Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரை

மணியம் மாஸ்டர்

வழமையான யாழ்ப்பாணத்துக் காணொளி ஒன்று. தென்மராட்சி வயல் காட்டுப்பக்கம் ஒரு ஐயாவைப் பேட்டி எடுக்கிறார்கள். நரை விழுந்த தோற்றத்தோடு, நெற்றியில் பட்டைத் திரு நீறும் நம் ஊருக்கேயான மென் நீல வண்ண சேர்ட்டும் சாறமும் அணிந்தபடி சக நண்பர்களோடு வயலில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். நேர்காணல் எடுப்பவர் அவரிடம் எத்தனை ஆண்டுகளாக வயல் வேலை செய்கிறீர்கள் என்று கேட்க, ஐயா சொல்கிறார். எனக்கு எழுபத்தொரு வயது. அம்பது வரியமா நாங்கள் வயலுக்கதான் நிக்கிறம். அப்ப வயல்தான் மெயினா செய்யிறனீங்களா? நாங்க டீச்சர். இப்ப ரிட்டயர் ஆயிட்டம். ஆனால் எப்பவுமே வயல்தான். எந்த ஸ்கூலில படிப்பிச்சனிங்கள் ஐயா? நாங்கள் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கொலிஜில படிப்பிச்சனாங்கள். எனக்கு உடல் உடனேயே கிறுகிறுத்தது. இது எங்கட மணியம் மாஸ்டர் அல்லவா? ***** பரி. யோவானின் ஒரு சில misfits வாத்திமார்களில் முதன்மையானவர் இந்த மணியம் மாஸ்டர். அதனாலேயே எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். மீசாலை ஒரு C90 மோட்டார் சைக்கிளில் கொஞ்சம் லேட்டாகத்தான் தினமும் அவர் பாடசாலைக்கு வருவார். நீண்ட தூர மோட்டர் சைக்கிள் பயணத்தால் அவருடைய கால்கள் எல்லாம் புழுதி பட...

மழை நாளில் 'என் கொல்லைப்புறத்துக் காதலிகள்'

ஒரு மாதத்துக்கு முன்னர் நண்பன் ஒருவன் தன் வீட்டில் பெய்த மழையைக் காணொளி எடுத்துப் பகிர்ந்திருந்தான். நான் பிறந்து வளர்ந்த ஊரான தின்னவேலியில் பெய்த மழை அது. மல்லிகைப் பந்தல், வாழை, செவ்வரத்தை, நெல்லி, பூங்கன்றுகள், இடையே நாய்க்கூடு எனச் சூழ்ந்திருந்த அந்த மிக அழகான வீட்டு முற்றத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. தின்னவேலி மழை எப்போதுமே அண்டாவைக் கவிழ்த்துக்கொட்டுவதுபோலத்தான் பெய்யும். நான் அன்று அவனுக்கு இப்படி ஒரு கருத்து இட்டேன். வெள்ளம் தேங்கி வீடு கசியாதவரைக்கும் தின்னவேலியின் மழை மிக அழகுதான். ஏன் அப்படிச் சொன்னேனோ தெரியாது. ஆனால் இதனைச் சொல்லிய சில வாரங்களிலேயே தீவு முழுதும் மழையும் வெள்ளமும் நிலச்சரிவும் பெருங் கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டன. மழை நம் வீட்டுக்குள் நுழையாதவரைக்கும்தான் அழகு. அப்புறம் அது ஒரு கொடிய அரக்கியாகிவிடுகிறது. சிரங்கு. முட்டு. கக்கூஸ் அடைப்பு. நுளம்பு. காயாத உடுப்பு. மின் வெட்டு. நிலமெல்லாம் கசிந்து சகதி ஆவது. இவை எல்லாமே சிறு வெள்ளத்துக்கே வந்து சேரக்கூடிய துன்பங்கள். நிலம் சரிந்து மொத்த வீடுமே அமுங்குவதும் குழந்தைகள் உள்ள வாகனங்கள் அடித்துப்போவதும் பெரு வெள்ளத்த...

