Skip to main content

மீன் யாவாரம்




தாமதமாகச் சென்றதாலோ என்னவோ குருநகர்ச் சந்தைக்குள் நுழையும்போதே நாறல் வாசம் குப்பென்று மூக்கில் அடித்தது. நான் வழமையாக மீன் வாங்கும் செல்லர் அண்ணையைத் தேடினேன். ஆளை எங்குமே காணவில்லை. பல நாட்களாக மீன் சந்தைக்கு வராததால் இடையில் நிகழ்ந்த மாற்றங்கள் எதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சைக்கிள் பார்க்கிங் ரிசீப்ட்டைத் தேடி வந்து கொடுத்த தம்பியிடம் செல்லர் எங்கே என்று கேட்டேன்.

“அவர் மோசம் போய்க் கனகாலம் ஆயிட்டு. இப்ப பிள்ளையள்தான் கடையளை நடத்தினம்”

அவர் காட்டிய திசையில் மூன்று வெவ்வேறு கடைகள் தெரிந்தன. மூன்றையுமே செல்லரின் பிள்ளைகள்தான் நடத்தினார்கள். ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த கடை பின்னர் பிரச்சனைப்பட்டுக் கழன்று மூன்றாக மாறிவிட்டதாக பார்க்கிங் தம்பி சொன்னார். நான் அவர்களை நோக்கிப் போனேன்.
என்னைத் தூரத்தில் கண்டதுமே ஒருவன் கத்த ஆரம்பித்தான்.

“அண்ணை அந்தக் கடைக்குப் போகாதீங்க. பாரை எண்டு சொல்லுவாங்கள். ஆனால் எடுத்துப்பார்த்தா அது கட்டா அண்ணை. பேசி வெல்ல மாட்டியள். கட்டாவும் பாரை எண்டு வியாக்கியானம் கொடுப்பார். போயிடாதீங்கள்”

நான் அவனிடம் கேட்டேன்.

“அவர் கிடக்கட்டும். நீ என்ன தம்பி விக்கிறாய்?”
“நான் விக்கிறது முறையான பாரை அண்ணை. பார்க்கப்போறீங்களா?”

நான் காட்டச்சொன்னேன். அவன் தன்னுடைய ஐபோனில் ஒரு அழகான பாரை மீனின் படத்தைக் காட்டினான். அதைப்பார்க்கவே நாவூறியது. நடுத்துண்டில் குழம்பு, தலையைப் போட்டு ஒரு சொதி, வால் துண்டைப் பொரிச்சு, புட்டோட சேர்த்து அடிச்சா கமறும். எனக்கு ஆர்வம் தாங்கமுடியவில்லை.

“தம்பி, அதில ஒரு பெரிய மீனாப் பார்த்துத்தாரும்”
“கொஞ்சம் வெயிட் பண்ணோணும் அண்ணை. மீன் இன்னும் வரேல”
“உள்ள பெட்டிக்க இருக்கா?”
“இல்லை அண்ணை, கடல்ல இருந்துதான். இந்தா இப்ப வந்திடும்.”
“ஓ, வள்ளம் இன்னும் வரேல்லையா? இன்னும் எவ்வளவு நேரமாகும்?”
“வள்ளம் செய்யிறதுக்கு ஓர்டர் குடுக்கோணும் அண்ணை. அதுக்குத்தான் கொஞ்சம் காசு சேர்த்துக்கொண்டிருக்கிறம். புலம்பெயர் உறவுகளும் ஹெல்ப் பண்ணுறினம். வள்ளத்தைச் செஞ்சு, வெள்ளோட்டம் விட்டு, கடலுக்க இறங்கி, பாரை பாரையாப் பிடிச்சு உங்களுக்கு நாங்கள் விப்பம் அண்ணை”
“அட மூதேவி, அதுவரைக்கும் நான் என்ன செய்யிறது?”
“உறுதியா இருக்கோணும் அண்ணை. சாப்பிட்டா ஆன பாரை மீனைத்தான் சாப்பிடோணும். இல்லாட்டி பேசாம முருங்கைக்காயில குழம்பு வைக்கோணுமே ஒழிய, சும்மா உந்தச் சின்னச் சின்ன மீனுகளை வாங்கக்கூடாது. அதுவும் பாரை எண்டு சொல்லி கட்டாவை விக்கிறவண்ட கடைக்குப் போகக்கூடாது”

‘அடப்போடா’ என்று சொல்லிவிட்டு நான் மற்றவர் கடைக்குக்குப் போனேன்.

“அண்ணை இது கட்டா பாரை எண்டுறாங்களே, உண்மையா?”
“கட்டாப்பாரை என்று மற்றவர்கள் சொல்வார்கள். ஆனால் நான் அப்படிச் சொல்வதில்லை. அப்படிச் சொல்வதில் என்ன பயனடையைப்போகிறோம்? கட்டாப்பாரையும் பாரைதான் தம்பி. அத்தோடு கருவாட்டுக்கு கட்டாவை விட்டா வேற மீன் ஏது?”
“அண்ணை, இது கட்டாப்பாரையா இல்ல நல்ல பாரையா? சரியாச் சொல்லுங்க.”
“நல்ல பாரைதான்”
“அப்ப கட்டாப்பாரை இல்ல?”
“நான் அப்படிச் சொல்ல இல்லை. நான் நல்ல பாரை என்றுதான் சொன்னேன்”

எனக்கு மயக்கம் வந்தது.

“கட்டாப்பாரை கறி வச்சாத் தண்ணியா இருக்குமே?”
“இல்லை. உங்களுக்குக் கறி வைக்கத்தெரியாது. கட்டாவுக்கு சரியான கறித்தூள் போட்டால் கறி நல்லாவரும். தவிர இந்தச் சந்தைல என்னைவிட்டா உங்களுக்கு பாரை கொடுக்க வேற ஆருமில்லை. தவிர எங்கட குடும்பத்து யாவாரத்தை ஏகபோகமாக செய்யிறதும் நாந்தான்”

எனக்குக் குழப்பமாக இருந்தது. மற்றக்கடையில் அவருடைய கடைசித்தம்பி சின்னச் சின்ன சூடையையும் கிளாக்கனையும் விற்றுக்கொண்டிருந்தான். பேசாமல் அரைக்கிலோ சூடையை வாங்கிப் பொரிச்சு அடிக்கலாமென்று நினைக்கும்போது திடீரென்று ஒருத்தன் கடகடவென கையில் ஒரு சூட்கேஸோடு சந்தைக்குள் நுழைந்தான். பார்த்தால் மருந்து வியாபாரம் செய்பவன்போல இருந்தான். பாண்ட்ஸ், சேர்ட்டு, டை என்று ஆளே கலாதியாக. கறுப்புக் கண்ணாடி வேறு. அவனுக்குப் பின்னாலேயே ஐம்பது யூடியூபர்கள் வந்திருந்தார்கள்.

“இப்போது மீன் எப்படி விற்பது என்பதை டொக்டர் தமிழ் மக்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்போறார்”

ஒருவன் செல்பேசியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்தக் கண்ணாடி ஆசாமி சூட்கேசை தரையில் வைத்துவிட்டு ஒவ்வொரு யூடியூபருக்கும் நேர்காணல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

“நீ ஒரு நாயடா. துரோகி. எனக்கு மீன் விக்கிறதுக்கு ஒருத்தரும் சொல்லித்தரவேண்டாம். நாங்கள் விக்கிறதெல்லாம் நல்ல மீன். மீனை வெட்டிக்கொண்டுபோகோணுமெண்டா இந்த தங்கத்திட்ட கொடுங்க. அந்த துரோகிகளிட்ட குடுக்காதிங்க. மீனை வெட்டுறனண்டு உங்களை விட்டிடுவாங்கள். மீன் முட்டையும் நாங்கள் விப்பம். பைட்சுக்கு நல்லாயிருக்கும்”

சற்று நேரம் நேரலையில் பேசிவிட்டு ஆள் புறப்பட்டுவிட்டது.

“துரோகிகள் போட்ட வழக்குக்கு சமூகமளிக்கவேண்டும். வர்ட்டா”

போகும்போது ஜெயிலர் பின்னணி இசையைவேறு செல்பேசியில் ஒலிக்கவிட்டான். எனக்குத் தலை சுற்றியது. கடைசிவரை அந்தாள் தன்னுடைய சூட்கேஸைத் திறக்கவேயில்லை. என்ன வகையான மீனை விற்கப்போகிறேன் என்றும் காட்டவில்லை. நான் மறுபடியும் இந்த மூன்று பேரிடம் வந்தேன். ஆனால் இப்போது கிட்ட நெருங்கவே முடியாத அளவுக்கு மூவரும் தமக்குள் சண்டை இட்டுக்கொண்டிருந்தனர்.
 
