மோகனவடிவேல். சிவலை. எட்டாம் வகுப்பிலேயே தாடி மீசை வளர ஆரம்பித்துவிட்டது. தினமும் வரும் வழியில் நல்லூரில் இறங்கி, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து, நெற்றி முழுக்க வீபூதி சந்தனம் பூசியபடியே பாடசாலைக்கு வருவான். அதிகம் பேசமாட்டான். பரீட்சை நாட்களில் நாமெல்லாம் கூடிப்பேசிக்கொண்டிருக்கையில் தனியாக அமர்ந்திருந்து இரண்டாய் மடித்த ஏ4 தாளில் குறிப்புகளை படித்து தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருப்பான். மிகக்குறுகலான எழுத்திலே எழுதப்பட்டிருக்கும் கடைசிநேர தயார்படுத்தல் நோட்டுகள் அவை. ஆனால் நோட்ஸ் கொப்பியைவிட அதிகம் அதிலே எழுதப்பட்டிருக்கும். கதைக்கமாட்டான். சிரித்தால் பதிலுக்கு சின்னச் சிரிப்பு. “என்ன மச்சான் ரெடியா?” என்று கேட்டாலும் சின்னச் சிரிப்புத்தான். விடாமல் அலுப்படித்தால் “டிஸ்டர்ப் பண்ணாதே, ஒண்டுமே படிக்கேல்ல” என்பான். சொல்லும்போது கன்னம் எல்லாம் கொழுக்கட்டைபோல வீங்கி, வாயைத்திறந்தால் படித்ததெல்லாம் வாந்தி எடுத்துவிடுவானோ என்றமாதிரி நிற்பான். பரீட்சை சமயமும் குட்டை நாய் கவட்டை விசுக் விசுக்கென்று சொறிவதுபோல எதையோ எழுதிக்கொண்டேயிருப்பான். எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்குவான். டைம் அவுட்...