காலையிலிருந்து “ஶ்ரீரங்கத்து தேவதைகள்” வாசித்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னர் வாசித்த புத்தகம். இப்போது மீண்டும் வாசிக்கையில் கதைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று தெரிகிறது. ஆனால் அவற்றின் ஆதார விசயங்களை மறக்கவில்லை. இச்சிறுகதைகளின் மூலப் பாத்திரமான ரங்கராஜனின் வயதுதான் அப்போது எனக்கும். கிட்டத்தட்ட அந்தப் பதின்மத்துச் சிறுவனின் குணமும்தான் எனக்கு. எல்லாவற்றிலும் கூர்ந்த அவதானிப்பு இருக்கும். ஆனால் எதனையும் முன்னின்று செய்வதில்லை. என் கொல்லைப்புறத்துக் காதலிகளில் வருகின்ற பல கதைகளில் வரும் குமரனிடம் ஶ்ரீரங்கத்து தேவதைகளின் ரங்கராஜன் எட்டிப்பார்ப்பது தற்செயல் அல்ல. கடந்த சில வருடங்களாக தமிழில் வாசித்தவை எல்லாமே மண்டையைக் காயவைக்கும் கதைகளே. ஆங்கிலத்தில் அப்படியல்ல. ஆங்கில இலக்கியத்தில் சமகாலத்தில் மிகவும் கொண்டாடப்படும் கதைகள்கூட எளிமையான வடிவமைப்பையே கொண்டிருப்பவை. மண்டைகாய வைக்கும் கதைகள்வீது விமர்சனம் ஏதும் கிடையாது. கதைக்குத் தேவை. எழுதுகிறார்கள். ஆனால் அதுதான் இலக்கியம் என்றொரு மாயை பொல்லாதது. மனிதர்களுடைய நுண்ணுணர்வுகளை அற்புதமாக விவரிக்கக்கூடிய அலிஸ் மன்ற...