ஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் - ஸ்டேடஸ் கலவரம்

Mar 5, 2015

பாகம் நான்கு : ஸ்டேடஸ் கலவரம்


நம்ம புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் பாட்டுக்கச்சேரிகளை நிறுத்திட்டு நாடு திரும்பி நாலு பேருக்கு நல்லது பண்ணனும். #மாற்றம்
Like · Comment · December 28, 2014 · Edited ·
பிரதாபன் சயா, குணரத்தினம் கிருபாலினி and 1327 others like this.
 • சிவயோகன் தருண் சூப்பர் அண்ணே!!
  December 28, 2014 Like · 300

 • தமிழ்போராளி தருமு அன்புள்ள கேப்பையினார் கேதீஸ், வெளிநாடுகளில் நாங்கள் பாட்டுக்கச்சேரிதான் செய்கிறோம் என்று எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள்?
  December 28, 2014 Like · 20


 • கேப்பையினார் Kethees நீங்கள் செய்வது எமக்கு தெரியாதா? விடை கொடு எங்கள் நாடே, மறுமுறை ஒருமுறை பார்ப்போமா? எண்டு என்று சீன் போடுவீர்கள். ஏன் போனவருஷம் நல்லூர்த் திருவிழாவுக்கு வந்து எடுப்பு காட்டேல்லையா? எதுக்கு? மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம் என்கிறீர்கள். இப்போதுதான் நாடு சமாதானமாகிவிட்டதே. அழைக்கிறோம். வாங்கடா. தெரியும். வரமாட்டீங்கள். ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி அங்கேயே இருப்பீங்கள். நல்லா இருங்கோ. ஆனா எங்களை விற்று மட்டும் பிழைப்பை ஒட்டாதீங்கோ.
  December 28, 2014 Like · 801


 • தமிழ்போராளி தருமு நாங்கள் உங்களை விற்று பிழைப்பவர்கள் எண்டு எந்த அடிப்படையில் சொல்லுறீங்கள்? நாங்கள் ஒவ்வொருநாளும் இஞ்ச நடுங்கும் குளிரில் கஷ்டப்பட்டு சரியான சாப்பாடு கூட இல்லாமல் கிட்டத்தட்ட பிச்சைக்காரர்கள் போன்று வாழ்கிறோம். அது தெரியுமா?
  December 28, 2014 Like · 29


 • குணரத்தினம் கிருபாலினி கஷ்டப்படுறீங்களா தருமு அண்ணே, குளுருதா? அய்யோ பாவம். பனி கொட்டேக்க நடுவுல நிண்டு படம் எடுத்துப்போட்டு பேஸ்புக்குல லைக்கு வாங்குறீங்களே. அப்போ உங்களுக்கு குளுராதா? சாப்பாடு கூட இல்லாம பிச்சை எடுத்தும் எப்புடி பாஸ் யாழ்ப்பாணம் வந்து கார் ஹையர் பண்ணி ஓடுறீங்கள்? கழுத்துல நாய்ச்சங்கிலி மாதிரி செயின் எல்லாம் எப்பிடி தொங்குது? அண்ணே நம்மளுக்கு எப்பவோ காது குத்திட்டாய்ங்கண்ணே. இந்த அழுகாச்சி எல்லாம் இனி எடுபடாது.
  December 28, 2014 Like · 112340


 • பிரதாபன் சயா நம்மாளு மூஞ்சியைப்பார்த்தா ஹாலிவுட் நடிகர்மாதிரியா இருக்கு? கிரெடிட் கார்ட் போட்டு எடுத்திருப்பாரு. ஹையர் என்ன, காரு வாங்கியே ஓடுவாரு.
  December 28, 2014 Like · 27


 • கனடா கல்லடி வேலுப்பிள்ளையர் தம்பி கொஞ்சம் வார்த்தையை அளந்து பேசும். திருடர்கள் எல்லா இடமும் இருப்பார்கள். எந்தக்கூட்டத்திலும் இருப்பார்கள். கொழும்பிலும் பிக்பாக்கட் திருடும் தமிழன் இருக்கிறான். யாழ்ப்பாணத்திலும் தாலிக்கொடி அறுப்பவன் இருக்கிறான். லண்டனிலும் கிரெடிட்கார்ட் போர்ஜரி பண்ணுபவன் இருக்கிறான். ஒரு சிலர் செய்யும் தவறுகள்தான் பெரிதாக பேசப்படுமே ஒழிய, ஓராயிரம்பேர் வாழும் நேர்மையான எளிமையான வாழ்க்கையை நாங்கள் கண்டுகொள்ள தவறிவிடுகிறோம். எங்களுக்குள் ஏன் இந்த முரண்பாடு? விதிவிலக்குகளை விதிகளாக மாற்றி நம் இனத்தின் ஒற்றுமையை படுகுழியில் தள்ளிவிடாதீர்கள்.
  December 28, 2014 Like ·  100


 • குணரத்தினம் கிருபாலினி @வேலுப்பிள்ளை ஐயா, நான் உங்களை சொல்லவில்லை, ஆனால் தமிழரின் தாகம், தமிழீழ தாயகம் என்று கொடி பிடிக்கிறீங்கள். அவ்வளவு தாகம் எடுத்தா, நீங்க நாட்டுக்கு திரும்பி வாருங்கோ. போராட்டங்களை முன்னெடுங்கோ. கலியாணம் கட்டின மனிசி அறைக்குள்ள இருக்கேக்க முற்றத்தில நிண்டு காத்தோட முதலிரவு செய்தா பிள்ளை புறக்காது ஐயா. அப்புறமா தத்துதான் எடுக்கோணும். முதலில உள்ள வாங்க பாஸ். பால் திரையப்போகுது.
  December 28, 2014 Like · 786345

 • சிவயோகன் தருண் @குணரத்தினம் கிருபாலினி சூப்பர். உங்க போன் நம்பர் தரமுடியுமா?
  December 28, 2014 Like · 301


 • குணரத்தினம் கிருபாலினி இன்பாக்ஸ் பண்ணியிருக்கன் அண்ணா. அஸ்கு. லொள்.!
  December 28, 2014 Like · 908232

 • தமிழ்போராளி தருமு நாங்கள் அங்கே வந்தால் ஆர்மி பிடிச்சிடுவாங்கள் தங்கச்சி. எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதாலதான் போராட்டத்தை இஞ்சயிருந்து முன்னெடுக்கிறோம்.
  December 28, 2014 Like ·  2


 • கேப்பையினார் Kethees நாங்கெல்லாம் என்ன நாலு பூனைப்படை பாதுகாப்போடவா திரியிறம் பாஸ்? எப்பிடியெல்லாம் காரணம் கண்டுபிடிக்கிறாங்கப்பா. சண்டை எண்டா சட்டை கிழியும்தான் ஐயா. அது கிடக்கட்டும், எப்பிடி உங்க இருந்து உங்கட போராட்டத்தை முன்னேடுக்கிறீங்கள் எண்டு ஒருக்கா சொல்லுறீங்களா? நீங்கள் செய்கிற அதிகப்பட்ச போராட்டம் ஜெசிக்காவுக்கு ஆதரவு கேட்பதும், கத்தி திரைப்படத்தை புறக்கணிப்பதுவும்தான். கொடுமை.
  December 28, 2014 Like · 400


 • கனடா கல்லடி வேலுப்பிள்ளையர் தம்பி. அப்பிடி சொல்லாதீயும். நிறைய ஆட்கள் சத்தம்போடாமல் எவ்வளவோ வேலைகள் செய்கிறினம். மருத்துவ உபகரணங்கள், கணணி ஆராய்ச்சிகள், ஏழை மாணவர்களின் படிப்பு செலவு, வீடு கட்டிக்கொடுத்தல் எண்டு நிறைய. செய்யிறவன் சொல்லமாட்டான் தம்பி. சொல்லுறவன் செய்யமாட்டான். நீங்கள் பேஸ்புக்கில் கொடி பிடிப்பவனை புலம்பெயர் சமூகத்தின் பிரதிநிதியாக எடுத்துக்கொண்டு திட்டி தீர்க்கிறீர்கள். ஏன் என்று தெரியவில்லை.
  December 28, 2014 Like ·  143


 • கல்முனை கமல் புலம்பெயர்ந்த ஆட்களுக்கு வெளிநாட்டில இருந்து தமிழரிண்ட பிரச்னையை கதைக்க எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் தங்கள் நாட்டுப்பிரச்சனைகளை பற்றியே பேசவேண்டும்.
  December 28, 2014 Like ·  76


