக்கவேண்டும் என்று யசோதரா கடும்கோபத்தில் சொல்லிக்கொண்டிருந்தார். அருகிலேயே பிக்குகள் கூட்டம் தங்களுக்குள் பிரிந்து சண்டை பிடித்துக்கொண்டிருந்தது. சில பிக்குகள் இது புத்தரின் தனிப்பட்ட விவகாரம், அவரே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றார்கள். ஒரு பிட்சுணியும் கோபமாக புத்தரைப்பார்த்து எதையோ திட்டிக்கொண்டிருந்தார். கையில் அட்சயபாத்திரம் இருந்தது. எங்கேயோ தமிழ் இலக்கியங்களில் பார்த்தமுகம். அட. மணிமேகலையேதான். புத்தர் ஒரு ஆணாதிக்கவாதி என்றார். அதற்கு இன்னொரு பிக்கு “உன் அப்பன் கோவலன் மட்டும் விண்ணனா?” என்றான். சில பிக்குகள் கல் எறிந்தார்கள். சிலர் யசோதராவை இகழ்ந்தார்கள். இராணுவம் கண்ணீர் புகை அடித்தது.
Like · Comment · January 26, 2015 ·

திடீரென்று புத்தர் வந்தார். யசோதராவும் புத்தரும் தமிழும் சிங்களமுமல்லாத ஒரு மொழியில் தமக்குள்ளே எதையோ பேசிக்கொண்டார்கள். அதுவரையும் ராகுலன் திரு திருவென விழித்துகொண்டிருந்தான். பார்க்கும்போதே வளர்ந்து பெரியவனானான். இதுகள் இரண்டும் இன்னமும் சண்டை பிடித்துக்கொண்டிருந்தன. வளர்ந்து பெரியவனாகி நின்ற ராகுலன் எதுவுமே பேசவில்லை. புத்தரையும் யசோதராவையும் பளார் பளார் என்று மாறி மாறி அறைந்தான். தடுக்கப்போன மணிமேகலை, பிக்குகள் எல்லாருக்கும் அறை விழுந்தது. ஐ லைக் யூ என்று அவனுக்குப்போய் ஒரு தம்ப்ஸ்அப் மெசேஜ் சொன்னேன். எனக்கும் ஒரு அறை. பின்னர் அவன் தன்பாட்டுக்கு பிளைட் பிடிக்கப்போய்விட்டான். யசோதரா எதுவுமே நடக்காதவண்ணம் இன்னொரு மூலையிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்தாள். உயிரின் உயிரே உயிரின் உயிரே. நதியின் மடியில் காத்துக்கிடைக்கின்றேன். புத்தர் மீண்டும்போய் அரசமரத்தடியில் அமர்ந்து சங்கம் சரணம் கச்சாமி என்றார். நதிபோல ஓடிக்கொண்டிரு என்று ரகுமான் சொன்னதை கொப்பி பண்ணினார். பிக்குகள் அவரை வணங்கத்தொடங்கினார்கள்.
Like · Comment · January 26, 2015 ·

எனக்கு இருந்த டென்சனில் ஒரு சனியனும் விளங்கேல்ல. இதெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த மணிமேகலைக்குகூட நடந்தது எதுவுமே புரியவில்லை. ஆனாலும் வந்த லைக்குகளை விடமுடியாதே என்று ஸ்டேடஸில் அடிக்கடி கொமெண்ட் பண்ணிக்கொண்டேயிருந்தார்.
Like · Comment · January 26, 2015 ·

என் தரித்திரம். சும்மா எண்ட வேலையைப் பார்த்துக்கொண்டு போகாமல் மணிமேகலைக்கு ஒரு ஹாய் சொன்னேன். “வட் டூ யூ தினக் அமுதவாயன்?” என்று தேவையில்லாமல் என்னை இழுத்தார். “உங்கட சகவாசமே வேண்டாமென்றுதான் நான் என்பாட்டுக்கு கேப்பையினாரை கொலை செய்யப்போய்க்கொண்டிருக்கிறேன், என்னை விட்டிடுங்கோ” என்றேன். பிட்சுணி விடேல்ல. “அதெப்படி. எல்லா கவிஞர்களும் கருத்து சொன்னவை. நீயும் சொல்லோணும்” எண்டு அடம்பிடிச்சா. நான் சொன்னன் “ஸ்டேடஸ் மெசேஜை டிலீட் பண்ணீட்டு உண்ட வேலையைப் போய்ப்பாரு”. மணிமேகலை ஏர்போர்டில் வைத்தே நான் இனி பிரண்ட் இல்லை என்றார்.
Like · Comment · January 26, 2015 ·

எனக்கு பிட்சுணி எல்லாம் பிரண்டா இருக்கத்தேவையில்ல. இருக்கவே இருக்கிறாள் காந்தாரி. போடி.
Like · Comment · January 26, 2015 ·

நானே ஒரு தாலி அறுப்பான். அதில எனக்கே தாலி அறுக்க வந்திடுவாங்கள். அதுவும் ஏர்போர்டில வந்து இறங்கின கையோட.
Like · Comment · January 26, 2015 ·

எல்லாப்பிரச்சனைக்கும் ஏண்டா பேஸ்புக்குக்கு வாறீங்கள்? விளங்கேல்ல. சிச்சா போனாலும் போற இடத்தை டாக் பண்ணி “ஐயாம் அட் டாய்லட், போயிங் சிச்சா, பீலிங் ரிலீவ்ட்” எண்டுறீங்கள். இதை பெடியள் யாராவது போட்டா வடிவேலு போட்டோ கொமெண்டு போடுறீங்கள். பெட்டைகள் யாராவது போட்டா பின்நவீநத்துவ நிலைத்தகவல் என்று பின்னுறீங்கள். ஏண்டா?
Like · Comment · January 26, 2015 ·

அண்டைக்கொருத்தன் அக்சிடன்ல அடிபட்டு காயத்தில துடிக்கிறான். பக்கத்தில நிக்கிற நாதாறி உடனேயே ஒரு பேஸ்புக் பேஜ் கிரியேட் பண்ணி #ஹெல்ப்ராஜா என்ற டக்கொட ஸ்டேடஸ் ஸ்டேடஸா போட்டுக்கொண்டிருக்கிறான். என்ன ஆச்சரியம், அடிபட்டவனுக்கு ரோட்டிலேயே காயம் மாறத்தொடங்கீட்டுது. ஷெயாரும் லைக்குகளும் அதிகரிக்க அதிகரிக்க வெளியேறின இரத்தம் எல்லாம் திருப்பி உள்ளே போயிட்டுது. ரெண்டு நாளில அவன் எந்தக்காயமும் இல்லாம எழும்பி வீட்ட போறான். ஆஸ்பத்திரிக்கே போகேல்ல. இப்பிடி உலகில எல்லாப்பிரச்சனைகளுக்கும் பேஸ்புக்கில இப்போ தீர்வு கிடைக்குது. ஆனா நான் ஒரு முட்டாள் மூதேவியாக இருக்கிறதால இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி கேப்பையினார் கேதீஸை கொல்லத்தெரியேல்ல. அநியாய டிக்கட் காசு.
Like · Comment · January 26, 2015 ·

கொலை செய்யவந்துவிட்டு நான் ஏன் புத்தரின் பிரச்சனையோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. எல்லாமே இந்த பேஸ்புக்கால் வந்தவினை. கொலை செய்யும் அவசரத்திலும் மெசேஜ் சொல்லும் எண்ணம் எப்படி வந்தது. சும்மா ஸீன் போடுகின்ற ஒரு பிக்குணி நான் தேடிவைத்திருக்கும் ஞானத்தை ஒரே ஸ்டேடசில் குலைத்துவிடுகிறாள் என்றால் நான் எவ்வளவு வீக்காக இருக்கிறேன். ஏன் என்னுடைய மனம் இவ்வளவு பலவீனமாக இருக்கிறது?
Like · Comment · January 26, 2015 ·

ஒரு கொலை என்றால் அதனை விறுவிறுப்பாக செய்தால்தானே சுவாரசியமாக இருக்கும்?
Like · Comment · January 26, 2015 ·

அமுதவாயன். லிசின். உன் மனம் ஒருநிலையில் இல்லை. தயவு செய்து சஞ்சலப்படாதே. நீ செய்யப்போவது கொலை. வெறும் கொலை. ஐஞ்சாம் வகுப்பு பாஸ் பண்ணாதவனே மிக இலகுவாக கொலை பண்ணிவிடுகிறான். உனக்கேன் முடியாது. கொலை என்பது ஒரு சீப்பான விஷயம் அமுதவாயம். பத்திரிகைகளில் நான்காம் பக்கத்தில் வருகின்ற சுவாரசிய செய்தி. “மட்டக்குளியில் ஒரு தொழிலதிபர் இனம்தெரியாத நபரால் குத்திக்கொலை செய்யப்பட்டார். போலீஸ் தீவிர விசாரணை” அவ்வளவுதான். பெயர்கூட வெளியே வராது. அந்தக்கொலைக்கு என்ன நிகழ்ந்தது என்று அதற்குப்பின்னர் எவரும் கவலைப்படமாட்டார்கள். போலிசுக்கோ அவர்கள் விசாரிப்பதற்கு அடுத்தநாளே இன்னொரு கொலை நடக்கும். நீ தப்பிவிடுவாய். சும்மா கண்டபடி குத்தி முறியாதே. கேப்பையினரை கொல்வதற்கு இவ்வளவு யோசிக்கத்தேவையில்லை. யாருமே கேப்பையினாருக்காக கண்ணீர் விடப்போவதில்லை. விமலினி அழுவாள். அந்திரட்டி, திவசம் செய்வாள். போகவேண்டும். கல்வெட்டுக்கு என் கவிதை ஒன்றையும் எழுதிக்கொடு. வேண்டுமானால் வாசித்து ஒரு கண்ணீர் விடு. வோட்டுப்போடவும் கேள்.
Like · Comment · January 26, 2015 ·

கேப்பையினார் கேதீஸ் அஞ்சலிக்கவிதை. 

கேப்பையினார் இல்லாத 
வாழ்க்கையினை எண்ணி – நானும் 
பார்க்கையிலே நாட்களெலாம்
தீக்கிரையாய் ஆயினவே. 

பாரியரை விட்டகன்றீர் - பார்போற்றும் 
சேயினையும் விட்டகன்றீர் – நாவறண்டு
காவிரியாய் ஓடுகண்ணீர்
தோழரையும் விட்டகன்றீர். 

கேப்பையரே... 
கேதீசே... 
பாசமுறு ஆதீசே

முகநூலில் நீர் உரைக்கும்
அகனூலு வரிகளை
இனியேழு ஜென்மத்தில்
எங்கனம் நாம் காண்போமோ?

கதிரவனை மறுதலித்து
பயிரனைத்தும் உம்வரவை
எதிர்பார்த்து வாடும் செயல்
நீரறிய மாட்டீரோ. 

உமதன்பு நண்பனிவன்.
உயிர் எடுப்பான் தோழன் இவன். 
இவன் கவிதை கண்டு நீரும்
இவ்வுலவு திரும்பீரோ.
Like · Comment · January 26, 2015 ·

“உயிர் எடுப்பான்” என்பது “உயிர் கொடுப்பான்” என்று வந்திருக்கவேண்டும். ஆனால் நான் பார்பர் கிடையாது. எவனும் அதை கண்டுக்கவும் போவதில்லை. அருமை என்று எனக்கே அந்திரட்டியில் வந்து முதுகில் தட்டிவிட்டு போய்விடுவான். இவங்களை நம்பி கேப்பையினாரை என்ன, மொத்தமான தமிழினத்தையே கொன்று புதைக்கலாம். ஆரம்பத்தில அழுவான். பிறகு சிவனே என்று புட்டு அவிச்சு அவன் பாட்டுக்கு சாப்பிட்டுக்கொண்டு கூட்டமைப்புக்கு வோட்டுப்போட்டிட்டு பிறகு அவனையே திட்டிக்கொண்டிருப்பான். பிளடி பக்கர்ஸ். 
Like · Comment · January 26, 2015 ·

