Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரைகள்

மணியம் மாஸ்டர்

வழமையான யாழ்ப்பாணத்துக் காணொளி ஒன்று. தென்மராட்சி வயல் காட்டுப்பக்கம் ஒரு ஐயாவைப் பேட்டி எடுக்கிறார்கள். நரை விழுந்த தோற்றத்தோடு, நெற்றியில் பட்டைத் திரு நீறும் நம் ஊருக்கேயான மென் நீல வண்ண சேர்ட்டும் சாறமும் அணிந்தபடி சக நண்பர்களோடு வயலில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். நேர்காணல் எடுப்பவர் அவரிடம் எத்தனை ஆண்டுகளாக வயல் வேலை செய்கிறீர்கள் என்று கேட்க, ஐயா சொல்கிறார். எனக்கு எழுபத்தொரு வயது. அம்பது வரியமா நாங்கள் வயலுக்கதான் நிக்கிறம். அப்ப வயல்தான் மெயினா செய்யிறனீங்களா? நாங்க டீச்சர். இப்ப ரிட்டயர் ஆயிட்டம். ஆனால் எப்பவுமே வயல்தான். எந்த ஸ்கூலில படிப்பிச்சனிங்கள் ஐயா? நாங்கள் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கொலிஜில படிப்பிச்சனாங்கள். எனக்கு உடல் உடனேயே கிறுகிறுத்தது. இது எங்கட மணியம் மாஸ்டர் அல்லவா? ***** பரி. யோவானின் ஒரு சில misfits வாத்திமார்களில் முதன்மையானவர் இந்த மணியம் மாஸ்டர். அதனாலேயே எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். மீசாலை ஒரு C90 மோட்டார் சைக்கிளில் கொஞ்சம் லேட்டாகத்தான் தினமும் அவர் பாடசாலைக்கு வருவார். நீண்ட தூர மோட்டர் சைக்கிள் பயணத்தால் அவருடைய கால்கள் எல்லாம் புழுதி பட...

மழை நாளில் 'என் கொல்லைப்புறத்துக் காதலிகள்'

ஒரு மாதத்துக்கு முன்னர் நண்பன் ஒருவன் தன் வீட்டில் பெய்த மழையைக் காணொளி எடுத்துப் பகிர்ந்திருந்தான். நான் பிறந்து வளர்ந்த ஊரான தின்னவேலியில் பெய்த மழை அது. மல்லிகைப் பந்தல், வாழை, செவ்வரத்தை, நெல்லி, பூங்கன்றுகள், இடையே நாய்க்கூடு எனச் சூழ்ந்திருந்த அந்த மிக அழகான வீட்டு முற்றத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. தின்னவேலி மழை எப்போதுமே அண்டாவைக் கவிழ்த்துக்கொட்டுவதுபோலத்தான் பெய்யும். நான் அன்று அவனுக்கு இப்படி ஒரு கருத்து இட்டேன். வெள்ளம் தேங்கி வீடு கசியாதவரைக்கும் தின்னவேலியின் மழை மிக அழகுதான். ஏன் அப்படிச் சொன்னேனோ தெரியாது. ஆனால் இதனைச் சொல்லிய சில வாரங்களிலேயே தீவு முழுதும் மழையும் வெள்ளமும் நிலச்சரிவும் பெருங் கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டன. மழை நம் வீட்டுக்குள் நுழையாதவரைக்கும்தான் அழகு. அப்புறம் அது ஒரு கொடிய அரக்கியாகிவிடுகிறது. சிரங்கு. முட்டு. கக்கூஸ் அடைப்பு. நுளம்பு. காயாத உடுப்பு. மின் வெட்டு. நிலமெல்லாம் கசிந்து சகதி ஆவது. இவை எல்லாமே சிறு வெள்ளத்துக்கே வந்து சேரக்கூடிய துன்பங்கள். நிலம் சரிந்து மொத்த வீடுமே அமுங்குவதும் குழந்தைகள் உள்ள வாகனங்கள் அடித்துப்போவதும் பெரு வெள்ளத்த...