“நீ விக்கிறதெல்லாம் ஒரு மீனா? நாறல் நசல். ச்ச்சைக். மனுசன் வாங்குவானா உண்ட மீனை”
“நீங்கள் மீனே விற்பதில்லை. நல்ல மீனை விற்பது என்ற கொள்கை இருந்தால் போதாது. கடையில் மீனும் வேண்டுமல்லவா?”
“இந்த இருவரையும் வாடிக்கையாளர்கள் புறக்கணிக்கவேண்டும். எங்களிடம் சூடை இருக்கிறது வாங்குங்கள்”

நான் இரண்டடி பின் வாங்கினேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ஒருவர் மற்றவை இப்படித் தூற்றும்போது நாம் எதற்கு உள்ளே நுழைந்து அங்கே மீனை வாங்கவேண்டும் என்று தோன்றியது. அப்போது கடகடவென ஒரு லொறி சந்தை வாசலில் வந்து நின்றது. அங்கிருந்து ஐஸ் பெட்டிகளை மூவர் தூக்கி வந்தார்கள். சந்தைக் கூடார முகப்பில் கடை விரித்தார்கள்.

“பலயா பலயா பலயா … நள்ள மாலு. வாங்க வாங்க”

ஐஸ் பெட்டிகளைப் பார்த்தேன். வீரை மீன்கள். அதை எப்படிக் கறி வைப்பது என்று எனக்குத் தெரியாது. தேங்காய்ப் பால் விட்டால் அந்தக்கறி சுவையாக இருக்குமா என்றும் ஒரு சந்தேகம் வந்தது.
 
“மல்லி, இத வாங்குங்க. ஶ்ரீ லங்கா பூரா பலயாதான். நீங்களும் வாங்குங்க. நாளைக்குப் பிறகு குறை சொல்லக்கூடாதுதானே?”

நான் மறுபடியும் மற்றக்கடைகளைப் பார்த்தேன். செல்லரிண்ட பெடியள் இன்னமும் தமக்குள் அடிபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒற்றுமையாக இருந்தால், சூடை, ஒட்டி ஓரா என்று விற்றபடி, கிடைத்த கட்டாவில் கருவாடு போட்டுக்கொண்டு, அற்புதமான பாரைகளைப் பிடிக்க வள்ளமும் செய்யலாம். ஆனால் அதை அவர்கள் சிந்தித்தும் பார்ப்பதாகத் தெரியவில்லை. அவர்களது கடை மீன்கள் தேடுவாரற்று அவற்றில் ஈக்கள் மொய்க்க ஆரம்பித்திருந்தன. கண்ணாடிக்காரன் சூட்கேசையும் தூக்கிக்கொண்டு யூடியூபர்களுடன் வழக்காடப் போய்விட்டான். எனக்குப் பசிக்க ஆரம்பித்தது. என்ன சனியனோ, ஒரு மாற்றத்துக்கு இந்த பலயாவை வாங்கலாமென்று முடிவெடுத்தேன்.

“ஒரு … எக்க மாலு தென்ன ஐயா”

அவன் மீனை நிறுத்து, இலவசமாக வெட்டித் துண்டு துண்டாகப் பையில் போட்டுத்தந்தான். ஐஸ் போட்ட மீன் பை முட்டும்போது உடல் முழுதும் சிலிர்த்துக் குளிர்ந்தது. நான் சைக்கிளடிக்கு வரும்போது பார்க்கிங்காரர் காசை வாங்கியபடியே சொன்னார்.

“அண்ணை .. அந்த மீன் கறி வச்சாத் தடிப்பா இருக்கும். செமிக்காது. எதுக்கும் அரைக்கிலோ வாழைப்பழமும் வாங்கியோண்டு போங்கோ”

பெருமூச்சோடு வாழைப்படக் கடையை நோக்கி நகர்ந்தேன். நான் இரண்டடி வைக்கவே கூச்சல் ஆரம்பித்தது.

“அண்ணை இஞ்ச வாங்கோ… அவண்ட பழம் அழுகல். என்னட்ட இருக்கு அசல் கதலி.”
“தம்பி, அவன் புகைப்போட்டு பழுக்க வச்சவன். எண்ட பழம் தங்கம்”

நான் விரக்தியில் பேசாமல் வெளியே பெட்டிக்கடையில் இரண்டு அப்பிள்களை வாங்கிப்போட்டுக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டேன்.

000

Comments

Popular posts from this blog

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட...

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .