Skip to main content

ஒலிவியாவின் பில்டிங்எங்கள் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் ஒஸ்டின் வைத்தியசாலையில்தான் அப்பாவுக்குப் புற்று நோய் சிகிச்சை இடம்பெற்றது. புற்று நோய் சிகிச்சை என்பது ஓரிரு நாட்களில் நிகழ்ந்து முடிவதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள். அப்பருக்கும் இது வருசக்கணக்கில் இழுத்தது. பல்வேறு சோதனைகள். ரேடியேசன், கீமோ, சத்திர சிகிச்சை என ஒன்று மாறி ஒன்று எப்போதும் வந்துகொண்டேயிருக்கும். ஒரு கட்டத்தில் முட்டி மோதி நோயைக் கட்டுப்படுத்திவிட்டாலும் வைத்தியசாலை விட்டுவைப்பதாக இல்லை. அடிக்கடி அவர்கள் அப்பரை அழைத்து எப்பன் எங்காவது நோய் மறுபடியும் எட்டிப்பார்க்கிறதா என்று மேன்மேலும் சோதனை செய்துகொண்டேயிருப்பார்கள். அப்பாவும் அனைத்துக்கும் தயாராகவே இருந்தார். தன் நோயைக் குணப்படுத்தவேண்டும், ஊருக்குப் போகவேண்டும் என்ற ஓர்மம் முக்கிய காரணம் என்றாலும் அயர்ச்சியோ வெறுப்போ இல்லாமல் அவர் அங்குத் தொடர்ச்சியாகப் போய் வந்தமைக்கு வைத்தியசாலையின் கவனிப்பும் ஒரு காரணம்.

அந்தப் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் வரவேற்பு மண்டபம் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றின் மண்டபத்தைப்போல அழகாகவும் பொலிவுடனும் இருக்கும். அப்பர் போனவுடனேயே உள்ளே இருக்கும் கோப்பி மெசினில் கப்புசீனோ ஒன்றை ஊற்றிக் குடித்துவிடுவார். இலவசம்தான். கூடப்போனால் எனக்கும் ஒரு கோப்பை எடுத்துத்தருவார். சாப்பிடுவதற்கு வைத்திருக்கும் ஸ்னாக் பக்கற்றுகளையும் தூக்கப்போவார். நான் தடுத்துவிடுவேன். மண்டபம் எப்போதும் நோயாளிகளால் நிரம்பியிருக்கும். அங்கு ஒரு சிறு நூலகமும் இருந்தது. தவிரச் சத்தமின்றி ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சித்திரைகள் சில. பல நோயாளிகள் தொடர்ந்து வருபவர்கள் என்பதால் பரஸ்பரம் நட்புப் பாராட்டி தமக்குள் ஊர்க்கதைகளையும் பேசத்தொடங்கிவிடுவார்கள். தாதிகளும் மிக இனிமையாகப் பழகுவார்கள். ஒருமுறை நாம் அங்கு காத்திருக்கையில் ஒரு நடுத்தர வயது தாதி எம்மை நோக்கி வந்தார். அவரைத் தூரத்திலே கண்டதும் அப்பர் என்னிடம் “பார், என்னட்ட வந்து ஹவ் ஆர் யு டார்லிங் எண்டு இவள் சொல்லுவாள்” என்று குசுகுசுத்தார். அந்தப் பெண்மணியும் அப்படியே “ஹாய் சந்திரா, ஹவ் ஆர் உ டார்லிங்?” என்றார். இவர் ஒருவித வழியல் சிரிப்புடன் “குட் குட், திஸ் இஸ் மை சன், கொம்பியூட்டர் எஞ்சினியர்” என்று அறிமுகப்படுத்தினார். அந்தப் பெண் “ஓ லவ்லி டு மீட் யு” என்றபடி அப்பாவிடமிருந்த சில படிவங்களை வாங்கிக்கொண்டு உள்ளே போனார். அவர் மறைந்ததும் “ஆள் வீரி, நாலு பிள்ளையளை தனியா வளர்த்திருக்கு, புருசன் ஒரு கிரீக்காரன், விட்டிட்டு ஓடிட்டான், அதுக்குப் பிறகு கலியாணம் செய்யப் பிடிக்கேலயாம்” என்று என்னிடம் சொன்னார். அப்பாவுக்குத் தாதிகள் என்றில்லை, வைத்தியர்களின் கல்வித்தகுதி, எந்த நாட்டில் படித்தார்கள், குடும்பச் சூழல்கூட தெரிந்திருந்தது. அப்பாவின் விடுப்புக் கேள்விகளுக்கு அங்கு எல்லோருமே சீரியசாகப் பதில் சொல்வார்கள். அல்லது சிறு சிரிப்புடன் கடந்து போவார்கள். ஆனால் எவருமே சிடுசிடுவென்று கோபித்து நான் பார்த்ததேயில்லை.

கொஞ்சம் பழகிய பிற்பாடு அப்பாவை வைத்தியசாலை வாசலிலேயே இறக்கிவிட்டு நான் வேலைக்குப் போக ஆரம்பித்தேன். சில நாட்களில் மாலையில் வேலை முடியும்போது மீளப்போய் அழைத்துச் செல்வேன். அனேகமான நாட்களில் வைத்தியசாலை வரவேற்பாளர்களே அப்பாவுக்கு வாடகை மகிழுந்து ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவதுண்டு. இலவசமாகத்தான். தவிர நேரத்துக்கு நேரம் உணவும் கொடுப்பார்கள். அந்த உணவு நன்றாக இருக்கிறது என்று அங்கேயே மதியவேளை தங்கி மாலையில் அப்பா வீடு வந்த நாட்களும் உண்டு. அப்படி வந்ததும் போதாது என்று அம்மாவிடம் அதைச் சொல்லி கொதியேற்றுவதும் அப்பாவின் பொழுதுபோக்குகளில் ஒன்று. சில நாட்கள் அப்பாவுக்கு ஹீமோ தீவிரமாக நடக்கும். அப்போது வைத்தியசாலைக்கு அருகேயே தங்குமிட ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும். அவை நோயாளி வார்டுகள் அல்ல. இப்படியானவர்களுக்காகக் கட்டப்பட்ட மூன்று நட்சத்திர விடுதி அறைகள். ஒரு இரவுக்கு இருபது டொலர்கள் பராமரிப்புச் செலவாக அறவிடுவார்கள். ஆனால் அதற்கு மேலாகச் சேவை இருக்கும்.
ஒருநாள் மாலை அப்பாவைத் திரும்ப அழைத்துச்செல்ல வைத்தியசாலைக்குப் போய்க்கொண்டிருந்தேன். 'எங்கு காத்திருக்கிறீர்கள்' என்று தொலைபேசியில் கேட்டபோது ‘வழமைபோல ஒலிவியாவின் பில்டிங்குக்கு கீழதான்’ என்றார். அப்போதுதான் அந்தக் கட்டடத்தின் பெயர் ஏதோ ஒலிவியா என்று ஆரம்பிக்கிறது என்பது ஞாபகம் வந்தது. அப்பாவை ஏற்றும்போது கட்டடத்தின் பெயரை முழுமையாகக் கவனித்தேன்.

“Olivia Newton-John Cancer Wellness & Research Centre” என்று எழுதியிருந்தது.
எனக்கு ஒலிவியா யார் என்பது தெரியவில்லை. வீட்டுக்கு வந்ததும் தேடிப்பார்த்தேன். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கோலோச்சிய அவுஸ்திரேலியப்பாடகி. நடிகை. பெரும் செல்வந்தப் பெண். அவரது நாற்பத்து நான்காவது வயதிலேயே புற்றுநோய் வந்துவிட்டது. சிகிச்சையும் பெற்றுக்கொண்டபடி ஒலிவியா தொடர்ச்சியாகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காகத் தன் காலத்தின் பெரும் பகுதியை செலவளித்திருக்கிறார். கடவுள்தான் தன்னைக் காப்பாற்றியவர் என்று கோயில்களுக்குக் காசைக் கொட்டி பேய்க்கூத்து ஆடாமல் பெருந்தொகையான தன் செல்வத்தையும் புற்று நோய் சிகிச்சைக்கும் ஆராய்ச்சிக்கும் கொடை அளித்திருக்கிறார். சிகிச்சைக் காலத்தில் நோயாளிகளின் மனநலத்தையும் கவனித்தல் வேண்டும், அவர்களுடைய சிகிச்சை நாட்கள் இயலுமானவரை இனிமையாகக் கழியவேண்டும் என்று அவர் உழைத்திருக்கிறார். அதன் பயன்தான் அப்பா சிகிச்சை பெற்று வந்த அந்த வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை நிலையம். வெறுமனே சிகிச்சை மட்டுமல்லாமல் நோயாளிகளை மனமுவந்து கவனித்தல் வேண்டுமென்பதும் அந்த நிலையத்தின் கொள்கை. அதனை அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

பாடகி ஒலிவியாவின் ஒரு பாடலைக்கூட நான் கேட்டதில்லை. அவர் நடித்த படங்களைப் பற்றி எந்த அறிவும் எனக்கு இல்லை. அப்பாவுக்கு அந்தக் கட்டடத்தின் பெயரே மறந்துபோயிருக்கும். ஆனால் மனித குலத்தின் ஆச்சரியத்தைக் கவனியுங்கள். இங்கிலாந்தில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வளர்ந்து பிற்காலத்தில் அமெரிக்காவில் வாழ்ந்த ஒலிவியாவின் பணத்திலும் முயற்சியிலும் ஒரு புற்றுநோய் சிகிச்சை நிலையம் கட்டப்படுகிறது. அங்கே நயினாதீவில் பிறந்து, யாழ்ப்பாணம், கொழும்பு, அனுராதபுரம் என்று ஈழத் திருநாடு முழுதும் காணி அளந்து, ஈற்றில் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் என் அப்பாவுக்குச் சிகிச்சை நடக்கிறது. அந்தப் பெண்மணிக்கு என் அப்பா யார் என்பது தெரியாது. அது பரவாயில்லை. என் அப்பாவுக்கும் அந்த மனுசி யார் என்பது தெரியாது. சிகிச்சை முடிந்ததும் மனுசன் ஊருக்குப்போய் ஆளே இல்லாத வளவுக்கு வேலி அடைச்சுக்கொண்டு நிக்குது. ஏன், நான்கூட அந்தக் கட்டடத்தின் பெயரை நினைவில் நிறுத்தித் தேடியிருக்காவிட்டால் இந்தக் கட்டுரையை இப்படி உட்கார்ந்து எழுதியிருக்கப்போவதில்லை.

இன்று காலை ஒலிவியா நியூட்டன் ஜோன் தன் எழுபத்து மூன்றாவது வயதில் காலமாகிவிட்டார் என்ற செய்தி முகத்தில் அறைந்தது.

ஈவார்மேல் நிற்கும் புகழ் என்பதன் பொருளை உணர்த்தியபடி.

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட