"எந்திரன் 2" கதைவிவாதத்திற்காக சங்கரும் ஜெயமோகனும் படக்குழுவினரோடு கோவையில் குரு சைதன்ய ஆச்சிரமத்து தரையிலே ஜமுக்காளம் விரித்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
சங்கர் சிட்டுவேசன் சொல்கிறார்.
சூப்பர்ஸ்டாரை வில்லன் கோஷ்டி துரத்துகிறது. இவரும் செம ஸ்பீடாக ஓடி சன நடமாட்டம் இல்லாத பாழடைந்த பாக்டரி ஒன்றுக்குள் நுழைகிறார். வில்லன்கள் சூப்பர்ஸ்டாரை சுற்றி வளைத்துவிடுகிறார்கள். பத்துப்பேர் அவரை இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள். வில்லன்களின் தலைவன் முன்னே வருகிறான்.
"அறிவிருக்கா? இப்டி தனியா வந்து மாட்டியிருக்கயே, நான் கேட்டத்துக்கு மொதல்ல பதில் சொல்லு, உனக்கு அறிவிருக்கா?" என்று வில்லன் தலைவன் கேட்கிறான்.
சங்கர் காட்சியை விளக்கிவிட்டு, "இந்த எடத்தில ஒரு பன்ஞ் டயலாக் வேணும் சார்" என்கிறார் .
ஜெயமோகன் சிறிது யோசித்துவிட்டு பின்னர் கண்ணை மூடியபடியே சொல்லத் தொடங்குகிறார்.
"எரி குளத்திலே வெய்யோனை அமுக்கும்போதினிலே பிரவாகமாக வெளிவரும் அனல் ஊற்றின் ஆவி பிரபஞ்ச வெளிகளையெலாம் கருமையாக்குகிறது. அதனால் ஏழுலகங்களும் ஒளி இழந்து இருளுள் மருவுகின்றன. அதனைக்கண்ணுற்று, பசுக்களுக்கு ஒளிபுகட்டவென அவ்விருளையெலாம் தழுவிமோர்ந்து தன் மேனிதனில் சாயமெனப் பூசியதால் கருமைவண்ணத்தை மெய்பூண்ட கண்ணனே! மானுடம் உறையும் பூலோக உருண்டையை தன்வசப்படுத்தி அதனை உவர்த்திரவப் பாத்திரத்தினுள் இட்டுச்சென்று மறைத்து வைத்தவனான மறைகளின் எதிரியாகிய ஹிரண்யாஷன் என்ற பூதபரம்பரை பராக்கிரமபாகு அரக்கனை வதம் செய்யவென நீ மாசில் வராக அவதாரம் மேற்கொண்டு பத்துநூறு ஆண்டுகள் வெஞ்சமர் புரிந்தாய். அச்சமயம் நீ பல்வேறு வராக வடிவங்களில் தோன்றி கூடி நின்றதால் ஹிரண்யாஷனின் சிந்தையில் பலநூறு எண்ணக் குழப்பங்களை ஏற்படுத்தினாய். அத்தகு வராகங்கள் அன்றிலிருந்து கூட்டமாகவே ஊண் தேடி திரியலாயின. அதுபோலவே நீவீரும் இவ்விடம் எய்தீர். ஆனால் இந்திய ஞானமரபின் ஊற்றுவாய், தன் அகவைக்கு மீறிய இறை நாட்டம், இலாதாரே இருப்பளிங்கு வாழ்வார் என்று தன் பெரு வாழ்வைக் கட்டியமைத்த, பக்தன் பிரகலாதனைக் காக்கவென்றும் அவன் கொடுங்கோல்புரி தந்தையான ஹிரணியனை சிரம்காரம் செய்யவென்றும் நமோ நாமத்தான் நாராயணப்பெருவாள்வார் கற்றூணை பெருவெடிப்புடன் தகர்த்தெறிந்தபடி நரசிம்ஹ அவதாரமெடுத்து தனித்து ஹிரணியன் முன் தோன்றினார். அகுதுவழிக்க்கமைந்தே ஞானும் இவ்வழி நாடிவந்தேன்"
ஜெயமோகன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ரஜனி வெள்ள நிவாரணப்பணி அழைப்பதாகத் துண்டுச்சீட்டு எழுதிவைத்துவிட்டு எஸ்கேப்பாகி விட்டார். லைக்கா மொபைல்காரன் "யாராவது இந்தப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டீர்களா? பிளீஸ்" என்று ஈழ ஆதரவாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கேட்டுக்கொண்டிருந்தார். உதவி இயக்குனர்கள் எல்லோரும் ஆச்சிரமத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கமராவைப் பார்க்கப்போயிருந்தார்கள்.
தன்னுடைய பஞ்ச் டயலாக்கை சொல்லிமுடித்துவிட்டு பெருமிதத்துடன் கண்ணைத்திறந்த ஜெயமோகன் ஒருவரையும் காணாமல் டென்சன் ஆகிவிட்டார்.
பலரும் மிரட்சியில் டூ போயிருந்ததில் ஜமுக்காளம் ஈரமாகியிருந்தது. சங்கர் மட்டும் மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார்.
ஜெயமோகனுக்கு எதுவுமே புரியவில்லை.
"ஏன் சார் அழறீங்க, பஞ்சு போதலைன்னா சொல்லுங்க, இன்னமும் மீதி எட்டு அவதாரங்கள் இருக்கு. ஜமாய்ச்சிடலாம்"
சங்கர் இப்போது வீறிட்டு கத்த ஆரம்பிக்கிறார்.
"சுஜாதா சார், நீங்க எங்கிருக்கீங்க? இவரு பேஸ்ரது ஒண்ணும் புரியுதில்லையே"
வைகுண்டத்திலிருந்து சுஜாதாவின் அசரீரி ஒலிக்கிறது.
"அது வேறு ஒண்ணுமேயில்லை சங்கர். நாம எழுதின பஞ்ச் டயலாக்கைத்தான் ஜெயமோகன் மீள எழுதியிருக்கார்"
"எந்த டயலாக் சார்?"
"கண்ணா... பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும்!"