பள்ளி நாட்களில் தமிழ் செய்யுள் பாடத்தில் எந்த குறுந்தொகை பாடல் படித்தோம் என்பது நினைவில் இல்லை. வருடங்கள் பல கடந்த பின்பு 2011ம் ஆண்டில் திரு. சுஜாதா அவர்களின் ‘401 காதல் கவிதைகள், குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்’ எனும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த புத்தகம் வாசிக்க கிடைத்தது. திரு. சுஜாதா அவர்களின் ஆகச் சுவையான முன்னுரை குறுந்தொகை பாடல்களின் அறிமுகத்தை மட்டுமின்றி அவற்றை வாசிக்கும் ஆவலையும் தூண்டியிருந்தது. பாடல் புரியாவிட்டாலும்,பொருள் விளக்கம் அப்பாடல்களை வாசிக்க செய்கின்றது. திரு. சுஜாதா அவர்கள் தன்னுடைய முன்னுரையில் தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை உரித்தாக்குகிறார். ஏனெனில் அவர் பதிப்பித்த உரை இல்லாவிட்டால் நாம் குறுந்தொகையை இழந்திருப்போம் என்கிறார்.