Skip to main content

மனோ யோகலிங்கம்


சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்.

2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பன்னிரண்டு வயதில் இந்த நிலத்துக்கு வந்த சிறுவனைப் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னர், அவனுக்குப் பரிச்சயமேயில்லாத நிலத்துக்குத் திருப்பி அனுப்புவது என்பது எவ்வளவு மோசமான ஒரு மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்பது நாம் அறியாததல்ல. அறியாத வயதில் தன் பெற்றோரோடு படகில் வந்தனை அவன் படித்து, வளர்ந்து இளைஞனான பின்னர் திருப்பி அனுப்புவது என்பது எந்தவிதமான தார்மீக நெறிகளுக்கும் அடங்காதது. ஆனால் அரசியல்வாதிகள் தமது ஆதாயத்துக்காகப் பொதுப்புத்தி மனநிலையில் இவ்வகையான கொடூரச் செயல்களைச் செய்கின்றனர். சில காலத்துக்கு முன்னர்கூட இந்த நிலத்தில் பிறந்த குழந்தைகளைக் கொண்ட பிரியா-நடேஸ் குடும்பத்தை வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்ப அரசாங்கம் முயற்சி செய்ததை யாருமே மறக்க முடியாது. இப்படியான பாதகச் செயல்களை அடுத்தடுத்து ஆட்சிக்கு வருகின்ற அத்தனை அவுஸ்திரேலிய அரசாங்கங்களும் வெட்கமின்றிச் செய்துகொண்டிருக்கின்றன. அப்படியே ஒரு கட்சி கரிசனை காட்ட ஆரம்பித்தாலும் மற்றக் கட்சி துள்ளிக்குதிக்க ஆரம்பித்துவிடும். இதனாலேயே சின்னக் கழிவிரக்கம்கூடக் காட்டாமல் அமைச்சர்கள் இயங்குகிறார்கள். பூர்வீகக் குடிகளைத் தவிர்த்து இங்கு வாழும் அத்தனை பேருமே இந்த நிலத்துக்குள் அனுமதியின்றிப் பிரவேசித்தவர்கள், அல்லது அப்படிப் பிரவேசித்தவர்களின் அனுமதியில் உள் நுழைந்தவர்கள் என்பதை நாம் எளிதில் மறந்துவிடுகிறோம்.

மனோபோல மிக இள வயதில் வந்து, பல வருடங்களாகத் தொடர்ந்து தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படும் நிலையில் பல பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்களுள் சிலரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். பல நண்பர்கள் வேறு வழியின்றித் திரும்பிச்சென்றுமிருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் போரில் குண்டுத்தாக்குதல்களில் காயமுற்றவர்கள். ஷெல் துண்டு ஒன்று தலையில் பட்டு மூளையின் ஒரு பகுதி வெளியே வந்து, அது மூடித் தையலிடப்பட்ட, யுத்தத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் சென்ற வருடம் திரும்பிச்சென்றார். இன்னொரு நண்பன் மனோபோல இளவயதில் வந்தவன், அவனும் ஈற்றில் ஊர் திரும்பவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஒரு சில நண்பர்கள் எப்போது திருப்பி அனுப்பப்படுவோமோ என்ற அச்சத்தில் இன்னமும் வாழ்பவர்கள்.

அவர்களுக்கென்ன, ஊருக்குத் திரும்பி வரவேண்டியதுதானே, ஊரில் இப்போது என்ன பிரச்சனை என்று பலருக்குத் தோன்றக்கூடும். அதுவல்ல இங்கே சிக்கல். இந்த மனிதர்கள் எல்லோரும் பிறந்தது முதல் நிலையற்ற எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தோடு வாழ்ந்து வருபவர்கள். போரும், அதற்குப் பின்னரான முகாம் வாழ்வும், தம் உடைமைகளை எல்லாம் விற்று வெளியேறிய படகுப் பயணமும், நிச்சயமற்ற இந்தப் பன்னிரண்டாண்டு அவுஸ்திரேலிய வாழ்வும், உறவுகளும் நம் சமூகமும் மலையட்டைகள்போல அவர்களின் இரத்தைத்தை ஏலவே உறிஞ்சி எடுத்துவிட்டன. ஒரு நிலத்தில் முளைத்த செடி திக்கித் திணறிக் கடல் தாண்டிவந்து இன்னொரு புதிய நிலத்து மண்ணில் வேர் விட்டு வளர எத்தனிக்கிறது. இப்போது திடீரென்று மறுபடியும் அதனைப் பிடுங்கிக் கொண்டு சென்று பழைய நிலத்திலே நடுவதென்றால் அந்தச் செடிதான் என்னாகும்?

