அபர்ணாவை எப்படி மனைவிக்கு அறிமுகப்படுத்துவது என்பது குழப்பமாகவே இருந்தது. “கூடப்படிச்சவ எண்டா எப்பிடி? உங்கட காலத்திலதான் பெடி பெட்டையள் ஒண்டாயிருந்து படிச்சதேயில்லையே?” நியாயமான கேள்வி. எனக்கு அபர்ணா அறிமுகமானது வன்னியில். நான் இடம்பெயர்ந்து இராமநாதபுரத்தில் வசித்தபோது அவள் குடும்பம் திருவையாற்றுக்குக் குடிபெயர்ந்திருந்தது. நாங்கள் உயர்தரம் படித்துக்கொண்டிருந்தோம். எங்கள் பாடசாலைகள் இணைக்கப்பட்டு கிளிநொச்சியில் ஒன்றாக இயங்க ஆரம்பித்திருந்தன. ஒரே வகுப்பில் நாங்கள் இருவரும். அப்போது ஆரம்பித்த பழக்கம். நாங்களிருவரும்தான் கிளிநொச்சி கிழக்கில் தங்கியிருந்தவர்கள். காலையில் நான் திருவையாற்றுக்குப் போய் அங்கே அபர்ணாவையும் கூட்டிக்கொண்டு ஒன்றாக கிளிநொச்சிக்குப் போவேன். அவளிடம் ஒரு ஹீரோ லேடிஸ் சைக்கிள் இருந்தது. என்னுடையது லுமாலா. அந்தச்சமயத்தில் சீருடை அணியவேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. இடம்பெயர்ந்தபோது அபர்ணா நான்கு செட் உடுப்புகளை எடுத்துவந்திருக்கவேண்டும். ஒரு சர்பத் நிற சட்டை. குட்டி குட்டி செக் போட்ட குடைவெட்டு பாவாடையும் ஒரு பிங் பிளவுசும். பின் நாரிக்கு மேலே பெல்ட் வைத்த இன்னொரு ப