இந்தக்கவிதையை பேஸ்புக்கில் போட்டால் கதை கந்தலாகிவிடும். என்னையே கேக்காமல் கொப்பி பண்ணி கேப்பையினாருக்கு பேஸ்புக்கில் அஞ்சலி போட்டு என்னைவிட அதிகம் லைக்கு வாங்குவான். கொப்பி பண்ணி போடுறவனை விட்டிடலாம். கவிதை அருமை என்று கொமெண்டு பண்ணுவானே ஒருத்தன். அவனை எலார்ம் வைத்துக் கொல்லவேண்டும்.
Like · Comment · January 26, 2015 ·

எனக்குள் இருக்கும் அறிவாளியை எப்போதுமே எனக்குள் இருக்கும் முட்டாள் வென்றுகொண்டேயிருக்கிறான். அதானால் வெளியே என்னை எல்லோரும் முட்டாளாகவே பார்க்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? லோகியல் மலினங்களை கண்டுகொள்ளாதே என்று அறிவு சொல்கிறது. சரி என்று கேட்டுக்கொண்டேயிருந்துவிட்டு பொறுத்த சமயத்தில் மனம் பலவீனப்ப்படும்போது அறிவை ஒதுக்கிவிட்டு முட்டாள் முன்னே வந்து மலினங்களோடு மல்லுக்கட்ட ஆரம்பிக்கிறது. என் அறிவு சரியான சாப்பாடு இல்லாமல் நோஞ்சானாக இருப்பதாலேயே முட்டாளால் அதனை புறம்தள்ள முடிகிறது. ஒரு அறிவாளியை முட்டாள் வென்றால் யார் அப்போது முட்டாளாகிறான்?
Like · Comment · January 26, 2015 ·

நான் ஒரு அறிவு கெட்ட முட்டாள்.
Like · Comment · January 26, 2015 ·

கொலை செய்வதும் பரீட்சைக்கு படிப்பதும் ஒன்றுதான். பாடத்தைத்தவிர மிகுதி எல்லா விடயங்களிலும் மனம் போகிறது.
Like · Comment · January 26, 2015 ·

மீண்டுமொருமுறை பாத்ரூம் போகவேண்டும். I need to recollect myself.
Like · Comment · January 26, 2015 ·

பாத்ரூமில் இருக்கும்போது காந்தாரி வந்தாள். கேப்பையினாரை கொல்லாதே என்று அட்வைஸ் பண்ணினாள். உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் தொடர்ந்தாள். தான் துரியோதனனை கண்டித்து வளர்த்திருந்தால் இவ்வளவு உயிர்கள் இறந்திருக்காது என்றாள்.
Like · Comment · January 26, 2015 ·

நான் துரியோதனன் ஒரு படிமம் என்றேன். குருஷேத்திரமே கிருஷ்ணன் நம் மூளைக்குள் இயக்கிய ஒருவகை இன்செப்ஷன் யுத்தம் என்றேன். எமக்குள் இருக்கும் துரியோதனனையும், துகில் உரிபவனையும் எமக்குள் இருக்கும் பாண்டவர்களைக் கொண்டு வதைக்கின்ற உளவியல் யுத்தம்தான் மகாபாரதம் என்று கற்பிதம் செய்தேன்.
Like · Comment · January 26, 2015 ·

காந்தாரி யோசித்தாள். கேப்பையினார் இந்த யுத்தத்தில் யார் என்று சடாரென்று கேட்டாள்.. கேப்பையினார் யார்? எனக்குத்தெரியாது. அவன் என் எதிரி. கொல்லப்படவேண்டியவன். கிருஷ்ணன் சொன்னான். கொல்கிறேன். நாளை உன்னை கொல்லச்சொன்னாலும் கொல்வேன். காந்தாரி கன்வின்ஸ் ஆகவில்லை. கிருஷ்ணனையே கொல்லச்சொன்னாலும் கொல்வாயா? என்றாள். நான் பதில் சொல்லவில்லை. “கேப்பையினாரை அவன் செய்த தவறுக்காக கொள்கிறாய் என்றால், அவனை நீ கொன்ற தவறுக்கு உனக்கு என்ன தண்டனை தரலாம்?” என்று என்னை மடக்கினாள். என் தண்டனையை கிருஷ்ணனே தீர்மானிப்பான் என்றேன்.
Like · Comment · January 26, 2015 ·

சொல்லிவிட்டேனே ஒழிய எனக்கும் அந்த பதிலில் திருப்தி இல்லை. ஹூ த ஹெல் இஸ் கிருஷ்ணன்? அவன் எப்படி என் தண்டனையை தீர்மானிக்கலாம்? மண்டை குடைகிறது. காந்தாரி என்னைக் குழப்புகிறாள். அவளை இவ்விடம் விட்டு அகற்றவேண்டும். காந்தாரி நீ இங்கே தவறுதலாக வந்துவிட்டாய். லேடிஸ் பாத்ரூம் அந்தப்பக்கம் என்றேன். கண்ணை மூடினேன். போய்விட்டாள்..
Like · Comment · January 26, 2015 ·

பாத்ரூமில் முப்பத்துமூன்று நிமிடங்கள் இருந்தேன். வியர்த்தது. எனக்கு கிடைக்கவேண்டிய தண்டனை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். நிச்சயமாக எனக்கு மரணதண்டனை கொடுக்கமுடியாது. நான் மரணதண்டனையை எதிர்ப்பவன். ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனால் ஏற்கனவே ஆயுள்தண்டனை அனுபவிப்பவனுக்கு மீண்டும் ஆயுள்தண்டனை கொடுத்து என்ன பிரயோசனம்?
Like · Comment · January 26, 2015 ·

என் தண்டனையை பிறகு தீர்மானிக்கலாம். முதலில் செய்யவேண்டியது கொலை. தெளிவாகிவிட்டேன்...
Like · Comment · January 26, 2015 ·

இன்னும் சிறிதுநேரத்தில் குடிவரவு கவுண்டருக்குப்போய் பாஸ்போர்ட் நீட்டவேண்டும். பயமாக இருக்கிறது. என் விவரங்களை அவர்கள் வைத்திருந்தால் தொலைந்தேன். சின்னப்பெடியன் அண்ணையை கொலை செய்த காலத்தில் சிஐடி என்னைத் தேடியது. ஆனால் அது ரெக்கோர்டில் இல்லாத தேடல். சின்னப்பிள்ளை அண்ணையின் பிரேதத்தை அவர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றால் அவர் ஒரு புலி உறுப்பினர் என்று சொல்லவேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனால் நான் தப்பினேன். ஆனாலும் உள்ளூற பயம் இருந்தது. ரசியாவுக்கு போகும்போதுகூட பாஸ்போர்டினுள் இருநூறு டொலர்கள் செருகியிருந்தேன். இப்போது மாற்றம் வந்துவிட்டதால் செருகத்தேவையில்லை என்று நினைக்கிறேன். துணிந்து தமிழிலேயே கவுண்டரில் பேசுவதாக எண்ணம்.
Like · Comment · January 26, 2015 ·

கவுண்டரில் ஏன் நாட்டுக்கு திரும்புகிறாய் என்று கேட்பார்களா? சொந்த நாட்டுக்காரனை ஏன் திரும்பிவருகிறாய் என்று விசாரிப்பதும் வெளிநாட்டில் இருப்பதாலேயே அவன் தன்னாட்டுக்காரன் இல்லை என்று ஏளனம் செய்வதும் இந்த நாட்டில் மாத்திரமே நடைபெறக்கூடியது.
Like · Comment · January 26, 2015 ·

அப்பாடி. தப்பிவிட்டேன். Feeling relieved.
Like · Comment · January 26, 2015 ·

குடிவரவு கவுண்டரில் தமிழில் சீன் போடுவதைத் தவிர்த்துவிட்டேன். ஏன் வந்தாய் என்று கேட்டார்கள். நண்பனைக் கொல்லப்போகிறேன் என்றேன். “தெமழத?” என்று கேட்டான். ஏன் வீணாக கொல்லுகிறாய்? கொடும்பாவியை எரித்துவிடேன் என்று அட்வைஸ் பண்ணினான். நக்கல் அடிக்கிறானா என்று தெரியவில்லை. சுய உரிமைக்காக போராடாமல் உங்களுக்குள் எப்பிடி அடிபட்டாலும் எங்களுக்கு ஓகே என்று சிரித்தான். கஸ்டம்ல பிடிபட்ட சிகரட் எல்லாத்தையும் இவனே பிடித்திருப்பான் என்று நினைக்கிறேன். பல்லு முழுதும் காவி ஏறியிருந்தது. அவனை நம்பலாமா விடலாமா என்று தெரியவில்லை. கொலை செய்யவந்த இடத்தில் எதுக்கு தகராறு, போனால் போகிறது சனியன் எனறு முன்னூறு டொலர்களை பாஸ்போர்டில் செருகினேன். மாத்தையா அடிக்கடி கொலை பண்ண வரோணும் என்று சிகரட் பல்லைக் காட்டினான்.
Like · Comment · January 26, 2015 ·

நல்லகாலம், கேப்பையினார் கேதீஸை கொன்றுவிட்டால் எமக்கு தமிழீழம் கிடைத்துவிடும் என்கின்ற உண்மையை அவனிடம் சொல்லியிருந்தால் நான் கம்பி எண்ணியிருப்பேன்.
Like · Comment · January 26, 2015 ·

டக்கீலாவும் அப்சலூட் வொட்காவும் ஒரு வைட் வைனும் டியூட்டி பிரீயில் வாங்கினேன். வொட்கா கேப்பையினாருக்கு. டக்கீலா அவனைக் கொன்றுவிட்டு பார்ட்டி வைப்பதற்கு. வைன் விமலினிக்கு பிடித்தால் அவளுக்கு, அவள் அழுதால் இருக்கவே இருக்கிறாள். காந்தாரி திருஷ்டி.
Like · Comment · January 26, 2015 ·

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
Like · Comment · January 26, 2015 ·

அம்மா தூரத்திலேயே என்னைக்கண்டுவிட்டா. கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினா. என்ர டொக்டர் குஞ்சு என்று நெட்டி முறிச்சா. நான் இளைத்துவிட்டேன் என்றா. அம்மாவுக்கு நான் கேப்பையினாரை கொலை செய்யும் விடயத்தை சொல்லலாமா? சந்தோசப்படுவாவா? என் அம்மா கொலைகளை ஆதரிப்பவர் என்பது தெரியும். ஆனால் மகனே கொலையாளி என்றால் ஏற்றுக்கொள்வாரா? வேண்டாம்.
Like · Comment · January 26, 2015 ·

ஏன் நாட்டுக்கு வந்தாய் என்று அம்மா கேட்டா. கவுண்டரில் இருந்த சிங்களவன்தான் கேட்டான் என்றால் பெத்த அம்மாவும் அதையே கெக்கிறா. வா வா என்று கூப்பிட்டுவிட்டு, வந்தால் போ போ என்று நாய்க்குட்டிக்கு டிரெயினிங் குடுக்கிறமாதிரி நடத்திறாங்கள்.
Like · Comment · January 26, 2015 ·

ஒரு அவசர பிரெய்ன் சேர்ஜரிக்கு அழைத்தார்கள். உலகத்திலேயே அதைச் செய்யக்கூடிய ஒரே ஆள் நான்தான். அதனால்தான் சிரமம் பார்க்காமல் வந்தேன் என்றேன். அம்மாவுக்கு பெருமை தாளவில்லை.
Like · Comment · January 26, 2015 ·

அம்மாவுக்கு மொஸ்கோ ஜவுளிக்கடையிலிருந்து ஒரு சேலை வாங்கிக்கொண்டுவந்தேன். ரசித்தார்.
Like · Comment · January 26, 2015 ·

வெள்ளைவானில் வெள்ளவத்தை வந்தோம். ஶ்ரீலங்கா நிறையவே மாறிவிட்டது. எங்கேயும் ஐ.ஸி செக் பண்ணவில்லை. இங்கே கொலை பண்ணியவன் மாத்திரமே பெரியபதவியில் இருக்கிறான். டிவியில் வருகிறான். மக்கள் போட்டிபோட்டு வாக்களிக்கிறார்கள். நானும் கேப்பையை கொன்றுவிட்டு வெட்டிய தலையோடு கொழும்பு முழுக்க அலைந்தால் என்னையும் கொண்டாடுவார்கள். வெளிநாடு முழுதும் அழைத்து பாராட்டுவிழா வைப்பார்கள்.
Like · Comment · January 26, 2015 ·

ஒரு கொலைக்கதையில் நாட்டுச்சிறப்பு அவசியமா?
Like · Comment · January 26, 2015 ·

அம்மா கையால் புட்டும் முட்டைப்பொரியலும் சாப்பிட்டேன். வீட்டு அலுமாரியில் பொன்னியின் செல்வனை தேடினேன். வந்தியத்தேவனும் குந்தவையும் ஞாபகம் வந்தார்கள். ஈழத்தளத்தில் பொன்னியின்செல்வனை பின்நவீனத்துவத்தில் எழுதவேண்டும் என்று முன்னர் ஒருமுறை ஞாபகம் வந்தது. தொடர் எழுதினால் லைக் விழுமா என்று தெரியவில்லை. கொலை செய்து ஜெயிலில் கிடந்தால் அதனை ஒருக்கா முயற்சி பண்ணவேண்டும்.
Like · Comment · January 26, 2015 ·

முன்னூற்று நான்காம் பக்கத்தில் பழுவேட்டையோரோடு என்னுடைய கொழும்பு ஐஸி கிடந்தது. பார்த்தீபன் கனவில் வவுனியா ஐஸியும், கரையெல்லாம் செண்பகப்பூ யாழ்ப்பாண ஐஸியும் வைத்திருந்தேன். பண்டாரவளை ஐ.ஸியைக் காட்டி சந்திக்கடையில் ஒரு ஸிம் கார்ட் வாங்கினேன்.
Like · Comment · January 26, 2015 ·

வவுனியாவில் என்னோடு கொஞ்சநாள் வெள்ளைவான் கடத்தல் செய்த குமாரைத் தொடர்புகொண்டேன். குமார் தற்சமயம் கறுவாத்தோட்டத்தில் உள்ள ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூலில் நிர்வாக இயக்குனராக இருக்கிறான். ஒரு ஓர்டர் இருக்கு. ஒரு மணித்தியாலம்தான். முடியுமா? என்றேன். இப்போது தொழில் செய்வதில்லை, விட்டாச்சு என்று ஏதோ புது கஸ்டமருக்கு சொல்வதுபோல சொன்னான். தான் ஒருமாதிரி செட்டில் ஆகிவிட்டதாகவும் தற்போது ஒரு ஆஸ்பத்திரி கட்டுவதாகவும் சொன்னான்.
Like · Comment · January 26, 2015 ·

எனக்கு குமாரைவிட்டால் கையுதவிக்கு ஆள் இல்லை. மீண்டும் அவனுக்கு கோல் பண்ணினேன். யார் இப்போது கறுவாத்தோட்டம் பொலிஸ் ஓஐஸி, ரிச்சார்ட் செனவிரத்னவா? என்று கேட்டேன். அவனுக்கு புரிந்துவிட்டது. பதில் சொல்லாமல் எப்போது டெலிவரி வேண்டும் என்று கேட்டான். இரண்டு நாளில் ஒரு வெள்ளைவான். குமாரே ஒட்டிவரவேண்டும், அவ்வளவுதான். கொலையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன். தான் இப்போது ஓஸியில் கடத்துவதில்லை. ஒரு கோடி ரூபா டிமாண்ட் பண்ணினான். என்னிடம் பணமாக ஒரு கோடி இல்லை. ஆனால் ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல் இருக்கு, வேண்டாமா? என்றேன். அதற்குப்பிறகு அவன் ஒன்றுமே பேசவில்லை.
Like · Comment · January 26, 2015 ·

ஒருவனை மிரட்டிக்காரியம் செய்வது ரிஸ்கான விடயம். ஒருவனை காலம்பூராக மிரட்டியே காரியத்தை சாதிக்கலாம் என்று நினைத்தால் நீ ஒரு அடி முட்டாள் ஆவாய். எந்தப்புள்ளியில் மிரட்டலை நிறுத்தவேண்டும் என்பது உனக்கு தெரிந்திருக்கவேண்டும். மிரட்டிக்கொண்டேயிருந்தால் அவன் ஒரு புள்ளியில் மிரளுவதை நிறுத்திவிடுவான். வடிவேலுவுக்கே தெரிஞ்சவிசயம் இது.
Like · Comment · January 26, 2015 ·

குமாரை இதற்குமேல் நான் மிரட்டக்கூடாது. அவன் என்னைக்கொல்லுவதற்கு அதிகநேரம் பிடிக்காது. என்னைக்கொல்வதால் அவனுக்கு இலாபமே அதிகம். நான் செத்தால் அம்மா மாத்திரமே அழுவா. மற்றும்படி ஊரில் நடக்கும் எத்தனையோ கொலைகளில் என்னதும் ஒன்று. அவ்வளவே. கேப்பையினாருக்கு கிடைக்கும் ரிப்பு கூட எனக்கு கிடைக்காது. என்னைக் கொல்வது ஒன்றும் பெரிய காரியமே இல்லை.
Like · Comment · January 26, 2015 ·

நான் செத்தால் கேப்பை தப்பிவிடுவான். கேப்பையை நான் கொன்றபின்னர் குமார் என்னைக்கொன்றாலும் பாதகமில்லை. அதனை கிருஷ்ணன் எனக்குக்கொடுத்த தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம். அப்போ குமாருக்கு எப்போது தண்டனை கிடைக்கும்? அவனை யார் கொல்வான்? கிருஷ்ணன் ஏன் எப்போதுமே ஒருவனுக்கு மரணதண்டனை கொடுத்துக்கொண்டே இருக்கிறான். எப்போது அவனுடைய டேர்ன்? படைத்தல் கடவுள் பிரம்மா இருக்குமட்டும் இந்த கிருஷ்ணன் வட்டத்துக்கேயே வரமாட்டான் பாவி.
Like · Comment · January 26, 2015 ·

இரண்டு நாட்கள் கெடு. கேப்பையினாரைக் கண்டுபிடித்து, கடத்தல் பிளான் போட்டு, கொன்று, டிஸ்போஸ் பண்ணவேண்டும். இனியும் ரஷியா போய் படிப்பை முடிக்கமுடியாது. இங்கேயே ஒரு கிளினிக்கை போட்டு சேர்ஜனாக உத்தியோகம் பார்க்கவேண்டியதுதான். அல்லது குமாருடைய ஆஸ்பத்திரியிலேயே வேலை செய்யலாம்.
Like · Comment · January 26, 2015 ·

உலகில் மிகவும் இலகுவான வேலை கொலை செய்வது. பேரூந்தில் செல்லும்போது பக்கத்து இருக்கையில் போன் பேசிக்கொண்டிருப்பவனின் கழுத்தை சீவ ஐந்து செக்கன்கள்கூட எடுக்காது. அவன் பேஸ்புக்கில் மொக்கை ஸ்டெடஸுக்கு குனிந்திருந்து லைக்கு பண்ணும்போது, பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவன் சாக்கு ஊசியால் அவன் நடுக்கழுத்தில் செருகினால் அடுத்தநிமிடமே ஆள் அவுட். கோயில் திருவிழாவில் ஒருவனை குத்திக்கொள்வதும் அப்படியே. ரோட்டிலே சாவகாசமாக நித்திரை கொண்டுகொண்டிருக்கும் ஒருவனின் தலையை வெட்டி பக்கத்தில் வைத்துவிட்டு போய்க்கொண்டேயிருக்கலாம். வீட்டில் அது இன்னமும் எளிது. அம்மாவையோ, அப்பாவையோ, கணவன் மனைவி குழந்தைகளையோ கொல்வதற்கு அதிக சிரமம் எடுக்கத்தேவையில்லை. டூ ஈஸி.
Like · Comment · January 26, 2015 ·

ஆனால் பிரச்சனை நம் மனம்தான். அதுதான் கொலைகளை செய்யவிடாமல் நம்மை எல்லாம் கோழையாக்கி வைத்திருக்கிறது. ஒருவன் தன்னினத்தை கொல்லுவது தவறு என்பதை அடிப்படை ஜீனிலேயே எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. அல்லது அப்படி எழுதப்பட்டிருக்கும் ஜீன்கள்தான் பூமியில் தப்பியிருக்கின்றன. மற்றவை எல்லாம் தம்மோடு அடிபட்டு மாறி மாறி கொலை பண்ணி அழிந்து போயிருக்கும்.
Like · Comment · January 26, 2015 ·

“கொல்லத்துடிக்குது மனது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத்தொடர் எழுதினால் எப்படி இருக்கும். கேப்பையினார் கொலையையே கேஸ் ஸ்டடியாக செய்யலாம்.
Like · Comment · January 26, 2015 ·

எது கடினம் என்றால், ஒரு கொலையைச் செய்துவிட்டு தப்புவதுதான். எந்தத் துப்பையும் விட்டுவிடக்கூடாது. யாரும் கண்டுவிடக்கூடாது. சந்தேகம் வரக்கூடாது. முக்கியம். ஒரு இனத்தை வேண்டுமென்றால் உலகமே பார்க்கும்வண்ணம் கொன்று புதைத்துவிட்டு அது நானில்லை என்று சொல்லலாம். நம்பிவிடுவார்கள். ஆனால் தனியோருவனை கொன்றுவிட்டு அது நானில்லை என்று சொன்னால் இலகுவில் நம்பமாட்டார்கள்.
Like · Comment · January 26, 2015 ·

என்ன நடக்கிறது இங்கே. ஏன் என் மனம் அலை பாய்கிறது. உள்ளூற நான் அஞ்சுகிறேனா? கொலை செய்தால் பாவம் என்று நினைக்கிறேனா? சமூகம் என்னை கீழ்த்தரமாக எண்ணிவிடும் என்று தயங்குகிறேனா. இல்லையே. பின்னர் என்ன? எது தடுக்கிறது?
Like · Comment · January 26, 2015 ·

அமுதவாயன் என்கின்ற நான் இனிமேல் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் கேப்பையினார் கேதீஸை கொல்வது பற்றியே நகர்வுகளை மேற்கோள்வேன் என்று உறுதி கூறுகிறேன்.
Like · Comment · January 26, 2015 ·

மீண்டும் குமாருக்கு கோல் பண்ணினேன். ஒரு ரிவோல்வர் கேட்டேன். அவன் தன்னிடம் தற்சமயம் எந்த ஆயுதங்களும் இல்லை என்றான். ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கனநாள் ஆகிவிட்டது. அரசியலிலும் குதிக்கப்போகிறேன். ஆயுதம் இல்லை, வெறும் தீக்குச்சி மட்டுமே வைத்திருக்கிறேன் என்கிறான். தீக்குச்சி எதற்கு? சிகரட்டுக்கா? என்று கேட்டேன். கொடும்பாவி எரிப்பதற்கு என்றான். துவக்கால் சுடுவது தற்போதைய டிரெண்டு இல்லை என்றான்.
Like · Comment · January 26, 2015 ·

குமார் என்னை முழுமையாக நம்பவில்லை என்று தெரிகிறது. நான் குமாரை நம்பலாமா? என்னை இன்டெலிஜென்டில் போட்டுக்கொடுப்பானோ? அவன் குடுமி என்னிடம் இருக்கிறது. வெள்ளைவான் கதையை போட்டுக்கொடுத்தால் பள்ளிக்கூடமே அவனைப்பார்த்து பல்லிளிக்கும். அதிகம் அழும்பு பண்ணினால் அவனைக்கொல்வதும் பெரிய சிக்கல் கிடையாது. போலீசுக்கு அவன் யார் என்று எப்பிடியும் தெரியும். வீணாக குப்பையை கிளறி நாறடிக்கமாட்டார்கள். இந்தப்பிளானில் ஓட்டைகள் எதுவும் இல்லை..
Like · Comment · January 26, 2015 ·

அம்மாவோடு மயூராபதி அம்மன் கோயிலுக்குப்போனேன். கேப்பையினாரை நல்லபடியாக கொல்லவேண்டும் என்று அர்ச்சனை செய்தேன். தூணருகே சாய்ந்திருக்கையில் காந்தாரி வந்தாள். “கொல்லாதே. விமலினியை மறந்துவிடு. நீ இன்னமும் பதினேழு வயது விமலினியையே நினைத்துக்கொண்டிருக்கிறாய். இருபது வருஷங்களில் என்னவெல்லாமே நடந்துவிட்டது. அப்போதைய டூயட் பாட்டுகள் இப்போது அபத்தமாக இருக்கும். இன்னொருவன் மனைவி. தப்பென்று தெரிந்தும் ஏன் அவளைப்பற்றி சிந்திக்கிறாய்” என்று காந்தாரி கேட்டாள். கேப்பையினார் கலியாணம் செய்யமுதல் நான் அவளை ஒருதலையாக காதலிக்கத்தொடங்கிவிட்டேன் காந்தாரி. நான் காதலித்தபோதும் அவளை கெடுக்கமுயன்றதில்லை. இப்போதும்தான். கேப்பையை கொல்வது விமலினிக்காக அல்ல. ஆனால் கேப்பையினார் மாதிரி, கொமன்சென்ஸ் என்ற வஸ்துவே இல்லாமல் சீன் போடுபவனுக்கு வாழ்க்கைப்படும் ஒவ்வொரு பெண்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கவேண்டும் காந்தாரி என்றேன்.
Like · Comment · January 27, 2015 ·

நான் சொன்னதைக்கேட்டு காந்தாரி சிரித்தாள். முட்டாளுக்கு தூக்கமருந்தைக் கொடுத்து நித்திரையாக்கிவிட்டு, கும்பகர்ணனை எழுப்பு என்றாள். அவனை எழுப்பினால் எனக்கு அட்வைஸ் பண்ணுவான் காந்தாரி.
Like · Comment · January 27, 2015 ·

கேப்பையினாரை வித்தியாசமாக கொன்றால் நிறைய லைக் கிடைக்கும். புதுமையாக எவனுமே இதுவரைக்கும் திங் பண்ணாதபடி கொல்லவேண்டும். நம் கடவுள்கள் கூட லைக்குக்காக அப்படியான வேலைகளை செய்திருக்கிறார்கள். ஒருத்தன் மரத்தைக் கிழிச்சு சேவலாகவும் மயிலாகவும் பிரிச்சி மேய்ஞ்சிருப்பான். மத்தவன் நெஞ்சைப்பிளந்து இரத்தம் குடிச்சிருப்பான். சிம்பிளா ஒரு அம்பைவிட்டு மாட்டரை முடிக்கவே மாட்டாங்கள். உலகின் எண்பத்தேழு வீதமான கொலைச்சம்பவங்கள் சுவாரசிய சம்பவங்களாகவே இருந்திருக்கின்றன. தியேட்டருக்குள் புகுந்து கொல்லுவான். தண்ணீருக்குள் முக்கிக்கொல்லுவான். விமானத்தையே கடலுக்குள் செலுத்தி தன்னையே கொன்ற பைலட் கூட இருக்கிறான். கேப்பையையும் அப்படி புதுமையாக கொல்லவேண்டும்.
Like · Comment · January 27, 2015 ·

யோசித்துப்பார்த்தால் சுவாரசிய கொலைச்சம்பவங்கள் மாத்திரமே வெளியுலகுக்கு தெரியவருகின்றன. சுவாரசியமில்லாத கொலைச்சம்பவங்களை நாங்கள் விரும்பிப்படிப்பதில்லை. சின்னப்பெடியன் அண்ணையை நான் கொன்றபொது எவருமே அலட்டிக்கொள்ளவில்லை. காரணம் அப்போது ஒரேநாளில் ஐம்பது கொலையேனும் அந்தப்பாணியில் நடந்துக்கொண்டிருந்தன. திரில் இல்லை. இதில் கற்றுக்கொண்ட பாடம் எது? கொலையை சுவாரசியம் இல்லாமல் பிளான் பண்ணவேண்டும். என்னடா சப்பென்று போய்விட்டதே என்று நினைத்துவிட்டு அவனவன் அடுத்த சோலிக்கு போயிடோணும். அதுவே ஒரு கொலைகாரனின் வெற்றி. அதை செய்தேனாயின் என்னை எவரும் கவனிக்கமாட்டார்கள்.
Like · Comment · January 27, 2015 ·

எக்ஸிட் பிளான் பக்கா.
Like · Comment · January 27, 2015 ·

ஷிட். காந்தாரியை எப்படி மறந்தேன். அவளிடம் இன்னமும் கவனமாக இருக்கவேண்டும். திருந்திவிட்டேன் என்று நடிக்கவேண்டும். நம்பமாட்டாள். நூறு கொலைகாரர்களைப் பெற்று வளர்த்தவள். அவளிடம் உச்சுவது கடினம். அடுத்தமுறை அவள் வரும்போது அவள் தாளத்துக்கு ஆமா போடவேண்டும். கொலை செய்யாதே அமுதவாயன். யாரை கொலை செய்யவேண்டாம் என்கிறாய் காந்தாரி? என்ன சொல்கிறாய். புரியவில்லையே. அவளையே குழப்பவேண்டும்.
Like · Comment · January 27, 2015 ·

கேப்பையினார் தன்னுடைய கொம்பனி முதற்கொண்டு கொன்டாக்ட் டீடைல்வரை பேஸ்புக்கில் பப்ளிக்காக போட்டிருந்தான். கொம்பனி மட்டக்குளியில். அவன் கொம்பனிக்கு அருகிலேயே லொட்ஜ் ஒன்றைக்கண்டுபிடித்து குமார் மூலம் புக் பண்ணினேன். அம்மாவோடு இருக்கமுடியாது. சேர்ஜரி செய்தபின் பேஷண்டை ஆஸ்பத்திரியிலிருந்தே கண்காணிக்கவேண்டும் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு மட்டக்குளி லொட்ஜுக்கு வந்துவிட்டேன். இங்கிருந்து கேப்பையினாரின் கொம்பனியும் அதிக தூரம் இல்லை.
Like · Comment · January 27, 2015 ·

இரவு லொட்ஜில் தூக்கம் இல்லை. கீழே சாப்பாட்டுக்கடையில் கத்தி பாடல்களைப்போட்டு கழுத்தறுத்தார்கள். இரவு சாப்பாட்டை ரூமுக்கே வரவழைத்தேன். சில்வர் தட்டில் இடியப்பமும் சொதியும். பின்னர் கட்டிலை சரிப்பண்ணி, புது பெட்ஷீட், தலையணை வாங்கி கிளீனாக விரித்துவிட்டு தரையில் படுத்தேன். யன்னலை பூட்டி லொக் போட்டேன். அவ்வளவு சிக்கல் இல்லாத லொட்ஜ். இரவு காந்தாரி வந்தாள்.
Like · Comment · January 27, 2015 ·