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு நீதி கோரும் அமைப்புகள் கடந்த பல வாரங்களாக அவுஸ்திரேலிய அரசுக்கெதிராக தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றன. மனோ இப்போராட்டங்களில் இடையறாது பங்கெடுத்தவர். தவிர அவர் மெல்பேர்னில் அமைந்திருக்கும் உள்துறை அமைச்சு அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற தொடர் போராட்டத்தின் பிரதான ஒருங்கமைப்பார்களுள் ஒருவராகவுமிருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் விரக்தியில் விளிம்புக்குச் சென்றுதான் அவர் இந்தத் தீக்குளிப்பு முடிவை எடுத்திருக்கவேண்டும். அப்படி ஒரு முடிவை அவர் எடுக்காமலிருந்திருக்கலாம். ஆனால் மன அழுத்தத்தில் அவர் அப்படிச் செய்ய நேர்ந்தது என்பது சமூகமாக ஒரு வகையில் நமது தோல்வியும்கூட. இச்செய்தி இந்நாட்டு ஊடக வெளியில் ஓரளவுக்குக் கவனத்தை ஈர்த்து அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது. போராட்டங்கள் வலுவடைந்திருக்கின்றன. ஒவ்வொரு ஞாயிறும் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக நிகழும் போராட்டத்தோடு கூடுதலாக இந்தப் போராட்டமும் இந்நிலத்தில் தொடர்ச்சியாக இடம்பெறத் தொடங்கியுள்ளது. ஆயினும் தமிழ் ஊடக வெளியில் இந்த விடயம் வெறும் செய்தி என்ற அளவிலேயே பதியப்படுகிறது. நம்முடைய பிள்ளை ஒருவன் தீக்குளித்து இறந்திருக்கிறான் என்ற செய்திகூட பல தமிழர்களுக்குத் தெரியாது என்பது கவலைக்குரிய விடயம். தெரிந்தவர்கள்கூட அதனை மிக எளிதாகக் கடந்துபோகிறார்கள். மரணங்கள் மலிந்த சமூகத்திலிருந்து வந்ததாலோ என்னவோ நம்மருகில் நிகழ்ந்த ஒரு தீக்குளிப்பின் வெம்மையைக்கூட உணராவண்ணம் நம் தோல்கள் மரத்துக்கிடக்கின்ற. கைவிட்டு எண்ணக்கூடிய தமிழ் அமைப்புகள் சில இது பற்றி கூட்டம் போட்டும் அறிக்கைகள் விடுத்தும் கவன ஈர்ப்பைச் செய்கின்றன. ஆனால் சாதாரண மக்கள் மத்தியில் இவ்விடயம் பேசப்படவில்லை. ஈழத்திலும் தமிழ்நாட்டிலும்கூட ஏனைய பரபரப்புச் செய்திகளுக்கு நடுவில் எங்கோ ஒரு மூலையில் பெரிதாகப் பிரபலமில்லாத, தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மனோ யோகலிங்கம் என்ற இளைஞனின் உயிரிழப்பு ஆழ அமிழ்ந்துவிட்டது.

அகதிகள் தொடர்பான அரசுகளின் கொள்கை முடிவுகளைத் தொடர்ந்து கேள்வி கேட்பது ஓர் ஏதிலிச் சமூகமாக இந்நிலத்துக்கு வந்தவர்கள் என்ற வகையில் நம் கடமை என்றே தோன்றுகிறது. குறிப்பாக அரசுகளிடமிருந்து மானியங்களைப் பெற்றுக்கொள்ளும், அமைச்சர்களின் வரவைப் பறை சாற்றி அவர்களோடு நின்று புகைப்படம் எடுப்பதைப் பெருமையாகக் கொள்ளும், பிரதமரோடு தோள்மீது தோள் போட்டு நட்பு பாராட்டுமளவுக்கு உறவு வைத்திருக்கும் சங்கங்கள் இதுபற்றித் தொடர்ந்து குரல் கொடுக்கும்போது அதற்குப் பதில் அளிக்கவேண்டிய தார்மீக நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்படுகிறது. எந்த நிபந்தனையும் விமர்சனமும் வைக்காமல் ஒரு சமூகமாக மானியங்களை மாத்திரம் வேண்டிக்கொண்டிருந்தால் அரசியல்வாதிகள் நம்மைச் செம்மறிகளாகத்தான் மதிப்பார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. தனிப்பட்ட நபர்களாக நாம் நம்முடைய உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினருக்குக் கடிதங்களை அனுப்பலாம். சில வாரங்களுக்கு முன்னர் எங்களுடைய வீட்டுக்குப் பிரசாரத்துக்கு வந்த பிரதானக் கட்சி வேட்பாளரிடம் அவருடைய கட்சிக் கொள்கைகள் சார்ந்து முழுமையான விமர்சனத்தை என்னால் பேசமுடிந்தது. இப்படி எல்லோரும் உரையாடும்போது தமக்கு வாக்களிக்கும் மக்களின் சிந்தனை எப்படி இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவரும். நாம் வெறும் மந்தைகள் இல்லை என்பது புரியவரும். அவுஸ்திரேலியத் தேர்தலில் இருக்கின்ற “preferential voting” என்ற முறைமையைப் பயன்படுத்தி நாம் நம் கொள்கைகளுக்கு நெருக்கமாக இருக்கின்ற சிறு கட்சிகளை ஊக்குவிக்கலாம். வாக்குகள் பிரிபடும் என்ற அச்சமில்லாமல் பிரதானக் கட்சிகளுக்கு எம்மால் பாடங்களைக் கற்பிக்க முடியும். இத்தேர்தல் நடைமுறைகளைத் தமிழில் விளக்குகின்ற கூட்டங்களைச் சங்கங்கள் ஒழுங்கமைத்தால் என் போன்றவர்களும் அவர்களுக்கு உறுதுணையாக நின்று அது பற்றிய விளக்கங்களைக் கொடுக்கமுடியும்.

இருபத்து மூன்று வயதில் உயிரிழந்த மனோ இருந்திருந்தால் அவர் வாழ்ந்து களித்திருக்கக்கூடிய அவருடைய அடுத்த ஐம்பதாண்டு வாழ்க்கை முன்னே விரிந்து மனதை இறுக்குகிறது. இப்படியொரு நிலை அவருக்கு வந்திருக்கவேண்டாம். இப்பொடியொரு நிலை யாருக்கும் இனி வரவும் வேண்டாம்.

*****

Comments

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .