ஓவியன் மணியன்

Apr 15, 2016 0 comments
பம்பலபிட்டிச்சந்தி. அதிலிருந்து வெள்ளவத்தை பக்கம் கொஞ்சம் நடந்தா வஜ்ரா பிள்ளையார் கோயில் வரும். வலு விசேசமான கோயில். அங்கே தென்னம்பாலையில் எல்லாம் பிள்ளையார் எழுந்தருளுவார்.

அந்தக் கோயில் வாசலில் ஒரு சாலையோர ஓவியன் இருக்கிறான். பெயர் மணியன், ஓவியன் மணியன். ஓவியக்கல்லூரியில் உபகாரச்சம்பளத்தில் படித்தவன், பள்ளி மூடப்பட்டதால் டிகிரி இல்லாமல் தெருவுக்கு வந்தவன். இப்போது கோவில் வாயில் வளைவின் சீமெந்து நிலத்தில் அவ்வப்போது படம் வரைகிறான். கலைஞன், செய்வதை நேர்த்தியா செய்வான். அவன் பக்கத்திலேயே ஒரு டப்பாவும் கொஞ்சம் சில்லறையும் இருக்கும். மணியன் ஒண்டும் கதைக்க மாட்டான். அமைதியானவன். எப்பவாவது ஒன்றிரண்டு சனம் அவன் வரைந்த ஓவியத்தை பார்த்து ரசித்தோ அல்லது பாவமெண்டொ சில்லறைகளைப் போட்டிட்டுப் போவினம். அவன் தாங்க்ஸ் கூட சொல்லமாட்டான். அவனுக்கு பக்கத்தில ஒன்றிரண்டு சில்லறைப் பிச்சைக்காரரும் இருப்பினம். அவையள் ஒண்டும் செய்யமாட்டினம். காசு வந்தா ஓகே. இல்லாட்டியும் ஓகே. ஆனா அவங்களுக்கு மணியனை விடக் கூட சில்லறை கிடைக்கும். மணியன் அலட்டிக்கொள்ளமாட்டான். அவன் ஒரு கடின உழைப்பாளி. ஐ மீன் "ஹார்ட் வர்க்கர்".

ஓவியன் மணியனுக்கு இருட்டு எண்டால் மிகவும் பிடிக்கும். இரவில்கூட கறுப்புக்கண்ணாடி போடுமளவுக்கு இருட்டுப் பிடிக்கும். சமயத்தில் வெறும் கருப்பு பெயிண்டை மட்டும் அடித்துவிட்டு ஓவியம் என்பான். எல்லாமே கறுப்புக்கு பின்னாலே இருக்குமாம். கண்டு பிடிக்கோணுமாம். இப்படி புதுமைகள் எல்லாம் செய்வான். அதையெல்லாம் எவனுமே கணக்கெடுக்கமாட்டான்.

மணியனுக்கு ஒரு மனைவி. பெயர் பூவாயி. அதே கோயில் வாசலில் மல்லிகைப்பூ விற்பவள். அவளுக்கு கொஞ்சம் வாய்த்துடுக்கு. பம்பலப்பிட்டி சந்தியடியில் பெண்களுக்கு ஒன்றென்றால் பூவாயி பொங்கி எழுவாள். அவள் எழுந்தால் வாயில் செந்தமிழ்தான். கவிதாயினிகள் தோற்றார்கள். சில்வியா பிளாத் பிச்சை எடுக்கோணும்.