காந்தாரி பேச முதலே நான் ஆரம்பித்தேன்.
Like · Comment · January 27, 2015 ·

காந்தாரி, கொலை செய்வது பாவம். ஒருவனுடைய உயிரை எடுத்து என்ன பயன் வரப்போகிறது? கேப்பையினாரை நான் ஏன் கொல்லவேண்டும்? எனக்கு யாருமே வேண்டாம் காந்தாரி. நீ இருக்கிறாய். போதும். நான் ஒருவரையும் கொல்லப்போவதில்லை. இங்கே பாரேன். என் வயிற்றில் அமர்ந்திருக்கும் நுளம்பு அப்போது தொடக்கம் குத்தி இரத்தம் குடித்துக்கொண்டிருக்கிறது. எனக்கு அடிக்கக்கூட மனம் வரவில்லை. நாம் எல்லோருமே நுளம்பை அடித்தால் அது பாவம் எப்படி சாப்பிடும்? நான் திருந்திவிட்டேன் காந்தாரி. புத்தரின் போதனைகளை மனதினுள் பதித்துவிட்டேன். கொலை செய்யமாட்டேன்”. காந்தாரி இமைக்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது கண்கட்டு நீக்கலுக்குள்ளால் தெரிந்தது. “ஏன் கட்டிலை சரிப்பண்ணிவிட்டு தரையில் படுத்திருக்கிறாய் அமுதவாயன்?” என்றாள். “போய்விடு காந்தாரி. நான் கொல்லப்போவதில்லை என்று எவ்வளவுதடவை சொல்லுவது. போய்விடு”
Like · Comment · January 27, 2015 ·

திடுக்கிட்டு எழுந்தேன். நள்ளிரவு. கீழே இன்னமும் கத்தி கேட்டுக்கொண்டிருந்தது. கேப்பையினார் கத்தினாலும் கத்தி பாட்டு என்று நம்பிவிடுவார்கள். தூக்கம் வேண்டும் அமுதவாயன். உனக்கு நிறைய தூக்கம் வேண்டும். பிரிட்டோன் ஒன்றை போட்டுவிட்டு படுத்தேன். தூரத்தில் காந்தாரி. குருஷேத்திரத்தில் அழுது புரள்கிறாள். பாவம் அவளுக்கு எது அவளுடைய குழந்தைகளின் பிணம் என்று தெரியவில்லை. எல்லா பிணங்களையும் தன் பிள்ளைகள் என்று கட்டியணைத்து அழுகிறாள். துச்சாதனன், அபிமன்யு, துருபதன்,, கர்ணன், பீஷ்மரைக்கூட அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. எல்லோரையும் கிருஷ்ணா கிருஷ்ணா என்றே விளித்தாள். போயிட்டியா கிருஷ்ணா. உனக்கு என் முலைப்பாலைக்கொடுத்து வளர்த்தேனே. போயிட்டியா கிருஷ்ணா. உன்னை நான் எப்படியெல்லாம் ஆராட்டி வளர்த்தேனே. உனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தேனே. திடிரென்று கேப்பையினாரை மடியில் போட்டு அழுதாள். திடீரென்று அமுதவாயா என்று அரற்றினாள். காந்தாரி நான் சாகவில்லை காந்தாரி. இங்கேதான் இருக்கிறேன் காந்தாரி. வந்துவிடு. நான் எந்தக்கொலையும் செய்யமாட்டேன் காந்தாரி. என்னிடம் வந்துவிடு. இருவரும் பகடை ஆடியே வாழ்வைக் கழிக்கலாம். இந்த வன்மம், குரோதம், ஈகோ என்ற எந்தச் சனியனும் வேண்டாம் காந்தாரி. வா காந்தாரி….. தூங்கிவிட்டேன்.
Like · Comment · January 28, 2015 ·

லொட்ஜிலே இன்னமும் கத்தி பாட்டு கேட்டுக்கொண்டிருந்தது.
Like · Comment · January 28, 2015 ·

காலையில் எழுந்திருக்க தாமதமாகிவிட்டது. எழுந்து பல்லை விளக்கிக்கொண்டு அரக்கப்பரக்க கேப்பையினாரின் அலுவலகத்துக்கு முன்னே போயிறங்கும்பொது சரியாக நேரம் எட்டு மணி நாற்பத்தைந்து நிமிடம். முன்னால் நின்றிருந்த மினிவேன் பெட்டிக்கடையில் டீ குடித்தேன். நேரம் எட்டு மணி ஐம்பத்தைந்து நிமிடம். இதுதான் சரியான டைம்.
Like · Comment · January 28, 2015 ·

கேப்பையினாருடைய கம்பனி நம்பருக்கு கோல் பண்ணினேன். யாரும் எடுக்கவில்லை. மறுமுறை ட்ரை பண்ணினேன். இல்லை. மறுமுறை. இல்லை. ஏழாவது தடவை ரிசப்ஷனிஸ்ட் ஹலோ சொன்னாள். பரிச்சயமான குரலாக இருந்தது. நீண்டநேரம் பேசினால் ஆங்கிலம் எனக்கு தடக்கத்தொடங்கிவிடும். கேப்பையினார் எங்கே என்று மட்டும் கேட்டேன். இன்னமும் வரவில்லை, அரை மணிநேரம் கழித்து எடுங்கள் என்றாள். ஒகே என்றேன். ஏதாவது மெசேஜ் லீவ் பண்ணப்போறீங்களா என்றாள்.
Like · Comment · January 28, 2015 ·

ஐ ஆம் கோயிங் டு கில் மிஸ்டர் கேப்பையினார் கேதீஸ்
Like · Comment · January 28, 2015 ·

வாட்?
Like · Comment · January 28, 2015 ·

அட. இது எங்கேயோ நான் கேட்ட குரல். உச்சி மண்டை குளிர்ந்து எனக்கு. இது .. அவளா .. அவளா … அவசர அவசரமாகக் கேட்டேன்.
Like · Comment · January 28, 2015 ·

இஸ் .. இட்.. விமலினி?
Like · Comment · January 28, 2015 ·

நாளை முடியும்!


Contact form