வட ஆர்க்டிக்ட் பிராந்தியத்தில் வசிக்கும் பழங்குடியினரிடையே நிலவும் நம்பிக்கை இது. எல்லா உயிர்களுக்குள்ளும் அவற்றினது குட்டி வடிவங்கள் உறைந்து இருக்கின்றனவாம். ஒரு மானுக்குள் அதனைப்போலவே ஒரு உக்குட்டி மான். யானைக்குள் ஒரு உக்குட்டி யானை. எறும்புக்கும் ஒரு குட்டி எறும்பு. மனிதனுக்குள் ஒரு குட்டி மனிதன். வெளிப்புற உயிரி இறக்கும்போது உடல் மட்டுமே அழிகிறது. உள்ளே உறையும் குட்டி உயிரி தொடர்ந்தும் வாழுகிறது. அது உடலைவிட்டு பிரிந்து சென்று மேலே வானத்தில் வாழ்கின்ற ஒரு தேவதையின் அடி வயிற்றினுள் அடைக்கலம் தேடுகிறது. நிலா வந்து அதனை மீண்டும் பூமிக்கு அழைத்துச்செல்லும்வரை அங்கேயே காத்திருக்கிறது. இவர்கள் எல்லோரையும் மீண்டும் பூமிக்கு கொண்டுபோய்ச்சேர்க்கும் பெரும்பொறுப்பு நிலாவுனுடையது. மாதம் முழுதும் வேலை. வேலை. முதல்நாள் மிக மெதுவாக வேலை ஆரம்பிக்கும். நாட்கள் போகப்போக வேலை கடுமையாகி அமாவாசையன்று நிலாவை பிடிக்கவேமுடியாது. வேலைப்பளுவில் காணாமலேயே போய்விடும். பின்னர் தீற்றலாகத் தெரியும். அந்த தேவதையின் வயிறு காலியாகும்வரை அயராது உழைக்கும். எல்லா உயிரிகளையும் பூமிக்கு கொண்டுசேர்த்து முடித்தபின்