Skip to main content

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் பற்றி மயிலன்

அன்புள்ள ஜேகே,

சிறு வயதில் எனக்கொரு பழக்கமுண்டு. டைரிமில்க் எனக்கு அலாதி விருப்பம். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது வீட்டில் ஃப்ரிட்ஜ் வாங்கினார்கள். ஃப்ரீசருக்கு கீழே உள்ள தட்டில் ஒரு டைரிமில்க் அரையாகவோ முக்காலாகவோ இருக்கும். பத்து வில்லைகள் இருக்கும் அதை பத்து நாட்கள் நாளொன்றிற்கு ஒன்றாகத்தான் சாப்பிடுவேன். அவ்வளவுதான் வாங்கியும் தருவார்கள். அத்தனை நாட்கள் நீட்டித்து வைத்து அதனை உண்பதுதான் அதன் சுவை. பள்ளியின் கடைசி ஒரு மணி நேரமும், ரிக்ஷா பயணமும் முழுக்க முழுக்க அந்த ஒரு வில்லையை சுற்றியேத்தான் மனம் ஏங்கிக்கிடக்கும். ஒரு காத்திருப்பை அதில் தேக்கி வைப்பதில் ஒரு குதூகலம். நிதானித்து ருசிக்கும்போது அது வெறும் டைரிமில்க் மட்டுமல்ல. அப்படித்தான் உங்கள் காதலிகளும்.

இதில் வந்துள்ள பெரும்பாலான பக்கங்கள் படலையில் இரண்டாண்டுகளுக்கு முன்பே வாசித்தவையே. அன்றெல்லாம் எனக்கு ஒரு அவசரம் இருந்திருக்கலாம். அதற்கு பிறகு திருமணம் முடித்து, தகப்பனாகி மன ரீதியில் அப்பட்டமாக ஒப்புக்கொள்ளமுடியாவிடினும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதுதான். வாசிப்பின் எல்லைகள் கொஞ்சமாய் விரிந்துள்ளதாகவும் நம்புகிறேன். இப்படியான நிலையில் அதே உங்களின் பழைய காதலிகள் இன்று எனக்குள் கிடத்தும் அலைகள் முற்றிலும் வேறானவை. எடுத்த எடுப்பில் 'குட்டி'யைத்தான் வாசித்தேன். இது என் அதே பழைய டைரிமில்க்.

இன்று புத்தகம் வெளியாவதற்கு முன்பே கிளாசிக் எழுதுவதாய் சொல்கிறார்கள், முதல் புத்தகத்தின் முன்னுரை அடிதடியில் ஒருவர் இலக்கியவாதி ஆகிவிடுகிறார். என்னைப்பொருத்தவரை நான் இலக்கியம் என்பதற்கான பொருளாக வைத்துக்கொண்டிருப்பது, அது வாசிப்பவனின் அன்றைய அகத்திலிருந்து விரிந்து அன்றைக்கான பார்வையில் ஒரு உயிர்ப்பைத் தருவதாக இருக்கவேண்டும். அவனே சில ஆண்டுகள் கழித்து வாசிக்கும்போது அவனை வேறொரு களத்தில் நிறுத்தி வேறொரு தேடலைத் தொடங்கிவைக்க முடிந்ததாக இருக்கவேண்டும். ஒரு கால இடைவெளியிலான மறுவாசிப்பில்தான் என்னால் ஒரு எழுத்தின் இலக்கியத்தரத்தை அங்கீகரிக்கமுடிகிறது. அடுத்தவர்கள் எனக்கு பரிந்துரைக்கலாம். என் அங்கீகாரத்திற்கான முத்திரை என்னிடம்தான் இருக்கும். கொ.பு.கா. எனக்கு இப்போது மறுவாசிப்புதான். அன்று மின்னிய வரிகள் இன்று மின்னவில்லை. அன்று இல்லாத புது வரிகள் எங்கிருந்தோ வந்து விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இலக்கியம் நண்பா.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் இணையத்தில் நின்ற காதலிகள் இங்கே வரிசைக்கட்டி நிற்கும்போதுதான் உங்கள் உணர்வுகளின் அணிவரிசை நிம்மதியிழக்க செய்கிறது. பங்கருக்குள் ஓடி ஒளிந்து அப்பாவை பார்த்து அலறும் சிறுவன் பொம்மை காமிராவுடன் ரஜினி ஸ்டைல் செய்யும்போது பக்கங்களை முன்னும் பின்னும் புரட்டி அந்த உணர்வுகளைக் கோர்க்கும்போதுதான் உங்களின் ரஜினி என் ரஜினி அல்ல என்பது புரியும். இலங்கை என்றாலே கரும்புகையை மட்டுமே தாள்களில் தடவும் எழுத்தாளர்களுக்கு மத்தியில், உங்கள் காதலிகளெல்லாம் புகைமூட்டத்திற்கு நடுவே வெவ்வேறான வண்ணங்களிலான பிரகாசமான ஓவியங்கள்.

போகன் சங்கர் சமீபத்தில் சாதாரண தனிமனிதர்களின் வாழ்க்கைக்குறிப்புகள் எழுத்தாக்கம் பெறவேண்டும் என்பதை வலியுருத்தும் விதமாக ஒரு கேரளத்து பெண் காவலாளியின் புத்தகத்தை முன்னிறுத்தி ஒரு பதிவு எழுதியிருந்தார். எனக்கு அப்போது ஒரு சந்தேகம் இருந்தது. யாரென்றே தெரியாத ஒருவரின் வாழ்க்கை குறிப்பு எனக்கு எதற்கு? எப்படி அதில் என்னால் ஒன்றமுடியும். அதே சந்தேகம்தான் நீங்கள் இதனை புத்தகமாக வெளியிடப்போவதாக சொன்னப்போதும் எனக்கு தோன்றியது. ஜேகே யாரென்றே தெரியாத ஒருவருக்கு இந்த புத்தகம் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான பதில் இந்த புத்தகத்தைப் படிக்கும்போதுதான் உணரமுடிந்தது. அத்தகையான இரண்டாம்பட்சமானவர்கள் பார்வையில் இதனை ஒரு புனைவாக எடுத்துக்கொண்டாலும் அவர்களின் வீணையின் நரம்புகள் நிச்சயம் மீட்டப்படும்.

இந்த புத்தகத்தில் வரும் 'குட்டியன்' அத்தியாயம் ஏற்கனவே எனக்கு மனப்பாடம். மீண்டும் விடவில்லை. 'கக்கூஸ்' முன்பு நான் ஒரு அலுவலக நகைச்சுவை கதையாக படித்ததாக நினைவு. இது முற்றிலும் வேறு. இலங்கையின் தமிழர்கள் உண்மையில் இன்று எந்த மாதிரியான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது இங்கு பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. எங்களின் நெடுமாறன்'களும், வைகோ'களும், முருகனின் பேரன்'களும் எங்களுக்கு புரியவிடவும் போவதில்லை. பிரேமதேசா போட்ட பீக்குண்டு உங்களில் மிச்சம் வைத்திருக்கும் வலியை சொல்லும் அந்த கடைசி ஒரு பத்தி சிறுவெளிச்சம்.

இன்று தமிழகத்தில் சில லட்சம் எழுத்தாளர்களும், கிட்டத்தட்ட முக்கால் கோடி திரைவிமர்சகர்களும் சிவந்த கண்களுடன் திரிந்துக்கொண்டிருக்கிறோம். எந்த ஒரு கலைஞனையும் எங்களால் நிர்வாணப்படுத்த முடியும். அப்படி இருக்கையில் இப்போது மீண்டும் உங்களின் மணிரத்னம் அத்தியாயத்தை வாசிக்கும்போதுதான் எனக்குள் இருந்த ரசிகன் செத்துப்போய்விட்டான் என்பதை புரியவைத்தது. அதே மணி'யை நான் ரசித்த நாட்களுக்கு என்னை நான் இப்போது மீட்டெடுக்கவேண்டும். ரசிகப்பார்வை எத்தனை உன்னதமானது. அமைதியானது. பரவசம் நிறைந்தது. இப்போதெல்லாம் அந்த காட்சி காப்பி. இந்த சீன் மொக்கை. ஒரே இழுவை.. இதுதான் விமர்சனம். சுத்த பேத்தல். விமர்சகர்களை விட ரசிகர்களுக்குத்தான் வாழ்க்கை கொண்டாட்டமாய் இருக்கமுடியும். ரசிகர்கள் பாக்கியசாலிகள். அவர்களால்தான் ராஜாவையும் ரஹ்மானையும் சேர்த்தே அணைத்துக்கொள்ளமுடியும். நீங்கள் பாக்கியசாலி ஜேகே.

உங்களுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. விருப்பங்கள் சில, ஒரே திசையில் இருப்பதை அறிவோம். அதை சொல்லவரவில்லை. என்னைப் பொறுத்தவரை நம் இருவருக்குமே ஒரு விதமான hyperthymesia உண்டு. பல இடங்களில் நான் உணர்ந்திருக்கிறேன் அதனை. எப்படி என்னால் பின்னோக்க இயலுமோ அப்படியேதான் நீங்களும். ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. உங்களிடம் ஒரு அசாதாரண மொழி உண்டு. நினைத்ததை நினைத்தபடியே எழுதமுடியும் மொழி உங்களது. நகைச்சுவை முடிகிறது. சோகத்தை பத்திப்பத்தியாய் பிழியாமல் சுருக்கென பாய்ச்சமுடிகிறது. நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் நடை சாத்தியப்படுகிறது. என்னால் தள்ளி நின்று பாராட்டமட்டுமே முடிகிறது. பச்சையாக சொல்லவேண்டுமெனில் பொறாமைமட்டுமே படமுடிகிறது.

நன்றியும், வாழ்த்துகளும். கேதா'விற்கும், ஓவியர்களுக்கும் சேர்த்து.

அன்புடன்,
மயிலன்
http://cmayilan.blogspot.com/

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.