ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது.
அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித் தரைக்குப் பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத் தாம் அணியும் உடைகளையும் அணிகலன்களையும் அணிந்து அளவு பார்க்கும் இளம் பெண்கள். எப்போதும் எதற்கோ கடையடிக்கு ஓடித் திரும்பும் இளம் ஆண்கள். இப்படித் திருமணத்துக்காக ஒரு வீட்டில் நிகழும் அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. சமீப காலங்களில் திருமணங்கள் மண்டபங்களில் நிகழ்ந்தாலும்கூட ஒரு வீடு தனக்கான அளவிலே இப்படியான விசேசங்களை இன்னமும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறது.
இவ்வாறான பொழுதுகளில் அயல் வீட்டாரினதும் நண்பர்களதும் பங்களிப்பு என்பது வேறு எவருடைய பங்களிப்பையும்விட அதிகமாக இருக்கும். சொல்லப்போனால் அயல் அளவுக்கு நமக்கு நெருக்கமான, நம் அந்தரங்கங்கள் தெரிந்த, நம் மனதைப் புரிந்துகொண்ட வேறு உறவுகள் இருக்குமா என்பது சந்தேகமே. வீட்டிலே சண்டை என்றாலும் கணவன், மனைவி முதற்கொண்டு ஐந்து வயதுச் சிறுவர்வரை முதலில் ஓடுவது பக்கத்து வீட்டுக்குத்தான். சின்ன வயதில் அம்மா திட்டினால் “அன்ரி…” என்று அலறியபடி நான் வீரசிங்கம் அன்ரி வீட்டுக்கு ஓடிவிடுவேன். அங்கு ஒரு சண்டை என்றால் வீரசிங்கத்தாரைத் திட்டியபடி அன்ரி நம் வீட்டுக்கு வருவார். டியூசனுக்கு பீஸ் கட்ட காசு இல்லை என்றால் அம்மா அன்ரியிடம் வாங்கச்சொல்வார். அங்கு இலாம்புக்கு எண்ணெய் இல்லை என்றால் லலி நம் வீட்டுக்கு வருவான். ஒரு வீட்டில் பங்கிறைச்சி சமைத்தால் மற்ற வீட்டுக்கு எப்படியும் கொஞ்சக்கறி வந்து சேர்ந்துவிடும். எங்கள் வீட்டில் அம்மா வடைக்கு உழுந்து அரைத்தாலே போதும், பக்கத்து வீட்டு விசயன் அண்ணாக்கு வடை வாசம் எட்டிவிடும். எனக்குத் தெரிந்து அம்மா அழும் பொழுதுகளிலெல்லாம் எப்படியோ அன்ரி விசயம் தெரிந்து வீட்டுக்கு வந்து அருகில் இருந்திருக்கிறார். வெளி உலகத்துக்குத் தெரியாத நம் வீட்டு இரகசியங்கள் எல்லாம் நம் அண்டை வீட்டுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அதற்குமேலே அவை கசிந்தும் போவதில்லை. வளரும் காலத்தில் எங்களுக்கு அயல் அளவுக்கு நெருங்கிய சொந்தம் வேறு இருந்ததா என்று தெரியவில்லை. இரத்த உறவுகள் வீட்டுக்கு வந்து போபவை. ஆனால் அயல் நம்மோடே கூட இருப்பது. நம்முடைய நல்லது கெட்டது அறிந்தது. அவர்கள் எப்போதுமே ஒரு படி மேலானவர்கள். அவரவர் தம் வீடுகளிலிருந்து இடம்பெயராமல் இருக்கும்வரைக்கும்.
இதனாலேயோ என்னவோ, வீட்டில் கொண்டாட்டம் என்றாலும் அதிகம் குத்தி முறிபவர்கள் நம் அயலார்தான். அதுவும் திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். மற்ற எல்லோருக்கும் இறுதியாகப் பேசி முற்றாக்கிய மாப்பிள்ளையையோ பெண்ணையோதான் தெரிந்திருக்கும். ஆனால் அயலுக்கோ, முதற்தடவையாக நம் வீட்டுக்கு வந்த திருமணத் தரகர் தொடங்கி, வரிசையாகப் பிழைத்துப்போன சாதகக் குறிப்புகளும், புகைப்படங்களும் அவ்வப்போது அந்த வீட்டுப் பெண்ணுக்கு நூலு விடும் பெடியன்களின் விபரங்களும் காதல் சங்கதிகளும்கூடத் தெரிந்திருக்கும். சிலவேளை அவர்களே ஒழுங்கை வாசலில் அப்படி யாரையாவது கண்டால் ஏசித் துரத்திவிடுவதுமுண்டு. அப்படிப்பட்ட அயலவர்கள் எங்கள் வீட்டுத் திருமணம் என்றால் சும்மா இருப்பார்களா? தங்கள் வீட்டுப் பிள்ளைக்குத் திருமணம் என்பதுபோல அவர்களிடம் ஒரு உற்சாகம் தொற்றிவிடும். இழுத்துப்போட்டு வேலை செய்வார்கள். உரிமையாக எல்லோருக்கும் ஆணை பிறப்பிப்பார்கள். நம்மைக் கேட்காமல் அவர்களாகவே முடிவுகளையும் எடுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்குத்தான் நாம் எண்ணம் சிந்தனை எல்லாம் அத்துப்படியாயிற்றே.
இப்போது திருமணத்துக்கான நாள் எட்டிவிட்டதா. திடீரென்று நம் இரத்த உறவுகள் எல்லாம் வீட்டுக்கு ஊர்வலம் எடுக்க ஆரம்பிக்கும். மாமா, மாமி, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, ஒன்றுவிட்ட அண்ணா, அக்கா என ஒவ்வொருவரும் குடும்பமாக வர ஆரம்பிப்பர். எல்லோருமே நெருங்கிய உறவுதான். எல்லோருக்குமே அந்த வீட்டில் அபரிமிதமான உரிமையும் உறவும் முக்கியத்துவமும் இருக்கிறதுதான். அதே சமயம் அவர்கள் தம் உரிமையையும் முக்கியத்துவத்தையும் அந்தச் சந்தடிக்குள் காட்டிக்கொள்ளவும் முயற்சி செய்வார்கள். தாமின்றி அந்தத் திருமணத்தில் அணுவும் அசையாது என்பதை உணர்த்திக்கொண்டேயிருப்பார்கள். அசையவும் விடமாட்டார்கள். எக்கணம் எங்கேயாவது அவர்களுக்கான முக்கியத்துவம் சிறு மாற்று குறைந்துவிட்டது என்று அவர்களுக்குத் தோன்றிவிட்டால் கதி அந்தோ கதிதான். அங்கு பிரளயமே ஆரம்பித்துவிடும். என்னைக்கேட்டால் திருமணவீட்டுக்கு முதல் நாள் மாமியோ அத்தையோ தூரத்து அக்காளோ அழுது அரற்றாவிட்டால் அது ஒரு திருமணவீடே இல்லை என்பேன்.
ஆனால் உறவுகளுக்குள் எப்போதுமே இருக்கின்ற இந்த possesiveness அயலவரிடம் இருப்பதில்லை. அவர்கள் தன்பாட்டுக்குத் தன்வீடுபோல நம் வீட்டுச் சமையலறைவரை வந்து அடுப்பில் கேத்திலை வைத்து தேநீர் ஊற்றி வந்தவர்களுக்குக் கொடுப்பார்கள். எல்லோரிடமும் நெருக்கமாகப் பழகுவார்கள். பகடிகள் விடுவார்கள். உரிமையாகத் திட்டுவார்கள். ஆனால் இதையெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணத்துக்கென்று வீட்டுக்கு வந்த உறவு பேசாமல் பார்த்துக்கொண்டிருக்குமா? அதுவும் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கியோ, சொந்த நகையை உருக்கிப் புது நகையைச் சரி செய்து திருமணப் பரிசாகக் கொடுக்கத் தயாராகியிருக்கும் சொந்தம்தான் சும்மா இருக்குமா? நீ ஆர் எனக்கு தேநீர் ஊற்றித்தருவது என்ற கோபம் அதற்கு வருமா வராதா?
உறவு அயலை எரிச்சலுடன் அவமானப்படுத்தி வசை பாட ஆரம்பிக்கும்.