 • அந்தனிதாஸ் மரியாம்பிள்ளை தம்பி @கல்முனை கமல், நீங்கள் பிறக்கேக்க நாங்கள் பங்கருக்குள் இருந்தனாங்கள். எண்ட தொடையில சியாமாசெட்டி போட்ட குண்டுச் சன்னகாயம் இன்னமும் இருக்கு. எண்ட அண்ணா மணலாற்று அடிபாட்டில வீர மரணம் அடைந்தவர். அந்த கவலையில அம்மா அடுத்த வருசமே போயிட்டா. வசாவிளானில தொடங்கி உரும்பிராய், மீசாலை, பரந்தன், விசுவமடு, ஒலுமடு, வவுனியா, மட்டக்குளி, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேஷியா எண்டு ஓடி பிறகு கப்பலில அவுஸ்திரேலியா போய், அங்கே காம்பில ஆறுமாதம் இருந்து ... மூன்று தங்கச்சிமாரை கரை சேர்த்த … எனக்கு ஈழத்தைப்பற்றி கதைக்க உரிமை கிடையாது எண்டு எந்த மயிருக்கு நீ சொல்லுற தம்பி? பிறந்தது, வளர்ந்தது, கதைக்கிற ஒவ்வொரு சொல்லு, குடும்பம், குட்டி, உடுப்பு, உறவு ஒவ்வொரு விசயத்திலயும் ஈழம் இருக்கு தம்பி. இப்ப ஊரில இல்லை எண்டதுக்காக உரிமையே இல்லை எண்டால் என்ன ஞாயம்? நீயும் வெள்ளவத்தையில இருக்கிறதாதான் பேஸ்புக் சொல்லுது. உனக்கு மட்டும் கல்முனை பற்றியும், வன்னி பற்றியும், யாழ்ப்பாணத்தை பற்றியும் கதைக்கிறதுக்கு ஆரு உரிமை கொடுத்தது? தேவையில்லாம எங்களுக்குள்ள ஏன் கொம்பு சீவுறீங்கள்?
  December 28, 2014 Like ·  856


 • சிதம்பரப்பிள்ளை ஜனா அண்ணே, உங்கட டிராவல் மேப் எங்களுக்கு எதுக்கு? பிரச்சனை இதுதான். நீங்கள் அங்கே எந்த ஆபத்துமில்லாமல் செய்யும் அரசியலால் இங்கே எங்கட வாழ்வு மேலும் மேலும் சிக்கலாகிறது. இருப்புக்கே ஆபத்து.
  December 28, 2014 Like ·  189 • தமிழ்போராளி தருமு எப்பிடியான ஆபத்து என்று சொல்லமுடியுமா ஜனா? ஜெனிவாவில் சர்வதேச குற்ற விசாரணை செய்யோணும் எண்டு அழுத்தம் கொடுத்தது தவறா? இல்லை தாயக மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்யிறது தப்பா? மாவீரரை நினைவு கூறுதல் தப்பா? எது தப்பு? இதெல்லாம் தப்பென்றால் இதே தப்பை ஊரில் வைத்தே செய்கிறார்களே. அவர்களை புலம்பெயர்ந்தவர் எண்டு திட்டுவீர்களா? தவறு செய்யிற ஆக்களை விமர்சியுங்கோ. பெயர் சொல்லி விமர்சியுங்கோ. ஆனால் தேவையில்லாம பொதுமைப்படுத்தாதீங்கோ.
  December 28, 2014 Like · 20

 • கேப்பையினார் Kethees சர்வதேச குற்ற விசாரணையில் விடுதலைப் புலிகளையும் உள்ளடக்கி இருக்கையில், அதே ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி பிடிக்கிறீங்களே அது தப்பு. தமிழீழம் என்ற விஷயம் இப்போதைய நிலையில் சாத்தியமாகாது என்று தெரிந்தும் தொடர்ந்து பிரிவினை பற்றியே புத்திசாலித்தனம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறீர்களே அது தப்பு. நாட்டு நிலைமையை புரிஞ்சு கொள்ளுங்கோ ஐயா.
  December 28, 2014 Like · 303


 • குணரத்தினம் கிருபாலினி @ஜனா, இதெல்லாம் விசாக்கு. ஊரில சண்டையில்லாட்டி அந்த நாட்டுக்காரன் திருப்பி அனுப்பிடுவான். இவங்களுக்கு இஞ்ச சண்டை நடக்கோணும். நாங்கள் சாகோணும். பிபிசில நியூஸ் பிளாஷ் போகணும். அப்பத்தான் டோல் காசில பர்கரை சாப்பிட்டுக்கொண்டு, சனிக்கிழமை தண்ணி அடிச்சுக்கொண்டு பொலிடிக்ஸ் கதைக்க வசதியா இருக்கும்.
  December 28, 2014 Like · 76232


 • கங்காரு கணேஷ் தங்கச்சி கிருபாலினி. நீங்க என்ன மொக்கை போட்டாலும் லைக்கு விழுது. பரவாயில்ல. வெளிநாட்டில இருக்கிற தொண்ணூற்று ஏழு வீதமான தமிழரிடம் உரிய விசா ஏற்கனவே இருக்கிறது. அவர்களுக்கு சொந்தநாட்டை விற்றுத்தான் விசா எடுக்கவேண்டும் என்ற நிலை இல்லை. இலங்கைக்கு அகதியாக வருவதற்கு காத்திருப்பவனுக்குத்தான் இந்த தேவையிருக்கிறது. அப்படிப்பட்டவன் அதிகம் இருப்பது இலங்கையில்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
  December 28, 2014 Like ·  908


 • குணரத்தினம் கிருபாலினி த்தோ பாருடா. இவரு என்ன பெரிய அமுதவாயனா? ஸ்டடிஸ்டிக்கோட வந்துட்டாரு.
  December 28, 2014 Like ·  345876


 • சிவயோகன் தருண் @அமுதவாயன் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்!!
  December 28, 2014 Like · 300


 • பிரதாபன் சயா காணி அபகரிப்பு எண்டு ஆர்ப்பாட்டம் செய்யுறம். ஆனா காணிதந்தா இருக்க ஆள் இல்ல. ஒருநாள் பாருங்கோ. அவனே காணியை விடுவித்து சிங்களவனை இருத்துவான். எப்பிடி தடுக்கமுடியும். அங்கிருந்து லோ கதைக்காம எல்லாரும் இஞ்ச வாங்கோ.
  December 28, 2014 Like ·  67


 • கங்காரு கணேஷ் வா வா என்று கூப்பிடுறீங்கள். வந்தபிறகு சிங்களவன் திரும்பவும் அடிச்சா எங்கே போறது. வித்து வெளிநாடு போறதுக்கு காணி கூட கிடையாது.
  December 28, 2014 Like · 20


 • கவிஞர் கர்ணன் கதிரவன் பிரச்சனை இதுதான். வெளிநாட்டில இருக்கிறவன் அங்கேயே செட்டில் ஆயிட்டான். யாழ்ப்பாணத்தில இருக்கிறவன் யாழ்ப்பாணத்தில. வவுனியாக்காரன் வவுனியாவில. கொழும்புக்காரன் கொழும்பில. அவனவன் அங்கங்கே செட்டில் ஆயிட்டான். ஆனாலும் எல்லாருக்குமே ஏதோ ஒரு வகையில பனை மரக்காடு துரத்துது. கோபம், தாபம், இயலாமை, குற்ற உணர்ச்சி துரத்துது. அது உணர்வா வெளிப்படுது. உண்மைல நாங்கள் என்ன செய்யோணும்? பொறுப்பில்லாம அரசியல் செய்யிறவனை புறக்கணித்துவிட்டு உருப்படியாக வேலை செய்யிறவங்கள் எங்கேயிருந்தாலும் அவர்களை ஒருங்கிணைத்துக்கொண்டு முன்னேறிப்போகோணும். ஆனா அதை நாங்கள் செய்யமாட்டோம்.

  மற்றும்படி கனடாக்காரன் தமிழீழம் கிடைத்தாலும் திரும்பமாட்டான். அவனுக்கு திரும்பிப்போகாமல் இருப்பதற்கு எப்போதும் ஒரு காரணம் இருக்கும். அடுத்த தலைமுறைக்கு ஈழம் எண்டது அம்மா அப்பாவிண்ட நாடே ஒழிய அதுக்கு மேலே ஒண்டும் கிடையாது. கொழும்புக்காரனும் வேலை, வசதி என்று அங்கேயே செட்டில் ஆயிட்டான். யாழ்ப்பாணத்தில இருக்கிற நிறைய சனம் கூட தங்களுடைய பூர்வீக இடத்திலேயே இருக்கா எண்டா அது இல்ல. இதில ஆரு ஆரை விட திறம் எண்டது இருக்கிற இடத்தில தங்கியில்லை.
  December 28, 2014 Like · 1427


 • பிரதாபன் சயா கொழும்பில இருந்தாலும் நாங்கள் இலங்கைக்குள்ளதானே இருக்கிறோம் கவிஞரே? எங்களை எப்பிடி நாட்டை விட்டு ஓடியவனோடு ஒப்பிடுகிறீர்கள்.
  December 28, 2014 Like · 18


 • கவிஞர் கர்ணன் கதிரவன் செங்கை ஆழியான் ஒருமுறை சொல்லியிருப்பார். தன்ர வளவை விட்டு வேறு எங்கே போனவனும் புலம்பெயர்ந்தவன்தான். அது சாவகச்சேரியா, வன்னியா, கொழும்பா, லண்டனா எண்டது ஒரு விசயமே இல்ல. தீவுக்காரன் யாழ்ப்பாண டவுண் வந்தா அவனையும் பெரிதாக எந்த படலைகளும் வரவேற்காது. யாழ்ப்பாணத்தான் கொழும்பு போனாலும் அதே நிலை. மட்டக்களப்பான் யாழ்ப்பாணம் வந்தாலோ, வன்னிக்காரன் திருகோணமலை போனாலோ இதே நிலைதான். எல்லாமே புலம்பெயர்வுதான். புது மனிதர்கள், புது பழக்க வழக்கங்கள், ஏற்றத்தாழ்வுகள் என்று கொல்லன் சம்மட்டியால் பழுத்த இரும்பை அடித்து அடித்து செதுக்குவது போல செதுக்கவேண்டும்.

  தமிழும் கலாச்சாரமும் மனசளவில இருக்கிற விஷயம். உனக்கு கடைப்பிடிக்கோணும் எண்டால் அந்தார்டிகாவில இருந்தும் கடைப்பிடிப்பாய். இழிவு படுத்தோணும் எண்டால் நல்லூர்த் திருவிழாவிலையும் அது நடக்கும். கம்பன் விழா யாழ்ப்பாணத்திலயும் நடக்குது. கொழும்பிலையும் நடக்குது. அவுஸ்திரேலியா, சிங்கப்பூரிலையும் நடக்குது. எல்லா ஊரிலையும் ஐநூறு பேர்தான் போறாங்கள். மிச்சப்பேருக்கு அது நடக்குறதே தெரியாது. பலர் ராமன் ஆரியன் எண்டு திட்டுவான். சிலர் ஜெயராஜ் துரோகி எண்டு திட்டுவான். போறதுக்கு ஒரு காரணம் போலவே போகாமல் விடுவதற்கும் ஒரு காரணம், அவ்வளவே. எல்லாரையும் திட்டலாம். பிரபாகரனில இருந்து காந்தி, சேகுவரா, விவேகானந்தர், நேற்றுப்பிறந்த குழந்தை என்று யாரை வேண்டுமென்றாலும் திட்டலாம். கொடும்பாவி எரிக்கலாம். ஒருத்தனை சிலுவைல அறைஞ்சம் எண்டால், அப்பாடி நாங்கள் தப்பிடலாம். இதுதான் இன்றைய உலக நியதி. மற்றும்படி உள்ளூர், புலம்பெயர் எண்ட பிரிவினைக்கதைகள் எண்டது ஒருவகையான நவீன பிரதேசவாதம். நமக்கு எப்போதுமே ஒரு இன்பீரியர் டார்கட் இருக்கவேண்டும். எவனயாவது தாக்கவேண்டும். இப்ப கொஞ்சகாலமா அது உள்நாட்டு புலம்பெயர் தமிழர் பிரச்சனையா இருக்கு. அவ்வளவே. இதுவும் புதுசில்ல. அந்தக்காலத்தில புதுவை புலம்பெயர்ந்தவரை தாக்கினார். பிறகு அடங்கினார். கம்பவாரிதி தாக்கினார். அடங்கினார். புலம்பெயந்தவன் உள்ளூர்க்காரனிடம் தன்னுடைய பணத்தைக்காட்டி சந்தோசம் கொண்டான். நல்லூர்த்திருவிழாவில வடச்சங்கிலியோட கமரா பிடிக்கிறதுகூட ஒரு வகையான இன்பீரியர் டார்கட்தான். இது எப்பவுமே நடக்கும். ஏதோ ஒரு வகையில் இந்த சமுதாயத்தில் தொத்திக்கொண்டே இருக்கும்.
  நிறுவனங்களில் 80-20 ரூல் ஒண்டு இருக்கு. ஒரு அலுவலத்தில எண்பது வீதமானவன் சும்மா வேலை செய்யாம மொக்கை போட்டுக்கொண்டே இருப்பான். மீதி இருபது வீதமும்தான் முழு அலுவலகத்தையும் ரன் பண்ணும். அதே மாதிரி, உள்நாடோ, வெளிநாடோ, இருபது வீதமானவர்தான் நம்மை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த பாடுபடுவான். ஆனா அவன் அலட்டிக்கொள்ள மாட்டான். மீதி எண்பது வீதமும் அடிபட்டுக்கொண்டே இருக்கும். விதி. தவிர்க்க ஏலாது.
  December 28, 2014 Like ·  2769


 • கேப்பையினார் Kethees கர்ணன், நீங்கள் பெரும் கொடையாளி போல சீன் போடுறீங்கள். ஆனால் யதார்த்த நிலைமையை பாருங்கள். மக்களே இல்லாமல் என்னத்துக்கு போராட்டம்? வெளிநாடுகளில் இருந்துகொண்டு, திரும்பிய வராமல் விடப்போகும் நாட்டுக்காக ஏன் போராடுவான்? தங்களுடைய குற்ற உணர்சிகளின் வடிகால்களுக்காக ஈழத்து மக்கள்தான் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு கிடைத்தார்களா?
  December 28, 2014 Like · 341


 • கவிஞர் கர்ணன் கதிரவன் தம்பிமார், நான் சொல்லவேணும் எண்டு நினைச்சத சொல்லிட்டன், அங்கால உங்கள பொறுத்தது.
  December 28, 2014 Like ·  890

 • கவிஞர் அமுதவாயன் இன்றைய இளம் தலைமுறையில் அறுபது வீதத்துக்கும் அதிகமானதுக்கு நாம் வாழ்ந்த வாழ்க்கையே தெரியாது. ஐம்பத்து மூன்று வீதத்துக்கு இனப்பற்று இல்லை. எழுபது வீதம் சினிமாவுக்குள் மூழ்கித்தவிக்குது. எண்பது வீதம் கிரிக்கட்டில்.
  December 28, 2014 Like ·  1


 • குணரத்தினம் கிருபாலினி @சிவயோகன் தருண் …. ஏண்டா வேலியால போன ஓணானை டெனிமுக்குள்ள இழுத்து விட்டாய்?
  December 28, 2014 Like ·  93451


 • கேப்பையினார் Kethees அமுதவாயன், உங்க மட்டும் என்ன வாழுதாம், நீங்கள் சினிமா, கிரிக்கட் ஒண்டும் பார்க்கமாட்டீங்களோ.
  December 28, 2014 Like · 23


 • கவிஞர் அமுதவாயன் என்ன இருந்தாலும் நாங்கள் மாற்றம் மாற்றம் என்று சிங்களவனிண்ட காலில விழ வில்லை. ரசியாவில கடும் குளிருக்க இருந்து கஷ்டப்பட்டாலும் கஷ்டப்படுவோமே ஒழிய, சிங்களவனுக்கு கீழே ஒரு கணம் கூட வாழமாட்டோம்.
  December 28, 2014 Like ·  1


 • கேப்பையினார் Kethees அமுதவாயன் .. நீ பதினைஞ்சு வருஷத்துக்கு முதல் ஆருக்கு கீழே வாழ்ந்தனி? மட்டக்குளி சென்றி பொயிண்டில ஆர்மிக்கு ஐஸி காட்டேக்கே லோங்சு நனைஞ்சத நாங்களும் பார்த்தம்தானே. பெரிய கம்யூனிஸ்டு மாதிரி ரசியாவில சரத்தோட நிண்டு படம் போட்டா காணாது தம்பிரி. கொள்கைப்படி வாழ்ந்து காட்டோணும்.
  December 28, 2014 Like · 67