படலை பொட்காஸ்ட்

சில வருடங்களாகவே பொட்காஸ்ட் தொடர் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என்றொரு ஆர்வம் உள்ளூற ஊறிக்கொண்டிருந்தது. அது நான் தொடர்ச்சியாகக் கேட்டுப் பயனடைந்துகொண்டிருக்கும் சில பொட்காஸ்டுகளின் பாதிப்பால் ஏற்பட்ட ஒன்று. The History of Literature, Paris Review, The New Yorker Fiction, The New Yorker Writer’s Voice, Not Stupid, The Minefield, If You’re Listening, Ladies We Need to Talk என்று பல பொட்காஸ்ட் தொடர்களின் ஆதர்ச இரசிகன் நான். இந்த பொட்காஸ்டுகள் அனைத்துமே ஆழமான விசயங்களையும் அன்றாட விசயங்களையும் மிக இயல்பாகவும் முன்முடிவுகள் இல்லாமலும் அலசுபவை. கேட்கும்தோறும் புதியவற்றை நமக்கு அறிமுகப்படுத்துபவை. பெரும்பாலானவற்றுக்குக் காணொளிகளும் இல்லை. வெறுமனே ஒலி மாத்திரம்தான். நடைப்பயிற்சியின்போதும் நீண்ட தூரப் பயணங்களின்போதும் காதுகளில் ஒலிக்கவிட்டால் நேரம் கரைவதே தெரியாது. பல சமயங்களில் புதிய அத்தியாயங்களைக் கேட்பதற்காகவே நடைப்பயிற்சிக்குப் போன சம்பவங்களும் உண்டு. அத்தனை அலாதியான அனுபவத்தையும் தேடலையும் கொடுப்பவை இவை. இவ்வாறான பொட்காஸ்டுகளை செய்வதற்கு முன்னர் பெருந்தேடலும் தயார்படுத்தலும் தேவை என்று தோன்றி...

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

தவக்களை அண்ணை

தின்னவேலி மரக்கறிச்சந்தை வழமைபோலப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. கொழுத்தும் வெயிலிலும் மரக்கறிகளாலும் பழங்களாலும் நிறைந்த கட்டடம் குளிர்மையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் முருங்கைக்காய்கள் குவிந்திருந்தன. விலையும் மலிந்துபோய். கிலோ நூறு ரூபாய்க்கு நல்ல இளங் காய்களை வாங்கக்கூடியதாக இருந்தது.

குமரன் வரக்கூவுவாய்

நல்லூர்க் கோயிலின் உள் வீதி. மெல்லிருள் சூழ் வசந்த மண்டபத்தருகே அமைந்திருக்கும் கற்தூண் ஒன்றுக்கடியில் சாய்ந்து அமர்ந்திருக்கிறேன். யாழ்ப்பாணத்து ஆடி வெயில் நாள் அது. அதிகாலை வெக்கையில் வெறும் மேலில் வியர்வைத் துளிகள் புன்முறுவல் பூக்க ஆரம்பித்திருந்தன.

வாத்துக்கூட்டம்

வசந்த காலத்தின் நடைப்பொழுதுகள் எப்போதும் உவகை கொடுக்கக்கூடியவை. அதுவும் மனைவியோடு நடக்கும்போது நகைக்குப் பஞ்சமிருப்பதில்லை. மற்றவர்கள் எப்படியோ தெரியாது, ஆனால் ஆண் பறவைகளைப்போலப் பெண் துணைக்கு ஆடியும் பாடியும் நகாசுகள் என பல வித்தைகள் காட்டியும் கவனத்தை ஈர்க்கும் முயற்சி பத்தாண்டுகளாக இன்னமும் தொடர்கிறது. அவள்தான் எல்லாவற்றையும் வெறும் இறக்கைச் சிலிர்ப்போடு சலிப்பாகக் கடந்துபோய்விடுகிறாள். ஆற்றங்கரையோடே நடைபாதை அமைந்திருக்கிறது. கூடற் பருவம் முகிழ்ந்து குஞ்சுகள் சகிதம் வாத்துக்கூட்டங்கள் பல வலம் வந்துகொண்டிருந்தன. கூட்டத்துக்கு ஒரு இருபது குஞ்சுகளும் தாயும் தகப்பனும் இருக்கும். அப்போதுதான் நடை பழகும் குஞ்சுகள். சிலது நீந்தக்கற்றுக்கொள்கின்றன. சில குஞ்சுகள் சொல்வழி கேளாமல் அங்கிங்கே எடுபட்டுப்போனால் தாயோ தகப்பனோ ஓடிச்சென்று மீண்டும் அவற்றைக் கூட்டத்தினுள் துரத்திவிடுகின்றன. சிலது தம் பெற்றோரைப்போலவே கரையோரச் சகதிக்குள் தலையை உள்ளே நுழைத்து பிட்டத்தை உயர்த்திப்பிடித்து என்னவோ செய்கின்றன. கேட்டால் தாங்களும் மீன் பிடிக்கிறார்களாம்.

தர்மசீலன்

ஆறாம் ஆண்டில்தான் தர்மசீலனை நான் முதன்முதலில் சந்திக்கிறேன். அனுமதிப் பரீட்சையினூடாக அந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முப்பத்தாறு பேரில் நாங்களும் உள்ளடக்கம். அச்சுவேலி ஆரம்பப் பாடசாலையிலிருந்து அவன் வந்திருக்கவேண்டும். அப்போது வகுப்புக்கு வருகின்ற ஒவ்வொரு ஆசிரியருக்கும் எங்கள் பெயர், எந்தப் பாடசாலையிலிருந்து வந்திருக்கிறோம் என்று அனைவருமே ஒப்பிக்கவேண்டுமென்பதால் அவனது ஆரம்பப் பாடசாலையின் பெயர் சன்னமாக இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.

அம்மா ஒரு கிரிக்கட் பைத்தியம்

இன்று நேற்று இல்லை. எங்கள் வீட்டில் டிவி வந்த காலத்திலிருந்தே அவர் கிரிக்கட்டை ரசித்துப் பார்ப்பது வீட்டில் சகஜமாக நடக்கும் விசயம். என் ஞாபகமறிந்து இந்தியன் ஆர்மிக்காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிரிக்கட் எப்போதும் டிவியில் போகும். அப்போது அவர் கபில்தேவ், கவாஸ்கரின் தீவிர விசிரி. பின்னர் தொண்ணூறூகளில் சச்சின், கங்குலியின் ரசிகையானார். கங்குலி நூறு அடித்தால் போதும், அடுத்தடுத்து ஸ்பின்னருக்கு வெளிய வந்து அடிக்கும் சிக்ஸர்களுக்கு அம்மாவின் கண்கள் விரிந்து தயாராகிவிடும். அப்போதெல்லாம் கிரிக்கட் நாட்களில் இன்னிங்ஸ் பிரேக்கின்போதுதான் எங்கள் வீட்டில் புட்டு அவிக்கப்பட்டுவிடும். துணைக்கு எப்போதுமே மத்தியானக் கறிதான். பின்னேரம் அவர் டிவிக்கு முன்னர் ஈசிச்செயாரில் உட்கார்ந்துவிட்டால் மட்ச் முடிந்து பிரசெண்டேசனும் நிகழ்ந்தபின்னர்தான் ரிமோட் மற்றவர் கைக்குப் போகும். அப்படி ஒரு வெறி. ஆச்சரியம் என்னவென்றால் எப்போதுமே அம்மா பெரிதாக நாடகங்கள் எதையும் பார்த்ததில்லை. இப்போதும் டிவியில் பார்ப்பது யூடியுப்தான். அதுவும் வீட்டுத்தோட்டம் பற்றிய வீடியோக்கள். Jaffna Suthan காட்டுகின்ற மாலைதீவும் டுபாயும். இ...

விஷ்ணுபுரம் - ஹம்பி

விஷ்ணுபுரம் நாவலை நான் மிகத் தாமதமாகத்தான் வாசித்தேன். ஹம்பி செல்வதற்கு முன்னர் நாவலை வாசித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. நகரங்கள், கலாசாரங்கள், மதங்கள், தத்துவங்கள் எப்படி உருவாகி, கோலோச்சி, அதிகார உச்சங்களை அடைந்து பின்னர் அப்படியே நலிந்து ஒழிந்து போகின்றன என்பதை விஷ்ணுபுரம் எழுத்துகளில் விபரித்தது என்றால் ஹம்பியில் அதனைக் கண்கூடாகவே அறியலாம். அதன் வரலாற்றை, உச்சங்களை இன்றைய எச்சங்களினூடே காணமுடியும். ஹம்பியின் சமகால நிலையைத்தான் விஷ்ணுபுரத்தின் மூன்றாவது பாகம் விபரிக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் அலுவலக வேலையாக பெங்களூர் செல்லவேண்டியிருந்தது. அப்போது வார இறுதி ஒன்றில் ஹம்பிக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆறு மணி நேர ரயில் பயணம். அவ்வளவு நேரம் பயணம் செய்ய வேண்டுமா என்று முதலில் தயங்கினாலும் பின்னர் பஞ்சியைப் பார்க்காமல் போகலாம் என்று முடிவெடுத்துச் செய்த பயணம். அது வாழ்நாளில் மறக்கமுடியாத வரலாற்றின் அற்புதமான காலங்களையும் அந்த நிலங்களின் தற்போதையை நிலையையும் மனிதர்களையும் எனக்கு அறியத்தந்தது. பயணங்கள் நமக்குக் கிடைக்கும் கொடை. அவற்றை ‘அடுத்தமுறை பார்க்கலாம்’ என்ற...

அப்பித் கொட்டியாதமாய்

ரசங்கவை நான் கடைசியாகக் கொழும்பில்தான் பார்த்ததாக ஞாபகம். இருபது வருடங்களுக்கு முன்னர். அவன் இலண்டன் செல்லப்போவதாகச் சொன்னதும் அலுவலகத்தில் எல்லோரும் அவனுக்குப் பிரியாவிடை விருந்து ஒன்று கொடுத்தோம். பணம் சேகரித்து சில பரிசுகளும் வாங்கி வழங்கினோம். அதன் பிறகு நானும் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்திருந்தாலும் இருவருக்குமிடையே தொடர்புகள் ஏதும் இருக்கவில்லை. இரண்டாயிரத்து ஒன்பதில் என்னை அவன் தீவிரவாதத்துக்குத் துணை போவதாகக் குற்றம் சாட்டியிருந்தான். நான் பதிலுக்கு அவனையும் ஒரு அரச தீவிரவாதி என்றேன். ஒடுக்கப்பட்ட கூட்டத்திலிருந்து உருவாகும் தீவிரவாதியைவிட அதிகாரத்திலிருக்கும் தீவிரவாதியே ஆபத்தானவர் என்று நான் பதில் சொல்லியிருந்தேன். இருவருக்கும் சண்டை. அவன் என்னை நட்பு விலக்கினானா அல்லது நான் அவனை நட்பு விலக்கினானா என்று தெரியவில்லை. அவன் என் பெயரைக் கொடுத்திருப்பானோ என்ற பயத்தில் அடுத்த ஐந்து வருடங்கள் நான் ஊர்ப்பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. ஆனாலும் லின்க்ட் இன்னில் அவனின் நடவடிக்கைகளை அடிக்கடி கவனிப்பேன். ராஜபக்ச சகோதரர்களின் தீவிர ஆதரவாளன் அவன். நாட்டின்மீது அதீத பற்றும் கொண்டவன். ஒருமு...

கண்ணிலான் பெற்றிழந்தான்

ஐந்தரை ஆறு மணிக்கெல்லாம் முகம் கழுவி, சாமி கும்பிட்டுவிட்டு நாங்கள் எல்லாம் தயாராகிவிடவேண்டும். உயர்தரம் படிக்கும் அக்காவுக்கு என்று தனியாக ஒரு எண்ணெய் விளக்கும் அறையும் கொடுக்கப்பட்டிருந்தது. மீதி எல்லோருக்கும் என்று பொதுவாக ஒரு மேசையும் விளக்கும் இருந்தது. அவரவர் தத்தமது விளக்குச் சிமினிகளைத் துடைத்தல் வேண்டும். சிமினியைத் துடைப்பது என்பது பிறந்த இரண்டு நாள் குழந்தையை ஈரத்துண்டால் குளிப்பாட்டுவதுபோல. மிகக் கவனமாகத் துடைக்கவேண்டும். அதிலும் மேசை லாம்புச் சிமினி மிக மென்மையானது. எப்பன் என்றாலும் வெடித்துவிடும். அதற்குள் கையை விட்டுத் துடைப்பதும் சற்றுச் சிரமமானது. அதன் வாய்ப்பகுதியின் விளிம்பு கையைப் பதம் பார்த்துவிடும். கூடவே திரியையும் உயர்த்தி சீராகக் கத்தரித்துவிடவேண்டும். இல்லாவிடில் தீபம் ஒரு பக்கத்தால் எரிய ஆரம்பித்து சிமினியில் புகை படிந்துவிடும். எண்ணெய் தீர்ந்துபோயிருந்தால் அதையும் நிரப்பி மேசையில் வைத்துத் தீபத்தை ஏற்றி, அது செட்டில் ஆனபின்னர் சிமினையைப் பொருத்தினால் அன்றைய இரவின் படிப்பு ஆரம்பிக்கும்.

புனைவின் நூதனக் களியாட்டம்

ஷாமந்தை உங்களில் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’ நூலை வாசித்துவிட்டு அந்தச் சிறுவன் என்னோடு உரையாடிய காணொலியை சிலர் பார்த்திருக்கவும் கூடும்.

தமிழ்நதியின் 'காத்திருப்பு'

மெல்பேர்ன் வாசகர் வட்டத்தில் தமிழ்நதியின் 'மாயக்குதிரை' சிறுகதைத் தொகுப்பு பற்றிய வாசிப்பு அனுபவப் பகிர்வு சென்ற மாதம் இடம்பெற்றது. அத்தொகுப்பில் உள்ள 'காத்திருப்பு' என்ற சிறுகதை சார்ந்து இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொகுத்து இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. https://melbournevasakarvaddam.blogspot.com/2021/05/blog-post.html