அன்றைக்கும் வழமைபோல மணியன் சத்தமே போடாமல் ஒரு ஓவியத்தைத் தீட்டிக்கொண்டிருந்தான். ரோட்டில சோக்குகட்டியால நிதானமா தன்பாட்டுக்கு. பிள்ளையாரும் புத்தரும் கைகுலுக்கிறமாதிரி ஒரு போஸ். இரண்டு இனத்தையும் கவர் பண்ணுறமாதிரி, சமகால அரசியல் சூழ்நிலையை மேலோட்டமாகச் சொல்லி, எல்லாகடவுள்களும் இணைந்தா நாடு உருப்பட்டிடும் என்கின்ற மொக்கை தீம். பாடுபட்டு செதுக்கிக்கொண்டிருந்தான். தீம் "படான்" என்றாலும் ஓவியம் அழகாக இருக்கு என்று ரோட்டால போன ரெண்டு பெட்டைகள் சொல்லிக்கொண்டு போச்சுதுகள். காசு போடேல்ல. 

அப்போதுதான் கனடா போகவெண்டு கொழும்பு வந்த தம்பிமுத்து அண்ணர், வந்திறங்கின இரண்டாம் நாளே வஜ்ர பிள்ளையார் கோயிலுக்கு வாறார். தென்னம்பாலைக்கு ஒரு நேர்த்தி வச்சால் வெள்ளன விசா வந்திடும் எண்டதுதான் அவர் வந்த காரணம். ஆனா அண்டைக்கென்று பார்த்து சனி கோயில் வாசலில் ரிசப்ஷனிஸ்டா நிண்டது அவரிண்ட கெட்டகாலம். 

தம்பிமுத்தர் அவசரமாக வாசலில செருப்பை கழட்டிப்போடேக்க செருப்பு கொஞ்சம் அந்த ஒவியத்தில பட்டிட்டுது. கரைக்கோடும் சாதுவா அழிஞ்சு போனது. 

நம்ம தம்பிமுத்து அண்ணர் பாய்ஸ் படத்தில வந்த சித்தார்த்திண்ட அப்பர் "சப்தஸ்வரங்கள்" ரமணன் மாதிரி. மகன், காதலி முத்தம் கொடுத்த கையை போட்டோக்கொப்பி எடுத்து வச்சால், அந்த பேப்பரால நாய்ப்பீ துடைக்கிற கேஸ். தம்பிமுத்தருக்கு யாரடா இவன் ரோட்டில கிறுக்கிக் கொண்டிருக்கிறான் என்ற ஏளனம். கவனிக்கயில்லையோ, அல்லது வேண்டுமென்றோ தெரியாது. ஆனா செருப்பை கழட்டிப்போடேக்க அந்த ஓவியத்தில பட்டிட்டுது. 

ஓவியன் மணியன், தம்பிமுத்தரை நிமிர்ந்துகூடப் பார்க்கேல்ல. தன்ர பாட்டுக்கு கலைந்த இடத்த சரிப்பண்ணீட்டு மிச்சத்தைக் கீறத்தொடங்கினான். ஆனா பக்கத்தில பூ வித்துக்கொண்டிருந்த பூவாயிக்கு வந்துதே ஒரு கோவம். அம்மாடி. கண்ணெல்லாம் சிவந்து, மனிசிக்கு அறச்சீற்றம் வந்துவிட்டது. தம்பிமுத்தரை நிப்பாட்டி கேட்டாள். உரைநடை எல்லாம் ஓல்ட் பஷன். ஸ்ட்ரெயிட்டாக கவிதைதான். 

"டேய் மயிராண்டி செருப்பை எடுத்து உண்ட மூஞ்சில வைடா, படத்தில ஏண்டா வச்சனி?" 

தம்பிமுத்தர் குழம்பிட்டார். வரைஞ்சவன் கம்முனு இருக்கான். இந்த மனிசி துள்ளுது. எது எப்பிடியோ பூவாயியின் சீற்றத்திலும் கொஞ்சம் நியாயம் இருந்ததால் தம்பிமுத்தரும் ஒரு மன்னிப்பு கேட்டிட்டுப் பேசாமல் போயிருக்கலாம். ஆனா "அமர்" பிடிச்சு நாப்பது வரியமா திரிஞ்ச அண்ணர் சும்மா விடுவாரா?வாயைக்குடுத்திட்டார். 