படலை பொட்காஸ்ட்

சில வருடங்களாகவே பொட்காஸ்ட் தொடர் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்றொரு ஆர்வம் உள்ளூற ஊறிக்கொண்டிருந்தது. அது நான் தொடர்ச்சியாகக் கேட்டுப் பயனடைந்துகொண்டிருக்கும் சில பொட்காஸ்டுகளின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்று. The History of Literature, Paris Review, The New Yorker Fiction, The New Yorker Writer’s Voice, Not Stupid, The Minefield, If You’re Listening, Ladies We Need to Talk என்று பல பொட்காஸ்ட் தொடர்களின் ஆதர்ச இரசிகன் நான். இந்த பொட்காஸ்டுகள் அனைத்துமே ஆழமான விசயங்களையும் அன்றாட விசயங்களையும் மிக இயல்பாகவும் முன்முடிவுகள் இல்லாமலும் அலசுபவை. கேட்கும்தோறும் புதியவற்றை நமக்கு அறிமுகப்படுத்துபவை. பெரும்பாலானவற்றுக்குக் காணொளிகளும் இல்லை. வெறுமனே ஒலி மாத்திரம்தான். நடைப்பயிற்சியின்போதும் நீண்ட தூரப் பயணங்களின்போதும் காதுகளில் ஒலிக்கவிட்டால் நேரம் கரைவதே தெரியாது. பல சமயங்களில் புதிய அத்தியாயங்களைக் கேட்பதற்காகவே நடைப்பயிற்சிக்குப் போன சம்பவங்களும் உண்டு. அத்தனை அலாதியான அனுபவத்தையும் தேடலையும் கொடுப்பவை இவை. இவ்வாறான பொட்காஸ்டுகளை செய்வதற்கு முன்னர் பெருந்தேடலும் தயார்படுத்தலும் தேவை என்று தோன்றி...

ஆறிடும். ஆறாது.

சில வாரங்களுக்கு முன்னர் எனக்கு மிக நெருக்கமான அக்கா ஒருவர் ஒரு வார்த்தை சொன்னார். அது என்ன வார்த்தை என்பதோ சொல்லப்பட்ட சூழலோ அவ்வளவு முக்கியமில்லை. ஆனால் அது என் ஆழ் மனதை மிகவும் பாதித்துவிட்டது. அவர் அப்படியொன்றும் மோசமாக எதையும் சொல்லவில்லை. அது சாதாரணமாகக் கடந்துபோகவேண்டிய ஒன்றுதான். ஆனால் என் நுண்ணுணர்வை அது தாக்கிவிட்டது. பிறரிடம் கடமைப்படுவது என்பது எனக்குக் கொல்லக்கொண்டுபோவதுபோல. அதனால் மனம் சஞ்சலத்தோடு அலைந்தது. அந்த மன அங்கலாய்ப்பு அர்த்தமற்றது என்று புத்தி எனக்குப் பாடம் புகட்டியது. ஆனால் என் மனதினால் அதனை விட்டுத்தள்ளமுடியவில்லை. நாள் முழுதும் அது புலம்பிக்கொண்டேயிருந்தது. அடுத்த நாளே, சொல்வழி கேட்கமாட்டாயா என்று புத்தி என் மனதைக் குட்டி அடக்கியதால் மனம் கூண்டுக்குள் பதுங்கிய நாய்க்குட்டியாட்டம் ஒடுங்கிவிட்டது. ஆனால் இரு வாரங்கள் கழித்து, புத்தி வேலைக்குப் போயிருந்த சமயம் மனம் கூண்டுக்குள்ளிருந்து மறுபடியும் வெளிவந்து வேலையைக் காட்டிவிட்டது. ஏனென்று தெரியவில்லை. சாதாரண விசயம்தான். சனியன்போல அலைக்கழிந்தது. சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது என்று ஒரு பாட்டு இருக்கு. கன்னி மனத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

