அன்புள்ள சுகாசினிக்கு!

Apr 16, 2015


அன்புள்ள சுகாசினிக்கு!

எங்கள் ஊரிலே தம்பிமுத்து அண்ணர் என்று ஒருவர் இருந்தார். அவர் எப்போதுமே வெற்றிலையும் கையுமாய்த் திரியும் ஆள். நாற்பது வருடங்களாக யாழ்ப்பாணத்திலேயே வண்டி ஒட்டிய கேஸ். நாற்பத்தொரு வயதில் அவருக்கு கனடா போகும் ஆசை வந்துவிட்டது. எப்படியோ சுத்துமாத்து பண்ணி, இயக்கத்திடம் பாஸ் எடுத்து கொழும்பு வந்துவிட்டார். 

கொழும்பு பற்றி உங்களுக்கு தெரியுமோ தெரியாது. "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்து சில காட்சிகளும், சென்யோரே பாட்டும் அங்குதான் எடுக்கப்பட்டது. ஷூட்டிங்குக்கு இயக்குனர் வரவில்லை. அவர் இந்தியாவில் மட்டுமே ஷூட்டிங் பண்ணுவேன் என்று சபதம் எடுத்திருப்பவர். அதனால் படக்குழுவை அனுப்பி ஷூட் பண்ணியிருப்பார். நீங்களும் படம் பார்த்திருப்பீர்கள்! கருமுகில் தாங்கிய மலை சூழ்மாங்குளம், சண்முகம் சிவலிங்கம் கவிதை, கொழும்பு தமிழ்சங்கத்தில் இஞ்சினியர் எழுத்தாளர் பேசினது எல்லாம் உங்களுக்கு மறந்திருக்காது என்று நினைக்கிறேன். 

இந்தக் கதையும் கொழும்புலதான் நடந்தது.


கொழும்புல பம்பலபிட்டிச்சந்தி எண்டு ஒரு பேமசான சந்தி இருக்கு. அதிலிருந்து வெள்ளவத்தை பக்கம் (அதான் அந்த கொழும்பு தமிழ் சங்கம் இருக்கிற இடம்) கொஞ்சம் நடந்தா வஜ்ரா பிள்ளையார் கோயில் வரும். அது வலு விசேசமான கோயில். அங்கே தென்னம்பாலையில் எல்லாம் பிள்ளையார் எழுந்தருளுவார். 

அந்தக் கோயில் வாசலில் ஒரு சாலையோர ஓவியன் இருக்கிறான். பெயர் மணியன், ஓவியன் மணியன். ஓவியக்கல்லூரியில் உபகாரச்சம்பளத்தில் படித்தவன், பள்ளி மூடப்பட்டதால் டிகிரி இல்லாமல் தெருவுக்கு வந்தவன்.   இப்போது கோவில் வாயில் வளைவின் சீமெந்து நிலத்தில்  அவ்வப்போது படம் வரைகிறான். கலைஞன், செய்வதை நேர்த்தியா செய்வான். அவன் பக்கத்திலேயே ஒரு டப்பாவும் கொஞ்சம் சில்லறையும் இருக்கும். மணியன் ஒண்டும் கதைக்க மாட்டான். அமைதியானவன். எப்பவாவது ஒன்றிரண்டு சனம் அவன் வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்தோ அல்லது பாவமெண்டொ சில்லறைகளை போட்டிட்டு போவினம். அவன் தாங்க்ஸ் கூட சொல்லமாட்டான். அவனுக்கு பக்கத்தில ஒன்றிரண்டு சில்லறைப் பிச்சைக்காரரும் இருப்பினம். அவையள் ஒண்டும் செய்யமாட்டினம். காசு வந்தா ஓகே. இல்லாட்டியும் ஓகே. ஆனா அவங்களுக்கு மணியனை விட கூட சில்லறை கிடைக்கும். மணியன் அலட்டிக்கொள்ளமாட்டான். அவன் ஒரு கடின உழைப்பாளி. 

ஐ மீன் "ஹார்ட் வர்க்கர்"

ஓவியன் மணியனுக்கு இருட்டு எண்டால் மிகவும் பிடிக்கும். இரவில்கூட கறுப்புக்கண்ணாடி போடுமளவுக்கு இருட்டு பிடிக்கும். சமயத்தில் வெறும் கருப்பு பெயிண்டை மட்டும் அடித்துவிட்டு ஓவியம் என்பான். எல்லாமே கறுப்புக்கு பின்னாலே இருக்குமாம். கண்டு பிடிக்கோணுமாம். இப்படி புதுமைகள் எல்லாம் செய்வான். அதையெல்லாம் எவனுமே கணக்கேடுக்கமாட்டான்.

மணியனுக்கு ஒரு மனைவி. பெயர் பூவாயி. அதே கோயில் வாசலில் மல்லிகைப்பூ விற்பவள். அவளுக்கு கொஞ்சம் வாய்த்துடுக்கு. பம்பலப்பிட்டி சந்தியடியில் பெண்களுக்கு ஒன்றென்றால் பூவாயி பொங்கி எழுவாள். அவள் எழுந்தால் வாயில் செந்தமிழ்தான். கவிதாயினிகள் தோற்றார்கள். சில்வியா பிளாத் பிச்சை எடுக்கோணும்.

அன்றைக்கும் வழமைபோல மணியன் சத்தமே போடாமல் ஒரு ஓவியத்தை தீட்டிக்கொண்டிருந்தான்.  ரோட்டில சோக்குகட்டியால நிதானமா தன்பாட்டுக்கு. பிள்ளையாரும் புத்தரும் கைகுலுக்கிறமாதிரி ஒரு போஸ். இரண்டு இனத்தையும் கவர் பண்ணுறமாதிரி, சமகால அரசியல் சூழ்நிலையை மேலோட்டமாக சொல்லி, எல்லாகடவுள்களும் இணைந்தா நாடு உருப்பட்டிடும் என்கின்ற மொக்கை தீம். பாடுபட்டு செதுக்கிக்கொண்டிருந்தான். தீம் "படான்" என்றாலும் ஓவியம் அழகாக இருக்கு என்று ரோட்டால போன ரெண்டு பெட்டைகள் சொல்லிக்கொண்டு போச்சுதுகள். காசு போடேல்ல. 

அப்போதுதான் கனடா போகவெண்டு கொழும்பு வந்த தம்பிமுத்து அண்ணர், வந்திறங்கின இரண்டாம் நாளே வஜ்ர பிள்ளையார் கோயிலுக்கு வாறார். தென்னம்பாலைக்கு ஒரு நேர்த்தி வச்சால் வெள்ளன விசா வந்திடும் எண்டதுதான் அவர் வந்த காரணம். ஆனா அண்டைக்கென்று பார்த்து சனி கோயில் வாசலில் ரிசப்ஷனிஸ்டா நிண்டது அவரிண்ட கெட்டகாலம். 

தம்பிமுத்தர் அவசரமாக வாசலில செருப்பை கழட்டிப்போடேக்க செருப்பு கொஞ்சம் அந்த ஒவியத்தில பட்டிட்டுது. கரைக்கோடும் சாதுவா அழிஞ்சு போனது. 

நம்ம தம்பிமுத்து அண்ணர் பாய்ஸ் படத்தில வந்த சித்தார்த்திண்ட அப்பர்  "சப்தஸ்வரங்கள்" ரமணன் மாதிரி. மகன், காதலி முத்தம் கொடுத்த கையை போட்டோ கொப்பி எடுத்து வச்சால், அந்த பேப்பரால நாய்ப்பீ துடைக்கிற கேஸ். தம்பிமுத்தருக்கு யாரடா இவன் ரோட்டில கிறுக்கிக் கொண்டிருக்கிறான் என்ற ஏளனம். கவனிக்கயில்லையோ, அல்லது வேண்டுமென்றோ தெரியாது. ஆனா செருப்பை கழட்டிப்போடேக்க அந்த ஓவியத்தில பட்டிட்டுது. 

ஓவியன் மணியன், தம்பிமுத்தரை நிமிர்ந்துகூட பார்க்கேல்ல. தன்ர பாட்டுக்கு கலைந்த இடத்த சரிப்பண்ணீட்டு மிச்சத்தை கீறத்தொடங்கினான். ஆனா பக்கத்தில பூ வித்துக்கொண்டிருந்த பூவாயிக்கு வந்துதே ஒரு கோவம். அம்மாடி. கண்ணெல்லாம் சிவந்து, மனிசிக்கு அறச்சீற்றம் வந்துவிட்டது. தம்பிமுத்தரை நிப்பாட்டி கேட்டாள். ஸ்ட்ரெயிட்டா கவிதைதான்.

"டேய் மயிராண்டி செருப்பை எடுத்து உண்ட மூஞ்சில வைடா, படத்தில ஏண்டா வச்சனி?"

தம்பிமுத்தர் குழம்பிட்டார்.  வரைஞ்சவன் கம்முனு இருக்கான். இந்த மனிசி துள்ளுது. எது எப்பிடியோ பூவாயியின் சீற்றத்திலும் கொஞ்சம் நியாயம் இருந்ததால் தம்பிமுத்தரும் ஒரு மன்னிப்பு கேட்டிட்டு பேசாமால் போயிருக்கலாம். ஆனா "அமர்" பிடிச்சு நாப்பது வரியமா திரிஞ்ச அண்ணர் சும்மா விடுவாரா? 

வாயைக்குடுத்திட்டார். 

"மூதேவி .. யானையும் பிக்குவும் கை குலுக்கிற படத்த என்ன மயிருக்கு பிள்ளையார் கோயிலுக்கு முன்னால கிறுக்கி வைச்சிருக்கிறீங்கள்?"

தம்பிமுத்தர் ஒரு குவாலிபைட் ஓவிய விமர்சகர் கிடையாது என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஆரம்பத்தில் அந்த ஓவியன் கடுப்பானாலும் எதுக்கு வம்பு என்று சும்மா இருந்தான். பூவாயி சேலையை கொஞ்சம் தூக்கி சொருகிக்கொண்டாள். சண்டைக்கு ரெடி. 

"டேய் .. உனக்கு ஓவியம் எண்டா என்னெண்டு தெரியுமா? நீ எல்லாம் விழல் கதை கதைக்கிற அளவுக்கு ஓவியர்களின் நிலைமை இறங்கீட்டுது பார்த்தியா"

பூவாயி தம்பிமுத்தரை திட்டும்போது, ஓவியன் பாவமாய் திரு திரு என்று விழித்தான். தம்பிமுத்தரின் கோபம் தலைக்கேறியது. 

"எடியே உங்களுக்கெல்லாம் பிக்காஸாவா ரிவியூ பண்ண வருவாரு? காசு வாங்கிறீங்கள் அல்லோ. அவ்வப்போ மிதிச்சாலும் தாங்கிக்கோணும். இந்தா ஒரு ரூவா .. காசு குடுத்திட்டன் .. கம்மெண்டு இரு"

அண்ணர் ஒரு ரூவா குற்றியை விட்டெறிய, ஓவியன் அதை எடுக்கப்போனான். பூவாயி விடவில்லை. அதனைப்பறித்து மீண்டும் தம்பிமுத்தர் மீது எறிந்தாள். அவன் திருப்பி எறிந்தான். சண்டை முற்றிவிட்டது. அக்கம்பக்கத்தில் சும்மா இருந்தவனெல்லாம் வந்து வேடிக்கைபார்த்தான். கருத்து சொன்னான். அந்த ஓவியன் இருபதுவருஷமா நல்லாவே படம் கீறேல்ல எண்டு போகிற போக்கில ஒரு கிழவி சொல்லிக்கொண்டு போனது. பெண் என்பதால் பூவாயியை அவமதிக்கிறார்கள் என்று யாரோ ஒருத்தன் ஸ்டேட்மெண்ட் விட்டான். ஒரு பெடியன் அந்த ஓவியத்தின் மீதே காறித்துப்பினான். ஒரு நாய் அதன் மேல் ஒண்டுக்கடித்தது. தம்பிமுத்தரும் பூவாயியும் அடித்து உருண்டு புரண்டதில் கடைசியில் மொத்த ஓவியமும் சிதைந்துபோனது.  புத்தரின் முகம் மாத்திரமே ஓவியத்தில் எஞ்சியிருந்தது.  மணியன் சேர்த்துவச்ச சில்லறை எல்லாம் சிதறிப்போய் பக்கத்தில இருந்த பிச்சைக்காரங்கள் பொறுக்கீட்டாங்கள். தம்பிமுத்தர் ஒரு தேஞ்ச செருப்பை மாறி வச்சதில, ஒரே நாளில் பிரபல ஓவிய விமர்சகர் ஆகிட்டார். எல்லோரும் கை தட்டினார்கள். பெரும் புகழும் கிட்டியது. தம்பிமுத்தர் தான் கனடா போயும் இந்த விமர்சனத்தை தொடரோணும் என்று சொல்லிக்கொண்டார். 

