இன்றைக்கு ஐம்பதாவது பதிவு! அரங்கேற்ற வேளையில் விளையாட்டாய் ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயரும் போது செய்த ஒரே ஒரு தீர்மானம், இனி மேல் மற்றவர்களுக்காக, நான் ஏங்கும் விஷயங்களில் சமரசம் செய்வதில்லை என்பது. திகட்ட திகட்ட வாசிக்கவேண்டும் என்பது அதில் ஒன்று. எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது இன்னொன்று. சிங்கபூரின் மெஷின் வாழ்க்கை அதற்கு காரணம் என்று நொண்டிச்சாக்கு சொல்லிக்கொண்டேன். இனி சொல்வதாயில்லை. ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானத்தில் இருந்து எழுதிய பதிவு இங்கே. எழுதவேண்டும் என்பது அடங்காத வெறி. ஆங்கிலத்தில் எழுதும் போது ஒரு வசதி, குறிப்பிட்ட சிலரே வாசிப்பர். ஆனால் அழகாய் விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஏதோ ஒன்று இடித்துக்கொண்டு இருந்தது. ஆங்கிலம் என் மொழி இல்லை. சில உணர்வுகளை இயல்பாக சொல்ல முடிவதில்லை. தமிழ் வசப்படுமா என்பதும் தெரியாது. எழுத ஆரம்பித்தேன். வசப்பட்டு விட்டேன். ஆரம்பித்த உடனேயே எழுதிய அக்கா சிறுகதை, கௌரி போட்ட கமெண்ட் உடன் செல்ப் பிக்கப் ஆகியது. என் கதையில் அரசியல் பார்வைகளை நான் திணிப்பதில்லை. அந்த கதைக்கு எது நியாயம் என்று தோன்றுகிறதோ அத