எழுபதுகளில் ஆப்கானிஸ்தான் கொஞ்சகாலம் குண்டுவெடிப்புகள் குறைந்து ஆசுவாசமாக இருந்த சமயத்தில் கதை காபுலில் ஆரம்பிக்கிறது. அமீர், ஹாசன் என்று இரண்டு நண்பர்கள். அமீர் மேல்வர்க்க பாஷ்டூன் சாதியை சேர்ந்தவன். அவன் வீட்டு வேலைக்காரரின் மகன் ஹாசன். சிறுபான்மை ஹசாரா சாதியை சேர்ந்தவன். இவர்கள் இருவரும் நண்பர்கள். ஆனாலும் அந்த நட்பு ஒருவித மேல்சாதி கீழ்சாதி நட்பு தான். அமீர் சொல்வதை ஹாசன் பேசாமல் கேட்பான். அவன் வாசிக்கும் கதைகளை மீண்டும் மீண்டும் கேட்பான். அமீருக்கு ஒன்றென்றால் ஹாசனால் தாங்கமுடியாது. ஆனால் ஹாசனை எல்லோரும் ஹசாரா என்று ஏளனப்படுத்தும் போது அமீர் ஒன்றும் சொல்லமாட்டான். உள்ளூர பயந்த, பொறாமை குற்றஉணர்வு மிக்க சாதாரண மனிதகுணம் அமீருக்கும்.