சில தினங்களுக்கு முன்னர் திருச்செந்தாழை எழுதிய ‘கீறல்’ என்ற சிறுகதையைப் படித்துக்கொண்டிருந்தேன். அயலுக்கும் உறவுக்குமிடையிலான இந்த நூதனமான உளவியலை திருமணத்துக்கு முதல் நாள் ஒரு வீட்டில் நிகழும் களேபரங்களுக்கூடாக ‘கீறல்’ சிறுகதை பேசுகிறது. ஒரு சிறுவனின் கோணத்தில்தான் கதை நிகழ்கிறது. அவனுடைய அக்காளுக்குத் திருமணம். அவர்கள் வீட்டுக்கு சில வீடுகள் தள்ளி வாழும் வேலுமணி அத்தை என்பவர் அந்தத் தெருவிலிருக்கும் மொத்தக் குடியிருப்புக்குமே அத்தை. அவர் எல்லோரிடமும் அன்பாகவும் இருப்பார். ஆனால் அதில் சிறு கண்டிப்பு இருக்கும். எந்த வீட்டுக் குழந்தையையும் தன் குழந்தைபோலக் குளிப்பாட்டி ஆகாரம் ஊற்றுவார். அவருக்கு எல்லா வேலைகளையும் எப்படிச் செய்யவேண்டுமென்றும் தெரியும். பந்தல்காரருக்கும் அறிவுரை சொல்வார். காலம் காலமாகச் சமையல் செய்யும் பாட்டிக்கும் உப்பு தேவையான அளவு எவ்வளவு என்று சொல்லிக்கொடுப்பார். அந்தச் சிறுவனின் குடும்பம் மட்டுமின்றி அவர்களின் உறவுக்காரர்களையும் அவர்களின் குணங்களையும்கூட தீர அறிந்தவர் அவர். அச்சிறுவனுக்கும் வேலுமணி அத்தை என்றால் போதும். ஊரிலிருந்து சொந்தச் சித்தி வீட்டுக்கு வந்திருந்தாலும் அவன் அத்தையுடன்தான் நெருங்கிக்கொண்டு நிற்பான். எதுவென்றாலும் அவரிடம்தான் போய் நிற்பான். சும்மா நாட்கள் என்றால் பரவாயில்லை. சித்தி வந்து நிற்கும்போது சித்திக்கு முன்னாலேயே அத்தையிடம் சென்றுகொஞ்சிக்கொண்டிருந்தால் சித்தி சும்மா இருப்பாரா? அந்த வீட்டு ஆண்கள் எல்லோரிடமும் அத்தை இயல்பாகப் பேசிப் பழகுகையில் எங்கிருந்தோ வந்த சித்திக்கு அது உறுத்தாதா? யாரென்றே தெரியாத நீ என் வீட்டில் வந்து எனக்கு முன்னாலேயே உன்னுடைய வள்ளலைக் காட்டுகிறாயா என்று சித்தி கறுவுகிறாள். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, சிறிதாக ஆரம்பித்த அடுப்புத் தணல் கொழுந்துவிட்டு எரிந்து, சமயத்தில் வெடிப்பதுபோல ஒரு கட்டத்தில் சித்தி அத்தையோடு கோபத்தில் கத்திவிட, சித்தியின் கணவர் அதற்காக சித்திமீது கோபப்பட, சித்திக்கு அடுப்பு விறகோடு சிரட்டையும் சேர்ந்து வெடிக்கிறது.
ஈற்றில் வேலுமணி அத்தை அழுதுகொண்டே வீட்டைவிட்டு வெளியேறுவார்.
எத்தனை அழகான கதை இது. திருச்செந்தாழை அவருக்கேயுரிய அழகான கவிதைமொழியில் இக்கதையைச் சொல்லியிருப்பார். கதை சொல்லி ஒரு சிறுவன். அவனுக்கு விலாவாரியாக இந்த உளவியல் புரியாதல்லவா? அதனால் கதையும் மிகப் பூடகமாகவே சொல்லப்பட்டிருக்கும். ஒரு தேர்ந்த எழுத்தாளரின் ஆற்றல் அது.
வேலுமணி அத்தை அழுதுகொண்டே வெளியேறும்போது அவரது கணவன் அவளுக்கு ஆறுதல் சொல்லியபடியே பின்னால் ஓடுவதோடு திருச்செந்தாழை கதையை முடித்திருப்பார். எனக்கு அதனை வாசிக்கும்போது சின்னதாகச் சிரிப்பு வந்தது. அதற்குப் பின்னர் அந்த அத்தை வெகு நேரம் தன் வீட்டில் அழுதுகொண்டு இருக்கப்போவதில்லை. இனி நான் அந்த வீட்டு வாசற்படியே மிதிக்கப்போவதில்லை என்று சபதமிடப்போவதில்லை. சில நாழிகைகளிலேயே இந்த வீட்டு அம்மாவோ, பவுனுவோ. ஆச்சியோ அவரைத் தேடிப்போவார்கள். “முறுக்கு சுடுவதற்கு ஒரு கை வேணும், உனக்குத்தானே அதன் பதம் தெரியும், வாடி பிள்ள” என்று ஆச்சி அவரை அழைக்கலாம். “அந்த நாச்சி எப்பவும் அப்படித்தான், ஒரு வெகுளி, தெரியாமல் பேசிட்டுது, நீ பெரிய மனுசி, அத மனசில வைக்கலாமா?” என்று ஆச்சி சொல்லக்கூடும். வேலுமணி அத்தையும் கண்ணீரைத் துடைத்துவிட்டு எதுவுமே தெரியாததுபோல ஆச்சியிடம் மறுமொழி சொல்வார்.
“முறுக்கு தட்டிப்போட முள் முருக்கை இலை வெணுமல்லோ, நீங்க போங்கோ ஆச்சி, நான் பின் வளவு மரத்தில ஆஞ்சுகொண்டு பின்னாலேயே வாறன்”
அவ்வளவுதானே வாழ்க்கை.
*****
Comments
Post a Comment