இந்த உரையாடலைச் செய்யும் எண்ணம் தற்செயலாகத்தான் உருவானது. ஜேன் ஓஸ்டினின் நாவல்களைப் பற்றி கலா அக்காவும் நானும் நம்முடைய வாட்ஸப் குழுமத்தில் அடிக்கடி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருப்போம். ஒரு கட்டத்தில் அதையே பொட்காஸ்டாக செய்தால் என்ன என்று தோன்றிய எண்ணத்தின் விளைவுதான் இந்தக் காணொளி. ஜேனின் “Sense and Sensibility” என்ற நாவலைப் பிரதான இழையாகக்கொண்டு இந்த உரையாடலை நாம் அமைத்துள்ளோம். இந்நாவலைத் தழுவியே ராஜீவ்மேனன் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” என்ற திரைப்படத்தின் இயக்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜேனை வாசித்திருக்காவிட்டாலும் கண்டுகொண்டேன் திரைப்படத்தை விரும்பிப் பார்த்தவர் எனில் இந்த உரையாடலை உள்வாங்குவது உங்களுக்கும் எளிதாக அமையும் என்று நம்புகிறேன். இந்த உரையாடலைச் சாட்டாக வைத்து மறுபடியும் ஜேன் ஓஸ்டினின் மாந்தரோடு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. அதையே கலா அக்காவோடு இணைந்து செய்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. கலா அக்கா புத்தகங்களின் காதலி. புத்தகங்களை அவர் பேச ஆரம்பிக்கையிலேயே கூட இருக்கும் நமக்கும் ஒரு குழந்தையின் பரவசம் தொற்றிவிடுவதுண்டு....