"மூதேவி .. யானையும் பிக்குவும் கை குலுக்கிற படத்த என்ன மயிருக்கு பிள்ளையார் கோயிலுக்கு முன்னால கிறுக்கி வைச்சிருக்கிறீங்கள்?" 

தம்பிமுத்தர் ஒரு குவாலிபைட் ஓவிய விமர்சகர் கிடையாது என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஆரம்பத்தில் அந்த ஓவியன் கடுப்பானாலும் எதுக்கு வம்பு என்று சும்மா இருந்துவிட்டான். பூவாயி சேலையை கொஞ்சம் தூக்கிச் சொருகிக்கொண்டாள். சண்டைக்கு ரெடி. 

"டேய் .. உனக்கு ஓவியம் எண்டா என்னெண்டு தெரியுமா? நீ எல்லாம் விழல் கதை கதைக்கிற அளவுக்கு ஓவியர்களின் நிலைமை இறங்கீட்டுது பார்த்தியா"

பூவாயி தம்பிமுத்தரை திட்டும்போது, ஓவியன் பாவமாய் திரு திரு என்று விழித்தான். தம்பிமுத்தரின் கோபம் தலைக்கேறியது. 

"எடியே உங்களுக்கெல்லாம் பிக்காஸாவா ரிவியூ பண்ண வருவாரு? காசு வாங்கிறீங்கள் அல்லோ. அவ்வப்போ மிதிச்சாலும் தாங்கிக்கோணும். இந்தா ஒரு ரூவா .. காசு குடுத்திட்டன் .. கம்மெண்டு இரு" 

அண்ணர் ஒரு ரூவா குற்றியை விட்டெறிய, ஓவியன் அதை எடுக்கப்போனான். பூவாயி விடவில்லை. அதனைப்பறித்து மீண்டும் தம்பிமுத்தர் மீது எறிந்தாள். அவன் திருப்பி எறிந்தான். சண்டை முற்றிவிட்டது. அக்கம்பக்கத்தில் சும்மா இருந்தவனெல்லாம் வந்து வேடிக்கைபார்த்தான். கருத்துச் சொன்னான். அந்த ஓவியன் இருபதுவருஷமா நல்லாவே படம் கீறேல்ல எண்டு போகிற போக்கில ஒரு கிழவி சொல்லிக்கொண்டு போனது. பெண் என்பதால் பூவாயியை அவமதிக்கிறார்கள் என்று யாரோ ஒருத்தன் ஸ்டேட்மெண்ட் விட்டான். ஒரு பெடியன் அந்த ஓவியத்தின் மீதே காறித்துப்பினான். ஒரு நாய் அதன் மேல் ஒண்டுக்கடித்தது. தம்பிமுத்தரும் பூவாயியும் அடித்து உருண்டு புரண்டதில் கடைசியில் மொத்த ஓவியமும் சிதைந்துபோனது. புத்தரின் முகம் மாத்திரமே ஓவியத்தில் எஞ்சியிருந்தது. மணியன் சேர்த்துவச்ச சில்லறை எல்லாம் சிதறிப்போய் பக்கத்தில இருந்த பிச்சைக்காரங்கள் பொறுக்கீட்டாங்கள். 

தம்பிமுத்தர் ஒரு தேஞ்ச செருப்பை மாறி வச்சதில, ஒரே நாளில் பிரபல ஓவிய விமர்சகர் ஆகிட்டார். எல்லோரும் கை தட்டினார்கள். பெரும் புகழும் கிட்டியது. தம்பிமுத்தர் தான் கனடா போயும் இந்த விமர்சனத்தை தொடரோணும் என்று சொல்லிக்கொண்டார். 

இந்த சச்சரவுக்குப்பிறகு மணியனை கோயில் நிர்வாகம் அவ்விடத்திலிருந்து அகற்றிவிட்டது. மணியன் இப்போது ஓவியம் வரைவதற்கு இடம் தேடிக்கொண்டிருக்கிறான்.


Comments

Contact Form