 • கவிஞர் அமுதவாயன் நான் கொள்கைப்படி வாழேல்ல எண்டு எவண்டா சொன்னவன். நாமார்க்கும் குடியல்லோம். யமனை அஞ்சோம். அப்படிப்பட்ட நமக்கு சில கேப்மாறிகள் எல்லாம் ஜூஜூபி.
  December 28, 2014 Like ·  1


 • கேப்பையினார் Kethees கேப்மாறி என்று யாரைச்சொன்னனி? ஊரைவிட்டு ஓடிப்போய் ரசியாவில இருந்துகொண்டு தேசியம் கதைக்கிறவனை எல்லாம் பேஸ்புக்கிலயிருந்து புளொக் பண்ணோணும்.
  December 28, 2014 Like · 956


 • கவிஞர் அமுதவாயன் ஏன் என்னோட சேர்ந்துதானே நீயும் ரசியாவுக்கு அப்ளை பண்ணினாய்? எனக்கு கிடைச்சுது. உண்ட கொப்பர் செய்த பாவம். உனக்கு அட்மிசன் கிடைக்கேல்ல. உனக்கு அட்மிசன் கிடைக்கேல்லை எண்டோன ஓவர் நைட்டில உள்ளூர் பற்று எகிறிட்டோ? டேய் உன்னை மாதிரி ஹைப்போகிரிட் நிறையப்பேரு ரசியாவில அலையுறாங்கள். பார்த்துட்டன்.
  December 28, 2014 Like ·  2


 • கேப்பையினார் Kethees நான் நேர்மையாக அப்ளை பண்ணினான். மற்றவனைப்போல குதிரை ஓடி பாஸ் பண்ணேல்ல.
  December 28, 2014 Like · 3


 • கவிஞர் அமுதவாயன் டேய் .. குதிரை ஓடினனோ, கழுதை ஓடினனோ, நான் இண்டைக்கு டொக்டரடா. நீ இப்ப என்ன செய்யுறாய்? எங்க இருக்கிறாய் சொல்லு?
  December 28, 2014 Like · 19 • கேப்பையினார் Kethees நான் அதே மட்டக்குளிலதான் தங்கியிருக்கிறன். ஒரு மொபைல் கொம்பனி நடத்திறன். நான்தான் புரைப்ரைட்டார் அண்ட் ஸீஈஓ.
  December 28, 2014 Like · 6


 • கவிஞர் அமுதவாயன் நம்பிட்டோம். டேய் நீ நாமல் ராஜபக்சவிண்ட ஏஜண்டை சந்திக்கத்தானே போன கிழமை நீர் கொழும்பு போனாய். தெரியுமடா. எல்லாம் ஓவரா சீனை போட்டிட்டு ஒருநாள் அவுஸ்திரேலியா கடக்கரையில போய் இறங்கி நிப்பாய்.
  December 28, 2014 Like · 2


 • குணரத்தினம் கிருபாலினி என்னாம்மா இது, நெசமாவே சண்டை புடிக்கிறாங்களா? இல்ல லைக்குக்காக சண்டை புடிக்கிறாங்களா?
  December 28, 2014 Like ·  49876


 • கேப்பையினார் Kethees அமுதவாயன். சும்மா இல்லாததும் பொல்லாததும் சொல்லக்கூடாது. இப்பதானே நாட்டில சமாதானம் வந்திட்டுது. நானேன் நாட்டைவிட்டு ஓடோணும்? நான் ஒண்டும் உன்னைப்போல வழியற்று இல்ல. உனக்கு தில் இருந்தா நாட்டுக்கு திரும்பி நாலு காசு சம்பாதிடா பார்க்கலாம். அப்புறம் என்ன ஸ்டேடசும் போடு. லைக்கை போட்டிட்டு போய்க்கிட்டே இருப்பன்.
  December 28, 2014 Like · 890


