The Kite Runner

Feb 22, 2013

kiterunnerxஎழுபதுகளில் ஆப்கானிஸ்தான் கொஞ்சகாலம் குண்டுவெடிப்புகள் குறைந்து ஆசுவாசமாக இருந்த சமயத்தில் கதை காபுலில் ஆரம்பிக்கிறது. அமீர், ஹாசன் என்று இரண்டு நண்பர்கள். அமீர் மேல்வர்க்க பாஷ்டூன் சாதியை சேர்ந்தவன். அவன் வீட்டு வேலைக்காரரின் மகன் ஹாசன். சிறுபான்மை ஹசாரா சாதியை சேர்ந்தவன். இவர்கள் இருவரும் நண்பர்கள். ஆனாலும் அந்த நட்பு ஒருவித மேல்சாதி கீழ்சாதி நட்பு தான். அமீர் சொல்வதை ஹாசன் பேசாமல் கேட்பான். அவன் வாசிக்கும் கதைகளை மீண்டும் மீண்டும் கேட்பான். அமீருக்கு ஒன்றென்றால் ஹாசனால் தாங்கமுடியாது. ஆனால் ஹாசனை எல்லோரும் ஹசாரா என்று ஏளனப்படுத்தும் போது அமீர் ஒன்றும் சொல்லமாட்டான். உள்ளூர பயந்த, பொறாமை குற்றஉணர்வு மிக்க சாதாரண மனிதகுணம் அமீருக்கும்.


அந்த ஏரியாவில் பட்டம் விடும் போட்டி பிரபலம். ஊருலகத்தில் இருக்கும் குஞ்சு குருமார்கள் எல்லாம் பட்டம் ஏற்றுவார்கள். பட்டங்கள் தங்களுக்குள் வெட்டி வெட்டி சண்டை போட்டுககொள்ளும். ஒவ்வொன்றாக விழுத்தப்படும். மாறி மாறி பட்டங்கள் விழுத்தப்பட இறுதியில் இரண்டு பட்டங்கள் மட்டுமே வானத்தில் எஞ்சி நிற்கும். அவற்றுக்குள் இறுதியாக சண்டை. ஒன்று அறுபடும். அறுபட்ட பட்டத்தை ஓடிப்போய் எடுக்கவேண்டும். அதற்கு போட்டி. சண்டை. அந்த பட்டம் எங்கே போய் விழும், எப்படி போய் எடுப்பது, காற்றின் திசை எல்லாவற்றையும் கணித்து ஓடவேண்டும். இறுதியில் அறுந்த பட்டத்தை எடுப்பவனும், அந்த பட்டத்தை தன் பட்டத்தால் அறுத்தவனும் வெற்றிவீரர்கள். அமீர் பட்டத்தை அறுப்பான். அறுந்த பட்டத்தை ஓடிப்போய் கைப்பற்றிக்கொண்டு கொடுப்பவன் ஹாசன். அமீரின் Kite Runner.

ஒரு முறை அமீருக்கு அந்த கிராமத்து முரட்டு இளைஞனால் சிக்கல் வந்தபோது ஹாசன் தன் ஹெட்டபோலை(கவண்) நீட்டி மிரட்டி, அந்த இடத்தில் இருந்து தப்ப வழி செய்கிறான். ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் ஹாசனுக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்பட்ட போது பயத்தினாலோ என்னவோ, அமீர் அதை தூர நின்று வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கிறான். அப்படி செய்தததால் அமீருக்கு குற்ற உணர்ச்சி. தன் கையாலாகத்தனத்தை மறைக்க அமீர் ஹாசனையே திருடன் என்று பழி சொல்லி வீட்டை விட்டு அனுப்புகிறான். அமீரின் இயல்பு அது. ஹாசன் அளவுக்கு தன்னால் நல்லவனாக நேர்மையாளனாக இருக்க முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை. தன் தந்தை ஹாசனையும் தன்னை போலவே நடத்துவதை சகித்து கொள்ளமுடியாமை. இப்படி ஒரு இயல்பான பலவீனங்கள் உள்ள உயர்சாதி சிறுவன். எழுத வேண்டும் என்ற ஆர்வம் உடையவன்.

ஐந்து வருடங்களில் சோவியத்படைகள் காபூலை ஆக்கிரமிக்க, அமீரின் குடும்பம் பாகிஸ்தானின் பெஷாவருக்கு இடம்பெயருகிறது. அங்கிருந்து அவர்கள் கலிபோர்னியாவுக்கு செல்கிறார்கள். அங்கே ஆயிஷா என்ற பெண்ணை அமீர் திருமணம் முடிக்கிறான். எழுத்தாளர் ஆகிறான். அப்போது தான் பாகிஸ்தானில் இருந்து அமீரின் மாமா அவனுக்கு தொலைபேசியில் அழைக்கிறார். ஹாசனின் குடும்பம் தலிபானின் தாக்குதலில் இறந்துவிட்டது என்றும் அவன் மகன் மட்டும் உயிர்தப்பி தலிபான்களிடம் துஷ்பிரயோகத்துக்குள் ஆட்பட்டிருக்கிறான் எனவும் சொல்லுகிறார். வேறொரு முக்கிய உண்மையும் சொல்லுகிறார். நீ போய் அவனை காப்பாற்றவேண்டும் என்கிறார்.
There is a way to be good again.
அமீர் எப்படி ஆப்கான் போகிறார், அங்கே போய் ஹாசனின் மகனை மீட்டுக்கொண்டு அமேரிக்கா வருகிறார் என்பது மீதிக்கதை.

bookkite4காலித் ஹோசைனி எழுதிய இந்த “The Kite Runner” வாசித்து எட்டு வருடங்களுக்கு மேல் இருக்கலாம். ஒரு தேசத்தின் வாழ்க்கையை, மிக இயல்பாக, அதில் இருக்கின்ற இனிமைகள், சந்தோஷங்கள், குட்டி குட்டி கலாச்சார விஷயங்கள், அவை எப்படி போர் என்ற அசுரனால் உடைந்து சுக்குநூறாகிறது, இருந்தும் அந்த மனிதர்கள் இடம்பெயர்ந்தும் எப்படி அழகான வாழ்க்கையை அமைக்கிறார்கள் என்று சாதாரண பொதுமகனின் பார்வையில் ஒரு போரியல் வாழ்க்கையை படம்பிடித்து காட்டிய மிகச்சிறந்த நாவல் இது. இதே எழுத்தாளரின் இன்னொரு வைரம் தான் “A thousand splendid suns”.

எனக்கு ஒரு சின்ன மனக்குறை இருக்கிறது. போர், அழிவுகள் கொடுமைகள் துப்பாக்கி குண்டுகள் என்றே எங்கள் இலக்கியங்கள் சுத்திவிட்டன. அதில் தவறேதுமில்லை. எங்கள் வாழ்வை தானே பிரதிபலிக்கின்றன அவை. ஆனாலும் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று எங்கள் சந்தோஷங்களை பதிந்து வராதா என்ற கவலை. யோசித்துப்பாருங்கள். ஒரு நாவல், நல்லூரில் காதல், இடம்பெயர்வு, சாவகச்சேரியில் காதல், குடும்ப பிரச்சனைகள், வன்னி இடம்பெயர்வு என்று டொராண்டோ வரைக்கும் கதையை நகர்த்தலாம்.

அரசியலும் போரும் சொல்லாமல் சொல்லப்படும். ஆனால் கதை என்னவோ சாதாரண மனிதனின் சரிதம் தான். அதை கொஞ்சி கொஞ்சி எழுதினால், அப்படியே வாசிக்கலாம்.

இந்த வகை எழுத்துக்களை செங்கை ஆழியான் பகிர்ந்திருக்கிறாரே என்று நினைக்கலாம். நிச்சயமாக செய்திருக்கிறார். செங்கை ஆழியான் நாவல்களில் ஒரு பிரதேசத்தின் வாழ்க்கை இருக்கும். ஆனால் அவருடைய பாத்திரங்கள் அவ்வளவு ஆழமானவை இல்லை. ஒரு பாத்திரத்துடன் சட்டென்று ஒன்றிவிடும் அளவுக்கு அவர் எழுதுவதில்லை. பாவை விளக்கு உமாவையோ, சுஜாதாவின் மதுமிதாவையோ செங்கை ஆழியானிடம் காண்பது அரிது. ஏன் என்று அடுத்தமுறை போய் சந்திக்கும்போது அவரிடமே கேட்கலாம் என்று நினைக்கிறேன்.


இந்த நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. வந்த சூட்டோடு ஒரிஜினல் டிவிடி வாங்கி போட்டுப்பார்த்தேன். நாவல் கொடுத்த அனுபவத்தை திரைப்படம் அப்படியே படம் போட்டு காட்டியது. அதிலே இனிமையான ஆப்கான் வாழ்க்கை தெரிந்தது. அது எப்படி சோவியத், முஜாகிதீன், அமேரிக்கா, தலிபான், ஈரான், பாகிஸ்தான் என எல்லா தேசங்களாலும் சீரழிக்கப்பட்டது என்பதை காட்டியது. மனிதம் என்பது எந்த நாட்டிலும், எந்த கலாச்சாரத்திலும் எந்த சீரழிவுக்கு மத்தியிலும் எப்படி எஞ்சி இருக்கிறது என்பதை காட்டியது.

அடர்ந்த பாலைவனத்தில் தனித்து நிற்கும் சிறுவனின் உதட்டோரத்தில் விழும் மழைத்துளி அவனுக்கு கொடுக்கும் பரவசத்தை காட்டுவதே என்னளவில் உலக திரைப்படம். ஒரு மழைத்துளி விழுவதற்குள் எப்படி பத்து பேரை ஒருவன் கொன்று குவிக்கிறான் என்று காட்டுவது அல்ல. கமல் இந்தப்படத்தை பார்த்திருந்தால் அக்சன் படமேயானாலும் ஒரு உணர்வு பூர்வமான நிஜமான ஆப்கான் மனிதர்களை காட்ட முயன்றிருக்கலாம். வெறும் வீடு, வைக்கோல், குதிரை, சுரங்கம் என்று பம்மாத்து காட்டியிருக்க தேவையில்லை.

Contact Form