Skip to main content

வாத்துக்கூட்டம்



வசந்த காலத்தின் நடைப்பொழுதுகள் எப்போதும் உவகை கொடுக்கக்கூடியவை.

அதுவும் மனைவியோடு நடக்கும்போது நகைக்குப் பஞ்சமிருப்பதில்லை. மற்றவர்கள் எப்படியோ தெரியாது, ஆனால் ஆண் பறவைகளைப்போலப் பெண் துணைக்கு ஆடியும் பாடியும் நகாசுகள் என பல வித்தைகள் காட்டியும் கவனத்தை ஈர்க்கும் முயற்சி பத்தாண்டுகளாக இன்னமும் தொடர்கிறது. அவள்தான் எல்லாவற்றையும் வெறும் இறக்கைச் சிலிர்ப்போடு சலிப்பாகக் கடந்துபோய்விடுகிறாள்.
ஆற்றங்கரையோடே நடைபாதை அமைந்திருக்கிறது. கூடற் பருவம் முகிழ்ந்து குஞ்சுகள் சகிதம் வாத்துக்கூட்டங்கள் பல வலம் வந்துகொண்டிருந்தன. கூட்டத்துக்கு ஒரு இருபது குஞ்சுகளும் தாயும் தகப்பனும் இருக்கும். அப்போதுதான் நடை பழகும் குஞ்சுகள். சிலது நீந்தக்கற்றுக்கொள்கின்றன. சில குஞ்சுகள் சொல்வழி கேளாமல் அங்கிங்கே எடுபட்டுப்போனால் தாயோ தகப்பனோ ஓடிச்சென்று மீண்டும் அவற்றைக் கூட்டத்தினுள் துரத்திவிடுகின்றன. சிலது தம் பெற்றோரைப்போலவே கரையோரச் சகதிக்குள் தலையை உள்ளே நுழைத்து பிட்டத்தை உயர்த்திப்பிடித்து என்னவோ செய்கின்றன. கேட்டால் தாங்களும் மீன் பிடிக்கிறார்களாம்.

வாத்துக்கூட்டம் ஒன்று. குஞ்சுகள் எல்லாம் கரையோரம் தாயோடு சேர்ந்து சகதியில் குளித்துக்கொண்டிருந்தன. இன்னொரு வாத்து, தந்தையாக இருக்கவேண்டும், பத்தடி தள்ளி நடைபாதையைக் கண்காணித்துக்கொண்டிருந்தது. உமாதேவியார் குளிக்கும்போது காவல்காத்த பிள்ளையார்மாதிரி அவர் உறுமிக்கொண்டு நிற்கிறார். நாம் தெரியாமல் அருகில் போய்விட, உவேக்கென்று கேறியபடி அது எம்மைத் துரத்த ஆரம்பித்தது. அதன் சொண்டு அகலத்திறந்து எம்மிருவரையும் சேர்ந்து விழுங்கிவிடுமாப்போல. ஏற்கனவே பலதடவைகள் மக்பையிடம் அடிவாங்கிய அனுபவத்தில் நான் பறந்துவிட்டேன். கொஞ்சத்தூரம் ஓடிவிட்டுத்திரும்பிப்பார்த்தால் மனைவியும் குடுகுடுவென ஓடிவருகிறாள். பின்னாலேயே அந்த வாத்து அவளை இன்னமும் துரத்திக்கொண்டு வந்தது. ஒரு பெரும் வாத்தைச் சிறு வாத்து ஒன்று துரத்தும் காட்சியைக் கண்டு களிக்கக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.

ஆற்றின் நடுவே கிடந்த பெரும் பாறையின்மீது பத்திருபது வாத்துகளும் குஞ்சுகளும் உட்கார்ந்திருந்தன. இளம்தலைமுறை நடுவேயும் மூத்தவர்கள் சுற்றிவரவும் அமர்ந்திருந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தின் பரிதியில் உட்கார்ந்து தூங்கும் வாத்துகளின் ஒரு பக்க மூளை எப்போதும் விழித்தே கிடக்குமாம். ஏதேனும் சத்தம் சந்தடி வருகிறதா என அவதானிப்பது அவற்றுக்கு அனிச்சை. “போற வாற ஆக்களையெல்லாம் துரத்தி அடிச்சிட்டு அவை மட்டும் நிம்மதியா நித்திரை கொள்ளுறினம், பார்த்தியா?” என்றாள் மனைவி. “அதானே, நல்ல சேட்டை. ஆக்களைக் குழப்பவா?” என்றேன். பொதுவாக வேண்டாம் என்று முறைப்பவள் இன்று மட்டும் “சரி, அவை செய்யிற வேலைக்கு நல்லா வேணும், ஆக்களை நித்திரையால எழுப்பு” என்றாள். நான் மரப்பட்டை ஒன்றை எடுத்து அப்பாறையை நோக்கி எறிந்தேன். அது ஐந்தடி முன்னேபோய் கிளுக்கென்று ஆற்றினுள் வீழ்ந்தது. வாத்துகள் கணக்கேயெடுக்கவில்லை. இப்போது சற்று வலுவான கிளையொன்றை எடுத்து அவற்றை நோக்கி எறிந்தேன். அது பாறையின் அருகே போய் விழ, கூட்டம் இப்போது சுருட்டிக்கட்டிக்கொண்டு எழுந்தது, ஏக சமயத்தில் செட்டைகளை உதறிக்கொண்டது. பின்னர் எல்லாமே ஒரே நேரத்தில் பறக்க ஆரம்பித்தன. ஆற்றைக்கடந்து, நடைபாதையைக் கடந்து நடுவீதியில் அனைத்தும் ஏக சமயத்தில் தரையிறங்கின. அவற்றின் ஓடுபாதையாக இருக்கவேண்டும்.
நாங்கள் தொடர்ந்து நடந்தோம்.
 
முன்னே ஒரு வெள்ளைக்காரப்பெண்ணும் கறுப்பின ஆணும் இணையாக வந்தார்கள். அந்த ஆண் வெகு அலட்சியமாக ஒரு கைக்குழந்தையைத் தோளில் சுமந்திருந்தான். அவர்களோடு ஒரு கவூடுள் இன நாயும் சேர்ந்து நடந்து வந்தது. அவள் கைகளை விசுக்கி விசுக்கி எதையோ பேச இவனுடைய வெள்ளைப்பற்கள் பளிச்சிட்டன. அவர்களது குழந்தை முழுக்க முழுக்கக் கறுப்பாக இருந்தது. "அதெப்படி சாத்தியம்?” என்றாள் மனைவி. “தாய்க்காரி வெள்ளை என்றால் குழந்தைக்குக் கொஞ்சமாவது பொதுநிறம் வராதா?” என்றாள். “எனக்கென்ன தெரியும்?” என்றேன். கூட்டத்தின் பரிதியில் தூங்கும் வாத்தினதைப்போல நம் மூளையும் இவ்வகைக் காட்சிகளுக்காக எந்நேரமும் விழித்தே கிடக்கிறது. விடுப்பு என்பது நம் அனிச்சை. அதுவும் எழுதுபவர்களுக்கு இவ்வகைச் சம்பவங்கள் பனம்பழங்களைப்போல. விழ விழப் பொறுக்கி பின்னர் ஒருநாள் பாத்தி போட்டுக் கிழங்கு எடுத்துவிடுவோம்.

அந்தக் கவூடுள் எம்மிடம் வந்து வாலை ஆட்டி சுற்றிச் சுற்றி வந்தது. அவர்கள் எம்மிடம் மன்னிப்புக் கேட்டார்கள். நான் சிரித்துவிட்டு அந்த நாயைத் தடவிக் கொடுத்தேன். மனைவி அதற்கு என்ன பெயர் என்று கேட்டாள். ரெக்சி என்றார்கள். ரெக்சி ஆணா பெண்ணா என்ற குழப்பம் வந்தது. கேட்டோம். பெண் என்றார்கள். கியூட் என்று சொல்லி அவளைத் தட்டிக்கொடுத்துவிட, ரெக்சி எழுந்து சென்று அருகேயிருந்த யூகலிப்டஸ் மரத்தடியில் கக்கா இருக்க ஆரம்பித்தது. அவர்கள் அதனைக் கூப்பிட அது வராமல் தொடர்ந்து கக்கா இருந்தது. நாம் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். சற்றுத்தூரம் சென்று திரும்பிப்பார்க்கையில் நாயின் கக்காவை அந்த வெள்ளைக்காரி ஒரு பொலித்தீன் பையில் அள்ளிப்போட்டு, சுற்றிக்கட்டிக் கையில் எடுத்துவந்தாள். அந்தக் கறுப்பனின் கையிலிருந்த குழந்தை இப்போது விழித்து சுற்று வட்டாரத்தை நோட்டமிட ஆரம்பித்திருந்தது. நாங்கள் அந்தக் குழந்தையைப் பற்றி எதுவும் விசாரிக்காமல் நாயை மாத்திரம் விசாரித்தது எமக்கே ஆச்சரியமாக இருந்தது.

நாங்கள் துரத்தியடித்தோமே ஒரு வாத்துக்கூட்டம்? அது இப்போதுதான் வீதியைக் கடக்க ஆரம்பித்திருந்தது. அவை ஆற அமர நடந்து முடிக்கும்வரை வீதியில் இருமருங்கிலும் வாகனங்கள் நின்று வழிவிட்டன. முன்னே தாய், நடுவே குஞ்சுகள். இறுதியில் தகப்பன். இந்தக் குஞ்சுகள் சற்று வளர்ந்து பதின்மத்தை எட்டியவை. பறக்கத் தெரிந்தவை. அவ்வப்போது ஆற்றில் வந்திறங்கும் வலசையைப்போலத் தாமும் பரதேசம் சுற்றிவரலாம் என அவை கனவு காணக்கூடும். இந்த உலகமே அவற்றின் இறக்கை மடிப்புக்குள் என்ற எண்ணம் அவற்றின் நடையிலேயே தெரிந்தது. ஒரு வாத்தினது வாழ்நாள் எவ்வளவு என்று தேடிப்பார்த்தோம். ஐந்து வருடங்களாம். அதற்குள் இந்த ஆற்றையும் ஏரியையும் சுற்று வட்டாரத்தையும் அவை தம் இறக்கைக்குள் அடக்கிவிடமுடியும். ஒவ்வொரு வசந்தமும் இணையோடு கூடி மேலும் இருபது குஞ்சுகளைப் பொரித்து, அவற்றைக் கவனமாக வளர்த்தெடுத்து, எதுவெதுவெல்லாம் தன் குஞ்சு, தன் பேரக்குஞ்சு, தன் பூட்டக்குஞ்சு என்று அறியாத கிழப்பருவம் ஒன்றில், பறக்க முனைந்தும் இயலாத கொடுங் கணமொன்றில், தன் உணவைத் தானே தேடித் தெரியும் வலுவை இழந்து, மரத்தடியிலோ ஆற்றின் கரையோரத்திலோ மடிந்து ஒடுங்கும்போதும் இக்கணத்தைப்போலவே அப்போதும் அது ஒரு வாத்தாகவே இருந்துவிடப்போகிறது என்பதைக் குஞ்சுகள் மட்டுமல்ல, அந்தத் தாய் தகப்பனும் உணரப்போவதில்லை. உணரத் தேவையுமில்லை.

வாத்துகள் இன்னமும் வீதிக்கரையை எட்டுவதாக இல்லை. அந்தப் பேரணி உலாவின் அழகை சுற்றமும் நின்று நிதானித்துக் களித்துக்கிடந்தன.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக