Skip to main content

மணியம் மாஸ்டர்


வழமையான யாழ்ப்பாணத்துக் காணொளி ஒன்று. தென்மராட்சி வயல் காட்டுப்பக்கம் ஒரு ஐயாவைப் பேட்டி எடுக்கிறார்கள். நரை விழுந்த தோற்றத்தோடு, நெற்றியில் பட்டைத் திரு நீறும் நம் ஊருக்கேயான மென் நீல வண்ண சேர்ட்டும் சாறமும் அணிந்தபடி சக நண்பர்களோடு வயலில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். நேர்காணல் எடுப்பவர் அவரிடம் எத்தனை ஆண்டுகளாக வயல் வேலை செய்கிறீர்கள் என்று கேட்க, ஐயா சொல்கிறார்.

எனக்கு எழுபத்தொரு வயது. அம்பது வரியமா நாங்கள் வயலுக்கதான் நிக்கிறம்.

அப்ப வயல்தான் மெயினா செய்யிறனீங்களா?

நாங்க டீச்சர். இப்ப ரிட்டயர் ஆயிட்டம். ஆனால் எப்பவுமே வயல்தான்.

எந்த ஸ்கூலில படிப்பிச்சனிங்கள் ஐயா?

நாங்கள் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கொலிஜில படிப்பிச்சனாங்கள்.

எனக்கு உடல் உடனேயே கிறுகிறுத்தது. இது எங்கட மணியம் மாஸ்டர் அல்லவா?

*****

பரி. யோவானின் ஒரு சில misfits வாத்திமார்களில் முதன்மையானவர் இந்த மணியம் மாஸ்டர்.
அதனாலேயே எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். மீசாலை ஒரு C90 மோட்டார் சைக்கிளில் கொஞ்சம் லேட்டாகத்தான் தினமும் அவர் பாடசாலைக்கு வருவார். நீண்ட தூர மோட்டர் சைக்கிள் பயணத்தால் அவருடைய கால்கள் எல்லாம் புழுதி படிந்திருக்கும். பல சமயங்களில் சேர்ட்டு மேல் பட்டனைப் பூட்டியிருக்கமாட்டார். அவருடைய கண்கள் எப்போதுமே சிவந்திருக்கும். தலை பரட்டையாகக் கிடக்கும். டிப் டொப்பாக வெளிக்கிட்டு மினுங்கல் சப்பாத்துகளுடன் வலம் வருகின்ற பரி. யோவான் ஆசிரியர்களுக்கு மத்தியில் அப்படித் திரியவே சங்கடமாக இருக்கும். எனக்கு இதில் நேரடி அனுபவமும் உண்டு. உயர் தரம் முடித்து சில மாதங்கள் நான் பரி. யோவானில் கற்பித்த காலத்தில் ஆசிரியர்களின் அறையில் இருக்கையில் உட்கார்ந்திருந்தால் கொஞ்சம் அந்தரமாக இருக்கும். அயர்ன் பண்ணி சேர்ட்டு போட்டு வருவது பெரிய விசயமில்லை. சில வாத்திமார் நாள் முழுதும் அது கசங்காமலேயே திரிய வல்லவர்கள். அல்லது அதற்கான உயர் ரக சேர்ட்டுகளை அணியக்கூடியவர்கள். இதற்கிடையில் இடுப்புக்குள்ளால் கொஞ்சம் சேர்ட் எழும்பியிருக்கத் திரியும் மணியம் மாஸ்டரைப் பார்த்தால் மனுசன் கொஞ்சம் கெத்து என்றுதான் தோன்றும்.

மணியம் மாஸ்டர் ஒரு கண்டிப்பான வாத்தியாரும்கூட. ஆனால் மனுசன் மீசாலைப் பிலாப்பழம். பிள்ளைகள் என்றுதான் எம்மை அவர் விளிப்பார். ஓரிரு தடவைகள் நானும் அவரிடம் அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் அவர் அடித்தபோதெல்லாம் சிறிதுகூட எனக்கு வலிக்கவில்லை என்பதை இப்போதுதான் உணர்கிறேன். சில வாத்திமார்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாணவர்களை அடிக்கும்போதெல்லாம் அந்த அடிகளின் வலியைத் தாமும் உணரக்கூடியவர்கள். மாணவர்களான நாங்கள் அடியை வாங்கிவிட்டு அடுத்த சோலியைப் பார்க்கப் போய்விடுவோம். ஆனால் அந்த வாத்திமாருக்கோ தாம் அடித்த அடி நாள் முழுதும் அல்லாடிக்கொண்டிருக்கும். மாணவர்களை அடித்தால், வலியை மாணவர்கள் அனுபவிக்கிறார்களோ இல்லையோ, நல்லாசிரியர்கள் என்றால் அனுபவிப்பார்கள். ஆனாலும் எமக்காக வலியைத் தாங்கியபடி அடிப்பார்கள்.

மணியம் மாஸ்டர் அந்த ரகம்.

தமிழ் திரையுலகில் ரஜனி-கமல்போல தொண்ணூற்றைந்தாம் ஆண்டுக்குப் பிறகான யாழ்ப்பாணத்தில் இரசாயனவியல் கற்பிப்பதற்கு இரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள். ஒருவர் மகாதேவா மாஸ்டர். மற்றவர் இந்த மணியம் மாஸ்டர். எங்கள் வீட்டில் அண்ணாவும் இரண்டு அக்காமாரும் அவர்களின் நண்பர்களும்கூட மகாதேவா மாஸ்டரின் மாணவர்கள். கெமிஸ்றிக்கு மகாதேவாட்ட போடா என்று அக்காவும் அறிவுரை சொல்லிப்பார்த்தார். நான் கேட்கவில்லை. பள்ளிக்கூட நண்பர்கள் பலரும் மணியத்தாரிடம் சென்றதாலும் நானும் அங்கேயே சென்றேன். மணியம் வாத்தியார் யாழ்ப்பாணத்தில் கற்பித்த காலம் முழுதும் அவரிடமே தொடர்ந்து படித்தேன். பல நண்பர்கள் ஒரு பாடத்துக்கு இரண்டு வாத்திமாரிடம் சென்றிருந்தபோதும் நான் மணியத்தாரிடம் மாத்திரமே இரசாயனவியல் படித்தேன். அதற்குப் பல காரணங்கள். ஒன்று, இரசாயனவியல் பாடத்தை எனக்குக் கண்ணிலே காட்டக்கூடாது. அதனை இரண்டு வாத்திமாரிடம் படிக்குமளவுக்கு எனக்குப் பொறுமையில்லை. இன்னொன்று அவருடைய பாட நேரமும் தோதாக இருந்தது. சனி ஞாயிறு காலையில் முதல் வகுப்பு அவருடையது. அது முடித்து வெக்டரைக் கட் பண்ணிக்கொண்டு சந்திரன் மாஸ்டரின் வகுப்புக்குச் சென்றுவிட்டு அந்த ஷோ முடித்துத் திரும்புகையில் பௌதீகவியல் குமரனின் வகுப்பு ஆரம்பிக்கச் சரியாக இருக்கும்.
மணியம் வாத்தியாரிடம் மாத்திரம் நான் இரசாயனவியல் கற்றதன் பிரதான காரணம், அவர் அதனை அளவுக்கணக்கோடு படிப்பித்ததுதான். பாடத்திட்டத்துக்கும் அறிவுக்கும் எது தேவையோ அதை மட்டுமே அவர் சொல்லிக்கொடுப்பார். அப்போதுகூட அதனை மிரட்டாது இலகுபடுத்திக் கற்பிக்கும் ஆற்றல் அவரிடமிருந்தது. இரசாயனம் ஒரு சமுத்திரம் என்றெல்லாம் அவர் அச்சுறுத்துவதில்லை. அசேதன இரசாயனத்தை எளிமையாக அவர் சொல்லிக்கொடுத்தார். எம்முடைய உயர் தர இறுதி ஆண்டில் தனிப்பட்ட தேவைக்காக அவர் நீண்ட நாள்கள் இந்தியா செல்ல நேரிட்டது. அது நம் வகுப்பைப் பொறுத்தவரையில் பேரிழப்புதான்.

மாணவர்களிடையே favouritism பார்க்காத ஒரு சில ஆசிரியர்களுள் மணியம் மாஸ்டரும் ஒருவர். நீ வகுப்பிலேயே முதன்மையான மாணவனா, அல்லது கிரிக்கட் கப்டினா, நீ அதிபருக்கு வேண்டப்பட்டவனா, இது எதையும் அவர் கணக்கெடுக்கமாட்டார். சில வாத்திமாரின் தடிகள் வைத்தியர் பிள்ளையின் குண்டியை மிருதுவாகவும் கடைக்காரர் மகனின் குண்டியைப் பலமாகவும் தாக்க வல்லன. மணியம் வாத்தியாரின் தடிக்கு எல்லாக் குண்டியும் ஒன்றுதான். அதிலும் எவனாவது படம் காட்டினால் போதும். தடி அடி பின்னி எடுத்துவிடும். தன் வகுப்புக்குத் தகுந்த காரணங்களின்றித் தாமதமாக வந்த விளையாட்டு அணித்தலைவன் ஒருவனை அவர் மைதானத்துக்கு மத்தியில் நிற்க வைத்த சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வந்துபோகிறது. திமிர் ஏறி இருப்போரைக் குட்டி அடக்கவேணும் என்று அவர் சொல்வதுண்டு. ஆசிரியரின் கடமை வெறுமனே கற்பிப்பது மாத்திரமல்ல. அறத்தைப் போதிப்பதும்தான். அதனாலேயே அவர் வெறுமனே ஆசிரியர் என்பதிலிருந்து மேலோங்கி குருவாகவும் எமக்குத் தெரிகிறார்.

இப்போதுகூட அவரின் உரையாடலைக் கூர்ந்து கவனியுங்கள். அவரோடு இணைந்து வயலில் மூன்று நான்கு பேர் வேலை செய்கிறார்கள். அதனால் அவருடைய பதில்கள் எல்லாம் நாங்கள், நாங்கள் என்றுதான் இருக்கின்றன. தன்னைவிட மற்றவர்களுக்கு விவசாயம் அதிகமாகத் தெரியும் என்றும் சொல்கிறார். ஒருபோதும் நான் என்ற அகங்காரமே எட்டிப்பார்க்கவில்லை. நாங்க சென். ஜோன்சில படிப்பிச்சனாங்கள் என்றுதான் அவர் சொல்கிறார்.

இது மாமனிதர்தம் மரபு அன்றி வேறேது?

என்னுடைய நண்பர்கள் பலரும் சொல்லும் ஒரு வாசகம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறவேண்டும் என்பது. நான் அதை எப்போதுமே மறுதலிப்பவன். வாழ்க்கையை நம் இயைபுக்கும் விருப்புக்கமைய, இயலுமானவரை மற்றவருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்தலே முக்கியம் என்று நான் அவர்களுக்குச் சொல்வதுண்டு. மணியம் வாத்தியாரின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அது மேலும் உறுதியாகிறது. ஒருவேளை அவர்தான் சிறு வயதில் இதனை மண்டைக்குள் ஏற்றிவிட்டாரோ நானறியேன்.
யாழ்ப்பாணத்தில் பல வருடங்கள் இரசாயனவியல் பாடத்தில் கொடிகட்டிப் பறந்த மனுசன். பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் மனங்களில் நிறைந்திருப்பவர். அவர் நினைத்தால் இப்போதும் தனியார் வகுப்புகளில் வாரத்தின் ஏழு நாள்களும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கற்பிக்கமுடியும். இலட்சங்களில் சம்பாதித்து, நான்கு மாடிகளுக்கு ஒரு வீட்டினைக் கட்டமுடியும். ஆனால் மனுசனுக்கு அது தேவைப்படவில்லை பாருங்கள். தன் ஊரிலே, தனக்குப் பிடித்த விவசாயத்தைச் செய்து இனிதே வாழ்வைப் போக்குகிறார். அதே நெற்றிப்பட்டை. சிவந்த கண்கள். நீல சேர்ட்டு. சாறம். முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த அதே மணியம் மாஸ்டர்.

வாழ்தலினூடு இன்னமும் எமக்கு அறம் போதித்துக்கொண்டிருக்கும் ஞான குரு.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”