ஓவியன் மணியன், வேண்டாம் வில்லங்கம் என்று அடுத்த படத்தை வரைய ஆயத்தமானான்.

*************

சுகாசினி,

ஒரு வீணாய்ப்போன உருவகக் கதையை ஏன் இப்படி இழுத்து முழக்கினேன் என்று கேட்கலாம். காஷ்மீர் தீவிரவாதியை திருத்துற கதையில் வெள்ளைப்பணியாரம் முதல் திருநெல்வேலி ஜில்லா எல்லாம் டீடெயிலா வரவில்லையா, அதுபோலத்தான் இதுவும். 

இந்தக்கதையில் ஆரம்பத்திலேயே தம்பிமுத்தர் கொஞ்சம் நிதானமாக செருப்பை ஒதுக்குபுறமாக வைத்திருக்கலாம். ஓவியம் அழகாக இருந்திருந்தா, "நல்லாருக்கு", இல்லையா "பிடிக்கேல்ல", அட்லீஸ்ட் பேசாமலாவது போயிருக்கலாம்.பூவாயியும் சிவனே எண்டு அமைதி காத்திருந்தால், ஓவியமும் தப்பியிருக்கும். கண்டவனெல்லாம் கருத்து சொல்லியிருக்கமாட்டான். காசும் தப்பியிருக்கும். இனி அந்த ஓவியன் நல்லாவே படம் வரைந்தாலும் தம்பிமுத்தர் வீம்பு பண்ணுவார். தம்பிமுத்தர் நேர்மையாக கருத்து சொன்னாலும் பூவாயி எப்படியும் கரித்துக்கொட்டுவாள். அந்த ஓவியத்தை அதன் கலை நேர்த்திக்காக ரசிப்பவர்கள் குறைந்து, அவர்களின் சார்பு நிலை சார்ந்தே ரசிக்கத்தொடங்குவார்கள். 

Basically the damage is done.

சுகாசினி,
"ஓ காதல் கண்மணி" படத்துக்கு மவுஸ் பிடிக்கத்தெரிந்தவனெல்லாம் விமர்சனம் பண்ணக்கூடாது என்று வீணாக தம்பிமுத்தரோடு வம்புக்கு போயிருக்கிறீர்கள். சும்மா விட்டிருந்தா ரெண்டுபேர் செருப்பை கழட்டி வச்சதோட விஷயம் முடிஞ்சிருக்கும். இப்போ வாறவன் போறவன் எல்லாம் துப்பப்போறான். எதுக்கு? ஆனானப்பட்ட மணிரத்னமே பேசாமல் இருக்க உங்களுக்கேன் அறச்சீற்றம்?

சுகாசினி,
பூவாயியும் தம்பிமுத்தரும் அடிபட்டால் எனக்கென்ன என்ற கேள்வி வரலாம். நான் இந்தக்கடிதம் எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. குவாலிபைட் பீப்பிள்தான் படத்தைப்பற்றி எழுதவேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். நான் இதுவரைக்கும் ஒரு முன்னூறு கட்டுரைகள் நாலு வருஷமா சீந்தாமல் சிதறாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதுக்கு முதல் ஐஞ்சு வரியமா பீட்டரும் விட்டிருக்கிறன். இதுவரைக்கும் ஒரு பத்து பதினைஞ்சு படத்தைப்பற்றி எழுதியிருக்கிறன். விமர்சனம் எல்லாம் கிடையாது. வெறும் பார்வை. அவ்வளவே. இதெல்லாம் என்னை குவாலிபைட் ஆக்கிடுமா என்றால், ம்ஹூம்,  நான் எழுதினத நானே பல சமயத்தில வாசிச்சதில்லை.  மத்தவனும் எப்பவாவது தடக்கி  விழுந்தாதான் ஹாய் சொல்லுவான்.  அவ்வளவே. ஆக எழுத்தாளர் என்ற அடிப்படையிலோ, அல்லது திரை விமர்சகன் என்ற அடிப்படையிலோ என்னுடைய குவாலிபிகேஷன் ஐஞ்சாம் கிளாஸ் பெயில்தான். 

ஆனா எழுதவேண்டாம் என்று சொல்லுறதுக்கு உங்களுக்கிருக்கிற குவாலிபிகேஷனோட ஒப்பிடும்போது, எழுதிறதுக்கு குவாலிபிகேஷன் அதிகமாகவே எனக்கிருக்கு. எழுத்தாளனாக, விமர்சகனாக அல்ல. மணிரத்னத்தின் அடிப்பொடி ரசிகனாக. 

ஏன் என்று சொல்லுறன்.

எனக்கு ஆறேழு வயசு. இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தில இருந்த டைம். காதல் எண்டா என்ன சனியன் என்று இப்ப போல அப்பவும் தெரியாமல் இருந்தகாலம். அப்பவே மௌனராகத்தையும், அக்னி நட்சத்திரத்தையும், நாயகனையும் பார்த்து ரசிச்ச ஆக்கள் நாங்கள். அப்போது நீங்கள் அந்த மனுஷனை கலியாணம் கட்டக்கூட இல்லை. 

ஒரு பாட்டு முழுக்க கிஸ்ஸு சீன் வருதெண்டு  டவுனுக்கு வண்டி கட்டிப்போய் இதயத்தை திருடாதே பார்த்த பயலுக பூராவும் நம்ம பயலுகதேன். அவனுக நாலு வார்த்த சொன்னா என்ன தப்பு?பத்து தடவைகள் பார்த்தபிறகும், பத்து வருஷம் கழித்து, யாழ்ப்பாணத்தில் ரோஜா முதன்முதல் தியேட்டரில் ரிலீஸ் ஆகுதெண்டு முதல் ஷோவுக்கு முதல் ஆளாக போய் நின்ற ஆள் நான். அன்றைக்கு தியேட்டருக்கு வந்ததே ரெண்டுபேருதான். மணிரத்னத்தை பற்றி எழுத எனக்கில்லாத உரிமையா?

மணிரத்னம் என்ற ஆளுமையை வரிச்சு வரிச்சு வரிச்சு ரசிச்சவன் நான். அவரை என் காதலியாகவே என் புத்தகத்தில் எழுதியிருப்பேன். அந்தக்கட்டுரை கீழே லிங்கில இருக்கு. வாசிச்சிட்டு அப்புறம் சொல்லுங்கள். கொஞ்சம் திமிராகவே சொல்லுறன். மணிரத்னம் ரசிகன் இல்லையா.  என்ன ஒன்று. "கடல்" படத்தை கொஞ்சம் கழுவி ஊத்திவிட்டேன். என்ன செய்ய. நாறின மீனை பிடிச்சுக்கொண்டு வந்தா கழுவி ஊத்தாமா குழம்பா வைக்க முடியும்?


நா ரொம்ப கெட்டவன் இல்ல, கொஞ்சம் நல்லவன்தான்!

சுகாசினி,
மணிரத்னத்தின் படத்தைப்பற்றி எழுத தகுதியில்லை என்று மணிரத்னம் வந்து சொன்னாலே நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நீங்கள் சொன்னால் அப்புறம் என் பேச்சை நானே கேட்கமாட்டேன். அம்புட்டுதேன். சொல்லிப்புட்டேன். 

நாளைக்கு "ஓ காதல் கண்மணி" முதல்நாள் ஷோ. போகிறேன். பார்ப்பேன். பிடிச்சதையும் பிடிக்காததையும் அப்படியே எழுதுவேன். ஏனென்றால், ஐ ஆம் குவாலிபைட்!

கடல் போல அலை மோதாமல் மௌனராகமாய் அலைபாய வேணும், கண்டிக் கதிர்காமக் கந்தா.

************

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : மணிரத்னம்
கடல் 

Photo Credits
www.tamilstar.com

Contact form