 • கவிஞர் அமுதவாயன் டேய். நானொரு டொக்டரடா. திரும்பி வந்தா ஏர்போர்டிலேயே காலில விழுந்து வேலை தருவாங்கள்.. அடுத்த வருஷமே எம்.டி செய்வன். அதுக்கப்புறம் சேர்ஜரி.
  December 28, 2014 Like ·  1


 • கேப்பையினார் Kethees குதிரை சேர்ஜரியும் செய்யுமாடா? lol.
  December 28, 2014 Like ·  897

 • கவிஞர்அமுதவாயன் என்னடா நக்கலா? நீ சொன்னதுக்காக நாட்டுக்கு திரும்புறண்டா. வந்தோன நான் செய்யப்போற முதல் சேர்ஜரியே உனக்குத்தாண்டா கேப்மாறி.
  December 28, 2014 Like ·  67


 • கேப்பையினார் Kethees ஐயோ .. பயமாருக்கு .. காப்பாத்துங்கோ ... அமுதவாயன் நம்மள மிரட்டுறாரு. போடாங்.
  December 28, 2014 Like · 342


 • கவிஞர் அமுதவாயன் டேய், நக்கலா அடிக்கிறாய். குறிச்சு வச்சிரு. உனக்கு "ரிப்பு" ஸ்டேடஸ் பேஸ்புக்கில போடுறது நானாதாண்டா இருப்பன். அதுவும் வெகு விரைவில். காத்திரு.
  December 28, 2014 Like · 2


 • கேப்பையினார் Kethees I thought you are coming after me ... Lol
  December 28, 2014 Like · 2


 • கவிஞர் அமுதவாயன் இன்னும் உண்ட நக்கல் சேட்டையை விடேல்ல என்ன. தேடி வந்து வெட்டுவண்டா... Stay Tuned.
  December 31, 2014 Like ·  1


----------------------------------------------------------------------------------------------------------------------------------
 • அமுதவாயன், யூ தேர்? இப்பதான் வாசிச்சு முடிச்சான். என்ன இது பள்ளிக்கூட சண்டைமாதிரி. உண்மையிலேயே கேப்பையினார் கேதீஸை தேடிப்போய் வெட்டிட்டியா?
 • எத்தினை தடவை சொல்லுறது காந்தாரி? வெறும் வாய்ப்பேச்சில் வீரரடி எண்டு அவன் ஸ்டேடஸ் போட, நான் பார்க்கொணுமா காந்தாரி. இவன் எல்லாம் உயிரோட இருந்து என்னத்த சாதிக்கப்போறான்?
 • அன்பிலீபவில். ஒரு சாதாரண பேஸ்புக் ஸ்டேடஸ் கொலையில வந்து முடியுமா? அமுதவாயன் நீ உடனடியா பக்கத்தில இருக்கிற போலீஸ் ஸ்டேஷனில போய் சரணடையவேணும். எதுக்கும் யோசிக்காத. யூ ஆர் இன் ட்ரபிள். 
 • இவ்வளவு கேட்டனி. அவனை எப்பிடி தேடிக்கண்டுபிடிச்சு கொலை செய்தனான் எண்டு கேக்கமாட்டியா?
 • மாட்டன். ஐ டோன்ட் வோண்டு ஹியர் எனிதிங் புரம் யூ. யூ ஆர் எ சைக்கோ. பொலிசுக்கு போறியா இல்லையா? 
 • சரி நான் சொல்லேல்ல. அவனை கொல்லுறதுக்கு பண்ணின ஒவ்வொரு ஸ்டெப்பையும் பேஸ்புக்கில ஒன்லி மி ஸ்டெடஸா போட்டிருக்கிறன். இப்போ உனக்கு ஷேர் பண்ணுறன். பாரு காந்தாரி. போய்ப்பாரு.


------------------------------------------------------------------------------------------

இறுதிப்பாகம் : அடுத்த வியாழன்


Photo Credits (Creative Commons Licence)https://flic.kr/p/9oziCm
https://flic.kr/p/m6nyiP
https://flic.kr/p/dQguqc
https://flic.kr/p/dp6J2f
https://flic.kr/p/9oecZ7
https://flic.kr/p/fG6Wab
http://www.flickr.com/photos/clodreno/103740643
http://www.bollywoodhungama.com/more/photos/view/stills/parties-and-events/id/1469800
http://www.bollywoodhungama.com/more/photos/view/stills/parties-and-events/id/2080188

Contact form