கலைஞர்களின் சொர்க்கம்

மொன்மார்த் (Montmartre) என்பது பாரிசின் மையத்திலிருந்து சற்றுத்தள்ளியிருக்கும் சிறு மலைப்பகுதியாகும். நவீனத்துவத்தின் முக்கிய பல கலைஞர்களான வான்ங்கோ, பிக்காசோ போன்றவர்களின் புகலிடமாக இந்த ஊர் திகழ்ந்திருக்கிறது. பாரிஸ் நகரத்தின் அன்றாடங்களிலிருந்து சற்று வேறான, பொதுப் புத்தியிலிருந்து விலகிய கலையுள்ளங்களை ஊக்குவிக்கும் நகரமாக மொன்மார்த் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே இருந்துள்ளது. பாரீசைப்போன்றில்லாமல் இங்குதான் எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் மனிதர்கள் தன்னோடு நட்போடு பழகியதாக வான்ங்கோ குறிப்பிட்டிருக்கிறார். இங்கிருந்த ஒரு காலப்பகுதியில் எழுபது நாட்களில் எண்பது ஓவியங்கள்வரை மனுசன் வரைந்து தள்ளியிருக்கு. இம்பிரனிசம், கியூபிசம், சரயலிசம் போன்ற கலை வடிவங்கள் முகிழ்வதற்கு ஏது செய்த ஊரென்றும் இதனைச் சொல்லமுடியும். இன்றைக்கும் மொன்மார்த் நகரம் கலைஞர்களின் சொர்க்கமாகத்தான் திகழ்கிறது. இங்கு ஓவியர்களுக்கான திடல் ஒன்று காலை வேளைகளில் உயிர் பெறுகிறது. பல்வேறு ஓவியர்கள் அங்கு உட்கார்ந்து ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பதை நாம் நேரடியாக கண்டு வியக்கலாம். அவர்களின் கண்களும் விரல்களும் ஒருசேர இணைந்து இயங்கு...

லெ. முருகபூபதி

பெருமதிப்புக்கும் பேரன்புக்குமுரிய லெ. முருகபூபதியைப்பற்றி முன்னமும் பலமுறை எழுதியும் பேசியுமிருக்கிறேன். எழுத்தை என்னுடைய இரண்டாவது துறையாகத் தேர்ந்தெடுத்த காலத்திலிருந்து என்னிடத்தில் அன்பும் பரிவும் காட்டிவரும் மூத்தவர் அவர். ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் ‘புல்வெளி தேசம்’ தொடரை எழுதிய நாட்களில்தான் எனக்கு முருகபூபதியின் பெயர் பரிச்சயத்துக்கு வந்தது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிவந்த புதிதில் நானும் கேதாவும் சேர்ந்து கேசி தமிழ் மன்ற நிகழ்வொன்றில் ‘குற்றவாளிக் கூண்டில் நல்லூர் முருகன்’ என்றொரு வழக்காடு மன்றம் செய்திருந்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த முருகபூபதி ‘நீங்கள் கொஞ்சம் விவகாரமான ஆட்களாத் தெரியுது’ என்று தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது ஜீவநதி சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அதற்கு ஒரு சிறுகதை எழுதித்தரமுடியுமா என்றும் அவர் கேட்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு வரும்படி அழைப்பெடுத்துச் சொல்வார். ஒருமுறை அவரோடு சேர்ந்து சிட்னிவரை ஒரு கூட்டத்துக்குச் சென்று திரும்பினோம். அவருடைய பல புத்தக வெளியீடுகளில் உரையாற்ற...

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

தவக்களை அண்ணை

தின்னவேலி மரக்கறிச்சந்தை வழமைபோலப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. கொழுத்தும் வெயிலிலும் மரக்கறிகளாலும் பழங்களாலும் நிறைந்த கட்டடம் குளிர்மையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் முருங்கைக்காய்கள் குவிந்திருந்தன. விலையும் மலிந்துபோய். கிலோ நூறு ரூபாய்க்கு நல்ல இளங் காய்களை வாங்கக்கூடியதாக இருந்தது.

