மாலை ஐந்து மணி தாண்டியிருந்தது. ஹம்பி எக்ஸ்பிரஸ் ஹோஸ்பேட்டுக்கு வந்துசேர இன்னமும் நான்கு மணித்தியாலங்கள் இருந்ததால், அவ்வளவு நேரமும் என்ன செய்வது என்று தெரியவில்லை. வெளியே இறங்கி நடக்கலாம் என்றால் மழை தூறிக்கொண்டிருந்தது. தனியனாக உணவகத்துக்குள்ளேயே முடங்கிக்கிடந்து வெறுமனே கிங்பிஷரை அருந்திக்கொண்டிருக்க அலுப்படித்தது. இன்னொரு மிளகு மசாலா சொல்லலாம் என்றால் வயிறு வாய்தா கேட்டது. இன்னொருபுறம் மனம் இக்கணங்களை இப்படிக் கழித்து இலகுவில் இழந்துவிடாதே என்று சொல்லியது. வெளியே வந்தேன். மழையை எவருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. தெருவோரமாக ஒரு பெண்மணி சோளம் பொத்திகளை நெருப்பில் சுட்டு விற்றுக்கொண்டிருந்தார். இடது கையால் ஒரு பழைய கறுப்புக்குடையை நெருப்பு அணையாவண்ணம் மழைக்குப் பிடித்தபடி, மறு கையில் ஒரு குழாயை ஊதி ஊதி தணலை எரியூட்டிக்கொண்டிருந்தார். அவருக்கருகிலேயே சிறு பெட்டிக்கடையில் வெங்காயப்பஜ்ஜி போட்டுக்கொண்டிருந்தார்கள். சூடாக எதையாவது வாங்கிச்சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. வீதியைக் குறுக்கே கடந்து போனபோது, பக்கத்திலேயே ஒரு சிறுமி நெல்லிக்காய் விற்றுக