ஆதிரை வெளியீடாக நான் எழுதிய ‘சமாதானத்தின் கதை’ என்கின்ற நூல் இப்போது கடைகளில் கிடைக்கிறது. 000 கதைகளைச் சொல்லாமலேயே விட்டுவிட்டால் என்ன என்று எண்ணிய காலமது. சொல்லாத கதைகள் எப்போதுமே எம்மோடு அமுங்கியபடி கூடவே இருக்கின்றன. இரகசியங்களைப்போல. சொல்லியபின் அவை எம்மைவிட்டுப் பறந்துபோய்விடும். பின்னர் கூப்பிட்டாலும் அவை செவிமடுப்பதில்லை. எப்போதேனும் தெருவோரம் யாரோ அவற்றைக்கூட்டிச்செல்லும்போது எம் வாசலை எட்டிப்பார்ப்பதோடு சரி. அதற்குமேல் அவற்றுக்கும் எமக்குமான உறவு நெருங்குவதேயில்லை. “சமாதானத்தின் கதை” நூலில் உள்ள பதினொரு கதைகளும் எப்போதோ என்னோடு கோபித்துக்கொண்டு பிரிந்துபோன கதைகள். அவற்றை மீள எழுதும்போது நிரம்பிய அன்பும் அதற்கும்மேலாகச் சண்டையும் அவற்றோடு பிடிக்கவேண்டியிருந்தது. சில கதைகள் வளர்ந்தும் இன்னும் பல ஒடுங்கியும் கிடந்தன. ‘விசையறு பந்து’ மதுவந்திகாவைக் காணும்போது புதிதாக இருந்தது. ‘தூங்காத இரவு வேண்டும்’ சிவலிங்கத்தின் வாழ்வை நினைத்துப்பார்க்கவே ஒரு கலக்கம் வந்துபோனது. கிட்டத்தட்ட ஒரு நான்கைந்து மாதங்கள் இக்கதைகளின் களங்களிலும் கதை மாந்தரோடும் செலவிட்ட காலைப்பொழுது