குமரன் வரக்கூவுவாய்

நல்லூர்க் கோயிலின் உள் வீதி. மெல்லிருள் சூழ் வசந்த மண்டபத்தருகே அமைந்திருக்கும் கற்தூண் ஒன்றுக்கடியில் சாய்ந்து அமர்ந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்து ஆடி வெயில் நாள் அது. அதிகாலை வெக்கையில் வெறும் மேலில் வியர்வைத் துளிகள் புன்முறுவல் பூக்க ஆரம்பித்திருந்தன.

லாஹிரியைச் சந்தித்தல்

ஜூம்பா லாகிரியை நேரிலே பார்க்கப்போகிறேன் என்ற பரவசம் காலையிலேயே ஆரம்பித்துவிட்டது .  

தீண்டாய் மெய் தீண்டாய் : மயிலான்

“புஞ்சிரி தஞ்சி கொஞ்சிக்கோ. முந்திரி முத்தொளி சிந்திக்கோ, மொஞ்சனி வர்ண சுந்தரி வாவே. தாங்குனக்க தகதிமியாடும் தங்க நிலாவே. தங்க கொலுசல்லே குருகும் குயிலல்லே மாறன மயிலல்லே”

நிலத்திலும் பெரிதே

வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் இடம்பெற்ற முத்தமிழ் அரங்கில் மேடையேறிய மூன்றாவதும் இறுதியுமான சங்கப்பாடல். இதைப்பற்றி நான் எழுதியே ஆகவேண்டும். குறுந்தொகையில் இடம்பெறும் இந்தக் குறிஞ்சித் திணைப் பாடலின் காட்சி இப்படி விரிகிறது. தலைவியைத் தேடி வந்திருக்கும் தலைவன் அவள் முன்னே தோன்றாது விளையாட்டுக்காக வேலியின் அப்புறமாக ஒளிந்திருக்கிறான். இதனைத் தோழி கண்டுவிட்டாள். தோழிக்குத் தலைவன்மீது கொஞ்சம் கோபம். என்னடா இவன், எப்போது பார்த்தாலும் இவளே கதியென்று அலைகிறானே, ஆனால் தலைவியைக் கைப்பிடித்து மணம் செய்து கூடி வாழவேண்டுமே என்ற சிந்தையே இவனுக்கு இல்லையே என்று அவள் பொருமுகிறாள். அதனால் அவனுக்குக் கேட்கும்வகையில் தலைவியிடம் தலைவனைப்பற்றிப் பழி சொல்கிறாள். ஆனால் அதைக்கேட்ட தலைவி வெகுண்டெழுந்துவிட்டாள். ‘என்ன பேச்சு பேசுகிறாய், நம் நட்பு எத்தனை உயர்ந்தது தெரியுமா?’ என்று தோழிக்குத் தலைவி விளிப்பாள். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தேவகுலத்தார் பாடிய பாடல் இது. நிலத்தினும் பெரிதே, வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே. இப்...

தமிழர் திருநாள் கொண்டாட்டம்

கடந்த சனியன்று விக்டோரிய மாநிலத்தில் தமிழ் அமைப்புகள் கூட்டுச்சேர்ந்து நடத்திய தமிழர் திருநாள் கொண்டாட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. பெருந்திருவிழாபோல வடிவமைக்கப்பட்ட அந்நாளில் வெளியரங்குகள், உள்ளரங்குகள் என பல தளங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றன. அரங்குகள் என்று பன்மையில் சொல்வதன் காரணம், வெளியரங்குகளிலேயே விளையாட்டுகளுக்கான மைதானம் ஒன்று, அங்காடிகளுக்கான ஒழுங்குகள், பொதுமேடை எனப் பலவும் இருந்தன. உள்ளரங்குகளிலும் இரண்டு மண்டபங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கான திட்டமிடலே பிரமிக்கவைத்தது.

அலைமீது விளையாடும் இளந்தென்றல்

காதல் கவிதை திரைப்படம். தேம்ஸ் நதியின் படகொன்றில் நாயகனும் நாயகியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். சூழவும் இலண்டன் மாநகரின் அழகிய கட்டடங்கள். அப்போது சட்டென்று பவதாரிணியின் குரல் ஒலிக்கும். “அலைமீது விளையாடும் இளந்தென்றலே. அலைபாயும் இரு நெஞ்சைக் கரை சேர்த்துவா”

வரலாறு எனும் பரத்தன்

செங்கை ஆழியானின் "ஈழத்தவர் வரலாறு" என்ற நூலின் எட்டாவது அத்தியாயம் “நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம்”. Buckle up folks! கைலாயமாலையின் தனிப்பாடல் ஒன்றில் வரும் வரிகள் இவை. “அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகும் யாழ்ப்பாண நகரி கட்டுவித்து நல்லைக் குல்விய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே.” பத்தாம் நூற்றாண்டில் கந்தவேளுக்கு கோயில் கட்டி புவனேகபாகு A அழகு பார்த்திருக்கிறான். அது பூநகரியிலிருக்கும் நல்லூர் என்கிறார் செங்கை ஆழியான். காரணம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அச்சமயம் பௌத்த செல்வாக்கும் சிங்கள மக்களதும் ஆதிக்கம் மேலோங்கி வந்ததால் உக்கிரசிங்க மன்னன் கந்தரோடையைக் கைவிட்டு சிங்கை நகருக்கு இடம்பெயர்ந்தான். பின்னர் சிங்கை நகர் மன்னனைக் கொன்று ஆட்சியைப் பிடித்த பராந்தகனின் மந்திரிதான் புவனேகவாகு A. சிங்கை நகர் என்பது பெரு நிலப்பரப்பைச் சேர்ந்தது. அதனால் புவனேகவாகு A கட்டிய கோயில் பூநகரி நல்லூரில் அமைந்திருந்தது என்று செங்கை ஆழியான் வரலாற்று ஆதாரங்களைக் காட்டிக் குறிப்பிடுகிறார்.

பாடசாலையை விட்டு வெளியே வாருங்கள்

ஜேகே ஒரு ஜொனியன் என்பதில் பெருமையடைகிறேன் என்று ஜூட் அண்ணா தன் உரையில் சொன்னார். அந்த உரிமையில் இதை எழுதுகிறேன். இது பிரபல பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றாலும் முதலில் நம் பாடசாலையைத்தான் சுட்டவேண்டும் அல்லவா? பரி. யோவான் கல்லூரி உருப்பட வேண்டும் என்று ஜொனியன்ஸ் எவரும் உண்மையிலேயே நினைக்கிறீர்கள் என்றால் முதலில் பாடசாலையை விட்டுக் கொஞ்சக்காலம் தள்ளி நில்லுங்கள். Get the hell out of there and leave the school alone.

வலியின் எல்லைக்கோடு

வலி உயிரைத் தின்ன ஆரம்பித்தபோது அதிகாலை இரண்டு மணியாகியிருந்தது. பல்லைக்கடித்துக்கொண்டு சிறிது தூங்கி எழலாம் என்று புரண்டும் திரும்பியும் படுத்து, பல மணி நேரம் கழித்து எழுகிறோம் என்று நினைத்து மறுபடியும் மணிக்கூட்டைப் பார்த்தால் வெறுமனே பத்து நிமிடங்கள்தான் கழிந்திருந்தன. வலிக்கு அந்தப் பண்பு உண்டு. அது காலத்தை மெதுவாக நகர்த்த வல்லது. எழுந்து சென்று கொஞ்சம் தண்ணீர் குடித்துப்பார்த்தேன். ஒரு நூலை எடுத்து இரண்டு பக்கங்களைப் புரட்டினேன். டிவி ரிமோட்டை உருட்டிக்கொண்டிருந்தேன். செல்பேசியின் செயலிகளுக்குப் போய் வந்தேன். இளையராஜா கேட்டேன். இசை ஒரு வலி நிவாரணி என்றவரைத் தேடிச் சென்று வெளுக்கவேண்டும்போல இருந்தது.